Friday, December 29, 2006

லெப்.கேணல் அக்பர்

ஒரு போராளியின் குருதிச்சுவடுகள்

புரட்சிமாறன் - விடுதலைப்புலிகள், கார்த்திகை 2006.

வட போர்முனையின் கட்டளைப்பணியகம். தொலைத்தொடர்புக் கருவி அக்பரைத் தேடுகிறது. தொடர்பு இல்லை. காலையில்தான் முன்னணி நிலைகளைப்பார்த்துவிட்டு, அணித் தலைவர்களைத் தயார்ப்படுத்துவதற்காக பின் தளத்திற்குப் போய் வருவதாகத் தளபதி தீபனிடம் கூறிச் சென்றவன். இன்னமும் வரவில்லை. மாலை 3.00 மணி அக்பரின் தொடர்பில்லை. மாலை 5.00 மணி தொடர்பில்லை. இரவு 8.00 மணி தொடர்பில்லை. தளபதியின் மனதில் சந்தேகம் தோன்றுகின்றது. நாளை விடிந்தால் எதிரி முன்னேறக்கூடும் என்ற தருணத்தில் அக்பர் ஒருபோதும் இத்தனை மணிநேரம் தொடர்பில்லாமல் நிற்கமாட்டான். நேரம் செல்லச் செல்ல தளபதியிடமும் ஏனைய போராளிகளிடமும் ஏக்கம் தொற்றிக்கொள்கிறது. அவனுக்கு ஏதும் நடந்துவிட்டதா? அவனை எப்படித்தான் நாம் இழக்கமுடியும்? எல்லோரும் அவனைத் தேடினார்கள். அவன் எத்தனை பெறுமதிக்குரிய வீரன். களங்களில் அவன் சாதித்தவைகள்தான் எத்தனை. நாளைக்கும் அவன் வேண்டுமல்லவா? அவன் எங்கே போய்விட்டான்?

அக்பர் பிறந்தது தவழ்ந்தது வளர்ந்தது எல்லாமே மட்டக்களப்பின் கதிரவெளியில்தான். போராட்டத்திற்கும் அவன் குடும்பத்திற்கும் நெருங்கிய ஒன்றிப்பிருந்தது. அண்ணன் அப்போது போராளியாய் இருந்தான். இந்திய இராணுவம் ஊருக்குள் நுழைந்து வீடுவீடாய்ப் புகுந்து இளைஞர்களை வீதிக்கு இழுத்துச் சித்திரவதை செய்தது. இந்த அவலங்களுக்கு அக்பரும் விதிவிலக்காகவில்லை. அவனை வீட்டிற்குள் வந்து இழுத்து வெளியே தள்ளினார்கள். ஜீப்பில் ஏற்றி முகாமிற்குக் கொண்டு போய்க் கட்டிவைத்துச் சித்திரவதை செய்தார்கள். அண்ணன் போராளியாய் இருந்ததைச் சொல்லி அவனை அவமானப்படுத்தினார்கள். இந்தத் தாக்கங்கள்தான் அவனையும் போராளியாக்கியது. 1990ஆம் ஆண்டில் வன்னிக்கு வந்த அவன் அடிப்படைப் பயிற்சிகளை மணலாற்றில் பெற்றதோடு அவனின் நீண்ட போராட்டவாழ்வு முளைவிடுகின்றது.

பல இரகசியப் பணிகளிலும் கடுமையான பயிற்சிகளிலும் ஈடுபட்ட அவன், சிறியசிறிய சண்டைகளிலும் பங்குகொண்டு தன்னை ஒரு சிறந்த போர்வீரனாக வளர்த்துக்கொண்டான். அக்பரின் இந்த வளர்ச்சித்திறன் சூரியக்கதிர் நடவடிக்கையின்போது முழுமையாய்த் தெரிந்தது. முன்னேறிவரும் எதிரியைத் தடுத்து நிறுத்தித் தாக்குதல் செய்வதற்கான வேவு நடவடிக்கைகளில் துணிச்சலாக ஈடுபட்டான். அவன் பார்த்த வேவுகளின்படி தாக்குதல்களும் நடந்தது. ஒரு சாதாரண போராளியாய் சண்டைக் களங்களைச் சந்தித்த அவன், வேவு அணிகளை வழிநடத்தும் அணித் தலைவனாக வளர்ந்தான். இந்த நாட்களில்தான் முல்லைத்தீவிலிருந்த இராணுவத்தின் படைத்தளம் மீது ஓயாத அலைகள் - 01 என்ற பெயரில் பாரிய படைநடவடிக்கையைத் தலைவர் அவர்கள் திட்டமிட்டுத் தயார்ப்படுத்தினார். இந்தத் தாக்குதலுக்கு இம்ரான் பாண்டியன் படையணியின் முறியடிப்பு அணியின் பற்றாலியன் உதவிக் கட்டளை அதிகாரியாக அக்பர் நியமிக்கப்பட்டான். எதிரி நினைத்திராத பொழுதில் முல்லைத்தீவுத் தளத்தில் அடிவிழுந்தபோது சிங்களம் திகைத்தது. யாழ்ப்பாண ஆக்கிரமிப்பிற்குப் பலமாய் நிற்கும் முல்லைத்தீவுத்தளத்தை இழக்கவிரும்பாமல் கடைசிவரை அதைத் தக்கவைக்க கடும் முயற்சி செய்வார்கள் என்பது தலைவருக்கு நன்கு தெரியும். முல்லைத்தீவுப் படைகளைக் காப்பாற்ற சிங்களப்படை தரையிறக்கம் ஒன்றைச் செய்யும் என்பதை உய்த்தறிந்த தலைவர் அவர்கள், அணிகளைத் தயாராய் வைத்திருந்தார். எதிர்பார்த்தபடி அளம்பிலில் சிங்களப்படை வந்துதரையிறங்கியது. ஒரு தன்மானப்போர் அங்கேநடந்தது. கட்டளை வழங்கும் தளபதியாய் இருந்த அக்பர் சண்டை இறுக்கம் அடைந்தபோது தானும் களத்திற்குள் புகுந்துவிட்டான். திறமையாய் அணியை வழிநடத்தினான். அளம்பில் மண்ணில் எதிரியைக் கொன்று போட்டான். முல்லைத்தீவுச் சமர் முடிந்து ஓயாத அலைகள் - 01 நடவடிக்கை வெற்றிவாகை சூடியபோது, அக்பர் ஒரு சிறந்த சண்டைக்காரனாக வெளிப்பட்டான்.

முல்லைத்தீவில் அடிவாங்கிய சிங்களப்படை, தங்கள் அவமானச் சின்னங்களை இல்லாமல் செய்வதற்காக 'சத்ஜெய' என்ற பெயரில் கிளிநொச்சியை ஆக்கிரமிக்கும் படைநடவடிக்கையை ஆரம்பித்தது. பரந்தனில் சிங்களப் படைகளை எதிர்கொண்ட புலிவீரர்கள் கடும் சமர்புரிந்தார்கள். சிங்களப்படை டாங்கிகள் சகிதம் எங்கள் பகுதிகளுக்குள் புகுந்து கொண்டிருந்தது. சண்டை நடந்த இடத்திலிருந்து 500 மீற்றர் தூரத்தில் கட்டளைகளை வழங்கிக் கொண்டிருந்தஅக்பர், சண்டையின் இறுக்க நிலையைப் புரிந்து கொண்டு உடனே சண்டை நடந்த இடத்தை நோக்கி ஓடினான். உடனடியாக முடிவெடுத்து அங்கு நின்ற ஆர்.பி.ஜி உந்துகணை செலுத்தி வைத்திருந்த மூன்று வீரர்களை ஒன்றாக்கி முன்னேறிவந்த டாங்கிகள் மீது ஒரு துணிச்சலான தாக்குதலை மேற்கொண்டான். இந்தத் தாக்குதலில் இரண்டு டாங்கிகள் எரிந்து அழிந்தது. இக்கட்டான ஒரு சூழ்நிலையில் அக்பரின் விரைவானதும் நுட்பமானதுமான இந்தத் திட்டம் வெற்றிகரமாய் நிறைவேறியது. அன்றைய நாளில் எதிரியின் முன்னேற்ற முயற்சியைத் தடுத்து நிறுத்தியதில் அக்பர் முக்கிய காரணமாய் இருந்தான்.

ஏ - 9 வீதியைப் பிடித்து யாழ்ப்பாணத் திற்குத் தரைவழிப் பாதையைத் திறக்கும் பாரிய நில ஆக்கிரமிப்பிற்கு ரத்வத்தவின் பேரிகை முழக்கத்தோடு, தொடங்கப் போகும் ஷஜயசிக்குறு படைநடவடிகையை முறியடிக்கும் திட்டத்தில் தலைவர் அவர்கள் அதிக நேரத்தைச் செலவிட்டார். டாங்கிகளை எதிரி அதிகம் பயன்படுத்துவான் என்பதையும் தலைவர் புரிந்துகொண்டார். இந்த டாங்கிகளைச் சிதைப்பதற்காக ஒரு படையணியை உருவாக்குதவற்கு முடிவெடுத்து அதற்கான கட்டளைத் தளபதியாக யாரைத் தெரிவு செய்யலாம் எனத் தேடியபோது அதற்குப் பொருத்தமானவனாய் தலைவரின் கண்ணுக்குள் தோன்றியது அக்பரின் முகம்தான். சத்ஜெய முறியடிப்புச் சமரில் அக்பரின் திறமையினைத் தலைவர் அவர்கள் இனம் கண்டுகொண்டார். அக்பரின் தலைமையின்கீழ் இம்ரான் பாண்டியன் படையணியின் சிறப்புப்பயிற்சிபெற்ற போராளிகள் விக்டர் விசேட கவச எதிர்ப்பு அணியாக உருவாகினர். இந்தப்படையணியில் நுழைந்த அனைவருக்கும் கடும்பயிற்சி. அக்பரில் தொடங்கி சாதாரண போராளி வரைக்கும் எல்லோரும் பயிற்சியெடுத்துத் தேர்வின்போது சித்தியெய்திய பின்னரே இந்த அணிக்குள் நுழைந்தனர். அக்பர் ஒரு கட்டளை அதிகாரியாய் இருந்தபோதும் ஒவ்வொரு போராளிக்குமுரிய எல்லாக் கடமையையும் தானும் நிறைவேற்றினான். ஒவ்வொரு சின்னச்சின்ன விடயங்களிலும் கவனமெடுத்தான். போராளிகளுக்கும் தனக்குமான இடைவெளியைக் குறைத்து ஒரு நெருக்கமான, இறுக்கமான உறவை ஏற்படுத்தினான். எல்லாக் கடின பயிற்சிகளிலும் தானும் ஈடுபட்டபடி மற்றப்போராளிகளையும் உற்சாகப்படுத்துவான். பயிற்சித் தேர்வின்போது எந்தப் போராளியும் சித்தியெய்தாமல் விடக்கூடாது என்பது அவனது நோக்கமாய் இருந்தது. அப்படித்தேர்வில் சித்தியெய்தத் தவறியவர்களை மீண்டும் மீண்டும் பயிற்சியில் ஈடுபடுத்திச் சித்தியெய்த வைத்தான்.

பயிற்சியுடன் மட்டும் நின்றுவிடாமல் போராளிகளுக்கு உணவு கொடுப்பதைக்கூட தானே நேரில் நின்று உறுதிப்படுத்திக்கொள்வான். ஒருமுறை மதியவேளையில் போராளிகளுக்குக் கொடுக்கும் பசுப்பாலைக்காய்ச்சும்போது எரித்துவிட்டார்கள். அதன்பின், தான் நிற்கும் நேரங்களில் தானே பால் காய்ச்சி போராளிகளுக்குக் கொடுப்பான். போராளிகள் தவறிழைத்தால் அல்லது அலட்சியமாகச் செயற்பட்டால் அவன் எடுக்கும் நடவடிக்கை போராளிகள் எதிர்காலத்தில் எச்சந்தர்ப்பத்திலும் அத்தகைய தவறுகளை விடாதபடி படிப்பினை மிக்கதாய் இருக்கும். ஒருநாள் போராளிகள் கிணற்றடியில் குளித்துக் கொண்டிருந்தார்கள். அக்பரும் குளிப்பதற்காக கிணற்றடிக்கு வந்தான். அந்தச் சூழலை அவன் மேலோட்டமாய்ப் பார்த்தபோது அன்று காலையில் கிணற்றடி சுத்தம் செய்யப்படாமல் பாவித்த பொருட்களின் தடயங்கள் அப்படியே கிடந்தது. அக்பர் ஒன்றும் பேசவில்லை. யாரையும் குறையுறவுமில்லை. விடுதியில்போய் விளக்குமாறினை எடுத்துக்கொண்டுவந்து தானே கிணற்றடியைச் சுத்தப்படுத்தினான். போராளிகள் அப்பொழுதுதான் விழித்துக்கொண்டவர்களாய் விளக்குமாறினை வாங்கிச் சுத்தப்படுத்த முனைந்தார்கள். அக்பர் யாரையும் அதற்கு அனுமதிக்கவில்லை. அன்றையநாளில் அந்தப் பகுதியை முழுமையாய் தானே சுத்தப்படுத்தினான். அதன் பின்புகூட அவன் அதைப்பற்றி யாரிடமும் எதுவும் பேசவில்லை. அக்பரின் இந்தச் செயற்பாடு போராளிகளின் விழிகளைக் கசியச்செய்தது. அதன்பின் ஒருபோதும் அந்தத் தவறைப் போராளிகள் விட்டதில்லை. அக்பரின் இந்தப் பண்பும் தவறிழைத்தவர்களைக் கூட யாரிலும் நோகாமல் தன்னைமட்டுமே வருத்தி அதற்குத் தீர்வுகாணும் திறனும் போராளிகளிடத்து ஒரு தந்தைக்குரிய நிலையை அவனுக்குப் பெற்றுக்கொடுத்தது. அக்பர் விளக்குமாறு பிடிப்பதில் மட்டுமல்ல களத்திலே ஆயுதம் பிடித்துச் சுடுவதுவரை இதே முடிவைத்தான் கடைப்பிடித்தான். அக்பரின் உச்சமான வளர்ச்சிகளுக்கு இதுவே அடிநாதமாய் இருந்தது.

நீண்ட எதிர்பார்ப்புகளோடு தலைவர் இந்த அணியை உருவாக்கினார். 1997ஆம் ஆண்டு வைகாசி 13ஆம் திகதி. புத்தபிரான்முன் சபதம் எடுத்துக்கொண்டு வன்னி மீது 'ஜயசிக்குறு' என்ற பெயரில் பாரிய இராணுவ நடவடிக்கையை சிங்களம் தொடங்கியது. தயாராய் இருந்த விடுதலைப்புலிகளின் படையணிகள் களத்திலே எதிரியை நேருக்குநேர் எதிர்கொண்டனர். மனோபலத்திலே எங்களுக்குக் கீழே நின்ற எதிரி ஆயுதபலத்தில் எங்களுக்கு மேலே நின்றான். சண்டைகளின் போது டாங்கிகளை முன்னணிக்கு அனுப்பி டாங்கிகளின் சுடுகுழல்களால் எங்கள் காப்பரண்களைச் சல்லடைபோட்டுக்கொண்டு அந்த இரும்புக் கவசங்களின் மறைவில் பதுங்கிப் பதுங்கி எங்கள் பகுதிகளுக்குள் நுழைந்தனர். இந்தச் சூழலை எதிர்பார்த்து அதற்கென்றே தயாராய் இருந்த அக்பரின் அணி, களத்தை நேரடியாய்த் தரிசித்தது. எதிரி ஒவ்வொரு அடிநிலத்தையும் ஆக்கிரமிப்பதற்கு அதிகவிலை கொடுத்தான்.

25.05.1997 மன்னகுளத்தில் ஒரு கடுமையான முறியடிப்புச் சமரை எங்களது படையணிகள் நடாத்தின. டாங்கிகள் பரவலாய் முன்நகர்ந்தன. அக்பர் கட்டளை வழங்கும் காப்பரணில் நின்றபடி ஆர்.பி.ஜி ஏந்திய தனது போராளிகளை வழிநடத்திக்கொண்டிருந்தான். போராளிகள் எதிரியுடன் நெருங்கிநின்று சண்டைபிடித்தனர். சண்டை உச்சமடைந்து கைகலப்புச் சண்டையாக மாறியது. இந்த வேளையில்தான் ஆர்.பி.ஜி கொமாண்டோ வீரன் பாபு வீரச்சாவடைந்த செய்தி அக்பரின் காதிற்கு எட்டுகின்றது. அக்பரின் இரத்த நாளங்களில் துடிப்பு அதிகரிக்கின்றது. எத்தனை பாசமாய் அவன் வளர்த்த வீரர்கள் மடிந்துகொண்டிருந்தபோது அவனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. நேரே சண்டை நடந்த இடத்திற்கு ஓடினான். எதிரிமீதான அவனின் ஆவேசம் அங்கு வீழ்ந்துவெடிக்கும் எறிகணைகளின் தாக்கத்திலும் மேலானதாய் இருந்தது. ஒரு கட்டளை அதிகாரியான அக்பர் களத்திலேதான் வளர்த்தவர்களின் அருகில் நின்றபடி, பாடசாலை வகுப்பில் பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசானைப்போல் களத்திலே சீறியபடி செல்லும் ரவைகளுக்குள்ளும் நெருப்புத் துண்டங்களாய் உடலைக் கிழித்தெறியத் துடிக்கும் எறிகணைத் துண்டங்களையும் அலட்சியம் செய்தபடி டாங்கிகளைச் சிதறடிக்கும் வழியைக் காட்டினான். றம்பைக்குள மண் அதிர்ந்தது. அந்தப்பொழுதில் அக்பர் அவர்களுக்குள் ஒருவனாய் நின்று ஆடிப்பாடி வளர்த்த நான்கு இளம் போராளிகளை விலையாய்க் கொடுத்து இரு டாங்கிகளையும் ஒரு துருப்புக்காவியையும் அழித்து இரு டாங்கிகளைச் சேதமாக்கியும் எதிரியின் கவசப்படைக்கு வலுவான அடியைக்கொடுத்தான்.

இத்தாக்குதல் முறியடிப்பின் மூலம் களத்தை முழுமையாய் வழிநடத்தும் கட்டளைத் தளபதிகளுக்கு விக்டர் விசேட கவசஎதிர்ப்பு அணியின் செயற்பாட்டில் சங்கடமற்ற செயற்திறன் மீதான நம்பிக்கையை அக்பர் ஏற்படுத்திக்கொடுத்தான்.

10.06.1997அன்று தாண்டிக்குளத்தில் தளம் அமைத்திருந்த ஜயசிக்குறு படைமீது ஒரு வலிந்த தாக்குதலை எமது படையணிகள் மேற்கொண்டன. இந்தக் களத்திலும் எதிரியின் டாங்கிகளின் நகர்வை முறியடிக்க ஒரு பிளாட்டூன் போராளிகளுடன் அக்பர் களமிறங்கினான். சண்டை உக்கிரமாய் நடந்தது. எதிரியை அண்மித்து மேற்கொண்ட இத்தாக்குதலின் ஒரு கட்டத்தில் அக்பர் விழுப்புண் அடைகின்றான். விழுப்புண்ணின் வலி அவன் உடலை வருத்தியதை விட எதிரி எங்கள் தேசம்மீது மேற்கொள்ளும் ஆக்கிரமிப்பின் வலி அதிகமாய் இருந்தது. விழுப்புண்ணிற்கு இரத்தத்தடுப்புத் துணியைக் கட்டிக்கொண்டு தொடர்ந்தும் தன் அணியை வழிநடத்திச் சண்டையிட்டான். இச்சண்டையில் இரு டாங்கிகளைத் தாக்கி அழித்து ஒரு துருப்புக்காவியைச் சேதமாக்கி தாக்குதல் ஓய்விற்கு வந்தபின்னரே அக்பர் தளம் திரும்பினான்.

அக்பர் களங்களில் சாதித்த வெற்றிகளுக்கு அவன் வளர்த்த அணித் தலைவர்களும் காரணமாயிருந்தனர். தன்னிடமிருந்த நற்பண்புகளை அவர்களுக்கும் ஊட்டி வளர்த்தான். தனித்து முடிவெடுத்துச் செயற்பட வேண்டிய நேரங்களில் அதற்கும் சந்தர்ப்பம் கொடுத்தான். கட்டம் கட்டமாய்ப் பாரிய இழப்புக்களைச் சந்தித்தபடி முன்னேறிய எதிரிப்படையைப் புளியங்குளத்தில் வைத்து ஒரு வலிமையான தடுப்பு அரண் அமைத்துச் சண்டையிட்டன எமது படையணிகள்.

19.08.1997 அன்று காலைப்பொழுது. பேரிரைச்சலைக் கிளப்பியவாறு வேகமாய் வந்த டாங்கிகளும் துருப்புக்காவியும் எங்களது காப்பரண்களை ஏறிக்கடந்து புளியங்குளம் சந்தியை மையப்படுத்தியிருந்த எமது தளத்திற்குள் நுழைந்தன. நிலைமையைப் புரிந்துகொண்டு சுதாகரித்த எமது அணிகள் முகாமிற்குள் எதிரியைச் சல்லடை போட்டார்கள். ஆர்.பி.ஜி கொமாண்டோப் போராளிகளுக்கு மேஜர் காவேரிநாடன் கட்டளை வழங்கி வழிநடத்த முகாமிற்குள் நுழைந்த எதிரியுடன் பதட்டமில்லாமல் சமரிட்டு இரண்டு டாங்கிகளை அழித்தும் ஒரு துருப்புக்காவியைக் கைப்பற்றியும் சிலவற்றைச் சேதமாக்கியும் எதிரியின் கனவைச் சிதைத்து ஓட ஓட விரட்டியடித்தனர். இந்தச் சண்டையின்போது அக்பர் களத்தில் இல்லாபோதும் அவன் வளர்த்த அணித்தலைவர்களும் போராளிகளும் விக்ரர் விசேட கவச எதிர்ப்பு அணியின் பெயரை நிலைநிறுத்தினர்.

இப்படி ஜயசிக்குறு களத்தில் அக்பர் பல சண்டைகளை எதிர்கொண்டான். ஒவ்வொரு சண்டைகளிலும் எதிரியின் டாங்கிப்படைக்கு நெடுக்குவரியைக் கண்டால் குலைநடுங்கும்படி உருவாக்கினான். எப்போதாவது டாங்கிகள் பேசுமாயின் தாங்கள் நடுங்கிப்பயந்து ஒடுங்கிப்போனது பற்றி அவைகூடச் சொல்லும். ஏனென்றால் அக்பர் தன் போராளிகளை வைத்து களங்களில் அப்படித்தான் சாதித்தான்.


ஓயாத அலைகள் - 02 நடவடிக்கை தலைவர் அவர்களால் திட்டமிடப்பட்டு கிளிநொச்சி நகரையும் பரந்தனையும் ஊடறுத்து எதிரியை இரண்டாகப் பிரித்துத் தாக்கும் அணிகளுடன் விக்ரர் விசேட கவச எதிர்ப்பு அணியும் இணைக்கப்பட்டது. சண்டை தொடங்கியதும் ஊடறுப்பு அணிகள் உள்நுழைந்தன. கிளிநொச்சிப் படைத்தளம் தனிமைப்படுத்தப்பட்டது. வயல்வெளிகளுக்குள் இரண்டு பகுதியாலும் முன்னேற முயலும் எதிரியைத் தடுத்துநிறுத்தும் களச் செயற்பாட்டில் அணிகள் ஈடுபட்டன. கிளிநொச்சித்தளம் மீது பலமுனைகளில் அழுத்தம் கொடுத்துத் தாக்குதல்தொடுக்க முற்பட்டபோது கிளிநொச்சியைத் தம்முடன் இணைப்பதற்காக பரந்தனில் இருந்து டாங்கிகள் சகிதம் படையினர் முன்னேறினர். இவர்களை வழிமறித்த ஏனைய படையணிப் போராளிகளும் விக்டர் விசேட கவச எதிர்ப்பு அணிப் போராளிகளும் கடும் சமர்புரிந்தனர்.

அவ்வேளையில் நிலைகளைப் பார்த்து உறுதிப்படுத்தியபடி வந்துகொண்டிருந்த அக்பரும் ஏ - 9 பிரதான சாலையை அண்மித்திருந்தார். முன்னேறிய டாங்கிகளைத்தாக்கி அழிக்கும் பொறுப்பை மணிவண்ணனிடம் ஒப்படைத்துவிட்டுத் தான் நின்ற பகுதி நோக்கி வந்துகொண்டிருந்த துருப்புக்காவி ஒன்றினை அருகில் நின்ற கொமாண்டோ வீரனின் ஆர்.பி.ஜியை வாங்கித் தானே தாக்கியழித்தான். இந்தத் தாக்குதலில்தான் லெப்.கேணல் மணிவண்ணனும் ஒரு டாங்கியைத் தாக்கியழித்தான். தங்களது கவசங்கள் உடைந்ததால் எதிரியின் உளவுரனும் உடைந்தது. பரந்தனையும் கிளிநொச்சியையும் இணைக்கும் அவர்களின் கனவு கைகூடாமல் போனது. கிலேசமடைந்த சிங்களப்படை கிளிநொச்சியைவிட்டுத் தப்பியோடியது.

இதேபோன்றுதான் 26.06.1999 பள்ளமடுப் பகுதிமீது மேற்கொள்ளப்பட்ட ரணகோச நடவடிக்கை மீதும் அக்பரின் படையணி முத்திரை பதித்தது. இந்தச் சண்டையில் எதிரி டாங்கிகளைக் கூடுதலாகப் பயன்படுத்தி டாங்கி நகர்வாகவே மேற்கொண்டான். ஆர்.பி.ஜி அணிக்கு இது ஒரு சவாலான சண்டையாக இருந்தது. டாங்கிகள் உந்துகணைகளை அந்தநிலம் முழுவதும் விதைத்தது. காப்பு மறைப்புக்கள் பெரிதாக இல்லாத அந்த நிலத்தில் நின்றபடி அக்பர் தெளிவாகக் கட்டளைகளை வழங்கினான். அக்பரின் கட்டளைக்கேற்ப நிலைகுலையா வலிமைகொண்ட போராளிகள் கடும் சமர்புரிந்தனர். இந்தச் சண்டையின் முடிவில் ஏழு போராளிகள் உயிர்களைத் தாயக தேசத்திற்காகக் கொடுத்து ஆறு டாங்கிகளை எரித்தழித்திருந்தனர். எதிரியின் கவசப்படையின் பலத்தை விக்ரர் விசேட கவசஎதிர்ப்பு அணி நிலைகுலையச் செய்தது.



இப்படித்தான் ஜயசிக்குறுப் படை மூக்கை நுழைத்த திசையெல்லாம் அக்பர் செயலால் தன்னை வெளிப்படுத்தினான். அக்பரின் குறியீட்டுப்பெயர் 'அல்பா - 1'. களத்திலே 'அல்பா - 1' வந்துவிட்டால் எல்லாப் போராளிகளுக்கும் உடலில் புது இரத்தம் ஓடும். களத்தில் 'அல்பா - 1' இன் ஆட்கள் வந்தால் எதிரிப்படைக்கு வியர்த்து ஓடும். அப்படித்தான் அக்பர் சாதித்தான். அக்பர் எந்தச் சூழ்நிலையிலும் எக்கணத்திலும் தனித்து முடிவெடுத்துச் செயற்படுத்தும் திறன்வாய்ந்தவன். ஒட்டிசுட்டான் பகுதியை ஆக்கிரமிக்கும் நோக்கோடு இரகசிய நகர்வின்மூலம் எதிரி எமது பகுதிக்குள் நுழைந்த செய்தி அக்பரின் காதுக்கு எட்டிய உடனேயே தனது போராளிகளின் ஆர்.பி.ஜி உந்துகணை செலுத்திகளை வாங்கிக்கொண்டு அவர்களின் கையில் துப்பாக்கிகளைக் கொடுத்து அணியினைத் தயார்ப்படுத்தும்படி கூறிவிட்டு எதிரி முன்நகர்ந்த இடங்களைக் கண்டறிவதற்கு அக்பர் உடன் விரைந்தான். அப்போது அக்பரின் முகாம் அந்தப் பிரதேசத்தை அண்டிய பகுதியில்தான் அமைந்திருந்தது. முன்னேறிய எதிரியை நகரவிடாமல் உடனடியாகவே ஒரு தடுப்பு நிலையை உருவாக்கி நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து ஏனைய தாக்குதல் அணிகள் அந்த இடத்தைப் பொறுப்பேற்கும்வரை அவனே அந்த நிலைகளைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தான்.



ஆனையிறவை வீழ்த்துவதற்காக இத்தாவிலில் ஒரு தரையிறக்கத்தினைச் செய்து ஒருமாத காலம் சமர் புரிந்தபோது அக்பரும் அவன் போராளிகளும் எதிரியின் கவசப்படையின் முன்னேற்ற முயற்சிகள்அனைத்தையும் முறியடித்துப் பல கவசங்களைச் சிதைத்தனர். இத்தாவிலில் சிங்களம் சந்தித்த தோல்விக்கும் ஆனையிறவை வீழ்த்தி விடுதலைப்புலிகள் வெற்றிவாகை சூடியதற்கும் அக்பரிற்கும் அவன் படையணிக்கும் பெரும் பங்கிருந்தது.

விடுதலைப்புலிகளிடம் வீழ்ந்துவிட்ட ஆனையிறவை மீளக் கைப்பற்றும் நோக்கோடு 'தீச்சுவாலை' என்ற பாரிய இராணுவ நடவடிக்கையை எதிரி மேற்கொண்டபோது டாங்கிகளை அவன் முந்நிலைப்படுத்தவில்லை. 'ஜயசிக்குறு' களச் சமர்களின்போது இஸ்ரேல் தயாரிப்பில் உருவான டாங்கிகளையும் துருப்புக்காவிகளையும் அக்பர் நொருக்கி அழித்தான். அவற்றின் சுழல்மேடையினையும் சுடுகலங்களையும் தன் காலடிக்குள் பணியவைத்தான். ஒட்டுமொத்தமாய் களத்தில் டாங்கிகளின் செயற்திறனை பூச்சியத்திற்குக் கொண்டுவந்தான். தலைவர் அவர்கள் எப்படிக் கற்பனைசெய்து இந்த விக்ரர் விசேட கவச எதிர்ப்பு அணியை உருவாக்கினாரோ, அந்தக் கனவில் சிறிதும் பிசிறல் இல்லாமல் நினைத்ததை அப்படியே தனது அணியைவைத்து அக்பர் செய்து முடித்தான். இரும்புக் கவசத்தின் வலிமையைச் சிதைத்து விடுதலைப்போராளிகளின் வலிமையை உலகிற்குக் காண்பித்தான்.

அக்பர் இப்படிப்பல பணிகளைப் புரிந்தான். பின்னாளில் பல அணிகளை இணைத்தும், பல நவீன ஆயுதங்களை உள்ளடக்கியதுமான அணிகளையும் அக்பர் வழிநடத்தினான். புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பின் மட்டக்களப்பின் ஆண்டாங்குளப் பொறுப்பாளராகத் தலைவரின் விசேட பணிப்பின் பேரில் சென்றுபணிபுரிந்தான். களப்பணியையும் மக்கள் பணியையும் ஒன்றாகச் செய்தான். தூர இடங்களுக்குக்கூட கால்நடையாகச் சென்று வேவுபார்த்துத் தாக்குதல்கள் மேற்கொள்வது, மக்களின் தேவைகளை நிறைவேற்றுவது என அவன் எப்போதும் இயங்கிக்கொண்டிருந்தான். ஒருதளபதியாய் இருந்தபோதும் ஒரு சாதாரண போராளியாகவே தன்னை கருதிக் கொள்வதும் ஏற்றத்தாழ்வு இன்றி எல்லோரையும் மதித்து நடப்பதும் பண்பான வார்த்தைகளால் கதைப்பதும் புன்சிரிப்பை மெல்லியதாய் பரவவிடுவதும் அவனுடன் கூடப்பிறந்த குண இயல்புகள்.

இந்த வீரன் 23.05.2005இல் தமிழீழத்தேசியத் துணைப்படையின் வடபோர்முனைக்கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டான். அன்றிலிருந்து முன்னணி நிலைகளுள் அவர்களுடன் வாழ்ந்து ஒரு சிறந்த படையாக அதை உருவாக்கினான். 11.08.2006இல் முகமாலையில் எதிரி முன்னேறியபோதும், தொடர்ந்துவந்த சண்டைகளிலும் தேசியத்துணைப்படை எதிர்பார்த்ததிலும் அதிகமாய் அல்லது எதிர்பார்க்காத வகையில் சண்டையிட்டதாயின் அதன் ஆணிவேராய் இருந்தது அக்பர்தான். அக்பர் கட்டளை வழங்கினால் அவர்கள் சாதிப்பார்கள், அல்லது சாதனைக்காய் மடிவார்கள். அக்பர் அப்படித்தான் வாழ்ந்தான்.

இந்த வீரன்தானே எதிரியின் எறிகணை வீச்சில் எங்களை விட்டுப்பிரிந்து போனான். அவனுடன் கூடப்போன சாதுரியனும் அன்று மடிந்தான். அக்பரின் பிரிவு தளபதிகளில் இருந்து போராளிகள் வரை எல்லோரின் இதயத்தையும் ஒருமுறை உலுப்பி விழிகசிய வைத்தது. அக்பர் என்ற பெயருக்கு களத்தில் ஒரு வலிமை இருந்தது. ஒவ்வொரு ஆர்.பி.ஜி கொமாண்டோ வீரனின் வலிமையும் அக்பர்தான். அந்த வீரனின் நினைவுகளைச் சிறப்புத்தளபதிகளுடன் பகிர்ந்துகொண்டபோது அவன் ஒரு களஞ்சியமாய்த் தோன்றினான். அக்பர் ஒரு பண்பான போராளி, பெருந்தன்மையில்லாது பெரிய சாதனைகளைப் படைத்த சுத்தவீரன். தலைவன் நினைத்ததைச் செய்துமுடித்தவன், எச்சந்தர்ப்பத்திலும் எந்த வளப்பற்றாக்குறையிலும் பெரிய வேலைகளையும் அமைதியாய் செய்துமுடிப்பவன். சொல்வதைச் செய்வான், செய்வதைச் சொல்லமாட்டான். இரும்பின் வலிமையை மிஞ்சிய தந்திரசாலி. எல்லாவற்றிற்கும் மேலாய் அக்பர் எங்களின் இராணுவச் சொத்து.

இத்தனை செயற்திறன் மிக்க வீரன்எங்களுக்குள் சத்தமில்லாமல் நடமாடித்திரிந்தான். களத்திலே இப்போதும் அவன் நிறையச் செய்யத்துடித்தான். உறங்குநிலையில் இருந்த ஆர்.பி.ஜி அணியை மீண்டும் இயங்குநிலைக்குக் கொண்டுவந்து பாரிய நடவடிக்கை ஒன்றினை முறியடிக்கும் முன்னாயத்தச் செயற்பாட்டின்போது அவன் மடிந்துபோனான். ஆயினும் அந்தப் பெயரின் வலிமை இப்போதும் இருக்கிறது. அக்பர் வீழ்ந்தபின்னும் அவன் வளர்த்த போராளிகள் எதிரியின் டாங்கிகளைநொருக்கினார்கள். 'தலைமைத்துவத்தின் பண்பு என்பது அவன் உயிருடன் இருக்கும்போது மட்டுமல்ல, அவன் வீழ்ந்துவிட்ட பின்பும் அவனின் கட்டளைகளை நிறைவேற்றுவது தான் அவன் தேடிவைத்த சொத்து.' அக்பர்இந்தச் சொத்தை அதிகம் தேடிவைத்திருக்கிறான்.

கடைசியில், அக்பருக்கு ஒரு ஆசையும் ஆதங்கமும் இருந்தது. அக்பர் திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான போராளி. அவன் களங்களிலேயே அதிகம் வாழ்ந்தவன். தன் குழந்தைகளோடு கொஞ்சிவிளையாட அவனுக்கு நேரம் கிடைத்தது குறைவு. எங்காவது ஒரு பொழுதில் வீட்டிற்குச் சென்றாலும் தங்கி நிற்கமாட்டான். துணைவி மறிப்பாள். அவளின் வேண்டுகை அவனுக்குப் புரியும். அவளைத் தலைவரின் படத்திற்கு முன் கூட்டிவருவான். தலைவரின் படத்தைக்காட்டி, 'அண்ணை நிறைய எதிர்பார்க்கிறார். அண்ணையைப்போல நாங்களும் செயற்படவேணும். பட்ட கஸ்ரங்களோடு சேர்ந்து எல்லாரும் கஸ்ரப்பட்டா கெதியில விடிவு கிடைக்கும். விடிவு கிடைச்சா என்ர குழந்தைகளோட செல்லங்கொஞ்சி அவையள நான் வடிவா வளர்ப்பன்தானே' என்று கூறிவிட்டுப் போய்விடுவான். அப்படியே அவன் போய்விட்டான். தனக்கென்று வாழாத இந்த உன்னத வீரனின் கடைசி ஆசைப்படி அவனின் குழந்தைகளின் சிறப்பான எதிர்காலத்தை நாம்தானே போராடிப் பரிசளிக்க வேண்டும்.

_________________________________
நன்றி: விடுதலைப்புலிகள், கார்த்திகை 2006.
படம்: தமிழ்நெட்

_____________________________________________

Labels: ,

மலையக மக்களின் போராட்டம்

மறுபக்கம் - கோகர்ணன்
~~~~~~~~~~~~~~~~~~~~

தோட்டத் தொழிலாளர் தமக்கு நியாயமான சம்பளங் கேட்டுப் போராட முற்பட்டது இதுதான் முதற் தடவையல்ல. தொழிலாளர்களின் போராட்டங்களைக் காட்டித் தங்களை அரசியலில் வலிமைப்படுத்திக் கொண்டு; முடிவில் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துடன் விருந்துபசாரங்களிடையே சமரசங்களை ஏற்படுத்திக் கொண்டு தொழிலாளர்களிடம் நாங்கள் எதைஎதயோ வென்று தந்து விட்டதாக வீரம் பேசிவந்த மலையகத் தொழிற்சங்க, அரசியல் தலைவர்கள் இப்போது தடுமாறுகிறார்கள்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பற்றி மக்கள் மத்தியில் எழுந்த அவநம்பிக்கையின் விளைவாகவே மலையக மக்கள் முன்னணி உருவானது. ஆனால், இரண்டுக்கும் இடையில் உள்ள வேறுபாடு குறையத் தொடங்கி இன்று இல்லாமலே போய்விட்டது. அமைச்சர் பதவிகளைப் பெறுவதற்குப் பேரம்பேசுவதில் இரண்டு நிறுவனங்களுக்குமிடையில் உள்ள போட்டியையும் அவர்களுக்குப் பின்னால் நிற்கிற வணிக நலன்களையும் விட்டால் ஒரு வேறுபாடும் இல்லை எனலாம். மலையகத் தோட்டத் தொழிலாளர் என்ற வாக்கு வங்கியையும் அவர்களிடம் வசூலிக்கிற சந்தாப் பணத்தையும் தவிர வேறெதைப் பற்றியும் மலையகத் தொழிற்சங்கத் தலைமைகட்கோ அரசியல் தலைமைகட்கோ, அக்கறை இல்லை என்பது தெளிவான விடயம்.

மலையகத் தமிழ் மக்களிடம் தலைவர்கள் போகிறார்கள் என்றால் தேர்தல் மாதிரி ஏதாவது சிறப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது என்று தான் பொருள். ஒவ்வொரு தேர்தலின் போதும் வழங்கப்படுகிற வாக்குறுதிகள் தேர்தல் முடியு முன்னமே மறக்கப்படுகின்றன. அதைவிட மின்சாரம் வழங்குவதாகச் சொல்லி மின்கம்பங்களைக் கொண்டுபோய் வைத்துவிட்டு தேர்தல் வாக்களிப்பு முடிந்த கையோடே எடுத்துக் கொண்டு போனது போன்ற கீழ்த்தரமான நாடகங்கள் கூட நடத்தப்பட்டுள்ளன.

மலையகத் தோட்டத் தொழிலாளர்களும் மக்களும் தமது விரக்தியைப் பல வழிகளில் தெரிவித்து வந்துள்ளனர். தொழிற் சங்கங்களின் உறுப்பினர் தொகை குறைந்துள்ளது. சென்ற உள்ளூராட்சித் தேர்தலின் போது பிரதான அரசியல் கட்சிகளின் வாக்குகளின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டது. எனினும், ஒரு மாற்று அரசியல் தலைமை உருவாகக்கூடிய சூழ்நிலை ஏற்படவில்லை. அப்படி ஒன்று ஏற்பட்டிருந்தாலும், மாற்று அரசியல் தலைமை இன்னுமொரு பாராளுமன்றத் தேர்தல் அரசியல் தரகுக் கட்சியாகவும் தொழிற்சங்கக் கட்சியாகவும் இருக்கும் என்றால் அது ஒரு மாற்றமாக இருக்காது. வேறு ஒருபோதும் ஒரு கட்சிக் கொடியும் வேறு ஒரு தலைவரின் முகமும் உண்மையான மாற்றமில்லை என்பதைத் திரும்பத் திரும்பக் கண்டிருக்கிறோம்.

மலையக அரசியல் தலைமைகளின் துரோகம் அப்பட்டமாகவே வெளிப்பட்ட ஒரு பிரச்சினை மேல் கொத்மலை நீர்மின் திட்டம் தொடர்பானது. எல்லாப் பாராளுமன்றக் கட்சிகளும் தலைவர்களும் சேர்ந்து, மலையகத் தமிழ் மக்கள காட்டிக் கொடுத்துவிட்டனர் என்பது தான் நாம் கண்ட உண்மை. போராட்டத்தை ஆதரித்துக் கொழும்பிலிருந்து அறிக்கை விடுவதும் திரைக்குப் பின்னாலிருந்து போராட்டத்துக்குக் குழி பறிப்பதும் தங்களது ஆதரவாளர்களைக் கொண்டு எதிர்ப் பிரசாரம் செய்வதும் மக்கள் பங்குபற்றாமலிருக்கும் விதமாக வதந்திகளைப் பரப்புவதும் பற்றி எத்தனை தடவைகள் கேள்விப்பட்டுக் கொதித்திருக்கிறோம். ஆனால், அதுதான் மலையக அரசியலின் யதார்த்தம். அதை மாற்றாமல் மலையகத்திற்கு விடிவு இல்லை.

மலையகம் கல்வியில் இன்னமும் பின்தங்கிய ஒரு பிரதேசமாகவே இருந்து வருகிறது. கடந்த இரண்டு மூன்று தசாப்தங்களில் மலையகத்தில் கல்வி பற்றிய விழிப்புணர்ச்சி கணிசமான அளவுக்குப் பரவியுள்ளது. கல்வி வாய்ப்புக்களுக்கான வேட்கையை நிறைவு செய்ய இன்னமும் கல்வி வசதிகள் மிகவும் போதாமலே் உள்ளன. இந்தவிதமான நெருக்கடிகளின் நடுவே தோட்டத் தொழிலாளர் குடும்பங்களிலிருந்து உருவான படித்த இளைஞர்கள் பரம்பரை ஒன்று உருவாகியுள்ளது. இவர்களில் ஒரு பகுதியினர் தமது கல்வி மூலம் தோட்ட வாழ்க்கைச் சூழலிலிருந்து தப்பித் தம்மை மேலும் மேம்படுத்திக் கொள்ள முயல்வதோடு நிறுத்திக் கொள்கின்றனர். இன்னொரு பகுதியினர் தமக்குக் கிடைத்த வாய்ப்புக்களை எல்லாரோடும் பகிர்ந்து மலையகத் தமிழ்ச் சமூகத்தை அதன் தாழ் நிலையிலிருந்து விடுவிக்கப் பாடுபடுகின்றனர். அவர்களிடம் சமூகம் பற்றிய அக்கறையும் விழிப்புணர்ச்சியும் உள்ளது. அது சமூகத்தில் அடுத்த தலைமுறையினரிடமும் தொற்றிக் கொள்ளுகிறது. தோட்டத் தொழிலாளரிடையும் தொற்றிக் கொள்ளுகிறது. இது மலையக மக்களை ஏய்த்துப் பிழைக்கிறவர்களது பிழைப்பில் மண்ணை அள்ளிப்போடும் என்பதனால் மலையக மக்களின் கல்வி உயர்வுக்கு எதிரான தடைக்கற்கள் பேரினவாத அதிகார வர்க்கத்தினரால் மட்டுமில்லாமல் மலையகத் தமிழ்ச் சமூகத்தில் உள்ள சில சுயநலமிகளாலும் எழுப்பப்படுகின்றன.

கடந்த சில ஆண்டுகளாக மலையக மக்கள் மத்தியிலே போராட்ட உணர்வு வலுப்பட்டு வந்துள்ளது. அது சரியாக நெறிப்படுத்தப்படுமானால் மலையக மக்களின் விடிவுகாலம் வெகு தொலைவில் இல்லை. எனினும், சரியான வழி நடத்தல் இல்லாமையால் போராட்டங்கள் எதிர்பார்த்த வெற்றியை எட்ட முன்னமே போராட்டங்கள் முடக்கப்படுமாயின், தொழிலாளரது போராட்ட உறுதி தளர்ந்து போகலாம். அதன் விளைவாக எதிர்காலப் போராட்டங்கள் பாதிக்கப்படலாம். எனவே போராட்டங்களின் வெற்றி தோல்விகட்கும் அப்பால், தோட்டத் தொழிலாளரின் உண்மையான நட்புச் சக்திகள் யார், நம்பகமான தொழிலாளர் தலைவர்கள் யார், சரியான போராட்ட உபாயங்கள் எவை என்பனவற்றை மட்டுமல்லாமல் ஒவ்வொரு தவறும் ஏன் நிகழ்ந்தது. துரோகங்கள் ஏன், எப்படி நிகழுகின்றன என்பன பற்றி அவர்கள் மீளாய்வு செய்வது முக்கியமானது.

கடந்த காலங்களிலிருந்து பயனுள்ள பாடங்களைக் கற்றதனாலேயே தொழிலாளர்கள் இம்முறை தங்களது தொழிற்சங்க அரசியல் தலைமைகளின் வழிநடத்தல்கட்குக் கட்டுப்படாமல் `மெதுவாக வேலை செய்தல்' என்கிற போராட்டத்தின் பயனின்மையை உணர்ந்து முழுமையான வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். எனினும், அவர்கள் சார்பாக முதலாளிமாருடன் பேசிச் சம்பளம் பற்றிய உடன்பாட்டுக்கு வருகிற உரிமை சில தொழிற்சங்கத் தலைமைகளிடமே உள்ளது. அந்தத் தலைமைகள் கடந்த காலங்களில் தொழிலாளர்கள் சார்பாகப் பேசுவதாகச் சொல்லி எதையுமே வென்றெடுக்கத் தவறியதைத் தொழிலாளர்கள் அறிவார்கள். முதலாளிமாரும் தலைவர்களும் சேர்ந்து இம்முறை தொழிலாளர்களை ஏமாற்றுவது எளிதாக இராது. ஆனாலும் தொழிலாளரால் எவ்வளவு காலத்திற்கு வருமானம் இல்லாமல் தாக்குப் பிடிக்க இயலும் என்பதையும் நாம் மனதில் இருத்த வேண்டும். நாளாந்தம் கோடிக்கணக்கான ரூபாக்களை இழப்பதாக முறையிடுகிற முதலாளிமாரின் தந்திரோபாயம் தொழிலாளரைக் காயப்போட்டுப் பணிய வைப்பதாகவும் இருக்கும் என்பது பற்றி நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இன்று ஆட்சியிலிருப்பது தொழிலாளர்கட்கு நட்பான ஒரு அரசாங்கமல்ல. அதைவிடவும் அதன் பேரினவாதப் போக்குக்கு மலையகத் தமிழர் வடக்குக் கிழக்கின் தமிழரைவிடக் குறைவான இலக்கல்ல. எனவே நியாயமான ஒரு தீர்வை வந்தடைய அரசாங்கம் எவ்வகையிலும் தொழிலாளர் சார்பாகக் குறுக்கிடப் போவதில்லை.

எனவே இப் போராட்டம் தொடர்வதானால் அதற்கான ஆதரவு நாட்டில் உள்ள முற்போக்குச் சக்திகளிடமிருந்தும் நியாய உணர்வுள்ள சகலரிடமிருந்தும் வெளிவெளியாகவே கிடைத்தாக வேண்டும். அதுமட்டுமல்லாமல், எதிர்கால ஊதியங்கள் பற்றிய சில பொதுவான உடன்பாடுகளை வென்றெடுப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

தோட்டத் தொழிலாளரின் நாட் சம்பளம் நாட்டின் பிற பகுதிகளில் ஒருவிதமான தொழிற் திறமையுமற்ற கூலியாட்கள் பெறுவதில் அரைப்பங்கிற்கும் குறைய என்பதைப் பற்றி யாருமே பேசுவதில்லை. அவர்கள் கேட்கிற முந்நூறு ரூபா நாட் சம்பளத்திற்போல எத்தனை மடங்கு சம்பாதிக்கிறவர்கள், தோட்டத் தொழிலாளர் பெறுகிற சம்பளம் வயிற்றைக் கழுவவே மட்டுமட்டாகத்தான் போதுமானதாயுள்ளது என்பதை நினைத்துப் பார்க்கிறார்கள்.

கொலனிய காலத்திலிருந்து தோட்டத் தொழிலாளர்கள் கடுமையாகச் சுரண்டப்பட்டு வந்துள்ளனர். என்றாலும் அப்போது தொழிலாளர்களுக்கு இருந்த சில உரிமைகளும் சலுகைகளும் உத்தரவாதங்களும் இப்போதைய தனியார் மயமாக்கப்பட்ட தோட்டங்களில் இல்லாமற் போய்விட்டன. அவர்களுடைய குழந்தைகளுடைய எதிர்காலம் தோட்டங்களுக்குள்ளேயே அதி குறைந்த ஊதியத்திற்கு அதிகூடிய உழைப்பு என்று முடங்கிப்போகக் கூடாது. எனவே அவர்களுக்கு வழங்கப்படுகிற ஊதியம் அவர்களதும் அவர்களது குழந்தைகளதும் அடிப்படை உரிமைகளில் முக்கியமானவையான கல்வி வாய்ப்பு, நோயற்ற வாழ்வு போன்றவற்றையும் உறுதிப்படுத்துவதாக அமைய வேண்டும்.

இப்போதைய வேலை நிறுத்தம் மலையகத்தில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்ச்சியில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னோக்கிய ஒரு பாய்ச்சல் என்பதில் ஐயமில்லை. மலையக அரசியல் தலைமைகளை அது கொஞ்சம் நிமிர்ந்து உட்கார வைத்திருக்கிறது என்பதில் ஐயமில்லை. எனினும் மலையகத் தமிழ் மக்களும் தோட்டத் தொழிலாளரும் தமக்குள்ளிருந்து ஒரு மாற்று அரசியல் தலைமையை மட்டுமில்லாமல் ஒரு மாற்று அரசியல் பாதையையும் வகுக்கும் அளவுக்கு அந்த விழிப்புணர்ச்சி வளர வேண்டும். அவ்வளர்ச்சி வெற்றி தோல்விகட்கும் அப்பால் அரசியல் தொழிற்சங்கத் தலைமைகளது பேரங்களுக்கும் சமரசங்கட்கும் அப்பால் ஒவ்வொரு போராட்டத்தினதும் அனுபவங்களூடும் மட்டுமே இயலுமானது.

மலையகத் தொழிலாளரின் பிரச்சினை வெறுமனே ஊதியம் தொடர்பானது மட்டுமல்ல. இன்று அவர்களது இருப்பு மிரட்டலுக்கு உள்ளாகிறது. அவர்களது கல்வி, மருத்துவ உரிமைகள் திட்டமிட்டே மறுக்கப்படுகின்றன. அவர்களது பிரதேசம் சட்டத்தின் உதவியுடனும் சட்டத்தைப் புறக்கணித்தும் பறிக்கப்படுகின்றன. அடிப்படையான வசதிகள் கூட மிகுந்த புறக்கணிப்புக்குள்ளாகின்றன. இது அப்பட்டமான தேசிய இன ஒடுக்கல்.

மலையகத் தோட்டத் தொழிலாளரின் போராட்ட உணர்வு அவர்களது ஒடுக்குமுறையின் அரசியல் பரிமாணங்களையும் தொடவேண்டிய நாளை இன்னமும் அதிகம் பின்போட முடியாது. ஒரு புதிய மலையகத்தை உருவாக்குகிற பொறுப்பை மலையகத் தொழிலாளரும் மலையக மக்களும் தமது கைகளில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
_______________________________________

நன்றி: ஞாயிறு தினக்குரல் December 24, 2006

_____________________________________________

Labels:

Thursday, December 21, 2006

சனநாயகமும் பயங்கரவாதமும்

மறுபக்கம் - கோகர்ணன்

சனாதிபதி என்னைக் கொஞ்சம் ஏய்த்துவிட்டார். என்றாலும் முற்றிலுமாக ஏய்த்துவிடவில்லை. விடுதலைப் புலிகளைத் தடை செய்யாமலே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஒரு தடை மூலம் செய்யக் கூடியவற்றில் ஏறத்தாழ அனைத்தையுமே செய்யவிருப்பதாக நமக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார். எனினும் அவரது சொற்களின் நிதானம் கொஞ்சம் பிசகி வருகிறது. அதனாலோ என்னமோ அவரது அண்மைய வீராவேச உரையைப் பற்றிய ஐலன்ட் 8.12.2006 தலையங்கம், அது ஜோஜ் புஷ்ஷின் ஒரு உரையை நினைவூட்டுகிற விதமாயிருந்தது என்று குறிப்பிட்டிருந்தது. இரண்டு உரைகளும் பயங்கரவாதம் பற்றியன. ஜோஜ் புஷ் இப்போது தனது பயங்கரவாத எதிர்ப்புப் போரில் எத்தகைய மகத்தான வெற்றிகளைச் சந்தித்திருக்கிறார் என்பதை நினைத்த போது இந்த ஒப்பீட்டின் பொருத்தப்பாடு மேலும் அதிகமானதாகவே தெரிந்தது.
இந்தியாவிற் பத்திரிகைகட்கு அளித்த நேர்காணலில் இலங்கையில் பயங்கரவாதத்தை முறியடிக்க சனநாயகம் தடையாக இருப்பதாகச் சொல்லியிருந்தாரென அறிந்தேன். இதே ராஜபக்ஷ நீண்ட கால யூ.என்.பி. ஆட்சி முடிவுக்கு வருகிற சாடைகள் தெரியத் தொடங்கிய போது கதிர்காமம் நோக்கி நீண்ட நடைப் பயணமொன்றை மேற்கொண்டவர். யூ.என்.பி. ஆட்சி, 1987க்கும் 1989 க்கும் நடுவே ஜே.வி.பி. பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டச் சனநாயகம் தடையாயிருந்ததாய் எண்ணிக் கட்டவிழ்த்து விட்ட அடக்குமுறையில் ஆயிரக்கணக்கான ஜே.வி.பி.யினர் மட்டுமன்றி, எத்தனையோ அப்பாவிப் பொது மக்களும் அழிந்தனர். அப்போது ஜே.வி.பி.யின் பயங்கரவாதத்திற்கும் யூ.என்.பி. ஆட்சியின் சனநாயக மறுப்புக்குமிடையே தெரிவிருந்தால் ராஜபக்ஷவினது தெரிவு சனநாயக மறுப்பாக இருந்திராது. ஆனால், இன்று அவரது நடத்தை வடக்கு, கிழக்கில் வாழுகின்ற தமிழர்களது அடிப்படை உரிமைகளை மறுப்பதாகவும் பிற பகுதிகளில் வாழுகிறவர்களது சகஜ வாழ்வுக்கான உரிமைகளில் குறுக்கிடுவதாகவும் அமைந்துள்ளது.

சர்வாதிகார ஆட்சிகளை நடத்துவதாக ஊடகங்களால் குற்றஞ்சாட்டப்படுகிற கஸ்ஷ்ரோ, சாவெஸ் போன்றோரால் நாட்டு மக்களிடையே சிரித்த முகத்துடன் உலாவி உரையாட முடிகிறது. நமது நாட்டின் தலைவர்கள் தெருவால் வருகிறார்களென்றால் வெகு தொலைவிலேயே வாகனப் போக்குவரத்து தடைப்படுத்தப்படுகிறது. எனினும், எங்கள் சனநாயகத்தின் காவலர்களால் அச்சமின்றி உலாவ முடியவில்லை. அதேவேளை, சனநாயக மறுப்புக்கு எதிராகக் குரல் கொடுக்கிற தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களையும் அரசியல் தலைவர்களையும் கொழும்பு நகரின் பாதுகாப்பிற்கு நடுவே படுகொலை செய்யப்படக் கூடியதாயுள்ளது.

அண்மையிற் கொலை செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் சாவுக்குக் காரணமானவர்களைக் கண்டு பிடிக்கப் பிரித்தானியாவிலிருந்து ஸ்கொட்லன்ட் யாட் குற்ற விசாரணை நிபுணர்களை அழைப்பிக்கப் போவதாகச் சனாதிபதி அறிவித்தார். அதற்கு எதிர்வினையாக யாரோ சனாதிபதி ஸ்கொட்லன்ட் யாட் வரை போகத் தேவையில்லை. தனது "பக்யாட்டிலே"(கொல்லைப் புறத்திலே) தேடினாலே போதுமானது என்று சொன்னதாக வாசித்த நினைவு. சனாதிபதி எங்கே தேடினாரோ தெரியாது. விடுதலைப் புலிகளே கொலைகள் செய்தார்கள் என்று அவர் சொன்னதாக ஐலன்ட் மாகாணப் பதிப்பில் முதற் பக்கத்தில் கொட்டை எழுத்தில் பிரதான செய்தித் தலைப்பு வெளியாகியிருந்தது. இது மிகவும் சிறுபிள்ளைத்தனமாயும் கொலையை மிகவும் விளையாட்டுத்தனமாகக் கணிப்பதாயும் அமைந்திருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, இது இறந்தவரை அவமதிப்பதாக இருந்தது.

அரச படைகளால் மூதூரிற் கொல்லப்பட்டவர்கள் பற்றிய விசாரணை முடக்கப்பட்டது என்னை வியக்கச் செய்யவில்லை. சூரியகந்த படுகொலைகள் முதல் செம்மணி வரையும் அப்பாலும் மரண விசாரணைகள் ஒரே விதமாகத் தான் நடத்தப்பட்டு வருகின்றன. இன்று நிலைமைகள் மேலுங் கொஞ்சம் மோசமாகிவிட்டன என்று சொல்லலாம். எனினும், அண்மை வரை, கோமாளித்தனமான கருத்துகளைத் தெரிவிப்பதற்குச் சனாதிபதி பிறரையே பயன்படுத்தி வந்துள்ளார். அதிலும் பாலித கோஹண, கெஹெலிய ரம்புக்வெல்ல ஆகிய இருவரும் மிகவும் சிறப்பாகவே அப் பணியை ஆற்றி வந்திருக்கின்றனர். சக்தி தொலைக்காட்சியிலும் `ஐ' தமிழ் நிகழ்ச்சிகளிலும் வருகிற `மெகா' தொடர் நாடகங்களைப் பார்த்துச் சிரிக்க இயலாதவர்கட்கு கோஹணவையும் ரம்புக்வெல்லவையும் பரிந்துரைத்திருக்கிறேன். அப்போதும் சிரிக்க இயலாதவர்கள் ஒரு உளவியல் மருத்துவரைக் கலந்தாலோசிப்பது உத்தமம். இப்போது, நம்மைச் சிரிக்க வைக்கிற முயற்சியில் சனாதிபதியும் தனது பங்கை வழங்கப் போகிறார் என்று நாம் நம்பலாம்.

தேசிய இனப்பிரச்சினையின் தீர்வுக்காக அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் பெரும்பான்மையினரின் பரிந்துரை சனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதிலுள்ள, அதிகாரப் பரவலாக்கல் ஆலோசனைகள் போதுமானவையா என்பது ஒருபுறமிருக்க, அவற்றைச் சனாதிபதி ஏற்பாரா (அல்லது ஏற்க அனுமதிக்கப்படுவாரா) என்கிற கேள்வி என் மனதில் எழுந்தது. கருத்து வேறுபாட்டைத் தெரிவித்துச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சிறுபான்மை அறிக்கைகளில் நிச்சயமாகச் சனாதிபதிக்கு ஏற்புடைய பல்வேறு கருத்துகள் இருக்குமென நம்பலாம்.

தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் பலவும் வடக்குக் கிழக்கில் மட்டுமன்றித் தெற்கிலும் தீர்க்கப்படாமல் இருக்கின்றன. ஆட்கடத்தல், கப்பம், கொலைகள், மிரட்டல்கள் போன்றவை பலரும் முன்பு சந்தித்திராத பிரச்சினைகள். இவற்றைப் பற்றி நடவடிக்கை எடுப்பதற்குப் பொலிஸ் துறை எவ்வளவு ஆயத்தமாக உள்ளது என்று சொல்வது கடினம். ஆயத்தமாக இருக்கிற ஒவ்வொரு தருணத்திலும் மேலிடத்து அரசியற் குறுக்கீடு குற்றவாளிகளுக்கு உதவிக்கு வந்துவிடுகிறது. இந்த நிலைமையைச் சமாளிக்க இயலாத ஒரு அரசாங்கம், தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு ஒன்று நடைமுறைப்படுத்தப்படுமாயின், அதற்குத் தடையாக எழுகிற தீய சக்திகளை எப்படிக் கையாளும் என்று எனக்குத் தெரியவில்லை. அதிலும் முக்கியமாக, குடாநாட்டுக்கும் வாகரைக்கும் உணவை அனுப்பி வைப்பதற்கே தயக்கங்காட்டுகிற ஒரு அரசாங்கத்திடம் நாம் எதை எதிர்பார்க்க இயலும்?

மனிதரைத் துன்புறுத்தியும் பட்டினியிட்டும் பணிய வைக்கிற உபாயத்தைக் கையாள்வதில் இலங்கை அரசு அமெரிக்காவையும் அதிலுஞ் சிறப்பாக அமெரிக்காவின் செல்லப்பிள்ளையும் குண்டனுமான இஸ்ரேலையும் முழுமையாகப் பின்பற்றத் தொடங்கியுள்ளது. அதனாலேதானோ என்னவோ இலங்கை தனது அயல் விவகார அலுவல்களில் முதல் முறையாக, இஸ்ரேலின் அத்து மீறல்களைக் கண்டித்து ஐ.நா. பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இஸ்ரேலுக்கு எதிராக வாக்களிக்காமல் ஒதுங்கிக் கொண்டது. இதைக் கண்டித்துப் பேரினவாத ஏடான சண்டே ரைம்ஸ் கூட எழுதியிருந்தது. இதில் விசேடம் ஏதெனில், ஜே.ஆர்.ஜயவர்தன ஆட்சியின் கீழ் இலங்கையும் இஸ்ரேலும் மிக நெருக்கமான உறவைப் பேணிய காலத்திற் கூட இலங்கை ஐ.நா. பொதுச்சபையில் இஸ்ரேலிய அத்துமீறல்களைக் கண்டித்து வாக்களிக்கத் தவறியதில்லை. இது வரப்போகிற அரசியற் போக்குகட்குக் கட்டியங்கூறுகிற ஒரு நிகழ்வா என்பதை வாசகர்கள் ஊகித்துக் கொள்ளலாம்.

இந்த நாட்டின் பேரினவாதத் தலைமைகட்கு இந்த நாட்டின் மீது பற்றோ அதன் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையோ இருப்பதாக நான் நம்பவில்லை. பேரினவாதத்திற்கு ஆதரவான பெரிய முதலாளிய நிறுவனங்கள் கூடத் தமது மூலதனத்தின் பெரும் பகுதியை அந்நிய நாடுகளிலேயே வைத்துள்ளனர். மிகுதியான "தேசப்பற்றுடன்" பேரினவாதத்தைப் போதிக்கிறவர்கள் பலர் அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளின் பிரசைகளாகி இலங்கையில் உள்ள தமது சொத்துகள், வருமானங்கள் என்பன மீதான வரிகளைக் குறைக்கவும் நிபந்தனையில்லாமல் இங்கே தொழில் பார்க்கவும் பணம் சம்பாதிக்கவும் வந்து போக வசதியாக இலங்கையிலும் பிரசைகளாகப் பதிவு செய்துகொண்டுள்ளனர். இதை, இலங்கையின் வளத்துக்காகத் தங்களை ஓடாகத் தேய்த்து அழித்தும், இலங்கையின் பிரசாவுரிமை மறுக்கப்பட்ட மலையகத் தமிழரின் கதையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் பயனிருக்கும்.

சனாதிபதி ராஜபக்ஷவின் ஆலோசகர்களாக இங்கு வந்து சேர்ந்திருக்கிற அவரது சகோதரர்கள் இருவர், மிலிந்த மொறகொட போல அமெரிக்க - இலங்கை இரட்டைப் பிரசைகள். எந்த இரட்டைப் பிரசையும் இந்த நாட்டுக்கு என்ன துரோகம் செய்தாலும், இந்த நாட்டைக் குட்டிச் சுவராக்கத் தம்மாலான எல்லாவற்றையும் செய்தாலும், அவருக்கு எதுவும் ஆகாது. அவரது இலங்கைக் குடியுரிமை மறுதலிக்கப்படாது. மாறாக, அமெரிக்க நலன்கட்கு விரோதமாக அவர் எதையேனும் செய்தால் அமெரிக்க அதிகார நிறுவனம் அவரை விட்டு வைக்கமாட்டாது.

இலங்கையின் ஆட்சி முறையின் சீரழிவும் இலங்கை அரசின் பேரினவாத இன ஒழிப்பும் பற்றி இந்தியாவோ, மேலை நாடுகளோ திருப்தியுடன் இல்லை. ஏனெனில், அது அவர்களது முதலீடுகட்கு நல்லதல்ல. அவர்கள் எதிர்பார்ப்பது இலங்கை மீதான பொருளியல் அரசியல், இராணுவ ஆதிக்கம். இலங்கை அரசாங்கம் அதற்குத் தடையாக இல்லாதளவில் அவை இலங்கையில் குறுக்கிடப் போவதில்லை. ஏனெனில், இலங்கையில் பேரினவாத ஒடுக்கலிலிருந்து விடுதலை பெறவும் நாட்டில் உண்மையான சனநாயகத்துக்காகவும் போராடுகிற சக்திகள் அந்நிய மேலாதிக்கவாதிகளுக்கு நம்பகமானவையாக இருக்க முடியாது. அவர்களைப் பொறுத்தளவில், விடுதலை உணர்வு ஆபத்தானது, விடுதலைப் போராட்டம் பயங்கரமானது.

_____________________________
நன்றி: ஞாயிறு தினக்குரல் December 17, 2006

_____________________________________________

Labels:

Monday, December 11, 2006

சிங்கள மனப்பான்மையும் சிறிலங்கா நிலைமையும்

மறுபக்கம் - கோகர்ணன்

இப் பத்தி வெளிவருவதற்கு முன்னமே மீளவும் விடுதலைப் புலிகள் மீதான தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அறிவித்தல் ஒன்று வெளியாகியிருக்கலாம். தென்னிலங்கையில் மறுபடியும் உக்கிரமாக மூட்டப்பட்டுள்ள பேரினவாத உணர்வும் அதையொட்டி வளர்க்கப்படுகின்ற இனவெறியும் தமிழர் மீதான வெறுப்பும் கிளறி விட்ட எதிர்பார்ப்புகளில் இத்தடையும் வடக்கு - கிழக்கு ஒன்றிணைப்பிற்கு எதிரான தீர்ப்பும் உள்ளடங்குவன. 26 டிசம்பர் 2004 அனர்த்தத்தின் பின்பு பாதிக்கப்பட்ட தமிழரும் முஸ்லிம்களும் பற்றி சிங்கள மக்கள் நடுவே எழுந்த அனுதாப உணர்வின் ஒரு மங்கலான சுவட்டைக் கூட நிவாரண வேலைகட்கான பணிகள் நீதிமன்றத்தின் மூலம் முடக்கப்பட்ட போது காண இயலாதிருந்தது.
தமிழ் மக்களும் விடுதலைப் புலிகளும் ஒன்றே என்று கருதக்கூடாது என அரசாங்கம் சொல்லுகிறது. அண்மையில் விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் பிரதிநிதிகளே அல்ல என்று அரசாங்கத்துக்கு ஒத்துப்பாடுகிறவர்கள் சிலர் சொல்லி வந்ததை ஜனாதிபதியும் இந்தியாவில் எதிரொலித்துள்ளார். எனினும் இராணுவத்தினரது தாக்குதல்களும் விமானப்படையினரின் குண்டு வீச்சும் தமிழ் மக்களுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே எந்த வேறுபாட்டையும் காணுவதாகத் தெரியவில்லை. இவையெல்லாம் ஏற்கக்கூடிய விடயங்களாகத் தென்னிலங்கையிற் காணப்படுகின்றன என்றால், தமிழ் மக்கள் பற்றி சிங்கள மக்களின் மனதிற் பதிய வைக்கப்பட்டுள்ள சில படிமங்கள் அதற்கான முக்கியமான காரணங்களாக உள்ளன. ஒருபுறம், விடுதலைப் புலிகளைப் பெரும்பாலான தமிழ் மக்கள் நிராகரிக்கின்றனர் என்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளாலேயே அதிகம் துன்புறுத்தப்படுகின்றனர் என்றும் தமிழ் மக்களின் இன்றைய அவல நிலைக்கு விடுதலைப் புலிகளே காரணம் என்றும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள தமிழர்கள் அச்சத்தின் காரணமாகவே விடுதலைப் புலிகளுடன் இணங்கி நடப்பதாகவும் பல சிங்கள மக்கள் நம்புகின்றனர். இவ்வாறான நம்பிக்கையின் அடிப்படியிலேயே விடுதலைப் புலிகளுடனான உடன்படிக்கைகளை அரசாங்கம் முறிப்பது நியாயப்படுத்தப்படுகிறது.

அதேவேளை, ஒவ்வொரு தமிழரையும், அவர் அரசாங்கத்தின் நிபந்தனையற்ற ஆதரவாளராக இருந்தாற்கூட, ஒரு சந்தேக நபராகவும், விடுதலைப் புலிகளின் அனுதாபியாகவோ ஆதரவாளராகவோ இல்லாது போயினுங் கூட, அவர் ஒரு தமிழ் இனவாதியாயும், சிங்கள இன விரோதியாயும் இருக்கக் கூடியவர் என்ற விதமாகத் தமிழர் மீதான பொதுவான அவநம்பிக்கை நிலவுகிறது. என்றைக்குமே விடுதலைப் புலிகளின் மீது அனுதாபமிருந்தவராகவோ வடக்கு - கிழக்கின் தமிழ் மக்களுடன் அடையாளங் காணப்படவோ இயலாதவராக ஒருவர் இருந்தாலும் அவர் பேரினவாதிகளை விமர்சித்தோ தமிழருக்கு இழைக்கப்பட்ட ஏதாவது ஒரு சமூக அநீதியைக் கண்டித்தோ பேசியிருந்தால், அங்கே முக்கியமாவது அவரது கருத்தின் நியாயமோ நியாயமின்மையோ அல்ல; அவர் தமிழரா என்பது மட்டுமே அங்கு முக்கியமாகிறது.

1983 ஆம் ஆண்டு இனப்படுகொலைகட்குச் சில மாதங்கள் முன்பென்று நினைக்கிறேன். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஒரு கருத்தரங்கு நடந்தது. அது அமெரிக்காவிலிருந்து தமது கல்விப் பயிற்சியின் ஒரு பகுதியாக இலங்கையின் சமூகவியல் பற்றிக் கற்க வந்த ஒரு மாணவர் குழாமுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் ஒருவர் தமிழ்க் கண்ணோட்டத்திலிருந்தும் இன்னொருவர் சிங்களக் கண்ணோட்டத்திலிருந்தும் இலங்கையின் இனப்பிரச்சினை பற்றிப் பேசுவதற்கும் அதன் பின்பான கலந்துரையாடலுக்கும் திட்டமிடப்பட்டிருந்தது. கண்டிப் பகுதியில் தமிழ்த் தேசியவாதத்தை வற்புறுத்தி ஆங்கிலத்தில் உரையாற்றக்கூடிய எவரும் அகப்படாததாலோ அப்படி எவரையேனும் அறிந்திருந்தால் அவர் ஏற்பாட்டாளர்கட்கு உடன்பாடானவராக இல்லாததாலோ என்னவோ ஒரு தமிழ் இடதுசாரி அரசியல் ஆய்வாளரை அணுகினர். அவர் தன்னுடைய கண்ணோட்டம் தமிழ்க் கண்ணோட்டமோ சிங்களக் கண்ணோட்டமோ இலங்கைக் கண்ணோட்டமோ கூட இல்லை, அது ஒரு மாக்ஸியக் கண்ணோட்டமே என்பதால், தன்னால் வர்க்கத்தாலும் வாழ்விடச் சூழலாலும் வேறுபடுகிற எந்த ஒரு `தமிழ்க்' கண்ணோட்டத்தையும் நேர்மையாக முன்வைக்க இயலாது என்று மறுத்துவிட்டார். எனவே, ஒரு தமிழர் தேவை என்பதால் அவரையும் ஒரு பிரபல சிங்களப் பேரினவாதப் பிரமுகரையும் தமிழரது பிரச்சினையை நன்கு அறிந்த ஒரு சிங்கள விரிவுரையாளரையும் பங்குபற்றுமாறு அழைத்திருந்தனர்.

இடதுசாரிக் கண்ணோட்டத்தில் ஒரு தமிழர் பேசியதையிட்டு அங்கு வந்திருந்த சிங்கள புத்திஜீவிகளில் ஒரு பகுதியினர் அதுவும் ஒரு தமிழ்க் கண்ணோட்டமென்றும் இன்னொரு பகுதியினர் அது ஒருவகையிலான மாக்ஸியக் கண்ணோட்டமென்றும் நினைத்தனர். எனினும் ஒரு தமிழ்க் கண்ணோட்டத்தை, அது தன்னுடைய கருத்தல்ல என்பதை மிகவும் தெளிவாக உணர்த்திக்கூட, ஒரு சிங்களவர் பேசுவதைக் கேட்டுக் கொதிப்புற்ற ஒரு சிங்களப் பிரமுகர் இரத்த அழுத்தம்மேற்பட்டு அவ்விடத்தில் மயக்கமானார். சிங்களவர் ஒருவரிடமிருந்து சிங்களப் பேரினவாதக் கருத்தை மட்டுமே எதிர்பார்க்க வேண்டும் என்ற மனநிலையும், அவ்வாறே தமிழரும் முஸ்லிம்களும் தமிழ், முஸ்லிம் இனவாத அடிப்படையிலேயே சிந்திக்கின்றனர் என்ற எண்ணமும் இன்று மேலும் வலுப்பட்டுள்ளது. 1970 ஆம் ஆண்டு தரப்படுத்தல் முறைக்கு அத்திவாரமாக தமிழ் மாணவர்கட்கு அதிகப்படியான புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளதாகப் பத்திரிகைகளில் கருத்துகள் பரப்பப்பட்டதைக் கண்டித்து அது பற்றிய ஒரு விசாரணையின் முடிவின்றி அவ்வாறான கருத்துகளைப் பரப்புவது தவறு என்று இரண்டு சிங்கள விரிவுரையாளர்கள் ஆங்கில நாளேடொன்றுக்குக் கடிதம் எழுதினர். அதற்கு எதிர்வினையாக அவர்கட்குத் தனிப்பட்ட முறையில் இனத் துரோகி என்று நிந்தித்தும் மிரட்டியும் சில கடிதங்கள் அனுப்பப்பட்டன. அதே காலத்தில் தமிழ், முஸ்லிம் மக்களிடையிலும் இதே விதமான போக்கு விருத்தி பெற்று வந்துள்ளது என என்னால் உறுதியாகக் கூற முடியும்.

விடுதலைப்புலிகள் ஐக்கிய இலங்கைக்குட்பட்ட தீர்வொன்றுக்கு உடன்பட்டிருந்த ஏறத்தாழ ஐந்து ஆண்டுக் காலத்தில் விடுதலைப்புலிகளின் இந்த மெச்சத்தக்க விட்டுக் கொடுப்பிற்கு அதை அறிவித்த பின் உடனடியாகக் கிடைத்த பாராட்டுகளின் பிறகு, ஒரு புறம் "ஹிந்து" பத்திரிகை நிறுவனம் உட்பட்ட அந்நிய விஷமிகளும் உள்ளூர் விஷமிகளும் விடுதலைப் புலிகளின் நோக்கம் எப்போதுமே பிரிவினை தான் என்று விஷமப் பிரசாரத்தில் இறங்கினர். அதன் பின்பு, குறிப்பாக 2003 இறுதிப் பகுதியிலிருந்து தமிழ் மக்களுக்கு ஐக்கிய இலங்கைக்குள் சுயாட்சிக்கு இடமிராது என்றும் அவர்களது எதிர்காலம் நிச்சயமற்றது என்றும் வலியுறுத்துகிற விதமாகவே அரசாங்கமும் அதன் படைகளும் நடந்து கொண்டுள்ளன. கடல்கோளுக்குப் பின்பான அரசாங்க நடவடிக்கை ஒவ்வொன்றும் விடுதலைப்புலிகளைப் பணிய வைக்கிற நோக்குடனும் அதை வசதிப்படுத்தும் முறையில் தமிழ் மக்களைத் துன்புறுத்துகிற முறையிலுமே மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. தேசிய ஐக்கியம் என்பது வெவ்வேறு அடையாளமுள்ள சமூகங்களின் சமத்துவத்தின் மீதும் தேசிய இனங்கள் ஒவ்வொன்றினதும் சுயநிர்ணய உரிமையின் மீதுமே கட்டியெழுப்பப்படக் கூடியதாகும். அல்லாத போது இனங்கள் நடுவே பரஸ்பர சந்தேகமும் பகையுமே வளரும். இப்போது விடுதலைப்புலிகள் தனிநாட்டுக் கோரிக்கையை மீண்டும் எழுப்பியுள்ளனர். இதற்கான பொறுப்பு போர் மூலமான தீர்வைப் பல்வேறு வழிகளிலும் ஆதரித்த அனைவரிடமும் உண்டு. விடுதலைப் புலிகள் வேண்டுவது தனிநாடு மட்டுமே என்ற நிலைக்கு அவர்களைத் தள்ளிப், போர் மூலமே தேசிய இனப்பிரச்சினையைக் தீர்க்க முனைகிற ஒரு அரசாங்கம் வடக்கு - கிழக்கைப் பிரிப்பதோ விடுதலைப் புலிகள் மீது தடை விதிப்பதோ இன்றைய நிலைமைகளை விட மோசமான இன்னொரு நிலையை விடுதலைப் புலிகட்கு ஏற்படுத்தப்போவதில்லை. தமிழ் மக்கள் வடக்கிலும், கிழக்கிலும் அனுபவிக்கிற இன்னல்களில் பெரிய மாற்றம் ஏற்படப் போவதில்லை.

எனினும் நம்மிற் பலர் காணுகிற தேசிய இனப்பிரச்சினையின் பின்னணியில், நாட்டின் பாதுகாப்பு, தேசிய ஒற்றுமை, பயங்கரவாத ஒழிப்பு என்கிற பேர்களில் அடக்குமுறை ஆட்சி ஒன்றுக்கான அத்திவாரம் இடப்பட்டு வருகிறது. அது பற்றி ஒரு வருடத்திற்கும் முன்பிருந்து வெளி வெளியாகவே எச்சரித்து எழுதி வந்திருக்கிறேன். நடக்குமென எதிர்பார்த்த சில நடந்ததையிட்டு மகிழ்ச்சி அடைய இயலவில்லை. ஏனெனில், அவை நடக்கக்கூடாது என்று எச்சரிக்கிற நோக்கிலேயே அவை பற்றி எழுதி வந்திருக்கிறேன்.

இனிமேற் கொண்டு நடக்க உள்ளவற்றை உண்மையான ஜனநாயகவாதிகளும் நேர்மையான இடதுசாரிகளும் மட்டுமே நல்லனவாக அமைக்க இயலும். என்ன காரணங் கொண்டேனும் விடுதலைப்புலிகள் மீதான தடையையும் விடுதலைப் புலிகளுடனான போரையும் ஊக்குவிக்கிறவர்களும் நாட்டின் பாதுகாப்பின் பேரில் எடுக்கப்படுகிற நடவடிக்கைகளை ஆதரிக்கிறவர்களும் அந்த நிகழ்ச்சிகளின் பின்விளைவுகளைத் தாங்களும் அனுபவிப்பர் என்பதற்கு வரலாற்றில் ஆதாரங்கள் பல உள்ளன.

1930 களில் ஜேர்மனியில் உருவான யூத இனவிரோதம் பின்பு கம்யூனிச/ இடதுசாரி விரோதமாகி இறுதியில் சனநாயக விரோதமாகி ஜேர்மனியை ஒரு பெரும் போருக்குள்ளும் பெரும் அழிவுக்குள்ளும் தள்ளிவிட்டது. அந்தப் பாடத்தைக் கற்காதவர்கள் இருக்கிறார்கள். இலங்கையும் அந்த அணிக்குள் இணைய வேண்டுமா?

_______________________________________
நன்றி: ஞாயிறு தினக்குரல் December 10, 2006

Labels:

Thursday, December 07, 2006

ஏழுகட்சிக்கூட்டணி - மாவோயிசப் போராளிகள் ஒப்பந்தம்

மறுபக்கம் - கோகர்ணன்

உலகில் எத்தனையோ முக்கியமான மாற்றங்கள் நடந்து கொண்டுள்ளன. என்றாலும் நமது ஊடகங்கட்கு அவை முக்கியமானவையல்ல. உலகச் செய்திகள் என்றால் அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா தொடர்பானவையாகவே இருக்க முடியும். வேறெங்கேன் ஏதாவது பெரிய நிகழ்வு என்றால் சிலவேளை சிறிது சொல்லப்படும். ஆனால், எது ஏன் என்று நமக்கு விளங்கிக் கொள்ள வாய்ப்பு இராது. ஈராக் பற்றியும் லெபனான் பற்றியும் கொஞ்சங் கூடுதலாகவே சொல்லப்பட்டாலும் அதற்கான காரணம் அங்குள்ள மக்களின் நிலை பற்றியோ மத்திய கிழக்கின் இன்றைய நெருக்கடியின் தன்மை பற்றியோ அறிகிற ஆவல் அல்ல.
பரபரப்பூட்டுகிற செய்திகட்கு எப்போதும் எங்கள் ஏடுகளில் இடமுண்டு. தமிழக நிலவரங்கள் பற்றிய அக்கறையும் உண்டு. ஆனால், இன்னமும் ஜெயலலிதாவா கருணாநிதியா தப்பித்தவறி கோபாலசாமியா என்கிற விதமான கணிப்புக்கட்கு அப்பால் நமது ஊடகவியலாளர்களால் போக முடிவதில்லை. இலங்கைத் தமிழர் பிரச்சினையைத் தீர்க்க "எப்போ வருவாரோ" என்று ஏங்குகிறவர்கள் இருக்கிறார்கள். "சட்டிசுட்டதடா" என்று சலித்துப் போனவர்கள் இருக்கிறார்கள். ஆனால், இந்தியா இலங்கை அரசாங்கத்தை மிரட்டிப் பணிய வைக்குமா என்ற நப்பாசை பலரிடமும் உண்டு. நமது பத்திரிகையாளர்களில் எத்தனை பேரால் கடந்த கால் நூற்றாண்டிற்குள் இந்திய அயற் கொள்கை எவ்வளவு தூரம் மாறியுள்ளது என்று விளங்கவோ விளக்கவோ முடியுமாக இருந்துள்ளது. நம்மிற் பலர் கடல் கடந்த போதும் கிணற்றுத் தவளை மனநிலையிலேயே நமது சமூகம் இன்னமும் உள்ளது.

நமக்கு என்ன நடக்கிறது என்று விளங்காமல் அல்லற்படுகிறோம். தனிப்பட்ட இழுபறிகளுக்குள்ள முக்கியத்துவம் சமூக நிகழ்வுகட்கு இல்லை. உலகில் சமூக முக்கியத்துவமிக்க நிகழ்வுகள் பற்றிய கவனத்தைவிடப் பரபரப்பூட்டும் செய்திகளைவிடக்கூடிய கவனிப்பைப் பெற்றதற்கு ஒரு அண்மைய உதாரணம் ஐ.நா. சபையில் ஹ்யூகோ சாவேஸ், ஜோஜ் புஷ்ஷைச் சாத்தன் என்று அழைத்தது நமது ஊடகங்களில் பெற்ற முக்கியத்துவம். அவர் ஆட்சிக்கு வந்த பின்பு வெனெசுவேலாவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் லத்தீன் அமெரிக்க அரசியலில் ஏற்பட்டுள்ள புதிய எழுச்சி, அதற்குச் சாவேஸின் பங்களிப்பு, அவரது ஆட்சியைக் கவிழ்க்க அமெரிக்கா எடுத்த முயற்சிகளும் அவை மக்களால் முறியடிக்கப்பட்டதும் போன்றவற்றில் ஏதாவது அவ்வளவு முக்கியத்துவம் பெற்றுள்ளதா?

இப்பொழுது மெக்ஸிகோவில் ஒஹாகா மாகாணத்தில் மக்கள் ஆளுநருக்கு எதிரான போராட்டத்தில் அணிதிரண்டு முன்னேறுகின்றனர். சனாதிபதித் தேர்தலில் வாக்குச்சீட்டு மோசடி மூலம் வெற்றி பெற்ற கல்டெரொன் பதவி ஏற்கிறதற்கு எதிரான கிளர்ச்சி வலுக்கிறது. இவையெல்லாம் நமக்கு முக்கியமானவையல்ல.

சரி முழு உலகமும் பற்றி ஏன் சொல்ல வேண்டும்! நமது தென்னாசிய அயலில் ஒரு பெரிய அரசியல் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. அதைப்பற்றியாவது மக்களுக்குச் சரியாகச் சொல்ல வேண்டாமா? ஏதேதோ சொல்லப்பட்டு வந்திருக்கிறது. ஏழுகட்சிக்கூட்டணியும் மாஓ வாதிகளும் ஒரு உடன்படிக்கைக்கு வந்துள்ளனர். அது எதைப் பற்றியதென்றோ அதன் முக்கியமான அம்சங்கள் என்னவென்றோ அறிவதற்கு நமது பத்திரிகையாளர்கட்கு அக்கறையில்லை. ஆனால், மாஓவாதிகள் பாடசாலை மாணவர்களைக் கடத்திக் கொண்டு போய்த் தங்களது படையில் இன்னமும் சேர்க்கிறார்கள் என்று எதுவிதமான விசாரணையும் இல்லாமல் விஷமத்தனமான செய்திகளை வெளியிடுகிறார்கள். தமிழ் மக்கள் அறிய வேண்டியது அது போன்ற கதைகளா? அல்லது எவ்வாறு ஒரு பத்து வருட காலப் போராட்டம் எப்படி ஒரு கொடுங்கோல் முடியாட்சியின் கதையை முடிவுக்குக் கொண்டுவந்தது என்ற கதையா? எப்படி 12,000 பேர் மட்டுமே உயிரிழந்த நிலையில், அதிலும் 10,000 பேர் இராணுவத்தால் கொல்லப்பட்ட நிலையில், மக்களை அணிதிரட்டி நாட்டின் 90 சதவீதப் பரப்பில் மாஓவாதிகளின் அரசியல் அதிகாரத்தை நிறுவ முடிந்தது என்ற கதையா? மாஓவாதிகளின் அதிகாரத்தின் கீழ் எப்படிச் சிறுபான்மைத் தேசிய இனங்களும் சமூகப் பிரிவினரும் தாழ்த்தப்பட்ட சாதியினரும் பெண்களும் தமது உரிமைகளைச் சிறிது சிறிதாக வென்றெடுத்து வந்துள்ளனர் என்ற கதையா?

ரணில் விக்ரமசிங்க, ஏழு கட்சிக் கூட்டணிக்கும் மாஓவாதிகட்குமிடையிலான சமாதான உடன்படிக்கையைப் பாராளுமன்றத்தில் விநியோகிக்கும் படி கேட்டுக் கொள்ளுமளவுக்கு அது ஒரு முன்னுதாரணமான சமாதான உடன்படிக்கையாக உள்ளது. நம்மைப் பொறுத்தவரை மாஓவாதிகள் ஆயுதங்களைக் கையளிப்பதும் பல கட்சிச் சனநாயகத்தை ஏற்பதும் மட்டுமே ஓரளவுக்குக் கவனிப்பைப் பெற்றுள்ளன. எனினும், ஒரு சமாதான உடன்படிக்கை எவற்றையெல்லாம் கணிப்பிலெடுக்க வேண்டும் என்பதற்கு அந்த உடன்படிக்கை மிகுந்த கவனம் காட்டியுள்ள காரணத்தாலேயே ரணில் விக்ரமசிங்க அந்த உடன்படிக்கைக்கு முக்கியத்துவம் வழங்கினார்.

அந்த உடன்படிக்கை போரிட்டுக் கொண்டிருந்த இரண்டு பகுதியினரிடையிலான உடன்படிக்கையல்ல என்பது முக்கியமானது. முடியாட்சிக்கு எதிராகவும் சமூகக் கொடுமைகட்கு எதிராகவும் நீண்டகால ஆயுதப் போராட்டம் நடத்திய மாஓவாதிகட்கும் அந்தப் போராட்டத்தின் விளைவாக முடியாட்சி தனது முடிவை நெருங்கிய வேளை முடியாட்சிக்கு எதிராகத் திரும்பிய பாராளுமன்ற அரசியற்கட்சிகளின் கூட்டணிக்குமிடையே நாட்டின் எதிர்காலம் பற்றி எடுக்கப்பட்ட ஒரு தீர்மானத்தை மையமாகக் கொண்டது அது.

மீண்டும் முடியாட்சியை அதிகாரத்துக்குக் கொண்டு வருவதற்கான சூழ்ச்சிகள் இந்தியத்தரப்பிலும் அதைவிட முக்கியமாக அமெரிக்கத் தரப்பிலும் மேற்கொள்ளப்பட்டு அதற்கான நெருக்குவாரங்கள் ஏழு கட்சிக் கூட்டணிக்கூடாக வழங்கப்பட்டன. அமெரிக்கத் தூதரும் தென்னாசிய அலுவல்கட்கான அமெரிக்கச் செயலரும் நேபாள இராணுவத்தின் தலைமை அதிகாரிகளுடன் பலவிதமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தனர். இத்தகைய ஒரு சூழலிலே மாஓவாதிகளை ஆட்சிப் பொறுப்பிலிருந்து நிரந்தரமாக விலக்கிவைக்கிற சதிவலையை அறுத்து எறிந்தே அந்த உடன்படிக்கை ஏற்பட்டது.

உடன்படிக்கையின் மிக முக்கியமான பகுதி சமூக, அரசியல், பொருளாதார மாற்றங்களும் மோதலைக் கட்டுப்படுத்துவதும் பற்றியது. இறந்த அரசரதும் அரச குடும்பத்தினதும் உடைமைகள் நேபாள அரசாங்கத்தின் பொறுப்பிற்குக் கொண்டுவரப்பட்டதுடன் தற்போதைய அரசரின் நிலையை மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட சட்டவரைவு மன்றம் முடிவு செய்யும் வரை அரசருக்கு அரச நிருவாக அதிகாரம் எதுவும் இராது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படையிலும் பல கட்சிச் சனநாயகம் போன்ற அடிப்படையிலுமான வெகுசனப் பங்குபற்றுதலைக் கொண்ட மக்களுக்குப் பதில் சொல்லப் பொறுப்புள்ள ஒரு ஊழலற்ற ஆட்சிமுறை ஏற்கப்பட்டுள்ளது. பெண்கள், தலித்துகள், ஆதிவாசிகள், நாடோடிச் சமூகத்தினர், ஒடுக்கப்பட்ட தேசிய சிறுபான்மையினர், பிற்பட்ட சமூகத்தினர் ஆகியோரின் பங்குபற்றுதலுக்கு ஏற்றவாறு அரச நிருவாகம் மாற்றியமைக்கப்படும். நிலவுடைமையும் நிலப்பிரபுத்துவச் சொத்துமுறையும் முடிவுக்குக் கொண்டுவரப்படும். பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருடைய சமூகப் பாதுகாப்புக்கான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.

இவற்றுக்கும் மேலாகத் தொழிலாளரது உரிமைகள் திட்டமிட்ட பொருளாதார விருத்தி போன்றனவும் ஏற்கப்பட்ட கொள்கைகளாகின்றன.

மேலோட்டமாகப் பார்த்தால் இவை யாவும் எந்த மூன்றாமுலகப் பாராளுமன்ற அரசியல் கட்சியோ கூட்டணியோ தேர்தலில் வெற்றி பெறுவதற்காக வழங்கக் கூடிய வாக்குறுதிகள் போலத் தெரியலாம். எனினும், மேற்கூறியவற்றில் முக்கியமான பகுதி மாஓ வாதிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சமூக சீர்திருத்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகவே அமையும் என்பது கவனிப்புக்குரியது. எனவே சட்ட வரைபு மன்றம் தெரிவு செய்யப்படுவதற்கான வாக்கெடுப்பு அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் நடைபெறும் வரை இந்தக் கொள்கைகள் சரிவரக் கடைப்பிடிக்கப்படுமா என்பதில் மக்களின் செயற்பாட்டுக்கு முக்கியமான ஒரு பங்குண்டு.

மாஓ வாதிகள் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தது அதன்மூலம் மட்டுமே சமூக மாற்றத்திற்கு வழி செய்ய முடியும் என்பதால், சர்வாதிகார முடியாட்சியும் அதன் இராணுவமும் தமது அதிகாரத்தை இழக்கக் கூடிய ஒரு சூழ்நிலையில் மாஓவாதிகள் ஒரு அமைதியான தீர்வுக்கும் பல கட்சி ஜனநாயகத்துக்கும் உடன்பட்டுமுள்ளனர். எனினும், இந்தத் தீர்வு நிலைப்பதும் நிலையாமல் போவதும் புதிதாக ஏற்படக் கூடிய ஆட்சி அமைப்பு மக்களுக்கு இந்த உடன்படிக்கை வாக்களித்த விடயங்களை நிறைவேற்றுமா என்பதிலும் அதில் அந்நியக் குறுக்கீடுகட்கு இடமிருக்கும் என்பதிலுமே தங்கியுள்ளது. எதுவுமே நிச்சயமானதும் நிரந்தரமானதுமல்ல. எனினும், நேபாளத்தின் மக்களை மகிழ்விக்கக் கூடிய ஒரு உடன்படிக்கை இது என்பதில் ஐயத்துக்கு இடமில்லை. மாஓ வாதிகளும் ஏழுகட்சி கூட்டணியின் சில தலைவர்களும் பல விடயங்களில் கடுமையாக முரண்பட்ட போதும் முடிவில் நியாயமான ஒரு உடன்பாட்டுக்கு வந்தது மெச்சத்தக்கது. இந்த நாட்டில் அதற்கு நேரெதிரான சூழ்நிலையே உள்ளது. முதலில் நாட்டின் பெரும்பாலான மக்கள் அமைதியான, நியாயமான தீர்வை வற்புறுத்துகிற ஒரு சூழ்நிலை ஏற்பட வேண்டும். சுயநலத்துக்காக அமைதிக்கான முயற்சிகளைக் குழப்புகிற விஷமிகள் கட்டுப்பாட்டுக்குள் வர வேண்டும். ரணில் விக்ரமசிங்க போன்றோர் அது பற்றியும் கவனம் காட்டுவார்களா? யூ.என்.பி. - ஷ்ரீல.சு.க. உறவு அதற்கு வழி செய்யுமா?

_________________________________________
நன்றி: ஞாயிறு தினக்குரல் December 03, 2006

_____________________________________________

Labels:

Friday, December 01, 2006

இஸ்ரேலியப் பயங்கரவாதம் - சனநாயகத்துக்கான போராட்டம்

மறுபக்கம் - கோகர்ணன்

`திறந்த கல்லறையை நோக்கி' என்ற தலைப்பில் மைக்கல் வார்ஷ்சாவ்ஸ்கி என்ற இஸ்ரேலியர் 2004 இல் எழுதிய நூலை வாசிக்கக் கிடைத்தது. பலஸ்தீனத்தின் மீதும் இஸ்ரேலிலும் பலஸ்தீனத்திலும் வாழும் அராபியர்கள் மீதும் நிகழ்த்துகிற கொடுமைகள் பற்றிப் பல நூல்கள் வந்துள்ளன. அவை பற்றி அறிய அக்கறையுடையோருக்கு அவற்றை அறிய வாய்ப்புக்கள் முழுமையாக இல்லாதபோதும், தேடி அறிய இன்னமும் வாய்ப்பு உண்டு. இஸ்ரேலிய அரசு செய்கிற கொடுமைகள் இஸ்ரேலின் யூத சமூகத்திற்கு என்ன செய்கிறது என்பது பற்றிய ஆய்வுகள் அதிகம் வெளிவந்ததில்லை. அவ்வகையில் மட்டுமில்லாமல், இஸ்ரேலின் உள்ளிருந்து இஸ்ரேலிய சமூகத்துக்கு நடப்பதை நிதானமாகவும் நேர்மையாகவும் எடுத்துக் காட்டுகிற ஒருவரது ஆக்கம் என்ற வகையிலும் இந்த நூல் சிறப்பானது. வார்ஷ்சாவ்ஸ்கி ஜெருசலேமில் உள்ள மாற்றுத் தகவல் மையத்தின் இயக்குநர் ஆவார்.
யூதர்கட்கு எதிராகச் சென்ற நூற்றாண்டுவரை ஐரோப்பாவில் செய்யப்பட்ட கொடுமையைக் காரணங் காட்டி இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்குகிற கருத்துக்குத் திரட்டப்பட்ட ஆதரவு, ஹிற்லரின் தலைமையின் கீழ் ஜேர்மன் தேசியவாதமும் இனவெறியும் நாற்ஸியம் என்கிற ஃபாஸிஸமாகி வெறித்தனமான யூத இன ஒழிப்பு நடவடிக்கைகளானதன் விளைவாக இரண்டாம் மதப் போரின் பின்பு இஸ்ரேலின் தோற்றத்துக்கு வழி செய்தது. அரபு மக்கள் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்த மண்ணில், இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னால் இருந்து புலம்பெயர்ந்த யூதர்களின் வாரிசுகள் வந்து குடியேறக்கூடிய ஒரு இஸ்ரேலின் உருவாக்கம் வன்முறையால் அப்பாவி அரபு மக்களை விரட்டியும் வஞ்சகமாயும் மிரட்டல்களாலும் அவர்களது மண்ணை அடிமாட்டு விலைக்கு வாங்கியும் நடந்த நிலப்பறிப்பினால் இயலுமாக்கப்பட்டது. அந்த வன்முறைக் கலாசாரமே இஸ்ரேலிய அரசின் பிரகடனப்படுத்தப்படாத கொள்கையாகத் தொடர்ந்து விருத்தி பெற்றுள்ளது.

இஸ்ரேல் தனக்கு 1948 ஆம் ஆண்டு ஐ.நா. சபையால் வழங்கப்பட்ட நிலப்பரப்பை ஆக்கிரமிப்பு மூலமும் போர்மூலமும் விஸ்தரித்து வந்ததோடு அயலில் உள்ள அரபு நாடுகளில் அகதிகளாக வாழுகிற பலஸ்தீன மக்களைத் தாக்கி அழிக்கும் உரிமையையும் தனதாக்கிக் கொண்டுள்ளது.குறிப்பாக, லெபனானில் 1978 இல் இஸ்ரேல் நடத்திய ஆக்கிரமிப்பும் அதைத் தொடர்ந்து தலைநகர் பெய்ரூத்தை அண்டிய பலஸ்தீன அகதி முகாம்களில் நடத்திய படுகொலையும் முழு உலகையும் அதிர வைத்தது. எனினும், இதுவரை ஸ்ரேலின் அணுகுமுறையில் எவ்வித மாற்றமும் ஏற்பட்டுள்ளதாக எவருஞ் சொல்ல இயலாது. இஸ்ரேலுக்கு எதிரான விமர்சனங்கள் யூத இன வெறுப்பு, ஃபாஸிஸம், கம்யூனிஸ்ற் சதி என்று பலவாறாகத் தட்டிக் கழிக்கப்படுகிறது. இஸ்ரேல் கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஏகாதிபத்தியத்தின் ஒரு போர்ப் பாசறையாகவும் மத்திய கிழக்கின் அரபு மக்களின் மீதான அடக்குமுறைக்கான ஒரு வலுப்படுத்தப்பட்ட கோட்டையாகவும் உள்ளது. 1956 க்குப் பிறகு இஸ்ரேலின் மீதான அமெரிக்கச் செல்வாக்கு மிகவும் வலுப்பெற்றது. அதன் பின்னர் அரபு நாடுகளில் உள்ள எண்ணெய் மீதான அமெரிக்க ஏகபோகத்திற்கு எதிராகச் செயற்படக்கூடிய எந்த் நாட்டையும் எந்த அரசியல் போராட்டச் சக்தியையும் அடக்கவும் அழிக்கவும் இஸ்ரேலின் பாதுகாப்பு என்ற நியாயபடுத்தப்பட்டு வந்துள்ளது.

இஸ்ரேலிய அரசு நடத்துகிற கொடுமைகட்கு எதிரான குரல்கள் எப்போதுமே இஸ்ரேலுக்குள்ளிருந்து எழுந்து வந்துள்ளன.எனினும், சரிக்கும், பிழைக்கும், நியாயத்திற்கும், அநியாயத்திற்கும் வேறுபாடு தெரியாத ஒரு சமூகமாக இஸ்ரேல் சீரழிந்து வந்துள்ளது. இது எப்படி நடந்தது என்பதை விளங்கிக் கொள்ளத் `திறந்த கல்லறையை நோக்கி' என்ற நூல் மிகவும் உதவுகின்றது.

இஸ்ரேலின் கொடுமைகளை நியாயப்படுத்தப் பலஸ்தீன பயங்கரவாதம் பயன்படுகிறது.அது மட்டுமன்றிப் பயங்கரவாதத் தாக்குதல்களை முறியடிப்பதும் தண்டிப்பதும் என்பதற்கும் அப்பால், இஸ்ரேலிய அதிகாரத்திற்குச் சவால் எதுவும் பலஸ்தீன மக்களிடமிருந்து எழுவதற்கு முன்னரே, அதைத் தடுக்கிற நோக்கில் தாக்கி அழிப்பது என்ற கொள்கை அண்மைக் காலங்களில் கடைப்பிடிக்கப்படுகிறது. அமெரிக்கா இன்று `பயங்கரவாதத்துக்கு எதிரான போர்' என்ற பேரில் நடத்துகிற ஆக்கிரமிப்புக்களையும் இராணுவக் குறுக்கீடுகளையும் `9/11' எனப்படும் 11 செப்ரெம்பர் விமானத் தாக்குதல்கள் நியாயப்படுத்தின. இஸ்ரேலைப் பொறுத்தவரை, 9/11 என்பது, அது ஏற்கெனவே செய்துவந்த ஒரு காரியத்தை மேலும் உற்சாகத்துடன் செய்ய ஒரு உந்துதலாக அமைந்தது.

இப்போதெல்லாம் எந்தவொரு பாலஸ்தீன அகதி முகாமோ மருத்துவமனையோ இஸ்ரேலின் விமானக் குண்டு வீச்சுக்களுக்கும் ஏவுகணைத் தாக்குதல்கட்கும் விலக்கில்லை.அது மட்டுமல்லாமல், முன்பெல்லாம் இலக்கு வைக்கப்பட்ட பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதோ பயங்கரவாதப் பயிற்சி முகாம்கள் அருகில் இருப்பதோ ஒரு விளக்கமாகக் கூறப்பட்டிருக்கும். சில சமயம் மிக அருமையாகத் தவறாக அடையாளங் காணப்பட்டதாகவோ குறிதவறியதாகவோ ஏற்கப்படும். இப்போது அந்த நிலை மாறிவிட்டது. இஸ்ரேலியப் படையினர் செய்கிற எதற்கும் நியாயம் தேவையில்லை என்றாகிவிட்டது.

அண்மையில் லெபனானில் இஸ்ரேல் நடத்திய படுகொலை பற்றி இஸ்ரேலில் பெரிய எதிர்ப்பு எழவில்லை. இஸ்ரேலியப் படைகள் ஹிஸ்புல்லாவை முறியடிக்கத் தவறியமையும், சிறைப் பிடிக்கப்பட்ட இஸ்ரேலியப் படையினர் இருவரையும் மீட்க லெபனான் மீதான தாக்குதல்கள் உதவவில்லை என்பதுமே அரசாங்கத்திற்கு எதிரான கோபத்திற்குக் காரணமாக இருந்தன. இஸ்ரேலில் அராபியரை விட்டால் போர் எதிர்ப்பு என்பது மிகச் சிறுபான்மையான யூதர்களிடமே உள்ளது. போர் எதிர்ப்புக்கு இருந்து வந்த ஆதரவு ஒஸ்லோ பேச்சுவார்த்தைகள் பயனற்றுப் போகத் தொடங்கியது தொட்டு ஏறத்தாழ இல்லாமலே போய்விட்டது. இன்று போரில் தோல்விக்கு எதிர்ப்பு உள்ளது. அதன் காரணமாகவே இஸ்ரேலியப் பிரதமரும் அதன் பாதுகாப்பு அமைச்சரும் பதவி விலகுமாறு கேட்கப்பட்டனர்.

இஸ்ரேலில் இப்போது இருப்பது எதிரும் புதிருமாக இருந்த இஸ்ரேலியக் கட்சிகளைக் கொண்ட கூட்டரசாங்கம். இஸ்ரேலியத் தொழிற்கட்சிக்கு ஒரு இடதுசாரி, சமாதான சார்பு தோற்றம் இருந்தது. ஆனால்,லெபனான் மீதான போரை நடத்தியவர் அக்கட்சியைச் சேர்ந்த பாதுகாப்பு அமைச்சர். இஸ்ரேலின் பாராளுமன்ற இடதுசாரிகள் கூட இஸ்ரேலின் போர்க் கொள்கையை எதிர்க்கவோ பலஸ்தீன மக்களின் மனித உரிமை மீறல்களையோ இஸ்ரேலில் உள்ள அராபியர்கட்கு எதிரான கொடுமைகளைப் பற்றிக் குரல் கொடுக்கவோ இயலாதளவுக்குச் சீரழிந்துள்ளனர்.

இஸ்ரேலின் இன்றைய அப்பட்டமான இனவெறிப் போக்கு வலுப்பெற்று, நாட்டின் ஆதிக்கச் சிந்தனையாவதற்கு எவ்வாறு அரசியற் கட்சிகளும் ஊடகங்களும் உதவின என்பதற்கும் மேலாக, இப்போக்கு எப்படி ஸ்ரேலிய சமுதாயத்தைச் சனநாயகமற்ற ஒன்றாகச் சீரழித்துள்ளது என்பதை முன் குறிப்பிட்ட நூல் விளக்கியுள்ளது.

"இந்தச் சமுதாயம் மேற்கொண்டு புவியியல் சார்ந்த எல்லையையோ அறஞ் சார்ந்த எல்லையையோ ஏற்கவில்லை. யூத அரசு மிகவும் சாய்வான, சறுக்கலான சரிவில் வழுக்கிக் கொண்டு போகிற இவ்வேளை, மேற்கொண்டு எந்தத் தடையும் (பிறேக்) இயங்குவதாகத் தெரியவில்லை. சரிவின் அடியில் என்ன உள்ளது? முழு அராபிய, இஸ்லாமிய உலகுக்கும் எதிரான ஒரு ஆயுதந் தாங்கிய மோதல்; அது அணுஆயுதப் போராயும் அமையலாம். இஸ்ரேலின் போக்கு தற்கொலைத் தன்மையுடையது என்பதிற் ேகள்வியில்லை. அது ஃபிலிஸ்ற்றீன்களை அழிக்க அவர்களோடு அழிய ஆயத்தமாயிருந்த சாம்ஸன் பற்றிய கதையை நினைவூட்டுகிறது. வன்முறை, பதிலடி, மேலும் வன்முறை என்று தொடருகிற இந்த நச்சு வட்டத்தின் இறுதியான விளைவு என்னவென்று எவரேனும் டே்கிற ஒவ்வொரு முறையும், அக்கதை இஸ்ரேலின் உரையாடல்கள் ஒழுங்காகத் திரும்பத்திரும்ப வருகிறது" என்று நூலின் பின்னுரையில் நூலாசிரியர் கூறியிருப்பதை நாம் உலகின் பேரினவாத, இனவெறி, ஏகாதிபத்திய, மேலாதிக்க வன்முறைச் சூழல் ஒவ்வொன்றுக்கும் பொருந்துகிற மாதிரி மீள வாசிக்கலாம்.

ஆய்வறிவாளர்களும் அறிஞர்களும் கூட இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நோக்கங்களையோ அடக்கு முறைக் கொள்கையையோ கேள்விக்குட்படுத்தத் தயாராக இல்லை. அவ்வாறான கேள்விகள் அமைதிக்குச் சாதகமான சூழல்களில் மட்டுமே எழுகின்றன. எனவே, சமூகம் படித்தவர்களாலும் மேதைகளாலும் வழி நடத்தப்படுகிறது என்பது பற்றி நாம் மிகவும் ஐயப்பட வேண்டியுள்ளது. ஒரு சமூகம் சரியான திசையில் செயற்படுகிறபோதோ நியாயத்திற்கும் நீதிக்குமான போராட்டங்கள் எழுச்சி பெறும் போதும் ஆய்வறிவாளர்களும் அறிஞர்களும் ஆக்கமான பங்களிக்க இயலுகிறது. அல்லாத போது அவர்கள் ஒதுங்கி நிற்கிறார்கள்.

வரலாற்றை மக்களே உருவாக்குகின்றனர் என்பதன் உண்மையை நாம் மறக்கிற போது தனி மனித ஆளுமைகள் மீது மிகையாக நம்பிக்கை வைக்கிறோம்; சமூகப் பொறுப்புக்களைக் குறிப்பிட்ட சிலரது கைகளில் விட்டு விட்டு ஒதுங்கிக் கொள்ளுகிறோம்; அந்நியர் மீதும் அறிவுக்கு அப்பாற்பட்ட சக்திகள் மீதம் பாரத்தைச் சுமத்தி விடுகிறோம்.

அண்மையில் நேபாள மாஓவாதிகளின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளது போல இந்த நூற்றாண்டின் மையமான பிரச்சினை சனநாயகம் பற்றியது. மக்கள் தமது வாழ்வின்மீதும் வளர்ச்சி மீதும் முழுமையான ஆளுமையை பெறுவது தான் சனநாயகம்.

எனவே, ஒடுக்கப்பட்டு தவிக்கும் ஒரு மக்கள் திரளின் போராட்டம் தனது விடுதலைக்கானது மட்டுமல்ல, அது சனநாயகத்துக்கானதுமாகும் என்பதை நாம் மறக்கலாகாது. அப்போராட்டத்தின் வெற்றி போராளிகளின் ஆயுதங்களில் மட்டுமன்றி ஒடுக்குமுறை யாரின் பாதுகாப்பின் பேரில் நடக்கிறதோ அந்த மக்களின் நடுவே சனநாயகச் சக்திகளின் கைகள் வலுவடைவதிலும் தங்கியுள்ளது.
_____________________________

நன்றி: ஞாயிறு தினக்குரல் November 26, 2006

_____________________________________________

Labels:


Get your own calendar

Links