Monday, July 31, 2006

சிங்கள ஊடகங்களின் நடுநிலைமை

மறுபக்கம் - கோகர்ணன்

20.7.2006 டெய்லி மிரர் தலையங்கத்தைப் பார்த்தேன். லெபனானில் இஸ்ரேலிய விமானங்கள் நடத்துகிற படுமோசமான குண்டு வீச்சைப் பற்றி எழுதியிருந்தது. லெபனானில் இஸ்ரேல் நடத்துகிற தாக்குதலுடன் ஒப்பிட்டால், இலங்கை அரசாங்கம் மிகவும் பொறுமையுடன் நடந்து கொள்வதாக அரசாங்கத்தை மெச்சி எழுதியிருந்தது. டெய்லி நியூஸை விடக் கொஞ்சம் நிதானமும் ஐலன்டை விடச் சிறுபான்மைத் தேசிய இனங்கள் பற்றிய சகிப்பும் பொறுப்புணர்வும் கொண்டதும் கொஞ்சம் வாசிக்கக் கூடியதுமான ஏடாகவே டெய்லி மிரரைப் பார்த்திருக்கிறேன். அதன் பின்னணியில் உள்ள பதிப்பீட்டு நிறுவனத்தின் பேரினவாத அரசியல் பற்றி நான் அறியாதவனல்ல. எனினும், டெய்லி மிரர் பேரினவாதத்துக்கு ஊறின்யங்கம் அந்தக் கவனமான தோற்றத்தைக் களைந்து பத்திரிகை நிறுவனத்தின் உண்மையான முகத்தை அல்லது அதன் ஒரு சிறு பகுதியை நமக்கு எடுத்துக் காட்டியுள்ளது.

மகிந்த ராஜபக்‌ஷவோ, அவரது தலைமையின் கீழுள்ள ஆயுதப்படைகளோ இப்போது ஆயுதப்படையினர் மீது தொடுக்கப்படுகிற தாக்குதல்கட்குப் பதிலடி கொடுக்காமல் இருக்கிறதாகச் சொன்னால் அது முற்றிலும் உண்மையல்ல. அவர்களால் யாரை எளிதாக அடிக்க இயலுமோ அவர்கள், அதாவது அப்பாவித் தமிழர்கள், அடிக்கப்படுகிறார்கள். சாதாரணமான தமிழ் மக்கள் துன்புறுத்தலுக்கும் சாவுக்கும் அஞ்சி இருப்பிடங்களை விட்டு ஓடுகிறார்கள். அச்சத்தை நிரந்தரமானதாக்குவதற்காக, எழுந்தமான முறையில் கொலைகள் நடந்தபடியேயுள்ளன. இரு தரப்பிலும் சீண்டல் தொடருகிறது என்பதே உண்மை. எனினும், ஒரு பக்கம் மட்டுமே போர் நிறுத்த மீறலாகவும் விஷமத்தனமாகவும் தெரிகிறது.

இராணுவ உயரதிகாரியான பாரமி குலதுங்கவின் படுகொலைக்குப் பதிலடியாக, அரசாங்கப் படைகள் எதையுஞ் செய்யவில்லை என்பதுடன் அதற்குப் பின்னர் ஏற்பட்ட இழப்புக்களால் விளைந்த முக முறிவைச் சமாளிக்கவும் எதையுமே செய்யவில்லை. ஆயினும் ஆழ ஊடுருவும் படையினரின் தாக்குதல்கள் ஓயவில்லை. வாகனேரிப் பகுதியில் இரண்டு உயர் அதிகாரிகள் உட்படப் பதின்மூன்று பேர் கொல்லப்பட்டதற்கு விடுதலைப் புலிகளின் போர் நிறுத்த மீறல் காரணமல்ல என்று ஏற்கிற அளவுக்கு மேற் பேரினவாத ஊடகங்களிடம் அதிகம் எதிர்பார்ப்பது நியாயமில்லை.

வங்காலைப் பகுதியில் கடற்படையினர் நடத்திய தாக்குதலின் கோரத்தை மன்னார் பேராயர் வத்திக்கானுக்கு அறிவித்ததன் விளைவாகவே அது பற்றிய வழமையான கண்துடைப்பான விசாரணை நடத்துவதற்கு ஜனாதிபதி ஆணை பிறப்பித்தார். தாக்கப்படக் கூடிய கத்தோலிக்கரல்லாதோருக்காக யாரிடம் முறையிடலாம்? சங்கர மடத்திடமா, சாயிபாபாவின் பிரஷாந்தி நிலையத்திடமா? அப்படி யாராவது பரிந்து பேசினாலும் இன்னொரு விசாரணைக் குழுவை நியமிப்பதற்கும் மேலாக என்ன நடக்கும்?

அரசாங்கம் அமைதி காக்கிறது என்ற தோற்றம் பேணப்படுகிறது என்றால், அது அமைதி காக்க வேண்டும் என்ற முடிவை ஆழ யோசித்து வந்தடைந்துள்ளது என்பதாலல்ல. என்ன காரணங் கொண்டு சர்வகட்சி மாநாடு நடத்தப்படுகிறதோ, என்ன காரணங்கொண்டு தீர்வு பற்றிய ஆலோசனைகள் முன்வைக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறதோ அந்த நேர்மையற்ற காரணத்திற்காகவே அமைதி பேணுகிற தோற்றமுங் காட்டப்படுகிறது.
இதையெல்லாம் நம்பி ஏமாறுகிற அளவுக்குச் `சர்வதேச சமூகம்' எனப்படுகிற முதலாளிய நாடுகளும் பலவேறு `உதவி' வழங்கும் அமைப்புக்களும், கண்காணிப்பாளர்களும் இன்னும் பிறரும் முட்டாள்களில்லை. ஆனால், வேண்டுமான போது ஏமாறுகிறது போல தோற்றங்காட்டுகிற கெட்டித்தனம் அவர்களிடம் உண்டு. அவர்கள் இந்த நாட்டில் யாரையும் நம்பவில்லை, யாரையும் நேசிக்கவில்லை, யாருக்காகவும் எதையும் செய்யப் போவதில்லை. எனினும், அவர்களது எதிரிகள் யார் என்று அவர்கட்டுத் தெளிவாகத் தெரியும். எனவே தான் அதற்கேற்ப அவர்களால் வியூகங்களை வகிக்க இயலுகிறது.

ஒஸ்லோ பேச்சுவார்த்தைகளின் அபத்தமான முடிவையடுத்து விடுதலைப் புலிகளின் தூதுக் குழுவினர் தமிழ் மக்கள் மீதான பாரபட்சத்தின் விபரங்கள் உட்பட விரிவான ஒரு அறிக்கையைத் தயாரித்து வெளியிட்டனர். அதிற் பேரினவாதஆட்சியாளர் பற்றி கூறப்பட்ட எதுவும் விடுதலைப் புலிகள் மீது தடை விதித்த அரசாங்கம் எதுவும் அறியாததல்ல. தமிழ் மக்களுக்குப் பிரச்சினைகள் உள்ளன என்று அவர்கட்குத் தெரியும் என்று எங்களுக்குத் தெரிய வேண்டும் என்பதற்கு அவர்கள் கொஞ்சம் முயற்சி எடுக்கிறார்களே ஒழிய, அதற்கு மேலாக ஒரு துரும்பையும் அவர்கள் எடுத்துப் போடப்போவதில்லை. இலங்கை அரசாங்கத்துக்கு அது தெரியும்.

விடுதலைப் புலிகள் மீது பழியைப் போடக்கூடியவிதமாக ஒரு போரைத் தொடங்கலாமென்றால்,போரை நடத்திக் கொண்டே அமைதி பற்றிப் பேசலாமென்றால் அவர்கள் எல்லோருக்கும் அது போதுமானதாயிருக்கும். ஆனால், அதுதான் நாட்டு மக்களுக்குத் தேவையானதா? நாட்டு மக்கள் பற்றி அக்கறையுள்ள யாரும் இந்த நாட்டை ஆண்டதாகச் சொல்வது கடினம். அதைவிட நாட்டு மக்களுக்குத் துரோகஞ் செய்கிறவர்களே நாட்டை ஆள முடியும் என்கிற ஒரு சூழ்நிலை ஏற்கனவே உருவாக்கப்பட்டு விட்டது. அதற்கு இசைவாகவே நாட்டின் பிரதான அரசியற் கட்சிகளும் ஊடகங்களும் செயற்பட்டு வருகின்றன.

மக்கள் நம்ப மறுக்கும் ஒரு அரசியற் கட்டமைப்பைப் போல, அந்நிய மேலாதிக்கவாதிகட்கு வசதியான ஒன்று அமைவது அரிது. அவர்கள் ஊழல் மிக்க ஆட்சியாளர்களை நேசிக்கிறார்கள். மக்களைப் பிளவுபடுத்தி மோதவிடுகிற அரசியலை நேசிக்கிறார்கள். இனப் பகைமையையும் வெறுப்பையும் போதிக்கிற பத்திரிகையாளர்களையும் ஒலி - ஒளிபரப்பாளர்களையும் நேசிக்கிறார்கள். இத்தகைய குழப்பமான சூழலின் மூலமே அரசியலை நிராகரிக்கிற அரசியலை அவர்களால் முன்னெடுக்க இயலும். மக்களின் அத்தியாவசியத் தேவைகளை அரசாங்கங்களால் நிறைவு செய்ய இயலாத போது தான் தனியார் கல்வி, தனியார் மருத்துவம், தனியார் போக்குவரத்து, தனியார் தொலைத்தொடர்பாடல், தனியார் மின் விநியோகம், தனியார் நீர்வழங்கல் என்றவாறு சமூகமொன்றின் அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் மக்களிடமிருந்து பராதீனப்படுத்தி வசதி படைத்தவர்களுக்கு ஒரு வகையான நாடாகவும் வசதியற்றவர்கட்கு இன்னொரு நாடாகவும் இந்த நாட்டை மாற்ற முடியும். தங்களது உரிமை என்று மக்கள் அனுபவித்த ஒவ்வொன்றையும் யாரோ மனமிரங்கித் தருகிற தருமமாகவும் உரிமைக்காகக் குரல் கொடுக்கும் போது எளிதாக மறுக்கக் கூடியதாகவும் மாற்றுகிற விதமாகவே அரசாங்கத்தின் பொறுப்புக்கள் அந்நிய ஆதிக்கத்திற்குட்பட்ட என்.ஜீ.ஓ.க்களிடம் கைமாறுகின்றன.

இந்த நாட்டின் உண்மையான எதிரிகள் யாரென்று எங்கள் ஊடக நிறுவனங்கள் ஒவ்வொன்றும் அறியும். ஆனாலும், பயங்கரவாதமும் விடுதலைப் புலிகளும் வசதியான எதிரிகள். மற்ற எதிரிகளுடன் பகைக்க நமது ஊடகங்கள் ஆயத்தமாக இல்லை. பெரிய ஊடக நிறுவனங்கள் பலவற்றின் அதிகாரம் இந்த நாட்டின் எதிரிகளுடன் சமரசம் செய்து இந்த நாட்டை முற்று முழுதாக அந்நியரிடம் கையளிக்கத் துடிக்கிறவர்களது கைகளிலேயே உள்ளது. எனவே தான், டெய்லி மிரரின் உண்மையான முகம் நமக்கு வியப்பளிக்கக் கூடாத ஒன்றாக உள்ளது.
பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற கருத்தில் அமெரிக்காவும் ஐரோப்பாவும் உறுதியாக நிற்பதாகவும் அவற்றுடன் ஒத்துழைக்க உலகின் அனைத்து நாடுகளும் ஆயத்தமாக இருப்பது போலவும் அந்த அணியில் நிற்பது போலக் காட்டிக் கொண்டால் நமக்கு (உண்மையில் இந்த நாட்டின் அதிகாரவர்க்கத்துக்கு) நன்மை கிடைக்கும் என்று நம்புவதற்கு நமது ஊடகங்களின் எசமானர்கள் முட்டாள்களல்ல.

"விடுதலைப் புலிகள் வேறு தமிழர் வேறு" என்று பல அமைச்சர்கள் இப்போது கண்டறிந்து சொல்கிறார்கள். பத்திரிகைகளும் தலையங்கங்கள் தீட்டுகின்றன. எனக்கும் அக் கருத்து உடன்பாடானதுதான். ஆனால், விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தைத் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திலிருந்து பிரிக்க இயலாதுள்ளதே! அது பற்றி இவர்கள் யாராவது சிந்தித்திருக்கிறார்களா? விடுதலைப் புலிகளும் பிற போராளிக் குழுக்களும் தோன்றக் காரணமாக இருந்த நியாயமான பிரச்சினைகளில் எந்த ஒன்றைத் தீர்ப்பது பற்றித்தான் இவர்கள் அக்கறை காட்டியிருக்கிறார்கள்?

"தமிழிற் கடிதம் எழுதினால் சிங்களத்தில் பதில் வருகிறது என்பது போல, வடக்கு, கிழக்கில் சிங்களத்தில் எழுதினால் தமிழில் பதில் வருகிறது" என்று கூசாமற் திரிப்பில் இறங்குகிற டியூ குணசேகர போன்றவர்கள் தமிழருக்கு இரங்குவது போலத்தான் டெய்லி மிரர் போன்ற ஏடுகளது நடு நிலைப் பம்மாத்தும் உள்ளது. பேரினவாதத்தால் இந்த நாட்டு மக்களைப் பிளவுபடுத்தியவர்களில் இந்த நடுநிலை ஊடகக்காரர்களும் அடங்குவர்.
சிங்கள, ஆங்கில ஊடகங்களை விடத் தமிழ் ஊடகங்கள் அதிகம் யோக்கியம் என்பது என் கருத்தல்ல. பல்வேறு தில்லுமுல்லுகளையும் என்னை விட நன்கு அறிந்தவர்கள் உள்ளனர். அதேவேளை, ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பான குரலாகத் தமிழ் ஊடகங்களில் ஒரு பகுதி பயன்படுகிறது என்பது மறுக்க இயலாத உண்மை. ஆயினும் அது போதுமானதல்ல.
பத்திரிகை சுதந்திரமும், கருத்துச் சுதந்திரமும் பற்றிப் பேசுகிறோம். ஆனால், நமது பத்திரிகைகள் சமூகப் பொறுப்பாக நடந்து கொள்கின்றனவா என்பது பற்றி நாம் பேசுகிறோமா? பத்திரிகைகள் ஆட்சியாளருக்கு மாறாகப் பேசும் போது மட்டும் ஆட்சியாளர்களது சார்பில் பத்திரிகைகளது பொறுப்பு பற்றி பேசப்படுகிறது. மக்களைக் குழப்புகிற விதமாகவும் உண்மைகளைத் திரிக்கிற விதமாகவும் இந்த நாட்டை நாசம் செய்கிற நடவடிக்கைகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் அங்கீகரிக்கிற விதமாகவும் ஊடகங்கள் நடந்து கொள்ளுவது கருத்துச் சுதந்திரம் தொடர்பானதல்ல, அதிகாரத் துஷ்பிரயோகம் தொடர்பானது.

இஸ்ரேலிய அரசைவிட இலங்கை அரசு பரவாயில்லை என்பது இலங்கை அரசுக்கான நற்சான்றில்லை. ஐலன்ட்டை விட டெய்லி மிரர் பரவாயில்லை என்பது டெய்லி மிரருக்கு நற்சான்றில்லை.
_____________________________________________
நன்றி: ஞாயிறு தினக்குரல் Sunday, July 30, 2006

Labels:

மாவிலாறு நீர்முடக்கமும் சிங்களத்தின் படையெடுப்பும்

மனிதாபிமானப் பிரச்சினையைத் தீர்க்க இராணுவ நடவடிக்கையை நாடும் அரசு!
* விமானத் தாக்குதல்கள் தொடர்ந்தால் யுத்தம் மூளக்கூடிய வாய்ப்பு?

வெருகல் மாவில் ஆற்றுப் பிரச்சினை பாரிய மோதலாக உருவெடுக்கப் போகிறது. சுமுகமாகத் தீர்க்கப்பட வேண்டிய, மக்களின் அன்றாடப் பிரச்சினையை அரசு இராணுவமயப்படுத்தி வருவதால் விளைவுகள் மிக மோசமாக இருக்கப் போகிறது.
மகாவலி ஆற்றின் கிளை ஆறான வெருகல் ஆற்று நீர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியினூடாகவே சிங்களப் பகுதிக்குச் செல்கிறது. இந்த ஆற்று நீர் சிங்களப் பிரதேசத்துக்குச் செல்வதை புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள வெருகல் மக்கள் கடந்தவாரம் முதல் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

மிக நீண்ட காலமாக, தாங்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகளை தீர்த்து வைக்குமாறு இந்த மக்கள் விடுத்து வந்த கோரிக்கைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு வந்த நிலையிலேயே இவ்வாறானதொரு அதிரடி நடவடிக்கையில் மக்கள் இறங்கினர்.
அவர்கள் விடுத்த கோரிக்கைகள் எதுவும் பாரதூரமானவையல்ல. தங்களது அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்குமாறு மிக நீண்ட காலமாகக் கேட்டும் எதுவித பலனும் ஏற்படாத நிலையில் அந்தக் கோரிக்கையை, அணைக் கட்டை மூடி சற்று அழுத்தமாக விடுத்த போதே அதனை அரசு பூதாகரமாக்கிவிட்டது.

* தங்கள் பகுதிகள் மீதான நீண்டகாலப் பொருளாதாரத் தடை நீக்கப்பட வேண்டும். * முப்படைகளதும் நடவடிக்கைகளால் சொந்த இடங்களிலிருந்து இடம்பெயர்ந்து காடுகளினுள்ளும் முகாம்களினுள்ளும் வாழும் ஆயிரக் கணக்கான மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். * காலம் காலமாக தங்கள் பகுதியில் நிலவும் குடிநீர்ப் பிரச்சினைக்கு உடன் தீர்வு காணப்பட வேண்டும். * இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் செல்லும் பொது மக்கள் கடத்தப்படுவதும் கொல்லப்படுவதும் வழமையாகிவிட்டதால் மக்களின் சுதந்திரமானதும் பாதுகாப்பானதுமான பயணத்துக்கு அரசு உத்தரவாதமளிக்க வேண்டும்.

இதுவே இந்த மக்கள் முன் வைத்துள்ள கோரிக்கையாகும். இதிலும், கடந்த பல வருடங்களாக குடி நீர்ப் பிரச்சினையால் மக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் அதனை உடனடியாக நிறைவேற்றித் தருமாறு 2000 ஆம் ஆண்டிலிருந்தே கேட்டு வந்துள்ளனர். ஆனாலும் அந்தச் சாதாரண அடிப்படை விடயத்தை கூட நிறைவேற்ற எந்த அரசும் முன்வரவில்லை.
இதனால் தான், சிங்களப் பகுதியில் தற்போது நெற்பயிர்ச் செய்கை மும்முரமாகியுள்ள இவ்வேளையில், ஆற்று நீரை வழிமறித்த மக்கள் அதனைப் பயன்படுத்தி தங்கள் அடிப்படைத் தேவை குறித்து பேரம் பேசுகின்றனர். இது குறித்து சிங்கள மக்கள் உணர்ந்து, தமிழ் மக்கள் எதிர் நோக்கும் அடிப்படை பிரச்சினை குறித்து அரசுக்கு அழுத்தம் கொடுத்து அதனைத் தீர்க்க முன்வந்திருக்க வேண்டும்.

இது அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலானதோ அல்லது இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலானதொரு பிரச்சினையோ அல்ல. காலம் காலமாக மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு வந்த தமிழ் மக்கள், தங்கள் பிரச்சினையை அரசோ படைத்தரப்போ புரிந்து கொள்ளாத நிலையில் சிங்கள மக்களாவது புரிந்து கொள்வார்களென எதிர்பார்த்தனர்.
தங்கள் பயிர், பச்சைகள் தண்ணீரின்றி வாடுவதால் கொதித்தெழும் சிங்கள மக்கள், காலம் காலமாக குடிநீரின்றியும் பொருளாதாரத் தடைகளாலும் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதை உணராதது துரதிர்ஷ்டமானதென்பதுடன், சிங்கள மக்கள் இவ்விடயத்தில் இனவாதக் கட்சிகளால் மிக மோசமாகத் தூண்டப்பட்டு மனிதாபிமானப் பிரச்சினையை அரசியலாக்கி வருகிறார்கள்.
எந்தவொரு மனிதனும் இயற்கை அளித்துள்ள கொடையை பெறுவதை தடுக்கும் உரிமை எவருக்குமில்லை. அது அராஜகமானதென்பதுடன் அடாவடித்தனமானதும் அநீதியானதுமான செயலாகும். இயற்கை வளம் எல்லோருக்கும் பொதுவானது. அதனை ஒருவர் இன்னொருவரிடமிருந்து கேட்டுப் பெறவும் கூடாது. அவ்வாறானதொரு நிலைமை ஏற்படவும் இடமளிக்கக் கூடாது.

ஆனால், இலங்கைத் தீவில் கடந்த 25 வருடங்களாக இனவாத அரசுகளின் செயல்களால் தமிழர்கள் அனுபவித்த துன்ப துயரங்கள் சொல்லிலடங்காது. காலாகாலமாக அவர்கள் பொருளாதாரத் தடைகளாலும் கடல் வலயத் தடைகளாலும் இடப்பெயர்வுகளாலும் அனுபவித்து வரும் கொடுமைகள் அளவிட முடியாதது.
இது குறித்தெல்லாம் இன்று வரை சிங்கள மக்கள் எவராவது சிந்தித்திருப்பார்களா என்று எவருக்கும் தெரியாது. தற்போது கூட மாவில் ஆற்றுப் பிரச்சினை அரசியல் மயப்படுத்தப்பட்டு பின்னர் இராணுவமயப்படுத்தப்பட்டுள்ளது.

புலிகளின் பகுதிகளிலுள்ள தமிழர்கள் எதிர்நோக்கும் மிக அத்தியாவசியப் பிரச்சினைகளில், குடி நீர்ப் பிரச்சினையையாவது தீர்த்து இந்தப் பிரச்சினைக்கு அரசால் தீர்வொன்றைக் காணமுடியும்.
ஆனால், அந்த மக்கள் விதித்த நிபந்தனைகள் எதனையும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லையெனக் கூறிவரும் அரசு, இராணுவ நடவடிக்கை மூலம் அந்தப் பிரதேசத்தை கைப்பற்றி அணையைத் திறக்கப் போவதாக சூளுரைத்ததுடன் படை நடவடிக்கையொன்றிலும் இறங்கியுள்ளது.
அணைக் கட்டை திறப்பதற்கான நடவடிக்கையெனக் கூறி அப்பகுதியில் விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனாலும் விமானக் குண்டு வீச்சு அணைக் கட்டை திறக்க எந்த வழியிலும் உதவாததால் திருகோணமலையில் மட்டுமல்லாது முல்லைத்தீவிலும் விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது.

திருமலையில் நடத்தப்பட்ட தாக்குதல் அணைக் கட்டை திறப்பதற்கென்றால் முல்லைத்தீவுத் தாக்குதல் எதற்கென்ற கேள்வி எழுப்பப்படுகிறது. அதன் மூலம் திருமலையில் அணைக்கட்டை திறந்து விடலாமென அரசு கருதுகின்றதா அல்லது தருணம் பார்த்து தாக்குதல்களை நடத்திவிட்டு அவற்றுக்கு அரசு காரணம் கற்பிக்க முயல்கின்றதா?
முல்லைத்தீவில் புலிகளின் புதிய விமான ஓடுபாதை இந்தக் குண்டு வீச்சால் பலத்த சேதமடைந்துள்ளதாக அரசும் படைத் தரப்பும் கூறுகின்றன. திருகோணமலையில் புலிகளின் பகுதி மக்களின் அன்றாடப் பிரச்சினையைத் தீர்த்து மாவில் ஆற்றுப் பிரச்சினையே எழாமல் அரசால் தடுத்திருக்க முடியும்.

ஆனால், அதை விடுத்து வான் வழித் தாக்குதல்கள், தரைவழித் தாக்குதல்களென ஆரம்பித்திருப்பதன் மூலம், தமிழர் பகுதிகளில் விதிக்கப்படும் பொருளாதாரத் தடைகளுக்கும் கடல் வலயத் தடைகளுக்குமெதிராக புலிகளும் இராணுவ நடவடிக்கையில் இறங்க வேண்டுமெனக் கூறமுற்படுகிறதா?
இப்பகுதிக் கள நிலைமையானது மாவில் ஆற்றுப் பகுதிக்கு படையினர் பெரும் விலை கொடுத்துச் சென்றாலும் அங்கு நிலை கொள்ள முடியாததை உணர்த்தும். அவ்வாறு நிலை கொள்வதாயின் பல கிலோமீற்றர் தூரத்திற்கு படைமுகாம்களும், மினி முகாம்களும், விநியோகப் பாதைகளும் அமைக்கப்பட வேண்டும்.
அதேநேரம், இராணுவ நடவடிக்கை மூலம் இந்த அணையைத் திறந்து விட்டு படையினரால் மீண்டும் பழைய இடங்களுக்குச் செல்ல முடியாது. அப்படி அவர்கள் திரும்பிச் சென்று விட்டால் அப்பகுதி மக்கள் மீண்டும் அணையை மூடிவிடுவர். பின்னர் அது நிரந்தரமாகவே மூடப்பட்டு விடும்.

இதனால், அணைக்கட்டுப் பகுதியிலும் முகாம் அமைத்து பல கிலோமீற்றர் தூரத்திற்கு முகாம்களையும் விநியோகப்பாதையையும் அமைப்பதானால், இதற்காக நூற்றுக் கணக்கான படையினரை இப்பகுதிகளில் நிறுத்த வேண்டும்.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் இவர்கள் மீது புலிகள் தாக்குதல் தொடுத்தால் படையினர் பாரிய உயிரிழப்புக்களைச் சந்திப்பதுடன் தினமும் பலரை இழந்து கொண்டிருக்க வேண்டியிருக்கும்.
இதேநேரம், இந்த அணையை திறந்து படையினரை தக்க வைத்து அதனைப் பாதுகாக்க வேண்டிய அளவுக்கு இந்த அணைக்கட்டு கேந்திர முக்கியமானதொரு நிலையுமில்லை. இதனால், இதற்காக மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கையானது படைத் தரப்புக்கும் அரசுக்கும் மோசமான பின் விளைவுகளையே ஏற்படுத்தும்.
இல்லையேல் இந்தப் பிரதேசத்தை முழு அளவில் கைப்பற்றுவதற்கும் அதனைத் தக்க வைப்பதற்கும் ஆயிரக் கணக்கில் படையினர் தேவை. அதுவும், அரசுக்கும் படையினருக்கும் சாத்தியப்படாததொன்று.

இதனால் இந்தப் பிரச்சினைக்கு கத்தியின்றி இரத்தமின்றி சமாதானமாகத் தீர்வைக் கண்டு புலிகளின் பகுதி மக்களது அடிப்படைப் பிரச்சினைக்கும் சிங்கள மக்களின் நீர்ப்பாசனப் பிரச்சினைக்கும் சுமுகமான தீர்வைக் காணலாம்.
சிங்களவருக்கு ஒரு நீதி, தமிழருக்கு ஒரு நீதியா? அல்லது சிங்களவர்கள் இவ்வாறான தடைகளால் பாதிக்கப்படக் கூடாது, தமிழர்கள் இவ்வாறான தடைகளால் பாதிக்கப்படாது இருக்கக் கூடாதென அரசும் இனவாதிகளும் கருதுகின்றனரா?
கடந்த சில தினங்களாக படைத் தரப்பு மேற்கொண்டு வரும் விமானக் குண்டு வீச்சும் இராணுவ நடவடிக்கையும், போர் நிறுத்த உடன்பாடு முடிவுக்கு வந்து விட்டதையே காட்டுகிறது. சாதாரணமாக பேசித் தீர்க்கப்பட வேண்டிய ,அன்றாட அடிப்படைப் பிரச்சினைக்கு கூட இராணுவத் தீர்வொன்றைக் காணவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விரும்புகிறார்.
போர் நிறுத்த உடன்பாட்டை அப்பட்டமாக மீறியே இராணுவ நடவடிக்கைகள் இடம் பெறுகின்றன. கண்காணிப்புக் குழுவின் தலைவர் இந்தப் பிரச்சினை தொடர்பாக புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் சென்று அப்பகுதி மக்களுடன் உரையாடிக் கொண்டிருக்கையில் கூட விமானத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

அரசின் இந்த நடவடிக்கைகளானது வலிந்து போருக்கு அறை கூவல் விடுப்பதாகவே தாங்கள் கருதுவதாகப் புலிகள் கூறியுள்ளனர். அத்துடன், இவற்றுக்கெல்லாம் மிக மோசமான எதிர் விளைவுகள் இருக்குமெனவும் விடுதலைப் புலிகள் எச்சரித்துள்ளனர்.
அவர்களது இந்த எச்சரிக்கையானது அவர்கள் மேற்கொள்ளவுள்ள பதில் நடவடிக்கை பற்றியதே. இதனால், அடுத்து வரும் நாட்களில் மிக மோசமான பதில் தாக்குதல்கள் இடம்பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அது பெரும் போராகக் கூட மாற்றம் பெறலாம்.
மாவில் ஆற்றை திறக்கவெனக் கூறி பொலநறுவை வெலிக்கந்தையிலிருந்து புறப்பட்ட படையணியொன்றை விடுதலைப் புலிகள் வழி மறித்து தாக்கி பலத்த இழப்புடன் திருப்பியனுப்பியுள்ளனர். மேலும், படை நடவடிக்கை தொடருமெனவும் அரசு தரப்பு எச்சரித்துள்ளது. புலிகளும் இதனை எதிர்கொள்ளத் தயாராயிருப்பதாக அறிவித்துள்ளனர்.
ஆற்று நீர் பிரச்சினையை மட்டுமன்றி அனைத்துப் பிரச்சினைக்கும் இராணுவத் தீர்வொன்றைக் காணும் முயற்சியிலேயே அரசு இருப்பது தெளிவாகியுள்ளது. அரசின் இந்த நிலைப்பாட்டை சர்வதேச சமூகமும் இன்று புரிந்து கொண்டுள்ளது. சாதாரண பிரச்சினைக்கெல்லாம் படை நடவடிக்கையென்றால் இனப் பிரச்சினைக்கு மட்டும் இந்த அரசு எப்படி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும்.

எந்த வித நோக்கமோ அல்லது சிந்தனையோ இன்றி பழிக்குப் பழி, இரத்தத்துக்கு இரத்தம் என்ற ரீதியிலேயே அரசின் செயற்பாடுகளுள்ளன. தமிழர்களின் அடிப்படை பிரச்சினைகளை தென்பகுதி மக்களுக்கு எடுத்துரைக்கக் கூட சிங்கள, ஆங்கில ஊடகங்களும் தயாரில்லை.
தங்கள் மீது ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்ததாலேயே கண்காணிப்புக் குழுவில் அங்கம் வகிக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை அதிலிருந்து வெளியேற்ற வேண்டுமெனப் புலிகள் வலியுறுத்துகின்றனர். ஆனால், அனைவரையுமே வெளியேற்ற வேண்டுமென இனவாதிகள் கூச்சலிடுகின்றனர்.
தெற்கிலுள்ள இன்றைய நிலைமை இது தான். தமிழர்கள் எதனைச் செய்தாலும் அதற்கு ஒரு படி மேல் சென்று ஏதாவது செய்ய வேண்டுமென நினைக்கிறார்களே தவிர, யதார்த்தமாக எதனையும் சிந்தித்து செயற்படும் நிலையில் எவருமேஇல்லையென்பது தான் தினமும் நடைபெறும் நிகழ்வுகள் மூலம் தெளிவாகிறது.

மாவில் ஆறு பிரச்சினைக்கான தீர்வை மிகச் சுமுகமாகக் கண்டிருக்கலாம். ஆற்றை திறக்க தமிழ் மக்கள் கோரும் விடயங்களைக் கூட நிறைவேற்ற மாட்டோமென்றால் இவர்கள் எதனைத் தான் எப்படி நிறைவேற்றப் போகிறார்கள்?
ஒற்றையாட்சிக்குள்ளேயே தீர்வு என்பது போல்தான் அனைத்துப் பிரச்சினையையும் கையாள அரசு முற்படுகிறது. சாதாரண பிரச்சினைகளெல்லாம் இனவாத அரசியல் மயப்படுத்தப்படுகிறது. இதனால், பேசித் தீர்க்கக் கூடிய பிரச்சினைக்கெல்லாம் மோதித் தான் தீர்வு காணலாமென்ற நிலை உருவாகியுள்ளது.
மாவில் ஆற்றை திறப்பதற்கு இராணுவ நடவடிக்கை எடுப்பதென்பது பேரழிவையே ஏற்படுத்தும். ஆனாலும், அரச படைகளால் அந்த இலக்கை எட்ட முடியுமா என்பது கேள்விக் குறியாகும். திருகோணமலை மாவட்டத்தை சிங்கள மயப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியே படை நடவடிக்கை மூலமான தீர்வாகும்.

தமிழர் தாயகப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சிங்களக் குடியேற்றப் பகுதிகளுக்கு வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தவே தமிழர் பகுதிகள் மீது பொருளாதாரத் தடைகளும் அடக்கு முறைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. படை நடவடிக்கைகள், பொருளாதாரத் தடைகளால் தமிழ் மக்கள் பெருமளவில் இடம்பெயரும் போது அப்பகுதிகளை ஆக்கிரமிப்பதும் இனவாதிகளின் சூழ்ச்சியாகும்.
இதனால், அரசும் படைகளும் படை நடவடிக்கை மேற்கொள்ள எடுத்துள்ள திட்டமானது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது. ஏற்கனவே, கிழக்கில் கருணா குழுவைப் பயன்படுத்தி தமிழர் பகுதிகளில் இடம்பெறும் மிக மோசமான அடாவடித்தனங்களின் மத்தியில் தற்போது திருமலையில் இவ்வாறானதொரு நிலைமையை ஏற்படுத்த முழு அளவில் திட்டமிடப்படுகின்றது.

திருமலையில் சிங்களவரோ பயிர் வாழ தண்ணீர் கேட்கின்றனர். ஆனால், தமிழர்களோ உயிர் வாழ தண்ணீர் கேட்கின்றனர். இந்தப் பிரச்சினைதான் இனப் பிரச்சினைத் தீர்வின் அடுத்த கட்டத்தை நகர்த்தப் போகிறது.
__________________________________

நன்றி: தினக்குரல்-பாதுகாப்பு நிலைவரம்-Sunday, July 30, 2006

Labels: , , ,

Wednesday, July 26, 2006

மொட்டவிழ்ந்த கனவுகள்

-மலைமகள் -

நாலடி நடந்தாலே நகங்களுக்குச்சாயம் பூசும் வளமுள்ள செந்நிற மண்பூமி. விமான ஓடுதளம் மட்டுமன்றி பலாலிப்பகுதி முழுதுமே சிறிலங்காப் படையினரின் பிடியில் சிக்கிவிட்டிருந்தது. 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் பலாலிப் படைத்தளத்தின் பெரும்பகுதியை விடுதலைப்புலிகள் மகளிர் படையணி காவல் செய்தது. இந்திய இராணுவத்திடம்
போர்ப்பயிற்சியை மூன்றாண்டுகள் பயின்றிருந்த, படையணியின் மூத்த உறுப்பினர்களும் அப்போதுதான் பயிற்சி முடித்து வந்த புதியவர்களுமாக துடிப்புமிக்க இளையவர்களால் எமது காவல் அரண்கள் எப்போதுமே விழிப்பாக இருந்தன.

கனரக ஆயுதங்களின் பலம் இல்லாத காலம் அது. எழுபத்தைந்து பேர் கொண்ட அணி காவல் செய்யும் பகுதியில் ஒரேயொரு பிறண் எல்.எம்.ஜியும் ஒரு ஆர்.பி.ஜியும் நின்ற காலம். எமது படைவலு இலகுரக ஆயுதக்காரர்களது சூட்டு வலுவிலும், மனோவலுவிலும் பேணப்பட்டது. கையில் குண்டுகளுடனோ, சுடுகலன்களுடனோ ஒருவர், இருவராக முன்னேபோய் பகைக் காப்பரண்களை நெருங்கித் திடீர்த் தாக்குதல் செய்து எதிரியை நிலைகுலைய வைப்பதுதான் அப்போது எமது முக்கிய வேலை. நைற்றிங்கேள் இதில் மிகவும் தேர்ந்தவர். எதிரி ஏவும் இருரவைகளுக்கு இடையேயுள்ள இடைவெளியைப் பயன்படுத்தி முன்னேறவும் பி;ன்னகரவும் அவரால் முடியும் என்றுகூற எங்களில் பலரால் அவரது செயல்கள் சொல்லப்படுவதுண்டு. பலாலியின் செழித்த வாழைமரங்களில் ஒன்றுமட்டும் போதும் எதிரியின் கண்ணில் படாமல் இவருக்குக் காப்பளிக்க. அவ்வளவு மெல்லிய உடல்வாகு. தோற்றத்துக்குச் சற்றும் பொருந்தாத கடும் துணிச்சல். சிறிதும் குறிவழுவாத சூடு. 1990ஆம் ஆண்டின் பிற்பகுதியில் மாங்குளத்தில்
அமைந்திருந்த சிறிலங்காப் படைத்தளத்தை அழிப்பதற்கான பயிற்சிக்கு திறமையாளர் பலர் தேர்ந்தெடுக்கப்பட்டபோது பட்டியலில் நைற்றிங்கேள் என்ற பெயர் முன்னணியில் இருந்தது. அப்போது அவர் ஏழுபேர் கொண்ட அணியின் பொறுப்பாளர். இவரின் மேலான பொறுப்பாளர் பலாலியிலிருந்து நைற்றிங்கேளைப் போகவிடமாட்டேன் என்று சிறப்புத் தளபதியிடம் ஒற்றைக்காலில் நின்றார். சண்டையொன்றில் தான் விழுந்தால், வெற்றிடத்தை நிரப்ப நைற்றிங்கேள் வேண்டும் என்ற அவரின் பிடிவாதமே கடைசியில் வென்றது.

என்னுடைய அணியில் நைற்றிங்கேள் இருக்கவேண்டும் என்ற விருப்பம் இவர் ஒருவரிடம் மட்டுமல்ல, அணித்தலைவிகள் பலரிடமும் இருந்தது. மிகச் சிறந்த சூட்டாளர் என்பதால் இவருக்கு ஆர்.பி.ஜி வழங்கப்பட்டது.
ஏவப்படுகின்ற எறிகணைகள் ஒவ்வொன்றும் இலக்கை சரியாகத் தாக்கவேண்டும். “தவறிவிட்டது” என்ற சொல்லுக்கு அகராதியில் இடமில்லை. எனவே ஆர்.பி.ஜியும் நைற்றிங்கேளும் தோள் சேர்ந்தனர்.

விடுதலைப்புலிகளின் வரலாற்றுப் புகழ்மிக்க, ஆகாய கடல் வெளிச்சமர் பரந்த வெளியில் விரிந்தபோது கடலால் தரையிறக்கப்பட்டு இரைந்துவந்த
ராங்கிகளிடமிருந்து எமது ஆளணியைப் பாதுகாக்க ஆர்.பி.ஜியின் பலம் தேவைப்பட்டது. எந்த அணியிலும் இல்லாது நைற்றிங்கேள் தனியாக இயங்கவிடப்பட்டிருந்தார். “நைற்றிங்கேளை அனுப்பு” என்ற கட்டளை களத்தின் ஒரு முனையிலிருந்தும், கேணல் பால்ராஜிடமிருந்தும் வரும். மறுமுனையிலிருந்து கேணல் யாழினியிடமிருந்தும் (விதுஷா)
வரும். எங்கு ராங்க் இரைந்ததோ, அங்கு அவர் தேவைப்பட்டார். எத்திசையில் அவர் போனாரோ, அங்கு அதன்பின் ராங்கின். இரைச்சல் கேட்காது.

களத்தின் தேவைக்கேற்ப கடுகதியாக விரையும் நைற்றிங்கேள், துளியும் தற்பெருமை இல்லாத, எப்போதும் எவரையும் கனம் பண்ணுகின்ற தன் இயல்பில் கடைசிவரை வழுவவில்லை. 1993ஆம் ஆண்டில் பூநகரியிலிருந்த சிறிலங்காப் படைத்தளத்தைத் தாக்குவதற்கு நாம் தயாராகிக் கொண்டிருந்தோம். நடவடிக்கையில் இறங்கப்போகும் ஆர்.பி.ஜிக்களின் பொறுப்பாளர் நைற்றிங்கேள். பூநகரிப் படைத்தள இராணுவம் அதற்கிடையில் முன்னகரப் போவதற்கான அறிகுறிகள் தென்பட, மறிப்பதற்கு பூங்கா தலைமையில் பெண் போராளிகளின் அணியொன்று போனது. மறிப்பு வேலியாகக் காப்பரண்களை அமைத்தது. ஆர்.பி.ஜிக்களுக்கான நிலைகள் மிகநேர்த்தியாக நைற்றிங்கேளின் வழிநடத்தலில் அமைக்கப்பட்டு, பார்வையை ஈர்த்தன. நிலைகளைப் பார்வையிட வந்தார் கேணல் சொர்ணம். அவரின் கவனத்தையும் அந்நிலைகள் ஈர்த்தன.

“ஆர் உங்கட ஆர்.பி.ஜி பொறுப்பாளர்?”
கேணல் சொர்ணத்தின் முன், காற்றிலாடும் கழுகுபோல வந்துநின்ற நைற்றிங்கேளைப் பார்க்க அவருக்குச் சிரிப்பு வந்துவிட்டது.

“எத்தினை ஷெல் அடிச்சிருக்கிறீங்கள்?”

“இருபத்திமூண்டு”
அதிர்ச்சி தரும் பதில்.

எங்கெங்கே அடிச்சீங்கள்?”

“ஆனையிறவில பதினெட்டு. அதுக்குப் பிறகு வேற வேற சண்டையளில அஞ்சு”

நைற்றிங்கேளைக் கூர்ந்து பார்த்தவர்,
“நீங்கள்தான் அந்த நைற்றிங்கேளோ?”
என்றார்.

இதுபோதும். இதற்குமேல் நைற்றிங்கேளைப் பற்றி நாம் வேறெதுவும் பேசத்தேவையில்லை. போன சண்டைகள் எதிலுமே அவர் காயப்பட்டதில்லை. தனது இலக்கைத் தாக்கிவிட்டு, சிறு கீறல்கூட இல்லாமல் திரும்பிவந்த ஒவ்வொரு முறையும், “ஏதோ ஒரு சண்டையில் நான் முழுசாப் போறதுக்குத்தான் இப்படிக் காயங்களேயில்லாமல் வாறன்” என்றவர் பூநகரி சிங்களக் கூட்டுப்படைத்தளம் மீதான “தவளை” நடவடிக்கையில் காலில்லாமல் வந்தபோது, சற்று நிம்மதியடைந்தோம் ஆள் போவதைவிடக் கால்போனது பரவாயில்லையென்று. ஒற்றைக் காலோடு தன் வாழ்வின் அடுத்த கட்டம் இதுதான் என்பதை அவர் முடிவெடுத்தபோது நாம் கவலையடையவில்லை. கடலிலும் அவரின் வேகம் தணியவில்லை எனப் பெருமைப்பட்டோம்.



கடற்கரும்புலி மேஜர் தமிழ்மங்கை/நைற்றிங்கேள்
(சத்தியவாணி துரைராசா) பூநகரி, மன்னார்.
22.02.1998 பருத்தித்துறைக் கடற்பகுதியில் பபதா
தரையிறங்கு கலம் மீதான தாக்குதல்.

************************************************************************


சிறுத்தைகளைப் போன்று பதுங்கிப்பாயும் அணியொன்றின் நிர்வாக வேலையில் சிலகாலம் பங்கேற்ற பின் விடுதலைப்புலிகள் மகளிர் படையணிக்கு வந்திருந்தார் நித்தியா. எப்போதும் சிரித்த முகம். மனம் சிரிப்பது விழிகளில் வெளிப்படையாகத் தெரியும்படியான சிரிப்பு. சளைக்காமல், களைக்காமல் எத்தனை கடின பயிற்சியையும் செய்தார். விடுதலைப்புலிகள் மகளிர் படையணிக்கு வந்த நாளிலிருந்து தொடர்ந்து சண்டைதான். தொடர்ந்து காயங்கள்தான்.

பயிற்சி செய்வார். களம் செல்வார்.
காயத்தோடு வந்து ஓய்வெடுப்பார்.
மறுபடி பயிற்சி, சண்டை, காயம்,......., ......., என்று ஒரு தொடர் சங்கிலி.

அமைதியான இயல்பைக்கொண்ட அவர் கண்டிப்பான அணி முதல்வியாக அல்லாமல், அன்பான அணி முதல்வியாகவே தனது முதற்களமான 1992ஆம் ஆண்டில் தொண்டைமானாற்றிலிருந்து ஒட்டகப்புலம் வரையான நூற்றைம்பது காப்பரண்கள் மீதான தாக்குதலில் தொடங்கி, 1997இல் ஜெயசிக்குறு எதிர்நடவடிக்கை வரை எம்மோடிருந்தார். பயிற்சி செய்தால், தூரம் நடந்தால் கால் வீங்கும் என்று தெரிந்துகொண்டே சளைக்காமல் எல்லாவற்றிலும் ஈடுபட்ட நித்தியாவினுள் கரும்புலிக் கனவு மொட்டவிழ்ந்து வாசம் வீசியபோது, எங்களுக்குத் தெரிந்துவிட, “என்ன நித்தியா, கரும்புலிப் பயிற்சி செய்யிற நிலைமையிலா நீ இருக்கிறாய்” என்ற நண்பிகளின் அக்கறையான கேள்விக்கும் சிரிப்பையே பதிலாகத் தந்துவிட்டு, அவர் போய்விட்டார்.



கடற்கரும்புலி மேஜர் நித்தியா
(செல்வராசா தயாளினி )யாழ்ப்பாணம்
16.09.2001 பருத்தித்துறைக் கடற்பரப்பில் கப்பல்
தொடரணி மீதான கரும்புலித் தாக்குதல்.
__________________________________________

படங்களுக்கு நன்றி: அருச்சுனா
__________________________________________
நன்றி: விடுதலைப்புலிகள்-ஆனி, ஆடி 2006

Labels: ,

Tuesday, July 25, 2006

படையினரின் வலிந்து தாக்குதல் போருக்கான ஒரு அழைப்பா?

-விதுரன்-
* முன் எச்சரிக்கை விடுத்த பின்னர் புலிகள் நடத்திய தாக்குதல்

நாட்டில் மீண்டும் முழு அளவிலான போருக்கு படையினர் தயாராகிவிட்டனர். அங்கீகரிக்கப்பட்ட போர்நிறுத்த உடன்பாடு அமுலிலிருந்தாலும் அதற்கப்பால் அங்கீகரிக்கப்படாத போரே நடைபெற்று வந்தது. ஆனால், மட்டக்களப்பு வாகனேரியில், பாரிய இராணுவ நடவடிக்கையொன்றுக்குச் சமனாக புலிகளின் பகுதிக்குள் சென்று படையினர் தாக்குதல் நடத்தியதன் மூலம் படைகள் போருக்குத் தயாராகிவிட்டன என்ற செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைக் காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள், ஆழ ஊடுருவும் கருணா குழுவும் இராணுவ புலனாய்வுப் பிரிவும் சிறியளவிலான தாக்குதல்களையே மேற்கொண்டு வந்தன. ஆனால், வெள்ளிக்கிழமை நடைபெற்றது ஆழ ஊடுருவல் தாக்குதலல்ல. பாரிய படையெடுப்பொன்றை போல் நூற்றுக்கும் மேற்பட்ட படையினர் புலிகளின் பகுதிக்குள் முன்னேறிச் சென்று வலிந்து தாக்குதலை நடத்தியுள்ளனர்.



ஆழ ஊடுருவல் தாக்குதலுக்கும் நீண்டதூரம் முன்னேறிச் சென்று மேற்கொள்ளப்படும் தாக்குதல்களுக்கும் வேறுபாடுள்ளது. இதன் வெளிப்பாடே வாகனேரியில் புலிகளின் பகுதிக்குள் முன்னேறிச்சென்ற படையணிகள் மேற்கொண்ட தாக்குதலாகும்.

ஆழ ஊடுருவல் தாக்குதல் அணிகளானது, எதிரியின் பகுதிக்குள் தங்களை உருமறைப்புச் செய்தவாறு நீண்டதூரம் ஊடுருவிச் சென்று எதிரியின் முக்கிய இலக்குகளை அல்லது முக்கியஸ்தர்களைத் தாக்கிவிட்டு தப்பிச் செல்வதாலும்.

அண்மைக் காலத்தில் மட்டக்களப்பிலும் வன்னியிலும் கருணா குழுவும் இராணுவப் புலனாய்வுப் பிரிவும் மேற்கொண்ட தாக்குதல்களானது ஆழ ஊடுருவி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகும். இவ்வாறான தாக்குதல்களில் புலிகளின் முக்கிய தளபதிகளும் போராளிகளும் பொது மக்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த ஆழ ஊடுருவல் படையணிகளின் தாக்குதலின் மூலம் புலிகளின் முக்கியஸ்தர்களை அழிப்பது மட்டுமல்லாது புலிகளின் பகுதிகளுக்குள் அவர்களது நடமாட்டங்களை வெகுவாகக் கட்டுப்படுத்துவதுடன் அங்குள்ள மக்கள் மத்தியிலும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி எங்கும் எவ்வேளையிலும் தாக்குதல் நடத்தும் ஆற்றலுடன் படையினர் பரவி வியாபித்திருக்கின்றார்களென்றதொரு தோற்றப்பாட்டையும் ஏற்படுத்துவதாகும்.

இது உளவியல் ரீதியில் புலிகளையும், அவர்களது கட்டுப்பாட்டுப் பகுதிகளினுள் வாழும் மக்களையும் அச்சுறுத்தும் செயலென்பதுடன் இதன் மூலம் புலிகளின் பகுதிகளினுள்ளேயே அவர்களது சுதந்திரமானதும் பரந்துபட்ட செயற்பாடுகளையும் கட்டுப்படுத்தும் நோக்கம் கொண்டது.

இந்த ஆழ ஊடுருவும் படையணி தன்னை இனங்காட்டிக் கொள்ளாது உருமறைப்புச் செய்து ஊடுருவுவதுடன் புலிகளோ அங்குள்ள மக்களோ அடையாளம் காண்பதைத் தவிர்ப்பதற்காக புலிகளின் சீருடைகளை அணிந்து சென்றும் தாக்குதல்களை நடத்தி வந்தன.

இதன்போது தங்களை எவராவது அடையாளம் கண்டுவிட்டால் அவர்களை அந்தந்த இடங்களிலேயே இந்த ஆழ ஊடுருவும் படையணி கொன்றுவிட்டு தனது இலக்கை நோக்கி நகரும்.

இதன் மூலம் புலிகளுக்கு, ஆயுதக் குழுக்களும் இராணுவப் புலனாய்வுப் பிரிவும் பெரிய தலையிடியைக் கொடுத்து வந்தபோதும் புலிகள் துரிதமாகவும் நுட்பமாகவும் செயற்பட்டு ஆழ ஊடுருவும் படையணிகள் மீது அடுத்தடுத்து தாக்குதல்களை நடத்த அந்தப் படையணியின் செயற்பாடு தற்போது வெகுவாகக் குறைந்துவிட்டது.

இவ்வாறான ஆழ ஊடுருவும் தாக்குதலில் இராணுவப் புலனாய்வுப் பிரிவே முக்கிய இடம் வகித்தாலும் இந்தத் தாக்குதல்களை தமிழ் குழுக்களே நடத்துவதாக பிரசாரம் செய்யப்பட்டு வந்தது. எனினும், புலிகளின் பதில் தாக்குதல்களில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் சிலர் கொல்லப்பட்டதுடன் சிலர் பிடிபட உண்மை தெரியவந்தது.

ஆழ ஊடுருவும் படையணிக்கு அடுத்தடுத்து விழுந்த அடி படையினரை திக்குமுக்காடச் செய்யவே புலிகள் மீதான தாக்குதலுக்கு அவர்கள் வேறு வழிகளைக் கடைப்பிடிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதன் ஒரு கட்டமாகவே வாழைச்சேனை வாகனேரியில் புலிகளின் பகுதிக்குள் நீண்டதூரம் முன்னேறிச் சென்ற படையணிகள் புலிகள் மீது தாக்குதல் தொடுத்தன.

ஆழ ஊடுருவல் படையணிகளில் இடம்பெறுவோர் எண்ணிக்கை மிகக் குறைவாகவேயிருக்கும். ஐந்து அல்லது ஆறு பேரைக் கொண்ட குழுவே ஆழ ஊடுருவி இலக்கைத் தாக்கும். ஆனால், வாகனேரிக்குள் முன்னேறியது, நூற்றுக்கும் மேற்பட்டோரைக் கொண்ட படையணிகளாகும்.

இது ஊடுருவல் தாக்குதலல்ல. வலிந்து மேற்கொள்ளப்பட்டதொரு தாக்குதலாகும். இதன் மூலம், இதுவரை நாளும், போர்நிறுத்த உடன்பாடு அமுலிலுள்ள போதிலும் இடம்பெற்று வந்த " Low intensity war' என அழைக்கப்பட்டு வந்த சிறு அளவிலான சற்று உக்கிரமான மோதலானது தற்போது முழு அளவிலான போராக மாறிவிட்டதா என்ற கேள்வியும் எழுகிறது.

மட்டக்களப்பு - பொலநறுவை வீதியிலிருந்து சுமார் ஐந்து கிலோமீற்றர் தூரத்திற்கு நூற்றுக்கும் மேற்பட்ட படையினர் முன்னேறிச் சென்று இந்த மோதலில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து உடனடியாக புலிகள் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவுக்கு அறிவித்து அவர்களை அங்கிருந்து விலகிச் செல்லுமாறு கேளுங்கள் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

`எங்கள் பகுதிக்குள் நீண்டதூரம் முன்னேறி வந்து எமது போராளிகளைத் தாக்கியுள்ளனர். அவர்களைப் பின்வாங்கச் சொல்லுங்கள் அல்லது திருப்பித் தாக்குவோர் என்றும் புலிகள் கண்காணிப்புக் குழுவுக்கு மீண்டும் மீண்டும் கூறியுள்ளனர்.

கண்காணிப்புக் குழுவும் இராணுவத் தரப்புடன் தொடர்பு கொண்டு நிலைமை மோசமடைவதை தவிர்க்குமாறு கேட்டுள்ளது. ஆனால், இராணுவத்தினர் தேடுதல் நடவடிக்கை ஒன்றுக்காக (Clearing Operation) சென்றுள்ளனர். எனினும், அது புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியல்ல என்று கண்காணிப்புக் குழுவிடம் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

தங்கள் போராளிகளைத் தாக்கிவிட்டு படையினர் அப்பகுதியில் தொடர்ந்தும் நிற்பதை சுட்டிக்காட்டிய புலிகள், இராணுவம் பின்வாங்காத நிலையில் அவர்கள் மீது பதில் தாக்குதலை தொடுக்கவே கடும் மோதல் வெடித்தது.

வாகனேரிக்குள் முன்னேறிச் சென்றது, இராணுவத்தின் விஷேட தாக்குதல் படையணியாகும். எந்தச் சூழ்நிலையிலும் எந்தத் தாக்குதலையும் எதிர்கொள்ளும் விதத்தில் பயிற்சி பெற்ற படையணியே வாகனேரிக்குள் முன்னேறிய படையணி.

இதையடுத்து விடுதலைப்புலிகளின் விஷேட படையணிகள் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட மோதல் வெடித்தது. மோதல் ஆரம்பமாவதற்கு முன்னர் குடிமனைகளிலிருந்த பொது மக்களை புலிகள் பாதுகாப்பான இடங்களுக்கு அவசர அவசரமாக அனுப்பி வைத்தனர்.

புலிகளின் விஷேட படையணிகள் உக்கிரமான தாக்குதலை ஆரம்பித்த போது இராணுவ விஷேட படையணி நிலைகுலைந்து விட்டது. இவர்களுக்கு உதவியாக வாழைச்சேனை காகித ஆலை முகாம், மியாங்குளம் முகாம், கரடிக்குளம் முகாம், புனானை முகாம் மற்றும் ஆறாம் கட்டை சந்தி முகாம்களிலிருந்து, மோதல்கள் நடைபெற்ற பகுதி நோக்கி கடுமையான ஆட்லறி ஷெல்களும் மோட்டார் குண்டுகளும் பொழியப்பட்டன.

மிகப்பெரும் யுத்தம் போல் சுமார் ஒரு மணிநேரம் உக்கிர சமர் நடைபெற்ற போது, புலிகளின் கடுமையான பதிலடிக்கு முகம் கொடுக்க முடியாது இராணுவ விஷேட படையணி பின்வாங்கி ஓடியது. இதன்போது, 15 இற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட பலர் படுகாயமடைந்தனர். இதனால், உயிரிழந்தவர்களில் 12 பேரது சடலங்களையும் விட்டுவிட்டு விஷேட படையணி தப்பிச் சென்றது.

இதன்போது, இராணுவ கோப்ரல் ஒருவர் புலிகளிடம் பிடிபட்டுமுள்ளார். புலிகளின் பகுதிக்குள் முன்னேறிச் சென்று தாக்குதல் நடத்தியதற்கான ஆதாரமாக இந்த 12 சடலங்களும் இருந்துவிடுமென்பது தெரிந்தும் அந்தச் சடலங்களை மீட்க முடியாத நிலையிலேயே இராணுவ விஷேட படையணி பின்வாங்கியுள்ளது.

தங்கள் சகாக்களின் சடலங்களை மீட்டு, புலிகளின் பகுதிக்குள் தாங்கள் நுழைந்து தாக்குதலை நடத்தியதற்கான ஆதாரங்களை இல்லாது செய்துவிட படையினர் மேற்கொண்ட கடும் பிரயத்தனத்தையும் புலிகள் முறியடித்து விட்டனர். இதனால், 12 சடலங்களையும் கைவிட்டு விட்டு தங்களுடன் வந்தவர்களில் ஒருவரை புலிகள் பிடித்துச் செல்வதை அறிந்தும் பின்வாங்க வேண்டிய நிலை படையினருக்கு ஏற்பட்டது.

இந்தச் சமரில் கொல்லப்பட்ட அனைவரும் படையினர். பிடிபட்டவரும் இராணுவச் சிப்பாயே என்பதால் முற்று முழுதாக இராணுவ விஷேட படையணியொன்றே பெருமெடுப்பில் முன்னேறிச் சென்று இந்த வலிந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இதில் கருணா குழுவைச் சேர்ந்தவர்கள் இடம் பெற்றார்களா என்பது தெரியவில்லை.

வழமையாக கிழக்கில் புலிகளின் பகுதிக்குள் எந்தத் தாக்குதல் நடைபெற்றாலும் கருணா குழுவே தாக்குதல் நடத்துவதாகவும் புலிகளின் பகுதிக்குள் சென்று அவர்கள் மீது கடும் தாக்குதலைத் தொடுக்கும் வல்லமையுடன் கருணா குழு இருக்கிறது என்பது போன்றதொரு தோற்றப்பாட்டை அரசும் படைத் தரப்பும் சிங்கள, ஆங்கில ஊடகங்களும் ஏற்படுத்தியிருந்தன.

ஆனால், இந்தச் சமரில் கொல்லப்பட்ட அனைவரும் படையினர் என்பதுடன் அவர்களில் 12 பேரது சடலங்களை புலிகள் கைப்பற்றியதுடன் ஒருவரை உயிருடன் பிடித்ததன் மூலம், கருணா குழுவென்ற பெயரில் இதுவரை காலமும் இராணுவமே புலிகள் மீது தாக்குதல்களை நடத்தி வந்ததென்ற உண்மையை இன்று சிங்கள மக்கள் இதன் மூலம் உணர்ந்திருப்பர்.

இந்த மோதல் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நடைபெறவில்லை. இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியினுள் தேடுதலில் ஈடுபட்ட படையினர் மீதே புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக இராணுவமும் பாதுகாப்புத் துறை பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவும் கூறி வருகின்றனர்.

இவர்கள் கூறுவது போல் இந்த மோதல் நடைபெற்ற பிரதேசம் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியென்றால், படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் எப்படி 13 படையினர் காணாமல் போக முடியும், எப்படி அவர்களது சடலங்களையும் பெருமளவு ஆயுதங்களையும் புலிகளால் கைப்பற்றிச் செல்ல முடியும்?

படையினர் தான் புலிகளின் பகுதிக்குள் சென்று இந்தத் தாக்குதலை நடத்தியதன் மூலம் போர் நிறுத்த உடன்பாட்டை அப்பட்டமாக மீறிவிட்டதாக போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும் கூறுகின்றது.

இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியினுள்ளேயே இந்த மோதல் நடந்ததென்றால், புலிகள் போர் நிறுத்த உடன்பாட்டை அப்பட்டமாக மீறிவிட்டதாக இதுவரை ஏன் அரசோ, படைத்தரப்போ அல்லது கண்காணிப்புக் குழுவோ கூறவில்லை?

கிழக்கில் கருணா குழுவின் பிளவின் பின் புலிகள் முற்றாகப் பலமிழந்து விட்டதாகவும் அங்கு கருணா குழு பலம்மிக்க சக்தியாகவுள்ளதாக தெற்கில் மேற்கொள்ளப்பட்டு வந்த பிரசாரங்களுக்கு இது பேரிடியாகி விட்டது. எங்கும், எந்த இடத்திலும் இராணுவத்தின் எந்தப் படையணியையு ம் வெற்றிகரமாக எதிர்கொள்ளும் ஆற்றலுடன் கிழக்கில் தாங்களிருப்பதை புலிகள் இதன் மூலம் நிரூபித்துள்ளனர். வழமைபோல், அரசாலோ அல்லது படைகளாலோ இம்முறை பொய் சொல்ல முடியாததொரு நிலைமை ஏற்பட்டுள்ளதுடன் கிழக்கில் கருணா குழுவென்ற பெயரிலெல்லாம் படையினரே நாடகமாடி வருவதையும், இராணுவத்தினரின் 12 சடலங்களும் நிரூபித்துவிட்டன.

இந்த மோதலில் எத்தனை பேர் கொல்லப்பட்டிருந்தாலும் அரசோ, படைத் தரப்போ அல்லது தென்பகுதி ஊடகங்களோ கவலைப்பட்டிருக்க மாட்டா. ஆனால், 12 சடலங்களையும் புலிகள் கைப்பற்றியதன் மூலம் இன்று இவர்கள் அனைவரும் `மெல்லவும் முடியாது, விழுங்கவும் முடியாது' திகைத்துப் போயுள்ளனர். எல்லாவற்றையும், கைப்பற்றப்பட்ட 12 சடலங்களும் அம்பலப்படுத்திவிட்டன.

இல்லையேல், இந்த மோதல் பற்றி எமக்கு எதுவுமே தெரியாது. நாங்கள் ஒரு போதும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் செல்வதில்லை, புலிகளின் உள் இயக்க மோதலின் தொடர்ச்சியே இதுவென இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க வழமை போல் கூறியிருப்பார்.

இதற்கு அப்பால் சென்று சிங்கள, ஆங்கில ஊடகங்கள் கருணாவின் பலம் குறித்து ஆய்வுக் கட்டுரைகள் எழுதியிருக்கும். போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும் வழமைபோல் சம்பவம் நடைபெற்ற இடத்திற்குச் சென்று பார்த்துவிட்டு விசாரணைகள் நடைபெறுவதாகக் கூறியிருக்கும்.
எனினும், இவ்வாறானதொரு பாரிய தாக்குதலுக்காக பெரும் படையணி ஏன் சென்றதென்ற கேள்வி எழுகிறது. இனப்பிரச்சினைக்கு தீர்வுத் திட்டமொன்றை தயாரித்து வருவதாகவும், புலிகளுடன் பேசும் தங்கள் முடிவில் எவ்வித மாற்றமுமில்லையென்றும், இராணுவ ரீதியில் இந்தப் பிரச்சினைக்கு தீர்வொன்றைக் காண முடியாதெனவும் ஜனாதிபதி தொடர்ந்தும் கூறி வருகையில் இந்தப் பாரிய நகர்வு ஏன் நடந்தது?



இதன் மூலம், இதுவரை நாளும் சிறு அளவிலான உக்கிர மோதலாக இருந்த களநிலைமை பாரிய மோதலாகி யுத்தம் வெடிக்கக் கூடியதொரு சூழ்நிலை தோன்றியுள்ளதை ஆய்வாளர்களும் இராஜதந்திரிகளும் சுட்டிக் காட்டியுள்ளனர்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் புலிகளின் பதில் நடவடிக்கை எப்படியிருக்கப் போகிறது? இதனை வழமையான, சாதாரணமானதொரு மோதலாகக் கருதுவார்களா அல்லது வலிந்து போருக்கு விடுக்கப்பட்ட அழைப்பாகக் கருதுவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Labels: ,

Thursday, July 20, 2006

ஒட்டுக்குழு அரசியலுக்கு வாகனேரியில் முற்றுப்புள்ளி

மட்டக்களப்பு மாவட்டத்தில் புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டுப் பகுதியாக விளங்கும் வாகனேரிக்குறிச்சியில், சிங்களப் படைகள், பெருமெடுப்பில் திரண்டு - ஊடுருவித் தாக்குதல் நடாத்த முயன்ற இராணுவ நிகழ்ச்சி, சிங்கள அரசின் உண்மை முகத்தைச் சர்வதேச சமூகத்திற்குத் தோலுரித்துக் காட்டியுள்ளது. கடந்த டிசம்பரில் இருந்து புலிகளுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டுவரும் நிழல்யுத்தத்திற்கும் - சிங்களப் படைகளுக்கும் எந்தவித சம்பந்தமுமில்லை என்றே சிங்கள அரசு கூறிவந்தது. அந்த நிழல் யுத்தம் புலிகளுக்கும் - தமிழ் ஒட்டுக்குழுக்களுக்குமிடையேயான மோதல் என்றே அது சர்வதேச சமூகத்திற்குக் காட்டிவந்தது.

ஆனால், அன்று வாகனேரிப்பகுதியில் நடந்த சண்டையில் சிங்கள இராணுவத்தின் பன்னிரண்டு உடல்கள் புலிகளால் கைப்பற்றப்பட்டதும் - சண்டை நடந்த இடம் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிதான் என்று கண்காணிப்புக்குழு உறுதிப்படுத்தியதும் ஒரு முக்கியமான கேள்வியை சர்வதேச அரங்கில் எழுப்பியுள்ளது. அதாவது, சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் செய்து கொள்ளப்பட்ட போர்நிறுத்த உடன்பாட்டை சிங்கள அரசு நிராகரித்து விட்டதா! என்பதே அதுவாகும். போர்நிறுத்த சூழலை உடைத்து மீண்டும் போரைத்தொடங்க சிங்கள அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்துவருகின்றது என்பதே உண்மையாகும். அதற்காகப் போராளிகள்மீதும் - தமிழ்மக்கள் மீதும் கொலைத் தாக்குதல்களை நடாத்தி புலிகளைச் சீண்டிவருகின்றது. புலிகள் இயக்கமே போரைத் தொடங்கட்டும் என்பதுதான் சிங்கள அரசின் விருப்பமாகும். ஏனென்றால் தமிழரின் இனப்பிரச்சினைக்கு அரசியல்தீர்வு வழங்கும் எண்ணம் சிங்கள அரசிடமில்லை. இராணுவத்தீர்வு மூலம் தமிழர்களை ஒடுக்குவதே அதனது நீண்டகாலத் திட்டம். சமாதானப் பேச்சுக்கள் தொடராதுவிட்டாலும் சமாதானச் சூழலைப் பாதுகாக்க புலிகள் காட்டும் நீண்ட பொறுமை - விட்டுக்கொடுப்பு என்பன இன்றுவரை பெரும்போரைத் தள்ளிவைத்து வருகின்றது.

புலிகளின் இந்த நீண்ட பொறுமையை உடைக்கவே வாகனேரியில் சிங்கள அரசு பாரியதொரு தாக்குதல் முயற்சிக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த முயற்சியில் சிங்கள அரசு வெற்றிபெற்று - தாக்கவந்த படையினரும் தப்பிச் சென்றிருப்பார்களேயானால், இந்தத் தாக்குதலுக்கும் சிங்களப் படைக்கும் சம்பந்தமில்லை என்று சிங்கள அரசு கூறியிருக்கும். நான்கு - ஐந்து படையினர் கொண்ட சிறுகுழுவாகப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நுழைந்து தாக்குதல்கள் நடாத்திவந்த படையினர் இப்போது பல டசின்கணக்கில் ஊடுருவித்தாக்குதல் நடாத்த முயன்றுள்ளனர். சமாதானப் பேச்சுக்களுக்குப் புத்துயிர் ஊட்டுவதற்காக ஒட்டுக்குழுக்களின் ஆயுதங்களை மகிந்த அரசு களையவேண்டும் என்று சர்வதேச நாடுகளே கோரிவருகின்றன. ஆனால், ஆயுதக்களைவு என்ற பேச்சிற்கே இடமில்லை என்று சிங்களத்தின் சமாதானச் செயலகப் பணிப்பாளரே உறுதிப்படக் கூறிவிட்டார். ஒட்டுக்குழுக்களின் ஆயுதக்களைவு என்பது சிங்கள அரசின் இராணுவ நலன்களுக்குப் பாதகமானது என்று சிங்கள அரசு எண்ணுகின்றது. ஒட்டுக்குழுக்கள் நிராயுதபாணிகளாக்கப்பட்டால் வாகனேரி போன்ற தாக்குதல்களை நடாத்திவிட்டு ஒட்டுக் குழுக்களே செய்தன என்று சர்வதேசத்திற்குப் பொய்கூறுவது சிங்கள அரசிற்குச் சாத்தியமில்லாமல் போய்விடும்.

அதேவேளை, தீர்வுமுயற்சிகள் - அனைத்துக்கட்சி மாநாடுகள், நிபுணர்குழுக்கள்... என்ற சிங்கள அரசின் அரசியல் நாடகங்களும் சர்வதேச சமூகத்தின் முன் அம்பலமாகிவிடும் என்றும் அது அஞ்சுகின்றது. இதனாலேயே ஒட்டுக்குழுக்களின் ஆயுதக்களைவுக்கு மகிந்த அரசு விடாப்பிடியாக மறுத்து வருகின்றது. ஒட்டுக்குழுக்கள் அரசியலும் - தீர்வுமுயற்சி நாடகங்களும் இன்றைக்கு மட்டும் நடக்கவில்லை. சிங்கள ஆட்சியாளர்கள் இவற்றைப் பல்லாண்டுகளாக நடாத்தி வருகின்றனர். இந்தச் சூழ்ச்சி அரசியலைத் தமிழ்மக்கள் முழு அளவில் புரிந்துவைத்திருக்கின்றனர். அதனாலேயே, இன்று தமிழ்மக்கள் மத்தியில் மாபெரும் எழுச்சி தோன்றியுள்ளது. எனினும், சர்வதேச சமூகத்தை ஏமாற்றவும், குழப்பவுமே ஒட்டுக்குழுக்கள் அரசியலையும் - தீர்வுமுயற்சி நாடகங்களையும் சிங்கள அரசு அரங்கேற்ற முயற்சிக்கின்றது. சிங்கள அரசின் இந்த நயவஞ்சக நோக்கத்தைச் சர்வதேசசமூகம் புரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான் புலிகள் இயக்கத்தின் விருப்பமாகும். போர்நிறுத்த உடன்பாட்டிலுள்ள இராணுவ அம்சங்களான ஒட்டுக்குழுவின் ஆயுதக்களைவு போன்ற விடயங்களை மட்டும் சிங்கள அரசு உதாசீனம் செய்கின்றது என்றில்லை. உடன்பாட்டிலுள்ள அரசியல் - பொருளாதார அம்சங்களையும் சிங்கள அரசு காலில்போட்டு மிதித்து வருகின்றது. தமிழர் தாயகத்தில் இன்றும் மீன்பிடித்தடை - கட்டுப்பாடுகளை சிங்களக் கடற்படை அமுல்படுத்துகின்றது. எரிபொருட்கள் எடுத்துச்செல்வதை சிங்கள இராணுவம் தடுக்கின்றது. கட்டடப் பொருட்களுக்கான தடையையும் படையினர் அமுல்படுத்துகின்றனர். இதனால், சர்வதேச தொண்டர் நிறுவனங்களளவிலான மனிதாபிமானப் பணிகள்கூட தமிழர் நிலத்தில் தடைப்பட்டுப்போயுள்ளன.

இந்தவகையில் சமாதானகால நன்மைகள் எவற்றையுமே தமிழ்மக்கள் சரியாக அனுபவிக்கவில்லை என்பதே உண்மையாகும். சமாதான காலத்திலும் சிங்கள அரசின் நயவஞ்சகமான இராணுவத் தாக்குதல்களால் தமிழ்மக்கள் அழிவையும் - இடப்பெயர்வுகளையும் - அகதி வாழ்க்கைகளையுமே அனுபவித்துவருகின்றனர். தமிழரின் இராணுவ பலம்தான் தமிழினத்திற்கு நிம்மதியான வாழ்க்கையையும் - நிரந்தரமான தொழில்களையும் - கௌரவமான இருப்பையும் வழங்கும் என்பதே இன்றைய யதார்த்தமாகும். சிங்களத்தின் இராணுவச் சதிகளையும் - அதனுடைய அரசியற் சூழ்ச்சிகளையும் எதிர்கொண்டு ஒரு நிரந்தர விடுதலைக்காகத் தமிழ்மக்கள் அனைவரும் ஒன்றுபடுவதே இன்றைய காலத்தின் அவசிய தேவையாகும். ஒற்றுமையும் - பலமும்தான் தமிழரின் தலைவிதியைத் தீர்மானிக்கும் தாரக மந்திரங்களாகும்.
____________________________________________
நன்றி: விடுதலைப்புலிகள் ஏடு -ஆனி, ஆடி 2006.

Labels: , , ,

தனியரசு அமைப்போம் - புலிகள் அறிவிப்பு

ஒற்றையாட்சிக்குள் தீர்வென்றால் தனியரசு அமைக்க முயற்சிப்போம்.
விடுதலைப்புலிகளின் அதிகாரபூர்வ ஏடான "விடுதலைப்புலிகள்' ஏட்டின் தலையங்கம்.

இலங்கைத் தீவின் தமிழ்-சிங்கள இனப்பிரச்சினை வரலாற்றில் 'அனைத்துக்கட்சி மாநாடு' என்ற அரசியல் நிகழ்ச்சியை சிங்கள அரசு காலத்துக்குக் காலம் அரகேற்றி வருகிறது. ஒவ்வொரு 'அனைத்துக் கட்சி" மாநாடும் நடாத்தப்பட்ட வேளைகளிலிருந்த அரசியற் புறச்சூழல்களை ஆராய்ந்து பார்ததால் ஒரு அரசியல் உண்மை புலப்படும். அது சிங்கள ஆட்சியாளர்களின் இனவாத முகத்தையும் ஏமாற்று அரசியலையும் அம்பலப்படுதிக் காட்டும். திம்புப் போச்சுவார்த்தைகளில் தமிழர்தரப்பு வைத்த அரசியற் கோரிகைகைகளைப் பரிசீலிக்கவே மறுத்த சிங்கள அரசு, பேச்சுக்களை முறித்துக் கொண்டது. அதைத் தொடர்ந்து அன்றைய ஜே.ஆர் அரசாங்கம் 'அனைத்துக்கட்சி மாநாடு' என்ற அழகிய பெயரில் சிங்களக் கட்சிகளை ஒன்றுகூட்டியது. தாயகம்-தேசியம்-தன்னாட்சி என்று தமிழர்தரப்பு திம்புவில் வைத்த அரசியல் கோரிக்கைகளைப் புறந்தள்ளிவிட்டு 'மாவட்ட சபை' என்ற் எலும்புத்துண்டை மேலும் எவ்வாறு அழகுபடுத்தலாமென்று சிங்களக் கட்சிகளுடன் கூடிக்கதைத்து மாநாட்டை முடித்துக் கொண்டது.

பின்னர் சமாதானத் தேவதைபோலத் தன்னை உருவகித்த சந்திரிகா அம்மையார் பதவிக்கு வந்ததும் புலிகள் இயக்கத்துடன் ஒரு சமரசப்பேச்சிற்கு வந்திருந்தார். யாழ்ப்பாணப் பேச்சுவார்த்தை என்று அழைக்கப்படும் அந்தச் சமாதான முயற்சியும் சந்திரிகா அம்மையாரின் இராணுவத் திமிர்த்தனத்தால் முறிவடைந்திருந்தது. அதனைத் தொடர்ந்து அம்மையாரும் ஒரு அனைத்துக்கட்சி மாநாட்டைக் கூட்டியிருந்தார். முடிவில் அரைகுறைத் தீர்வுப்பொதி ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

இப்போது நோர்வே அனுசரணையுடன் சர்வதேச அரங்கில் கடந்த நான்கரை வருடகாலமாக நடந்துவந்த பேச்சுவார்த்தையும் சிங்கள ஆட்சியாளர்களின் கடும்போக்கு மற்றும் சமாதான விரோதச் செயற்பாடுகளால் செயலற்றுப்போயுள்ளது. இந்தப் புறச்சூழலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் ஒரு அனைத்துக்கட்சி மாநாட்டைக் கூட்டியுள்ளார். பேச்சுவார்த்தைகளின் போது தமிழர் தரப்பு முன்வைக்கும் அரசியற் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளாது அல்லது நடைமுறைப்படுத்தாதிருந்து பேச்சைக் குழப்பியடித்துவிட்டு பின்னர், அனைத்துக்கட்சி மாநாடு என்றுகூறி, சிங்களக் கட்சிகளை ஒருங்கிணைத்து சிங்களதேசம் சமாதானத் தீர்வொன்றைக் காணும் விருப்புடனேயே உள்ளது. என்றுகாட்டி சர்வதேச சமூகத்தையும் தமிழ்மக்களையும் ஏமாற்றவுமே அனைத்துக்கட்சி மாநாடு என்ற அரசியல் நாடகத்தை சிங்கள ஆட்சியாளர்கள் அடுத்தடுத்து அரங்கேற்றி வருகின்றனர். அமைதிவழியில் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணல் என்ற அரசியல் நடைமுறையின் உச்சக்கட்டமான சர்வதேச மயப்பட்ட பேச்சுவார்த்தை வாயிலாக தமிழரின் விடுதலைப்போராட்டம், இப்போது சர்வதேச அரசியலாகிவிட்டது. இந்தச் சர்வதேச அரசியல் களத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வுமுயற்சி என்பது சர்வதேசச் சட்டங்கள், நியமங்கள் மற்றும் நடைமுறைகளின் அடிப்படையிலேயே அணுகப்படவேண்டிய நிலையும் எழுந்துள்ளது. இது சிங்கள பௌத்த பேரினவாதிகளுக்கு ஏற்புடையவிடயமாக இருக்கவில்லை. எனவேதான், சர்வதேசமயப்பட்டுவிட்ட தமிழரின் போராட்ட அரசியலை மீண்டும் உள்நாட்டுப் பிரச்சினையாகத் தரம் இறக்கி - அனைத்துக்கட்சி மாநாட்டின் தீர்மானம் என்றுகூறி அரைகுறைத் தீர்வொன்றைத் திணித்து - அதை விடுதலைப்புலிகள் நிராகரிக்கும்போது அதைச் சாட்டாகவைத்து - தமிழ்மக்கள் மீது இராணுவத் தீர்வொன்றைத் திணிக்கும் நோக்குடன் மகிந்த அரசு காய்களை நகர்த்துகின்றது.

இந்த அனைத்துக்கட்சி மாநாட்டின் துவக்க நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மகிந்தரின் கருத்துக்கள் தமிழரின் இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அவரது அரசு எங்கே நிற்கின்றது என்பதை தெளிவாக்கியுள்ளன. ஒற்றை ஆட்சிக்குள் - சிங்கள மக்களின் சம்மதத்துடன் - உள்ளகத் தீர்வொன்று எட்டப்படவேண்டும் என்பதே மகிந்தரது உரை வெளிப்படுத்தும் சாராம்சங்களாகும். அவரது உரையில் தமிழரின் அரசியல் அபிலாசைகள் கருத்தில் எடுக்கப்படவேயில்லை. அவர்கூட்டிய அனைத்துக்கட்சி மாநாட்டில் தமிழரின் நடாளுமன்றப் பிரதிநிதிகளும் சேர்த்துக்கொள்ளப்படவில்லை.

மொத்தத்தில் ஜே.ஆரின் அரசைப்போல -பிரேமதாசாவின் அரசைப்போல - சந்திரிக்காவின் அரசைப்போல மகிந்தர் அரசும் தமிழரின் இனப்பிரச்சினை தொடர்பாக கடுமையான பேரினவாத நிலைப்பாட்டையே எடுத்துள்ளது. புலிகள் இயக்கம் பேச்சுமேசைக்கு வரமறுக்கின்றது! புலிகள் இல்லாமலே அரசியற்தீர்வு காணப்படும்! புலிகள் வேறு மக்கள் வேறு என்று புளித்துப்போன பழைய பல்லவிகளையே மகிந்தரும் தனது உரையில் ஒப்புவிக்க முனைந்துள்ளார். கடந்த 30வருடகால ஆயுதப்போராட்ட அரசியலில் சிங்கள அரசுடன் ஐந்து தடவைகள் புலிகள் இயக்கம் நேரடியாகப் பேசியுள்ளது. இந்த ஐந்து பேச்சு முயற்சிகளும் சிங்கள ஆட்சியாளர்களின் கடும்போக்கு நிலைப்பாடுகளாலும் -இராணுவத் திமிர்த்தனங்களினாலும் தோல்விகளையே சந்தித்துள்ளன.

நோர்வே அனுசரணையுடன் நடந்த பிந்திய சமாதான முயற்சியின்போது இருதரப்பிற்குமிடையே ஒரு போர்நிறுத்த உடன்பாடு காணப்பட்டு - அதன் அடிப்படையில் சில இணக்கப்பாடுகளும் எட்டப்பட்டிருந்தன. ஆனால், இவற்றிற்கு மதிப்பளித்து - நடைமுறைப்படுத்தி சமாதான முயற்சிக்கு உரமூட்ட சிங்கள அரசு தவறியதால் தொடர்ந்து பேசுவதில் அர்த்தமில்லை என்று புலிகள் இயக்கம் நிலைப்பாடெடுத்திருந்தது. போர்நிறுத்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும்படியும் ஒட்டுக்குழுக்களின் ஆயுதங்களைக் களைந்து பேச்சு முயற்சிக்குப் புத்துயிர் ஊட்டும்படியும் மகிந்த அரசை பல தடவைகள் புலிகள் இயக்கம் கேட்டிருந்தது. ஆனால், ஒட்டுக்குழுக்களது கொலைச்செயல்களை உற்சாகப்படுத்தியும் - ஆழ ஊடுருவும் படைகளை புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் அனுப்பி புலிகளையும் மக்களையும் படுகொலை செய்ய அனுமதித்தும் - தமிழர் தாயகத்தில் இராணுவ அட்டூழியங்களை அதிகப்படுத்தியும் அமைதிச்சு10ழலை மகிந்த அரசே போட்டுடைத்துள்ளது. இலங்கை இனப்பிரச்சினைக்கான அரசியல்தீர்வு புலிகளுடன் நேரடியாகப்
பேசியே காணப்படமுடியும் என்பதே சர்வதேச நாடுகளின் நிலைப்பாடுமாகும். புலிகளைப் புறந்தள்ளிவிட்டு எந்த ஒரு அரசியற் தீர்வையும் மகிந்த அரசால் காண முடியாது. இத்தகைய குருட்டுத்தனமான முயற்சிகளை முன்னர் சந்திரிகா அம்மையாரும் மேற்கொண்டு படுதோல்வி கண்டதுடன் - இனப்பிரச்சினையை மேன்மேலும் சிக்கலாக்கியுள்ளார் என்ற உண்மையையும் மகிந்த ராஜபக்ச உணரவேண்டும். ஒற்றையாட்சிக்குள் தீர்வு என்ற
மகிந்தரின் சிந்தனை வெறும் கற்பனைக்கதையாகும். தமிழ்மக்களுக்கு எத்தகைய தீர்வை வழங்குவதென்று, தமிழர் தரப்பை ஒதுக்கிவிட்டு, சிங்களக் கட்சிகள் மட்டுமே ஒன்றுகூடித் தீர்மானிப்பது என்பதும் ஒரு கேலிக்கூத்தான செயலாகும். ஒற்றை ஆட்சி என்ற குண்டுச் சட்டிக்குள் சிங்களப் பேரினவாதிகள் விரும்பியபடி குதிரையோட்ட புலிகள் இயக்கம் என்றைக்கும் உடன்படமாட்டாது.

சமாதானம் - மனிதாபிமானம் -விழுமியங்கள் என்று சந்திரிகா அம்மையாரைப்போல மகிந்தரும் முதலைக்கண்ணீர் வடித்து உரையாற்றுவதால் எந்தப்பயனும் ஏற்படப்போவதில்லை. தமிழரின் இனப்பிரச்சனைக்கு அமைதிவழியில் அரசியற் தீர்வு காணவேண்டும் என்று மகிந்த அரசு உண்மையாகவே விரும்பினால் ஏற்கனவே உள்ள போர்நிறுத்த உடன்பாட்டிற்கு அவரது அரசு புத்துயிர் அளிக்க முன்வரவேண்டும். அதன்பின்னர், புலிகள் இயக்கம் சிங்கள அரசிடம் சமர்ப்பித்துள்ள இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபையை அடிப்படையாகக் கொண்டு அரசியற் பேச்சுக்கு முன்வரவேண்டும். அவ்விதம் மகிந்தரின் அரசு முன்வந்தால் அவர்களுடன் பேச புலிகள் இயக்கம் தயாராக உள்ளது. புலிகளின் இந்த அரசியல் நிலைப்பாட்டை ஏற்க மறுத்து தம்வழி செல்ல மகிந்த அரசு முயற்சித்தால் புலிகள் இயக்கமும் தனிவழிசென்று தமிழரின் அரசியல் விடுதலையை வென்றெடுக்கப் பாடுபடும்.
_________________________________________
நன்றி: விடுதலைப்புலிகள் ஏடு -ஆனி, ஆடி 2006.

Labels: ,

Wednesday, July 19, 2006

தர்முசிவராம் (பிரமிள்) பற்றி

-காசிநாதர் சிவபாலன்-

அண்மைக் காலங்களில் `ஆனந்த விகடன்', `குமுதம்', `குங்குமம்' பத்திரிகைகளைக் காண்பதுமில்லை, காண நாட்டமுமில்லை. அகஸ்மாத்தாக சமீபத்தில் ஒரு `விகடனை' காணக் கிடைத்தது. அதில் `கிரியா' என்.ராமகிருஷ்ணன் கதைபோல் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார்,. `கதாவிலாசம்' என்று தலைப்புப் போல போட்டு கீழே `சூரியனுக்குக் கீழே....' என்ற தலைப்பின் கீழ் எழுதியிருந்தார். ஒவ்வொரு வாரமும் தொடர்போல் எழுதி வருகிறார் போலத் தெரிகிறது.


72 ஏப்ரலில் நானும், தர்முசிவராமும் (பிரமிள்) இந்தியாவுக்குச் சென்றோம். எனக்கு இது இந்தியாவுக்கான முதல் பயணமாகவும், தர்முசிவராமுவுக்கான கடைசிப் பயணமாகவும் அமைந்தது. அவர் இறப்பதற்கு முதல் வருடம் சென்னையில் அவரைக் காணக் கிடைத்தது. தர்முவைப் பற்றியதும் தர்முவினுடைய புடைப்புகள் பலதையும் அச்சில் கொண்டு வந்த கால. சுப்பிரமணியமும் அவருடனிருந்தார். நம் நாட்டுக்கு அதுவும் முக்கியமாக அவரது ஊரான திருகோணமலைக்கு வரும்படி அழைத்தேன். அவரும் வருகிற வருடம் பார்க்கலாம் என்றார் - (ஒரு வருடத்தினுள் அவர் இங்கு வராமலே மறைந்து விட்டார்). இராமகிருஷ்ணன் தர்முவுடன் இலக்கியத் தொடர்பாளராகவும், தோழமைமிக்கவராகவும் இருந்தார். எனக்கு முதன் முதலில் `மாமல்லபுரத்தை'க் கொண்டு போய்க் காட்டிய கைங்கர்யமும் அவருடையதே.



இயற்கையைப் பற்றிய புரிதலை ஏற்படுத்தும் ஒரு ஜென் கதையைத்தொட்டு, ஊடே `தர்முசிவராமு' வைப் பற்றியும் மூன்று பக்கக் கட்டுரையினுள்ளேயே கட்டமும் போட்டு நிறையவே எழுதியிருந்தார். கட்டத்தினுள் இப்படி தர்மு பற்றி அவர் ஒரு அறிமுகம் கொடுத்திருந்தார்.

"மரபின் செறிவும், கவித்துவத்தின் உச்சமும் கொண்ட கவிஞராக நவீன தமிழ்க் கவிதையுலகில் தனி அடையாளம் கொண்டவர் பிரமிள். இவரது கதைகள் "லங்காபுரி ராஜா" என்னும் தொகுப்பாக வெளி வந்துள்ளன. இவர் எழுதிய ` ஆயி' என்ற குறுநாவல் முக்கியமானது."

சி.சு.செல்லப்பாவின் `எழுத்து' பத்திரிகையில் எழுதத் துவங்கியவர் பிரமிள், `தர்மு' அரூப் சிவராம் என்ற பெயரில் நிறைய எழுதியுள்ளார். `கண்ணாடியுள்ளிருந்து', `கைப்பிடியளவு கடல்', `மேல் நோக்கிய பயணம்' போன்றவை அவரது முக்கிய கவிதைத் தொகுதிகள், ஓவியம், சிற்பம், நாடகம், மொழியாக்கம், கட்டுரைகள் என விரிந்த தளங்களில் இயங்கிய பிரமிள் தமிழ் உரை நடை குறித்துக் கூர்மையான விமர்சனமும் அவதானிப்பும் கொண்டவர். எதிர்பாராத உடல் நலக்குறைவு காரணமாக 1997 இல் (06.01.1997) மரணமடைந்த `பிரமிள்' இன்றும் நவீன தமிழ் இலக்கியத்துக்கு ஓர் உந்து சக்தியாகவே இருந்து வருகிறார்." என்று குறிப்பிட்டிருந்தார்.

"இயற்கையின் ஒரு துளிதான் மரம். அது திசையற்றது. "Sழந்தை'தான் என்று பிறரைச் சுட்டிக் காட்டுவது போன்ற

சமிக்ஞ்சை கொண்டது." என்று இயற்கையைப் பற்றி தனது கவித்துவமான அவதானிப்புகளை எழுத்தில் பதிவு செய்த மாபெரும் கவிஞரான `பிரமிள்' மிகக் குறைவாகவே சிறுகதைகள் எழுதியிருக்கிறார். அவரது கதைகள் கவிஞனின் தீர்க்கமான பார்வையும், செறிவும், கவித்துவமான கதையாடலும் கொண்டவை." என்று தொடர்ந்து கூறியுள்ள இராமகிருஷ்ணன், ஒரு நல்ல ஓவியனைப் பற்றி `பிரமிள்' எழுதிய `நீலம்' என்ற கதையின் சுருக்கத்தையும் தந்திருக்கிறார். பிரமிளைத் தெரிந்தவர்க்கு அவர் குறிப்பிடும் ஓவியர் அவரே என்பது புலப்படும்.

கதையைப் பற்றிய தம் அவதானிப்பைக் கூறும் இராமகிருஷ்ணன், "நம் வழக்கமான அனுபவத்துக்குள் அடங்காத நிகழ்வுகளை மனம் எப்படி எதிர்கொள்கிறது, மற்றும் பதிவு செய்கிறது என்பது தான் கலையின் செயல்பாடு என்பதைப் பற்றிப் பேசும் இக்கதை, மேற்சொன்ன ஜென் கதைபோல் வாசிக்க வாசிக்க ஆழ்ந்த அனுபவப் பரப்புகளை உருவாக்கிக் கொண்டே போகிறது" என்று குறிப்பிட்டிருந்தார்.

`மழைக்காகக் காத்திருந்தவள்' என்ற பரிசுச் சிறுகதை மூலம் கணையாழியில் அந்த நாட்களில் அறிமுகமாகிப் பிரபலமான இராமகிருஷ்ணனின் பின்னைய காலத் தமிழ்ப் பணிகள் - (கிரியா "தமிழ் அகராதி") மகத்தானவை. அவர் நம்மூர் `தர்முசிவராம்' பற்றி இவ்வளவு புகழ்ந்து கூறக் கேட்க மயிர்க் கூச்செறிகிறது. நம் நாட்டிலேயே இருக்கும் சிவசேகரத்தைப் பற்றியே நம்மூவரில் தெரியவில்லை. தர்முசிவராமுவை யார் கண்டு கொள்ளப் போகிறார்கள். (சிவசேகரம் மன்னிப்பாராக.).
_____________________________________________
நன்றி:- தினக்குரல்
Sunday, July 16, 2006

Labels: , ,

இஸ்ரேலின் அடாவடியும் படிக்க வேண்டி பாடங்களும்

மறுபக்கம்:- கோகர்ணன்

பலஸ்தீனத்தின் பாராளுமன்ற ஆளுங்கட்சியாகவுள்ள ஹமாஸ் அமைப்புக்கு நெருக்கமான மூன்று போராளிக் குழுக்கள் காஸா பகுதியில் இஸ்ரேலின் எல்லைக்குக் குறுக்காகச் சுரங்கப் பாதையொன்றை வெட்டி இரண்டு இஸ்ரேலியச் சிப்பாய்களைச் சிறைப்பிடித்துக் கொண்டு செல்லுகையில் ஒருவர் இறந்து விட்டார். மற்றவர் காயப்பட்ட நிலையில் பலஸ்தீனத்தில் சிறைப் பிடிக்கப்பட்ட நிலையில் போராளிக் குழுக்களின் கண்காணிப்பில் உள்ளார். அதற்குப் பதிலாக இஸ்ரேல் காஸாவில் மின்சக்தி உற்பத்தி நிலையம் ஒன்றும் ஒரு பாலமும் உட்படப் பலவேறு பொதுப் பாவனைக்குரிய கட்டிடங்களைக் குண்டு வீசித் தகர்த்துள்ளது. அத்தாக்குதலின் விளைவாக காஸா பகுதியில் மக்களின் அன்றாட வாழ்வு பெரும் அல்லலுக்குள்ளாகியுள்ளது. எனினும் இஸ்ரேல் மீது அதன் போர்க்குற்றங்கட்கெதிரான நடவடிக்கை எடுப்பது பற்றி அமெரிக்காவோ, ஐரோப்பிய ஒன்றியமோ எதுவுமே சொல்லவில்லை.

பலஸ்தீனப் போராளிகளின் நடவடிக்கை மூலம் இஸ்ரேல் எழுப்பியுள்ள கொங்கிறீற்றினாலான நீண்ட பாதுகாப்பு வேலியின் பெறுமதி கேள்விக்குள்ளாகியுள்ளது. அது மட்டுமல்லாமல் பலஸ்தீன மக்களது தெரிவான ஹமாஸைப் பணிய வைக்கிற நோக்கில் பலஸ்தீன மக்களை வாட்டுவது உண்மையில் ஹமாஸையும் தீவிர வாதிகளையுமே வலுப்படுத்தியுள்ளது. பலஸ்தீனத்தின் ` சனாதிபதி' அபாஸ் இப்போது பெருமளவும் எகிப்து, ஜோர்டான் போன்ற அமெரிக்க சார்பு நாடுகளையே நம்பியிருக்கிறார். இன்று மத்திய கிழக்கில் உள்ள ஜனநாயகமற்ற நாடுகளில் எகிப்து மிகக் கொடிய அடக்குமுறை நிருவாகத்தைக் கொண்டது. ஜோர்டானில் பாராளுமன்றம் இருந்தாலும் அதிகாரம் அமெரிக்கச் சார்பு முடியாட்சியினதும் இராணுவத்தினதும் கையிலேயே உள்ளது. எனினும் ஜோர்டானின் வரலாற்றுப் பின்னணி காரணமாகவும் குறிப்பாக பலஸ்தீனப் பிரச்சினை ஜோர்டானுடன் தொடர்புடையது என்பதாலும் அதன் புவியியல் அமைப்பும் எல்லைகளும் அமைந்துள்ள முறையாலும் பொது மக்களிடையே பலஸ்தீனப் பிரச்சினை, ஈராக் பிரச்சினை போன்றவற்றில் அமெரிக்க - இஸ்ரேலிய எதிர்ப்புணர்வு வெளிப்படையாகக் காட்டப்படுவது ஒரு குறிப்பிடத்தக்க விடயமாகும். எனினும் இஸ்ரேலுடன் முதன்முறையாகத் தூதரக உறவுகளை ஏற்படுத்திய அரபு நாடுகளாக இவ்விரண்டு நாடுகளும் உள்ளமை அமெரிக்கச் செல்வாக்கின் வலிமையையே அடையாளங்காட்டுகிறது. இத்தகைய ஒரு சூழலே பலஸ்தீனத்தில் ஊழல் மிக்கதாகச் சீர்குலைந்து போன பலஸ்தீன விடுதலை இயக்கத் தலைமையைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.

பலஸ்தீன மக்களைப் பற்றிய `சர்வதே\u2970?' அக்கறை நமக்கு சில பாடங்களைக் கற்பிக்க வேண்டும். மேலைநாட்டு ஆட்சியாளர்களும் அவர்களை விடத் தந்திரமாக ஊடக நிறுவனங்களும் பலஸ்தீன மக்களுக்குப் பாதகமான முறையில் வெகுஜன அபிப்பிராயத்தைத் திருப்பவும் இஸ்ரேலிய அடாவடித்தனத்தை நியாயப்படுத்தவும் முனைப்பாக இருந்து வந்துள்ளன. இம்முறை இஸ்ரேலியச் சிப்பாயை விடுவிப்பதற்கான முன் நிபந்தனையாக இஸ்ரேல் சட்டத்தின் பேரிலும் சட்ட விரோதமாகவும் சிறையில் வைத்துள்ள நூற்றுக்கணக்கான பலஸ்தீன `சந்தேக நபர்களை' விடுவிக்க வேண்டும் என்று கோரப்பட்டதைத் கண்டிக்கிற தொனியில் ஹமாஸ் தலைவர் ஒருவரிடம் பி.பி.சி. நிருபர் விடாமல் கேள்வி கேட்டார். முடிவில் அவர் பத்து, இருபது ஆண்டு கட்கும் மேலாக இஸ்ரேல் வழக்கு விசாரணையில்லாமல் மறியலில் வைத்துள்ளவர்களைப் பற்றி நான் பேசுகிறேன். அது ஏன் உங்களுக்குக் கேட்கவில்லை என்று விடை கூறினார். ஆனாலும் அது பி.பி.சி. நிருபரின் காதில் விழவேயில்லை.

இஸ்ரேலியச் சிப்பாய்கள் பத்துப் பேர் பலஸ்தீன கெரில்லாக்களாற் கொல்லப்பட்டிருந்தாலும், இஸ்ரேலுக்கு இப்போது ஏற்பட்டுள்ள சங்கடம் ஏற்பட்டிராது என்பது தான் என் ஊகம். பதிலடியாக அப்பாவிப் பலஸ்தீனப் பெண்களும் குழந்தைகளும் உட்பட ஐம்பது, நூறு பேரைக் கொன்றிருப்பார்கள். அவ்வாறு, "கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்" என்கிற பழைய ஏற்பாட்டு பழிவாங்கல் மூலம் இஸ்ரேலிய மக்களை ஆறுதற்படுத்தியிருப்பார்கள். ஒரு பணயக் கைதியால் ஏற்படுகிற சிக்கல் பெரியது. பணயக் கைதியை மீட்க இயலாமை அரசாங்கத்தின் பலவீனமாகவே காட்டப்படும். எனவே தொடர்ந்து ஏதாவது செய்கிறதாக மக்களுக்குக் காட்டிக் கொண்டேயிருக்க வேண்டும். அதற்கான விலையை பலஸ்தீன மக்கள் கொடுத்துக் கொண்டிருப்பார்கள். `சர்வதேசம்' எனப்படுகிற ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் ஜப்பானும் `த்சொ, த்சொ" என்று மெல்லச் சப்புக் கொட்டி பலஸ்தீன மக்களின் பால் தமது அனுதாபத்தையும் இஸ்ரேலுக்கு தமது இரகசிய அங்கீகாரத்தையும் வழங்கிக் கொள்ளுவார்கள். இஸ்ரேல் விளைவித்த சேதங்கட்கு நிவாரணமோ, நட்டஈடோ பற்றி எதுவுமே பேசப்பட மாட்டாது. எப்படியாயினும் ஒன்று மட்டும் உறுதி. பலஸ்தீன மக்களுடைய உரிமைகள் முற்றாக மீட்டெடுக்கப்படாதளவும் இஸ்ரேலுக்கு அமைதியோ, பாதுகாப்போ இல்லை. இஸ்ரேலின் பாதுகாப்பு என்கிற பேரில் மத்திய கிழக்கில் தனது குறுக்கீட்டை வலுப்படுத்துகிற அமெரிக்காவின் உண்மையான நோக்கங்கள் மத்திய கிழக்கின் எண்ணெய் வளம் தொடர்பானது என்பதை நாம் அறியாமலிருக்க நியாயமில்லை. அமெரிக்காவின் அயற் கொள்கையில் அமெரிக்க யூதர்களதும் இஸ்ரேலினதும் அழுத்தம் பெரும்பாதிப்பை செலுத்துகிறதென்பதை விட இஸ்ரேலின் நடத்தை அமெரிக்க நலன்களால் வழி நடத்தப்படுகிறது என்பதே உண்மைக்குப் பொருந்தி வரும்.

இந்தப் பத்தி அச்சாவதற்கிடையில் பலஸ்தீன மக்கள் மீது மேலும் பல பாரிய தாக்குதல்கள் தொடுக்கப்படலாம். அதற்கும் மேலாக, அமெரிக்காவும் இஸ்ரேலும் சில காலமாகவே குறி வைத்துள்ள சிரியாவுக்கு எதிராக தாக்குதல்கள் நடத்தவும் வாய்ப்புகள் உள்ளன. சிரியா ஹமாஸை ஆதரிக்கிறதா, இல்லையா என்பது எவரதும் கேள்வியல்ல. சிரியா பலஸ்தீன விடுதலைக்காகப் போராடுகிற சக்திகள் பலவற்றை நீண்டகாலமாக ஆதரித்து வந்துள்ளது என்பதே பிரச்சினை. எனவே, அணுகுண்டுகளைக் கைவசம் வைத்துள்ள வட கொரியாவையோ, அணுசக்தி ஆராய்வில் அமெரிக்காவின் ஆணைக்குப் பணிய மறுக்கிற ஈரானையோ கடுமையாக மிரட்டி எது விதமான பயனும் இல்லாமையால் சிரியாவையாவது தண்டித்து அமெரிக்க வல்லரசின் நம்பகத் தன்மையை நிரூபிப்பது முக்கியமாகியுள்ளது. இதுவே இன்றைய உலக அரசியலின் யதார்த்தம். அரபு உலகம் எனப்படுவது பிளவுபட்டுள்ளது. முஸ்லிம்களின் ஐக்கியம் என்பது வாய்ப்பேச்சோடு நின்று விடுகிறது. எனவே தான் அமெரிக்கா போன்ற ஒரு பெரு வல்லரசின் ஆதிக்கத்தையும் ஆக்கிரமிப்பையும் எதிர்த்து நிற்பதானால் அதற்கு இன அடிப்படையிலோ ,மத அடிப்படையிலோ ஒன்றுபட்டுப் போராடுவது இயலாதது. தேசிய அடிப்படையிலான போராட்டங்கள் கூட, மிகவும் வரையறைக்குட்பட்டே செயற்பட இயலுமாகிறது.

ஏறத்தாழ ஒவ்வொரு அரபு நாட்டிலும் உள்ள அதிகாரவர்க்கங்களது நலன்களும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களுடன் தம்மை நெருக்கமாகப் பிணைத்துக் கொண்டுள்ளன. அமெரிக்காவை மீறி இஸ்ரேலைப் பகைக்க ஓரளவேனும் ஆயத்தமாக உள்ள ஒரே அரபு நாடாக மிஞ்சியுள்ளது சிரியா மட்டுமே. பிற இஸ்லாமிய நாடுகளுள் பலஸ்தீன விடுதலை பற்றிய தீவிர அக்கறை ஈரானிய ஆட்சியாளர்கட்குள்ளளவு வேறு இஸ்லாமிய நாடெதிலும் இருப்பதாகக் கூறுவது கடினம்.

அதேவேளை, சமூக நீதிக்காகப் போராடுகிற மக்களிடையேயும் முற்போக்கு சக்திகளிடையிலும் பலஸ்தீனத்தின் மக்களுக்கும் அவர்களது போராட்டத்துக்கும் மிகுந்த ஆதரவுண்டு. பலஸ்தீன மக்கள் இந்த ஆதரவை மேலும் முழுமையாகப் பயன்படுத்த வேண்டிய தேவை வளர்ந்து வருகிறது. ஹமாஸ் தனது இஸ்லாமிய அடையாளத்தை மறைக்காமலே மதச்சார்பற்ற பலஸ்தீன விடுதலைப் போராட்டம் ஒன்றின் புத்துயிர்ப்புக்கு வழி செய்யக் கூடிய சூழ்நிலை ஒன்றுக்கு புகாமல் பலஸ்தீன விடுதலையை மேலும் வலுப்படுத்த இயலாது. எந்த விதமான இன, மத அடையாளங்களும் அவை சார்ந்து தம்மைத் தனிமைப்படுத்துகிற போக்கும் பலஸ்தீன மக்களின் விடுதலைக்கு உதவப்போவதில்லை என்பதை ஹமாஸ் படிப்படியாகவேனும் உணர்ந்தேயாக வேண்டும். அதேவேளை, பலஸ்தீன மக்களின் விடுதலைக்கான போராட்ட உணர்வைக் கணிசமான அளவுக்கு சரியாக அடையாளப்படுத்துகிற சக்தியாக ஹமாஸ் இருக்கிறது என்ற உண்மையை உலக நாடுகளின் தலைமைகள் ஏற்குமாறு செய்கிற பொறுப்பு ஒவ்வொரு நாட்டிலும் நியாயத்திற்கும் மனித இனத்தின் விடுதலைக்கும் ஆதரவாக உள்ள அனைவரிடமும் உள்ளது.

விடுதலைப் புலிகளின் மீதான ஐரோப்பிய ஒன்றியத் தடையை வட அயர்லாந்தின் ஷின் ஃபெய்ன் தலைவர்களுள் ஒருவரான மாட்டின் மக்கினஸ் தைரியமாகக் கண்டித்துள்ளார். அதுபோன்று தேசிய எல்லைகளைக் கடந்த நியாயத்தின் குரல்கள் ஒவ்வொரு போராட்ட நியாயத்தையும் ஆதரித்துப் பேச வேண்டும். இன்று இஸ்ரேலின் கொடுமையைக் கண்டிக்கவும் இஸ்ரேலைத் தனிமைப்படுத்தவும் மூன்றாம் உலக நாடுகளிலிருந்து உரத்த குரல்கள் எழுமானால், அவை இஸ்ரேலின் எசமானனும் அடக்குமுறை ஆட்சிகள் பலவற்றின் ஆதரவுச் சக்தியாகவும் உள்ள அமெரிக்காவையும் தாக்கும். எனவே தான் பலஸ்தீனத்தின் விடுதலைப் போராட்டத்தின் பாடங்களையும் பலஸ்தீன விடுதலைச் சக்திகட்குச் சார்பாக பல வேறு உலக நாடுகளின் மக்களது நிலைப்பாடுகள் கூறுகிற செய்திகளையும் உலகின் சகல விடுதலை இயக்கங்களும் ஐயத்திற்கிடமின்றிக் கற்க வேண்டும். பலஸ்தீனத்தில் இஸ்ரேலின் கொடுமைகளை எதிர்க்கத் தவறுபவர்கள் உலகில் நடக்கிற எந்தக் கொடுமையையும் ஆதரிக்கக் கூடியவர்கள் என்பதை நாம் மறக்கலாகாது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நன்றி: தின்க்குரல்
Sunday, July 16, 2006

Labels:

Saturday, July 15, 2006

பொஸ்பரஸ் தொடங்கி ஒற்றைத் துப்பாக்கி வரை...

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழர் படையணி மரபுப்படையணியாக வளர்ந்திருக்கும் நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் தாக்குதல் அணித் தளபதியான லெப். சீலனின் 23 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

1978ல் சிறிலங்காவில் நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதியாக ஜேர்.ஆர்.ஜயவர்த்தனா பதவியேற்றபோது அதற்கு மதிப்பளிக்க திருகோணமலை இந்துக் கல்லூரியில் சிறிலங்கா தேசியக் கொடியேற்றியபோது அதனுள் பொஸ்பரஸை வைத்து அதனை எரியச் செய்தவர் உயர்தர மணவரான சார்ள்ஸ் அன்ரனி.



அந்தச் சம்பவத்துடன் தலைமறைவாகி தாயக விடுதலைப் போராட்டத்துக்காக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன் தன்னை இணைத்துக்கொண்ட சார்ள்ஸ் அன்ரனிஇ பின்னர் சீலன் ஆனார்.

சிறந்த ஒரு இராணுவத்தாக்குதல் வீரரான சீலன்இ சிறிலங்கா இராணுவம் மீதான முதல் தாக்குதல் யாழ். நகர மையத்தில் நடத்தி ஆயுதங்களைக் கைப்பற்றியவர்.
சிறிலங்கா கடற்படை மீதான முதல் தாக்குதலை பொன்னாலையில் நடத்தியது.
சாவகச்சேரி சிறிலங்கா காவல் நிலையம் மீதான தாக்குதலை தலைமையேற்று வெற்றிகரமாக நடத்தியது.
கந்தர்மடம் வாக்குச்சாவடி மீதான தாக்குதல் உள்ளிட்ட விடுதலைப் போராட்ட வரலாறின் முதல் முக்கிய தாக்குதல்களை நடத்தப்பட்டவை லெப். சீலன் தலைமையிலாகும்.


விடுதலைப் புலிகளின் முதல் தாக்குதல் அணித்தளபதியாக விளங்கியவர் லெப். சீலன்.
தாயக விடுதலைப் போராட்டத்தை வீரியமாக்குவதற்கான பணிகளில் தென்மராட்சியில் மீசாலை அல்லாரையில் முகாமில் தயாராகிக் கொண்டிருந்தபோது- அந்த முகாம் துரோகி ஒருவனின் காட்டிக்கொடுப்பில் சிறிலங்கா இராணுவத்தால் சுற்றிவளைக்கப்படுகின்றது.

அந்த சுற்றிவளைப்புத் தாக்குதலில் எதிரியுடன் சீலனும் போராளிகளும் சமராடினர். அதில் சீலனும் ஆனந்த் என்ற போராளியும் விழுப்புண் அடைகின்றனர். அதில் தாயக விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்க ஆயுதத்தை காக்கவென சக போராளி ஒருவனுக்கு கட்டளையிட்டு அவரைக் கொண்டு சுடுவித்து லெப்டினன்ட் சீலன் வீரகாவியமானார்.
அவர் வழியில் வீரவேங்கை ஆனந்த்தும் வீரச்சாவைத் தழுவினார்.

அன்று ஒரு துப்பாக்கியைக் காக்க இப்படியான தியாகத்தை புரிந்த மாவீரன் லெப். சீலனின் பெயரில் தமிழரின் முதல் மரபுப் படையணியாக சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி விளங்குகின்றது.

Labels: , ,

Monday, July 03, 2006

இந்து சமுத்திரத்தின திறவுகோல் யாருக்கு?

திருகோணமலையும் அதன் அரசியலும்.
-இராச மைந்தன்.

மாகாரின் மின்கொடி மடக்கின ரடுக்கி
மீகார மெங்கணும் நறுந்துகள் விளக்கி
ஆகாய கங்கையை யங்கையி லள்ளிப்
பாகாய செஞ்சொலவர் வீசுபடு காரம்

- கம்பர்

வான்மீகி தன் புகழ்பெற்ற இலக்கியத்தை அமைக்கும்போது திருகோணமலையைப் பற்றிச் சொல்லுவதே அந்த நகரைப்பற்றி நம்மால் பெறக்கூடிய மிகப் பழைய செய்தியாக அமைகிறது. அதன் மாடிகளை ஒளியூட்டி நறுமணம் இடுவது பற்றிக் கம்பர் வருணிக்கிறார். கி.மு. 3ம் நூற்றாண்டின் பட்டினப்பாலையில் சொல்லப்படுகின்ற தானிய ஏற்றுமதியும் திருமலைத் துறைமுகத்தினூடாகவே நிகழ்ந்திருக்கும். பொன் விளைக்கும் தமிழர் தாயகப் பிரதேசத்தின் உட்புற ஆற்றுச்சாலையும் வெளிவாயிலான இயற்கைத் துறைமுகமும் அதைக்காவல் செய்வதற்காக அலைதழுவும் மலையின் மேல் அமைக்கப்பட்ட விற்கோபுரங்களும் அந்நாட்களில் சுறுசுறுப்பாக இயங்குவதைக் கற்பனைசெய்துபார்க்கும் எந்தவொரு தமிழருக்கும் நாம் எதையெல்லாம் பறிகொடுத்திருக்கிறோம் என்ற ஏக்கம் எழவே செய்யும். அதன்பின் ஆறாம் நூற்றாண்டில் பாடல்பெற்றபோதும் சோழர் கடலாண்ட காலத்தின் பரபரப்பான கடற்போர்கள் மற்றும் தரையிறக்கங்களின் போதும் திருமலையின் ஆன்மா அதன் உச்சத்தில் இருந்ததெனலாம். அதற்கும் பிறகான நான்கு நூற்றாண்டுகால ஐரோப்பிய ஆதிக்கத்தின் போது தமிழர் தாயகத்தின் விளைநிலங்கள் காடுகளாகிப் பாசனங்கள் தூர்ந்து நெல் வெளியேறிய வாசல்களால் கோதுமை உள்ளே வரத்தொடங்கிய போதும் திருமலையின் முக்கியத்துவத்திற்குக் குறைவேதும் இருக்கவில்லை."திருகோணமலையை வைத்திருப்பவர் இந்து சமுத்திரத்தின் திறவுகோலை வைத்திருக்கிறார்" என்று 19ம் நூற்றாண்டிலே பிரித்தானியாவின் பிரதமராகவிருந்த வெலிங்டன் பிரபு சொல்லியிருக்கிறார்.அங்கு அமைக்கப்பட்ட எண்ணைக் குதங்களும், விமானத்தளமும், அயலிலமைந்துவிட்ட இல்மனைற் படுகையும் அதன் முக்கியத்துவத்தை மென்மேலும் அதிகரிக்கவே செய்தன.

தமிழர் தாயகத் தரைத்தோற்ற்றத்த்தில் மிகவொடுங்கிய பகுதியான திருமலையை சிங்கள மயமாக்குவதன் மூலம் தென்பகுதியைத் துண்டாடி, தாயகக் கோட்பாட்டிற்கு மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தலாம் என்பதே சிங்களத்த்தின் கணிப்பு.

ஐரோப்பியருக்கு முந்தைய ஐந்நூறு ஆண்டுகால தமிழர் இராட்சிய காலத்தின் போதே சிங்கள இராட்சியமானது, வளமிக்க இந்த மண்ணிலும் பாதுகாப்பரனோடு கூடிய துறைமுகத்திலும் ஒரு "கண்" வைத்திருந்ததை திரு வி. நவரத்தினம் (தமிழ்த் தேசியத்தின் வீழ்ச்சியும் எழுச்சியும்) குறிப்பிடுகிறார். பிரித்தானியர் வெளியேறிய கையோடு தீவின் அதிகாரத்தைப் பெற்றுக்கொண்ட சிங்களவர், கனிகையை நாடும் காமுகரின் வெறியோடும் மூர்க்கத் தோடும் திருமலையை வசப்படுத்துவதற்கான எத்தனங்களில் இறங்கினர். அதன் விளைவுகளே இன்றைய திருமலையின் நிகழ்வுகள். பொதுநலவாய அமைப்பின் உதவியோடமைந்த ஆற்றுப் பள்ளத்தாக்கு அபிவிருத்தி மற்றும் குடியேற்றத் திட்டங்கள் சிங்கள நிலப்பறிப்புத் திட்டங்களாக அமைக்கப்பட்டன. பதவியா என்ற படுவில்லிலும் கந்தளாயிலும் இருக்கும் விளைநிலங்களில் குடியேற்றப்பட்ட சிங்களக் காடையருக்கு, தமிழருக்கு எதிரான கலவரங்களில் பயன்படுத்துவதற்கான டைனமைற் குச்சிகளை குடியேற்றத்திற்குப் பொறுப்பான சிங்கள அமைச்சர் சி.பி.டி. சில்வா விநியோகித்தார் என்று அப்போதைய வவுனியா பா.உ சுந்தரலிங்கம் பாராளுமன்றத்தில் குற்றம் சாட்டியிருந்தார். திருமலைத் துறைமுகம் தேசிய மயமாக்கப்பட்டதன் விளைவாகத் தமிழர்கள் அதன் உரிமையை முற்றாக இழந்தனர் எனலாம். தமிழர் தரப்பினரிடம் நிரந்தரமான படைக்கட்டுமானம் அமைந்தபின் கண்மூடித்தனமான குடியேற்றங்கள் கட்டுப்படுத்தப்பட்டன. திருமலை பறிபோகிறது என்ற சங்கதி உறைக்கத் தொடங்கியதே தமிழரின் ஆயுதப் போராட்டம் தலைப்பட்ட பின்பு தான். எழிலும் வளமும் மிக்க மலைப்பட்டணம் தமிழர் தாயகத்தின் தலைநகராகத் தேசியத் தலைமையால் தெரிவு செய்யப்பட்தற்கான காரணங்கள் சாதாரணமானதாக இருந்திருக்க முடியாது. இருப்பினும் திருமலையின் மீதான சிங்களக் காமம் இன்னமும் தீரவில்லை என்பது கண்கூடு. அது திடீரென முனைப்புப் பெற்றதுபோலத் தோன்றுவதற்கான பின்புலங்கள் ஆய்விற்குரியவை. தமிழர் தாயகக் கருத்துக்கள் அரசியல் வகையில் முனைப்புப் பெற்றபோது, தமது இயல்பின்படி பிரச்சினைகளின் அடிவேர் களைப் பாராது அடக்கும் வழியையே தேடிய சிங்களம், பெருமெடுப்பிலான வன்முறைப் பிரயோகம், கருத்து முறியடிப்பு, மற்றும் நடைமுறைத் தடங்கல்களை ஏற்படுத்தல் என்னும் மும்முனைச் செயற்பாட்டில் இறங்கியது.

தாயகக் கோட்பாட்டுக் கருத்தைத் தெரிவிப்பதையும் செயல்களால் நாடுவதையும் தண்டனைக்குரிய குற்றமாக்கும் புதிய அடக்குமுறைச் சட்டங்களை அமைத்தல், தாயகநிலப்பரப்பை நிருவாகம், போக்குவரத்து மற்றும் தொழில் முறையில் ஒன்றிலொன்று சார்ந்திரா வண்ணம் அல்லது தொடர்புறாவண்ணம் துண்டாடுதல், உட்பிரிவினைகளை ஏற்படுத்தித் தூண்டுதல் என்பன முக்கியமான தடங்கல்கள்.

தமிழர் தாயகத் தரைத்தோற்றத்தில் மிகவொடுங்கிய பகுதியான திருமலையை சிங்களமயமாக்குவதன் மூலம் தென்பகுதியைத் துண்டாடி, தாயகக் கோட்பாட்டிற்கு மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தலாம் என்பதே சிங்களத்தின் கணிப்பு. தமிழர் தாயகத்தின் கீழைக்கரையோரமாக காங்கேசன்துறையில் இருந்து பூமுனை வரை செல்லும் நெடுஞ்சாலை யைச் செயலிழக்க வைத்ததுடன் திருத்து வதற்கான வாய்ப்புக்களையும் உதாசீனம் செய்து நேரடியாக இன்னுமொரு தமிழ்ப் பிரதே சத்திற்குள் நுழைய முடியாதபடி திருமலையைப் போக்குவரத்து அளவில் தனிமைப் படுத்தியதில் சிங்களம் ஒரளவு வெற்றியைக் கண்டிருக்கிறது. இப்போது அரச நிருவாகத்திலும் சமயம் மற்றும் சேவைக் கட்டுமானங்களிலும் சிங்கள மேலாளர்களை நிறுத்துவதன் மூலமும் திருமலையின் ஒட்டுமொத்த இயக்கத்தைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முனைகிறது. அதற்குத் தடையாக இருக்கும் கருத்தாளர்கள் கொல்லப்படுகிறார்கள். முக்கிய இடங்களில் இருக்கும் தமிழர்களை இனக்கலவரங்கள், படையினரின் படுகொலைகள் மற்றும் அடாவடிகள் போன்றவற்றால் இடம்பெயர்க்கும் முயற்சிகள் நிகழ்கின்றன. அவ்வகைக் கலவரங்களை உண்டாக்குவதற்கான செயலாகவே புத்தர்சிலை விடயத்தையும் நாம் பார்க்க வேண்டும். இப்போது கலவரங்களால் இடம் பெயர்ந்தவர்களுக்கு நன்மை செய்வது போல வேறு இடங்களில் தங்குமிட ஏற்பாடுகள் செய்து நிரந்தரமாகவே வெளியேற்றி விடவோ அல்லது தமிழர் குடிப்பரம்பலை ஐதாக்கவோ முயற்சிகள் நிகழலாம். இதன் வெளிநீட்டங்களே திருமலையின் கலவரங்கள். ஆனால் சம்பூர் மீதான விமானத் தாக்குதலுக்கு இந்த நாட்டம் மட்டுமே காரணமாயிருப்பதாகத் தெரியவில்லை. வேட்டையாடும் மிருகத்திற்கு வேட்டைப் பொருளின் தசைபற்றிய பிரக்ஞை மட்டுமே இருப்பதைப் போல உலக இராச தந்திரிகளுக்கும் ஒரு தரைப்பிரதேசத்தின் பொருளாதார மற்றும் பாதுகாப்புப் பெறுமானமே கருத்திற்குரியது. அந்தவகையில் தமிழீழத்தின் உற்பத்திப் புலங்கள் போக, பாதுகாப்பு மற்றும் பொருளாதார வகையில் முக்கியம் பெறுவது மூன்று புள்ளிகள். அவை காங்கேசன்துறை, ஆனையிறவு மற்றும் திருகோணமலை. அவற்றில் சேது சமுத்திர முக்கியத்துவம் ஏற்பட்டாலே தவிர காங்கேசன் துறைக்குப் பாதுகாப்புப் பரிமாணம் மட்டுமே தற்போதைக்கு உண்டு. ஆக, சம காலத்தில் அதிமுக்கியம் பெறுபவை ஆனையிறவும் திருகோணமலையுமே.

இப்போது பன்னாட்டுப் பிரதிநிதிகள் இலங்கையிலே தமிழருக்குச் சரியாசனம் தருவதற்கான முக்கிய காரணிகளில் முதலாவது, சிறிலங்காவின் எந்தவொரு பொருளாதார இலக்குகள் மீதும் செல்வாக்குச் செலுத்தும் திறனைப் புலிகள் ஒன்றுக்கு மேற்பட்ட தருணங்களில் நிரூபித்திருப்பது. இரண்டாவது, துறைமுகம், விமானத்தளம், தொழிற்சாலை, மீன்பிடிமற்றும் மனிதவளம் போன்ற செல்வங் களைக்கொண்டுள்ள குடாநாட்டின் வாசலும் பாதுகாப்பரணுமான ஆனையிறவு புலிகளின் கையில் இருப்பது. மூன்றாவது, திருமலைத் துறைமுகத்தின் செயற்பாட்டைக் கட்டுப்படுத்தும் படை வீச்செல்லைக்குள் புலிகள் நிலைகொண்டிருப்பது. தமிழரின் பேரம் பேசும் பலம் என்ன என்ற உலக இராசதந்திரக் கேள்விக்கு மேற்கூறிய விடயங்களின் அடிப்படையிலேயே பதில் அமைய முடியும். அந்த அழுத்தங்களின் விளைவே தென்னை மரத்தில் தேள்கொட்டியதற்குப் பனை மரத்தில் நெறிகட்டியது போல படைத்தளபதி தாக்கப்பட்டதற்குப் பதிலாக சம்பூர் சாடப்பட்டது. சிறிலங்கா அரசின் அண்மைக்காலப் போராயுதக் கொள்வனவை நோக்கும் போது அதிலும் ஒரு கோலம் புலப்படுகிறது. அவற்றில், தரைக்கண்காணிப்பு ராடர்கள், கவசத்துருப்புக்காவிகள், கண்ணிவெடிப் பாதுகாப்பு வாகனம், மிலான் டாங்கி எதிர்ப்பு ஏவுகணை பொருத்திய ஜீப், பல்குழல் ஏவுகணை செலுத்திகள் T-55 டாங்கிகள் என்பனவற்றைத் தொகுத்துப் பார்த்தால் அவை வேக நகர்வையும் திறந்தவெளிச் செயற்பாட்டையும் கோடிகாட்டுகின்றன. இவையனைத்தும் வான் வழியாக நகர்த்தப்படக் கூடியவை என்பதும்,இவையனைத்திற்குமாகத் தரையைத் தொடாமலேயே வினியோகிக்கும் ஆற்றல் உள்ள ஹேர்குலிஸ் C-130 விமானத்தையும் சிறிலங்கா கொள்வனவு செய்கின்றது என்பதும் கவனிப்பிற்குரியவை. தரையில் வேகம் குறைவான பெரிய ஆர்டிலறிகள் தவிர்க்கப்பட்டிருப்பதைப் போலவே கடலிலும் தரையிறங்குகலங்கள் இம்முறை நாடப்படவில்லை. மாறாக,
கடற்கலங்களில் இருந்து ஏவக்கூடிய மோட்டார்களும், வேகத்தாக்குதற் கலங்களும், கடற்கண்ணிகளும் கோரப்பட்டிருக்கின்றன. கடலிலிருந்து ஆதரவு தரக்கூடியதும் கோடை காலத்தில் திடமான தரையாக இருப்பதுமான ஆனையிறவை அண்டிய பெருவெளிகள் போன்ற இடங்களில் மேற்கூறிய படைக்கலங்கள் தொகுப்பாகப் பயன்படுத்தபடக் கூடியவை.

வரலாற்றின் வழித்தடத்தில் திருமலை என்பது தமிழர்தாயக உணர்வுமையமாகவே இருந்து வந்திருக்கிறது. உன்னதமான பல போராளிகளையும் அவர்களைப் பெற்ற தாய்ச்சமூகத்தையும் உடைய திருமலையின் ஆன்மா உள்ளூறக் குமுறிக்கொண்டிருக்கிறது. எழுச்சிப் பேரணிகளிலும், உணர்வுக் கூட்டங்களிலும், போர்ப் பங்களிப்பிலும், அண்மைத் தேர்தலிலும் அதன் உணர்வுக் குமுறலின் ஒலி கேட்கவே செய்தது. அதன் வேதனையை பேச்சுவார்த்தைகள் தீர்த்து வைக்கவில்லை என்பது வெளிப்படை. இந்த நாட்டில் இரத்தம் சிந்துதலைத் தவிர்க்க விரும்புபவர்கள் சிங்கள மக்களுக்கு மூன்று உண்மைகளைக் கற்றுத்தர வேண்டும். முதலாவது, தமிழர் தரப்பு சிங்களப் படைதரப்பைத் தாக்குவது ஒரு குற்றமல்ல. அது உயிர் பிழைப்பதற்கான ஒரு உத்தி. இரண்டாவது தமிழர் நாட்டைப் புதிதாகப் பிரிக்க நினைக்கவில்லை. ஐரோப்பியரின் நிருவாக வசதிகருதிய கோர்ப்பின் விளைவாக நிருவாகத்தால் மட்டும் ஒன்றிணைந்த இரு தேசங்களில் ஒன்று தனது விருப்பிற்கமையப் பிரிந்து செல்லநினைப்பதே தமிழரின் போராட்டச்செய்தி. அது சிங்களவர்களுக்கு எதிரான யுத்தமல்ல. மூன்றாவது, தமிழர் தாயகத்தின் ஒவ்வொரு அங்குலத்திற்குமாகப் போராடுவது அந்த மண்ணின் மைந்தர்கள். அதை எதிர்த்து நிற்கும் உங்கள் வீரர்கள் அந்நியர்கள். இந்த உண்மைகளைத் துணிந்து சொல்லும் வீரம் சிங்களத் தலைவர்களில் எவருக்கும் இருந்ததில்லை. மகிந்தரும் அதற்கு விதிவிலக்கானவர் அல்லர்.



நன்றி: விடுதலைப்புலிகள். சித்திரை-வைகாசி ஏடு.

Labels: , ,


Get your own calendar

Links