படையினரின் வலிந்து தாக்குதல் போருக்கான ஒரு அழைப்பா?
* முன் எச்சரிக்கை விடுத்த பின்னர் புலிகள் நடத்திய தாக்குதல்
நாட்டில் மீண்டும் முழு அளவிலான போருக்கு படையினர் தயாராகிவிட்டனர். அங்கீகரிக்கப்பட்ட போர்நிறுத்த உடன்பாடு அமுலிலிருந்தாலும் அதற்கப்பால் அங்கீகரிக்கப்படாத போரே நடைபெற்று வந்தது. ஆனால், மட்டக்களப்பு வாகனேரியில், பாரிய இராணுவ நடவடிக்கையொன்றுக்குச் சமனாக புலிகளின் பகுதிக்குள் சென்று படையினர் தாக்குதல் நடத்தியதன் மூலம் படைகள் போருக்குத் தயாராகிவிட்டன என்ற செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைக் காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள், ஆழ ஊடுருவும் கருணா குழுவும் இராணுவ புலனாய்வுப் பிரிவும் சிறியளவிலான தாக்குதல்களையே மேற்கொண்டு வந்தன. ஆனால், வெள்ளிக்கிழமை நடைபெற்றது ஆழ ஊடுருவல் தாக்குதலல்ல. பாரிய படையெடுப்பொன்றை போல் நூற்றுக்கும் மேற்பட்ட படையினர் புலிகளின் பகுதிக்குள் முன்னேறிச் சென்று வலிந்து தாக்குதலை நடத்தியுள்ளனர்.
ஆழ ஊடுருவல் தாக்குதலுக்கும் நீண்டதூரம் முன்னேறிச் சென்று மேற்கொள்ளப்படும் தாக்குதல்களுக்கும் வேறுபாடுள்ளது. இதன் வெளிப்பாடே வாகனேரியில் புலிகளின் பகுதிக்குள் முன்னேறிச்சென்ற படையணிகள் மேற்கொண்ட தாக்குதலாகும்.
ஆழ ஊடுருவல் தாக்குதல் அணிகளானது, எதிரியின் பகுதிக்குள் தங்களை உருமறைப்புச் செய்தவாறு நீண்டதூரம் ஊடுருவிச் சென்று எதிரியின் முக்கிய இலக்குகளை அல்லது முக்கியஸ்தர்களைத் தாக்கிவிட்டு தப்பிச் செல்வதாலும்.
அண்மைக் காலத்தில் மட்டக்களப்பிலும் வன்னியிலும் கருணா குழுவும் இராணுவப் புலனாய்வுப் பிரிவும் மேற்கொண்ட தாக்குதல்களானது ஆழ ஊடுருவி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகும். இவ்வாறான தாக்குதல்களில் புலிகளின் முக்கிய தளபதிகளும் போராளிகளும் பொது மக்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த ஆழ ஊடுருவல் படையணிகளின் தாக்குதலின் மூலம் புலிகளின் முக்கியஸ்தர்களை அழிப்பது மட்டுமல்லாது புலிகளின் பகுதிகளுக்குள் அவர்களது நடமாட்டங்களை வெகுவாகக் கட்டுப்படுத்துவதுடன் அங்குள்ள மக்கள் மத்தியிலும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி எங்கும் எவ்வேளையிலும் தாக்குதல் நடத்தும் ஆற்றலுடன் படையினர் பரவி வியாபித்திருக்கின்றார்களென்றதொரு தோற்றப்பாட்டையும் ஏற்படுத்துவதாகும்.
இது உளவியல் ரீதியில் புலிகளையும், அவர்களது கட்டுப்பாட்டுப் பகுதிகளினுள் வாழும் மக்களையும் அச்சுறுத்தும் செயலென்பதுடன் இதன் மூலம் புலிகளின் பகுதிகளினுள்ளேயே அவர்களது சுதந்திரமானதும் பரந்துபட்ட செயற்பாடுகளையும் கட்டுப்படுத்தும் நோக்கம் கொண்டது.
இந்த ஆழ ஊடுருவும் படையணி தன்னை இனங்காட்டிக் கொள்ளாது உருமறைப்புச் செய்து ஊடுருவுவதுடன் புலிகளோ அங்குள்ள மக்களோ அடையாளம் காண்பதைத் தவிர்ப்பதற்காக புலிகளின் சீருடைகளை அணிந்து சென்றும் தாக்குதல்களை நடத்தி வந்தன.
இதன்போது தங்களை எவராவது அடையாளம் கண்டுவிட்டால் அவர்களை அந்தந்த இடங்களிலேயே இந்த ஆழ ஊடுருவும் படையணி கொன்றுவிட்டு தனது இலக்கை நோக்கி நகரும்.
இதன் மூலம் புலிகளுக்கு, ஆயுதக் குழுக்களும் இராணுவப் புலனாய்வுப் பிரிவும் பெரிய தலையிடியைக் கொடுத்து வந்தபோதும் புலிகள் துரிதமாகவும் நுட்பமாகவும் செயற்பட்டு ஆழ ஊடுருவும் படையணிகள் மீது அடுத்தடுத்து தாக்குதல்களை நடத்த அந்தப் படையணியின் செயற்பாடு தற்போது வெகுவாகக் குறைந்துவிட்டது.
இவ்வாறான ஆழ ஊடுருவும் தாக்குதலில் இராணுவப் புலனாய்வுப் பிரிவே முக்கிய இடம் வகித்தாலும் இந்தத் தாக்குதல்களை தமிழ் குழுக்களே நடத்துவதாக பிரசாரம் செய்யப்பட்டு வந்தது. எனினும், புலிகளின் பதில் தாக்குதல்களில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் சிலர் கொல்லப்பட்டதுடன் சிலர் பிடிபட உண்மை தெரியவந்தது.
ஆழ ஊடுருவும் படையணிக்கு அடுத்தடுத்து விழுந்த அடி படையினரை திக்குமுக்காடச் செய்யவே புலிகள் மீதான தாக்குதலுக்கு அவர்கள் வேறு வழிகளைக் கடைப்பிடிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதன் ஒரு கட்டமாகவே வாழைச்சேனை வாகனேரியில் புலிகளின் பகுதிக்குள் நீண்டதூரம் முன்னேறிச் சென்ற படையணிகள் புலிகள் மீது தாக்குதல் தொடுத்தன.
ஆழ ஊடுருவல் படையணிகளில் இடம்பெறுவோர் எண்ணிக்கை மிகக் குறைவாகவேயிருக்கும். ஐந்து அல்லது ஆறு பேரைக் கொண்ட குழுவே ஆழ ஊடுருவி இலக்கைத் தாக்கும். ஆனால், வாகனேரிக்குள் முன்னேறியது, நூற்றுக்கும் மேற்பட்டோரைக் கொண்ட படையணிகளாகும்.
இது ஊடுருவல் தாக்குதலல்ல. வலிந்து மேற்கொள்ளப்பட்டதொரு தாக்குதலாகும். இதன் மூலம், இதுவரை நாளும், போர்நிறுத்த உடன்பாடு அமுலிலுள்ள போதிலும் இடம்பெற்று வந்த " Low intensity war' என அழைக்கப்பட்டு வந்த சிறு அளவிலான சற்று உக்கிரமான மோதலானது தற்போது முழு அளவிலான போராக மாறிவிட்டதா என்ற கேள்வியும் எழுகிறது.
மட்டக்களப்பு - பொலநறுவை வீதியிலிருந்து சுமார் ஐந்து கிலோமீற்றர் தூரத்திற்கு நூற்றுக்கும் மேற்பட்ட படையினர் முன்னேறிச் சென்று இந்த மோதலில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து உடனடியாக புலிகள் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவுக்கு அறிவித்து அவர்களை அங்கிருந்து விலகிச் செல்லுமாறு கேளுங்கள் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
`எங்கள் பகுதிக்குள் நீண்டதூரம் முன்னேறி வந்து எமது போராளிகளைத் தாக்கியுள்ளனர். அவர்களைப் பின்வாங்கச் சொல்லுங்கள் அல்லது திருப்பித் தாக்குவோர் என்றும் புலிகள் கண்காணிப்புக் குழுவுக்கு மீண்டும் மீண்டும் கூறியுள்ளனர்.
கண்காணிப்புக் குழுவும் இராணுவத் தரப்புடன் தொடர்பு கொண்டு நிலைமை மோசமடைவதை தவிர்க்குமாறு கேட்டுள்ளது. ஆனால், இராணுவத்தினர் தேடுதல் நடவடிக்கை ஒன்றுக்காக (Clearing Operation) சென்றுள்ளனர். எனினும், அது புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியல்ல என்று கண்காணிப்புக் குழுவிடம் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
தங்கள் போராளிகளைத் தாக்கிவிட்டு படையினர் அப்பகுதியில் தொடர்ந்தும் நிற்பதை சுட்டிக்காட்டிய புலிகள், இராணுவம் பின்வாங்காத நிலையில் அவர்கள் மீது பதில் தாக்குதலை தொடுக்கவே கடும் மோதல் வெடித்தது.
வாகனேரிக்குள் முன்னேறிச் சென்றது, இராணுவத்தின் விஷேட தாக்குதல் படையணியாகும். எந்தச் சூழ்நிலையிலும் எந்தத் தாக்குதலையும் எதிர்கொள்ளும் விதத்தில் பயிற்சி பெற்ற படையணியே வாகனேரிக்குள் முன்னேறிய படையணி.
இதையடுத்து விடுதலைப்புலிகளின் விஷேட படையணிகள் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட மோதல் வெடித்தது. மோதல் ஆரம்பமாவதற்கு முன்னர் குடிமனைகளிலிருந்த பொது மக்களை புலிகள் பாதுகாப்பான இடங்களுக்கு அவசர அவசரமாக அனுப்பி வைத்தனர்.
புலிகளின் விஷேட படையணிகள் உக்கிரமான தாக்குதலை ஆரம்பித்த போது இராணுவ விஷேட படையணி நிலைகுலைந்து விட்டது. இவர்களுக்கு உதவியாக வாழைச்சேனை காகித ஆலை முகாம், மியாங்குளம் முகாம், கரடிக்குளம் முகாம், புனானை முகாம் மற்றும் ஆறாம் கட்டை சந்தி முகாம்களிலிருந்து, மோதல்கள் நடைபெற்ற பகுதி நோக்கி கடுமையான ஆட்லறி ஷெல்களும் மோட்டார் குண்டுகளும் பொழியப்பட்டன.
மிகப்பெரும் யுத்தம் போல் சுமார் ஒரு மணிநேரம் உக்கிர சமர் நடைபெற்ற போது, புலிகளின் கடுமையான பதிலடிக்கு முகம் கொடுக்க முடியாது இராணுவ விஷேட படையணி பின்வாங்கி ஓடியது. இதன்போது, 15 இற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட பலர் படுகாயமடைந்தனர். இதனால், உயிரிழந்தவர்களில் 12 பேரது சடலங்களையும் விட்டுவிட்டு விஷேட படையணி தப்பிச் சென்றது.
இதன்போது, இராணுவ கோப்ரல் ஒருவர் புலிகளிடம் பிடிபட்டுமுள்ளார். புலிகளின் பகுதிக்குள் முன்னேறிச் சென்று தாக்குதல் நடத்தியதற்கான ஆதாரமாக இந்த 12 சடலங்களும் இருந்துவிடுமென்பது தெரிந்தும் அந்தச் சடலங்களை மீட்க முடியாத நிலையிலேயே இராணுவ விஷேட படையணி பின்வாங்கியுள்ளது.
தங்கள் சகாக்களின் சடலங்களை மீட்டு, புலிகளின் பகுதிக்குள் தாங்கள் நுழைந்து தாக்குதலை நடத்தியதற்கான ஆதாரங்களை இல்லாது செய்துவிட படையினர் மேற்கொண்ட கடும் பிரயத்தனத்தையும் புலிகள் முறியடித்து விட்டனர். இதனால், 12 சடலங்களையும் கைவிட்டு விட்டு தங்களுடன் வந்தவர்களில் ஒருவரை புலிகள் பிடித்துச் செல்வதை அறிந்தும் பின்வாங்க வேண்டிய நிலை படையினருக்கு ஏற்பட்டது.
இந்தச் சமரில் கொல்லப்பட்ட அனைவரும் படையினர். பிடிபட்டவரும் இராணுவச் சிப்பாயே என்பதால் முற்று முழுதாக இராணுவ விஷேட படையணியொன்றே பெருமெடுப்பில் முன்னேறிச் சென்று இந்த வலிந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இதில் கருணா குழுவைச் சேர்ந்தவர்கள் இடம் பெற்றார்களா என்பது தெரியவில்லை.
வழமையாக கிழக்கில் புலிகளின் பகுதிக்குள் எந்தத் தாக்குதல் நடைபெற்றாலும் கருணா குழுவே தாக்குதல் நடத்துவதாகவும் புலிகளின் பகுதிக்குள் சென்று அவர்கள் மீது கடும் தாக்குதலைத் தொடுக்கும் வல்லமையுடன் கருணா குழு இருக்கிறது என்பது போன்றதொரு தோற்றப்பாட்டை அரசும் படைத் தரப்பும் சிங்கள, ஆங்கில ஊடகங்களும் ஏற்படுத்தியிருந்தன.
ஆனால், இந்தச் சமரில் கொல்லப்பட்ட அனைவரும் படையினர் என்பதுடன் அவர்களில் 12 பேரது சடலங்களை புலிகள் கைப்பற்றியதுடன் ஒருவரை உயிருடன் பிடித்ததன் மூலம், கருணா குழுவென்ற பெயரில் இதுவரை காலமும் இராணுவமே புலிகள் மீது தாக்குதல்களை நடத்தி வந்ததென்ற உண்மையை இன்று சிங்கள மக்கள் இதன் மூலம் உணர்ந்திருப்பர்.
இந்த மோதல் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நடைபெறவில்லை. இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியினுள் தேடுதலில் ஈடுபட்ட படையினர் மீதே புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக இராணுவமும் பாதுகாப்புத் துறை பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவும் கூறி வருகின்றனர்.
இவர்கள் கூறுவது போல் இந்த மோதல் நடைபெற்ற பிரதேசம் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியென்றால், படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் எப்படி 13 படையினர் காணாமல் போக முடியும், எப்படி அவர்களது சடலங்களையும் பெருமளவு ஆயுதங்களையும் புலிகளால் கைப்பற்றிச் செல்ல முடியும்?
படையினர் தான் புலிகளின் பகுதிக்குள் சென்று இந்தத் தாக்குதலை நடத்தியதன் மூலம் போர் நிறுத்த உடன்பாட்டை அப்பட்டமாக மீறிவிட்டதாக போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும் கூறுகின்றது.
இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியினுள்ளேயே இந்த மோதல் நடந்ததென்றால், புலிகள் போர் நிறுத்த உடன்பாட்டை அப்பட்டமாக மீறிவிட்டதாக இதுவரை ஏன் அரசோ, படைத்தரப்போ அல்லது கண்காணிப்புக் குழுவோ கூறவில்லை?
கிழக்கில் கருணா குழுவின் பிளவின் பின் புலிகள் முற்றாகப் பலமிழந்து விட்டதாகவும் அங்கு கருணா குழு பலம்மிக்க சக்தியாகவுள்ளதாக தெற்கில் மேற்கொள்ளப்பட்டு வந்த பிரசாரங்களுக்கு இது பேரிடியாகி விட்டது. எங்கும், எந்த இடத்திலும் இராணுவத்தின் எந்தப் படையணியையு ம் வெற்றிகரமாக எதிர்கொள்ளும் ஆற்றலுடன் கிழக்கில் தாங்களிருப்பதை புலிகள் இதன் மூலம் நிரூபித்துள்ளனர். வழமைபோல், அரசாலோ அல்லது படைகளாலோ இம்முறை பொய் சொல்ல முடியாததொரு நிலைமை ஏற்பட்டுள்ளதுடன் கிழக்கில் கருணா குழுவென்ற பெயரிலெல்லாம் படையினரே நாடகமாடி வருவதையும், இராணுவத்தினரின் 12 சடலங்களும் நிரூபித்துவிட்டன.
இந்த மோதலில் எத்தனை பேர் கொல்லப்பட்டிருந்தாலும் அரசோ, படைத் தரப்போ அல்லது தென்பகுதி ஊடகங்களோ கவலைப்பட்டிருக்க மாட்டா. ஆனால், 12 சடலங்களையும் புலிகள் கைப்பற்றியதன் மூலம் இன்று இவர்கள் அனைவரும் `மெல்லவும் முடியாது, விழுங்கவும் முடியாது' திகைத்துப் போயுள்ளனர். எல்லாவற்றையும், கைப்பற்றப்பட்ட 12 சடலங்களும் அம்பலப்படுத்திவிட்டன.
இல்லையேல், இந்த மோதல் பற்றி எமக்கு எதுவுமே தெரியாது. நாங்கள் ஒரு போதும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் செல்வதில்லை, புலிகளின் உள் இயக்க மோதலின் தொடர்ச்சியே இதுவென இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க வழமை போல் கூறியிருப்பார்.
இதற்கு அப்பால் சென்று சிங்கள, ஆங்கில ஊடகங்கள் கருணாவின் பலம் குறித்து ஆய்வுக் கட்டுரைகள் எழுதியிருக்கும். போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும் வழமைபோல் சம்பவம் நடைபெற்ற இடத்திற்குச் சென்று பார்த்துவிட்டு விசாரணைகள் நடைபெறுவதாகக் கூறியிருக்கும்.
எனினும், இவ்வாறானதொரு பாரிய தாக்குதலுக்காக பெரும் படையணி ஏன் சென்றதென்ற கேள்வி எழுகிறது. இனப்பிரச்சினைக்கு தீர்வுத் திட்டமொன்றை தயாரித்து வருவதாகவும், புலிகளுடன் பேசும் தங்கள் முடிவில் எவ்வித மாற்றமுமில்லையென்றும், இராணுவ ரீதியில் இந்தப் பிரச்சினைக்கு தீர்வொன்றைக் காண முடியாதெனவும் ஜனாதிபதி தொடர்ந்தும் கூறி வருகையில் இந்தப் பாரிய நகர்வு ஏன் நடந்தது?
இதன் மூலம், இதுவரை நாளும் சிறு அளவிலான உக்கிர மோதலாக இருந்த களநிலைமை பாரிய மோதலாகி யுத்தம் வெடிக்கக் கூடியதொரு சூழ்நிலை தோன்றியுள்ளதை ஆய்வாளர்களும் இராஜதந்திரிகளும் சுட்டிக் காட்டியுள்ளனர்.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் புலிகளின் பதில் நடவடிக்கை எப்படியிருக்கப் போகிறது? இதனை வழமையான, சாதாரணமானதொரு மோதலாகக் கருதுவார்களா அல்லது வலிந்து போருக்கு விடுக்கப்பட்ட அழைப்பாகக் கருதுவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Labels: இராணுவ ஆய்வு, சமர்
Search
Previous posts
- ஒட்டுக்குழு அரசியலுக்கு வாகனேரியில் முற்றுப்புள்ளி
- தனியரசு அமைப்போம் - புலிகள் அறிவிப்பு
- தர்முசிவராம் (பிரமிள்) பற்றி
- இஸ்ரேலின் அடாவடியும் படிக்க வேண்டி பாடங்களும்
- பொஸ்பரஸ் தொடங்கி ஒற்றைத் துப்பாக்கி வரை...
- இந்து சமுத்திரத்தின திறவுகோல் யாருக்கு?
- கேணல் இறமணன்
- இரத்தம் தோய்ந்த நாளொன்றின் நினைவுகள்.
- பிபிசி, உலகநாடுகளைப் புரிந்து கொள்வோம்.
- திருகோணமலை வெறியாட்டம் -படங்கள்
களஞ்சியம்
இறுதிப் பின்னூட்டங்கள்
Links
- Wikipedia
- Firefox
hit Counter
_____________________
Click Here To Earn Money____________________