Monday, December 26, 2005

வை.கோ.வின் உரை

தமிழகத்தில் நடைபெற்ற சுப.வீரபாண்டியன் அவர்களின் "பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம்" என்ற நூல்வெளியீட்டு நிகழ்வில் வை.கோ. அவர்கள் ஆற்றிய உரையின் ஒலிப்பதிவை இங்கே கேட்கலாம்.

வை.கோவிக் பேச்சுக்கான உரல்கள் இதோ.
பாகம் ஒன்று
பாகம் இரண்டு
--------------------------------------------
நன்றி தமிழ்நாதம்.

Labels: , ,

இனச்சிக்கலில் இந்திய நிலைப்பாடு

இந்தியா தொடர்பாக புலிகளின் நிலைப்பாடு.
-க.வே. பாலகுமாரன்.-

புலிகளின் குரல் வானொலியில் சனிக்கிழமை ஒலிபரப்பாகிய அரசியல் அரங்கம் நிகழ்வில் விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் கா.வே.பாலகுமரன் ஆற்றிய உரை:

நாள்தோறும் நீங்கள் பத்திரிகைகளைப் பார்த்து வருகிறீர்கள். எமது போராட்ட முனைப்பு பல்வேறு பக்கங்களாகக் கிளைத்தெழுந்து, ஏலவே நாம் சொன்னதைப் போல எதிர்வினைகள் ஆற்றப்படுவதையும் அதன் விளைவாக ஒரு புதிய பரிணாமம் தோன்றப் போவதையும் நாம் முன்னமே சொல்லி வைக்கிறோம்.

கொழும்பு அரசியலை நீங்கள் பார்க்கும் போது நிச்சயமாக உங்களுக்குத் தெளிவாகத் தெரியும். சிங்களத் தலைவராகத் தோற்றமளிக்கும் மகிந்தர் இப்பொழுது வழமைபோன்ற மிகத் தந்திரமான, ஒரு குள்ளநரியாக, ஒரு சந்திரிகாவாக, ஒரு பிரேமதாசாவாக மாறக் கூடிய நிலைக்கு வந்துவிட்டார்.
அவருடைய அரசியல் நடவடிக்கைகள் வழமையான நரித்தந்திரம் நிரம்பிய அரசியல்தன்மைகள் கொண்டிருப்பதை நாம் தெளிவாகப் பார்க்கிறோம். அதனை இந்தப் பேச்சுவார்த்தையின் அறிவிப்பில் பார்க்கலாம்.
பேச்சுவார்த்தை என்றாலே இரண்டு தரப்பும் ஒருமித்து சந்திக்க வேண்டிய இடம். அந்த இடமே பிரச்சனையாக்கப்படும்போது அந்தப் பேச்சுவார்த்தை என்பது எத்தகைய வேறு நோக்கங்களைக் கொண்டது என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது.

ஆகவே சிங்கள அரசியல் தொடர்பாக இனி நாம் பெரிதாகப் பேசுவதற்கோ அல்லது மகிந்தரின் செயற்பாடுக்கு ஊடாக அமைதிக்கான ஒரு வாய்ப்பு அல்லது கதவு திறக்கப்படும் என்பதற்கான அனைத்து வாய்ப்புகளையும் அவரே அடைத்துவிட்டார். அவரே கதவைத் திறந்து அவரே கதவை சாத்தி பூட்டையும் பூட்டி திறப்பை எடுத்துக்கொண்டு அவர் இந்தியாவுக்குப் போகிறார்.

இந்தியா, இந்தியா என்கிற சொல் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முக்கியமான பதிவாக இருக்கிறது. எங்கள் மக்கள் மத்தியில் இந்தியா தொடர்பாக ஒரு நெகிழ்வு, ஒரு அன்பு, ஒரு அச்சம், மிகைப்படுத்தப்பட்ட பயம், சில முற்கற்பிதங்கள் என்று எண்ணங்கள் பலவாறாக இருக்கின்றன.
நாங்கள் எங்கே எவரைச் சந்தித்தாலும் இந்தியா தொடர்பான கேள்விகளைக் கேட்காமல் விடுவது கிடையாது. ஏதோ இந்தியா எங்களுக்கு பரம எதிரி போலவும் எங்களது விடுதலைப் போராட்டத்துக்கு இந்தியா தடையாக இருப்பது போலவும் இந்தத் தடையை எவ்வாறு மீறுவது என்று நாங்கள் சிந்திப்பது போலவும் இது தொடர்பாக பல்துறை சார்ந்த அறிஞர்களும் இந்தியாவோடு உறவை ஏற்படுத்தி இந்தியாவுக்கு நிலைமைகளை விளங்கப்படுத்தி இந்தியாவுடன் நாங்கள் கீழிறங்கி உறவைப் பேணாவிட்டால் என்ன செய்வது என்று தலையில் கை வைத்து வியக்கிற துன்பகர நிலையையும் நாங்கள் பார்த்து வருகிறோம்.

இது தொடர்பாக தேசியத் தலைவருடன் நாங்கள் நீண்டகாலமாக பேசியும் வருகிறோம். அவரும் இது தொடர்பாக பல கருத்துகளையும் சொல்லி இருக்கிறார்கள்.

இந்தியா என்று சொல்லுகிறபோது நாங்கள் இந்திய மக்களைத்தான் நம்புகிறோம். குறிப்பாகத் தமிழ்நாட்டு மக்களை நம்புகிறோம்.
தமிழ்நாட்டு மக்கள் தற்போது உள்ள சூழ்நிலையில் பல்வேறு அடக்குமுறை ஒடுக்குமுறைச் சட்டங்களின் வெளிப்பாடு காரணமாக தங்களுடைய ஆர்வத்தை அந்த ஈடுபாட்டை மறைத்து மனதுக்குள்ளே வைத்திருக்கிறார்கள். இவை நீங்கும்போது அவை வெளிவரும் என்று சொன்னார்கள். அது முதலிலே சொன்ன கருத்து.

அதுபோலவே இப்போது பொடா சட்டம் எடுத்ததற்குப் பின்னாலே தமிழ்நாட்டில் உணர்வலைகள் மெல்ல மெல்ல பொங்கி மேலே வருவதையும் எங்களுடைய செய்திகள் தமிழ்நாட்டிலே முக்கிய இடத்தைப் பெறுவதையும் அண்மையிலே கூட புங்குடுதீவு பாலியல் வல்லுறவுச் சம்பவம் தமிழ்நாட்டிலே மிகப் பெரிய செய்தியாக சென்றதையும் தமிழருடைய உரிமையை சிங்களவன் மறுப்பதைத் தெளிவாகச் சொல்லக்கூடிய கட்டுரைகளும் முக்கியமான பத்திரிகைகளில் அங்கு வருவதை நாம் அறிகிறோம்.

அவ்வாறு பார்க்கும்போது எங்களுக்குப் பழைய ஞாபகங்கள் எல்லாம் வருகின்றன. அதை ஒருபுறம் தள்ளிவைத்துவிட்டு இந்தியா தொடர்பான சில கருத்துகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.
அண்மைக்கால நிகழ்ச்சிகளுக்கு ஊடாக இந்தியாவில் போக்கில் எவ்வாறு மாற்றம் பெறுகிறது என்று பாருங்கள்.

இந்தியா என்று நாம் சொல்லும்போது இந்திய அரசு என்று பார்க்கின்றபோது சில நலன்கள் இருக்கின்றன. அந்த நலன்களை அடைவதற்காக காலம்காலமாக தன்னுடைய கொள்கைகளை மாற்றிக்கொண்டும் சிலவற்றை வேறு பாதைக்கு திருப்பிக்கொண்டு போவதையும் பார்க்கலாம்.
உதாரணத்துக்கு நீங்களே அறியலாம்.

ரணிலுடைய சமாதான முயற்சிகள் நடைபெற்ற காலத்தில் இந்தியா ஒருவகையான அமைதி நிலைப்பாட்டை எடுத்தது. அதேவேளையில் சந்திரிகா போன்ற தலைவர்களையும் ஜே.வி.பி. போன்ற கட்சிகளையும் பயன்படுத்தி இந்த அமைதி முயற்சிகளுக்கு இந்தியா ஒரு தடையாக இருந்தது என்ற அவச்சொல்லும் அந்த காலகட்டத்திலே பல்வேறு தரப்புகளால் கருத்துகள் சொல்லப்பட்டது.

இப்போது நீங்கள் பார்க்கலாம். இந்த முறை மகிந்தர் பதவியை எடுத்தபோது இந்தியாவை துணைக்கு அழைத்தார். எதற்கெடுத்தாலும் இந்தியாவை துணைக்கு அழைக்கின்ற போது இந்தியாவுக்கு ஒரு அச்சம் தோன்றியிருக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த மகிந்தர் போன்ற தலைவர்கள் தங்களுடைய தவறான செயற்பாடுகளுக்கு இந்தியாவை துணைக்கு அழைப்பது எவ்வளவு சரி என்ற கேள்வி இந்தியக் கொள்கை வகுப்பாளர்களிடம் நிச்சயமாக எழுந்திருக்க வேண்டும்.

மகிந்தர் நிச்சயமாக நம்பினாராம் இந்தியா தன்னோடு இந்தியா நல்லுறவைப் பேணும் என்று. அந்த நம்பிக்கையில்தான் அவர் நோர்வேயை எடுத்தெறிந்தும் புலிகளைச் சீண்டியும் பல்வேறாகப் பேசிக் கொண்டு வந்தார்.
ஆனால் மங்கள சமரவீர இந்தியா சென்றபோது இந்தியா மிகத் தெளிவாகச் சொன்னதாக செய்திகள் வெளிவந்தன. வடக்கு - கிழக்கு இணைப்பு தொடர்பான இந்திய நிலைப்பாடு உங்களுக்குத் தெரியும். இந்தியாதான் முதன்முறையாக வடக்கு - கிழக்கு நிலைப்பாடு தொடர்பாக சட்ட ரீதியான ஒரு கருத்தை முன்வைத்து இந்திய-இலங்கை ஒப்பந்தத்திலே சொல்லப்படுகிற நிலைக்குத் தள்ளப்பட்டது எல்லோருக்கும் நன்றாகத் தெரியும்.

நாங்கள் தனிப்பட்ட முறையிலே ராஜீவ் காந்தியைச் சந்தித்தபோது கூட அவர் சொன்ன கருத்து, வடக்கு - கிழக்கு இணைப்பை நாங்கள் ஒருபோதும் பிரிக்கவிடமாட்டோம். நீங்கள் அதுபற்றி கவலைப்பட வேண்டாம் என்று எங்களுக்கு வாக்குறுதி தந்திருந்தார். இவையெல்லாம் வரலாற்றிலே பதிவுகளாக நாங்கள் சொல்லக்கூடிய வாய்ப்பு இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது.
ஆகவே அந்த வகையிலும் இன்னொரு வகையிலே பார்த்தீர்கள் என்றால் போர் நிறுத்த உடன்பாட்டை மாற்றுவது அல்லது மூன்றாம் தரப்பு மத்தியஸ்த்துக்கு மாற்றுவது போன்ற விடயங்களிலும் இந்தியா ஆர்வமாக இருக்கவில்லை. இந்தியா சொன்ன செய்தி மிகத் தெளிவானது. இதே பாதையில் தொடர்ந்து சென்று ஒரு இணக்கப்பாட்டிற்கு வர முயலுங்கள் என்று இந்தியா திருப்பி அனுப்பிய கதையை நாங்கள் அறிவோம்.
ஜே.வி.பி. போன்ற சக்திகள் இந்தியாவை பயன்படுத்தி தங்களுடைய இலக்கை அடைவதற்காக முயற்சிப்பது குறித்து இந்தியாவுக்கு அச்சம் தோன்றியிருப்பது எங்களுக்குத் தெளிவாகத் தெரிகிறது.
அதன் விளைவாகத்தான் ஜே.வி.பி. போன்ற சக்திகள் ஜப்பான் அல்லது சீனாவை முன் நிறுத்தும் போது அது இந்தியாவுக்கு உவப்பாக இருக்க முடியாது.

இந்த விடயங்களில் இந்தியா பெரிதும் தலையிடுவதாகத் தெரியவில்லை.
ஆகவே மகிந்தர் ஜப்பானை தரப்பாக எடுத்தபோது நாங்கள் அதை மறுத்த பொழுது இந்தியாவுக்கு அதிலே ஒரு செய்தி இருப்பதை இந்தியா உணர்ந்திருக்கக் கூடும்.

நாங்கள் இந்த விடயங்களில் தெளிவாக இருக்கிறோம். எங்களுக்கு இந்தியாவுடன் எந்தப் பகைமையும் கிடையாது. நாங்கள் விரும்பி இருந்தால் இந்தியாவுக்கு ஒரு சிறு பகைமையுள்ள ஒரு போட்டியாக வரக்கூடிய சீனா, ஜப்பான் போன்ற நாடுகளை நாங்களும் முன்நிறுத்தி நாங்கள் செயற்படவில்லை.

எங்களுடைய நோக்கம் எப்போதும் இந்தியாவைப் பகைப்பது கிடையாது. இந்தியாவின் நலன்களுக்கு எதிராக நாங்கள் செயற்படப்போவதும் கிடையாது. அதேவேளையில் எங்களுடைய நலன்களுக்கு எதிராக இந்தியாவும் செயற்படக் கூடாது. இதுதான் தலைவரின் முக்கியமான எண்ணம். இதை நாங்கள் தெளிவாகச் சொல்லி இருக்கிறோம்.
இந்தியத் தரப்பு எங்களுடைய உணர்வுகளைப் புரிந்து கொள்ள மறுப்பது எங்களுக்குப் பெருத்த வேதனையாக இருக்கிறது.

இன்று நிலைமைகள் மாறி இருக்கின்றன. இந்தியத் தரப்பு அண்மைக்காலமாக தங்களுடைய நிலைப்பாடை மறு ஆய்வுச் செய்யக் கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதை நாங்கள் தெளிவாக அறியக் கூடியதாக இருக்கிறது.
15.12.2005 அன்று உதயன் பத்திரிகையில் கூட இலங்கை விரிக்கும் வலையில் இந்தியத் தரப்பு சிக்குமா என்று தலையங்கம் எழுதியுள்ளது.
இந்தியாவோடு பேச்சுவார்த்தை நடத்தச் செல்லுகிற தூதுக்குழுவில் இடம்பெற ஜே.வி.பி. மறுத்ததற்கான பிரதான காரணம் என்று நாங்கள் அறியும்போது இந்தியாவுடனான தனது உறவில் இந்தியா போடக்கூடிய அழுத்தங்களைத் தவிர்ப்பதற்காக ஜே.வி.பி. செல்லவில்லை என்பது தெளிவான செய்தியாக இருக்கிறது.

ஒரு காலகட்டத்திலே ஜே.வி.பிக்கு உவப்பாக இருந்த இந்தியா இன்று சிறிது சிறிதாக விட்டுச் செல்கிறது. இதைப்பார்க்கும்போது அரசியலிலே நண்பர்களும் இல்லை பகைவர்களும் இல்லை என்ற செய்தி தெளிவாகப் புலப்படுகிறது.

இங்குள்ள ஒரு முக்கியமான செய்தி என்னவெனில் இந்தியாவுக்கு மாற்றான ஒரு சக்தியைக் கொண்டுவர புலிகள் விரும்பவில்லை என்பதும் அந்த மாற்று சக்தியைக் கொண்டுவருவதற்கு இந்தியாவுடன் கூட நின்ற சக்திகள்தான் முயலுகின்றன என்பதை நாங்கள் இங்கே சுட்டிக்காட்ட வேண்டிய தேவை இருக்கிறது. அதை இந்தியா புரிந்தும் இருக்கிறது.
இதற்கு அப்பால் எங்கள் மக்களிடம் பேசும்போது நாங்கள் சொல்லக்கூடிய செய்தி என்னவெனில், இந்தியா தொடர்பான அச்சம் எங்கள் மக்களிடத்திலே இருக்க வேண்டி அவசியம் இல்லை என்பதுதான் எங்களுடைய பிரதான நிலைப்பாடு.

இந்தியா தொடர்பான முற்கற்பிதங்களை நாங்கள் மாற்றிக்கொள்வோம். ஏனென்று சொன்னால் எங்களுடைய விடுதலைப் போராட்டம் இன்று ஒரு உன்னதமான நிலையை அடைந்து அதனுடைய இறுதிப் பக்கங்களைத் தயாரிக்கிற இந்த வேளையிலே நாங்கள் அச்சம், ஐயுறவு எதுவுமற்று ஒரு தெளிவான மக்கள் கூட்டமாக மாற வேண்டும் என்பதற்காக இந்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று நாங்கள் தாழ்மையாக வேண்டிக்கொள்கிறோம்.

இந்திய மத்திய அரசு என்பது நாங்கள் நினைப்பதுபோல் ஒரு அரசு அல்ல. ஏலவே உள்ளது போன்ற பலமான அரசு இன்றைக்கு கிடையாது.
இந்தியாவில் இன்று கூட்டாட்சி என்பது ஒரு நிலையாக வந்துவிட்டது. மத்தியில் உள்ள ஆட்சி என்பது ஒவ்வொரு பிரதான கட்சிக்கும் கிட்டத்தட்ட 15-க்கும் மேற்பட்ட கூட்டுக் கட்சிகள் உள்ளன. அந்த மாநிலக் கட்சிகள் இல்லாமல் இந்தியாவில் ஒருபோதும் ஆட்சி அமைக்க முடியாது.
இந்தியாவில் ஏறத்தாழ 25-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் இருக்கின்றன. மொழிவாரியாக பிரிவிக்கப்பட்ட போது 18-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. இன்று ஒவ்வொரு மாநிலமும் தனிநாடு கோரிக்கை என்று கூறாவிட்டாலும் கூட தன்னுடைய உரிமைக்காக அதிகாரத்திற்காக போராட்டங்களை நடத்திக் கொண்டு வருவதும் அதை ஏற்க வேண்டிய நிலைக்கு இந்திய மத்திய அரசு தள்ளப்படுவதும் மாநிலக் கட்சிகளுடைய கை ஓங்கி வருவதும் இன்றைக்கு இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு வெளிப்பாடாக வெளிவருகிறது. இதை நாங்கள் வரவேற்கிறோம்.
இந்தியாவில் தனிநாடு கோருகிற சக்திகளுடன் நாங்கள் ஒருபோதும் உறவு வைத்ததும் கிடையாது. வைக்கப்போவதும் கிடையாது. எங்களைப் பொறுத்தவரையில் அந்த மக்கள் தங்களது உரிமைகளுக்காகப் போராடுவதை நாங்கள் ஆதரிக்கிறோம்.

அந்த வகையில்தான் இந்தியாவினுடைய அரைகுறை சமஸ்டி ஆட்சிக்கு அப்பால் எங்களுடைய இனத்தின் சிக்கல்கள் வெவ்வேறாக இருப்பதால் நாங்கள் இடைக்கட்டத் தீர்வுக்குப் போனோம் என்பதை இந்தியா கட்டாயம் கவனத்தில் கொண்டிருக்கும் என்று நம்புகிறோம்.
பி.ஜே.பி.யினது கூட்டுக் கட்சிகளின் சார்பில் 185 பேர் என்றால் காங்கிரஸ் கட்சிக்கு 220 என்றால் முக்கியமாக தமிழ்ப் பிரதேச கட்சிகள்- தமிழ் மாநிலக் கட்சிகள் அதிக அங்கத்துவம் வகிக்கின்றன.
அந்த வகையில்தான் அண்மையில் ம.தி.மு.க. தலைவர் வைகோ தெரிவித்திருந்த கருத்தை இந்தியா நிச்சயமாக கவனத்தில் கொள்ள வேண்டும்.
தொடர்ந்தும் தமிழ் மக்களினது நலன்கள் புறக்கணிப்படுமானால் தமிழகம் ஒரு காஸ்மீரமாகும் என்று அவர் சொன்னது வெறும் அச்சுறுத்தல் அல்ல. ஒரு யதார்த்தமான களநிலைமை. இன்று காஸ்மீரில்தான் தனிநாட்டுக் கோரிக்கையும் அதனால் ஏற்பட்ட பல இரத்தக் களறிகளும் அதற்கு அப்பால் காஸ்மீருக்கு விசேடமான தனியான அதிகாரம் கொடுக்கப்பட வேண்டும் என்ற தீர்மானமும் வருவதற்கு காஸ்மீரிலே நடந்து வருகிற சம்பவங்களைக் மனதில் வைத்துக் கொண்டுதான் வைகோ பேசியிருக்கிறார்.
முன்னைய மத்திய அரசு போல் இல்லை இன்று இருக்கிற அரசு. அது பலமுனையிலே இருக்கின்றது.

15-க்கும் மேற்பட்ட தேசிய இனங்களைக் கட்டுப்படுத்தி வைத்திருப்பதால் அந்த இனங்களுடைய நலன்கள் தொடர்பாக இந்திய அரசு தனது நலன்களைத் திருப்ப வேண்டிய தேவை ஏற்படுகிறது.
அதேபோல் கிளர்ச்சிகள் நடந்த அருணாச்சலப்பிரதேசம், நாகாலாந்து போன்ற போர் நடந்த இடங்களில் கூட பேச்சுவார்த்தைக்கு இந்திய அரசு இறங்கி மிக இரகசியமாகப் பேசினாலும் கூட மேலைத்தேய நகரங்களிலே இந்தியா தனது பிரதிநிதிகளை அனுப்பி உலகுக்குத் தெரியாத வகையில் பேசினாலும் கூட அந்தப் பேச்சுவார்த்தைகள் இன்று பகிரங்கப்படுத்தப்பட்டதாக நடந்து கொண்டிருக்கின்றன.

அந்தப் பேச்சுவார்த்தைகளில் கூட மூன்றாம் தரப்பாக சில சக்திகள் செயற்படுவதை நாம் அறிவோம். ஆகவே இந்திய அரசு நல்லபோக்கிலே போவதை நாம் அறிவோம். இந்தியாவின் இந்த போக்கிற்கு ஒருபோதும் நாம் தடையாக இருக்கப்போவதில்லை. இதை நாம் வரவேற்கிறோம்.
மகிந்தர் போன்ற ஆட்களை நம்பி இந்திய அரசு தனது வெளிநாட்டுக் கொள்கையை வகுக்கும் என்று சொன்னால் அது மிகவும் முட்டாள்தனமாகிவிடும் என்பது அவர்களுக்கு மிக நன்றாகத் தெரியும்.
மகிந்தர் டில்லிக்குச் செல்கின்ற போது அவருக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது என்று நாங்கள் நம்புகிறோம்.

தமிழ் மக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்தியா எடுக்காவிட்டாலும் கூட இந்தியா தன்னுடைய சுயமரியாதைக்காக, சுயகௌரவத்துக்காக தன்னுடைய வெளிநாட்டுக் கொள்கையைத் தெளிவாகச் சொல்ல வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. ஆகையால்தான் மகிந்தர் போகும்போது எல்லோரையும் இழுத்துக் கொண்டு போகிறார். அதிலே தொண்டமானும் செல்வதாக செய்திகள் வருகின்றன. தொண்டமானை நாங்கள் வேண்டுகிறோம். செல்லுங்கள். சென்றுவரும்போது செய்தியை எங்களுக்குச் சொல்லுங்கள்.

எங்கள் மக்களுக்கு உங்கள் நிலைப்பாடை விளங்கப்படுத்துங்கள். மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனது அறிக்கை ஒன்றை இந்த நேரத்தில் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.
"இந்தியா தமிழ் பேசுகிற மக்களுக்குச் செய்கிற அந்த நிலைப்பாடு என்பது தமிழ்நாட்டு தமிழ் மக்களினது மனங்களிலே புண்ணாக இருக்கிறது. மலையக மக்களுக்கு என்ன செய்தார்கள் இந்தியா. எங்களைக் கை கழுவிவிட்டார்கள். இவர்களை நம்பியா தமிழகத் தமிழர்கள் இருக்க முடியும்" என்று மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கூறியிருக்கிறார்.
இந்தக் கருத்துகள் எல்லாம் இந்தியாவுக்குச் சென்று சேர்ந்திருக்க வேண்டும் என்று நம்புகிறோம்.

எங்களைப் பொறுத்தவரை இந்திய அரசு எதிரி அல்ல. தன்னுடைய போக்கைத் திருப்பி எங்களுடைய தேசியத் தலைவர் சொன்னது போல் எங்களது தேசிய விடுதலைப் போராட்டத் தலைமையை மாசுபடுத்தாமல் அதனுடைய வலிமையைக் குறைக்காமல் தமிழ் மக்களின் போராட்டத்தை போராட்டமாகக் கருதிச் செயற்பட வேண்டுகிறோம்.

1926 ஆம் ஆண்டு மகாத்மா காந்தியை இலங்கைக்கு வரவழைத்தது தமிழர்கள். இந்தியாவினது விடுதலைப் போராட்டத்திலே காங்கிரஸ் என்ற அந்த அமைப்பில் முன்னணி வகித்தவர்கள் தமிழர்கள். தமிழர்களின் தெளிவான வேண்டுகோளுக்கு இணங்க மகாத்மா காந்தி இலங்கைக்கு வருகை தந்து கொக்குவில் உட்பட 7 இடங்களிலே கூட்டங்கள் வைத்து இலங்கைக்குச் சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்ற கருத்தை மகாத்மா காந்தி பேசுவதற்கு தளம் அமைத்துக் கொடுத்தவன் தமிழன்.
தமிழனுக்கு இருக்கிற உணர்வுகூட சிங்களவனுக்கு இல்லையே என்று அப்போது காந்தி சொன்னாராம். அப்படியான நிலையிலே வாழ்ந்தவர்கள் நாங்கள்.

ஆய்வாளர் திருநாவுக்கரசர் சொன்னது போல், இந்தியாவுடன் தமிழ் மக்கள் தொடர்புகொண்டமையால்தான் ஆங்கில அரசு தமிழ் மக்களைக் கைவிட்டு சிங்களவர் பக்கம் சாய்வது என்ற முடிவு கூட வரலாற்றில் எடுக்கப்பட்டிருக்கிறது.

ஆகவே இந்த விடயங்களை இந்திய ஆய்வாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். கருத்தில் கொள்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.
இன்று ஏற்பட்டிருக்கிற சூழ்நிலை விடுதலைப் போராட்டத்தின் வெற்றிக்கான சூழ்நிலை என்பது எங்களைப் பொருத்தவரையான கருத்து.
மகிந்தர் போன்றோரது செயற்பாட்டு இந்திய அரசு துணை போனால் வரலாற்றிலே தீராத களங்கம் ஏற்படும் என்பதை மகிந்தருக்கு இந்த முறை சொல்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

பேச்சுவார்த்தையிலே மகிந்தருக்கு நம்பிக்கை இல்லை. எங்களுடைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் மகிந்தரைச் சந்தித்த போது தன்னுடைய நல்லெண்ணத்தைக் காட்டவில்லை.
தொடர்ந்தும் ஜப்பானையே அவர் பேச்சுவார்த்தைக்கான இடம் என்று கூறுவதற்கு காரணம் அவர் பேச விரும்பவில்லை. இந்த நிலையில் எங்கள் மக்கள் எடுக்க வேண்டிய முடிவு என்ன என்பது அண்மைக்காலமாக எங்கள் மக்களின் செயற்பாடுகளுக்கு ஊடாக வெளிவந்திருக்கிறது.

இப்போ நிச்சயமாகத் தெரியும். புங்குடுதீவில் தர்சினி என்ற எங்கள் சகோதரிக்குச் செய்யப்பட்ட பாலியல் வல்லுறவுக் கொடுமை ஏற்கெனவே தென் தமிழீழத்தில் ஒவ்வொரு தமிழ்ப்பெண்ணிற்கும் செய்யப்பட்டிருக்கும் கொடுமைகளுக்கும் மாற்றாக அதனை உரைக்க வைப்பதற்காக தமிழ்ப் பெண்கள் மீது கைவைத்தால் என்ன நடக்கும் என்பதை வெளிப்படுத்துவதற்காக மக்கள் தாங்களாக முன்வந்து பயிற்சி பெற்று பயிற்சி பெற்ற மறுகணமே செயற்பட்டு இழிசெயலில் ஈடுபட்ட அந்த கடற்படையினருக்குத் தக்கபாடம் படைத்திருப்பதை இன்றைக்குச் செய்தியாக அறிந்தோம்.

எதையும் மூடிமறைக்க முடியாது என்பது உலகத்துக்கு நன்றாகத் தெரியும்.
தமிழ் மக்களுக்குச் செய்யப்பட்ட கொடுமைகளை இத்தனை காலம் மூடி மறைத்தது போல் இனிமேல் மூடிமறைக்க முடியாது. அப்படிச்செய்யவும் இயலாது. இந்த அடிப்படையில் இந்தியா மற்றும் சர்வதேச நாடுகள் மகிந்தரின் நாடகத்தைச் சரியாகப் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும் என்று விரும்புகிறோம்.

நாங்கள் சொல்ல வேண்டிய செய்தி..
இந்தியாவிலே மூன்றாம் தரப்பாக ஒரு சக்தி உருவெடுக்கிறது.
அந்த சக்தி எங்களுக்கு நேச சக்தி.

உரிமை கோருகிற இனங்களின் கட்சிகள் அதிகாரங்கள் கோருவது என்பது எங்களுக்கு உவப்பான செய்தி. அதை நாங்கள் ஆதரிக்கிறோம். ஆனால் தனிநாட்டுக் கோரிக்கையை அல்ல. அதேபோல் உலகத்தில் கூட மூன்றாம் தரப்பு சக்தியாக தென் அமெரிக்க நாடுகளிலே பொலிவியா, அர்ஜென்ரினா, கியூபா ஆகிய இடங்களிலே ஒரு புதிய அணி வெனிசூலா தலைமையில் உருவாகி வருவதை நாம் கவனத்தில் கொண்டு வருகிறோம்.
------------------------------------
இது உரையைப் பகிர்ந்துகொள்ளும் பதிவு மட்டுமே.
------------------------------------
நன்றி: புதினம்.

Labels: , ,

யாழில் அரசஊழியர்கள் புறக்கணிப்புப் போராட்டம்

யாழ். இராணுவ வன்முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை முதல் அரச பணியாளர்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டம் நடத்தவுள்ளனர். அது தொடர்பான விரிவான செய்தி:

யாழில் சிறிலங்கா இராணுவம் கட்டவிழ்த்துவிட்டுள்ள வன்முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை திங்கட்கிழமை முதல் அரச பணியாளர்கள் தொடர்ச்சியான பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.யாழ். மாவட்ட தமிழ்த் தேசிய தொழிற்சங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:

சிறிலங்கா அரசியல்வாதிகளின் சிங்கள பேரினவாத ஒடுக்குமுறையானது, தமிழின அழிப்பை பல்வேறு வழிமுறைகளிலும், சமாதானம் என்ற வெற்று முழக்கத்தை எழுப்பிக்கொண்டு பேரினவாத ஒடுக்குதலின் உச்சக்கட்டமாகிய தமிழின அழிப்பிற்கான போருக்கு மிகநுட்பமாக திட்டமிட்டு தயாராகிவிட்டது. இதன் முதற்கட்டமாக கொடுமையான வன்முறைகளை தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடுவது அன்றாட நிகழ்வாகிவிட்டது.

தாமே உறுதிப்படுத்திய போர்நிறுத்த உடன்படிக்கையை முழுமையாக அமுலாக்காமல் விடுவது சிறிலங்கா அரசாங்கத்தின் வஞ்சகமான தந்திரமாகும். அத்துடன் பேரினவாத்திற்கு ஏற்ற வகையில் இராணுவ நோக்கில் தமக்கு சாதகமாக உடன்படிக்கையை வளைத்து விடவும் திட்டமிடப்படுகின்றது. போர்நிறுத்த உடன்படிக்கையின் அடிநாதமாக விளங்குவது மக்களது இயல்பு வாழ்க்கையே.

இதனை எவ்வகையிலும் சிதைத்து தமிழ்மக்கள் மீது வன்முறைகளையும், அச்சுறுத்தலையும் பிரயோகிப்பது தமிழ்மக்கள் மீதான போரின் முதற்கட்டமாகும்.புரிந்துணர்வு உடன்படிக்கையின் பின், நிழலாகத் தொடர்ந்த தமிழின விரோதக் செயற்பாடுகள், தமிழர் தாயகமெங்கும் இராணுவ வன்முறை வெளிப்பாடாக வெளிவரத் தொடங்கியுள்ளன. கீழே தரப்படும் சம்பவங்கள் பேரினவாதத்தின் கொடுரத்தை தெளிவாக்குகின்றன.

  • அண்மையில் புத்தூர் கிழக்கில் குடும்பப் பெண் மீதான படையினரின் பாலியல் வல்லுறவுக்கான முயற்சியும் அதனைத் கண்டித்த அப்பாவி மக்கள் மீதான தாக்குதலும்.
  • நீர்வேலியில் விவசாயிகள் இருவர் கொல்லப்பட்டமை.
  • தேசப்பற்றும் சமூகப்பற்றும் கொண்ட வீடியோ கடை உரிமையாளர் உட்டபட கல்லூரி அதிபர்கள் இருவர் கொல்லப்பட்டமை.
  • மிருசுவிலில் சிறுமி மீதான பாலியல் முயற்சி.
  • புங்குடுதீவில் தர்சினி என்னும் இளம்பெண் கொடுரமாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, குதறப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை.
  • இப்பெண்ணின் உறவினருடன் பெற்றோருக்கு ஆதரவு கூற செல்ல முயன்ற பல்கலைக் கழக மாணவர்கள் மீது மிருகத்தனமான தாக்குதல்.
  • பல்கலைக்கழகச் சூழலில் படையினர் குவிக்கப்பட்டு பொது மக்களும் மாணவர்களும் தாக்கப்படுதலை கண்டித்து போர்நிறுத்தக் கண்காணிப்பு குழுவிவிடம் முறைப்பாடு செய்ய அமைதியான முறையில் ஊர்வலத்தில் சென்ற யாழ். பல்கலைக்கழக உபவேந்தர், பீடாதிபதிகள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், பணியாளர்கள், மாணவர்கள் மீதான காட்டுமிராட்டித்தனமான தாக்குதலையும், துப்பாக்கிச்சூட்டினையும் படையினர் மேற்கொண்டமை.
  • ஊடகவியலாளர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் (இதே நாளன்று இனவெறி கொண்ட சிங்களத் தேசப்பற்றாளர் இயக்கம் விடுதலைப் புலிகளை ஐரோப்பிய ஒன்றியம் தடைசெய்ய வேண்டும் என்று கூறி கொழும்பில் நடாத்திய ஊர்வலத்திற்கு படையினர் ஒத்துழைப்பையும் பாதுகாப்பினையும் வழங்கியமை குறிப்பிடத்தக்கது).
  • இதற்கு அடுத்த நாள் படையினரும், காவல்துறையினரும் அத்துமீறி நுழைந்து விரிவுரையாளர்கள், ஊழியர்கள் மாணவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டு துப்பாக்கிச் சூடு நடாத்தியமை.
  • முச்சக்கர வண்டி உரிமையாளர்கள், சாரதிகள் மீது யாழ் நகரத்தில் படையினர் மேற்கொண்ட தாக்குதல், அவர்களுடைய வாகனங்கள் நொறுக்கப்பட்டமை.
  • தமது விளையாட்டு மைதானத்தினூடாக படையினர் பாதுகாப்பு அரணை அமைத்த போது ஹாட்லிக் கல்லுரி மாணவர்கள் கண்டனம் தெரிவித்தபோது மாணவர்கள் மீது கடுமையான தாக்குதல்கள்.
  • நல்லூர் தனியார் கல்வி நிலையத்தில் கல்வி கற்றலின் பின்னர் வீடு திரும்பிய மாணவர்கள் மீது தாக்குதல்.
  • தனியார் காணிகளின் ஊடாக வேலி பிரித்து சென்று வீடுகளில் உட்புகுந்து மோசமான முறையில் பெண்களை அவமானப்படுத்தும் வகையில் அடித்து துன்புறுத்துவதோடு அவர்களை உடற்சோதனை என்ற பெயரில் கேவலப்படுத்துவது.
  • பரவலாக யாழ். குடாநாடெங்கும் மக்ளது சுதந்திரமான நடமாட்டத்திற்கு இடையூறாக வழிமறிப்புக்கள், வீதித் தடைகள், உடற்சோதனை, தன்னிச்சையான கைதுகள், கண்மூடித்தமான தாக்குதல், துப்பாக்கிச் சூடுகள், வர்த்தக நிலையங்களை உடைத்து கொள்ளையடித்தல்.
    பணிபுரிந்து வீடு திரும்பும் ஆண் அரச ஊழியர்கள் உடற்சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டு தாக்கப்படுதல்.
  • படையினரின் இத்தாக்குதல் செயற்பாடுகளின் போது குண்டர்கள் போன்று கொட்டன்கள், சைக்கிள் செயின், கத்திகள் ஆகியவற்றுடன் முகத்தை மூடிக் கட்டிக்கொண்டு காடைத்தனம் புரிகின்றமை.
  • இராணுவ புலனாய்வுத் துறையினராலும், தேசத்துரோகக் குழுக்களாலும் திட்டமிடபட்ட வகையில் இராணுவ உயர் மட்டத்தினரின் அங்கீகாரத்துடன் நிறைவேற்றப்படுகின்ற தேசப்பற்றாளர்கள் மீதான படுகொலைகள்.

இவற்றில் இருந்து எமக்கு தெளிவுபடுவது என்னவெனில், தமிழ் மக்களை அச்சுறுத்தி அடிபணிய வைக்கலாம் என்ற தந்திரோபாயத்தை சிறிலங்கா அரசின் சார்பில் படைத்தரப்பு கையாள்கிறது என்பதாகும்.
சிறிலங்கா அரசாங்கமும், அதன் ஏவலர்களுமாகிய இராணுவக் குண்டர்களின் இச்சமூக விரோதச் செயற்பாடுகள் அனைத்துலக சமூகத்தின் முன் அம்பலப்படுத்தப்பட வேண்டியவையாகும். மக்களது இயல்பு குறித்தோ அல்லது போர்நிறுத்த உடன்படிக்கையை முழுமையாக அமுல்படுத்துவது குறித்தோ முடங்கிவிட்ட சமாதான பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிப்பது குறித்தோ சிறிலங்கா அரசாங்கத்திற்கு கிஞ்சித்தேனும் அக்கறையில்லை என்பதை அனைத்துலகத்தினது கவனத்திற்கும் கொண்டுவரவேண்டிய தேவை தமிழ்மக்களாகிய எமக்கு உள்ளது.


தமிழ்மக்கள் பாதுகாப்புடனும் கௌரவத்துடனும், சுதந்திரமாகவும், தமது வாழ்க்கையை முன்னெடுப்பதற்கு சிறிலங்கா பேரினவாதம் தடையாக உள்ளது என்பதை பாதிக்கப்படுகின்ற தமிழ் மக்களாகிய நாமே வெளிக்கொணர வேண்டும் என்ற பொறுப்பு எமக்கு உள்ளது. சிங்கள அரசினதும் அதன் படைகளினதும் இத்தகைய அராஜக செயற்பாடுகள் யாவும் இன்று இங்கு போர்நிறுத்த உடன்படிக்கை நடைமுறையில் உள்ளதா என்ற கேள்வியை மக்களாகிய எம்மிடத்தில் தோற்றுவித்துவித்துள்ளது. ஒரு சமூகத்தின் அதிஉயர் கல்வி நிறுவனமான பல்கலைக்கழத்தின் துணைவேந்தருக்கு இங்கு கௌரவமும், பாதுகாப்பும் இல்லையெனில் சாதாரண மக்களின் கௌரத்திற்கும், பாதுகாப்பும் என்ன உத்தரவாதம் என்ற நியாயமான கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது.


சிறிலங்கா இராணுவப் புலனாய்வாளர்களுடன் சேர்ந்தியங்கும், அண்டிப்பிழைக்கும் தேசத்துரோகக் குழுக்கள் எமது மண்ணில் இருந்து முற்றாக அகற்றப்படல் வேண்டும்.அத்துடன் பொதுமக்களது சுதந்திரமான நடமாட்டத்திற்கு குந்தகமாக உள்ளதால் மக்களால் வெறுக்கப்படுகின்ற இராணுவக் காவலரண்கள் நீக்கப்பட வேண்டும்.சிங்களப் படைகளின் அராஜகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க இயல்பு வாழ்க்கையையும், மனித கௌரவத்தையும் வென்றெடுக்க வேண்டும்.எமது பாதுகாப்பை உறுதி செய்யும் வரை இயல்பு வாழ்க்கைக்கு உத்தரவாதம் வழங்கும் வரை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அரச பணியாளர்களாகிய நாம் பணிப்புறக்கணிப்பினை தொடர்ச்சியாக மேற்கொள்ள உள்ளோம்.

வரும் திங்கட்கிழமை 26.12.2005 முதல் பணிப்புறக்கணிப்பினை தொடர்ச்சியாக செய்வது என்ற என்ற தீர்மானத்தை யாழ். மாவட்டத்தில் இயங்குகின்ற தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பாகிய நாம் எடுத்துள்ளோம்.இப்புறக்கணிப்பிற்கான ஒத்துழைப்பை அரச பணியாளர்கள் மற்றும் அனைவரும் வழங்குமாறு வேண்டுகின்றோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

--------------------------------------

நன்றி: புதினம்.

Labels: ,

Wednesday, December 14, 2005

தமிழின உணர்வாளர் ஆட்டோ ஆனந்தராஜ் காலமானார்.

தீவிர தமிழீழ ஆதரவாளரும், தமிழின உணர்வாளருமான திருச்சி அட்டோ ஆனந்தராஜ் ஐயா அவர்கள் இன்று காலமானார். குண்டு சாந்தன் எனப்படும் விடுதலைப்புலி சந்தேக நபருக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டுக்காக் கைதுசெய்யப்பட்டு 5 ஆண்டுகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர். பின் இரண்டரை வருட சிறைவாசத்தின்பின் வழக்கில் வென்று வெளியே வந்தவர். துணிச்சல் மிக்க உணர்வாளர். மறைந்த ஐயாவுக்கு எம் அஞ்சலிகள், அவர் குடும்பத்துக்கு எம் அனுதாபங்கள்.
-------------------------------------------------


ஆனந்தராஜ் ஐயாவின் மறைவுக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கொளத்தூர் தா.செ. மணி, வீரவணக்கம் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கை:

"பற்றுறுதிமிக்க ஒரு பெரியார் தொண்டராகத் திகழ்ந்தவர். குண்டு சாந்தனுக்கு அடைக்கலம் கொடுத்த வழக்கு நடைபெற்ற போது தன்னுடைய விடுதலைக்காக, நான் குண்டு சாந்தனுக்கு அடைக்கலம் கொடுக்கவில்லை என்று நீதிமன்றில் கூறமாட்டேன் என்று தெரிவித்ததோடு நான்தான் குண்டுசாந்தனுக்கு அடைக்கலம் கொடுத்தேன் என்று பகிரங்கமாக அறிவித்தவர் பெரியவர் ஆனந்தராஜ் ஐயா. ஏற்றுக் கொண்ட இலட்சியத்தில் உறுதியாக நின்றவர்.

"தான் பிணையில் விடுதலையான பிறகு ஊடகவியலாளர்களிடம் பேசுகையிலும் கூட, என்னுடைய வீடு என்பது தமிழின இன உணர்வாளர்களுக்கான வீடு. எத்தனை அடக்குமுறைகள் ஏவிவிடப்பட்டாலும் தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளிட்ட அனைத்து தமிழின உணர்வாளர்களுக்கும் அடைக்கலம் கொடுப்பேன் என்று பகிரங்கமாக அறிவித்தவர்.

"இந்தியத் தலைமை நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்ட போதும் கூட தனது விடுதலைப் புலிகளின் ஆதரவுச் செயற்பாடுகளை அவர் நிறுத்திக் கொள்ளவில்லை. தொடர்ந்து தம்பி பிரபாகரன் பிறந்த நாளன்று தேனிசை செல்லப்பா மற்றும் எம்மைப் போன்றவர்களை அழைத்து நிகழ்ச்சிகளை செய்து கொண்டே இருந்தார்.

"ஒரு உறுதியான இலட்சியவாதி மறைந்துவிட்டார். இன்றைய இளைஞர்களுக்கு கொள்கையில் எப்படி உறுதியாக இருக்க வேண்டும் என்று ஒரு முன்மாதிரியான வழிகாட்டியாக இருந்தவர் ஆனந்தராஜ் ஐயா. பெரியவர் ஆனந்தராஜ் ஐயாவினது மறைவுக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகம் தமது வீரவணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறது என்று அந்த அறிக்கையில் கொளத்தூர் மணி தெரிவித்துள்ளார். "

---------------------------------
நன்றி: புதினம்.

Labels: , ,

Sunday, December 04, 2005

இலங்கைத் தேர்தலில் வென்றது யார்?

ஜனாதிபதி தேர்தல் முடிவு வழங்கிய பெரு வீழ்ச்சி ரணிலுக்கல்ல, உண்மையில் மகிந்தவுக்கே உரியது.
-க.வே.பாலகுமாரன்

தொடர்புடைய அனைவரும் அதிர்ச்சியால் உறைந்து போயுள்ளார்கள். இப்படியும் நடக்குமா என ஏங்கித்தான் போய்விட்டார்கள். அடக்குமுறையாளர் கையிலிருக்கும் அனைத்து ஆயுதங்களும் ஒன்றில் பயனற்றுப் போகச் செய்யப்படுகின்றன; அல்லது அடக்குமுறையாளருக்கு எதிராகத் திருப்பப்படுகின்றன. வரலாற்றின் அபூர்வ கணங்களாக இவை பதிவாகின்றன. மானிட விடுதலையின் பால் பற்றுக்கொண்டோர் மகிழ்வடையும் காலமிது. சனநாயகம் என்பது பெரும்பான்மையோர் முடிவு என்கிற நிலைக்கப்பாலும் சென்று நாடாளுமன்றத்தையே இணக்கப்பாட்டிற்குப் பதிலாக அடக்குமுறைக்கு பயன்படுத்தியோர் தமது செயற்பாடுகள் செல்லாக்காசாகிவிட்டது கண்டு அச்சமடைகின்றனர். தீவிரவாதம், பயங்கரவாதம் எனத் தந்திரமாக வடிவமைத்து விடுதலைப் போராட்டங்களை திசை திருப்ப அல்லது மென்மைப்படுத்த சனநாயக வழி முறைகளை நம்பிய மேற்குலகிற்கோ இதுவொரு சவாலாகிவிட்டது. தமிழீழ மக்கள் இது வரை தமது மனப்பொந்தில் அணையாது காத்த தீப்பொறியைப் பற்றவைத்துவிட்டார்கள். அடைந்த அனை த்து அவமானங்களையும் துடைத்தெறிந்து சம்பந்தப்பட்டோருக்கு கடும் தண்டனையும் பாடங்களையும் வழங்கிவிட்டார்கள். ரணிலுக்கு மட்டுமல்ல, மகிந்தருக்கும் தோல்வியையே எம் மக்கள் தம் வாக்குகளால் வாக்களியாது வாக்களித்துவிட்டார்கள். எனவே, வென்றவரும் எம் மக்கள் முன் தோற்றவராகிவிட்டார். எவ்வாறு நோக்கினும் வரலாற்றில் முதன்முறையாக தமிழீழ மக்களே இத்தேர்தல் முடிவுகளை தீர்மானித்துள்ளனர்.


ஒருமுறை மேலோட்டமாக சிறீலங்காவின் ஐந்தாவது சனாதிபதித் தேர்தல் முடிவுகளை நோக்கலாம். 1 கோடியே 33 இலட்சத்திற்கு மேற்பட்ட வாக்காளர்களில் 73.74 விழுக்காடு அதாவது, 98 இலட்சத்திற்கு மேற்பட்டோர் வாக்களித்தனர். மகிந்தர் 50.29 விழுக்காடு வாக்குகளையும் ரணில் 48.40 விழுக்காட்டளவு வாக்குகளையும் பெற்றனர். வெற்றியின் மயிரிழை இடைவெளி வெறுமனே ஒரு இலட்சத்து எண்பத்தாறாயிரம் மட்டுமே. (இதுவரை நடைபெற்ற சனாதிபதித் தேர்தல்களில் மிகக் குறைவாகப் பெறப்பட்ட பெரும்பான்மையிது) யாழ். தேர்தல் மாவட்ட வாக்களிப்பு 1.21 விழுக்காடு, முல்லைத்தீவில் எவரும் வாக்களிக்காத போதும் வெலிஓயா சிங்களவர் வாக்கும் சேர்க்கப்பட்டதால் 891 வாக்குகள் பதிவாகின. வன்னித் தேர்தல் மாவட்டத்தின் வாக்களிப்பு 34.30 விழுக்காடாகவும், மட்டக்களப்பில் 48.51, திருமலையில் 63.84, திகாமடுல்ல எனச் சிதைக்கப்பட்ட அம்பாறையில் 72.70 விழுக்காடாகவுமுள்ளன. திருமலையிலும் அம்பாறையிலும் தமிழ்மக்கள் வாக்களிக்காத நிலையிலும் வாக்களிப்பு விழுக்காடு கூடுதலாக இருப்பதற்குக் காரணம் தெரிந்ததே. சிங்களக் குடியேற்றங்களால் சிதைந்த தமிழரின் சனத்தொகைப் பரம்பலின் பாதக நிலையிது.

ஒரு சாதாரணமான சனாதிபதித் தேர்தலின் முடிவுகள் வரலாற்றினையே திருப்பிப் போடுமளவிற்குப் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தப்போகும் நிலையில் மிக நீண்டகாலத்திற்கு எதிரொலிக்கப்போகும் முடிவிது. தாமாகப் போடுவார்கள் என எண்ணிய கட்சியும் போடாவிட்டாலென்ன என எண்ணிய கட்சியும் மனம் புகைந்த நிலையை தேர்தல் முடிவுகள் உருவாக்கிவிட்டன. சமாதானம், பேச்சு என்கிற சிறு சீசாவிற்குள் தமிழ்மக்களது விடுதலையுணர்வினை அடைத்துவிட்டோம். எனவே, வெற்றுக் காசோலையில் போட்ட கையெழுத்தாக தமிழ்மக்கள் வாக்குகள் பற்றி கனவிலிருந்தார் ரணில். அக்கனவை நனவென நினைத்து புலிக்கும் யானைக்கும் இரகசிய தொடர்பென கதைவிட்டார் மகிந்தர். (எது எப்படியானாலும் சென்ற சனாதிபதி தேர்தலில் (1999) 36 இலட்சம் வாக்குகள் (42.71%) பெற்ற ரணில் இம்முறை அதிகமாக மடக்களப்பில் 79.51%, அம்பாறையில் 55.81%, திருமலையில் 61.33%, கண்டியில் 54.33%, நுவரெலியாவில் 70.37% எனப் பெற்றதற்கு யார் காரணம் என்பது புள்ளிவிபரம் தரும் தகவல்) இவ் வாக்குகளும் கிடைக்காவிட்டால் ரணிலின் வீழ்ச்சி எவ்வளவு மோசமானதாக இருந்திருக்கும். இருந்தும் இத் தேர்தல் தனக்கு மணிமகுடம் சூட்டும் என எதிர்பார்த்தவருக்கு கிட்டியது முட்கிரீடமே. அவரது அரசியல் வாழ்வு மட்டுமல்ல, சேனநாயக்க/ ஜே.ஆர். குடும்ப ஆட்சியும் அஸ்தமனமாகிவிட்டது. உடனடியாகவே ரணிலின் கையாளான கட்சித் தலைவர் மலிக் பதவி விலகிவிட்டார். இனி பதவி விலகல் அங்கு தொடர்கதை. ஆகவே, ரணிலின் வீழ்ச்சியென்பது குறிப்பதென்ன?

சமாதானம், இயல்பு நிலையென கதையளந்து மேற்குலகம் என் பக்கம், இந்தியப் பின்புல ஆதரவென பயம் காட்டி மிக நவீன அரசியலுதவிகள்/ அழுத்தங்கள் என்பவற்றினைப் பிரயோகித்து மேட்டிமைக் குடும்பத்தின் வலுவாக்கல் கோட்பாட்டிற்கு வீழ்ச்சி- எமது தாயகத்தின் அரிய வளமிக்க தாய் நிலங்களை விழுங்கி ஏப்பமிட்டு சிங்கள மயமாக்கிய நில அபகரிப்பிற்கும், தந்திரத்திற்கும் இனப்படுகொலைகளை மகிழ்ச்சியோடு ஏவி வெலிக்கடையில் குட்டிமணியின் தமிழ்க் கண்களை குதறி, இந்தியப் படைகளை ஏவி எம் மக்களை கொன்றொழித்து குமரப்பா, புலேந்திரன் தொட்டு ஈழத்தின் இமயம் திலீபன் வரை தேசிய விடுதலை வீரரின் வீரச்சாவுகளுக்கு வினை விதைத்து வெறியாட்டம் போட்ட கொடுமைக்கும் குரூரத்திற்கும் வீழ்ச்சி என நீளும் இவ் வீழ்ச்சிக் கதை முடிவிலி.

ஒரு கணக்கு- நெடுநாள் கணக்கு எம் மக்களால் தீர்த்தாகிவிட்டது. இன்னொரு கணக்குத் தீர்க்கப்பட வேண்டியுள்ளது. இத் தேர்தல் முடிவு உண்மையில் வழங்கியது ரணிலுக்கல்ல பெரு வீழ்ச்சி. அது மகிந்தருக்கே உரியது. இற்றைவரையான எம் மக்கள் மீதான அனைத்து அடக்குமுறைகளினதும் திரட்சியின் பிணச்சுமையைத் தாங்கத் தாமாகவே முன்வந்த மகிந்தர் இவற்றிற்கான கணக்குகளைத் தீர்க்கும் போது அதனையேற்கப் போகின்றார். அதாவது, தன் முன்னோர் விதைத்த வினைகள் யாவற்றிற்குமான மொத்த அறுவடையைச் செய்ய ஆயத்தமாகின்றார். அவசரம், அவசரமாக எங்கே பதவி பறிபோய்விடுமோ என்கிற அச்சத்தில் பதவியேற்று மகிந்த அப் பதவியை மாதக்கணக்கிலல்ல, நாட்கணக்கிலல்ல மணித்துளிக் கணக்கில் காக்கும் நிலையிலுள்ளார். ஏதோ எதிர்க்கட்சித் தலைவர் பதவியேற்றது போல அவரது கட்சியின் ஆட்களே விரட்டப்படுகின்றனர். நாம் ஏலவே விடுதலைப்புலிகள் ஏட்டில் குறிப்பிட்டது போலவே பண்டா குடும்பத்திற்கெதிரான ராஜபக்ஷ குடும்ப ஆட்சியை முன்னிறுத்த வந்தவர் "சேனா"க்கள் நாயக்க, "பண்டாக்கள்" நாயக்க குடும்ப ஆட்சிக்கு குழி தோண்டிய பின் செய்யப்போவதென்ன?

சிங்களத்திலே தனது குடும்ப ஆட்சியைத் தொடங்கும்போதே அதன் வீழ்ச்சியையும் கூடவே உறுதிப்படுத்திய மகிந்தர் எப்படியான அரசியல்வாதி? அவரது தளம், பலம், வெற்றி எல்லாமே அவருக்கு மட்டுமே உரியதல்ல. அது ஜே.வி.பி.யினருக்கும் பொதுவானது. ஒரு உறையில் இரு வாட்களா? முதலில் எவர் வாளை உருவக்கூடும்? அவ்வாறு உருவும் போது உருவாகப்போகும் கொந்தளிப்பிற்கு வரலாறு பின்னால் என்ன பெயர் சூட்டும்? கிளர்ச்சியா? புரட்சியா? சதிப்புரட்சியா? உள்நாட்டுப் போரா? மூன்றாவதும் இறுதியுமாக தன் புதல்வர்களான ஜே.வி.பி. மீதான சிங்கள ஆட்சியமைப்பின் பலியெடுப்பா? ஜே.வி.பி.யினரின் கதை முடிவா? புதிய தொடக்கமா? சிங்களத்தில் அமைதி காக்கவென தலையீடுகள் நிகழுமா? நாமொன்று மட்டும் கூறமுடியும். ராஜபக்ஷ குடும்ப வீழ்ச்சியாக மட்டும் இந் நிகழ்வு அமையப்போவதில்லை. முழுச் சிங்களக் குடும்பங்களுக்குமே இது வீழ்ச்சியாகும். இங்கே நாம் சாபமூட்டவில்லை. கலம்பகமும் பாடவில்லை, வரலாற்றின் தருக்க விதிகளின் இயக்கத்தை உணர்த்தி மட்டும் நிற்கின்றோம்.

இரு வேறு தேசங்களின் அடிப்படைப் பகை முரண்பாடுகள் உச்ச அளவிற்குக் கூர்மையடைகின்றன. அவை முற்றி வெடிக்கும் போது விளையும் விளைபொருட்கள் வெவ்வேறாகின்றன. சிங்களத்தில் அது வேறாகவும் தமிழீழத்திலோ அது வேறாகவும் அமையும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக தமது அடிப்படை பகை முரண்பாடுகளை இன்னமும் சிங்களம் சரியாக இனங்காணவில்லை. மகிந்தர் எவ்வாறு வென்றார்? சிங்கள மக்களின் கும்பி கொதிக்கின்றது. அதனைத் தணிவிக்க வேண்டும் என்கிற உண்மையையும் (இந்தளவில் இது முற்போக்கான தேசியமே) ஆனால், அதேவேளை பேரினவாத, அடிப்படைவாத சிந்தனைகளின் விளைவாக தமது இயலாமையை, பதவியாசையை மறைக்க, திசை திருப்ப தமிழரை பகடையாக அவர் பயன்படுத்தியது வரலாற்றின் மிகப் பாரிய தவறாகப் போகின்றது. (மகிந்தரது வாக்கு வங்கி- கம்பஹாவில் 54.70%, காலியில் 58.41%, மொனறாகலையில் 57%, மாத்தறையில் 61.85%, அம்பாந்தோட்டையில் 63.43%) இந்தளவில் அவர் "தவறான சுவரில் சாத்தி வைக்கப்பட்டுள்ள ஏணி." இப் பாரிய சிக்கலை ஆய்வாளர் மு.திருநாவுக்கரசின் வார்த்தைகளில் சொல்ல விரும்புகின்றோம். மிக விரைவில் வெளிவந்து மிகப் பரபரப்பைத் தோற்றுவிக்கப் போகும் "இலங்கை - 2007" என்கிற நூலிலிருந்து அவரது அனுமதியோடு சில வரிகள், "காலத்திற்குக் காலம் இலங்கை அரசியலானது நரபலியெடுக்கும் தன்மையைக் கொண்டுள்ளது. அந்த நரபலி ஒரு பொருளாதாரப் பொறிமுறையிலிருந்து பிறக்கின்றது." இங்கேயுள்ள முக்கிய பட்டறிவு என்னவென்றால், அது தமிழரை பலியெடுக்க முடியாவிட்டால் சிங்களவரை பலியடுக்கும் என்கிற முக்கிய தகவலை நூலாசிரியர் விளக்கியமை தான். இங்கே பல வினாக்கள் வாசகர் மனதிலே எழும். சிங்களத்திற்கும் தமிழீழத்திற்குமான அடிப்படை பகை முரண்பாடு எப்போது தீர்க்கப்படும்? அதேபோல் சிங்களவரும் சிறீலங்கா ஆட்சியாளர்க்குமான முரண்பாடு எப்போது தீர்க்கப்படும்? எது முந்தும்? எது பிந்தும்? இரண்டும் சம காலத்திலா? இக் கேள்விகளுக்கான விடை அனைத்தையும் இலங்கைத்தீவின் தீர்மானிப்பாளரும் தமிழீழத்தின் நம்பிக்கைப் பொறுப்பாளருமான ஒருவரிடம் விட்டு விடுகின்றோம். "எல்லோருக்கும் விழிகள் உண்டு உலகினைப் பார்க்க, ஆனால், ஒரு சிலருக்கு தரிசனமுண்டு காலத்தினைக் கடந்து உலகினைப் பார்க்க." எனக் கவிஞர் மு.பொ. பாடிய அந்த ஒருவரின் (நன்றி:விடுதலைப் பேரொளி) முடிவுகளை அறிய முயல்வதே எம்மாலியன்றது.

இது கட்டுரையின் இறுதிப்பகுதி. வாக்களிக்காமல் வாக்களித்த எம் மக்கள் உலகிற்குச் சொல்லும் "வாக்குகள்" எவை? முதலில் சிங்களத்தாருக்குக் குறிப்பாக, ஜே.வி.பி.யினருக்கு - "வரலாறு தரும் வாய்ப்பைத் தவறவிட்டு விடாதீர்கள்" உங்களது நல் வாழ்விற்கு எவர் எதிரியோ அவரே எமக்குமான பொது எதிரி. உங்களது வாழ்வை அபகரித்த நில பிரபுத்துவ, முதலாளிய, மேட்டிமைத்தன குடும்பக்குழு ஆட்சியாளரே எம்மையும் ஒடுக்கினர். ஒரு குடும்பக்குழு இப்போது அஸ்தமனம் கண்டுள்ளது. மறு குடும்பக் குழுவோடு கூட்டுச் சேர்ந்திருப்பது ஆட்சியதிகாரத்தினைப் பங்கு போடவா? அல்லது கூடவிருந்து குழிபறிக்கவா? தெளிவாக தீர்மானித்தால் நிழற்றிரை அகலும். இயலாமையால் திசை திரும்பலை. பதவியாசையைப் பற்றி நின்றால் விளைவது "நரபலியே". தமிழர் தலையை உருட்டுவதை இனிமேலாவது விட்டு விடுங்கள்.

அதுபோலவே ஏனைய எம் தமிழ் பேசும் மக்களின், மலையக மக்களின் தலைமைகளுக்கு தமிழ்மக்கள் கொடுக்கும் வாக்கு சற்றுக் கடுமையானது. எமக்குமான உங்கள் எல்லாருக்குமான பொது எதிரியை பலமிழக்கச் செய்து வீழ்த்தும் போது முண்டுகொடுக்க முற்படாதீர். உங்கள் சூழல், இருப்பு, சனநாயக செயற்பாட்டில் வேறு தெரிவின்மை என்பதை நாம் புரிந்தாலும் இலக்குகளைக் கைவிட்டும் சொந்தநலன் கருதியும் தடம்புரள்வது இறுதியில் கசப்பான பாடங்களையே கற்றுத்தரும். இனிமேல் நிகழவிருக்கும் புதிய பரிமாணத்தினைப் புரிந்து கொள்ளுங்கள்; அரசியல் நுண்ணுணர்வுடன் நிகழ்வதை அவதானியுங்கள். தன்னலமின்றி பொறுமையுடன் செயற்படுங்கள்.

இறுதியாக சர்வதேசத்திற்கும் எம் மக்கள் வாக்கொன்று சொல்கிறார்கள். ஆளும் தரப்பு ஒத்துழைக்காத அபூர்வமான அமைதி முயற்சியில் ஈடுபட்டிருக்கும் நீங்கள் முன்னர் இந்தியாவினை/ அதன் படையை ஜே.ஆர். கையாண்ட கதை (நடுவரை ஆடும் தரப்பாக மாற்றிய கதை)யை அறியுங்கள். தமிழ் மக்களை கொன்றொழிக்கவும், அவர்கள் அடிப்படை உரிமைகளைப் பயங்கரவாதத்தின் பெயரால் உங்களைக் கொண்டுவித்து மறுக்கவும் பயன்படும் பகடையாகாதீர். போகிற போக்கில் உங்கள் முதுகுகளுக்குப் பின்னால் சிங்களத்தில் உருவாகும் பேரினவாத, இனவெறி பிடித்த, மத அடிப்படைவாதம் வளர்வதை அவதானியுங்கள். இன்றேல் அமைதி முயற்சிகள் இருந்த அமைதியினையும் குலைத்தன என்கிற பழியே மிஞ்சும்.

இவை தான் வாக்குகள். எங்கள் அன்பிற்குரியவர்களே, தேர்தல் புறக்கணிப்பென தமிழீழ மக்கள் வீசிய சாட்டை எவரெவர் முதுகில் பட்டதோ அவரவர் உணரவேண்டியது;
வலியையல்ல
வரலாற்றின் தீர்ப்பை.
-------------------------------------------
ஆக்கம்: க.வே.பாலகுமாரன்.
மூலம்: தினக்குரல்.

Labels: ,

Friday, December 02, 2005

இலங்கைத் தேர்தலும் தமிழர்களும்.

நடந்து முடிந்த சனாதிபதித் தேர்தலின் வடக்கு, கிழக்கின் தமிழ் மக்கள் முன்னெப்போதையும் விட முக்கியமான சில விடயங்களைச் சாதித்துள்ளனர். அவர்களது பகிஷ்கரிப்பின் காரணமாகவே சொற்பளவு வாக்கு, விகிதத்தில் மகிந்த ராஜபக்‌ஷ வெற்றி பெற்றார். இதற்காக அவர் வடக்கு கிழக்கின் தமிழருக்கு நன்றியுடைவராக இருப்பாரென்று யாரும் எதிர்பார்க்க முடியுமா? அவர் எத்தனையோ பேருக்கு எத்தனையோ வழிகளில் கடமைப்பட்டிருக்கிறார். எல்லாருக்கும் எத்தனையோ வாக்குறுதிகளைக் கூசாமல் வழங்கியிருக்கிறார். அவருடைய வெற்றி அமோகமானது இல்லை என்பது அவர் அறிந்த விடயமாகவே இருப்பதால் மிகவும் கவனமாகவே நடந்து கொள்ள வேண்டிய கட்டாயம் அவருக்கு உள்ளது.

வடக்கு-கிழக்கு மக்களின் பகிஷ்கரிப்பால் மிகவும் கசந்து போனவர்கள் ரணில் விக்கிரமசிங்கவும் அவருடைய கட்சியினரும் மட்டுமல்ல. விடுதலைப் புலிகள் அவர்கட்கு எந்த விதமான கடப்பாடும் உடையவர்கள் அல்ல என்பதை அவர்கள் நினைவிலிருத்த வேண்டும். கருணா குழுவினரின் விலகலும் விடுதலைப் புலிகளுடனான மோதலும் ரணில் விக்கிரமசிங்கவின் உபயம் என்பதை நவீன் திஸாநாயக்கவும் மிலிந்த மொறகொடவும் அம்பலமாக்கிய பின்பு, ரணில் விக்கிரமசிங்கவால் மனவருத்தம் தெரிவிக்க முடிந்ததேயொழிய மறுக்க முடியவில்லை. ஒரு முறைக்கும் பலமுறை அவசரகாலச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டபோதெல்லாம் தவறாமல் ஆதரித்துக் கையுயர்த்திய கட்சி தான் யு.என்.பி. அக் கட்சியினர் எந்த முகத்தைக் கொண்டு தமிழ் மக்கள் தங்களைக் கைவிட்டு விட்டனர் என்று சொல்ல முடியும்?



ஆறுமுகன் தொண்டமானுக்கு நாட்டை ரணில் ஆண்டாலென்ன ராஜபக்‌ஷ ஆண்டாலென்ன, அவர் கேட்கிற கப்பத்தை எந்த விதத்திலாவது தந்துவிட்டால் போதும், பாராளுமன்றத்தில் போதியளவு ஆசனங்களைப் பிடிப்பதற்கு மேலாக அவருக்கு எந்தவிதமான கொள்கைப் பிரச்சினையும் இல்லை. ரவூஃப் ஹக்கீம் முதலாக கிழக்கு மாகாண முஸ்லிம் அரசியல் கழைக்கூத்தாடிகள் எல்லாருக்கும் இந்தத் தேர்தல் முடிவைத் தமிழ் மக்களின் பகிஷ்கரிப்பு இப்படி மாற்றிவிட்டதே என்ற கவலைக்கு நியாயமில்லை. எல்லாருக்கும் எப்படி எப்போது மனம் மாறுகிறது என்பதை அறிய வேண்டின் திரை மறைவில் எத்தனை தரகு வேலைகளும் பேரங்களும் நடக்கின்றன என்பதை நாம் அறிய வேண்டும்.

விடுதலைப் புலிகளை விடத் தீவிர விடுதலைப் புலியாகத் தன்னைக் காட்டிக் கொண்டு வருகிற சந்திரசேகரனுக்கு தேர்தலைப் பற்றி தாம் அக்கறையில்லை என்ற விடுதலைப் புலிகளின் பிரகடனம் பெரிய பிரச்சினையாயிருக்கவில்லை. என்றாலும் யு.என்.பி.யை ஆதரிக்கின்ற அவரது முடிவை ஒரு அரசியல் நெருக்கடி ஆக்குகிற விதமாக நவீன் திஸாநாயக்க பேசிய பின்பு, அதிலிருந்து தன்னை மீட்கும் நோக்கத்துடன் வன்னிக்குத் தூது போனார்.

வெறுங்கையுடன் மீண்டதும் போதாமல், இத்தேர்தலில் இலங்கையின் தமிழ் மக்கள் எவருக்கும் அக்கறை இருக்க நியாயமில்லை என்ற நிலைப்பாடு உறுதியாகத் தெரிவிக்கப்பட்ட பின்பு மேலும் சங்கடமாகி விட்டது. எனவே, அந்தத் தகவலை மறுத்ததும் போதாமல், தான் யு.என்.பி.யை ஆதரிப்பதை விடுதலைப் புலிகள் வரவேற்கிறதாகவும் ஒரு கதையைப் பரப்பினார். கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் என்பார்கள். சந்திரசேகரனுடைய புளுகு அதை விட வேகமாக விடுதலைப் புலிகளின் முழுமையான புறக்கணிப்பின் மூலம் அம்பலமாகிவிட்டது.



சில தமிழர் தேசியக் கூட்டணிப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடைசிவரை ஒரு நப்பாசை இருந்தது. எனினும், பதினான்காம் திகதியுடன் தமிழ்த் தலைவர்கள் யாரையும் ஆதரிப்பதில்லை என்ற முடிவை அதிகார பூர்வமாக வெளியிட்ட பின்பு இவர்களுக்குச் சங்கடமாகிவிட்டது.
முற்குறிப்பிட்டவர்களுடைய ஆதங்கங்கள் எல்லாம் ஏதோ தேவை கருதி நேரடியாக யு.என்.பி.யு.டன் தங்கள் நலன்களை நெருக்கமாகப் பிணைத்துக் கொண்டவர்களுடைய கவலைகளுடன் தொடர்புடையவை. தெற்கில் வாழ்கின்ற தமிழ் மக்களில் ஒரு பகுதியினரிடையே ஜே.வி.பி. பற்றியும் ஹெல உறுமய பற்றியுமான அச்சங் காரணமாக யு.என்.பி. பற்றியும் குறிப்பாக ரணில் விக்கிரமசிங்க பற்றியுமான நம்பிக்கை அல்லது ஏதோ வகையான எதிர்பார்ப்பு வளர்ந்துள்ளது. யு.என்.பி.யின் பேரினவாதத்தின் நீசத்தனம் இன்னமும் மாறவில்லை என்பதும் யு.என்.பி.யினுள்ளே இருக்கிற சில பேரினவாதிகள் நவீன் திஸாநாயக்கவை விட மோசமான இனத்துவேசிகள் என்பதும் ரணில் விக்கிரமசிங்கவின் ஆசிகளுடனேயே விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைகள் வேண்டுமென்று இழுத்தடிக்கப்பட்டு முடிவுகள் செயலற்றுப் போயின என்பதும் சில வேளைகளில் நம் நினைவுக்கு வருவதில்லை. 1958, 1977, 1983 ஆகிய ஆண்டுகளில் இனக் கலவரங்களில் யு.என்.பி.யின் பங்கு பெரியது. தேசிய இனப்பிரச்சினை திட்டமிட்டே போராக்கப்பட்டது யு.என்.பி.யின் கீழேயே தான்.

சந்திரிகா குமாரதுங்கவோ புதிய சனாதிபதி ராஜபக்ஷவோ எவ்வகையிலும் ரணில் விக்கிரமசிங்கவை விடத் தமிழ் மக்களின் தேவைகள் பற்றியோ உரிமைகள் பற்றியோ பாதுகாப்புப் பற்றியோ பெரிய அக்கறை கொண்ட தலைவர்களல்ல. பேரினவாதமும் முதலாளி வர்க்க நலன்களுமே இவர்கள் எல்லாரையும் வழிநடத்துகின்றன. எனவேதான், இந்தத் தேர்தல் தமிழ்த் தேசிய இனத்தைப் பொறுத்தவரை, எந்தவிதமான பயனும் முக்கியத்துவமும் இல்லாதது என்ற நிலைப்பாடு சரியானது. அதிலும் முக்கியமாக முஸ்லிம்களுக்கும் மலையகத் தமிழ் மக்களுக்குங் கூட யார் சனாதிபதியானாலும் அவர்கள் முகங்கொடுக்கின்ற பிரச்சினைகள் தீரப்போவதில்லை என்று துணிந்து கூறியிருக்க முடியும். சிங்கள மக்களும் எதுவித நன்மையும் காணப்போவதில்லை.

இன்னொரு கோணத்திலிருந்து பார்த்தால், ராஜபக்‌ஷவைப் பதவிக்குக் கொண்டு வந்தளவு சிறிய பெரும்பான்மையுடன் தமிழ் மக்களின் ஆதரவுடனோ இல்லாமலோ , ரணில் விக்கிரமசிங்க வென்றிருந்தால், மகிந்த ராஜபக்‌ஷவின் பலவீனமான வெற்றி பற்றி அவர் சொல்வதுபோல், சிங்கள மக்களின் ஆதரவு இல்லாமல் அவர் பெற்ற வெற்றி பற்றி மறுதரப்பினர் பேசியிருக்க முடியாதா? தேசிய இனப்பிரச்சினையின் தீர்வுக்கு அந்தப் பலவீனமான வெற்றி ஒரு முட்டுக்கட்டையாகியிராதா? அநேகமாகத் தமிழ் மக்களுக்குத் திருப்தியில்லாத ஒரு தீர்வைத் திணிப்பதற்கு யு.என்.பி. சிங்கள மக்களின் ஆதரவின்மையை ஒரு வசதியாக்கியிருக்கும். இந்தோனேசியாவின் அச்சே மாகாண விடுதலை இயக்கத்தை நிராயுதபாணியாக்கி ஒரு தீர்வைத் திணித்தது போல இங்கேயும் செய்வதுதான் பேரினவாதிகளதும், அவர்கள் அந்நிய எசமானர்களதும் எண்ணம். அதில் தமிழ் மக்கள் மண்விழுத்தி விட்டார்கள்.

இந்தப் பகிஷ்கரிப்பின் வெற்றியைப் பஃப்ரல் என்கிற `சுதந்திரமான தேர்தல்' என்.ஜி.ஓ.வால் சீரணிக்கமுடியவில்லை. அதன் சார்பில் பேசிய பாக்கியசோதி சரவணமுத்து வடக்கில் வன்முறை மூலமே பகிஷ்கரிப்பு இயலுமானது என்ற தொனிப்படப் பேசியிருக்கிறார். அவர் மட்டுமன்றி, அண்மைக் காலங்களில் விடுதலைப் புலிகளுக்குக் கொஞ்சம் அனுதாபமாகப் பேசி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு திரட்ட முயன்ற என்.ஜி.ஓ.நிறுவனங்களைச் சேர்ந்தோரும் வடக்கு, கிழக்கில் மக்கள் வாக்களிக்காததை சனநாயக உரிமை மறுப்பு என்று பேசியிருக்கிறார்கள்.
யாழ்ப்பாணத்தில் தபால் வாக்களிப்பே மிகக் குறைந்த அளவில் நடந்துள்ளது. இது மிரட்டல் மூலம் நடத்தக்கூடிய ஒரு புறக்கணிப்பல்ல. தமிழ் மக்கள் நிர்ப்பந்தம் இல்லாமல் வாக்களிக்கக்கூடிய விதமாக அரச கட்டுப்பாட்டிலிருக்கிற பல வேறு நகரங்களிலும் தமிழ் மக்கள் பங்குபற்றாமலே இருந்துள்ளனர். எனவே, தமிழ் மக்களின் சனநாயக உரிமை மறுக்கப்பட்டது என்பது உண்மையல்ல. மாறாக, அது மிகச் சரியாகவும், முழுமையாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதே உண்மை.

மதச் சுதந்திரம் என்பது எந்த ஒரு மதத்தையும் பின்பற்றும் சுதந்திரம் மட்டுமல்ல, அது எந்த ஒரு மதத்தையும் பின்பற்றாமல் இருக்கும் சுதந்திரமும் ஆகும். ஏதாவது ஒரு மதத்தை ஏற்றேயாக வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது எந்தளவு பெரிய உரிமை மறுப்போ, அதேயளவு பெரிய உரிமை மறுப்புத்தான் விரும்பாத ஒருவருக்கு வாக்களிக்குமாறு கட்டாயப்படுத்துவதும்.

தமிழ் மக்களின் முக்கியமான சாதனை, இந்தத் தேர்தலில் அரசியல் வெறுமையை உலகுக்கு உணர்த்தியது மட்டுமல்ல. யு.என்.பி. யைத் தெரிவு செய்யுமாறு தூண்டும் விதத்தில் அமெரிக்காவின் தலைமை பேசி வந்ததற்குத் தகுந்த ஒரு மறுமொழியைக் கூறியுள்ளதுமாகும். ஒரு அரசியற் கட்சி என்ற முறையில் பகிஷ்கரிப்பு ஆலோசனையை முதலில் முன்வைத்த பெருமை புதிய ஜனநாயகக் கட்சியினது. வேறு காரணங்களாலேனும் அதன் பெறுமதியை உணர்ந்து தமிழ் மக்கள் நடுவே யு.என்.பி. யையும் ரணில் விக்கிரமசிங்கவையும் பற்றிப் பரப்பப்பட்ட மாயையும் ஊடகப் பிரமைகளையும் விளம்பர மோசடிகளையும் மறுக்குமாறு தமிழ் மக்களை கேட்டுக் கொண்ட அத்தனை தமிழ் அரசியல் தலைவர்களும் பாராட்டப்பட வேண்டியவர்களே.

---------------------------------------------
ஆக்கம்: மறுபக்கம்-கோகர்ணன்.
நன்றி: தினக்குரல்.

Labels: ,


Get your own calendar

Links