« Home | கௌசல்யன் மருத்துவமனையின் பணி » | வணக்கம். »

சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கிறார்கள்

ஆயிற்று. ஒருவாறாகப் பொதுக்கட்டமைப்பு என்ற ஒரு நிர்வாக அமைப்பு கைச்சாத்தாகி விட்டது. ஆனால் அதைவைத்து நடக்கும் அரசியற் பிழைப்பு நாடகங்களின் காட்சிகள் இன்னமும் தொடர்ந்த படியே இருக்கின்றன. சிங்கள இனவாதிகள், பௌத்தபிக்குகள், ஜே.வி.பியினர் என்ற இந்தப் பட்டியலில் ஒரு தொகுதி முஸ்லிம் அரசியல்வாதிகளும் இணைந்து கொண்டுள்ளனர். யார் இந்த ஒருதொகுதி முஸ்லிம் அரசியல்வாதிகள்? ஏனைய முஸ்லிம் அரசியல்வாதிகள் பொதுக் கட்டமைப்புவிடயத்தில் என்ன நிலைப்பாட்டில் உள்ளனர்? இந்த இரு சாராரையும் தென்னிலங்கை அரசியல்வாதிகள் எவ்வாறு கையாள முனைகிறார்கள்? இவை இலங்கைத் தீவின் இன்றைய அரசியற் களத்தினைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் முக்கியமான கேள்விகளாகும். தாம் சார்ந்த கட்சிகளின் தலைவர்கள் வகிக்கும் அமைச்சுப் பொறுப்புக்களிலிருந்து விலகவேண்டுமெனக் காலக்கெடுவை விதித்திருக்கின்றார்கள் இரு பிரபல முஸ்லிம் அரசியல்வாதிகள். பொதுக் கட்டமைப்பில் தனித்தரப்பாகக் கையெழுத்திடுவதற்கு முஸ்லிம் தரப்புக்கு இடமளிக்கப்படவில்லையெனக் கண்டனம் தெரிவித்துள்ள இவர்கள், இதற்குப் பிறகும் தம்மை மதிக்காத கண்டு கொள்ளாத அரசாங்கத்தில் அங்கம் வகிக்கக்கூடாதென தமது கட்சிகளின் தலைமைகளிற்கு அழுத்தங்களைப் பிரயோகித்துவருகிறார்கள்.

இவர்களின் முதலாமவர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தேசிய ஐக்கிய முன்னணியின் (நுஆ) துணைத்தலைவர். துறைமுகங்கள், விமானசேவைகள் நிறுவனத்தின் தலைவராக பதவி வகித்த ஹிஸ்புல்லா திடீரெனத் தனது பதவியைத் துறப்பதாக காத்தான்குடியிலுள்ள தனது அலுவலகத்தில் பத்திரிகையாளர்களைக் கூட்டி அறிவித்தார். அத்தோடு நின்றுவிடாத அவர் தன்னைப்போன்று தனது கட்சித் தலைவியான பேரியல் அஷ்ரப்பும் அவரது அமைச்சர் பதவியிலிருந்து விலகவேண்டுமெனவும் நிபந்தனை விதித்தார். இதற்கு 48 மணிநேரத்தை அவகாசமாக வழங்கியதுடன் தவறினால், தான் (நுஆ) அக்கட்சியிலிருந்து விலகப்போவதாகவும் அறிவித்தார். (இப்போது இதனை 7 நாட்களாக நீடித்துள்ளது வேறுகதை) அடுத்த அறிவிப்பு தேசிய முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் எச்.எம்.ஹரீஸ் மற்றும் துணைத்தலைவர் அசீஸ் ஆகியோரிடமிருந்து வெளியானது. தமது கட்சியின் தலைவர் அதாவுல்லா மற்றும் தவிசாளர் அன்வர் இஸ்மாயில் ஆகியோர் வகிக்கும் அமைச்சர் பிரதி அமைச்சர் பதவிகளை துறக்கவேண்டுமென வலியுறுத்திய இவர்கள், ஏழு நாட்களுக்குள் இது நடைபெறா விட்டால் அவர்கள் இருவரையும் கட்சியைவிட்டு வெளியேற்றப் போவதாகவும் எச்சரித்திருந்தனர்.

இவற்றுக்கு முன்பாக தற்போது அரசாங்கத்தில் அங்கம் வகிக்காத கட்சியான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் பொதுக்கட்டமைப்பில் முஸ்லிம்களுக்கு தனித்தரப்பாக ஒப்பமிட அனுமதியளிக்காத அரசாங்கத்தில் அங்கம்வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் பதவிவிலக வேண்டுமென வலியுறுத்தியிருந்தார். இந்த அறிவித்தல்கள் அனைத் தையும் ஒன்றுசேர்த்துப் பார்க்கையில், வெளித்தெரிவது என்ன?

இவ்வாறு அறிவித்துக்கொண்டும் காலக்கெடுகளை விதித்துக்கொண்டும் இருப்பவர்கள் அனைவருமே அமைச்சுப் பதவிகளில் இல்லாதவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இல்லாதவர்களுமே என்பது கவனிக்க வேண்டியதாகும். தாங்கள் பதவிகளில் இல்லாமல் இருக்கும்போது வசதியாக அடுத்தவர்களைப் பதவி துறக்கும்படி வலியுறுத்துகிறார்கள் என்பதே இதன் உள்ளர்த்தமாகும்.

இதனூடாக இவர்கள் அடைய முற்படுவது என்ன? துண்டு துண்டாகச் சிதறிக்கிடக்கும் முன்னாள் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் கூறுகளில் இரண்டு (நுஆ, தேசிய முஸ்லிம் காங்கிரஸ்) மற்றும் ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரசிலிருந்து போட்டியிட்டு வெற்றிபெற்று கட்சி மாறிநிற்கும் 'அதிருப்தியாளர் குழு' ஆகியவை சந்திரிகா அம்மையாரின் முன்னாள் ஐ.ம.சு முன்னணியினதும், தற்போதைய பொ.ஐ. முன்னணியினதும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றன. இந்த மூன்று தரப்புகளிலிருந்தும் பலர் அமைச்சர், பிரதி அமைச்சர் பதவிகளைப்பெற்று அதிகாரச் சுகத்தை அனுபவிக்க ஏனைய முஸ்லிம் அரசியல்வாதிகள் வெறுமனே அறிக்கைகளை விடுத்துத் தமது இருப்பை நினைவூட்டிக் கொண்டிருந்தனர். பதவிகளைப் பெற்றுக் கொண்டவர்களோ தமது கட்சிகளைக்கூட மறந்துவிட்டு, குறைந்த பட்சம் கட்சிக் கூட்டங்களைக்கூட நடத்தாது கொழும்பே தஞ்சமெனக் கிடக்கின்றனர். இதனால் கட்சிகளின் சார்பில் அரசாங்கத்திடமிருந்து கிடைப்பன யாவுமே அவர்களை மட்டுமே சென்றடைந்துவிடுகின்றன. இதனால் ஆட்சியிலிருக்கும் முஸ்லிம் கட்சிகளின் பதவியிலிருக்காத தலைவர்கள் காய்ந்து வறண்டு சந்தர்ப்பத்துக்காகக் காத்துக்கிடந்தனர்.

முஸ்லிம் காங்கிரசின் கதையோ அதையும்விடப் பரிதாபமானது. அரசாங்கத்தோடு ஒட்டிக்கொண்டிருந்து பழகிவிட்ட அதற்கு தற்போது எதிரணியில் இருப்பது மிகுந்த பிரச்சினையாகவுள்ளது. அதனாலேயே அதன் பட்டியலில் தெரிவான எம்.பிக்கள் நால்வர் அதிருப்திக்குழு என்ற பெயரில் கட்சி மாறி அமைச்சர்கள் ஆகிவிட்டனர். (இவர்களில் ஒருவரான அமைச்சர் அமீர்அலியும் பதவி துறப்புப் பற்றிக் கதைத்திருக்கிறார்) சவடாலுக்குப் பேர்போன கட்சித்தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு கட்சி மாறியவர்களையும், தனது முன்னாள் சகபாடிகளையும் ஒரு பிடி பிடிப்பதற்கு இது நல்லதொரு வாய்ப்பைக் கொடுத்து விட்டிருக்கிறது.

ஆக, பொதுக்கட்டமைப்பு என்றதொரு வெறும் நிர்வாக அமைப்பொன்றுக்கான ஆவணத்தின் மீது தமது அரசியல் இருப்புக்கான போராட்டங்களை நடத்திக்கொண்டி ருக்கிறார்கள் முஸ்லிம் அரசியல் வாதிகள். இதன்மூலம் அதிகம் உணர்வூட்டப்படக்கூடிய முஸ்லிம் சமூகத்தை மீளவும் ஒருதடவை வெறியூட்டப்போகிறார்கள் இவர்கள். "முஸ்லிம் சமூகம் கைவிடப்பட்டு விட்டதாகவும் இந்தப் பயங்கரமான நிலையிலிருந்து அதனை காக்க தம்மால் மட்டுமே முடியுமென்றும் எனவே அடுத்த தேர்தலில் தம்மையே தெரிவு செய்யும் படியும்" என்று அனைவருமே உச்சஸ்தாயியில் கத்தப் போகிறார்கள். இதற்கு வலுவூட்டும் முகமாகப் பல்வேறு திரைமறைவு வேலைகளையும் ஒப்பந்தங்களையும் செய்யப்போகிறார்கள்.

இவ்வாறு அரங்கேறும், அரங்கேறவுள்ள காட்சிகளின் பின்னேயுள்ள செய்தி என்ன? சிறிலங்காவில் மீண்டுமொரு தேர்தல் விரைவில் வரப்போகிறது என்பதே அது. அந்தத் தேர்தலில் முஸ்லிம் மக்களின் முன்பு செல்வதற்காக அவர்களது வாக்குகளைச் சுருட்டுவதற்காக ஒரு முகாந்திரத்தைத் தேடுவதற்கு ஒவ்வொரு முஸ்லிம் அரசியல்வாதியும் அந்தரப்படுவதன் வெளிப்பாடே தற்போது அரங்கேறும் காட்சிகளாகும். அதை ஒவ்வொரு அரசியல்வாதியும் தத்தமது பிரதேசத்தினதும் கட்சியினதும் களநிலவரத்துக்கேற்ப நிகழ்த்திக் காட்டுகிறார்கள். இவ்வாறு விடுக்கப்பட்ட அறிக்கைகள் அனைத்துமே தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவுகளும், அறிவிக்கப்பட்ட அறிவித்தல்களுமாகும். இதனுடைய ஒரே பின்புலம் பதவியாகும்.

ஆனால் இது யாருக்கு இலாபமாக அமையப்போகிறது? தங்களது பல்லைக்குத்தி தங்களது மூக்கிலேயே பிடிக்கின்ற இவர்களைக் கண்டு சிங்களப் பேரினவாதிகள் அகமகிழ்ந்துபோயிருக்கிறார்கள். "கைவிடப்பட்ட முஸ்லிம் மக்கள்" குறித்து பௌத்த பிக்குகளும், சிவப்புச் சட்டைகளும், தினேஸ் குணவர்த்தன உட்பட்ட ஏனைய கடும் போக்காளர்களும் உருகி வழிகிறார்கள். ஐ.தே.கட்சியும் தன்பங்குக்கு 'முஸ்லிம்களின் நலன்களில்' அக்கறையை வெளிப்படுத்துகிறது.

ஆக முஸ்லிம் மக்களின் தலையிலே முஸ்லிம் அரசியல் வாதிகள் தமது பதவிமோக மிளகாயை அரைக்கத் தொடங்கிவிட்டார்கள். பொதுக்கட்டமைப்புக்குளவி நன்றாகவே அரைக்கிறது. பேரினவாதிகளும் சிங்களக்கட்சிகளும் தாளம் போடுகின்றன. ஆனால் அரைபடும் மிளகாய் முஸ்லிம் மக்களின் முகத்திலேதான் வழியப் போகிறது. அது எரிச்சலை ஏற்படுத்தப் போவதென்னவோ அப்பாவி மக்களுக்குத்தான்!

-பு.சத்தியமூர்த்தி-
நன்றி:- ஈழநாதம்.

Labels: ,