Sunday, July 31, 2005

ஜோன் பீற்றர்சனின் தலைக்குக்குறி

சிறிலங்காவின் சனாதிபதித் தேர்தல் என்பது கட்சிகளை மட்டுமல்ல தேர்தல் ஆணையாளர், சட்டமா அதிபர் போன்ற அதிகாரிகளை மட்டுமல்ல வேறு பலரையும் விவகாரத்தில் மாட்டிவிடும் ஒரு விடயமாக உருவெடுத்துள்ளது. சிங்களத்தின் இரண்டு பிரதான கட்சி களுமே சனாதிபதித் தேர்தல் நடத்தப்படுவது எப்போது? என்பதில் நேரெதிரான கருத்துக்களோடு களமிறங்கியிருப்பதும், இருதரப்பும் தமக்குத் தமக்கு ஊடகங்கள் ஆள் அம்பு சேனைகளைத் திரட்டிப் பரப்புரைப்போரை நடத்துவதும்தான் இந்த நிலைமைக்குக் காரணமாகும்.

ஏதோ ஒரு தரப்பின் நிலைப்பாட்டை அண்மித்து கருத்துத் தெரிவிப்பவர்கள் மறுதரப்பினதும் அதன் ஆதரவு ஊடகங்களினதும் ஏச்சுக்கும் வசைபாடலுக்கும் உள்ளாக நேரிடுகிறது. இந்த வகையில் இந்த விவகாரத்தில் சிக்கியுள்ள குறிப்பிடத்தக்கவர்கள் நோர்வே வெளிவிவகார அமைச்சர் ஜோன் பீற்றர்சனும் அவர் செயலாளராக இருக்கும் சர்வதேச ஜனநாயக சங்கம் என்ற அமைப்பு மாகும்.

"முன்னால் போனால் கடிக்கும் பின்னால் சென்றால் உதைக்கும்". சட்டத்தை குறித்து இவ்வாறு சொல்லுவார்கள். சிறிலங்கா சனாதிபதியின் பதவிக்காலம் எப்போது முடிவடைகிறது? என்ற கேள்விக்கு இரண்டு கட்சிகளுமே அரசியலமைப்புச் சட்டத்தை தமக்கு வசதியானபடி பொருள் கோடல் செய்து கொண்டு அதற்கேற்றாற்போல தேர்தல் திகதி இந்தாண்டில்தான், இல்லை அடுத்தாண்டில்தான் எனச் சாதிக்கின்றன.

இந்தச் சூழலில், தனது அமைப்பில் உறுப்பினராக இருக்கும் ரணில் விக்கிரமசிங்கவின் நிலைப்பாட்டை ஆதரித்து 'சர்வதேச சனநாயக சங்கம்' தனது ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி விட்டது. அதுபற்றி சங்கத்தின் செயலாளரான ஜோன் பீற்றர்சனும் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்து விட்டார். "மக்களின் இறைமையை மதித்து சிறிலங்காவில் இவ்வருடமே சனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும்" என்பதே சர்வதேச சனநாயக சங்கமும், அதன் தலைவர் ஜோன் ஹாவர்ட் (அவுஸ்திரேலியப் பிரதமர்) ,செயலாளரான நோர்வே வெளிவிவகார அமைச்சர் ஜோன் பீற்றர்சன் ஆகியோரும் வெளியிட்ட கருத்து. பின்னர் இக்கருத்தினை அமெரிக்க சனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்கூட வழிமொழிந்திருந்தார்.

பெரும்பாலும் மேற்குலகம் சார்ந்து சிந்திக்கும் ஐக்கிய தேசியக் கட்சி இதனைத் தலைக்கு மேல் தூக்கிக் கொண்டாடியது. அதனது ஊடகப்பிரிவு இந்த விடயத்தை அறிக்கையாக்கி அதற்கு பெருமெடுப்பிலான முக்கியத்துவமும் கொடுத்து விளம்பரப்படுத்தியது. ஜோர்ச் புஷ் உடனும் ஹாவர்ட் மற்றும் பீற்றர்சனுடனும் ரணில் விக்கிரமசிங்க பெருமைபொங்க நின்று சிரிக்கும், கைகுலுக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு மகிழ்ந்தது. இங்கேதான் தொடங்கியது சிக்கல்.

உள்நாட்டுத் தேர்தல் விவகாரத்துக்கு வெளிநாட்டு அழுத்தத்தை ரணில் கொண்டுவர முனைவதை வேரிலேயே களைந்து விடமுனையும் ஆளுங்கட்சியோ பிரச்சினையைப் பூதாகாரப்படுத்தியது. இது சிறிலங்காவின் இறைமையை மீறும் செயல் எனவும், சர்வதேச சனநாயக சங்கம் என்பது வலதுசாரிக்கட்சிகளை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்தும் ஆக 146 அரசியல்வாதிகளின் அமைப்பே தவிர இது நாடுகளின் அமைப்பல்ல எனவும், இதன் செயலாளராக இருந்துகொண்டு சனாதிபதித் தேர்தல் 2005 இல் நடத்தப்படவேண்டுமென ஒரு கட்சிக்கு சார்பாகக் கருத்துவெளியிட்ட நோர்வேயின் வெளிவிவகார அமைச்சர் ஜோன் பீற்றர்சன் இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் ஏற்பாட்டாளர், அனுசரணையாளராக பங்குபற்றத் தகுதியானவரா? எனவும் மும்முனைகளில் தனது பதில் கருத்துப் போரை சிறிலங்கா சுதந்திரக்கட்சி ஆரம்பித்துவிட்டது.

இதில் மூன்றாவதாக முன்வைக்கப்பட்ட நோர்வேயின் அனுசரணையாளர் பாத்திரத்தின் மீதான சந்தேகம் கொள்ளல் என்பது மிகப் பாரதூரமான ஒரு விடயமாகும். எவ்வாறெனில் இன்று "கட்சி சார்ந்து செயற்படுபவர்" என பீற்றர்சன் அவர்களை வசைபாடுகின்ற கட்சியானது, நாளை இனப்பிரச்சினை விவகாரத்தில் எட்டப்படும் ஏதாவது உடன்பாட்டின் பின்பும் "அனுசரணையாளர்கள் புலிகள் சார்ந்து செயற்பட்டார்கள்" என்று சொல்லிவிட அதிக நேரம் எடுக்காது. இந்த வகையிலான கருத்துக்கள் பல சந்தர்ப்பங்களில் அரசாங்கத்தின் பின்வரிசைகளில் இருந்து வெளிவந்தும் இருக்கின்றன. ஆனால் அவை அப்போதைய அரசியல் கள நிலவரம் காரணமாக பூதாகாரப்படுத்தப்படவில்லை. அல்லது முன்னிலை விவகாரமாக முன்னிறுத்தப்படவில்லை.

இது ஒரு புறம் இருக்க, சிறிலங்காவின் தேர்தல் ஆணையாளர் "அரசியல் அமைப்பின் படி சனாதிபதித் தேர்தல் இவ்வருடமே நடத்தப்படுதல் வேண்டும்" என்ற தனது முடிவை கசியவிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அம்மையாரின் அரசாங்கத்தின் மூத்த அமைச்சர் ஒருவருக்கு ஆணையாளரின் இந்த முடிவு அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் அதனால் அரசாங்கத்திற்குள் சலசலப்புக்கள் எழுந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. இதன் விளைவே சிறிலங்கா சுதந்திரக்கட்சி தனது சனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்ய முனைந்துள்ள அல்லது தெரிவு செய்துள்ளதாகும். ஆனால் தேர்தல் ஆணையாளரின் இந்த முடிவை ஏற்றுக்கொள்வதற்கு சுதந்திரக்கட்சி தயாராக இல்லை. அரசியல் அமைப்புக்கு மாறாக பிழையான முடிவை தேர்தல் ஆணையாளர் எடுத்தால் தாம் உயர் நீதிமன்றத்திற்குச் செல்வோம் என அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் கர்ச்சிக்கிறார்கள். ஆனால் அரசியலமைப்பின்படி தேர்தல் திகதியை நிர்ணயிக்கும் பொறுப்பு தேர்தல் ஆணையாளருக்குத்தான் பொறுப்பளிக்கப்பட்டுள்ளது என்பதனை சுதந்திரக்கட்சி திரும்பத் திரும்ப வலியுறுத்திவரும் சமநேரத்தில் தேர்தல் அடுத்த வருடமே நடத்தப்படும் எனவும் வலியுறுத்தி தெரிவித்தும் வருகிறது.

இது தேர்தல் ஆணையாளரை அச்சுறுத்துவதாக ஆகாதா? இத்தனைக்கும் தேர்தல் ஆணையாளர் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்றபிறகே இந்த முடிவுக்கு வந்திருப்பதாக தெரிகிறது. சட்டமா அதிபரின் காரியாலயத்திற்குச் சென்றிருந்த தேர்தல் ஆணையாளர் அவருடன் நீண்ட நேரம் தனிமையில் ஆலோசனை கலந்ததாக சில வாரங்களுக்கு முன்பு தெரிவிக்கப்பட்டிருந்தது இங்கு கவனிக்கவேண்டியதாகும். அப்படியாயின், தனக்கு சாதகமில்லாத கருத்தையோ முடிவையோ வெளியிடுபவர்களை தூசிப்பதும், விமர்சிப்பதும், நீதிமன்றத்திற்கு இழுப்பதுவும்தான் சுதந்திரக்கட்சியின் தந்திரோபாயமாக இருக்கிறதா? (இனப்பிரச்சினை விவகாரத்திலும் இந்த நிலைப்பாடு ஒட்டுமொத்த சிங்கள அரசியல் சமூகத்தாலும் பேரினவாதிகளாலும் பின்பற்றப்படுவது கவனிக்கத் தக்கது) ஏற்கனவே பிரதம நிதியரசர்மீது பலவிதமான குற்றச்சாட்டுக்களும் பல தரப்பாலும் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் ஆணையாளரை உயர் நீதிமன்றின் முன் நிறுத்துவது என்பது இன்னும் நெருடலான சூழலை உருவாக்கக் கூடும். இந்த எல்லாப்பொல்லாப்புக்களிலும் இருந்து தப்பிக்கொள்வதற்கு சுதந்திரக்கட்சிக்கும் அதன் அரசாங்கத்திற்கும் இருக்கக்கூடிய குறுக்குவழி நாட்டைப் பதற்றத்துக்குள்ளாக்குவதே.

இதன் ஒரு அங்கமாக நோர்வேயின் அனுசரணைப் பணியின் நேர்மைத்தன்மை பற்றிய ஒரு சுற்று விவாதம் கொழும்பு அரசியற்களத்தில் எழக்கூடும். அனுசரணையாளர்களை மாற்றவேண்டும் என்று முன்னர் எழுப்பப்பட்ட குரல்களுக்கு மீள உற்சாகமூட்டப்படவும் கூடும். ஏற்கனவே தொந்துப்பறியிலுள்ள சமாதான முயற்சிகளையும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் இந்தக் கூச்சல், குழப்பங்கள் இன்னும் பலவீனப்படுத்திவிடவும் கூடும். ஆனால் இந்தக் குழப்பங்கள் அனைத்துமே அம்மையாருக்குத் தேவையாக உள்ளன. எனவே அவை நிகழ்வதற்கான ஏதுக்கள் அதிகமாகவே உள்ளன.

பு. சத்தியமூர்த்தி

நன்றி: வெள்ளிநாதம்.

Labels: ,

Monday, July 18, 2005

புதிய தரிசனம் -ஓர் அறிமுகம்.

சிறு பத்திரிகையின் வரலாறு என்பது தமிழ் பத்திரிகை உலகில் "நம்பர் வண்" என மகுடமிட்டு வீரக்கதைகள் கதைக்கும் விடயம் அல்ல.
இரவுத் திருவிழா பார்க்க பௌடர் பூசி சிங்காரமாக அலங்கரித்துப் புறப்பட்டு பாதி இரவில் படுத்துறங்கும் சிறுபிள்ளை போல பல்வேறு சிறு பத்திரிகைகள் தொடங்கி, சரிந்து, அழிந்து போன தடங்கள் பல எம் மண்ணில் உண்டு.

எனினும் பல விடாக்கண்டர்கள் தொடர்ந்தும் சிறு சஞ்சிகை முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. அவ்வாறான அவர்களது விடாமுயற்சியின் காரணமாக அற்ப ஆயுளில் மறைந்தாலும் பல நல்ல சிற்றேடுகளும் அவற்றின் படைப்புக்களும் இன்றும் பலராலும் பேசப்பட்டே வருகின்றன.

எனினும் சிலர் இத்தகைய சிறு பத்திரிகைகளை அல்லது சிறு வெளியீடுகளை தமது மன அரிப்புக்களைத் தீர்த்துக்கொள்வதற்காகப் பயன்படுத்தி வருவதையும் நாம் அவதானிக்கலாம். என்றாலும் கூட இவ்வாறான ஏற்றத்தாழ்வுகளுக்கு அப்பால் சிறு பத்திரிகைகளில் வரவும்,வளர்ச்சியும் காணப்படுகின்றன.

"ஒவ்வொரு சிறு பத்திரிகையின் முதலாவது இதழும் வெளியிடுகின்ற அறிவிப்பு எவ்வளவு நம்பிக்கையை, எவ்வளவு ஆசைக் கனவுகளை, எதிர்பார்ப்புக்களை எல்லாம் முழக்கமிடுகிறது. ஆனால் அவை பொய்த்துப் போகும்படி காலம் விளையாடி விடுகிறது. தன்னம்பிக்கையோடும், உற்சாகத்தோடும் உழைக்க முனைந்தவர்களின் செயற்பாடுகள் பலவும் மறதிப் பாழில் மங்கிப்போகின்றன. அது நியாயமில்லை. ஏதோ ஒரு உத்வேகத்தில் பணிபுரியத் துணிந்தவர்களின் சோதனைகள், சாதனைகள் குறித்து அவர்களுக்குப் பின் வருகிறவர்கள் அதே பாதையில் நடைபோட வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்"
என்று தமிழில் சிறு பத்திரிகைகள் என்ற நூலில் வல்லிக்கண்ணன் அவர்கள் குறிப்பிடுகிறார்.
"இதற்கு இலக்கிய வீதியின் வழி பயணிக்கும் ஆரம்பப் பயணிகளாகிய நாம் உங்கள் கரங்களில் ஐந்தாவது இதழை ஆண்டு மலராய்ச் சேர்ப்பிக்கிறோம்" என்ற ஆசிரியரின் கருத்துடன் "புதியதரி சனம் மே, யூன் 2005" இதழ் வெளியாகியுள்ளது. "தோற்பன தொடரேல்" என்று ஒளவையார் கூறினாலும் எமது இப்பயணத்தில் சில தோல்விகளும் இடையூறுகளும் தழுவினாலும் அவற்றை விலக்கி வீறு கொள்கிறது எமது பயணம். இடைவெளிகள் இருப்பினும் எமது இதழின் இருப்பைத் தக்க வைத்தே தீருவோம்" என மேலும் ஆசிரியர் கூறுகிறார்.

இந்த நம்பிக்கையும், உணர்வும் மிகவும் அவசியமானது. அந்த வகையில் புதிய தரிசனம் தொடர்ந்து தன் செயற்பாட்டினை விரித்து இலக்கிய வான்வெளியில் பறக்க இலக்கிய ஆர்வலர்கள் உதவவேண்டியது அவசியம்.

சி.கதிர்காமநாதன், தாட்சாயினி, ஞானரதன், வனஜா நடராஜா ஆகியோர் எழுதிய சிறுகதைகளும் கலாநிதி செ.யோகராசா, பேராசிரியர் செ.கிஸ்ணராஜா, கலாநிதி இ.முருகையன் போன்றோரின் கட்டுரைகளும் , துவாரகன் குறிஞ்சி, இளந்தென்றல் கி.அ.தில்லைதாசன், க.சாரங்கன், கு.வினோதரன், சண்முகன், இளங்கோ முதலியோர் எழுதிய கவிதைகளும் இந்த மலரில் உள்ளன.

இது தவிர சமீபகாலமாக இலக்கிய உலகம் பறிகொடுத்த புலோலியூர் க. சதாசிவம், ஏ.பி.வி. லேமன், மருதூர்கனி, தில்லைச்சிவா, புத்தொனி ந.சிவபாதம், கே.வி நடராஜன் , சொக்கன் போன்ற படைப்பாளிகள் தொடர்பான அஞ்சலிக் குறிப்புக்களும் மலரில் பிரசுரமாகியுள்ளன. அத்துடன் அ.குணேஸ்வரன் அவர்களின் "காலம் ஆகிவந்த கதை" தொடர்பான அறிமுகக் குறிப்பும் கூட இணைக்கப்பட்டுள்ளது.

இந்த மலரின் பிரதான அம்சமும் சிறப்பான விடயமும் ஓவியர் கோ.கைலாசநாதன் அவர்களின் நேர்காணல் ஆகும். மலரின் அட்டை ஓவியம் கூட கோ.கைலாசநாதன் அவர்களால் வரையப்பட்டிருந்தாலும் கூட அட்டையின் அமைப்பும் அச்சும் அவருடைய ஓவியத்துக்கு உயிர்ப்பையும் சிறப்பையும் கொடுக்கவில்லை என்பது இங்கு வருத்தத்திற்குரிய விடயமாகும்.

இனி நேர்காணலுக்கு வருவோம். ஈழத்தில் அகவெளிப்பாட்டாளர்களில் கோ.கைலாசநாதன் முக்கியமானவர். "ஒரு தனித்துவ மான அகவெளிப்பாட்டு வெளியில் இவர் தொடர்ந்தியங்கி வருவது கவனத்திற்குரியது" எனக் குறிப்பிடும் நேர்காணலைச் செய்தவர், "ஈழத்தின் முக்கியமான அகவெளிப்பாட்டாளன் என்ற அடிப்படையிற் கேட்கிறேன், அகவெளிப் பாட்டுக்கு முறையான பயிற்றுவித்தல் அவசியமானதா?" எனக் கேள்வி கேட்கிறார். இதற்கு கோ.கைலாசநாதன் அவர்கள் கூறும் பதில் மிகவும் சிறப்பானது. கைலாசநாதன் அவர்கள் கூறுகின்றார்:

"பயிற்சி காரணமாகத் 'திறன்' வருகிறது. ஆனால் பயிற்சி காரணமாக 'கலை' என்பது வருமென்று கூறமுடியாது. வெறும் பயிற்சி மட்டும் இருந்து விட்டால் நல்ல படைப்புக்களைப் படைக்கலாம் எனக் கூறமுடியாது. படைப்பாற்றலுக்கும் படைப்புக்களைப் புரிந்துகொள் வதற்கும் மூன்றாவது கண் என்பது அவசியமாகின்றது. நாள் முழுவதும் தாமரைமலர் மேல் தவளை இருந்தாலும் அம்மலரின் அழகையும் அதில் இருக்கும் தேனையும் அதனால் நுகர்ந்துகொள்ளமுடியாது. ஆனால் எங்கிருந்தோ வரும் தேனீ இரண்டையும் நுகர்ந்துகொள்வதுடன் பறந்து விடுகின்றது. முறையான பயிற்சி அல்லது பயிற்றுவித்தல் என்பது ஒரு எல்லையுடன் நின்று விடக்கூடியது. தரிசனப் புலத்துக்குள் இவை பெருஞ் செல்வாக்குச் செலுத்தா" என்கிறார்.

புதிய தரிசனம் பகுதியில் பிரசுரமான ஒரு வாசகர் கடிதமும் கருத்தைக் கவருகின்றது. கிளிநொச்சியைச் சேர்ந்த த. சீர்மாறன் என்பவர் எழுதிய கடிதம் அது. அக்கடிதம் பின்வருமாறு அமைகிறது. தங்களின் புதிய தரிசனம் இதழ் பார்த்தேன். ஏனைய மூன்று இதழ்களைவிட இவ் இதழ் நேர்த்தி. கவிதைகளில் உயிர்ப்பில்லை. சிறுகதை "மூடுபெட்டி"யில் வீடு பாவனை வீடாகக் காட்டப்படுகிறது. சிலந்தி இல்லை. கறையான் இல்லை.வினோ வருவான் என்றும் சொல்லப்படுகிறது. பின் பிரேதமிருப்பதாகவும் அதை மறைப்பதற்கு ஏதோ அச்சத்தில் அடுக்கியிருந்த புத்தகங்கள், சஞ்சிகைகளைக் கொண்டு பிரேதத்தை மூடி ஊதுவர்த்தி கொளுத்தல் ஆனது பாழடைந்த அல்லது இடிந்த வீடாகச் சித்தரிக்கப்படுகிறது. இந்திரனின் நூதனச்சிறுகதைகளிலும் தெளிவிருக்கிறது. மனதில் எழுந்த விடயங்கள் எல்லாம் சிறுகதைகள் அல்ல. மையம் நோக்கிய குவிவு மல்ல சிறுகதை. தாட்சாயினியின் "ஒரு உரலின் வெட்டு முகம்" கதையிலும் "முடக்கு" என்றும் இடம், ஆட்கள் நடமாடும் இடம் (நடமாடாத இடம் எனக் காட்டப்படவில்லை) தெருவுக்கருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு மிக அருகுப் பற்றையில் சிறுமி மீது பாலியல் வன்புணர்வில் ஒருவன் ஈடுபடுவதாகச் சொல்லப்படுகிறது. யதார்த்தமா? சிலவேளை அந்த இளைஞன் புத்தி சுவாதீனமற்றவன் எனச் சொல்லியிருந்தால் சாத்தியமாகும். "போடா வெளியில்"எனும் வார்த்தைகளை வைத்துக்கொண்டு செய்யப்பட்ட கதை போலத் தெரிகிறது. சிறு கதை என்பது புரிவதல்ல விளக்குவது. இந்தப் பலவீனம் தாட்சாயினி ராகவன் போன்றவர்களின் கதைகளில் பொதுவாகத் தெரியும் ஒன்று. அடுத்து ராகவன் "எதிர்ப் பிலக்கியம் ஒரு கலாசார ஆயுதம்" என்ற நூல் விமர்சனத்தில் எதிர்ப்பிலக்கியப் போலி எழுத்தாளர்கள் என ச.முருகானந்தன், வளவை வளவன், யோ.கர்ணன் என்பவர்களைக் குறிப்பிடுகிறார். ராகவன் விடுவிக்கப்படாத பிரதேசத்தில் வாழ்பவர். அப்படிப்பட்டவருக்கு விடுவிக்கப்பட்ட பிரதேசத்தில் வாழ்பவர்கள் படைப்பாளர்கள், படைப் புக்கள் பற்றிய முழுமைகள் தெரியாதவர் ஓரிரு கதைகளைப் படித்துவிட்டு அவர்களை வகைப்படுத்தலானது நகைப்புக்குரியது. குறிப்பிட்டவர்களில் ஒருவர் நீண்டகாலம் போராளியாகச் செயற்பட்டு ஒரு காலையும் இந்த மண்ணுக்குக் கொடுத்தவர். அவரின் கள அனுபவங்கள் எத்தனையோ கதைகளில் புலப்பட்டிருக்கின்றன. விமர்சனம் அல்லது ஆய்வுகளுக்கு பரந்த வாசிப்பும் தேடலும் அவசியம். புதிய தரிசனம் சில போலிகளை இனங்கண்டு அவைகளைத் தவிர்த்து ஒரு நேர்வழியில் பயணிக்க வேண்டும் என எனது மடலை முடிக்கிறேன்" எனத்த.சீர்மாறன் குறிப்பிட்டுள்ளார்.

இணுவையூர் சிதம்பரச்திருச்செந்திநாதன்
நன்றி- வெள்ளிநாதம். கிளிநொச்சி.

Labels:

Saturday, July 16, 2005

பொஸ்பரஸ் தொடங்கி ஒற்றைத் துப்பாக்கி வரை...

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழர் படையணி மரபுப்படையணியாக வளர்ந்திருக்கும் நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் தாக்குதல் அணித் தளபதியான லெப். சீலனின் 22 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

1978ல் சிறிலங்காவில் நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதியாக ஜேர்.ஆர்.ஜயவர்த்தனா பதவியேற்றபோது அதற்கு மதிப்பளிக்க திருகோணமலை இந்துக் கல்லூரியில் சிறிலங்கா தேசியக் கொடியேற்றியபோது அதனுள் பொஸ்பரஸை வைத்து அதனை எரியச் செய்தவர் உயர்தர மணவரான சார்ள்ஸ் அன்ரனி.



அந்தச் சம்பவத்துடன் தலைமறைவாகி தாயக விடுதலைப் போராட்டத்துக்காக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன் தன்னை இணைத்துக்கொண்ட சார்ள்ஸ் அன்ரனிஇ பின்னர் சீலன் ஆனார்.

சிறந்த ஒரு இராணுவத்தாக்குதல் வீரரான சீலன்இ சிறிலங்கா இராணுவம் மீதான முதல் தாக்குதல் யாழ். நகர மையத்தில் நடத்தி ஆயுதங்களைக் கைப்பற்றியவர்.
சிறிலங்கா கடற்படை மீதான முதல் தாக்குதலை பொன்னாலையில் நடத்தியது.
சாவகச்சேரி சிறிலங்கா காவல் நிலையம் மீதான தாக்குதலை தலைமையேற்று வெற்றிகரமாக நடத்தியது.
கந்தர்மடம் வாக்குச்சாவடி மீதான தாக்குதல் உள்ளிட்ட விடுதலைப் போராட்ட வரலாறின் முதல் முக்கிய தாக்குதல்களை நடத்தப்பட்டவை லெப். சீலன் தலைமையிலாகும்.


விடுதலைப் புலிகளின் முதல் தாக்குதல் அணித்தளபதியாக விளங்கியவர் லெப். சீலன்.
தாயக விடுதலைப் போராட்டத்தை வீரியமாக்குவதற்கான பணிகளில் தென்மராட்சியில் மீசாலை அல்லாரையில் முகாமில் தயாராகிக் கொண்டிருந்தபோது- அந்த முகாம் துரோகி ஒருவனின் காட்டிக்கொடுப்பில் சிறிலங்கா இராணுவத்தால் சுற்றிவளைக்கப்படுகின்றது.

அந்த சுற்றிவளைப்புத் தாக்குதலில் எதிரியுடன் சீலனும் போராளிகளும் சமராடினர். அதில் சீலனும் ஆனந்த் என்ற போராளியும் விழுப்புண் அடைகின்றனர். அதில் தாயக விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்க ஆயுதத்தை காக்கவென சக போராளி ஒருவனுக்கு கட்டளையிட்டு அவரைக் கொண்டு சுடுவித்து லெப்டினன்ட் சீலன் வீரகாவியமானார்.
அவர் வழியில் வீரவேங்கை ஆனந்த்தும் வீரச்சாவைத் தழுவினார்.

அன்று ஒரு துப்பாக்கியைக் காக்க இப்படியான தியாகத்தை புரிந்த மாவீரன் லெப். சீலனின் பெயரில் தமிழரின் முதல் மரபுப் படையணியாக சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி விளங்குகின்றது.

Labels: , ,

Monday, July 11, 2005

சேது சமுத்திரம் கால்வாய்த்திட்டம்

கோகர்ணனின் மறுபக்கம்.

சேது சமுத்திரம் கால்வாய்த்திட்டத்திற்கான அடிக்கல் இம்மாதம் நாட்டப்பட்டுள்ளது. ஆயினும், அதைத்தடுத்து நிறுத்த இன்னமும் நாட் கடந்துவிடவில்லை. இப்போது தமிழக மீனவர்கள் தமது எதிர்ப்பைத் தெரிவித்துப் போராடத் தொடங்கியிருக்கிறார்கள். இத் திட்டம் மீனவர்களை மட்டும் பாதிக்கும் திட்டமல்ல. தமிழகத்தின் மண்வளத்தையும் பாதிக்கும் வாய்ப்புகள் உண்டு. எனினும், நிபுணர்கள் எனப்படுவோர் கூலிப்படைகள் போலவே செயற்படுகின்றனர். நீதிமன்றத்தில் எதிரெதிரான கருத்துகளை வலியுறுத்துவதற்கு வழக்கறிஞர்கள் நிபுணர்களைப் பயன்படுத்துகின்றனர். விஞ்ஞானத்தின் பேராலும் தமது தகைமைகளைக் காட்டி மற்றவர்களை நம்பவைக்கும் வல்லமையாலும் நிபுணர்கள் தமது தரப்புக்கு ஏற்றவிதமாகத் தகவல்களைத் தெரிந்து விளக்கங்களைத் தருகிறார்கள்.

பெரிய அணைக்கட்டுகளால் ஏற்படும் தீய விளைவுகள் பற்றிய விஞ்ஞான அடிப்படையிலான உண்மைகள் கடந்த இருபது, முப்பது வருடங்களாகவே தெரியவந்துள்ள போதும், அவற்றை அலட்சியம் செய்து பெரிய அணைக்கட்டுகளைக் கட்டுவதற்கு ஆதரவாக பேசுகிற புவியமைப்பியல் நிபுணர்கள் இருக்கிறார்கள். இன்று அளவு மீறிய எரிபொருள் நகர்வால் புவி மண்டலம் வெப்பமடைந்து வருகிறது என்பதற்கான சான்றுகள் போதியளவுக்கும் மேலாகக் கிடைத்திருக்கிற போதும், அந்த ஆதாரங்கள் போதியனவல்ல என்று வாதிக்கவும் ஒரு நிபுணர் கூட்டம் இருக்கிறது. மரபணு மாற்றத்தின் மூலம் உருவாக்கப்படும் பயிர்வகைகளால் ஏற்படக்கூடிய அழிவுகள் பற்றிய எச்சரிக்கைகளை மீறி அவ்வாறான தாவரங்கள் வணிக நோக்கில் மூன்றாமுலக நாடுகளிற் பயிரிடப்படுகின்றன. இது பற்றிப் பலவேறு நோக்குகளில் எச்சரிக்கப்பட்டுள்ள போதும், விதைகளை உற்பத்தி செய்து அவற்றின் மீதான காப்புரிமை மூலம் பணத்தைக் குவிக்கும் பொன்ஸான்றோ போன்ற கம்பனிகளின் சார்பாக விஞ்ஞான ரீதியான நியாயங்களை வழங்கவும் நிபுணர்கள் இருக்கிறார்கள்.

விஞ்ஞானத்தைப் பற்றி மக்கள் நம்பிக்கை இழப்பதற்கும் நிபுணர்கள் பற்றி மக்களின் நிச்சயமின்மை கூடிக்கொண்டு வருவதற்கும் பல நிபுணர்களின் மேற்குறிப்பிட்டவாறான நடவடிக்கைகள் காரணமாக இருந்து வருகின்றன. எனவே, மக்கள் நேர்மையான நிபுணர்களையும் நேர்மையற்றோரையும் ஒரேவிதமாகவே நோக்குகின்றனர். இது அடிப்படையில் நியாயமானதும் நன்மையானதும் என்றே நினைக்கிறேன். நிபுணர்கள் மக்களைப் பாதிக்கும் விடயங்கள் பற்றிப் பேசும் போது மக்களுக்கு விளங்கக் கூடிய மொழியிற் பேசுவது மட்டுமில்லாமல் அவர்கள் சொல்கிற ஒவ்வொரு விடயத்தையும் மக்கள் ஆராய்ந்து அலசி விசாரணைக்கு உட்படுத்தக் கூடிய விதமாகவும் முன்வைக்கப் பழக வேண்டும். ஒருவர் நிபுணர் என்பதால் நிபுணத்துவம் இல்லாதவர்கள் அவரைக் கேள்விக்கு உட்படுத்தக் கூடாது என்பதில் நியாயமில்லை. இந்த விதமான போக்குக்கு முடிவு காணப்பட வேண்டும்.

இன ஒழிப்புப் போரை விட வேறெதைப் பற்றியுமே சிந்திக்க நேரமற்றுக் கிடந்த பேரினவாத ஆட்சிகள் சேது சமுத்திரத்திட்டம் பற்றி எதுவிதமான அக்கறையும் காட்டவில்லை. திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்ற அறிவிப்பின் பின்பு கூட அரசாங்கமோ பிரதான எதிர்க்கட்சியோ அதையிட்டுக் கவலைகாட்டவில்லை. ஜே.வி.பி.யும் தமிழ் மக்களின் காவலர்களாக அணிவகுத்து நிற்கிற தலைமைகளும் கூட இந்தத் திட்டத்தினால் இலங்கைக்கு ஏற்படக் கூடிய தீய விளைவுகள் பற்றி மௌனஞ் சாதிக்கின்றனர். இந்த நாட்டைப்பற்றிய அக்கறையீனத்தில் நமது அரசியல் தலைமைகளிடையே உள்ள ஒற்றுமையில் ஒரு சிறுபகுதி இந்த நாட்டு மக்களின் நலன் பேணும் விடயங்களிற் காணப்பட்டால் எவ்வளவு அருமையாக இருக்கும்?

இலங்கைக் கடற்படைத் தலைமையினரோ, இந்தத் திட்டத்தின் மூலம் இலங்கையின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உட்படுகிறது என்று அரசாங்கத்திடம் நெருக்கியுள்ளனர். கப்பற்போக்குவரத்து, துறைமுக விருத்தி போன்ற துறைகளில் உள்ள கவலைகள் அண்மைக் காலங்களில் வெளிவெளியாகப் பேசப்பட்டாலும் போதியளவுக்கு அரசாங்கத்தின் மீதோ பிரதான எதிர்க்கட்சி மீதோ வற்புறுத்தல்கட்கான சான்றுகள் இல்லை. இது நாட்டின் பொருளாதாரத்தையும் நாட்டு மக்களின் ஒரு பகுதியினரது தொழிலையும் நீண்ட காலத்தில் நாட்டின் கணிசமான ஒரு பகுதியின் நில, நீர் வளங்களையும் பாதிக்கக் கூடிய பிரச்சினைகள் என்பது பற்றி உணர இயலாத அரசியற் தலைமைகள் தானா நமக்குக் கிடைத்துள்ளன?

அண்மையில் சேது சமுத்திரத் திட்டம் பற்றி மூன்று `தமிழ் நிபுணர்கள்' கூறியிருந்த விடயங்களை இணையத் தளத்திலிருந்து மீட்டெடுத்துப் பார்த்த போது, நமது அறிஞர்களின் அவல நிலையை எண்ணிப் பெருமூச்சு விட்டேன்.

சேது சமுத்திரத் திட்டம் இலங்கையின் வட, வடமேற்குக் கரையில் வரலாற்றுப் பெருமைமிக்க துறைமுகங்கட்குப் புத்துயிரூட்டும் என்றும் அதன் விளைவாக இலங்கைக்கு நன்மையே ஒழிய தீமை இல்லை என்று அடித்துரைத்திருக்கிறார் ஒரு மூத்த தமிழ்ப் பேராசிரியர். அவரது சிறப்புத் துறை இடைக்கால இலங்கை வரலாறு.

இன்னொரு நிபுணர் சமூகவியலாளர். உலக வங்கிக்காகப் பணியாற்றுகிற தமிழர். இந்தியாவின் சேது சமுத்திரத் திட்டம் நனவாகுமாயின் வட இலங்கைக்கும் தென்னிந்தியாவுக்குமிடையே கடல் வழி வணிகம் செழித்த ஒரு மகத்தான் காலம் மீளும் என்று கனவு காணுகிறார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியலாளர் ஒருவர், கால்வாயை அமைக்க நீரிணையை ஆழப்படுத்தினால் யாழ்ப்பாண மேற்குக் கரையிற் கணிசமான பகுதி மண்ணரிப்புக்கு ஆளாகும் என்ற அச்சம் அடிப்படையற்றது என்றும், கால்வாய் இலங்கைக் கரையினின்று வெகுதொலைவிலுள்ளதால் எதுவித பாதிப்புக்கும் இடமில்லை என்றும் கூறுகிறார். இந்த அறிஞருக்கு திரவங்களின் பாய்ச்சல் பற்றியும், கடல் உயிரியல் பற்றியும், புவியமைப்பியல் பற்றியும் எவ்வளவு அறிவு உண்டு என்று சொல்வது கடினம். எனினும், இந்த அறிஞர் சில காலம் முன்பு சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்து பேசியவர் என்பது கவனிக்கத்தக்கது.

இந்த நிபுணர்களில் எவருக்கும் சேது சமுத்திரத்தின் பாதிப்புகள் பற்றிய கவலைகளுடன் தொடர்பான துறைகளில் அடிப்படையான அறிவு கூட இருக்கிறதா என்பது முக்கியமான ஒரு கேள்வி. எனினும், பேராசிரியர், கலாநிதி, விரிவுரையாளர் என்ற மக்கள் பதவிகள் அவர்கள் எந்தத் துறை பற்றியும் நிபுணர்கள் போலப் பேச இடமளிக்கிறது. அவர்கள் பேசுவது இந்திய மேலாதிக்கத்துக்கு உடன்பாடானது என்பதால் அங்கே அவர்களது கருத்துகட்கு முக்கியத்துவம் கிட்டுகிறது. அதன்மூலம் இந்தியத் தமிழரை ஏய்க்க இயலுமாகிறது.

இப்படிப்பட்ட நிபுணர்களை விட ஒரு சராசரி சினிமா கதாநாயகனோ கதாநாயகியோ அறிவு மிகுந்த விடைகளைத் தர வாய்ப்பு உண்டு.

நமது பிரச்சினை எங்கே உள்ளதென்றால் மக்களைப் பாதிக்கிற விடயங்கள் பற்றிய விவாதங்கள் குறுகிய அரசியல் நோக்கங்களின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகின்றன. "கஞ்சி குடிப்பதற்கிலார் அதன் காரணம் இவையென்னும் அறிவுமிலார்" என்று பாரதி எண்பது ஆண்டுகள் மனம்நொந்த நிலையிலேயே மூன்றாமுலகின் மக்கள் உள்ளனர். காரணங்களை மக்கள் அறியாத வரை மக்களை ஏய்க்கிற அரசியல்வாதிகளுக்கும், பணமுதலைகட்கும், பகல்வேடக்கார ஆன்மீகவாதிகட்கும், அறிஞர்கள் என்ற பேரில் உலா வருகிற சந்தர்ப்பவாதிகட்கும் நல்ல வேட்டை தான்.

பிரச்சினைகள் பற்றிய சிந்தனைகள் மக்கள் மத்தியில் முளைவிட வேண்டுமானால், பிரச்சினைகள் பற்றி விரிவாகப் பேசவும் விவாதிக்கவும் தேவை உண்டு. வெகுசனங்கள் நடுவே பிரசாரம் முன்னெடுக்கப்படும் தேவை உண்டு. போராட்டங்களின் போக்கிலேயே சமூகம் விழிப்படைகிறது.

மக்களின் பங்கு பற்றுதல் வாக்குச் சாவடிக்கும் கட்சிக் கூட்டங்களுக்கும் அப்பால் வளருவதை விருப்பாத ஒரு அரசியல் மரபினின்று மக்கள் தம்மைத் தாமே விடுவிக்க வேண்டும். இதில் ஊடகங்கட்கு ஒரு பலனுள்ள பங்குண்டு.

சேது சமுத்திரத் திட்டத்தின் பாதிப்புகள் பற்றிய விவாதங்கள் அறிஞர்களது அபிப்பிராய வாக்கெடுப்புகளாக இல்லாமல் விஞ்ஞான, சமூகவியல் அடிப்படையிலான ஆழமான ஆய்வுகளாக முன்னெடுக்கப்படுவது அவசியம். நம் ஊடகங்கள் உதவுமா?

கோகர்ணனின் மறுபக்கம்.
நன்றி-தினக்குரல்.

Labels: ,

Sunday, July 10, 2005

அமைதியை நோக்கிய சூடான் மக்களின் பயணம்.

ஒரு சிறப்புப் பார்வை.

நிம்மதிப் பெருமூச்சை சூடான்மக்கள் விடத்தொடங்கியிருக்கிறார்கள். ஆபிரிக்காவிலேயே மிகப்பெரிய நாடு சூடான்தான். 4000 மைல்கள் அலைந்துகொண்டு வரும் நைல் நதியால் அதன் நிலப்பரப்புக்கள் வளம் கொழிக்கின்றன. தென்சூடானில் ‘கறுப்புத் தங்கம்' அதாவது எண்ணெய்வளம் உள்ளது. மனித நாகரீகத்தின் தொட்டில் என்று வர்ணிக்கப்படுவதற்கு இயூபறேற்ஸைவிட சூடானே மிகப் பொருத்தமானது எனக்கூறும் அளவுக்கு புராதனமான வரலாற்றைக் கொண்டது. சூடானினுடைய வரலாறு எவ்வளவுக்குப் புராதனமானதோ அந்த அளவுக்கு அதன் துன்பங்களும் புராதனமானவைதான்.

17ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வடக்கே எகிப்திலிருந்து வந்த அரபு முஸ்லிம்கள் சூடானைக் கைப்பற்றிக் கொண்டார்கள். அதற்கு முன்பே கிறிஸ்தவ சமயம் சூடானில் பரவியிருந்தது. பல ஆதிவாசி அரசுகள் இப்படி கிறிஸ்தவ சமயத்திற்கு மாற்றப்பட்டிருந்தனர்.
வடக்கே காட்டூமைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிசெய்த முஸ்லிம் பெரும்பான்மை அரசுகள் தெற்கை அடிமை நாடாகவே பார்த்தன. அடிமைகளை பிடிக்கும் களமாகவே பார்த்தன. 18ம் நூற்றாண்டின் இறுதி வருடங்களில் பிரித்தானியா 'காட்டூமை'க் கைப்பற்றியது. 1899ம் ஆண்டில் சூடானை கூட்டாக ஆட்சி செய்வதற்கென பிரித்தானியாவும் எகிப்தும் செய்துகொண்ட ஒப்பந்தம் சூடான் தேசியவாதிகளின் கடும் எதிர்ப்புக்குள்ளானது.


1945ம் ஆண்டளவில் எகிப்தோடு சூடான் இணையவேண்டும் என்று கோரும் தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சியும் (NUP) நிபந்தனையற்ற சுதந்திரத்தைக் கோரும் உம்மா கட்சி (UP) சூடானில் உருவாகியிருந்தன.

அரபு முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட வடசூடானில் 22 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். ஆபிரிக்கக் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் தென்சூடானில் 8 மில்லியன் மக்கள் உள்ளனர். பிரித்தானிய ஏகாதிபத்தியம் வடக்கு, தெற்குச் சூடான்களை வேறுவேறாகவே ஆண்டுவந்தது. அவர்களது வசைப்புகழ் பெற்ற 1920ம் ஆண்டின் "மூடப்பட்ட மாவட்ட" ஆட்சிமுறையின் கீழ் தென்சூடான் மக்கள் வடசூடானோடு எந்தத் தொடர்புமற்று நுகர்வோராக இருக்க ஊக்கப்படுத்தப்பட்டார்கள். இந்த மக்கள் பிரித்தானிய கிழக்காபிரிக்காவிலேயே தங்கள் உயர்கல்வியைப் பெற்றார்கள்.

வட, தென் சூடான்களிடையேயான பயணத்துக்கு கடவுச்சீட்டுக்கள் அவசியமாக இருக்கும் அளவுக்கு இந்தப் 'பிரிதாளும் கொள்கை' நடைமுறைப்படுத்தப்பட்டது. சூடானுக்கு சுதந்திரம்வழங்க முன்னதாக தென்சூடானை என்னசெய்வது என்ற பிரச்சினை பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் முன் எழுந்தது. அதற்கு சூடானில் நிலவிய பல்பரிமாண முரண்பாடுகளே காரணமாய் அமைந்தன.

(01) உண்மையைச் சொல்லப்போனால் வடசூடானில் வாழும் அரபு முஸ்லிம்களிடையே முரண்பாடுகள் உள்ளன. உதாரணமாக NUPக்கும் UPக்கும் இடையேயான முரண்பாடுகள் உள்ளன.

(02) தெற்கில் வாழும் ஆபிரிக்க கிறிஸ்தவர்களிடையே முரண்பாடுகள் இருக்கின்றன. எனினும் இந்த வேறுபாடுகள் முக்கியத்துவம் பெறாத அளவுக்கு காட்டூமின் அரபு மேலாண்மை அரசுக்கு எதிராக தெற்கின் SPLM இயக்கம் மேஜர் ஜெனரல் ஜோண் கறாஸ் தலைமையில் நடத்திய போராட்டம் அமைந்தது. இந்தப் போராட்டத்தை ஒடுக்கும் அரசின் முயற்சியில் 1983-1995 காலப்பகுதியில் மட்டும் 1.6 மில்லியன் தென்சூடான் மக்கள் கொன்றழிக்கப்பட்டனர். தென்சூடானின் வளங்களை முடிந்தளவு சுரண்டுவதற்குக் காட்டூம் அரசு முழுமுயற்சிசெய்கிறது.

(03) சூடானிய இராணுவத்தின் முதுநிலை அதிகாரிகளான கபிரியல் தஸ்கின்யா (GAB-RIRL TANGHINYA) போளினோ மாற்றிப் (PAULINO MATIB) ஆகிய இருவரும் மேல் நைல்நதிப் பிராந்தியங்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்கள். இவர்கள் இருவருமே SPLN மீது வெறுப்புக் கொண்டவர்கள் என்பது வெளிப்படையான விடயம்.

(04) சஹாரா பாலைவனம் தங்கள் மேய்ச்சல் நிலங்களைக் காவுகொண்டதைத் தொடர்ந்து சூடானின் மேற்குப் பிராந்தியமான டார்பருக்குள் புலம்பெயர்ந்த அரபு நாடோடிகளுக்கும் அந்த மண்ணின் மைந்தர்களான ஆபிரிக்கர்களுக்கும் இடையேயான முரண்பாடுகள் உள்ளன. இந்த முரண்பாட்டைத் தீர்க்கும் வழியாக காட்டூம் அரசு ஜஞ்ஞாவிட் துணை இராணுவப் படையைப் பயன்படுத்தியதில் ஏற்பட்ட வன்முறைகளில் 400,000 மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதில் ஆகக் குறைந்தது 150,000 பேராவது காட்டூம் அரசு ஆதரவிலான ஜஞ்ஞாவிட்களால் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அல்லது காணாமற் போயிருககிறார்கள். வல்லுறவுக் கொடுமைகளுக்கு பல ஆயிரம்பெண்கள் உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். வல்லுறவு என்பது மக்களின் உளவுரணை உடைப்பதற்கான ஒரு போராயுதமாகவே அங்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தங்கள் வாழ்விடங்களில் இருந்து துரத்தியடிக்கப்பட்டு பல நூறாயிரக்கணக்கானவர்கள் இடம்பெயர அவர்களின் வாழ்விடங்களை ஜஞ்ஞாவிட்கள் பறித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக அவர்களது 'கலாச்சாரம் சேதப்பட்டிருக்கிறது' என்று வோஷிங்ரனில் இருந்து செயற்படும் நீதிக்கான சர்வதேச இயக்கம் (INTERNATIONAL JUSTICE) கூறியுள்ளது.

(05) இவை எவற்றுள்ளும் சேராமல் மத்திய சூடான் பகுதிகளிலும் பதட்டம் நிலவுகிறது. பிரித்தானியர் சூடானுக்குச் சுதந்திரம் வழங்கிய 1956ம் ஆண்டு காலப்பகுதியில் தெற்கில் அரசியற் கட்சிகள் எதுவும் உருவாகியிருக்காத்தைச் சாட்டாக வைத்து சுயநிர்ணயச் செயற்பாட்டில் தெற்கு மக்கள் புறக்கணிக்கப்பட்டனர். 'தென் சூடான் கொள்கையைக் கைவிட்ட பிரித்தானியர்கள்' இரு சூடான்களையும் அரபு மேலாண்மைக் காட்டூம் அரசிடம் கையளிப்பதை அரசியல் தற்கொலைக்கு ஒப்பானது என்று தெரிந்து கொண்டே செய்ததன்மூலம் தெற்கு மக்களின் முதுகில் குத்தினார்கள். சுதந்திரம் கிடைத்ததைத் தொடர்ந்து சமஷ்டி அரசு அமைப்பதான வாக்குறுதியை காட்டூம் அரசு காற்றில் பறக்கவிட்டது. இதை எதிர்த்தே SPLM இன் போராட்டம் ஆரம்பமானது. 1991இல் இருந்து அண்ணளவாக இரண்டு வருடங்களுக்கொருமுறை என இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து 2002, யூலையில் மக்காகொஸ் ஏற்பாடுகள் உருவாக்கப்பட்டன.

இந்த 7 அம்ச ஏற்பாடுகளில் முக்கியமான அம்சங்களாக, தென்சூடானுக்கு 6 வருட இடைக்கால சுயாட்சியை வழங்குவதும் ஆறுவருட முடிவில் காட்டூம் அரசினால் தொடர்ந்து ஆளப்படுவதா அல்லது பிரிந்து செல்வதா? என்று தென்சூடான் மக்களிடையே கருத்துக்கணிப்பு இடம்பெறும் என்பதும் இருக்கின்றன. பேசித் தீர்மானிக்க வேண்டிய விடயங்களில் முக்கியமானவையாக வளப்பகிர்வும் அதிகாரப் பகிர்வும் எப்படி அமைய வேண்டும் என்பது இருக்கின்றது.



(2002 வரையான சூடான் மற்றும் டார்பர் பிரச்சினைகள் தொடர்பான மேலதிக விபரங்களுக்கு ‘விடுதலைப் புலிகள்' இதழின் தை, 2004 இதழிலுள்ள “ஆக்கிரமிப்பிலிருந்து மீளும் தென்சூடான்" மற்றும் ஆவணி, 2004 இதழிலுள்ள “சர்வதேச மயமாகும் டார்பர்பிரச்சினை" ஆகிய கட்டுரைகளைப் பார்க்கவும்.)

மக்காகொஸ் ஏற்பாடுகளைத் தொடர்ந்து 30 மாதங்களாக இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து 2005, ஜனவரி 9ஆம் திகதி ஏற்பட்டுள்ள ஒப்பந்தம் தென்புலத்தவர்கட்குப் பெரும் வெற்றி என்று ஆய்வாளர்கள் வர்ணித்திருக்கின்றார்கள். இந்த ஒப்பந்தம் பல்வேறு விதங்களில் ஒரு வரலாற்றுச் சாதனையாகக் கருதப்படுகிறது.

* முதலாவதாக, ஆபிரிக்காவின் மிக நீண்ட போரை அது முடிவுக்குக் கொண்டுவந்திருக்கிறது. 1983இல் அடிஸ் அபாபாவில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தைக் காட்டூம் அரசு ஒருதலைப்பட்சமாகக் கைவிட்டதால் தூண்டிவிடப்பட்டதாக இந்த நீண்டபோர் இருக்கிறது.

** இரண்டாவதாக, தென்சூடானியர்களின் உண்மையான துன்பங்களுக்குத் தீர்வு காண்பதன்மூலம் முரண்பாட்டை நியாயமான முறையில் தீர்ப்பதற்கு அது வழிவகுத்திருக்கிறது.

*** மூன்றாவதாக, கடந்த 15வருட காலமாக நாட்டை ஆட்சிசெய்யும் சர்வாதிகாரப் போக்கான ஆட்சிமுறைக்குப் படிப்படியாக முடிவு கட்டும் விதத்தில் ஆட்சித்துறையில் உணரப்படக்கூடிய சனநாயக ரீதியான மாற்றங்களை அது எதிர்வு கூறியிருக்கிறது. சூடானை மீள்கட்டமைப்புச் செய்வதற்கான ஓர் ஆரம்பப்புள்ளியாக அது அமைகிறதெனினும் மாற்றத்துக்கான ஊக்கியாகவும் அது காணப்படுகிறது.

இந்த ஒப்பந்தமானது முன்னெப்போதுமில்லாத அளவுக்குத் தென்புலத்தின்மீது பிரமாண்டமான அதிகாரங்களை SPLM இற்கு வழங்குகிறது. இதற்கு அந்த அமைப்பு தனது ஒருமைப்பாட்டைப் பேணுவதோடு தன்னை ஒரு அரசியல் கட்சியாக மாற்றிக்கொண்டு சனநாயக ஆட்சிமுறை பற்றியும் கற்றுக்கொள்ள வேண்டும். டிங்கா இனத்தவர்கள் மேலாண்மை கொண்டுள்ள SPLM ஆனது சூடானிய இராணுவத்தோடு சமாந்தரமாகச் செயற்படும் என்பதோடு ஏனைய துணைப்படைகள் மற்றும் ஆயுதம் தாங்கிய இயக்கங்கள் முதலியவை காட்டூமில் தேசிய அரசு ஏற்படுத்தப்பட்டு 12 மாதங்களினுள் ஒன்றில் SPLM உடன் அல்லது சூடானிய இராணுவத்துடன் இணைந்துகொள்ள வேண்டும்.

இந்த ஒப்பந்தப்படி காட்டூம் அரசும் SPLM உம் எண்ணெய்வள வருமானத்தை 50:50 அடிப்படையில் பகிர்ந்துகொள்வார்கள். தேசிய ஒருமைப்பாட்டு அரசு காட்டூமில் உருவாக்கப்பட்டதும் தொடங்கும் இடைக்கால ஆட்சியில் SPLM இன் தலைவர் மேஜர் ஜெனரல் ஜோண் கறாங் முதலாவது உப ஜனாதிபதியாகப் பதவி ஏற்பார். கென்யாவின் முன்னாள் ஜனாதிபதியான டானியல் அறாப் மொய் (DANIEL ARAP MOI) உருவாக்கிய மொய் ஆபிரிக்கா மையத்தின் ஏற்பாட்டில் நைரோபியில் இடம்பெற்ற தெற்கு - தெற்கு ஒப்புரவு மகாநாட்டில் தெற்கில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் ஆயுதம் தாங்கிய போராட்டக் குழுக்களுக்கு கறாங் ஒலிவ் கிளையை நீட்டியிருக்கின்றார்.

"இங்கு பிரசன்னமாயிராத ஆயுதம் தரித்த குழுக்களை இணைவுக்கென வரவேற்க SPLM காத்திருக்கிறது என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறேன். இந்த ஒப்பந்தத்தில் யார் கையெழுத்திட்டார்கள், யார் அதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்தினார்கள் என்பதெல்லாம் முக்கியமல்ல. இது உங்களுடைய சமாதானம் இந்தப் பேச்சுவார்த்தைகளை எங்களுக்கிடையே இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து மீள ஒப்புரவாகி ஒருவரை ஒருவர் மன்னித்து எமது பிணைப்பை வலுப்படுத்திக்கொள்வோம்"
என்று அவர் அழைப்பு விடுத்திருக்கிறார்.

ஆறுவருட இடைக்கால ஆட்சியின் பின் தென்புல மக்கள் ஒருகருத்துக் கணிப்பு மூலம் சூடானின் ஒரு பகுதியாகத் தொடர்ந்தும் இருப்பதா அல்லது பிரிந்து செல்வதா என்று தீர்மானிப்பார்கள். தற்போது நியமிக்கப்பட்டிருக்கும் 60 உறுப்பினர் கொண்ட தேசிய அரசியலமைப்பு மீளாய்வு ஆணைக்குழுவில் ஜனாதிபதி ஓமார் அல் பெசீரின் தேசிய காங்கிரஸ் (NC) கட்சிக்கு 52 ஆசனங்களும் மேஜர் ஜெனரல் கறாங் தலைமையிலான SPLM இற்கு 28 ஆசனங்களும் ஏனைய தரப்பினர் களுக்கு 20 ஆசனங்களும் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இந்த 20 பிரதிநிதிகளுக்கு முடிவுகளைத் தடைசெய்யும் அதிகாரம் இருக்காது. இந்த ஒதுக்கீடுகள் குறித்து எதிர்ப்புக் குரல்கள் எழுந்திருக்கின்றன. ஆசனங்கள் வடக்குத் தெற்குக்கென ஒதுக்கீடு செய்யப்பட வேண்டுமேயொழிய அரசியல் கட்சிகளுக்கு அல்ல என்று சனநாயக முறையில் இறுதியாகத் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதி பதியான சாதில் அல் மாஹ்தி கூறியிருக்கிறார்.



ஏனைய தரப்புக்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்கள் போதாது. மீள் ஒதுக்கீடு செய்யப்படவேண்டும் என்று ஆயுதம் தாங்கிப் போரிட்ட ஏனைய குழுக்கள் கோரியுள்ளன. சிறையிடப்பட்ட ஹஸன்-அல்-துராபி (HASSAN-AL-TURABI) தலைமையிலான மக்கள் காங்கிரஸ் போன்ற சில அமைப்புக்கள் இவ்வொதுக்கீட்டில் திருப்தியில்லாத போதிலும் அரசியலமைப்புச் செயற்பாட்டில் பங்கெடுக்கப்போவதாக அறிவித்துள்ளன. இதற்கிடையே டார்பரில் போர்க் குற்றங்கள் புரிந்தவர்களை ஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கான ஐ.நா பாதுகாப்புச் சபையின் 1593ம் இலக்க தீர்மானம் இந்தப் பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட ஆபிரிக்க யூனியன் எடுக்கும் முயற்சிகளைக் கணக்கிலெடுக்காததாக இருக்கிறது என சூடான் முறைப்பட்டுள்ளது.

இவ்வாறு சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கென 50 பேரின் பெயர்கொண்ட பட்டியல் ஒன்றை ஐ.நாவின் சிறப்புக் குழுவொன்று தயாரித்துள்ளது. தெற்கில் ஏற்பட்ட போருக்கு தென்புல மக்களை காட்டூம் அரசு கவனிக்காமல் விட்டதே காரணமாக அமைந்தது. கென்யா- உகண்டா - றுவாண்டா ஆகிய நாடுகளின் மொத்தப் பரப்பளவினதான தென்சூடானில் அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள பிரதான நகர மான ஜுபாவில் 12 கிலோமீற்றர் தூர வீதிக்கு மட்டும் தார் போடப்பட்டிருக்கிறது என்பதை வைத்து தென்சூடானின் அபிவிருத்தி எந்த அளவுக்கு அலட்சியப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். திருச்சபையும் அரசசார்பற்ற நிறுவனங்களும் உருவாக்க முயன்றுகொண்டிருப்பவை தவிர வேறு பாடசாலைகளோ அல்லது மருத்துவமனைகளோ அங்கு இல்லை.

‘சர்வதேச சமூகம் உண்மையி லேயேசூடானின் ஒருமைப்பாட்டை முன்னெடுக்கவும் அதற்கு அனுசரணையாக தென்சூடான் மக்களை 2011ம் ஆண்டில் வாக்களிக்க ஊக்கப்படுத்தவும் விரும்பினால் முதலில் அது இந்த ஒப்பந்தத்தை (வலுமிக்க ஐ.நா படை போன்ற பாதுகாப்பு மற்றும் நடைமுறைப்படுத்தல் பொறியமைப்பு மூலம்) நடைமுறைப்படுத்துவதை உறுதிப்படுத்துவதோடு தென்புலத்தில் நிலவும் அபிவிருத்திக் குறைபாட்டை நிரவிக்கொள்ள (மத்திய ஆட்சி மட்டத்தில் தென்புலத்தோரின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான மேலதிக முயற்சிகள் உள்ளிட்ட) உதவிகளை தென்சூடானிய மக்களுக்கு அளிக்கவும் வேண்டும். இப்படிச் செய்யும்போது தெற்கில் சனநாயக ஆட்சிமுறைக்கான தேவை மற்றும் தென் சூடானின் விருப்பை மதித்து பிரிவினை ஏதுநிலையை நடைமுறைப்படுத்தவும் முன்கூட்டியே திட்டமிட வேண்டும்.'
என்று கிளிஞ்ஜென்டேல் முரண்பாட்டு ஆய்வுகள் பிரிவின் (CLINGENDAEL CONFLICT RESEARCH UNIT) முதுநிலை ஆய்வாள ரான கலாநிதி எமறிக் றோஜியர் (Dr. EMERIC ROGIER) கூறியுள்ளார்.

ஒட்டுமொத்தமாகச் சொல்வதானால் மேற்படி அமைதி முயற்சிகள் வெற்றி பெறுவதற்குள்ள தடைகள் நீக்கப்பட்டு தென்சூடானின் பல நூற்றாண்டுகால அடிமைத் தளைகள் களையப்பட்டு தற்போதைய நிம்மதிப் பெருமூச்சுகள் நிரந்தரமானவையாக ஆகவேண்டும். அந்த ஏதுநிலைக்கு வாய்ப்பில்லாது போனால் கலாநிதி எமறிக் றோஜியர் சொல்வதுபோல் பிரிவினை ஏதுநிலையை சர்வதேச சமூகம் உறுதியாக நடைமுறைப்படுத்துவதன் மூலமாவது இந்த நிம்மதிப் பெருமூச்சுக்கள் நிரந்தரமாக்கப்பட வேண்டும்.

-வி. அருளாளன்.-
நன்றி:
விடுதலைப் புலிகள் -குரல் 123.

Labels: , ,

Saturday, July 09, 2005

ஆனையிறவும் அந்த நாட்களும்...

(ஆனையிறவு பற்றிய நினைவலைகள்)

உண்ணி வெட்டை. அந்த வெட்டையில் உண்ணிகளோடு பட்ட துயர் தாளாமல் நாம் இட்ட காரணப்பெயர் இது.

பரந்தனிலிருந்து இயக்கச்சி போகும்போது ஆனையிறவுப் பெயர்ப் பலகையைக் கடந்தவுடன் வடகிழக்குத் திசையில் பாருங்கள் நீண்ட நீர்ப்பரப்புக்கு அப்பால் திட்டாக ஒரு நிலம் தெரியும். அங்கே நாம் நின்றோம், 1992ஆம் ஆண்டின் கடுங்கோடை காலத்தில்.

ஆனையிறவை விடமாட்டோம் என்று சிறிலங்கா படையினரும், அவர்களை அங்கிருக்க விடவேமாட்டோம் என்று நாமும் வரிந்து கட்டிக்கொண்டு அந்த வெளியில் கிடந்தோம்.

எங்களுடைய கண்ணுக்கு இராணுவ நடமாட்டம் தெரியும். நாம் எழுந்து நடந்தால் எங்களையும் எதிரிக்குத் தெரியும். எனவே எழும்புவதில்லை. குந்தியிருந்து அவதானிக்க ஓர் அகழி. உணவுண்ண, ஓய்வெடுக்க அதனோடு இணைந்தபடி இன்னோர் அகழி. காலையிலிருந்து இருளும்வரை எங்களுடைய அனைத்துச் செயற்பாடுகளும் நடமாட்டங்களும் அந்த இரு அகழிகளுக்குள்ளே மட்டுமே. மூப்படைந்தோர் போல முதுகை வளைத்துத்தான் அகழிகளுள் நடந்தோம். நில மட்டத்தோடு விழிகளை வைத்துத்தான் கண்காணித்தோம். வீசுகின்ற காற்றில் செறிந்திருக்கும் உப்பு விழிகளோடு மோதி கண்ணீர் வடிந்துகொண்டிருக்கும். முகம், காது, கழுத்தெல்லாம் உப்புப் படிந்துவிடும். வழியும் வியர்வையைக் கையால் வழித்துத் துடைத்தோமோ, அவ்வளவுதான். உப்புப் படிவுகளால் முகம் உரசப்பட்டு உரசல்களில் உப்புப்பட்டு, தீப்பற்றி எரிவதுபோல் முகம் எரியும்.

மட்டுப்படுத்தப்பட்டளவு தண்ணீர் சிறு கொள்கலன்களுள்ளே இருக்கும். அளந்து குடிக்காமல் அவசரப்பட்டு குடித்துமுடித்தோமோ இருளும்வரை வாயுலரக் கிடக்கவேண்டியதுதான்.

வியர்க்கின்றது என்று வெளியில் எழுந்து உலாவமுடியாது. திறந்திருக்கும் அகழிகளில் கரந்துறையும் எங்களைச் சுடுவது வெயில் மட்டுமன்று . சூரியன் மேலுயர மேலுயர நிலம் வெப்பமடையத் தொடங்கும். சூடேறிய நிலம் வெளிவிடும் வெப்பத்தால் அகழிகளுக்குள் வெந்துபோய்க் கிடந்தோம்.


சற்றுத் தூரத்தே ஒரே ஓர் ஆலமரமும், எமக்கு அண்மையாக ஒருகாய்ந்த பூவரசு வேலியும் இருந்தது. அவற்றின் சருகுகள் காற்றிலே பறந்து நிலம் முழுவதும் பரந்து கிடந்தன. சருகுகளின் கீழே படைபடையாக உண்ணிகள் கிடந்தன. அவற்றின் இலக்கு எங்களுடைய கை, கால் விரல் இடுக்குகள் தொப்புள். எப்படித்தான் அவைஎம்மேல் ஏறுகின்றனவோ?

அணிந்திருக்கின்ற ஒற்றைஉடையைத் தொலைதூரக் கிணறொன்றுக்கு மூன்று, நான்கு நாட்களுக்கு ஒருமுறை தவழ்ந்துபோய் தோய்த்துலரவிட்டு குளித்துமுடிய அதையே அணிந்துகொண்டு வருகின்ற எங்களுக்கு, ஒரேயொரு சிறு கொள்கலன் நீரோடு ஒருநாள் முழுவதும் வாழும் எங்களுக்கு இது பெரிய சோதனை.

உண்ணிகள் எம் இரத்தத்தை உறுஞ்சும்போது உண்டாகும் வலிதான் அவை எம்மீது ஏறி நிற்கின்றன என்று உணர்ந்தும். உண்ணியைப் பிடுங்கியெடுத்தால் கடிகாயத்திலிருந்து இரத்தம் வடியும். இருக்கின்ற ஒரு கொள்கலன் தண்ணீரை ஊற்றிக் கழுவவா முடியும்? கைகளால் துடைத்துவிட்டு நிமிர வேறோரு விரலிடுக்கில் புதிதாக வலி தெரியும். அந்த உப்புவெளியை மீட்க சிங்களப் படைகளோடு மட்டுமா போரிட்டோம்...?

********************************************

அந்தக் காலத்தில் ஆட்களின் தோற்றத்தைப் பார்த்து இவர் எந்தப்பகுதிக் காவலரணிலிருந்து வருகின்றார் என்று இனங்காணலாம். தோலின் நிறம் பெரியளவில் வேறுபடாமல், புத்துணர்வோடு நின்றால் அவர் பலாலிப் பகுதிக் காப்பரணிலிருந்து வந்தவராக இருக்கும். தலைமயிர் செம்படையாகி தோல் கறுத்து வரண்டு விழிகள் சிவப்பேறி பாதங்கள் பிளந்தபடி ஒருவர் வருகின்றாரா? ஐயம் வேண்டாம். அவர் ஆனையிறவிலிருந்துதான் வருகின்றார்.

பாலைவனப் பயணிகளாக எங்கள் வாழ்க்கை சிலகாலம் ஓடியது. இம்முறை எமக்கு ஒதுக்கப்பட்ட காப்பரண் பகுதியிலிருந்து கண்ணுக்கெட்டிய தொலைவில் ஒரு தென்னந்தோப்புத் தெரிந்தது. ஆகா! அதுவே போதும்.

தென்னந்தோப்பிலே கிடந்த துரவிலிருந்துதான் எமக்குத் தேவையான நீரை எடுத்துவர வேண்டும். இன்று துரவுக்குப்போய் நீரள்ளிவருவது யார் என்று பலத்த போட்டியின் பின் முடிவெடுக்கப்படும். நீரள்ளப்போகின்ற இருவரும் துரவுத் தண்ணீரில் குளித்துவிட்டு தென்னைகளில் ஏறி இளநீர் பிடுங்கிக் குடித்துவிட்டுத்தான் வருவார்கள். இருள் பிரியமுன்னர் இத்தனையும் நடந்துவிடும்.

அதிகாலையில் அவர்கள் சுமந்துவரும் ஒருகலன் நீரில் ஒரு பகல் முழுவதும் நாங்கள் குடித்து உண்டபின் கைகழுவி (துரவு கிடைத்த பின்னர் மட்டும்தான். முன்னர் "கழுவுவது" என்ற கதையே கிடையாது) துரவுக்குப் போகாத ஏனையவர்கள் பல் தீட்டி, முகம் கழுவி இயற்கைக்கடன் கழிக்கப் பயன்படுத்தி மறுநாள் அதிகாலைதான் மறுபடி நீரள்ளப் போவோம்.

அன்று அரையிருட்டில் துரவுக்குப் போனவர்களுக்கு ஒர் அற்புதமான யோசனை பிறந்தது. திட்டம் உடனடியாக அரங்கேறியது. தேங்காய்கள் பிடுங்கி வீசப்பட்டன. தண்ணீருக்குப் பதிலாக இளநீரால் கலன் நிரப்பப்பட்டது. காப்பரனில் நின்றவர்களுக்குப் புழுகம் தாளவில்லை. அரிய திட்டமொன்றை அரங்கேற்றிய இருவரையும் ஏனையவர்கள் மெச்சிக்கொண்டார்கள். இளநீராலே பல் தீட்டி, முகம் கழுவி, கைகழுவி, கால்கழுவி தேவைக்கும் மேலாக குடிகுடியென்று குடித்துத் தள்ளினோம். இரவு மறுபடி போய் நீரள்ளி வரும் திட்டம்.

ஏற்கனவே இருந்ததால் அளவுக் கட்டுப்பாடு பற்றி எவரும் அச்சமடையவில்லை. வழமைபோல கலன் வெயிலுக்குள் கிடந்தது. எங்களுக்கே நிழல் இல்லை. நேரம் மதியத்தை நெருங்கத் தொடங்கியது. காப்பரணில் நின்றவர் கலனைச் சரித்து வாயில் ஊற்றினார். கடகடவென நாலைந்து மிடறு விழுங்கியவர் கடைசியாக வாயில் எஞ்சியதை பாய்ந்து துப்பினார். ‘கள்ளுக் குடிச்சமாதிரிக் கிடக்கு” அதெப்படி காலையில் இளநீராக இருந்தது மதியம் கள்ளாகும்? குடித்துப் பார்த்த எல்லோரும் முகத்தைச் சுளித்தார்கள். வெயில் ஏற ஏற இளநீர் நொதிக்கத் தொடங்கிவிட்டிருந்தது.

புளித்த இளநீரைக் குடித்ததால் எல்லோருக்குமே நாவரண்டது. வாய் கழுவக்கூட நீரில்லை. எல்லாம் இனி இரவுதான். தண்ணீர் விடாயில் தாராளமாகக் குடித்தவருக்கு வயிறு குழப்பியது. இயற்கைக்கடன் கழிப்பதற்கும் இளநீர்தான், வேறு வழியேயில்லை. இருளும்வரை எப்படியாவது சமாளித்தாக வேண்டும். கடும் யோசனையுடன் காப்பரணில் நின்றவரின் காலில் எதுவோ கடித்த வலி. குனிந்து பார்த்தால் எறும்புப் பட்டாளம் ஒன்று கலனை மூடியிருந்தது. ஒன்றிரண்டு இவரின் பாதங்களையும் சுவைபார்த்தன. துள்ளிக் குதித்து இடம்மாறி நின்று உற்றுப் பார்த்தால் தொலைவில் இருந்து நீண்ட வரிசையில் அந்தக் கரிய பெரிய எறும்புகள் வந்துகொண்டெயிருப்பது தெரிந்தது. அடுத்த இலக்கு நாங்கள்தான். குடிப்பது தவிர்ந்த ஏனைய வேலைகளுக்கு இளநீரைப் பயன்படுத்தியவர்களின் விழிகள் பிதுங்கின. எதைச் சொல்ல?

ஆனையிறவுக்காக நாம் பட்ட வலிகளில் எதைச் சொல்ல? எதை விட?
**************************************

இப்போது "பலவேகய-02" நடந்துகொண்டிருக்கிறது. ஆனையிறவுப் படைத்தளத்தை விரிவாக்கும் முயற்சியில் சிறிலங்கா இராணுவமும், தடுக்கும் முயற்சியில் நாமும் அந்த வெளியில் மறுபடி ஒரு பெருஞ்சண்டை. அன்றைய சண்டை அப்போதுதான் முடிந்தது. நல்ல பகல்வேளை. சண்டை செய்த களைப்பு, பசி, தாகம் எல்லாம் வாட்ட நடந்து வந்துகொண்டிருந்தோம்.

திடீரென வானத்தைக் கருமேகங்கள் மூடின. சடுதியில் மழை பெய்யத்தொடங்கியது. கையில் அகப்பட்ட காவோலைகளை (காய்ந்த பனையோலை) தலைக்கு மேலே குடையாகப் பிடித்தோம். மழையோ சிறு மழையல்ல. மாரிமழைபோலப் பொழிந்தது. காவோலையிலிருந்து வழிந்த நீரை ஏந்திக் குடிக்கத் தொடங்கியவரும், முகம் கழுவியவரும், ஓலையை எறிந்துவிட்டு ஆனந்தமாக நனைந்தவருமாக எங்களை நாங்கள் மறந்தோம்.

"மழைக்க நனையாதே. மழைக்க நனையாதே” என்று தூரத்தே ஒலித்த அணித் தலைவியின் குரல் இப்போது எங்களை நெருங்கியது. அவரும் நனைந்தபடி. எங்களுக்குச் சிரிப்புவந்தது, அவரும் சிரித்துவிட்டார். எல்லோரும் பலமாகச் சிரித்தோம். வருடத்தின் நடுப்பகுதியில் உடலை வரட்டும் கடுங்கோடையில் எப்படி இப்போது மழை பெய்கின்றது.? இயற்கைக்கு நன்றி சொன்னோம். மழை விட்டது. களைப்புப் பறந்த இடம் தெரியவில்லை. மீண்டும் நடந்தோம்.

வானிலே பேரொலி எழுந்தது. Y-12 (குண்டுவீச்சு விமானம்) வருகின்றது.
அருகிருந்த அலம்பல் பற்றைகளுள் எம்மை மறைத்துக்கொண்டோம். மிகப்பெரிய அணி இது. ஒரு குண்டு அருகில் விழுந்தால்கூட இழப்பு அதிகம்தான். ஓடி வேறிடத்தில் மறைய நேரமில்லை. காப்புகளுமில்லை.

எல்லோருடைய வாய்களும் Y-12 ஐச் சாபமிட்டன. அது ஒருதடவை தாழ்ந்து உயர்ந்தால் மூன்று குண்டுகள் ஆடியாடி வந்து வீழும். குண்டு வீழ்ந்து வெடித்த இடத்தில் தென்மராட்சியின் தென்னந்தோப்புக்களிடையே வெட்டப்பட்டுள்ள துரவுகள்போல் ஆழமும் அகலமுமான குழிகள் உருவாகும். எங்களிடையே அந்த மூன்றும் விழுந்தால் போர்முனையில் மகளீர் படையணியின் பலம் குறைந்துவிடும். ஒரு தடவை அது தாழ்ந்து உயர்ந்து சற்றுத்தொலைவில் குண்டுகள் விழுவது தெரிந்தது.

Y-12 இப்போது பெரிய வட்டமெடுத்துச் சுற்றத்தொடங்கியது.
“ இந்தச் சனியன் விழுந்து வெடிக்காதோ?”
யாரோ ஒருத்தியின் குரல் கேட்டது. விழுந்துபோக! நாசமாய்ப்போக! எல்லோர் மனங்களும் சாபமிட்டன. உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தோம். தாழ்ந்து பறக்க எத்தனிக்கையில் அது வானில் வெடித்துச் சிதறி துண்டு துண்டுகளாக ஆடியாடி விழுந்துகொண்டிருந்தது.
நம்பவே முடியவில்லை.
சிரித்துக் கூக்குரலிட்டோம்.
கடுங்கோடையில் பெய்த குளிர் மழையில் மறுபடியும் நனைந்தோம்.

“இது விழுந்ததுபோல ஆனையிறவும் ஒருநாள் விழும்”
யாரோ ஒருத்தியின் குரல் கேட்டது. அது ஆன்ம வாக்கு. அண்ணனின் ஆற்றல் உணர்ந்தோரின் உள் மனக்குரல். இன்று எவருமேயில்லை அந்தப் பெருவெளியில். எதிரிகளுமில்லை, நாங்களுமில்லை. அறுநூறு வருடங்களுக்கு முன்பிருந்ததுபோல, மறுபடியும் ஆனையிறவு நிம்மதியாக.


மலைமகள்.
(மகளிர் படையணி)

நன்றி:
விடுதலைப் புலிகள். குரல்-123.

Labels: , , , ,

Sunday, July 03, 2005

மன்னார் மீனவரின் துயரம்

மன்னார், தமிழர்களின் வரலாற்றோடு மிக நெருங்கிய தொடர்புடைய எமது தாயகத்தின் பழம்பெரும் மாவட்டம். இம் மாவட்டத்திற்கென்றே சில தனிப்பண்புகள் இருக்கின்றன. அதாவது மன்னாருக்கே உரித்தான மண் வாசனையாகச் சேர்ந்து வருகின்ற கருவாட்டு வாசனையும் நாட்டு நடப்புக்களைக் கூடிக்கதைப்பது போன்று ஆங்காங்கே சேர்ந்து நிற்கின்ற கழுதைக் கூட்டங்கள் என மன்னாரை பற்றி நிறையவே கூறலாம். அதிலும் தலை மன்னாரைப் பற்றி இன்னும் கூறலாம்.

இலங்கைத்தீவின் ஓர் எல்லைப் பிரதேசம் அது. அழகாக வளர்ந்தும் வளைந்தும் நிற்கின்ற தென்னை மரங்கள் அதன் கீற்றுகளை வருடிச்செல்கின்ற உப்புக்காற்று சுடுவெயிலிலும் எம்மையும் வருடிச்சென்ற போது இதமாகவே இருந்தது. மேலும் தமிழர்களின் வீரத்தினை பறைசாற்றுவதுபோல் நிமிர்ந்து நிற்கின்ற பனை மரங்கள், மீன்களுடனும், மீன்வலைகளுடனும் கண்ணாடி இழை படகுகளின் இயந்திரங்களுடனும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கின்ற மக்கள் கூட்டம். மீன்களை கொள்வனவு செய்வதற்கென அடிக்கடி வந்து போகும் குளிரூட்டப்பட்ட தென் னிலங்கை வாகனங்கள், அக்கிரா மத்துக்கு அழகு சேர்க்கவென அமைதியாகக் காட்சி தருகின்ற பெரிய கிறிஸ்தவ ஆலயம் ஒன்று என தலை மன்னாரின் மேற்குப் பகுதியின் அழகை பார்த்துக் கொண்டே சென்ற எமக்கு கொமாண்டோ முட்கம்பிச் சுருள்களும், பச்சை மண் மூடைகளுமாக அமைக்கப் பட்டிருந்த கடற்படை முகாம் அந்தக் கிராமத்தின் அழகினையே கெடுத்து நிற்கிறது. திருஸ்டி கழிப்பதற்காக வைக்கப்படும் உருவம் போன்றே அழகான தலைமன்னார் மேற்குப் பகுதியின் அழகை நாசமாக்கியபடி இருந்தது அந்த சிறிலங்கா கடற்படை முகாம். தனியே அழகினை மட்டும் ரசித்து மகிழ்வுடன் இருந்த எம் மனங்களில் இப்போது சிறு அச்சம் எழவே நாம் வந்த நோக்கத்தினை நிறைவு செய்வதற்காக மீனவர்களை நோக்கிச் சென்றோம்.

அண்மைக்காலமாக ஊடகங்களில் அடிக்கடி பேசப்படுகின்ற விடயமாக தலைமன்னார் மீனவர்களும் இந்திய றோலர்களும் அமைந்திருந்தன. இன்றும் இந்தப் பிரச்சினை தொடர்கதையாகவே உள்ளது. 435 குடும்பங்களைச் சேர்ந்த 1571 பேர்கள் வாழ்கின்ற தலை மன்னார் மேற்குப் பகுதியில் 350 குடும்பங்கள் மீனவத் தொழிலையும் 35 குடும்பங்கள் அரச உத்தியோகத்தர்களாகவும் 30 குடும்பங்கள் கூலித்தொழிலையும் 20குடும்பங்கள் சீவல் தொழிலையும் மேற்கொள்கின்றன. இதில் 350 மீனவத்தொழில் செய்கின்ற குடும்பங்களில் 65 பேரிடம் மட்டுமே கண்ணாடி இழைப்படகுகள் உண்டு. மேலும் 50 பேரிடம் கட்டுமரங்கள் காணப்படுகின்றன. ஏனையோர்கள் கூலிக்கே மற்றவர்களின் படகுகளை பயன்படுத்துகின்றனர். அதாவது வாடகைப் படகு மூலம் மீன் பிடிக்கச் சென்று உதாரணமாக 100 கிலோக்கிராம் மீன் பிடிபட்டால் படகுச் சொந்தக்காரருக்கு 50 கிலோ கொடுக்கவேண்டும். அதாவது பிடிபடுகின்ற மீன்களில் அரைவாசிப் பகுதி படகு உரிமையாளருக்கு வழங்கப்படுதல் வேண்டும். சிலவேளைகளில் மீன் பிடிபடாமல் போனால் தாங்கள் கடன்காரர்களாக மாறவேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளதாக வேதனையுடன் கூறுகின்றனர் சில மீனவர்கள்.

முன்னரெல்லாம் வரும்
05 உறுப்பினர்களைக் கொண்ட குடும்பத்திற்கு 1260ரூபா பெறுமதியான நிவாரணமும்,
04உறுப்பினர்களைக் கொண்ட குடும்பத்திற்கு 1008ரூபா பெறுமதி யான நிவாரணமும்,
03உறுப்பினர்களைக் கொண்ட குடும்பத்திற்கு 840ரூபா பெறுமதியான நிவாரணமும்,
02உறுப்பினர்களைக் கொண்ட குடும்பத்திற்கு 614ரூபா பெறுமதியான நிவாரணமும்,
01உறுப்பினரைக் கொண்ட குடும்பத்திற்கு 338ரூபா பெறுமதியான நிவாரணமும் வழங்கப்பட்டு வந்ததா கவும் தற்போது அதனையும் நிறுத்தி விட்டதாகவும் இதனால் தாம் பெரும் கஸ்ரங்களை எதிர்நோக்குவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இதைவிட தலைமன்னார் மீனவர்கள் எதிர்நோக்குகின்ற மிகப் பிரதான பிரச்சினைகள் இந்திய றோலர்களின் பிரச்சினை. அதாவது தங்களின் கடற்பரப்பிற்குள் இந்திய றோலர்கள் அத்துமீறி வந்து மீன்பிடித்துச்செல்கின்ற துயரம் தொடர்கதையாய் தொடர்கிறது. இது தொடர்பாக தலைமன்னார் கடற்கரையில் ஒரு மீனவருடன் கதைத்துக்கொண்டிருந்தபோது அவர் சொல்கிறார் "தம்பி இன்னும் கொஞ்ச நேரம் நில்லுங்கோ இந்தியறோலர்கள் வரும் காட்டுறன்"

இவரின் வார்த்தையில் வேதனை தெரிந்தது. அதைவிட ஆச்சரியமான விடயம் தலைமன்னார் கடற்கரையில் இருந்து ஓரிரு கடல்மைல் வரை இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்கின்றமை. இதனால் செய்வதறியாது தவிக்கும் தலைமன்னார் மீனவர்களின் நிலை. இந்திய மீனவர்களின் றோலர்கள் வருகையால் தங்களின் வலைகள் அறுக்கப்பட்டு நாசமாக்கப்படுவதாகவும், பவளப்பாறைகள் உடைந்து அழிந்து போவதாலும், கடல்கீழ் தரைமட்டம் சமனிலை ஆக்கப்படுவதாலும் மீன்கள் வாழக்கூடிய இடங்கள் அசாதாரணமாக்கப்பட்டு அவை இடம்பெயர்ந்து போவதோடு இனப் பெருக்கம் செய்யக்கூடிய ஏது நிலையும் றோலர்களால் குழப்பம் அடைவதாலும் மீன்வளம் அருகிப் போவதாக கவலையுடன் சொல்கிறார்கள் தலைமன்னார் மீனவர்கள்.

அண்மையில் கூட தலைமன்னார் மீனவர் ஒருவர் ஒருலட்சம் ரூபா கடன் வாங்கி வலை ஒன்றினை கொள்வனவுசெய்து தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை இந்திய றோலர்களினால் அவரது வலை முற்றாக அழிக்கப்பட்டு மீளப் பயன்படுத்தமுடியாத நிலையில் போனதால் விரக்தி அடைந்த அம் மீனவர் தற்கொலைக்கு முயற்சித்ததாகவும் பின்னர் உறவினர்களால் தடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது. ஆனால், தற்போதும் அவர் கடனாளியாகவே உள்ளார்.

இப்படித்தான் இன்று தலை மன்னாரில் பல மீனவர்களின் கதை தொடர்கிறது. தாங்கள் சில வேளைகளில் இந்திய கடல் எல்லைக்குள் சென்றுவிட்டால் இந்திய கடற்படையினர் தங்களை உடனே கைதுசெய்துவிடுவதாகவும் ஆனால் இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் அவ்வாறு கைது செய்வது இல்லை. ஒருசில தடவைகள் கைது செய்துள்ளதாகவும் பெரும்பாலான தடவைகள் இந்திய மீனவர்களிடம் இறால் போன்றவற்றை பெற்றுவிட்டு அவர்களை அப்படியே விட்டுவிடுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். இதனால்தான் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்கின்ற தாகவும் தெரிவிக்கின்றனர். இவ்வாறு இந்திய கடல் எல்லைக்கு அருகில் தனது கண்ணாடி இழைப் படகுமூலம் சென்று இந்திய கடற்படையால் கைது செய்யப்பட்டு மதுரைச் சிறையில் தண்டனை அனுபவித்து திரும்பிய தலை மன்னாரைச் சேர்ந்த ஸ்ரீபன் கொஸ்தா இவ்வாறு கூறுகின்றார். "ஐயோ தம்பி அடியென்ரா ஒங்க வீட்டு எங்க வீட்டு அடியில்ல செம்ம அடிபோட்டிட்டாங்க ஏழரை லட்சம் ரூபா கட்டினா வெளியில விடுறதா சொன்னாங்க. எங்களிட்ட எங்க காசு இருந்திச்சு அதால தண்டனையை அனுபவிச்சிட்டு வந்ததுதான். ஆனா இந்திய மீனவர்கள் வந்தா அங்க கொண்டுபோவாங்க இங்ககொண்டு போவாங்க பெறவு பாத்தா இரண்டுநாளையால அனுப்பிருவாங்க" என்றார் ஸ்ரீபன் கொஸ்தா. இந்திய மீனவர்களின் இயந்திரப் படகுகளோடு தங்களது கண்ணாடி இழைப் படகுகள் போட்டிபோட முடியாது எனவும் தாங்கள் பல முறை பலரிடம் முறையிட்டுப் பலன் எதுவும் கிடைக்கவில்லை எனவும் கூறுகின்றார். மீனவ சங்கத் தலைவர் அ.ஞானப்பிரகாசம் அவர்கள்.

இதைவிட கடலையே நம்பி இருக்கின்ற இந்த அப்பாவி மீனவர்கள் அறியாத ஆபத்து ஒன்று அவர்களை நோக்கி காத்திருக்கிறது. அதுதான் சேது சமுத்திர திட்டம். இதனால் இலங்கையில் பாதிக்கப்படப் போவது மன்னார் மீனவர்களே. தனியே இந்திய அரசு தனது எதிர்கால அரசியல், பொருளாதார, இராணுவ நலன்களை கவனத்தில்கொண்டு நடை முறைப்படுத்தப்போகும் இத்திட்டத்தால் பாதிக்கப்படுவது அப்பாவி மீனவர்கள் மட்டுமே. இந்தியா கடலில் கிண்டப்போகின்ற குழி இலங்கை குறிப்பாக மன்னார், இந்தியாவினுடைய சில கரையோரப் பிரதேச மீனவர்களின் வாழ்க்கை அதில் மூழ்கப்போகின்றது என்பது மறுக்கமுடியாத உண்மையே. சேது சமுத்திர திட்டத்தால் மீன்வளம் வெகுவாகக்குறைய மேலும் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தலைமன்னார் கடற்பகுதியில் அதிகரிக்க போகின்றது. இதனால் ஏற்கனவே உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்டு இருந்த மன்னார் மீனவர்கள் தொடர்ந்தும் பாதிக்கப்படப்போகிறார்கள். பெருமளவான இந்திய மீனவர்கள் இயந்திரப்படகுகளை பாவிப்பதால் இந்தியக் கடற்பரப்பில் மீன்வளம் குறைந்து போயுள்ளது. இதனால் தற்போது அவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் புகுந்து அத்துமீறி மீன்பிடித்துச் செல்கின்றனர். இந்நிலையில் சேது சமுத்திரத் திட்டத்தால் மேலும் கடல் சூழல் அசாதாரணமாக்கப்படுவதால் மீன்வளம் மேலும் குறைவடையப்போகிறது. இதன் விளைவு பெருமளவான இந்திய மீனவர்கள் மன்னார் கடற்பரப்புக்குள் அத்துமீறப் போகிறார்கள். அதனால் மன்னார் மீனவர்களின் இந்தத் துயரம் தொடர்கதையாய் அமையப்போகிறது.

நன்றி:- ஈழநாதம்.

Labels: , ,

சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கிறார்கள்

ஆயிற்று. ஒருவாறாகப் பொதுக்கட்டமைப்பு என்ற ஒரு நிர்வாக அமைப்பு கைச்சாத்தாகி விட்டது. ஆனால் அதைவைத்து நடக்கும் அரசியற் பிழைப்பு நாடகங்களின் காட்சிகள் இன்னமும் தொடர்ந்த படியே இருக்கின்றன. சிங்கள இனவாதிகள், பௌத்தபிக்குகள், ஜே.வி.பியினர் என்ற இந்தப் பட்டியலில் ஒரு தொகுதி முஸ்லிம் அரசியல்வாதிகளும் இணைந்து கொண்டுள்ளனர். யார் இந்த ஒருதொகுதி முஸ்லிம் அரசியல்வாதிகள்? ஏனைய முஸ்லிம் அரசியல்வாதிகள் பொதுக் கட்டமைப்புவிடயத்தில் என்ன நிலைப்பாட்டில் உள்ளனர்? இந்த இரு சாராரையும் தென்னிலங்கை அரசியல்வாதிகள் எவ்வாறு கையாள முனைகிறார்கள்? இவை இலங்கைத் தீவின் இன்றைய அரசியற் களத்தினைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் முக்கியமான கேள்விகளாகும். தாம் சார்ந்த கட்சிகளின் தலைவர்கள் வகிக்கும் அமைச்சுப் பொறுப்புக்களிலிருந்து விலகவேண்டுமெனக் காலக்கெடுவை விதித்திருக்கின்றார்கள் இரு பிரபல முஸ்லிம் அரசியல்வாதிகள். பொதுக் கட்டமைப்பில் தனித்தரப்பாகக் கையெழுத்திடுவதற்கு முஸ்லிம் தரப்புக்கு இடமளிக்கப்படவில்லையெனக் கண்டனம் தெரிவித்துள்ள இவர்கள், இதற்குப் பிறகும் தம்மை மதிக்காத கண்டு கொள்ளாத அரசாங்கத்தில் அங்கம் வகிக்கக்கூடாதென தமது கட்சிகளின் தலைமைகளிற்கு அழுத்தங்களைப் பிரயோகித்துவருகிறார்கள்.

இவர்களின் முதலாமவர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தேசிய ஐக்கிய முன்னணியின் (நுஆ) துணைத்தலைவர். துறைமுகங்கள், விமானசேவைகள் நிறுவனத்தின் தலைவராக பதவி வகித்த ஹிஸ்புல்லா திடீரெனத் தனது பதவியைத் துறப்பதாக காத்தான்குடியிலுள்ள தனது அலுவலகத்தில் பத்திரிகையாளர்களைக் கூட்டி அறிவித்தார். அத்தோடு நின்றுவிடாத அவர் தன்னைப்போன்று தனது கட்சித் தலைவியான பேரியல் அஷ்ரப்பும் அவரது அமைச்சர் பதவியிலிருந்து விலகவேண்டுமெனவும் நிபந்தனை விதித்தார். இதற்கு 48 மணிநேரத்தை அவகாசமாக வழங்கியதுடன் தவறினால், தான் (நுஆ) அக்கட்சியிலிருந்து விலகப்போவதாகவும் அறிவித்தார். (இப்போது இதனை 7 நாட்களாக நீடித்துள்ளது வேறுகதை) அடுத்த அறிவிப்பு தேசிய முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் எச்.எம்.ஹரீஸ் மற்றும் துணைத்தலைவர் அசீஸ் ஆகியோரிடமிருந்து வெளியானது. தமது கட்சியின் தலைவர் அதாவுல்லா மற்றும் தவிசாளர் அன்வர் இஸ்மாயில் ஆகியோர் வகிக்கும் அமைச்சர் பிரதி அமைச்சர் பதவிகளை துறக்கவேண்டுமென வலியுறுத்திய இவர்கள், ஏழு நாட்களுக்குள் இது நடைபெறா விட்டால் அவர்கள் இருவரையும் கட்சியைவிட்டு வெளியேற்றப் போவதாகவும் எச்சரித்திருந்தனர்.

இவற்றுக்கு முன்பாக தற்போது அரசாங்கத்தில் அங்கம் வகிக்காத கட்சியான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் பொதுக்கட்டமைப்பில் முஸ்லிம்களுக்கு தனித்தரப்பாக ஒப்பமிட அனுமதியளிக்காத அரசாங்கத்தில் அங்கம்வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் பதவிவிலக வேண்டுமென வலியுறுத்தியிருந்தார். இந்த அறிவித்தல்கள் அனைத் தையும் ஒன்றுசேர்த்துப் பார்க்கையில், வெளித்தெரிவது என்ன?

இவ்வாறு அறிவித்துக்கொண்டும் காலக்கெடுகளை விதித்துக்கொண்டும் இருப்பவர்கள் அனைவருமே அமைச்சுப் பதவிகளில் இல்லாதவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இல்லாதவர்களுமே என்பது கவனிக்க வேண்டியதாகும். தாங்கள் பதவிகளில் இல்லாமல் இருக்கும்போது வசதியாக அடுத்தவர்களைப் பதவி துறக்கும்படி வலியுறுத்துகிறார்கள் என்பதே இதன் உள்ளர்த்தமாகும்.

இதனூடாக இவர்கள் அடைய முற்படுவது என்ன? துண்டு துண்டாகச் சிதறிக்கிடக்கும் முன்னாள் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் கூறுகளில் இரண்டு (நுஆ, தேசிய முஸ்லிம் காங்கிரஸ்) மற்றும் ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரசிலிருந்து போட்டியிட்டு வெற்றிபெற்று கட்சி மாறிநிற்கும் 'அதிருப்தியாளர் குழு' ஆகியவை சந்திரிகா அம்மையாரின் முன்னாள் ஐ.ம.சு முன்னணியினதும், தற்போதைய பொ.ஐ. முன்னணியினதும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றன. இந்த மூன்று தரப்புகளிலிருந்தும் பலர் அமைச்சர், பிரதி அமைச்சர் பதவிகளைப்பெற்று அதிகாரச் சுகத்தை அனுபவிக்க ஏனைய முஸ்லிம் அரசியல்வாதிகள் வெறுமனே அறிக்கைகளை விடுத்துத் தமது இருப்பை நினைவூட்டிக் கொண்டிருந்தனர். பதவிகளைப் பெற்றுக் கொண்டவர்களோ தமது கட்சிகளைக்கூட மறந்துவிட்டு, குறைந்த பட்சம் கட்சிக் கூட்டங்களைக்கூட நடத்தாது கொழும்பே தஞ்சமெனக் கிடக்கின்றனர். இதனால் கட்சிகளின் சார்பில் அரசாங்கத்திடமிருந்து கிடைப்பன யாவுமே அவர்களை மட்டுமே சென்றடைந்துவிடுகின்றன. இதனால் ஆட்சியிலிருக்கும் முஸ்லிம் கட்சிகளின் பதவியிலிருக்காத தலைவர்கள் காய்ந்து வறண்டு சந்தர்ப்பத்துக்காகக் காத்துக்கிடந்தனர்.

முஸ்லிம் காங்கிரசின் கதையோ அதையும்விடப் பரிதாபமானது. அரசாங்கத்தோடு ஒட்டிக்கொண்டிருந்து பழகிவிட்ட அதற்கு தற்போது எதிரணியில் இருப்பது மிகுந்த பிரச்சினையாகவுள்ளது. அதனாலேயே அதன் பட்டியலில் தெரிவான எம்.பிக்கள் நால்வர் அதிருப்திக்குழு என்ற பெயரில் கட்சி மாறி அமைச்சர்கள் ஆகிவிட்டனர். (இவர்களில் ஒருவரான அமைச்சர் அமீர்அலியும் பதவி துறப்புப் பற்றிக் கதைத்திருக்கிறார்) சவடாலுக்குப் பேர்போன கட்சித்தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு கட்சி மாறியவர்களையும், தனது முன்னாள் சகபாடிகளையும் ஒரு பிடி பிடிப்பதற்கு இது நல்லதொரு வாய்ப்பைக் கொடுத்து விட்டிருக்கிறது.

ஆக, பொதுக்கட்டமைப்பு என்றதொரு வெறும் நிர்வாக அமைப்பொன்றுக்கான ஆவணத்தின் மீது தமது அரசியல் இருப்புக்கான போராட்டங்களை நடத்திக்கொண்டி ருக்கிறார்கள் முஸ்லிம் அரசியல் வாதிகள். இதன்மூலம் அதிகம் உணர்வூட்டப்படக்கூடிய முஸ்லிம் சமூகத்தை மீளவும் ஒருதடவை வெறியூட்டப்போகிறார்கள் இவர்கள். "முஸ்லிம் சமூகம் கைவிடப்பட்டு விட்டதாகவும் இந்தப் பயங்கரமான நிலையிலிருந்து அதனை காக்க தம்மால் மட்டுமே முடியுமென்றும் எனவே அடுத்த தேர்தலில் தம்மையே தெரிவு செய்யும் படியும்" என்று அனைவருமே உச்சஸ்தாயியில் கத்தப் போகிறார்கள். இதற்கு வலுவூட்டும் முகமாகப் பல்வேறு திரைமறைவு வேலைகளையும் ஒப்பந்தங்களையும் செய்யப்போகிறார்கள்.

இவ்வாறு அரங்கேறும், அரங்கேறவுள்ள காட்சிகளின் பின்னேயுள்ள செய்தி என்ன? சிறிலங்காவில் மீண்டுமொரு தேர்தல் விரைவில் வரப்போகிறது என்பதே அது. அந்தத் தேர்தலில் முஸ்லிம் மக்களின் முன்பு செல்வதற்காக அவர்களது வாக்குகளைச் சுருட்டுவதற்காக ஒரு முகாந்திரத்தைத் தேடுவதற்கு ஒவ்வொரு முஸ்லிம் அரசியல்வாதியும் அந்தரப்படுவதன் வெளிப்பாடே தற்போது அரங்கேறும் காட்சிகளாகும். அதை ஒவ்வொரு அரசியல்வாதியும் தத்தமது பிரதேசத்தினதும் கட்சியினதும் களநிலவரத்துக்கேற்ப நிகழ்த்திக் காட்டுகிறார்கள். இவ்வாறு விடுக்கப்பட்ட அறிக்கைகள் அனைத்துமே தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவுகளும், அறிவிக்கப்பட்ட அறிவித்தல்களுமாகும். இதனுடைய ஒரே பின்புலம் பதவியாகும்.

ஆனால் இது யாருக்கு இலாபமாக அமையப்போகிறது? தங்களது பல்லைக்குத்தி தங்களது மூக்கிலேயே பிடிக்கின்ற இவர்களைக் கண்டு சிங்களப் பேரினவாதிகள் அகமகிழ்ந்துபோயிருக்கிறார்கள். "கைவிடப்பட்ட முஸ்லிம் மக்கள்" குறித்து பௌத்த பிக்குகளும், சிவப்புச் சட்டைகளும், தினேஸ் குணவர்த்தன உட்பட்ட ஏனைய கடும் போக்காளர்களும் உருகி வழிகிறார்கள். ஐ.தே.கட்சியும் தன்பங்குக்கு 'முஸ்லிம்களின் நலன்களில்' அக்கறையை வெளிப்படுத்துகிறது.

ஆக முஸ்லிம் மக்களின் தலையிலே முஸ்லிம் அரசியல் வாதிகள் தமது பதவிமோக மிளகாயை அரைக்கத் தொடங்கிவிட்டார்கள். பொதுக்கட்டமைப்புக்குளவி நன்றாகவே அரைக்கிறது. பேரினவாதிகளும் சிங்களக்கட்சிகளும் தாளம் போடுகின்றன. ஆனால் அரைபடும் மிளகாய் முஸ்லிம் மக்களின் முகத்திலேதான் வழியப் போகிறது. அது எரிச்சலை ஏற்படுத்தப் போவதென்னவோ அப்பாவி மக்களுக்குத்தான்!

-பு.சத்தியமூர்த்தி-
நன்றி:- ஈழநாதம்.

Labels: ,

கௌசல்யன் மருத்துவமனையின் பணி

ஆரோக்கியமான சமுதாயத்தை கட்டியெழுப்பும்லெப்.கேணல் கௌசல்யன் மருத்துவமனையின் பணி.

(ஈழநாதத்தில் வெளிவந்த கட்டுரையொன்று இங்கே படியெடுத்துப் போடப்படுகிறது.)

போர்க்களங்களில் விழுப்புண்ணடைந்த தமது தோழர்களுக்கு மருத்துவப் பணிகளையாற்றி வந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் மருத்துவப்பிரிவுப்போராளி மருத்துவர்களின் பணி போர்நிறுத்த காலத்திலும் ஓய்வடைந்து விடவில்லை. இவர்களின் பணி பல நவீன வசதிகளை உள்வாங்கியவாறு தமது தேச உறவுகளின் துயரைத் தீர்ப்பதற்கான தீவிர செயற்பாட்டினை மேற்கொள்ளத் தூண்டுதல் அளித்துள்ளது. மக்களுக்காக களத்தில் நின்று எதிரியிடமிருந்து உயிர்காத்த வீரர்கள் இன்று மக்களின் உயிரைக் காவு கொள்ளவரும் நோய்களிலிருந்து காக்கும் பணியை சுமந்தவாறு மக்களைத் தேடிச்சென்று கொண்டிருக்கின்றார்கள். இதன் ஓர் அங்கமாக தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனையில் உருவான லெப். கேணல் கௌசல்யன் ஞாபகார்த்த நடமாடும் மருத்துவ சேவையானது, தமிழீழ விடுதலைப்புலிகளின் மருத்துவப்பிரிவுப் போராளி மருத்துவர்களினால் பின் தங்கிய கிராமங்கள் தோறும் சென்று மக்களின் மருத்துவத் தேவையைப் பூர்த்தி செய்து வருகின்றது. பெருந்தொகையான போராளி மருத்துவர்களை உள்ளடக்கிய இக்குழுக்கள் மக்களின் வீடுகளுக்கே சென்று அவர்களின் மருத்துவத் தேவையைக் கண்டறிந்து பூர்த்தி செய்து வருகின்றன. இவ்வாறு தமது சேவையினை கடந்த 10ஆம், 11ஆம் திகதிகளில் வவுனியா வடக்கு பாலமோட்டை கிராம மக்களுக்கு வழங்கிக் கொண்டிருந்த போராளி மருத்துவக்குழுவின் மருத்துவரான தூயவனைச் சந்தித்து அவர்கள் செய்தபணிகளையும், அக்கிராமத்தின் நிலைப்பாட்டையும் அறிந்து கொள்ளும் முகமாக கேட்ட போது அவர் இவ்வாறு கூறினார்.


கடந்த இரண்டு நாட்களாக லெப். கேணல் கௌசல்யன் ஞாபகார்த்தமாக உருவாக்கப்பட்ட இந்நடமாடும் மருத்துவ சேவையானது இங்கு செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது. எங்கள் மக்களின் மருத்துவதேவையினை நிவர்த்தி செய்வதே இதன் பிரதான நோக்கம். இந்தப் போராட்டத்திற்கு பக்கபலமாகவும் முதுகெலும்பாகவும் செயற்பட்டு வரும் இப்பிரதேச மக்கள் எதிரியின் எல்லைகளை அண்டிய பகுதிகளில் வாழ்கின்றார்கள். இவர்கள் மருத்துவ ரீதியான வசதிகள் அற்று இதனைக் கவனிப்பாரற்ற நிலையில் வாழ்ந்து வருகிறார்கள். நீண்டகாலமாக மருத்துவ ரீதியான பிரச்சினைகளை எதிர்நோக்கி வந்தார்கள். எனவே இதனை நிவர்த்தி செய்வதற்காகவும் இவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கு முக்கிய தடையாக இருந்த இம்மருத்துவ பிரச்சினையை நிவர்த்தி செய்வதற்காகவும் இதனைத் தொடர்ந்து நிவர்த்தி செய்வதற்குமாக தமிழீழ தேசியத்தலைவரின் எண்ணத்தில் உதித்த இந்த மருத்துவ சேவையின் மூலம் இங்கு சேவையினை வழங்கி வருகின்றோம். இதில் குறிப்பிடக் கூடியதென்ன வென்றால் நோயாளிகள், மருத்துவ சிகிச்சை பெறவிரும்புபவர்கள் வைத் தியசாலைகளையும், வைத்திய நிபுணர்களையும் தேடிச் செல்வது தான் வழக்கம். இங்கு மக்களை நாடி நோயாளிகளைத் தேடி வைத்தியர்களும் நவீன உபகரணங்களைக் கொண்ட ஆய்வுகூடங்கள், சத்திர சிகிச்சைக்கூடங்கள், பல்துறை சார்ந்த மருத்துவ நிபுணர்கள், அதாவது குழந்தை வைத்திய நிபுணர்கள், சத்திரசிகிச்சைக்கான வைத்திய நிபுணர்கள், பொது மருத்துவ நிபுணர்கள், பெண்நோயியல் மருத்துவ நிபுணர்கள், தோல், கண், மூக்கு, தொண்டை போன்ற வைத்திய நிபுணத்துவம் வாய்ந்த வைத்தியர்கள், போராளிமருத்துவர்கள் என பெருந்தொகையான வைத்திய நிபுணர்கள் வந்திருக்கின்றார்கள். இது எமது தேசத்தின் வளர்ச்சியில் ஒரு படிக்கல்லாக அமையும் என நாங்கள் நம்புகின்றோம். ஏனெனில் மக்கள் சுகதேகிகளாக இருக்கின்ற பொழுது தேசத்தின் வளர்ச்சிக்கு அது படிக்கல்லாக அமையும்.

எங்கள் இந்த சேவையினை ஆரம்பித்து செய்கின்ற பொழுது பல்வேறுபட்ட பிரச்சினைகளை அவதானிக்கக் கூடியவாறு இருந்தது. தனிய மருத்துவம் சம்பந்தமாக மட்டுமன்றி பொருளாதார ரீதியாகவும் அவர்கள் பின்னடைவை எதிர்நோக்கியுள்ளார்கள். இதற்கு யுத்தம் ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்கிறது யுத்தம் தவிர்க்க முடியாததொன்றாக இருந்த காரணத் தினால் இவர்கள் பொருளாதார ரீதியாக, மருத்துவரீதியாக மட்டுமன்றி பல பக்கங்களாலும் மோசமான பாதிப்பை எதிர்நோக்கியுள்ளார்கள்.

இவற்றுக்கெல்லாம் அடிப்படையான காரணம் அரசியல் ஸ்திரமின்மை என்பதே வெளிப்படையானது. அரசியல் ஸ்திரத்தை ஏற்படுத்துவதென்றால் அதற்காக மக்கள் நலமானவர்களாகவும், சுகதேகிகளாகவும் இருக்கவேண்டிய அவசியம் இருக்கின்றதனால் மருத்துவரீதியாக நாங்கள் எமது பணியை ஆற்றுகின்றோம். எனவே எம்மை பின்பற்றி ஏனைய சேவைகளும் இம்மக்களைத் தேடி வந்து உதவிபுரியும் என நம்புகின்றோம். அத்தோடு இந்த சேவையினை தொடர்ந்து நாங்கள் இம்மக்களுக்கு வழங்கவுள்ளோம்.

இந்தப்பகுதியை பொறுத்த வரையில் இதற்கு முன்னதான மருத்துவ வசதிகள் எவ்வாறிருந்ததென்பதைக் கூறமுடியுமா?

ஆம்- நாங்கள் இம்மக்களை அவர்களின் வீடுகளுக்குச் சென்று சந்தித்த போது அவர்கள் கூறிய சில சம்பவங்களை இங்கு நான் கூற விரும்புகிறேன். ஒருநாள் காலை மூன்று மணிபோல் ஒரு எட்டுவயதுச் சிறுவன் பாம்புக் கடிக்கு இலக்காகி வைத்தியசாலையை நோக்கி சரியான பயணத்தினை மேற்கொள்ள முடியாமலிருந்த காரணத்தினால், அதாவது அன்று மழை பெய்து கொண்டிருந்தது. வாகனப் போக்கு வரத்து இங்கில்லை. மோட்டார் சைக்கிளிலே ஏற்றிக்கொண்டு செல்வதற்கு வீதியால் பாய்ந்து கொண்டிருந்த வெள்ளம் வழி விடவில்லை. இதன் காரணமாக அச்சிறுவன் இறந்துவிட்டான். இரண்டு மணித்தியால பயணத்தூரத்தில் இருக்கின்ற வைத்தியசாலையை சென்றடைய முடியாத காரணத்தினால் சிகிச்சையின் மூலம் காப்பாற்றப்படக் கூடிய அச்சிறுவன் இறந்திருக்கிறான் இதுபோன்று ஏராளமான பிரச்சினைகள் இங்கு இருக்கின்றன. உதாரணமாக மார்புப்புற்று நோயுடைய ஒரு பெண்மணி அதற்கான சிகிச்சை பெறுவதற்கான இடத்திற்குச் செல்லமுடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றார். இதை விட உயர்குருதியமுக்கம், நீரிழிவு போன்ற நோயாளிகளும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். எனவே இவ்வாறான நோய்கள் ஆரம்பத்தில் கண்டுபிடிக்கப்பட்டு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டால் அவர்களுடைய வாழ்க்கைக் காலத்தை கூட்டக் கூடியதாக விருக்கும். அவ்வாறு தீர்க்கக் கூடிய பிரச்சினைகள் கூட தீர்க்கப்படாமல் இருந்திருக்கின்றன.

இந்நடமாடும் மருத்துவ சேவையினை செய்வதற்காக நீங்கள் உரிய பகுதிகளை எவ்வாறு தெரிவு செய்கின்றீர்கள்? இவ்வாறு துயருறும் ஏனைய பகுதிகளுக்கும் இச்சேவைகள் சென்றடைய வாய்ப்புள்ளதா?

பொதுவாக மருத்துவ வசதிகள் குறைவான இடங்கள், போக்குவரத்து பிரச்சினையாகவுள்ள இடங்கள் விரைவாக வைத்தியசாலைகளை வந்தடைய முடியாத இடங்கள் போன்ற பகுதிகளுக்கு நாம் முன்னதாகவே துறைசார்ந்தவர்களை அனுப்பி இந்தப்பிரச்சினைகளை ஆய்வு செய்து அதன்பின்னர் மருத்துவ தேவை பற்றி ஆலோசித்த பின்பே நாம் இச்செயற்பாட்டில் ஈடுபடுகின்றோம்.

நடமாடும் சேவையாக பணிபுரியும் இந்த மருத்துவ சேவை இது போன்ற பின்தங்கிய கிராமங்களில் நிரந்தரமான செயற்பாட்டினைக் கொண்டதாக அமைப்பதற்கான ஒழுங்குகள் ஏதும் உண்டா?

ஆம்- நாங்கள் இவ்வாறான பிரதேசங்களை அலசி ஆராய்கின்ற பொழுது அதாவது பிரதான மருத்துவ நிலையங்களிலிருந்து வெகு தொலைவிலிருக்கின்ற போக்குவரத்து வசதி குறைந்த பகுதிகளில் திலீபன் மருத்துவமனையினை அமைக்கின்றோம். அங்கு உடனடி உயிர்காப்பு சிகிச்சைகளை மேற்கொள்வதற்கான வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கின்றோம் மேலதிக சிகிச்சைக்காக அவர்களை அங்கிருந்து வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்வதற்கான வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கின்றோம் என்றார்.


[வான்மதி]

இதேபோன்று இதேபணியில் ஈடுபட்ட போராளி மருத்துவர் வான்மதி இப்பகுதி மக்களின் மருத்துவ தேவைகள் குறித்து எம்மோடு இவ்வாறு பகிர்ந்து கொண்டார்.

இந்த கௌசல்யன் நடமாடும் சேவையானது, மக்களை ஓர் இடத்திற்கு அழைத்து அங்கு வைத்து வைத்தியம் பார்ப்பதோடு நின்று விடாமல் இந்தப்பிரதேசத்திலே இருக்கின்ற அனைத்து வீடுகளுக்கும் பன்னிரண்டு குழுக்களாக நாங்கள் பிரிந்து மக்களின் வீடுகளில் வைத்தே அவர்களை பரிசோதித்து வந்தோம். இதைத்தவிர ஒவ்வொரு பாடசாலைக்கும் சென்று பற்சிகிச்சைளையும் ஏனைய சிகிச்சைகளையும் வழங்கி வருகின்றோம். இதை விட நாம் வீடுகளுக்குச் சென்று நோயாளிகள் என இனங்கண்டவர்களை ஓர் இடத்திற்கு அழைத்து வருவதற்கான போக்குவரத்து வசதிகளையும் ஒழுங்குபடுத்தியிருக்கின்றோம். இதனூடாக அவர்களை அழைத்துவந்து இங்கு சத்திரசிகிச்சை, பற்சிகிச்சை கண் பரிசோதனை செய்து கண்ணாடி வழங்குதல் போன்ற சேவைகளையும் செய்து வருகின்றோம்.

இவ்வாறான நவீன வசதி களைக் கொண்டதான இந்த நடமாடும் மருத்துவ சேவையினை மருத்துவப்பிரிவினர் ஆரம்பிப்பதற்கு தூண்டுதலாக அமைந்த காரணி என்னவென்று கூறமுடியுமா?

எமது பிரதேசமானது போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் என்பதனால் தற்போது மீள்குடியமர்விற்குட்பட்டு வருகின்ற நேரத்தில் அந்த மக்களுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளான வைத்திய வசதி, பாடசாலை வசதிகள், போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்படாததனால் அவர்களின் வாழ்க்கைத்தரம் பாதிக்கப்படுவதோடு மருத்துவ வசதி கூட போதிய அளவு கிடைக்கவில்லை. மிக நீண்ட தூரப் பயணத்தின் பின்பு தான் அவர்கள் மருத்துவத்தை பெறக்கூடியதாக இருப்பதனாலே உயிர் ஆபத்து ஏற் படுகின்ற கட்டங்களில் மட்டும் தான் அவர்கள் வைத்தியசாலைக்கு வரக்கூடியதாக இருக்கின்றதே தவிர, சிறிய நோய்களையோ அல்லது பாரதூரமாக வருகின்ற நீண்டகால நோய்களை குணப்படுத்தவோ இவர்கள் வைத்தியசாலைக்கு செல்வது மிகக் குறைவாகவே இருக்கிறது.இதைவிட இலங்கையின் மருத்துவ ஒழுங்கு விதிகளின்படி குறிப்பிட்ட காலத்திற் கொருமுறை மருத்துவர்கள் பாட சாலைகளை தரிசிப்புச் செய்து அங்கிருக்கும் மாணவர்களுக்குள்ள நோய்களை இனங்காணுதல், சிகிச்சை யளித்தல், பற்சிகிச்சையளித்தல் என் பன நடைமுறையில் இருக்க வேண் டிய விடயங்கள். ஆனால் எமது பிரதேசங்கள் பின்தங்கிக் காணப்படுவதாலும் போரினால் பாதிக்கப்பட்டதனாலும் அரசாங்கமே இவர்களை பின்னடைவுக்குள்ளாக்கியதனாலும் இந்நடைமுறை பாடசாலைகளில் இல்லாதுள்ளன. எனவே கௌசல்யன் நடமாடும் மருத்துவ சேவையினூடாக நாங்கள் பாடசாலைகளுக்குச் சென்று இச்சேவையை செய்து வருவதோடு பின்தங்கிய பகுதியாதலால் பற்தூரிகை மூலம் பல்துலக்கும் முறையினையும் கற்பித்து பற்பசை, பற்தூரிகை போன்றவற்றையும் வழங்கியுள்ளோம்.

இப்பகுதி மக்களினுடைய எதிர்கால மருத்துவத்தேவைகள் எவ்வாறு அமைய வேண்டும் என நீங்கள் கருதுகிறீர்கள்?

இப்பகுதி மக்களுக்கான மருத்துவத் தேவை என்பது இரண்டு அல்லது ஐந்து வீதமே பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இவர்களுக்கான இத்தேவையினைப் பூர்த்தி செய்யவேண்டிய தேவை எமக்கு நிச்சயமாக உண்டு. ஏனெனில் முற்றாக போக்குவரத்து வசதியற்ற நிலை காணப்படுவதும் வைத்தியசாலைகள் மிகத்தொலைவிலிருப்பதும் ஒரு முக்கிய காரணமாகும். அத்தோடு இப்பகுதியில் அரசாங்க வைத்தியசாலைகள் என்று எதுவுமே இயங்கவில்லை. தியாகதீபம் திலீபன் மருத்துவமனை மட்டுமே இயங்கு கிறது. ஆகவே இப்பிரதேசத்தின் மிக அவசிய தேவை கருதி ஓரளவேனும் வசதியுடைய மருத்துவமனையையாவது அமைக்க வேண்டும் என்றார். இதேவேளை தாம் எதிர்பாராத வகையில் தமது மருத்துவத்தேவைகள் குறுகிய காலத்தில் தீர்க்கப்பட்டதை எண்ணிப் பெருமிதமடைந்த நிலையில் பாலமோட்டை, பனிச்சங்குளத்தைச் சேர்ந்த பாலசுந்தரம் புவனேஸ்வரி அவர்கள் இம்மருத்துவர்களின் சேவை பற்றி இவ்வாறு கூறினார்.

நாங்கள் இப்பகுதியிலிருந்து இடம் பெயர்ந்து இப்போது மீளக் குடியமர்ந்து வருகின்றோம். ஆனால் எமது பகுதிக்கு இதுவரை போக்குவரத்து வசதிகளோ, மருத்துவ வசதிகளோ, ஏனையவசதிகளையோ செய்து தர எவரும் முன்வரவில்லை. நாங்கள் மிகநீண்ட தூரம் பயணம் செய்தபின்பே மருத்துவமனைகளுக்குச் செல்லக் கூடியதாக இருக்கின்றது. அதிலும் மிக அவசரமான ஆபத்தான வேளைகளில் மருத்துவமனைக்குச் செல்கின்ற நோயாளிகள் செல்லும் வழியிலேயே இறந்து போகின்ற சம்பவங்களும் நடந்ததுண்டு. வவுனியா அல்லது மல்லாவி வைத்தியசாலைகளுக்குச் சென்றாலும் மருந்து பெற முடியாத நிலைகளும் ஏற்படுவதுண்டு. தமிழீழ விடுதலைப் புலிகளின் இந்த மருத்துவப்பிரிவினர் இப்பகுதிக்கு வந்து எமது மருத்துவ தேவைகளை நிவர்த்தி செய்து வருவது எமக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. அத்தோடு ஒவ்வொரு வீடுகளுக்கும் மருத்துவ போராளிகள் வந்து எமது நோய்களைக் கண்டறிந்து சிகிச்சையளிக்கின்றார்கள். அத்தோடு நாம் மிக நீண்ட தூரம் சென்றாலும் செய்யமுடியாத சத்திரசிகிச்சைகளைக் கூட இங்கு இலகுவாக செய் துள்ளோம் எனவே தொடர்ந்தும் எமது பகுதிகளுக்கு இவ்வாறான சேவையைச் செய்ய வேண்டுமென அவர்களை நான் கேட்டுக்கொள்ளதோடு இவர்களின் இந்த சேவைக்கு நன்றி யையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

எனவே லெப்.கேணல் கௌசல்யன் ஞாபகார்த்தமாக நடாத்தப்பட்டு வரும் இம் மருத்துவப்பணியானது போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ ரீதியில் பெரும் பயனாற்றி வருகின்றதென்பது மட்டுமன்றி இதன் பணி மூலம் எதிர்காலத்தில் தமிழீழ மக்களின் மருத்துவக்குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டு ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க முடியும்.

நன்றி:- ஈழநாதம்.

Labels: , , , ,

வணக்கம்.

வணக்கம்.
இது வன்னியனின் மற்றொரு வலைத்தளம்.
இங்கே பிற சஞ்சிகைகளிலிருந்து ஆக்கங்கள் படியெடுத்துப் போடப்படும்.
அற்காகவே நிறுவப்பட்டது இப்பக்கம்.
வாசியுங்கள்.
கருத்துக்களைப் பகிர்ந்து செல்லுங்கள்.
நன்றி.
அன்புடன்,
வன்னியன்.

Labels: , ,


Get your own calendar

Links