« Home | இலங்கையில் ஊடகங்களும் பிரித்தாளும் தந்திரமும் » | பகிரப்படாத பக்கங்கள். 1. » | அமெரிக்க அரசியலும் சதாமும் » | இந்தியா பிச்சை போடுமா? » | அன்னியசக்திகளை ஈழத்தமிழர் நம்பலாமா? » | லெப்.கேணல் அக்பர் » | மலையக மக்களின் போராட்டம் » | சனநாயகமும் பயங்கரவாதமும் » | சிங்கள மனப்பான்மையும் சிறிலங்கா நிலைமையும் » | ஏழுகட்சிக்கூட்டணி - மாவோயிசப் போராளிகள் ஒப்பந்தம் »

அமெரிக்க ஏகாதிபத்தியம்

மறுபக்கம் - கோகர்ணன்

வியட்நாம் போரின் போது அமெரிக்காவின் ஆயுத வலிமை வியட்நாமிய மக்களின் போராட்ட உணர்விற்கு ஈடுகொடுக்க இயலாமல் அல்லற்பட்டது. வியட்நாமிய மக்களுக்கு உலகம் முழுவதும் வாழ்ந்த ஒடுக்கப்பட்ட மக்களின் மனப்பூர்வமான ஆதரவு இருந்தது. சோவியத் ஒன்றியத்தினதும் மக்கள் சீனக் குடியரசினதும் ஆயுத உதவியும் பொருளாதார உதவியும் இருந்தன. அவை யாவும் வெற்றிக்கு உறுதுணையானவையேயாயினும் வெற்றியைத் தீர்மானித்தது வியட்நாமிய மக்களின் ஒன்றுபட்ட போராட்டமே. வியட்நாமிய மக்களின் தேசிய உணர்விற்கும் மேலாக ஒன்றுபடுத்தக்கூடிய எல்லாரையும் ஒன்றுபடுத்திப் போராட்டத்தைச் சரியான முறையில் நெறிப்படுத்துவதில் வியட்நாமிய கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையின் வழிகாட்டல் முதன்மையானது. மக்கள் சக்தியை வெல்லற்கரிய ஒரு ஆயுதமாக்கியதிற் சரியான அரசியல் வழிகாட்டலுக்கு ஒரு பெரும்பங்கு இருந்ததை நாம் மறக்கலாகாது.
வியட்நாம் போரில் வெற்றி வாய்ப்புகள் கை நழுவிப் போன நிலையில், அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது தோல்விக்கான பழியை மற்றவர்கள் மீது சுமத்தியது. தென் வியட்நாமில் நடந்த தனது ஆக்கிரமிப்புப் போரைக் குண்டு வீச்சின் மூலம் விட, வியட்நாமிற்கு விஸ்தரிக்க முயன்று தோல்வி கண்டது. வடக்கிலிருந்து தெற்கிற்கு ஆட்களும் ஆயுதங்களும் காம்போஜத்தின் வழியாக நகர்த்தப்படுவதைக் காரணமாக்கி காம்போஜத்தினுள்ளும் தனது தாக்குதல்களை மேற்கொண்டது. அதுவும் பயனளிக்காத நிலையில் 1970 இல் காம்போஜத்தில் ஒரு ஆட்சிக் கவிழ்ப்பை நடத்தியது. அதன் விளைவாக வியட்நாம் போர் காம்போஜத்தினுள் இன்னொரு போரையும் அதன் விளைவாக அங்கு பெரும் பொருளாதார அழிவையும் ஏற்படுத்தியது. எனினும் 1975 இல் காம்போஜத்திலிருந்தும் வியட்நாமிலிருந்தும் அமெரிக்கப் படைகள் பெருந்தலைக் குனிவுடன் வெளியேற நேர்ந்தது.

அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது பாடத்தைக் கற்றுக் கொள்ளவில்லை என்பதை அடுத்தடுத்து நடந்த உலக நிகழ்வுகள் காட்டின. அமெரிக்கா தொடர்ந்தும் தனது இராணுவக் குறுக்கீடுகளை நடத்தியது. அமெரிக்கா விரும்பிய ஆட்சிகளைச் சில இடங்களில் நிறுவ முடிந்தது. சோவியத் யூவியனின் செல்வாக்கின் சரிவும் இறுதியில் அதன் உடைவும் அமெரிக்காவின் மேலாதிக்கம் துரிதமடைய உதவின. எனினும் எங்கெல்லாம் ஒடுக்குமுறை வலுப்பெற்றதோ அங்கெல்லாம் கொதிப்பும் அதிகமாயிற்று.

அமெரிக்காவின் கொல்லைப்புறம் என்று கருதப்பட்ட தென் அமெரிக்காவின் மீது அமெரிக்காவின் இரும்புப் பிடி மிக இறுக்கமாக இருந்த பின்னணியில் 1980 களில் உலகவங்கியும் சர்வதேச நாணய நிதியமும் தென் அமெரிக்க நாடுகளில் அமெரிக்காவின் உலகமயமாதலை நடைமுறைப்படுத்தத் தொடங்கின. தொடக்கத்தில் பெரிய பொருளாதார வளர்ச்சிக்கான சாத்தியப்பாடுகளைக் காட்டிய பொருளாதார சீர்திருத்தங்கள் சென்ற நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளில் ஒவ்வொரு நாட்டிலும் மேலும் வறுமைக்கும் வேலையின்மைக்கும் பொருளாதார சீர்குலைவுக்கும் வழிகோலின. ஒவ்வொரு நாட்டிலும் ஏகாதிபத்திய எதிர்ப்பு வலுவடைந்து இன்று பெரும்பாலான நாடுகளில் ஓரளவேனும் இடதுசாரி முனைப்புடைய ஆட்சிகள் ஏற்பட்டுள்ளன.

சோவியத் யூனியனிலும் கிழக்கு ஐரோப்பாவிலும் சீனாவிலும் சோஷலிஸத்திலிருந்து விலகல் ஏற்பட்டதால் அமெரிக்கா விரும்பிய உலக மேலாதிக்கம் நிலை பெறவில்லை. மாறாக ஒருபுறம் சீனாவும், ரஷ்யாவும் தமக்கிடையிலிருந்த வேறுபாடுகளைக் களையுமாறு கட்டாயப்படுத்தப்பட்டன. இன்னொருபுறம் சோவியத் யூனியனுக்கும் சீனாவுக்கும் குழிபறிக்கும் நோக்கில் ஊட்டி வளர்க்கப்பட்ட இஸ்லாமிய தீவிரவாதம் அமெரிக்காவுக்கு எதிராகத் திரும்பியது.

அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒரு காகிதப்புலி என்பது நன்கறியப்பட்ட ஒரு வாசகம். அது எவ்வளவு தூரம் உண்மையானது என்பது அமெரிக்க இராணுவ வலிமை அதிகமாகிக் கொண்டிருந்தபோது தான் கூடக் கூடத் தெளிவாகி வருகிறது. அமெரிக்கா ஈராக்கிற்குள் நுழைந்த நோக்கம் நல்லது என்று நினைத்தவர்கள் இருந்தார்கள். சதாம் ஹுசெய்ன் மீது ஈராக்கிய மக்கள் கொண்டிருந்த வெறுப்பு காரணமாக அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு உடனடியாக இருந்த வரவேற்பு வெகு விரைவிலேயே உலர்ந்து போய்விட்டது. ஏனென்று அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களுக்கு விளங்காமலிருக்க நியாயமில்லை. ஆனாலும், அவர்களது நடத்தையை அவர்களால் மாற்ற இயலவில்லை. அவர்களது நடத்தையைத் தீர்மானிப்பது அமெரிக்க மக்களினது விருப்பங்களோ தெரிவுகளோ அல்ல. மாறாக அமெரிக்காவின் அரசாங்கத்தையும் அதன் பாதுகாப்பு, சட்ட, நீதித்துறைகள் அனைத்தையும் தமது ஆதிக்கத்தின் கீழ்க் கொண்டிருக்கும் ஏகபோக முதலாளிய நிறுவனங்களின் தெரிவுகளே அமெரிக்காவின் அயற் கொள்கைகளையும் பெரும்பாலான தேசிய பொருளாதாரக் கொள்கைகளையும் சமூக நலன் பற்றிய கொள்கைகளையும் முடிவு செய்கின்றன. அவர்களுடைய தெரிவுகள் ஜனநாயகம் பற்றிய அக்கறையாலோ உலக அமைதி பற்றிய ஆர்வத்தாலோ வழி நடத்தப்படுவதில்லை. இலாப நோக்கத்தையும் முழுமையான உலகப் பொருளாதார ஆதிக்கத்தையும் விட்டால் அவர்களுக்கு உலகம் எக்கேடு கெட்டாலும் அக்கறையில்லை. இது தான் ஏகாதிபத்தியத்தின் சாராம்சம்.

எனவே தான் நாங்கள் விரும்புகிற விதமான தர்க்க ரீதியான, நியாயப்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை ஏகாதிபத்தியவாதிகளிடம் எதிர்பார்க்க இயலாது. சோவியத் யூனியனின் உடைவுக்குப் பின்பான சூழலில் அமெரிக்க ஏகாதிபத்தியம் தான் எதைச் செய்தாலும் தட்டிக் கேட்க ஆளில்லை என்ற தோரணையில் நடந்து கொள்ளுகிறது. சோமாலியாவில் தனது அதிகாரத்திற்குட்பட்டதும் மக்களால் வெறுக்கப்பட்டதுமான ஆட்சியை இஸ்லாமிய இயக்கங்கள் போராடி முறியடித்த பின்பு சோமாலியாவின் ஆட்சிக் கவிழ்ப்பை நடத்த எதியோப்பியாவை ஏவிவிட்டது. எதியோப்பியப் படைகளை ஆதரிக்கிற நோக்கில் பல நூறு அப்பாவிகளைக் குண்டு வீசி அழித்துள்ளது. அமெரிக்கக் குண்டு வீச்சுப் பற்றிய செய்திகளை அமெரிக்க அரசு மறுத்திருந்தாலும் தட்டிக் கழிக்க இயலாதபடி ஆதாரங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இப்படிக் குண்டு வீச்சுக்கள் மூலமும் கூலிப்படைகள் மூலமும் அடியாள் ஆட்சியாளர்கள் மூலமும் சோமாலியாவில் அமெரிக்க ஆட்சிக் கவிழ்ப்பை நடத்தி இஸ்லாமிய அடிப்படைவாதத்தை முறியடித்து விட்டதாகப் பெருமை பேசினாலும் குறுகிய காலத்திலேயே நிலைமைகள் தலைகீழாக மாறலாம். ஏனெனில், எதியோப்பிய கிறிஸ்தவர்களை மட்டுமே கொண்ட நாடல்ல. அங்குள்ள கிறிஸ்தவர்கள் கத்தோலிக்கர்களிடமிருந்தும் புரட்டஸ்தாந்து மதத்தினரிடமிருந்தும் வேறுபட்டவர்கள் என்பது போக, அங்கு முஸ்லிம்கள் கணிசமான விகிதத்தில் வாழுகின்றனர். எனவே, சோமாலியாவில் எதியோப்பிய ஆக்கிரமிப்புக்கு எதிரான கிளர்ச்சியின் தொடர் விளைவாக எதியோப்பியாவிலேயே உள்நாட்டுக் கலவரங்கள் வெடித்தெழுகிற வாய்ப்பும் உண்டு. அண்டை நாடான கென்யாவுக்கும் அதற்கு அப்பாலும் பரவுமானால் அமெரிக்காவுக்கு எதிரான உணர்வுகள் மேலும் வலுப்படுமே ஒழிய அமெரிக்காவுக்கு நண்பர்கள் கிடைக்கப் போவதில்லை.

அமெரிக்காவின் மிரட்டலின் முன்னால் அதிகம் அரண்டு போகிறவர்கள் மக்கள் ஆதரவு குறைந்த ஆட்சியாளர்கள்தான். அவர்கள் அமெரிக்காவுடன் ஒத்துழையாவிடின் ஆட்சியில் நிலைக்க இயலாது. அதற்கு மாறாக, மக்கள் ஆதரவையே தங்களது வலிமையாகக் கொண்ட கியூபா, வெனேசுவேலா, பொலிவியா போன்ற தென் அமெரிக்க நாடுகளில் அமெரிக்காவின் குறுக்கீடு நடந்தாலும் ஆட்சியைக் கவிழ்ப்பது இயலாத காரியமாக இருந்துள்ளது. அது மட்டுமில்லாமல், ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகள் அண்மைக் காலத்தில் வெனெசுவேலாவில் மேலும் இடதுசாரி முனைப்புள்ளதும் மக்கள் ஆதரவு மிகுந்ததுமான ஒரு ஆட்சியை உறுதி செய்துள்ளன.

மெக்சிகோவின் சியபாஸ் மாகாணத்தில் அமெரிந்தியப் பழங்குடிகளின் சமூக விடுதலைக்கான எழுச்சி ஸப்பாட்டிஸ்ற்றா இயக்கத்தின் தலைமையில் கண்ட வரையறுக்கப்பட்ட வெற்றியின் விளைவாக மெக்சிகோவின் ஜனநாயகத்திற்கும் சமூக நீதிக்குமான போராட்டச் சக்திகள் வலிமை பெற்றுள்ளன. சில ஆண்டுகள் முன்பு அமெரிக்காவுடனும், கனடாவுடனும் ஒஃப்ட்டா எனும் வட -அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒன்றிணைவுக்குள் புகுந்த மெக்சிகோவின் தென் பகுதிக்குள் அமெரிக்க சுற்றுலாப் பயணிகள் செல்வது உகந்ததல்ல என அமெரிக்க அரசாங்கம் பரிந்துரைக்கும் அளவுக்கு மெக்சிக்கோவின் நிலைமைகள் மாறிவிட்டன.

அமெரிக்காவின் ஆயுத வலிமையைக் கண்டு அஞ்சாத மக்களால் தமது நாட்டையும் முழு உலகையும் விடுவிக்க இயலும் என்பதே கடந்த சில தசாப்தங்களின் வரலாற்றுப் பாடமாகும்.

அமெரிக்காவின் வெறித்தனமான நடவடிக்கைகள் அமெரிக்காவின் வலிமையின் அளவுகோல்களல்ல. மாறாக, அவை அமெரிக்காவின் அச்சத்தின் வெளிப்பாடுகளே. ஈராக் போரின் விளைவாக நிச்சயமின்மையும், அமெரிக்கச் செல்வாக்கிற்கு நேர்ந்துள்ள சரிவும் காரணமாக அமெரிக்காவுக்குப் புதிய போர்களும் புதிய வெற்றிகளும் தேவைப்படுகின்றன. இரண்டாம் உலகப் போரின் பின்பு அமெரிக்க ஆதிக்கத்தின் வளர்ச்சியையும் அதை உறுதிப்படுத்திப் பேண அமெரிக்கா எடுத்து வந்துள்ள நடவடிக்கைகளையும் நோக்கினால் நாம் மூன்றாம் உலகப் போர் மூளுகிற அபாயம் பற்றி அஞ்ச வேண்டியதில்லை. ஏனெனில், நாம் மூன்றாம் உலகப் போருக்குள்ளே வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றே எண்ணத் தோன்றுகிறது.

அமெரிக்கா உலக அமைதிக்கெதிராகப் போர் தொடுத்துள்ளது. எனவே, நியாயமான, நிலையான அமைதியை வேண்டும் எவரையும் அமெரிக்கா தனது எதிரியாகவே கொள்ளுகிறது.

அந்த அளவிற்கு அமெரிக்காவால் வெறுத்தொதுக்கப்படுவதும் தடை செய்யப்படுவதும் அமெரிக்கா பற்றிய பிரமைகளிலிருந்து விடுபடுவதும் நல்ல விடயங்களே.

ஆனாலும், தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் குறிப்பாக உயர் நடுத்தர வகுப்பினர் இன்னமும் அமெரிக்கா பற்றிய கனவுகளில் வாழ்கின்றனர். அவர்கள் விடுதலை பெறுவது எப்போது?

_______________________________

நன்றி: ஞாயிறு தினக்குரல் February 11, 2007

Labels:


Get your own calendar

Links