Thursday, March 13, 2008

மன்னாரில் பெண் புலிகளின் வீரம்

-மலைமகள்-

ஆண்டின் பெரும்பகுதியில் அனல் பறக்கும் மன்னார் மண்ணில் இப்போது பொறியும் சேர்ந்து பறக்கின்றது. சும்மா கிடந்த மன்னார் சிங்களப் படைகளின் வரவால் சிலிர்த்தெழும்பி, வரலாறு படைக்கத் தயாராகி நிற்கின்றது. உயிர்த்தெழுந்த சிங்களத்தின் பிடரி மயிர்கள் போல கூராக நேராக நீண்டிருக்கும் விடத்தல் முட்கள் போருக்குப் புறப்பட்டுவிட்டன. வழமைபோலவே தமிழீழ வனங்களினதும் நிலங்களினதும் ஆழ, நீள, அகலங்களை அறியாமல் இரும்புப் பாதணிகளையும் தலையணிகளையும் அணிந்தபடி, அயலக மதியுரைகளால் துணிந்தபடி சண்டைக்கு வருகின்றது சிங்களம்.

சும்மா கிடந்த மன்னார் என்று சொல்லலாமோ? வளைந்து நெளிந்து நீண்டு செல்லும் போர் முன்னரங்கின் காப்பரண்களில் வாழும் 2 ஆம் லெப். மாலதி படையணியினரைச் சந்திப்பதற்காக தான் போகின்றபோது காடுகளிடையே பழைய கட்டடங்களின் அத்திவாரங்களை இடையிடையே காண்பதாகக் கேணல் யாழினி (விதுஷா) சொன்னார். காட்டு வழிகளில் தொடர்பேயில்லாமல் மா போன்ற வீட்டுப் பயன்பாட்டு மரங்கள் நிற்பதாகவும் காலாறுவதற்காக அத்திவாரத்தைக் கைகளால் தட்டியபோது அது சுட்ட செங்கற்களால் ஆக்கப்பட்டிருந்ததைக் கவனித்ததாகவும் கூறினார். மாநகரம் ஒன்று காடு மூடிக் கிடக்கின்றது. இதைச் சும்மா கிடந்த மன்னார் என்று சொல்லலாமோ?

***

மாந்தை துறையின் கடலின் அடியில் நங்கூரத்தைப் பாய்ச்சி விட்டுக்கடலின் மடியில் ஆடிக்கொண்டிருந்தது அரபிக் கப்பல் ஒன்று. குதிரைகளை இறக்கிவிட்டு யானைகளை ஏற்றிச் செல்வதற்காகக் காத்திருந்தது அது. மீண்டும் புறப்பட ஒரு திங்களாவது செல்லும். மாந்தையில் இறங்கி உலாவிக் கொண்டிருந்த அராபிய வணிகர்கள் அங்காடிகளில் யானைத் தந்தங்கள், அரிசிக் குவியல்கள் என்பவற்றுக்குச் சமமாகக் குவித்து வைக்கப்பட்டிருந்த முத்துக்களை வாய்பிளந்து பார்த்தார்கள். இவற்றை வாங்குவதற்கு இன்னும் மூன்று கப்பல்களில் குதிரைகளையும் கம்பள விரிப்புக்களையும் கொண்டு வந்து கொட்டவேண்டும்.

மன்னாரின் கண்டமேடை அடித்தளத்தில் விளையும் முத்துக்களை ஒத்த அழகோடு சுவையான பழங்கள் பாலை மரங்களில் தொங்கிக்கிடந்தன. அவை வணிகர்களின் வாய்களில் நீரை ஊறவைத்தன. பன்னாட்டு வணிகர்களினாலும் உள்நாட்டு வணிகர்களினாலும் மாந்தைத் துறைக்குப் போகும் முதன்மைச் சாலையும் அங்காடித் தெருவும் நிறைந்திருந்தன. வலிமை மிக்க உயர்ந்த கட்டடங்களால் மாந்தையின் அழகு திகழ்ந்தது.

***
முத்துக்கள் விளையும் கடலினடியில் முத்தை விடவும் அதிகமாக உலகை ஈர்க்கின்ற ஒரு பொருள் இருப்பது தெரிந்ததும் கழுகின் கவனம் இங்கே குவிந்தது. மூன்றுதலைச் சிங்கமும் அதற்கே முயன்றது. மன்னாரை விலைபேச வாளேந்திய சிங்கம் புறப்பட்டது. வந்தவர்களை வழிமறிக்க விடுதலைப் புலிகளும் புறப்பட்டனர்.

***
கீர்த்தியின் கொம்பனி 2007 மார்ச்சில் அள்ளிக் கட்டிக்கொண்டு மன்னாருக்குப் போய் இறங்கியதும். 1999 இல் போர் முழக்கம் (ரணகோச) - 03,05 நடவடிக்கைகளை எதிர்கொண்டு முறியடித்த பட்டறிவைக் கொண்ட பழையவர்கள் சிலரும் மன்னாரின் நிறம் தெரியாத புதியவர்கள் பலருமாகப் போயிறங்கி, அகழிகளை வெட்ட மண்வெட்டிகளை ஓங்கி நிலத்தில் போட்டனர். பட்டுத் தெறித்தது மண் அல்ல. மண் வெட்டிதான். ஒன்றுமே இல்லாத சதுப்பு நிலத்தில் இன்று இஸ்ரேல் எழுந்து நிற்கின்றது. வெட்டப்படாத நிலம் வேண்டாம் என்று மன்னாரை விட்டுவிடமுடியவில்லை. வரிந்து கட்டிக்கொண்டு அகழிகளை வெட்டிமுடித்து, மரக்குற்றிகளைத் தூக்கிவரப் போயினர். காடு மூடிக்கிடந்த காலம் மூடிக்கிடந்த மாநகரத்தின் காலடியில் காப்பரண்கள் எழுந்தன.

ஆறு மாதங்களின் பின் முதற் சண்டை வந்தது. 2007.09.24 அன்று காலை கட்டுக்கரைக்குளக்கட்டோடு அமைக்கப்பட்டிருந்த லெப். அருமலரின் காப்பரணைச் சிங்களப் படையினர் தாக்கினர். அதிகாலை ஐந்து மணிக்குத் தொடங்கிய சண்டை மாலை ஐந்து மணிவரை நீடித்தது. பெரும் பலத்தோடு வந்து ஒற்றைக் காப்பரணைத் தாக்கிய சிங்களப் படைகளைக் காப்பரணில் நின்ற ஐவரும் எதிர்த்துக் கொண்டிருந்தனர்.

காயம். அதைக் கட்டு. சுடு. மறுபடி காயம். மீண்டும் கட்டு. தொடந்தும் சுடு. ஐவரின் உயிர்கள் வீழ்ந்த பின்னும் ஆண்மாக்கள் போராடின. அவர்களின் காப்பரண் எதிரிகளிடம் வீழவில்லை. அவர்கள் விரும்பியதும் அதைத்தான்.

***
கட்டுக்கரைக் குளக்கட்டுக் காப்பரணை இலக்கு வைத்து மறுபடியும் வந்த சிங்களப்படைகளை இம்முறை எதிர்கொண்டது கப்டன் கோதையின் அணியினர். முதற்சண்டையில் விதையாகிய தோழியரின் இரத்தமும் தசையும் ஊறி வீரம் ஊறிக்கிடந்த காப்பரண் இந்தமுறை கடுமையாக மோதியது.

சண்டை கடுமையாக நடந்தது. படைத்தளம் ஒன்றைத் தாக்கும் பலத்தோடும் வளத்தோடும் வந்து தனித்த ஒற்றைக் காப்பரணைத் தாக்கிக்கொண்டிருந்த சிங்களப் படையினருக்கு இலக்காகாமல், வெளியேறுவதற்கிருந்த ஒற்றை வழியால் வெளியேறித் தேடிவந்தவர்களை ஏமாற்றியிருக்கலாம். கோதை ஒப்பவில்லை.

'வரமாட்டேன். விடமாட்டேன்'என்று துணிவோடு நின்றவர்கள் வீழ்ந்த பின்னும் காப்பரண் வீழவில்லை. தம்மால் தாக்கப்பட்ட காப்பரணைத் தக்கவைக்க முடியாமல் சிறிலங்காவின் மேன்மை மிகு படையினர் திரும்பிச் சென்றனர்.

2007.09.24 அன்று கட்டுக்கரையில் தொடங்கிய சண்டை காலையில் பாலைக்குழி, மாலையில் பெரியபண்டிவிரிச்சான், இரவு திருக்கேதீச்சரம், மறுநாள் காலை முள்ளிக்குளம், மதியம் உயிலங்குளம் என்று தொடர்கின்றது. என்னதான் நடக்கின்றது மன்னாரில்? நாளாந்த ஏட்டின் தலைப்புச் செய்தியை நாள்தோறும் உருவாக்குகின்ற மன்னார் சண்டைகளின் பின்னணி என்ன?

சிங்கள அரசின் மேன்மை மிகு தரைப்படைகளின் பலம் மேலும் பெருக்கப்பட்டுள்ளதா? முன்பென்றால் மாதம் ஒரு சண்டை. இருபது போராளிகள் வீரச்சாவு, ஐம்பது படையினர் சாவு என்றொரு செய்தி மறுபடியும் நாளேட்டில் வர ஒரு மாதமாவது செல்லும். இப்போது நாளாந்தம் சண்டையென்றால்...?

'வீட்டுக்கு ஒராளைத் தந்திருக்கிறோம். கூட்டிக்கொண்டு போய் என்ன மோனே செய்யிறியள்? அவன் எந்த நாளும் வந்து அடிச்சுக்கொண்டிருக்கிறான். பார்த்துக்கொண்டிருக்கிறியள்"

கோவப்படாதீர்கள் ஐயா கொஞ்சம் பொறுங்கள். விடுதலைப் புலிகளின் போர்முனைப்பையோ, ஒருங்கிணைந்த பலத்தையோ, ராங்கிகளின் நகர்வால், பல்குழல் பீரங்கிகளின் செறிவான சூடுகளால் குலைத்துவிட எந்தச் சிங்கள மேலாண்மைச் சக்திகளாலும் முடியவில்லை. கால்களை, வாலை, தலையை ஓட்டினுள் இழுத்து வைத்துக்கொண்டு இருந்துவிட்டு, எல்லாம் முடிந்ததும் வெளியே தலையை நீட்டும் ஆமையைப் போலே, மண்ணின் மடியில் இருந்து எழும் புலிகள் மறுபடியும் உலாவுகின்றார்கள். இவர்களோடு நேரே மோதுவதைத் தவிர வேறு வழியில்லை.

மிகப்பெரும் எண்ணிக்கை கொண்ட இனம், உலக வல்லரசுகள் பின்னால் நிற்கும் பலம் இரண்டும் கைகோர்க்க அதிகரித்த மனித, படைக்கல வளத்தோடு எங்களின் ஒற்றைக் காப்பரணை ஒரு படைத்தளமாகக் கருதியே தாக்குகின்றார்கள் ஐயா, சண்டையின் கணக்குப்படி பார்த்தால், வீட்டுக்கொருவராக எழுந்து வந்த உங்களின் பிள்ளைகள் ஒவ்வொருவரும் இருபது சிங்களப் படையினருக்குச் சமம் ஐயா ஒற்றைக் காப்பரணைத் தாக்க நூறு பேர் அல்லவா வருகின்றார்கள்.

***
சண்டையில் நிற்கும் பிள்ளைகளைப் படம் எடுக்கப் போகின்றேன் என்று சாரதா கிளம்பி மன்னாருக்குப் போய்விட்டார். ஒவ்வொரு காப்பரணையும் படம்பிடித்து அவர்களோடு இருந்து அளவளாவி, உசாவி நிலமை அறிந்தபடி சாரதாவோடு ஒரு அணி நகர்ந்து கொண்டிருந்தது.

அடுத்த காப்பரணுக்குப் போவதற்கு இடையில் ஒரு வெட்டையை ஓடிக்கடக்க வேண்டும். மூச்சு வாங்க ஓடிக்கொண்டிருக்கும் போதே சற்றுத் தூரத்தே கனரகச் சுடுகலனின் தொடர் சூடு கேட்கத் தொடங்கியது. ஐயமில்லாமல் இது 50 கலிபரின் அடிதான். எங்களுடைய காப்பரண் ஒன்று சிங்களப் படைகளால் தாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது. ஓட்டமாக ஓடிப்போய் அடுத்த காப்பரணில் புகுந்து இருந்தபோது காது கிழிந்தது. இந்தக் காப்பரணுக்கு ஏறத்தாழ ஐம்பது, அறுபது மீற்றர்கள் தொலைவில் தமது ஐம்பது கலிபர் சுடுகலனை நிலைப்படுத்திய சிங்களப் படையினர், சற்றுத் தள்ளியிருந்த முதன்மைச்சாலை ஒன்றில் சற்று முன்னதாக நீட்டியபடி அவர்களுக்குத் தொந்தரவாக இருந்த எங்களின் அடுத்த காப்பரணை வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தார்கள்.

அருகிலிருக்கும் எதிரிகளைத் தாக்கி, இதிலேயும் ஒரு காப்பரண் இருக்கின்றது என்று காட்டவேண்டிய தேவையில்லைத்தானே. எனினும் விழிப்பாகக் கண்காணிப்பில் நின்றார்கள். இவர்களைக் கண்டதும்

'வாங்கோ வாங்கோக்கா" என்றவாறு உள்ளே இழுத்தெடுத்தார்கள்.
ஒருவர் அடுப்பை மூட்டி, தண்ணீரை ஏற்றினார். மற்றவர் உணவுப் பொதிகளை அவிழ்த்தார்.
'ரீ குடியுங்கோ. சாப்பிடுங்கோக்கா..."
என்னடா இது. முன்னுக்குச் சண்டை நடக்கின்றது. இவர்களை நோக்கி எந்த நேரமும் அது திரும்பலாம்.
'நீங்கள் சாப்பிட்டிட்டிங்களோ?"
'இல்லையக்கா, காலையும் மதியமும் இப்ப உங்களுக்குப் பின்னாலைதான் வந்தது. நீங்கள் சாப்பிடுங்கோ. நாங்கள் பிறகு சாப்பிடுவம்"
'பரவாயில்லை. களைச்சுப் போனீங்கள் சாப்பிடுங்கோ"
சண்டையில் நிற்பவர்கள் என்று இவர்கள் அவர்களுக்கு விட்டுக்கொடுக்க, நீண்டதூரம் நடந்து வருகின்றார்கள் என்று அவர்கள்
இவர்களுக்கு விட்டுக்கொடுக்க...
அதற்குள் தேநீர் தயாரிக்கப்பட்டுவிட்டதால் அதைக் குடித்துவிட்டு வந்தவர்கள் புறப்பட,
'கவனமக்கா. பாத்துப் போங்கோ"
என்று நின்றவர்கள் வழியனுப்பினார்கள்

***
மன்னார் போரரங்கில் நிற்கும் 2 ஆம் லெப். மாலதி படையணியின் எல்லா உறுப்பினர்களுக்கும் சத்தான இடைநேர உண்டிகளை வாங்கிக் கொடுக்கும்படி தலைவர் அவர்கள் கேணல் யாழினி (விதுஷா) யிடம் ஒரு தொகைப் பணத்தைக் கொடுத்தார்.

பங்கிடப்படும்போது வீணாக்கக்கூடாது. மன்னாரின் இந்தத் தொங்கலிலிருந்து அந்தத் தொங்கல் வரை நிற்பவர்களுக்கு எறிகணை வீச்சுக்களுக்குத் தவழ்ந்து, ஆறு கடந்து, சேறு கடந்து, குளம் கடந்து தேடுதல் அணியின் பின்னே போய் கொடுத்து முடியவே ஆறேழு நாளாகும். அதுவரை பழுதாகவும் கூடாது. அண்ணை நல்ல சாப்பாடு கொடுத்துவிட்டிருக்கிறார் என்று வயிறாற, மனம் நிறைய விரும்பிச் சாப்பிடக் கூடிய மாதிரியும் இருக்க வேண்டும். நிறைய யோசித்த யாழினி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு 'சோன்பப்டி" இந்திய இனிப்புப் பெட்டியை வாங்கிக்கொடுத்துவிட்டார். எல்லோர் கைகளுக்கும் போய்ச் சேர்ந்துவிட்டது.

முன்னரங்கைப் பார்வையிட்டவாறு போய்க்கொண்டிருந்த யாழினி அந்தக் காப்பரணில் காலாற அமர்ந்து கதைத்தார். ஒரு புதிய போராளி உசாவத் தொங்கினார்.

'அக்கா, அண்ணை ஏன் எங்களுக்குச் சாப்பாடு குடுத்துவிடவேணும். மூண்டு நேரம் சாப்பாடு தந்தாக் காணும்தானே. அதை இஞ்ச தருகினம்தானே..."
இவருக்குச் சிரிப்பு வந்துவிட்டது. சண்டைக்குப் புறப்படும்போது கொக்கோ பாற்கட்டிப் பொதிகளையும் (கண்டோஸ்) தந்து, பற்தூரிகையையும் தந்து விடுபவர்தான் தலைவர் அவர்கள் என்று இவர் விளக்கினார்.

'ஒரு ஆளுக்கு ஒரு பெட்டி ஏனக்கா? எங்கட வீட்டிலை நாங்க மூண்டு பிள்ளையள். வசதியான குடும்பந்தான். ஆனா ஒரு பெட்டி வாங்கிவந்து எல்லாருக்கும் தாறதே தவிர, ஒரு ஆளுக்கு ஒரு பெட்டி எண்டு ஒரு நாளுமில்லை. இந்தளவுக்கு வீட்டிலை கூட எங்களைக் கவனிக்கேல்லை. அண்ணையைப் பற்றி இப்பத்தான் விளங்குது" என்றார் அவர்.

***
அண்ணையை நாங்கள் சந்திக்கப் போறம். கேட்டுச் சொல்லுங்கோ"

யாழினியிடம் புதிய போராளிகள் சிலர் கேட்டனர்.
'நாலு பேர் வீரச்சாவடைஞ்சதுக்கு நேற்று நல்லா வாங்கிக் கட்டினனான். இப்ப அவரிட்டைக் கேக்கேலாது. கேட்டால் பேசிப்போடுவார்"
சட்டென அவர்கள் சொன்னார்கள்
'உங்களைத்தானே பேசினவர். எங்களை அவர் பேசமாட்டார். நாங்கள் கேக்கிறமெண்டு போய்க் கேளுங்கோ"

~~~~~~~~~~~~~~~~~~~~~~

நன்றி: விடுதலைப் புலிகள் ஏடு (தை-மாசி 2008)

Labels: , , , , ,

Wednesday, March 12, 2008

எல்லாளன் இராச்சியத்தில் பிரபாகரன் பிள்ளைகள்

சிறி. இந்திரகுமார்.எல்லாளன் நடவடிக்கை

தமிழரின் வீர வரலாற்றின் ஒரு அத்தியாயம்.

சிங்களத்தின் இராணுவத் திமிர் அடக்க தலைவர் பிரபாகரன் அவர்கள் பெயர் சூட்டி நடாத்திய கரும்புலி நடவடிக்கை.

தாக்குதலின் தன்மையைப் போலவே நடவடிக்கைக்கான பெயர் சூட்டலும் சிங்களப் பேரினவாதிகளுக்கு பேரிடியாக விழுந்துவிட்டது.

இலங்கைத்தீவில் தமிழரது ஆட்சியின் சின்னமாக எல்லாள மன்னனைச் சிங்களப் பேரினவாதம் அடையாளப்படுத்துகின்றது. எல்லாளனை வென்ற துட்டகைமுனுவைப் பேரினவாதிகளின் வேத நூலான மகாவம்சம் போற்றுகின்றது.

இந்தப் போற்றுதல் எல்லாளன் என்ற தமிழ் மன்னனை வென்ற இராணுவச் செயலுக்கானது மட்டுமல்ல தமிழரது ஆட்சியை இல்லாதொழித்த அரசியல் செயலுக்கானதுமாகும்.

சிங்களப் பேரினவாதிகளின் காவிய நாயகனாகத் துட்டகைமுனு உருவகிக்கப்படுவது அவர்களின் இனவாதப் பண்பாடாகும்.

இந்தப் பண்பாட்டின் அடிப்படையிலேயே@ சிங்களத்தின் ஆட்சிபீடம் ஏறும் ஒவ்வொரு அரசியல் தலைவரும் தன்னைத் துட்டகைமுனுவின் வாரிசாகவே உருவகப்படுத்திக் கொள்கின்றார்.

துட்டகைமுனுவைக் காவிய நாயகனாகவும்- அனுராதபுரத்தை இனவாதத்தின் தொட்டிலாகவும் வழிபட்டு தமிழினத்துக்கு எதிரான இன அழிப்பை நடாத்தி வருகின்றார்கள்.

தமிழருக்கு எதிராக நடந்த ஒவ்வொரு இன அழிப்பு நடவடிக்கையிலும் தமிழரின் இரத்தத்தால் தோய்ந்து கிடந்திருக்கிறது அனுராதபுரம்.

அத்துடன் தமிழரின் குடிஅழித்துக்@ கொடுமை புரியும் சிங்கள வான்கழுகுகளின் படைவீடாகவும் அனுராதபுரம் காட்சியளித்தது.

சிங்களத்தின் இராணுவத் திமிர் அடக்க தலைவர் பிரபாகரன் அனுராதபுரம் வான்படைத்தளத்தைக் குறியிலக்காகத் தேர்ந்தெடுத்தார். பேரினவாதிகளின் அரசியல் திமிர் உடைக்க அதற்கு எல்லாளன் நடவடிக்கை என்று பெயர் சூட்டி@ சிங்கள இனவாத வரலாற்றிற்குத் தகுந்த வரலாற்றுப் பதிலடி கொடுத்துள்ளார்.

இந்த வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தித் தமிழரின் வீரத்தை உலகிற்குப் பறைசாற்ற இருபத்தியொரு கரும்புலி வீரர்களைத் தலைவர் பிரபாகரன் தேர்ந்தெடுக்க தலைவரின் எண்ணத்திற்கு அவர்கள் செயல்வடிவம் கொடுத்தார்கள்.

அந்த அதிகாலையில்@ இருள் போர்த்துக்கிடந்த அனுராதபுரம் வான்படைத்தளம் அதிர்ந்தது.

சிங்களத்தின் வான் கழுகுகளைத் தீநாக்குகள் விழுங்கிய செய்தி சிங்கள தேசத்தையே திகைப்பிற்குள்ளாக்கியது, உலகம் அதிசயித்தது - தமிழினம் புளகாங்கிதமடைந்தது.

இந்தச் சாதனை நாயகர்களான எங்கள் கரும்புலிக் கண்மணிகளின் வீரத்தையும் உயிர் ஈகத்தையும் நினைத்துத் தமிழினம் மெய்யுருகிப்போனது.

தலைவர் பிரபாகரனின் நெஞ்சறையில் வாழும் அந்த நெருப்புக் குழந்தைகளின் கதைகள் ஒவ்வொன்றுமே மெய்சிலிர்க்க வைப்பவை - எங்கள் உள்ளக் கிடக்கை களில் தீ மூட்டுபவை.

அத்தகைய கதைகளில் சிலவற்றை இங்கே தொகுத்துள்ளோம். இந்தக் கதைகள் அந்தக் கண்மணிகளை எங்கள் மக்களின் நெஞ்சறை களிலும் உயிர்வாழச் செய்விக்கும்;.
இனி அவர்களது கதைகளைப் படியுங்கள்! அறியுங்கள்....தோழமை..


ஆனையிறவு

என்றுமே வீழ்த்த முடியாது என்ற திமிரோடு எதிரி குந்தியிருந்த படைத்தளம்.
குடிபறிக்கும் கொடியவரின் சாக்காலம் எப்போது என மக்கள் ஏங்கி நின்ற
நாட்கள்.

வீழ்த்தியே தீருவோம்@ என்ற சபதம் ஒவ்வொரு புலி வீரனின் உள்ளத்திலும் உறைந்திருந்த காலம்.

ஒரு சுட்டெரிக்கும் பகற்பொழுது@ சண்டைக்கான ஆணையை வழங்கியிருந்தார் தலைவர்.

பரந்தன் முன்னரங்குகளை உடைத்து முன்னேறினர் புலி வீரர்....

எல்லோர் மனங்களிலும் நம்பிக்கை@ இம்முறை தப்பவே மாட்டான் எதிரி.

ஆனையிறவைப் பாதுகாக்கச் சுற்றி வர நிறுவியிருந்த படை முகாம்கள் ஒவ்வொன்றாய் வீழ@ ஆனையிறவின் இறுதிக் காலம் நெருங்கிக் கொண்டிருந்தது.

ஆட்டம் கண்ட படைத்தளத்தை@ அடியோடு பொறித்துக் கொட்டத் தலைவர் வகுத்த வியூகத்துடன் புலிவீரர்கள் தரையிறங்கினர் குடாரப்பில்.

பெருங்கடலைக் கடந்து@ விரிந்து கிடந்த நீரேரியைத்தாண்டி யாழ் சாலையில் நிலையெடுக்க வேண்டிய நகர்வு அது.

முன்னேறிய படைத்தொகுதியில்@ அனுராதபுரம் தாக்குதல் கரும்புலிகளின் தளபதி@ எங்கள் வெற்றி நாயகன் இளங்கோவும் ஒருவன்.

கரும்புலி வீரனாக அல்ல@ கவச எதிர்ப்பு வீரனாக.

கழுத்தளவு நீர் பாதங்களை உள்ளிழுத்துப் புதைக்கும் சகதி சோர்ந்து போகச் செய்யும் சிரமமான பயணம்.

துப்பாக்கி... அதற்கான வெடிமருந்துகள். என வழமையை விட அதிகமாகவே உடலை அழுத்தும் சுமை. இத்தனை சுமைகளையும் சுமந்த படி முன்னேறிக் கொண்டிருந்த அணிகளோடு இளங்கோவும் நகர்ந்து கொண்டிருக்க@ எதிரி ஏவத் தொடங்கினான்@ சரமாரியாக எறிகணைகளை.

கும்... கும்... என வீழ்ந்து வெடிக்கும்.... எறிகணைகளிலிருந்து காப்பெடுக்க எந்த வாய்ப்பும் இல்லாத சூழல்.

அதோ... வீழ்ந்து வெடித்த ஒரு எறிகணையின் சிதறல்... ஒரு பெண் போராளியின் உடலைக் கிழித்து வெளியேறக் கொப்பளித்தது குருதி.

தாமதிக்கவோ யாரையும் தாமதப்படுத்தவோ முடியாத களச்சூழல்.

முடிவெடுத்தவள் கடிப்பதற்காக குப்பியை எடுக்க@ பாய்ந்து தடுத்தான் இளங்கோ.
அந்தக் கழுத்தளவு நீருக்குள்ளும் அவளைத் தூக்கித் தோளில் போட்டவன் 'அவசரப்படாத... உன்னை எப்படியும் காப்பாற்றுவன்..." என்ற படி ஓடத் தொடங்கினான்....

கரை கால்களுக்குக் கிட்டாமலும்... கண்களுக்கு எட்டாமலும்... தொலைவில் கிடந்தது.

இளங்கோ அந்தப் போராளியின் உயிரைக் காப்பாற்றத் துடித்தான் எப்படியும் காப்பாற்றியே தீர வேண்டும் வெறிகொண்டவனாய் ஓடினான்.

மெல்ல... மெல்ல... கரை கண்களுக்கும், கால்களுக்கும் வசப்பட்டுக் கொண்டிருந்தது.
மூச்சிரைக்க... மூச்சிரைக்கக் கரையேறியவன் அவளை நிலத்தில் இருத்தி@ 'கரைக்கு வந்திட்டம்... கரைக்கு வந்திட்டம்..." என மகிழ்ச்சியோடு உரத்துக் கத்தியவனின் கண்களுக்கு... அப்போது தான் தெரிந்தது அவளது உயிர் அவளைவிட்டு பிரிந்திருந்தது.... .[தலைவர் பிரபாகரனோடு இளங்கோவும் வீமனும்]


பகிடி

திருக்கோணமலையிலிருந்து சிங்களவர்கள் அடித்து விரட்ட வன்னிக்கு வந்திருந்தது வீமனின் குடும்பம்.

சின்ன வயதிலேயே ஊரைப் பறித்து தெருவில் விட்டனர்@ சிங்களக் காடையர்கள்.

'இனியும் பொறுக்கேலாது" முடிவெடுத்தவன்@ வீமனாக இயக்கத்தில் இணைந்து கொண்டான்.

சண்டை பிடிக்க இயக்கத்திற்கு வந்தவனின் தோற்றத்தைப் பார்த்து@ படைத்துறைப் பள்ளிக்கு அனுப்பியது இயக்கம்.

ஆளும் வளர்ந்து@ அறிவும் வளரத் தலைவரின் பாதுகாப்புப் பிரிவில்@ அவருடன் நீண்டகாலம் நிழல் போல@ அவன் நடந்தான்.

வீமன் நம்பிக்கைக்குரிய போராளி@

தலைவர் வீமனிடம்@ எந்தப் பொறுப்புக்களையும் நம்பி ஒப்படைப்பார்.

அப்படித் தலைவர் நம்பி ஒப்படைத்த பொறுப்புக்களில் ஒன்று@ தேசத்தின் குரல் பாலா அண்ணாவின் பாதுகாப்பு.

வெளிநாட்டிலிருந்து பாலா அண்ணா தாயகம் வரும் வேளைகள் எல்லாம்@ வீமனே அவரின் பாதுகாப்புக்குச் செல்வான்.

கடைசியாக 2005 இல் பாலா அண்ணன் தாயகம் வந்த போதும் வீமனே சென்று வந்தான்.

தேசத்தின் குரல் சென்ற இடமெல்லாம் கூடவே இந்த வீரமகனும் சென்றான்.

அந்த வேளைகளில் பாலா அண்ணர் வீமனோடு கதைத்த பம்பல் கதைகளைப் பயிற்சியின்போது பெடியளுக்குச் சொல்லிச் சொல்லி சிரிப்பான்.

வீமன் கரும்புலியாகி அனுராதபுரம் தாக்குதலுக்கு பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த நாட்களில் ஒரு நாள்.

ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வொன்றில்@

மாவீரர் படங்களுக்கு மலர் அஞ்சலி செலுத்திக் கொண்டு வந்தவன்@ பாலா அண்ணைக்கும் மலரஞ்சலி செலுத்தினான்.

மண்டபத்திற்கு வெளியே வந்தவன் பெடியளிடம் சொன்னானாம்... 'கிழவர் எனக்குக் கலியாணம் பேசிப்போட்டுப் போய்ச் சேர்ந்திட்டார்.... இப்ப நானும் அவரிட்டப் போகப் போறன்... அங்க போய் கிழவரிட்ட கேட்கவேணும்.... என்ர கலியாணப் பேச்சு என்ன மாதிரி எண்டு" என்றானாம் சிரிப்போடு....

வெற்றிக்கொடி

அது 1994 ஆம் ஆண்டு.

சந்திரிகா சமாதான வேடம் களைந்து@ சண்டைக்காறியாய் சன்னதம் கொண்டிருந்த நாட்கள்....

கரைமடியில் அலைகள் தாலாட்டுப்பாடும் நாகர்கோவில் கிராமம்.

போருக்குள் நாளாந்தம் கழிந்து கொண்டிருந்தது.

தென்னங்கீற்றுத் தென்றலின்; அசைவிற்கு அழகாக ஆடிக்கொண்டிருந்த ஒரு பொழுது...

திடீரென வானத்தில் தோன்றின சிங்களத்தின் உயிர் குடிக்கும் கழுகுகள்....

அசுரவேகம் எடுத்து... தரையில் முட்டுவது போல் குத்திப் பதிந்து அள்ளிவீசிவிட்டுப் போயின குண்டுகளை.

நாகர்கோவில் மகாவித்தியாலயம் குருதியில் குளித்து உயிர்களைப் பலி கொடுத்து ஐயோ... எனத் தவித்து நின்றது....

காலையில் புத்தகப்பையும்...

பளீரென்ற வெள்ளைச் சீருடையும்...

அம்மா... போட்டு வாறம்...

கையசைத்துச் சொல்லிவிட்டு வந்த@ முப்பது பள்ளிச் சிறார்கள் பலியாக்கப்பட்டுக் கிடந்தார்கள் பாதகர்களின் கோரத்தில்..

அழுது துடித்தபடி அன்று ஓடி விழுந்தான்

அம்மாவின் மடியில்@ சின்னப்பெடியன் கலைராஜ்.

தன் கண்முன்னே தன் இனிய நண்பர்கள்... நண்பிகள் தான் நேசித்த பள்ளி
...எல்லாவற்றையும் ஒரு நொடியில் இழந்து.

மறக்க முடியாத நாட்களை மனதில்

சுமந்தபடி திரிந்தவன் ஒருநாள் புலியாக மாறினான். இப்போது அவன் பெயர் இளம்புலி.

காலங்கள் ஓடின இளமையிற் கல்வி சிலையில் எழுத்தாய்... பாடங்களுடன் அந்தக்கொடூரமும் அவன் மனதில் பதிந்திருந்தது....

இப்போது காலம் 2007.

மகிந்த ராஜபக்சவின் போர் வெறி

நாட்களில் ஒன்று...

அனுராதபுரத்தாக்குதலுக்கு அணிவகுத்து நின்ற கரும்புலிகளில் ஒருவனாக இளம்புலியும்.

அனுராதபுரம் வான் படைத்தளத்திற்குள் பகைவரின் வானூர்திகளை அழிப்பதற்கு புறப்படுவற்கு முன் ஆசையோடு தான் நேசித்த தலைவரிடமிருந்து இறுதிப் பிரியாவிடை பெறும் பொழுது.

தயங்கித்... தயங்கி வந்தவன் தலைவரிடம் கேட்டான்...

'நான் சண்டைக்குப் போகேக்க... எங்கட புலிக்கொடியக் கொண்டுபோக அனுமதிக்க வேணும்...

சண்டை முடிய அவங்கட முற்றத்தில் எங்கட கொடிய நான் ஏற்ற வேணும்...."

தலைவர் அனுமதி வழங்க மகிழ்ச்சியோடு புறப்பட்டவனை தோழர்கள் எங்க புறப்பட்டாச்சு... என்று கேட்க இளம்புலி சொன்னானாம்.

'அவலத்தை தந்தவனுக்கு@ அதைத் திருப்பிக் கொடுக்கப் போறன்" என்று....

மகிழ்ச்சி

நவாலிக்கிராமம்

அழுது முடியாமல் துடித்துக் கிடந்தது...

யாரை... யார் ஆற்றுவது எனத் தெரியாது ஆறுதலுக்காய் ஏங்கிநின்றது.

காலம் 1995

ரத்வத்தையும்... சந்திரிகாவும் யாழ்ப்பாணத்தை பிடிக்கவெனக் கூறி தமிழர் உயிர் பறித்துத் திரிந்த நாட்கள்.

ஒரு காலைப் பொழுதில் ஊரையெல்லாம் பறிகொடுத்துவிட்டு கர்த்தரே தஞ்சம் என்று நம்பி சென்பீற்றஸ் தேவாலயத்தில் குந்தியிருந்தனர் மக்கள்.

எறிகணைகள் ஒருபுறம் வெடித்துக் கொண்டிருக்க மக்களை கொல்வதற்கென்றே குண்டுகளை சுமந்து வந்தன விமானங்கள்.

ஒரே ஒரு நொடிப்பொழுது.

புக்காரா குண்டுமழை பொழிந்து விட்டுப் போனது.

ஒன்றல்ல... இரண்டல்ல நூற்றுக்கணக்கான உயிர்கள்.

சதைக்குவியலாய்... கற்குவியலுக்குள் சிதறிக்கிடந்தன. தாயை இழந்த பிள்ளை...

பிள்ளைகளைப் பறிகொடுத்த தாய்...

பெற்றோரை இழந்து அநாதையாய் ஆறுதல் கரம் தேடி நின்ற சிறுசுகள்.

யாரை.... யார் பறிகொடுத்தோம் என்று ஏங்க எவருமே இல்லாது எல்லோருமே அழிந்த குடும்பம்....

நெஞ்சு பிழந்து கண்ணீர் வடியும் நேரம் அது.

நவாலி அட்டூழியத்தை கண்களால் கண்டு... மனதால் வெதும்பி நின்றான் அப்போது க.பொ.த சாதாரணதரத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்த தயாசீலன்.

அழுது... அழுது ஓயாத விழிகளோடு புதைப்பவரை... புதைத்துவிட்டும் எரிப்பவரை எரித்துவிட்டும் மனதுக்குள் எரியும் உணவு;க்கு வழி தேடியவன் போராளியாக மாறினான்.

இப்போது அவன் போராளி மதிவாணண்.

அவனொரு கனரக சுடுகலன் பயிற்சி ஆசிரியன்.

பறந்து வரும் சிங்கங்களை

வேட்டையாட கற்றுக் கொடுக்கும் ஆசான்.

சுடுகலன் குறித்து போராளிகளுக்கு கற்றுக் கொடுக்கும் போதெல்லாம் தன் ஏக்கத்தை வெளிப்படுத்தத்தவறமாட்டான்....

'நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு விமானத்தைத் தானும் சுட்டுவீழ்த்த வேண்டும்."

கற்றுக் கொடுத்தவனுக்கு விமானத்தை வீழ்த்தும் வாய்ப்பு கிடைக்கவேயில்லை.

ஏங்கிக் கிடந்தவனுக்கு கிடைத்தது அரிய வாய்ப்பு.

மதிவாணன் மாஸ்ரர் எல்லாளன் நடவடிக்கைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தன் கண்முன்னே தன்மக்களை

பலியெடுத்த பகைவனின் வானூர்திகளை அழிக்கும் சந்தர்ப்பம்.

மதிவாணனின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

தன் ஏக்கத்துக்கு மற்றவர்களிடம் ஏன் பரிகாரம் தேடவேண்டும்.

தன் சுடுகலனாலேயே கொத்துக்... கொத்தாய் பகை வானூர்திகளை அழிக்கும் வாய்புக் கிடைத்தபின் எதற்குக் கவலை?

அளவில்லாத மகிழ்ச்சியோடு@ புறப்பட்டுப் போனானாம் எங்கள் கரும்புலி லெப்டினன் கேணல் மதிவாணன்.

அவனுக்குக் கொத்துக் கொத்தாய்க் கிடைத்தன சிங்கள வானூர்திகள்.

ஓர்மம்

அனுராதபுரம்

வந்து... வந்து... எங்கள்...மண்ணில்

குண்டுகளைக்... கொட்டிவிட்டுப் போகும்

சிங்களத்து வானோடிகளின் பயிற்சித்தளம்.

வன்னியின் கண்களுக்கு எட்டாத தொலைவிலிருந்ததேயொழிய எங்கள் தலைவனின் விழிவீச்சுக்குள் அடங்காது இருக்கவில்லை.

சிறகுகளுக்கு வலிமை ஏற்றிவிட்டு வானேறிவந்து குண்டுகளை வீசிவிட்டுப் போகும் பொழுதுகள் சபிக்கப்பட்ட பொழுதுகளாய் ஒவ்வொரு நாளும் களியும்.

செல்லுங்கள்...

வீழ்த்துங்கள்...

வெல்லுங்கள்... என்ற தலைவனின் சொல்லுக்கு உயிர் கொடுக்காதவரை எங்கள் உயிர்களை பறித்தபடி இருப்பான் எதிரி.

தாக்குதல் தயாரானது......

அனுராதபுர வான் தளத்துக்குள்ளேயே சென்று@ தரித்து நிற்கும் வானூர்திகளை

அழிக்கும் திட்டம்.

நிறைவேற்றப்போவது கரும்புலிகள்.

தேர்ந்தெடுக்கப்பட்ட அணியில் தர்மினியும் இடம்பிடித்திருந்தாள்.

திட்டம் நூறு வீதமும் நிறைவேற கடுமையான பயிற்சி.

சுட்டெரிக்கும் வெயிலிலும்

உடல் நடுங்கும் குளிரிலும்

நித்திரைக்காக ஏங்கும் இரவுகள்... நாட்களை கரைத்து உடல்களை உரமேற்றிக்கொண்டிருந்தனர் அவர்கள்.

நடப்பதாக இருந்தாலும் நீண்ட தூரம்...

முன்னேறுவதாக இருந்தாலும் அதிக தூரம்...

ஓடித்தொடுவதாக இருந்தாலும் மிக நீண்ட தொலைவு...

வியர்க்க... வியர்க்க... கரும்புலிகளை புடம் போட்டுக்கொண்டிருந்தார் பயிற்சி ஆசிரியர்.

கடினப் பயிற்சி... இலகுவான சண்டை...

தலைவரின் சொல்லுக்குச் செயல்வடிவம் கொடுக்க உறுதி கொண்டு நின்றனர் கரும்புலிகள்...

ஆனாலும் எவ்வளவு தூரம் என்றுதான் ஓடுவது?

கருணை காட்டாத வாத்தியின் மேல் கோவம்... கோவமாய் வரும் தர்மினிக்கு.

பயிற்சியின்போது எல்லோரும் முன்னுக்கு ஓடிவர... தர்மினி பின்னுக்கு வருவாள்.

எவ்வளவுதான் நக்கல் அடித்தாலும், எவ்வளவுதான் ஏசினாலும், எவ்வளவுதான் கண்டித்தாலும் அவள் கடைசி ஆளாகத்தான் ஓடிவருவாள்.

ஒரு நாள்... தர்மினியை அழைத்த இளங்கோ சொன்னான்.

'குறிப்பிட்ட இந்த இலக்கை... நீ முப்பது வினாடிகளுக்குள் ஓடி முடிக்காவிட்டால் உன்னுடைய கரும்புலி வாழ்க்கை இதோடு முடியப்போகிறது..."

கண்டிப்பாகவும்... பம்பலாகவும்... சொல்லிவிட்டு நின்றவன்முன் முப்பது வினாடிகள் முடிவதற்கு முன்னரே ஓடிவந்து மூச்சிரைக்க நின்றாள் தர்மினி....

இளங்கோ அண்ணா.... பம்பலாகத்தானும் இப்படிச் சொல்லாதேங்கோ.....

(கதைகள் தொடரும்)

~~~~~~~~~~~~~~~~~~~~~~
நன்றி: விடுதலைப் புலிகள் ஏடு (தை-மாசி 2008)


Labels: , , , , ,

Monday, March 19, 2007

கரும்புலி லெப்.கேணல் பூட்டோ

இந்திய இராணுவமும் ஒட்டுக்குழுக்களும்சேர்ந்து தேசபக்தர்களை வேட்டையாடிக்கொண்டிருந்த காலம். மன்னார் மாவட்டத்தின் பாலக்குழிப் பிரதேசத்தில் யூலியனின் தந்தை இந்திய இராணுவத்தால் கைது செய்யப்பட்டார். பாடசாலைக்குள் புகுந்த இராணுவத்தினர் யூலியனைக் காட்டித்தரும்படி துப்பாக்கி முனையில் அச்சுறுத்துகின்றனர். அன்று பாடசாலை செல்லாத யூலியன் தப்பித்துக்கொள்கிறான். உடனடியாக முஸ்லிம் குடும்ப நண்பர் ஒருவரின் உதவியுடன் மறைமுகமாக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படுகிறான். அங்கிருக்கும் நகைக்கடையொன்றில் தற்காலிகமாகப் பணிக்கமர்த்தப்படுகின்றான். முதல்நாள் கடைக்குச் செல்கிறான். அங்கிருக்கும் கதிரையொன்றில் அமர்ந்திருக்கின்றான். அங்குவந்த முதலாளி
"கடைக்கு வேலைக்கு வந்தனி எப்படிக் கதிரையில் அமர்ந்திருக்கலாம்?"
என ஏசுகின்றார்.
"நான் எனது ஆசிரியர்களுக்கு மட்டும்தான் எழுந்து மரியாதை கொடுக்கிறனான்"
என கூறியவன் எவருடைய உதவியுமின்றி மீண்டும் தாயிடம் வந்து சேருகின்றான்.
"அம்மா இப்படி அடிமையாகச் சிறுமைப்படுவதிலும் பார்க்க நான் இயக்கத்திற்குப் போகப்போறன்"
என அனுமதி கேட்கின்றான். அன்னை மொனமாக இருக்கின்றாள். அங்கிருந்த உறவினர்கள் அழுகின்றார்கள்.
"நீங்கள் அழுதுகொண்டு இருக்கையில் நான் இயக்கத்திற்குப் போகமாட்டன். ஆனால் விரைவில் போயிருவன்" என்றவன் ஒருநாள் இயக்கத்தில் இணைந்துவிட்டான். உயிராபத்துக்களை உதாசினம் செய்து, போராளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த மிகவும் ஆதரவான வீட்டிலிருந்து, இவன் இயக்கத்தில் இணைந்தது, முகாம் பொறுப்பாளரைச் சங்கடத்திற்கு உள்ளாக்கியது.
"நீ வீட்ட திரும்பிப் போ"
என கூறுகின்றார்.
"இல்ல நான் அம்மாவிட்ட சொல்லிப்போட்டுத்தான் வந்தனான்."
என பதிலளிக்கின்றான். இதனை உறுதிப்படுத்த பொறுப்பாளர் தாயைச் சந்திக்கின்றார். மகனின் கூற்றை உண்மையாக்க விரும்பியவள்
"ஓம் என்னட்ட சொல்லிப்போட்டுத்தான் வெளிக்கிட்டவன்" எனக் கூறுகின்றாள்.

முழுமையான போராளியாக மணலாற்றுக் காட்டினுள் இவனது போராட்ட வாழ்க்கை ஷபூட்டோ எனும் பெயருடன் தொடங்கியது.
காட்டு வாழ்க்கை, கடினப் பயிற்சிகள் கடந்து வேவுப்புலியாகப் பரிணமிக்கின்றான். காடுகளையும் எதிரிமுகாம்களையும், காவலரண்களையும் கால்களால் நடந்து அளந்து கணிக்கின்றான். ஒரு நாள் ஏழு பேர் கொண்ட வேவு அணியை வழிநடத்தியவாறு, னப்பாதுகாப்பு வலயத்தின் சுற்றயல்பகுதியை கண்காணித்துக் கொண்டு வருகின்றான். ஒரு இடத்தில் சூழலுக்குப் பொருத்தமற்ற முறையில் புற்கள் மடிந்திருப்பதை அவதானிக்கின்றான். எதிரி தமது பகுதிக்குள் புகுந்துவிட்டதாக கூறுகின்றான். மற்றவர்கள் அதனை மறுதலிக்கின்றனர். இவனோ அப்பகுதியில் அண்மையில் தான் புதைத்து வைத்த மிதிவெடியொன்றைத் தோண்டி எடுக்கின்றான். எதிரி மீண்டும் அப்பாதையைக் கடப்பானாயின் எங்கு பாதம் வைப்பான் என்பதைக் கணிக்கின்றான். அவ்விடத்தில் மிதிவெடியை வைத்து உருமறைத்து விடுகின்றான். தொடர்ந்து நகர்கின்றார்கள். சிறிது நேரத்தில் வெடிச்சத்தம் ஒன்று கேட்கின்றது. ஏனையவர்கள் காட்டு விலங்கு ஏதும் மிதிவெடியில் சிக்கியிருக்கும் என கருத்துத் தெரிவிக்கின்றனர். அதனை மறுதலித்தவன் அவர்களையும் அழைத்துக்கொண்டு அவ்விடம் திரும்புகின்றான். அங்கு இரத்தம் சொட்டியபடியே இராணுவப் பாதணியுடன் துண்டிக்கப்பட்ட கால் ஒன்று கிடக்கின்றது. பின்னர் வந்த நம்பகமான தகவல் மூலத்திலிருந்து தெரியவந்தது. இவர்களுடைய காட்டுமுகாமைச் சுற்றிவளைத்து தாக்கியழிப்பதற்காகத் தங்களது வேவு தகவல்களை இறுதியாக உறுதிசெய்ய வந்த இராணுவ அதிகாரி ஒருவர்தான் மிதிவெடியில் சிக்கியது என்பது. இவனது சமயோசிதச் செயற்பாட்டால் பல போராளிகளின் உயிர்கள் பாதுகாக்கப்பட்டது. இவ்வாறான பல பதிவிலுள்ள, பதிவில் இல்லாத நிகழ்வுகளின் ஊடாக இவன் ஒரு இராணுவ விற்பன்னனாக வருவதற்கான அறிகுறிகள் தென்படத்தொடங்கின. மணலாறு மாவட்டத்தில் நடாத்தப்பட்ட பல்வேறு முகாம் தாக்குதல்கள், பதுங்கித் தாக்குதல்கள் என்பனவற்றிற்கு வேவு எடுத்தும், அணிகளை வழிநடத்தியும் போராட்டத்திற்கான தன் பங்களிப்பை மேம்படுத்திக்கொண்டான். இக்கால கட்டத்தில் ஒரு சண்டையில் தனது இடதுகைப் பெருவிரலையும் இழந்திருந்தான்.
கரும்புலி லெப்.கேணல் பூட்டோ
கனகரட்ணம் ஸ்டான்லி யூலியன்


இயல்பாகவே இவனிடம் இருந்த சித்திரம் வரையும் ஆற்றலால் இவன் வரைபடப்பகுதிக்குள் உள்ளீர்க்கப்பட்டான். வேவுத்தகவல்களை வரைபடங்களாக்கி துல்லியமான விபரங்களைக் கொடுத்து பிரதம தளபதிகளின் தாக்குதல் திட்டமிடல்களுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தான். இயற்கையாகவே இவனிடம் இனிமையாகப் பாடும் திறனும், கவிதை யார்க்கும் வல்லமையும் கைகூடியிருந்தது. வனமுகாம்களில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்குகொண்டு கலையாற்றல்களை வெளிப்படுத்தி போராளிகளை மகிழ்விக்கவும் செய்தான். இயக்கத்தில் கலையரசன் எனும் பெயரையும் பெற்றான். சமகாலத்தில் போராயுதத் தளபாடங்களையும், நவீன இராணுவ உபகரணங்களையும் தன்னுடன் பழக்கப்படுத்தினான். அவற்றின் உச்ச பயன்பாட்டைப் பெறும்வகையில் தன்னை தகவமைத்துக் கொண்டான். தொடர்ந்து பூநகரி கொக்குத்தொடுவாய் இராணுவ முகாம்களின் வேவுகளை எடுத்து அவற்றின் மீதான தாக்குதல்களை உறுதிப்படுத்தினான். இப்பொழுது இவன் பல அணிகளை வழிநடத்தும் அணித்தலைமைப் பொறுப்பை வகிக்கத் தொடங்கியிருந்தான்.

சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கை தொடர யாழ்நகரம் கைவிடப்பட, இவன் உள்நின்ற போராளிகளுடன் கலந்திருந்தான். இவனது போராவலைத் தீர்ப்பதற்கு நல்லசந்தர்ப்பங்கள் கிடைத்திருந்தது. ஒருமுறை நடவடிக்கையின் நிமிர்த்தம் பண்ணைக் கடலினூடு நீந்திக்கொண்டிருந்தான். அப்பொழுது அழற்சியை ஏற்படுத்தக்கூடிய, நச்சுக் கடற்தாவரம் ஒன்றினால் தாக்கப்பட்டிருந்தான். உடல் முழுவதும் தடித்து மூச்சு விடுவதையும் சிரமம் ஆக்கியது. ஒருவாறு சிரமப்பட்டு கரையொதுங்கியவன் ஒருவாரத்திற்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டும் களம் சென்றான்.

முல்லைத்தீவுச் சமர் தொடங்கிவிட்டது.
"பூட்டோ... பூட்டோ!"
என தொலைத் தொடர்பு சாதனத்தில் தளபதி பால்ராஜ் அழைப்பது கேட்கின்றது. ஈழத் தமிழர்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும் திருப்புமுனைத் தாக்குதல் அது. நாங்கள் வென்றே ஆகவேண்டும் சர்வதேசத்திற்கான தமிழீழத்தின் கடற்பாதை திறக்கப்பட்டே ஆகவேண்டும். முகாம் துடைத்தழிப்பை பூரணப்படுத்தப்பட வேண்டும். அதற்காக வேவில் வரைபடத்துறையில், தாக்குதல் அனுபவங்களில், நெருக்கடி நேரங்களில் சரியான முடிவெடுக்கும் வல்லமையைப் பலமுறை நிரூபித்திருந்த பூட்டோ களநிலை அவதானிப்பாளராகவும், டாங்கிக்கான ஒருங்கிணைப்பாளராகவும் களத்தினுள் இறக்கப்பட்டிருந்தான். இவனது செயற்பாட்டால் பகைமுகாம் வீழ்த்தும் முயற்சி துரிதப்படுத்தப்பட்டது. பெரும்பாலான முகாம் பகுதிகள் வீழ்ந்துவிட்டன. ஒரு கட்டடத்தினுள் பல இராணுவத்தினர் ஒளிந்திருந்து தாக்குதலைத் தொடுத்துக்கொண்டிருந்தனர். அவர்களைச் செயல் முடக்கம் செய்யவேண்டும். பூட்டோ டாங்கியைத் தாக்குதலுக்கு ஆயத்தம் செய்து அதன் மூலம் சில சூடுகளை வழங்க ஆணையிட்டான். பகைவன் பதுங்கியிருந்த கட்டடம் அப்படியே தகர்ந்து இறங்கியது. பெரும்பாலான இராணுவத்தினர் கொல்லப்பட்டு விட்டனர். தொடர்ந்து தாக்குதலை நடாத்தி வெற்றியை உறுதிப்படுத்தும்படி களமுனைத்தளபதி கட்டளையிட்டார். அவ்வாறு செய்ய முற்படுகையில் அவனது உள்ளுணர்வு அவனை எச்சரித்தது. மீண்டும் சூழலை அளவெடுக்கின்றான். மின்னல் என பொறி தட்டியது. டாங்கிக்குப் பக்கவாட்டாக இருக்கும் மண்ணரணில் இடைவெளி தென்பட்டது. எக்காரணம் கொண்டும் டாங்கி இழக்கப்பட முடியாத இயக்கத்தின் இராணுவச் சொத்து. டாங்கியை வேகமாகப் பின்னகர்த்தி பாதுகாப்பிடம் செல்ல உத்தரவிட்டான். டாங்கி சடுதியாகப் பின்னகரவும் குறித்த மண்ணரன் இடை வெளியூடு ஆர்பிஜி கணை ஒன்று எகிறி வந்து இலக்குத் தவறித் தாண்டிச் செல்லவும் சரியாக இருந்தது. கணநேர முடிவில் இயக்கத்தின் இராணுவப் பலங்களில் ஒன்றைப்பாதுகாத்து தொடர்ந்த பல வெற்றிகளுக்கு அடிப்படைக் காரணமாகின்றான்.

ஓயாத அலை 1 வெற்றியில் தமிழீழம் திளைத்திருந்தது. தமிழர்கள் தலைநிமிர்ந்து நடக்கத் தொடங்கினர். சிங்களம் தோல்விக்குச் சப்பைக்கட்டுக் கட்டிக்கொண்டிருந்தது. அவ்வேளை முல்லைத்தீவு முகாமில் எடுக்கப்பட்ட பொருட்களின் தவறான பிரயோகம் சம்பந்தமாக பூட்டோ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டான். அவனை அறிந்திருந்த அனைவருக்குமே விளங்கியிருந்தது. விசாரணை முடிவு அவனைக் குற்றமற்றவன் என நிரூபிக்கும் என. ஆனால் அதுவல்ல இங்கு முக்கியம், அர்பணிப்பும் செயற்திறனும் உள்ள அப்போராளிக்கு இச்செயல் மனவுடைவை ஏற்படுத்தலாம். ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாகவே சம்பவங்கள் நடந்தேறின. விசாரணை முடிவு அவனைக் குற்றமற்றவன் என்றது. ஷதொடர்ந்து என்னசெய்யப் போகிறீர்கள்? விரும்பினால் தண்டனை இல்லாமல் வீட்ட போகலாம் என பொறுப்பாளர் தெரிவித்தார். மெலிதாகச் சிரித்தான். 'நான் தொடர்ந்து இயக்கத்தில் இருக்கிறன்' எனக்கூறினான். அப்பொழுது பொறுப்பாளர் அப்பசரி வரிப்புலி சீருடையைப் போடுங்கோ அண்ணை உங்களைச் சந்திக்க வரட்டாம். 'நான் தவறு செய்யமாட்டன் என்பதைத் தலைவர் நம்பினார். இதுபோதும் சாகும்வரை இயக்கத்தில் இருந்து செயற்படுவதற்கு' என தன்னுள் எண்ணியவன் தலைவரைச் சந்தித்தபின் தொடர்ந்து களப்பணியாற்றுகின்றான். பலமாதங்களுக்கு முன்னர் கரும்புலி அணியில் சேர்வதற்கு விருப்பம் தெரிவித்துக் கடிதம் அனுப்பியிருந்தான். அதற்கான அனுமதி கிடைத்திருந்தது. ஆபத்துக்களை கடந்து செய்யப்படும் தனது கடின உழைப்பில் மனத்திருப்தி கிடைக்காதவன் கரும்புலியாகச் செயற்படுவதில் அதனை அடையலாம் என நம்பினான்.

தொடர்ந்து கரும்புலிகளுக்கான உடல் உள உறுதிகளை உறுதிப்படுத்தும், தாங்குதிறனைப் பரிட்சிக்கும் பயிற்சிகளைப் பெற்றுத் தன்னைக் கரும்புலி அணித்தலைவர்களுள் ஒருவனாக்கிக்கொள்கிறான். இப்பொழுது கரும்புலியாகவும், வேவுவீரனாகவும் தனது அனுபவங்களை ஒருங்கிணைத்துச் செயற்படுகின்றான். வரையறைக்குட்பட்ட முறையில் முடிவெடுக்கும் அதிகாரத்துடன் எதிரி முகாம்களினுள் ஊடுருவி இலக்குத்தேடும் முயற்சியில் ஈடுபட்டிருந்தான். முல்லைத்தீவு வெற்றியைப்போல், பூரண வெற்றியைத் தரக்கூடிய புறச்சூழலுடன் அமைந்திருப்பது பூநகரி இராணுவத்தளம். ஏற்கனவே அதனுடன் இவனுக்கிருந்த பரீட்சயம் காரணமாக அதனை வேவு எடுக்கப்புறப்படுகின்றான். அனுபவம் வாய்ந்த வேவுப்புலிக்கு இராணுவமுகாமொன்றின் காவலரணுக்கு அண்மையாகச் சென்று அதனுள் எட்டிப்பார்ப்பதென்பது திகில் நிறைந்த விருப்பிற்குரிய செயற்பாடு ஆகும்.

தனது பாதுகாப்பை உறுதிப்படுத்தி ஒரு காவலரணுக்கு உள்ளே எட்டிப் பார்க்கின்றான். இராணுவ நடமாட்டத்தைக் காணவில்லை. அடுத்த காலரணினுள்ளும் சென்று பார்க்கின்றான். அதுவும் அவ்வாறே காணப்படுகின்றது. சிறிதுநேரத்திற்கு முன்னர்வரை இராணுவத்தினர் இருந்ததற்கான தடயங்கள் காணப்பட்டன. இவனுக்கு ஏதோ சந்தேகம் ஏற்பட்டது. மெல்ல முகாமின் உட்பகுதிக்குள் செல்கின்றான். அம்முகாமின் வெதுப்பகத்தில் நெருப்புத்தணல் காணப்படுகின்றது. ‘பாண்களும்’ அவ்வாறே கிடக்கின்றன. ஆள் நடமாட்டம் தான் இல்லை. பூரணமாக விளங்கிவிட்டது. அங்கிருந்தவர்களுக்கான முன்னறிவிப்பு இன்றியே அம்முகாம் பின்வாங்கப்பட்டு விட்டது என்பது. இரவோடு இரவாக பலவாயிரம் இராணுவம், கடற்படையினர் இருந்த முகாம் வெறுமையாகிவிட்டது. இது எங்களுக்குத் தெரியாமல் இருந்து விட்டது? என தன்னுள் எண்ணியவன் தொடர்பெடுத்து தனது முகாம் பொறுப்பாளருக்கு நிலைமையை அறிவிக்கின்றான். மேலும் உறுதிப்படுத்தும்படி அவர் கேட்கதான் உறுதிப்படுத்தியவற்றைத் தெரிவித்தான். முகாம் பின்வாங்கும் முடிவெடுத்த முலோபாய முடிவுகள் எடுக்கும் எதிரித்தளபதிக்கு பாராட்டுக்களை தெரிவித்தபடி வெளிவருகின்றான்.

‘ஜெயசிக்குறு’ இராணுவ நடவடிக்கை மூர்க்கமுடன் தொடர்கின்றது. அதனைத் தடம்புரளச் செய்யும் தந்திரோபாய நடவடிக்கையாகவும் போராட்டத்தின் அடுத்தகட்டப் பாய்ச்சலாகவும் கிளிநொச்சி இராணுவ முகாம் வீழ்த்தப்பட வேண்டும். இந்நடவடிக்கையின் வெற்றியை உறுதிப்படுத்தவும், வேகப்படுத்தவும் என கரும்புலிகள் போரணியொன்று ஆனையிறவு இராணுவத்தளத்தினுள் ஊடுருவியது. இவர்களின் இலக்காக ஆனையிறவு தளத்தினுள் குழப்பத்தினை ஏற்படுத்துவதன் மூலம் கிளிநொச்சி இராணுவத்தினருக்கான விநியோகத்தைத் தடுப்பது, கட்டளைகளைக் குழப்புவது என்பன அமைந்திருந்தது. கொமாண்டோ பாணியிலான உட்தாக்குதல் ஆரம்பித்துவிட்டது. பூட்டோவினால் எதிரி முகாமின் மையத்திலிருந்த தொலைத் தொடர்புப் பகுதி செயலிழக்கச் செய்யப்பட்டது. இவனது அணித்தலைவர்கள் வீரச்சாவடைய இவனும் இடது கையில் காயப்பட்டு என்பு முறிவிற்குள்ளாகினான். இதனால் சார்ச்சர் பட்டியை இழுத்துக் கொழுவித் தன்னைத்தானே தகர்த்து அழிக்கும் முயற்சி சாத்தியமற்றுப் போனது. எனவே தப்பிக்கும் முடிவெடுக்கின்றான். உள்ளே காயமடைந்திருந்த ஏனைய வீரர்களையும் வெளிக்கொண்டுவர இவனது தலைமைத்துவம் கை கொடுக்கின்றது. கிளிநொச்சியைக் கைப்பற்றும் அத்தாக்குதல் அப்போது வெற்றியடையாமல் போனது. எனினும் பெரும்பாலான கரும்புலிகள் வெற்றிகரமாக தமது இலக்கை நிறைவுசெய்து தளம் திரும்பியிருந்தனர். கை என்பு முறிவுக்காயம் மாறுவதற்காக சில காலம் மருத்துவமனையிலும் முகாமிலும் ஓய்வெடுத்தான். அக்காலப் பகுதியில் தன்னுடன் பணியாற்றி வீரச்சாவடைந்த கரும்புலிகள் பற்றி கவிதைகளையும் இசைப் பாடல்களையும் எழுதி வெளியிட்டிருந்தான். புலிகளின் குரல் வானொலியில் பல கவியரங்குகளில் இவன் குரல் ஒலித்திருந்தது. மீண்டும் பயிற்சிகள் எடுத்து அடுத்த தாக்குதலுக்கு தயாராகினான்.

மீண்டுமொரு முறை கிளிநொச்சி இராணுவத்தளம் தாக்கியழிக்கப்படும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு ஆதரவாக இம்முறையும் ஆனையிறவினுள் ஊடுருவியிருந்த கரும்புலிகள் அணியில் பூட்டோ காணப்பட்டான். அப்பொழுது பூட்டோவிற்கு பாம்பு கடித்து விட்டது. நஞ்சு இரத்தத்தில் கலக்க மரணம் இவனை நோக்கிவந்தது. எனினும் பகை முகாமினுள் பற்றையொன்றினுள் வைத்து விசமுறிப்பு மருந்து (ASV) ஏற்றப்பட்டது. மீண்டுமொருமுறை சாவிலிருந்து தப்பித்துக் கொள்ள தமிழீழம் ஒரு பெறுமதியான கரும்புலியை மீளப்பெற்றுக்கொண்டது. அத்திட்டம் வெற்றிபெற கிளிநொச்சி நகரம் விடுவிக்கப்பட, ஓ.அ.II வெற்றி உறுதிப்படுத்தப்படுகின்றது.

மீண்டும் கடின தொடர்பயிற்சிகளை மேற்கொள்கின்றான். அக்காலத்தில் அவசியம் தேவைப்பட்ட ஒரு வெற்றியைப் பெறுவதற்காக
தலைவரின் ஆசிபெற்று நகரும் கரும்புலியணியில், இலக்கின் மீதான தாக்குதல் தொடுக்கும் பொறுப்பை ஏற்று இணைந்துகொள்கின்றான். இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டு அதிஉயர் பாதுகாப்புடன் பேணப்படும் மணவாளன்பட்டை எனும் இடத்தில் தரையிறங்கும் உலங்குவானூர்தியைத் தாக்கி அழிக்க வேண்டும். பல்வேறு சிரமங்களைத் தாண்டி குறித்த இடம்சென்று பகைவர்களுக்குள் ஓடிச்சென்று அவர்களுக்கு மத்தியில் நின்று அவர்களின் கண் முன்னால் தரையிறங்க முற்பட்ட உலங்கு வானூர்தியை வானில் வைத்தே ‘லோ’ உந்துகணையால் தாக்கியழித்து பயத்திலும் அதிர்ச்சியிலும் உறைந்து நிற்கும் எதிரிகளின் மத்தியில் இவனும் ஏனைய வீரர்களும் தப்பிவந்த செயலானது கரும்புலித் தாக்குதல் வரலாற்றில் புதிய அத்தியாயமாகச் சேர்க்கப்பட்டது.

இடைக்காலத்தில் திருகோணமலை மாவட்டத்தில் இராணுவ கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை வேவு எடுக்கப் பணிக்கப்பட்டான். அங்கு மக்களோடு மக்களாகவும் கரந்துறைந்திருக்கும் ‘கெரில்லா’ வீரனாகவும் செயற்பட்டு பல பெறுமதியான வேவுத் தகவல்களைச் சேகரித்திருந்தான். களங்களினுள் செல்லும்போது முன்னும் களம் விட்டகலும்போது இறுதியாகவும் வெளிவருவது இவனது இயல்பான பண்பு. இவன் தலைமையில் சேகரிக்கப்பட்ட தகவல்களுடன் வன்னித்தளம் திரும்புமாறு பணிக்கப்பட்டான். இவர்களுக்கென ஒரு சாதாரண மீன்பிடிப் படகு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அதில் இவனும் அறிவுக்குமரனும் ஏற முற்படுகையில் சற்றுநிதானித்தவன் அத்திட்டத்தைக் கைவிடுகின்றான். இவரும் ஒன்றாகப் போய் ஏதாவது நடந்தால் இவ்வளவு நாளும் கடினப்பட்டு சேகரித்த தகவல்கள் செல்லாக்காசு ஆகிவிடும். ஆதலால் அறிவுக்குமரனை முதலில் போகச்சொல்கின்றான். படகில் ஏறியவனிடம் இரண்டு கைக்குண்டுகளைக் கொடுத்துவிடுகிறான். அந்த துர்ப்பாக்கிய நிகழ்வு நடந்தே விடுகின்றது. எதிரிப் படகுகள் அறிவுக்குமரனின் படகை வழிமறித்தன பகைவன் சோதனையிட முயற்சிக்கையில் அறிவுக்குமரன் குண்டுகளை வெடிக்கவைத்து தன்னையும் படகையும் அழித்துக்கொண்டான். பூட்டோ எடுத்த முடிவால் வேவுத்தகவல்கள் பத்திரமாக வன்னித்தளம் வந்து சேர்ந்தது. அவர்களின் கோட்பாட்டின்படி பூட்டோவின் தீர்மானமானது முற்றிலும் சரியானது எனினும் உணர்வு ரீதியாக பூட்டோவை இது பாதிக்கவே செய்தது. அறிவுக்குமரனுக்குப் பதிலாகத் தான் வந்திருக்கலாமோ என அடிக்கடி கூறிக்கொள்வான்.

'கரும்புலிகளின்’ வளர்ச்சிப் போக்கில் இவனது பங்களிப்பின் காரணமாக கரும்புலிகள் சம்பந்தமான விதிமுறைகளை எழுதுவதிலும் அதனைப் பரீட்சிப்பதிலும் இயக்கம் இவனை ஈடுபடுத்தலானது. இவன் தனது நடைமுறைச் செயற்பாடுகளினூடாக கோட்பாடுகளை உருவாக்கினான். கரும்புலிகளுக்கான சத்தியப் பிரமாணம், பயிற்சிகள், ஒத்திகைகள், விதிமுறைகள் அடங்கிய மரபு சார் யாப்பை உருவாக்கப் பெரும் பங்களிப்பைச் செய்தான். இவனது தொடர் அனுபவமும் செயற்பாடும் காரணமாக கரும்புலிகளுக்கான இலக்கங்கள் ஒதுக்கப்படும்போது இவனுக்கு க.1 ஒதுக்கப்பட்டது. அன்று முதல் இவன் ‘நம்பர் வண்’ எனும் சங்கேத பாசையில் அழைக்கப்படலானான்.

பல்வேறு தரத்திலான போராளிகளுடனும் வயது வேறுபாடுடைய பொதுமக்களுடனும் இவன் பழகும் முறை வித்தியாசமானது.
அந்தந்த வயதுக்காரர்களுடன் அவர்களின் குணாம்சங்களுடன் பழகினான். தனது அதிக ஓய்வு நேரங்களை சிறு குழந்தைகளுடனேயே செலவழித்தான். அவர்களுக்குச் சித்திரம் வரையப் பழக்குவதிலிருந்து பரீட்சைகளில் சித்தியடைய என்ன செய்யவேண்டும் என்பது வரை நடைமுறைச் சாத்தியமான வகையில் சொல்லிக்கொடுப்பான். எந்த நேரமும் இந்த நாட்டிற்காக வெடிக்கக் கூடிய கரும்புலி ஒருவனே தங்களுடன் பழகுகின்றான் என்பது அவர்களுக்குத் தெரிந்தே இருந்தது. எனினும் அதனை இவன் ஒருபோதும் ஒத்துணர்வைப் பெறுவதற்காகப் பயன்படுத்தியதே இல்லை.

ஓயாத அலைகள் IV வெற்றி பெறுவது அசாத்தியமானது. ஒரு வேவுப்புலி வீரனோ ஒரு கரும்புலி வீரனோ பகை தொடர் காவலரண்களைக் கடந்து உள்நுழைவது முடியாமல் போனது. உள் நிலைமைகளை அவதானித்து உட்புறமாகத் தாக்குதல் தொடுத்தால் மட்டுமே எதிரி குழப்பமடைவான். பலரால் இயலாமல் போகையில் மீண்டும் பூட்டோ தெரிவானான். கரும்புலிகளால் ஒரு முன்முயற்சி இயலாமல் போனது எனும் வார்த்தையை கேட்கவே அவன் விரும்பவில்லை. பொதிசெய்யப்பட்ட சிறு ஆயுதங்களுடனும், உணவுப்பொருட்களுடனும் கடலினுள் இறங்கினான். கரையோரமாக நீண்ட தூரம் நீந்திச்சென்றான். கடற்கரை பூராகவும் இராணுவமும், கடலில்கடற்படையும் அதியுசார் நிலையில் நின்றது. கடலினுள் பகைப் படகுகள் ரோந்து செய்தவண்ணம் இருந்தன. கரையேறுவதோ கடலில் ஆழம் செல்வதோ சாத்தியமற்றதானது. மீண்டும் தளம் திரும்புவதை அவன் கற்பனைகூடச் செய்யவில்லை. செய் அல்லது செத்துமடி என்பதுவே இவனது தாரக மந்திரமானது. சாதகமான சூழலுக்காகக் கடலில் மிதந்தபடியே காத்திருக்கலானான். பாரங்களைக் குறைப்பதற்காக உணவுப் பொருட்களையும் ஆயுதங்களையும் கழற்றி விடலானான். தொலைத்தொடர்பு சாதனமும் ‘G.P.S ம் குப்பியும் மட்டுமே அவனிடம் மிஞ்சியிருந்தது. இரண்டு நாட்களாக கடல் நீரில் மிதக்கலானான். பசியும், தாகமும், கடல் நீரின் உப்புச் செறிவும் அவனைச் சித்திரவதை செய்தது. தண்ணீரில் மிதந்தபடி தண்ணீர் இன்றித் தாகத்தால் தவித்தான். அவனையும் மீறி வெளிவந்த கண்ணீரைத் தண்ணீராகச் சுவைத்தான். தாயையும் தலைவனையும் நினைத்து நினைத்து தாங்குதிறனை வளர்த்து, யுகங்களாகும் கணங்களைக் கழித்தான்.

பூட்டோ தடயமின்றி வீரச்சாவடைந்து விட்டானோ எனப் பெரும்பாலானோர் கருதத்தொடங்கினர். ஒருவாறு எதிரி முகாமிற்குள் புகுந்துகொண்டான். புற்களில் நனைந்திருந்த பனி நீரை நாக்கால் நக்கி நாக்கிற்கு தண்ணீர் காட்டிக்கொண்டான். உட்சென்றவன் தொடர்பெடுத்து தான் உயிருடன் இருப்பதை உறுதிப்படுத்தினான். அவன் கொடுத்த ஆள்கூற்றுத்தளங்கள் மீது எங்கள் ஆட்லறிகள் வீழ்ந்து வெடிக்கத் தொடங்கின. பத்திற்கு மேற்பட்ட ஆட்லறிகளும் பல பல்குழல் பீரங்கிகளும், ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான எறிகணைக்களஞ்சியங்களும் அழித்தொழிக்கப்பட்டன. உணவின்றி, ஆயுதமின்றி, பூஞ்சணம்பிடித்த பூசணிக்காயைத் துண்டுதுண்டாகச் சாப்பிட்டவாறு, உயிரையும் இயங்கு சக்தியையும் தக்கவைத்தவாறு பலநாள் பணி தொடர்ந்தான். தனியான இவன் பகைத் தளத்தினுள் கரும்புயலாகச் சுழன்றான். பெரும் படையணி புகுந்ததாக செயலாற்றி நாசம் ஏற்படுத்தினான்.

தொலைத் தொடர்பை இடை மறித்ததில் பூட்டோ தனியாகத்தான் செயற்படுகின்றான் என்பதை பகைவன் அறிந்துகொண்டான். இவனைப் பிடிப்பதற்கு பலநூறு இராணுவத்தினரையும் பல உந்துருளி அணிகளையும் களத்தில் இறக்கி களைத்துப் போனான் எதிரி. இறுதியாக இவனை மீட்டுவர இன்னொரு கரும்புலியணி உள்நுழைக்கப்பட்டது. அப்பிரதேசம் இவனுக்குத் தண்ணிபட்ட பாடாக இருந்ததால் அவர்களையும் அழைத்துக்கொண்டு இருபத்தியாறாம் நாள் இவன் வெளியில் வந்தான். மெலிந்து, நோய்வாய்ப்பட்டு சிறிதளவு திரவ ஊடகங்களைக் கூட உட்கொள்ள முடியாத அளவிற்கு உதடுகளும் நாக்கும் வெடித்து, எலும்பும் தோலுமாக அவன் வெளிவந்த காட்சி காண்பவர் கண்களைக் கசிய வைத்து.

தொடர்ந்து நிமோனியாக் காய்ச்சலுக்கு உள்ளானான். சிலவாரங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டவன் மீண்டும் பணிக்கு ஆயத்தமாகினான். அக்காலப் பகுதியில் இவன் முள்ளியவளைப் பகுதியில் தங்கியிருப்பதை அறிந்து இவனது தாய் மகனைச் சந்திப்பதற்காக மன்னாரில் இருந்து பேருந்தில் வந்திறங்கினார். அங்கு தென்பட்ட பெண் போராளிகளிடம் ஷபூட்டோ தங்கியிருக்கும் மருத்துவமுகாம் எதுவென கேட்க,
"யாரு கரும்புலி பூட்டோவா?"
என அவர்கள் கேட்டு முகாமிற்கு வழிகாட்டி விட்டனர். தாயும் மகனும் சந்தித்த அந்தக் கணங்கள் அவர்களுக்கே உரித்தானவை. பலவருடங்களாக மகன் கரும்புலி என்பது தாயிற்குத் தெரியும். தாய்க்குத் தெரியும் என்பது மகனிற்கும் தெரியும். ஆயினும் இருவரும் ஒருபோதும் அதுபற்றிக் கதைத்தது இல்லை. மகன் தான்பட்ட கடினங்களைக் கவிதைகளாக எழுதியிருந்தான். அவற்றை வாசித்த அன்னையின் கண்கள் நீர் சொரிந்ததை அருகிருந்தவர்கள் பார்த்தார்கள்.

அடுத்த பணிக்காக இவன் தயாராகிக்கொண்டிருக்கையில் தலைவரிடம் இருந்து தகவல் வருகின்றது, உலங்குவானூர்தி தாக்குதல் சம்பவத்தைப் படமாக எடுக்கும்படி பணித்திருப்பதாகவும் அதில் அவன் செய்த பாத்திரத்தை இவனையே நடிக்கும்படியும். விடுதலைப்புலிகள் சொல்லுக்கு முந்திச்செயலை வைத்திருப்பவர்கள். செய்தவற்றையும் சொல்லாமல் விடுபவர்கள். இக்குணாம்சத்தினால் வரலாறு திரிந்துவிடக்கூடாது என்பதற்காக தாக்குதல் செய்தவனையே அப்பாத்திரமாக நடிக்கச்சொன்னார்கள். வன்னிமண் பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டிருந்த காலம். திரைப்படம் எடுப்பதற்கான போதிய வளங்கள் இல்லை. ஆயுத தளபாடங்களையும், துணைப்பாத்திரங்களுக்குத் தேவையான ஆளணிகளையும் இவனே ஒழுங்குபடுத்தி படப்பிடிப்பை விரைவாக்கினான். படப்பிடிப்பின் நிமித்தம் பல்வேறு தரப்பினர்களுடனும் பழகவேண்டி ஏற்பட்டது. படப்பிடிப்பு நிறைவேறும் நிலையில் மீண்டுமொரு சிறு தவறு ஏற்பட்டது. உள்ளூர் முகவர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் பூட்டோ விளக்கம் கோரலுக்கு உள்ளாக்கப்பட்டான். பலர் எதிர்பார்த்ததற்கு மாறாக தேச நன்மைக்காக உருவாக்கப்பட்ட பொறி முறைக்கு ஒத்துழைப்பதையும் தனது கடமைகளில் ஒன்றென வெளிப்படுத்தினான். இவன் நடித்த திரைப்படம் "புயல் புகுந்த பூக்கள்"என வரலாற்றுப் பதிவானது. இக்காலப் பகுதியில் வெளிச்சம் பவள இதழில் இவனது உள் நடவடிக்கைகள் பற்றிய ஒரு சம்பவத்தை புயலவன் எனும் பெயரில் எழுதியிருந்தான்.

தொடர்ந்து தேசத்திற்கான இவன் பணி தியாகத்தின் உச்சம் நோக்கி வேக மெடுத்தது. மறைமுகக் கரும்புலியாகச் செயற்படத் தொடங்கினான். அரசியல் தெளிவும், இலட்சியப் பற்றும், செயல்திறனும், நிதானமும் உள்ள போராளியாக இவன் ஒளிவீசினான். இவனது பன்முகத்திறமை மறைமுகக் கரும் புலிகளை பலமடங்காகப் பலம்பெறச் செய்தது. இவனதுசிலவருடச் செயற்பாடுகள் வெளித்தெரிய முடியாதவையாகின. ஆனால் தமிழினம் அதனை அனுபவித்துக்கொண்டிருக்கின்றது. சுதந்திர தமிழீழத்தின் பலமான அத்திவாரத்தினுள் இவனது உழைப்பு கலந்திருக்கின்றது. மாவிலாறைச் சாட்டாக வைத்து எதிரி யுத்தத்தைத் தொடங்கினான். முகமாலையைத் தாண்டி ஆனையிறவு நோக்கி எதிரி முன்னேறத் திட்டமிட்டிருக்கிறான். சம்பூர் மீது பெரும் இராணுவ அழுத்தத்தைப் பிரயோகிக்கின்றான். இராணுவத்தை திசைதிருப்பவும் குழப்பவும் அவசரமாக நடவடிக்கையில் இறங்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பலமுறை தலைவனுக்கு தடைநீக்கியாகச் செயற்பட்ட பூட்டோ இம்முறையும் முதல் தெரிவானான். தலைவருடனும், தளபதிகளுடனும் தொடர் சந்திப்புக்களை மேற்கொண்டான். ஓகஸ்ட் ஆரம்ப நாட்களில் ஒரு நாள் இரவு இரண்டு மணியளவில் தலைவரிடம் இறுதி விடை பெற்றுக்கொண்டான். மறைமுகக் கரும்புலி மீண்டும் தரைக் கரும்புலியாக யாழ்ப்பாணத்திற்குள் பிரவேசித்தான். பாரிய இராணுவத் திருப்புமுனைச் சாதனைகள் எதிர்பார்க்கப்பட்டுக்கொண்டிருந்தது. ஆனால் சில நாட்களில் செய்திவந்தது. "நம்பர் வண்" தொடர்பு இல்லை என. இம்முறையும் தப்பிவருவான் என அவனைத் தெரிந்த அனைவரும் நம்பியிருந்தனர். ஆனால் பூட்டோ வீரச்சாவு உறுதியான செய்தியுடன் 2006ஆம் ஆண்டு மாவீரர்தினம் கொண்டாடப்பட்டது.

ஒரு வேவுப் புலி நிபுணனை, வரைபடக் கலைஞனை, ஒரு கரும்புலிக் கவிஞனை, பாடலாசிரியனை, எழுத்தாளனை, நடிகனை, உச்சவினைத்திறனுடைய அப்பழுக்கற்ற செயல்வீரனை, போராளிகளுக்கான ஒரு உதாரண புருசனை, பட்டறிவால் உருவான போரியல் ஞானியை, எல்லாவற்றுக்கும் மேலாக தேசத்தையும், தலைவனையும் நேசித்த ஒரு "நம்பர் வண்" ஐ தமிழீழம் பௌதீக ரீதியாக இழந்துவிட்டது. எனினும் தலைமுறைகள் கடந்து கடத்தப்படும் அவனது செயல் வீச்சுக்களின் விளைவாக சுதந்திர தமிழீழம் விடுதலை பெற்று, வளம்பெற்று தலைநிமிர்ந்து எங்கள் பெயர் சொல்லி வாழும்.

குறிப்பு :- இவனது செயற்பாடுகளில் சிலவற்றை மட்டும் இப்பகுதி கோடிகாட்டுகின்றது. காலம் கைகொடுக்கையில் இவன் வீரகாவியமாக விரிவான்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நன்றி: விடுதலைப்புலிகள் மாசி-2007

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கரும்புலி லெப்.கேணல் பூட்டோ நடித்த 'புயல் புகுந்த பூக்கள்' என்ற முழுநீளத் திரைப்படம் 2005 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதில் 'பூட்டோ' என்ற பேரிலேயே வரும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அது மணவாளன்பட்ட முறிப்பில் கரும்புலியணியால் உலங்குவானூர்தியொன்று தாக்கியழிக்கப்பட்ட சம்பவத்தைக் கொண்டு தயாரிக்கப்பட்டது. அத்தாக்குதலில் பங்குபற்றிய ஐந்து கரும்புலி வீரர்களில் நால்வர் வெவ்வேறு சம்பவங்களில் வீரச்சாவடைய எஞ்சியிருந்த ஒரேயொரு வீரன் இந்த பூட்டோ மட்டுமே. தற்போது அவரும் வீரச்சாவடைந்து விட்டார்.


பூட்டோ 'கலையரசன்' என்ற பேரில் கவிதைகள் எழுதினார். சில பாடல்களும் எழுதியிருக்கிறார். சக கரும்புலி வீரன் மேஜர் நிலவனுக்காக இவர் எழுதிய பாடலான 'உணர்வின் வரிகள் வரையும் கோடு' என்ற பாடல் அவற்றுள் முக்கியமானது.

Labels: , ,

Sunday, February 25, 2007

கடலில் மேலாண்மை விடுதலைப் போரைத் தீர்மானிக்கும்

-க.வே.பாலகுமாரன்-
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தமிழர் தாயகத்தின் தென்பகுதி சிறிலங்காவுடன் நீண்ட தரை எல்லையைக் கொண்டிருப்பினும், இலங்கைத் தீவைச் சூழவுள்ள கடற்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு கரையோரத்தையும் எல்லையாகக் கொண்டுள்ளது. இலங்கைத் தீவில் 1770 கிலோ மீற்றர் நீளமான (தீவுகள் நீங்கலாக) கரையோரத்தில் மூன்றில் இரண்டு பங்கு தமிழர் தாயகப் பகுதிக்குள் உட்பட்ட தாகவுள்ளது.

அத்தோடு, தமிழர் தாயகத்தின் பெரும்வளம், கடற்பிராந்தியத்திலேயே உள்ளது. இன்றைய நிலையில் பெட்ரோலியப் படிமங்களில் இருந்து பெரும் மீன் வளம் வரையில் - அதாவது கனி வளத்திலிருந்து உயிரியல் வளம் வரையிலான பெரும்வளம் கடற்பரப்பிலேயே கொட்டிக்கிடக்கின்றது.

இவற்றை நீண்ட காலமாக அனுபவித்து வரும் சிறிலங்கா ஆட்சியாளர்கள் இன்று அவற்றைத் தமிழ் மக்களின் அனுமதியோ, ஒத்துழைப்போ இன்றி சில நாடுகளுக்குப் பகிர்ந்தளிக்கவும், விற்பனை செய்யவும் முற்பட்டுள்ளனர். சுருக்கமாகக் கூறுவதானால், எமது இயற்கை வளத்தை விற்றுப் பெறும் பணத்தில் எமது இனத்தையே அழித்துவிடக்கூடிய யுத்த நடவடிக்கையில் சிறிலங்கா அரசாங்கம் முனைப்புக் காட்டுகின்றது.

இது ஒருபுறம் இருக்க, தமிழர் தாயகத்தின் விடுதலைக்கான போராட்டத்தில் கடல் வகிக்கப்போகும் பங்கு மிகவும் காத்திரமானதாகவே நிச்சயம் இருக்கும். குறிப்பிட்டுக் கூறுவதானால், கடலில் இடம்பெறக்கூடிய பெரும் சமர்கள் போராட்டத்தை நிர்ணயிக்கும் ஒன்றாக இருக்கும் எனக் கூறின் மிகையாகமாட்டாது.

உலக வரலாற்றில் நீண்ட காலமாகவே கடலை ஆள்பவன் உலகை ஆள்வான் என்ற கேட்பாடு இருந்து வருகின்றது. இது வரலாற்று ரீதியில் நிரூபிக்கப்பட்டதொன்று. கடலானது ஒரு தேசத்தின் பாதுகாப்பிற்கானதாகவும் உள்ளது. அதேசமயம், பலவீனமானதாகவும் உள்ளது.

உலக போரியல் வரலாற்றில் பெரும் கடற்படையைக் கொண்டுள்ள நாடுகளே வல்லரசுகளாகக் கோலோச்சியுள்ளன. இது சோழப் பேரரசில் இருந்து பிரிட்டிஷ், அமெரிக்க சாம்ராஜ்யங்கள் வரையில் பொருத்தப்பாடானதே.

சில சாம்ராச்சியங்களின் எழுச்சியும், சில சாம்ராஜ்யங்களின் வீழ்ச்சியும்கூட கடற் போரினால் தீர்மானிக்கப்பட்டது. எடுத்துக்காட்டாகப் பிரிட்டிஷ் கடற்படைக்கும் - ஸ்பானியக் கடற்படைக்கும் இடையில் நடந்த ~அமெடா கடற்போர் தோல்வியினால் ஸ்பானிய சாம்ராஜ்யம் சரியத் தொடங்கப் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் விரிவாக்கம் பெறத் தொடங்கியது. சூரியன் மறையாத சாம்ராஜ்யம் ஒன்றை பிரிட்டனால் ஸ்தாபிக்க அதன் வலுமிக்க கடற்படை காரண மாகியது.

இன்றுகூட ஈராக் - அமெரிக்கப் போரில் அமெரிக்க கடற்படை வகிக்கும் பாத்திரத்தைச் சுட்டிக்காட்ட முடியும். தரையில் ஒரு தளப்பிரதேசம் இன்றியே செயற்படத்தக்க அளவில் அமெரிக்கக் கடற்படை செயற்பட முடியும் என்பதை வளைகுடாப் போர் அதாவது, ஈராக் கிற்கு எதிரான போரில் அமெரிக்கக் கடற்படை நிரூபித்துள்ளது.

நெப்போலியனும், ஹிட்லரும் பெரும் வெற்றிகளைத் தமது இராணுவம் மூலம் ஈட்டியிருப்பினும் அவர்களினால் கடற்பரப்பில் குறிப்பாக, அத்திலாந்திக்கின் வடகிழக்குக் கடற்பிராந்தியத்திலும், ஆங்கிலக் கால்வாயிலும் தமது ஆதிக்கத்தை நிலைநாட்ட முடியாமல் போனதே அவர்களின் தோல்விக்கு அடிப்படையாக அமைந்த முக்கியமான காரணிகள் எனக் கூறின் மிகையாகாது. அதாவது, நெப்போலியனும், ஹிட்லரும் கடற்போரில் சந்தித்த தோல்விகள் அவர்களின் ஒட்டுமொத்தத் தோல்விக்கு அடிப்படையாகின. சிறிது காலமாயினும் ஆங்கிலக் கால்வாயும் வடகிழக்கு அத்திலாந்திக்கும் அவர்கள் வசம் இருந்திருப்பின் இன்றைய உலக வரலாறே மாறியிருக்கும்.

இதேவேளை, தமிழர் தாயகத்திற்கான விடுதலைப் போரில் சிறிலங்காக் கடற்படைக்கும் கடற்புலிகளுக்கும் இடையில் இடம்பெற்று வரும் சமர்கள், இடம்பெறப்போகும் சமர்கள் விடுதலைப் போரின் பெரும் வெற்றி தோல்விகளைத் தீர்மானிப்பவையாக இருக்கும் எனத் துணிந்து கூறமுடியும். விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி கேணல் சூசை குறிப்பிட்டதுபோல் 'ஈழப் போரின் இறுதிச் சமர் கடற்சமராகவே இருக்கும்" எனக் கூறப்பட்டமைகூட மிகையானதொன்றாக இருக்கமாட்டாது.

**

மேற்கூறப்பட்ட விடயங்கள் சிறிலங்கா அரச தரப்பாலும் - விடுதலைப் புலிகளினாலும் நன்கே விளங்கப்பட்டதொன்றாகவே உள்ளது. இதன் அடிப்படையில், சிறிலங்கா கடற்படையும், விடுதலைப் புலிகளும் தமது பலத்தை வளர்த்துக் கொண்டுள்ளனர்.

அரசு என்ற ரீதியில் சிறிலங்கா அரசாங்கம் ~சுதந்திரத்தோடு தனது கடற்படையையும் உருவாக்கி இருந்தது. ஆரம்பத்தில் இதன் முக்கிய பணி இந்தியாவிற்கும் - இலங்கைக்கும் இடையிலான கடத்தல் நடவடிக்கைகளை முறியடிக்கும் செயற்பாடு கொண்டதாகவே இருந்தது. அதன் பின்னர் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்துடன் அது படிப்படியாக வளர்ச்சி கண்டது.

இதேவேளை, கடற்புலிகளின் உருவாக்கமானது தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் - குறிப்பாக, விடுதலைப் புலிகள் மேற்கொண்ட ஆகாயக் கடல்வெளிச் (ஆ.க.வெ) சமரின் பின் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களால் பலம் மிக்கதானதொரு படையாகக் கட்டி வளர்க்கப்பட்டுள்ளது. விடுதலைப் போராட்டங்களின் வரலாற்றில் ஒரு முன்னுதாரணமான படையணியாக அது உள்ளதெனில் மிகையாகாது. இதன் சிறப்புத் தளபதியாக கேணல் சூசை அவர்கள் செயற்பட்டு வருகின்றார்.

சிறிலங்கா கடற்படைக் கட்டமைப்பைப் பொறுத்து, இலங்கைத்தீவின் கடற்பிராந்தியம் ஐந்து வலயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில், வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய வலயங்கள் தமிழர் தாயகக் கரையோரத்தை கொண்டவையாகவுள்ளன. மேல் மற்றும் தென் வலயங்கள் சிறிலங்கா கரையோரங்களை உள்ளடக்கியவையாகவுள்ளன.

இதில் வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் வலயங்களில் உள்ள கடற்படைத் தளங்களில் காரைநகர் (1955), திருமலை (1957) ஆகிய கடற்படைத் தளங்களைவிட ஏனையவையும், தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் முனைப்புப் பெற்ற பின்பு அதிலும் குறிப்பாக, விடுதலைப் போராட்டத்தில் கடற்புலிகளின் பிரவேசத்தின் பின்பு விரிவாக்கம் பெற்றவையாகும்.

இதேசமயம், கடற்புலிகளைப் பொறுத்து அவர்கள் வடகிழக்குப் பகுதியிலும், வட மேற்குப் பகுதியிலுமான கடற்கரைப் பிரதேசத்தில் தமது தளங்களைக் கொண்டுள்ளனர். குறிப்பாக, வடகிழக்கே, நாயாற்றில் இருந்து தாளையடி வரையிலான கடற்கரைப் பிரதேசத்திலும் வடமேற்குப் பகுதியில் மன்னார் மாவட்டத்தின் மேற்குக் கரையோரத்திலும் யாழ். மாவட்டத்தின் வடமராட்சிக் கிழக்குப் பிரதேசத்தின் கிழக்குக் கரையோரத்திலுமாகத் தமது தளங்களைக் கொண்டுள்ளனர்.

இதேவேளை, தமிழர் தாயகத்தைச் சூழவுள்ள கடற்பரப்பானது சகல பகுதிகளிலும் ஒரே வகையான கரையோரத்தையோ கடற்பரப்பையோ கொண்டதல்ல. ஒரு வகையில் பார்க்கப்போனால், பல விரிகுடாக்களையும், கடல் நீரேரிகளையும், முனைகளையும், தீவுகளையும் கொண்டதாக கடற்பகுதி உள்ளது. இதில் குடாக்கடல்களைப் பொறுத்து யாழ். கடல் நீரேரி மட்டுமே ஓரளவு ஆயினும் - அதாவது மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான படகுப் போக்குவரத்திற்கு உகந்ததாகும். ஏனைய கடல் நீரேரிகள் எவையும் இராணுவ நோக்கில் பயன்படுத்தப்பட முடியாத சிறுபரப்புக்களாகவே உள்ளன. இதேசமயம், நாச்சிக்குடா, முள்ளிவாய்க்கால் போன்ற விரிகுடாக்கள் கடற்படைகளின் செயற்பாட்டிற்கு ஒருபுறத்தில் சாதகமானi யாகவும், மறுபுறத்தில் பாதகமானவையாகவும் உள்ளன.

அத்தோடு, தமிழர் தாயகத்தைச் சூழவுள்ள கடற்பரப்பும் அதாவது, கரையோரம் மற்றும் கடல்பரப்பு, அவற்றின் சூழல் போன்றவையும் வேறுபடுபவையாகவுள்ளன. சுலபமாக இதனை விபரிப்பதானால், மூன்று வலயங்களாக இவற்றைப் பிரிக்கலாம்.

01. மேற்குக் கரையோரம்

02. வடகரையோரம்

03. கிழக்குக் கரையோரம்.

மேற்குக் கரையோரம் பல தீவுக்கூட்டங்களைக் கொண்டதும், பல குடாக்களைக் கொண்டதாகவும் உள்ளது. பிரதான நிலப்பரப்பிற்கு அண்மையாக அதிக ஆழமற்ற கடற்பரப்பைக் கொண்ட இப்பிரதேசமானது கடல் அடித்தளத்தில் சிறியளவிலான பாறைப் படைகளையும்; மணற்பாங்கான கடலடித்தரையும் கொண்டதாகும்.

இக்கடற்பிரதேசத்தைக் கண்காணிக்கவோ அன்றி இப்பகுதியில் போரிடுவதற்கோ ஆழம் குறைந்த கடற்பரப்பில் பயணிக்கத்தக்கதான கடற்கலங்கள் அதிகளவில் தேவைப்படுவதாக இருக்கும்;. இதேசமயம், குறிப்பிட்ட தொலைவிற்கு அப்பால், அதாவது, தீவுப்பகுதிகளின் மேற்குப் புறங்களில் ஆழ்கடல் பரப்பு காணப்படுவதால் பெரியளவிலான போர்க் கலங்களைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

ஆனால், அப்பிராந்தியத்தில் கரையோரங்களில் இருந்து சுமார் 10-20 கடல் மைல் தொலைவிற்கு அப்பால் இந்தியக் கடற்பரப்பு உள்ளதினால், சிறிலங்கா கடற்படையைப் பொறுத்து ஆழ்கடல் ரோந்து என்பது அப்பகுதியில் இடம்பெறுவது அரிதே ஆகும்.

இதேசமயம், இப்பகுதியில் உள்ள தீவுகளுக்கு இடையிலான கடற்பரப்பும், (நெடுந்தீவு போன்ற தொலைதூரத்தீவுகள் தவிர) யாழ். கடல் நீரேரி போன்ற குடாக்கடலும் மிகவும் ஆழம் குறைந்தவையாக உள்ளன. பெரும்பாலும் மணற்திட்டுக்களையும், இடையிடையே பாறைப் படைகளையும் கொண்டவையாக இவை இருப்பதன் காரணமாக இவை தனித்துவமான தன்மை கொண்டவையாக - பெரிய கடற்கலங்கள் பயணிக்க முடியாதவையாகவும் உள்ளன.

அடுத்ததாக, மேற்குக் கரையோரத்தில் மன்னாருக்கும் கற்பிட்டிக்கும் இடைப்பட்டதான கடற்பரப்பும் குறிப்பிடத்தக்கதானதொரு முக்கியத்துவத்தைப் பெறுவதொன்றாகவே இருக்கும். ஒரு விரிகுடா போன்ற தன்மையைக் கொண்ட இக்கடற்பரப்பின் அடித்தளம் மணற்பாங்கு கொண்டதாகவும் அதேநேரத்தில் தமிழீழக் கடற்பரப்பில் ஒரு தனித்துவமான பகுதி போன்றதாகவும் உள்ளது.

அதாவது, தலைமன்னாருக்கும் இந்திய தனுஷ்கோடிக்கும் இடையில் மணற்பாங்கான திட்டுக்கள் தொடராக உள்ளமையால் மேற்குக் கரையோரத்தின் வடபகுதி ஊடான போக்குவரத்திற்கு எவ்வேளையிலும் ஏற்றதான தன்மை இருப்பதாக இல்லை. அத்தோடு, இக்கடற்பரப்பானது அரபிக் கடலுடன் தொடர்பட்டதான தனித்துவமான தொன்றாகவே உள்ளது. ஆயினும் இதன் எல்லைகளும் இந்தியக் கடற்பரப்புடன் தொடர்புபட்டதாக இருப்பினும் கொழும்பிற்கு மேற்காகவுள்ள சர்வதேச கடல் மார்க்கத்தை இதனூடாக எட்டமுடியும்.

அடுத்ததாக வடகடற்பரப்பானது - பொதுவில் கரையோரத்திற்கு அண்மையாகவுள்ள முருகைக்கற்பாறைகள் இதில் முக்கியத்துவமுடையவையாகவுள்ளன. கரையோரத்தில் இருந்து சில நூறு மீற்றர் அளவிலும் அதற்கும் குறைவான தொலைவிலுள்ள இம் முருகைக் கற்பாறைகளினால் இக்கடற்கரைப் பிரதேசத்தில், கடற்கலங்கள் விரும்பிய இடத்தில் கரைசேர முடியாத நிலையே உள்ளது. இதனால், துறைமுக அன்றி இறங்குதுறை ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட இடங்களில் மட்டுமே கடற்கலங்கள் கரையை அடையக்கூடிய சாத்தியப்பாடான தன்மை உள்ளது.

இதேசமயம், இப்பகுதி குறிப்பிட்ட தொலைவிற்கு அப்பால் ஆழம் கூடிய கடற்பகுதியாகவும் கப்பல் போக்குவரத்திற்கு ஏற்றதாகவும் உள்ளதோடு, வடக்கே குறுகிய தொலைவில் இந்தியக் கடற்பரப்பைக் கொண்டதாகவும் உள்ளது. ஒட்டுமொத்தத்தில் மேற்கு மற்றும் வடக்கு கடற்பரப்பு அகன்ற கண்டமேடைப் பகுதியில் அமைந்துள்ளது.

இதற்கு அடுத்ததான பகுதி பருத்தித்துறையில் இருந்து தமிழர் தாயகத்தின் தென்கோடி வரை நீண்ட கரையோரமாகும். பல குடாக்களைக் கொண்டதான இக்கடற்பரப்பு ஆழம் மிக்கதாக இருப்பதோடு, தமிழர் தாயகத்தின் பிரதான துறைமுகமான திருகோணமலைத் துறைமுகத்தைக் கொண்டதாகவும் ஒப்பீட்டு ரீதியில் தமிழர் தாயகத்திற்கான விடுதலைப் போரில் அதிகூடிய முக்கியத்துவம் மிக்கதான கடற்பரப்பாகவும் உள்ளது.

கடற்பரப்பு பெரும்பாலும் மணற்பாங்கானதாக இருப்பதோடு, ஆழம் அதிகமானதாக இருப்பதன் காரணமாக, பாரிய கடற்கடலங்கள்கூட கரையோரத்தை அண்டிவரக் கூடியதானதொரு சூழ்நிலை இருப்பதோடு, கடற்பரப்பு, பரந்து விரிந்ததாக சர்வதேச கடற்பரப்புடன் தொடர்புடையதாக இருப்பதினால், கரையை அண்டாது தொலைவிலேயே பயணிக்கவும் வாய்ப்புக்கள் நிறையக் கொண்டதாகவும் உள்ளது.

இதேசமயம், இக்கடற்பரப்பினுள் வங்காள விரிகுடாவில் பயணிக்கும் அன்றி கொழும்பிலிருந்து அன்றி கொழும்பு நோக்கி மலாக்கா நீரிணை ஊடாகக் கப்பல்களில் பாதைகளை விரைவிலேயே எட்டமுடியும்.

இந்த வகையில், காணப்படும் தமிழர் தாயகக் கடற்பரப்பில் எதிர்காலத்தில் பல சமர்கள் இடம்பெறலாம் என்பது மட்டுமல்ல, தமிழர் தாயகத்தின் விடுதலையில் இக்கடற் சமர்கள் ஏற்படுத்தப்போகும் தாக்கம் முக்கியத்துவம் மிக்கவையாக, ஏன் தீர்மானிக்கும் சக்தி கொண்டவையாகவும் இருக்கும் எனக் கூறினும் மிகையாகமாட்டாது.

சிறிலங்கா கடற்படையினருக்கும் - கடற்புலிகளுக்கும் இடையிலான வலுச் சமநிலை மற்றும் மேலாதிக்கம் என்பதனை அவர்களின் ஆயுதத் தளவாடங்கள், ஆளணி என்பனவற்றைக் கொண்டு மதிப்பிடுதல் முடியாது. அது சாத்தியமானதொன்றும் அல்ல. பொருத்தப்பாடானதொன்றும் அல்ல. ஏனெனில், இருதரப்பினரின் பலம் தொடர்பான விடயங்களுக்கு தரவுகள் கிடைக்கப்பெறுதல் கடினம் என்பதோடு, ஆயுதத் தளவாடங்களும் ஒரே ரகத்திலானவையாகவும் இல்லை. அதேசமயம், போர் யுக்திகளும், தாக்குதல் வழிமுறைகளும் கூட ஒரு வகைப்பட்டவையாகவும் இல்லை.

ஆனால், இதுவரை சிறிலங்காக் கடற்படையினருக்கும் கடற்புலிகளுக்கும் இடையே நடந்துள்ள கடற்சமர்களின் அடிப்படையில் இருதரப்பினரதும் படைக்கலங்கள் அவற்றின் பாவனைகள் என்பன குறித்த சில மதிப்பீடுகளுக்கு வருதல் முடியும்.

சிறிலங்காக் கடற்படையைப் பொறுத்து அதன் பிரதான போரிடும் கலமாக 'டோறா" பீரங்கிப்படகுகள் உள்ளன. இஸ்ரேலிலும், உள்நாட்டிலுமாக தயாரிக்கப்பட்ட இவ் டோறா பீரங்கிக் கலங்கள் மிதக்கும் மினி முகாம் எனக் கூறத்தக்க வகையில் 20 எம். எம். பீரங்கிகள் உட்பட ஆயுத தளவாடங்களைக் கொண்டுள்ளன. இதுவரை கடற்புலிகளுடனான சமர்களில் தமது திறனை வெளிப்படுத்தியுள்ளன என்றே கருதப்படுகின்றது.

இவ்டோறா பீரங்கிக் கலங்கள் சிறிலங்கா கடற்படையைப் பொறுத்து கரையோர ரோந்து மற்றும் கடற்புலிகளுடனான சமர்களில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும் ஆழ்கடல் ரோந்திலும், தாக்குதலிலும் அவை தேவை ஏற்படும்போது பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படுகின்றன.

ஆழ்கடல் ரோந்துக்கெனச் சிறிலங்காக் கடற்படைப் பீரங்கிக் கப்பல்களைக் கொள்வனவு செய்திருப்பினும் அவை மோதல்களில் பெரும் பங்காற்றுவதாக இல்லை. அவை பெரும்பாலும் கண்காணிப்பாளர்கள் என்ற நிலையில் இருப்பதோடு, சிறிலங்கா கடற்படைக்கும் - கடற்புலிகளுக்கும் இடையிலான மோதல்கள் பெரும்பாலும் கரையோரத்தில் இருந்து சுமார் 30 கடல் மைல் தொலைவில் இருந்து இடம்பெறுவதினால் அவ் ஆழ்கடல் ரோந்துக் கப்பல்கள் சண்டைகளில் பங்குபற்றுவதோ அன்றிச் சிக்கிக் கொள்வதோ மிகவும் குறைவாகவே உள்ளது.

கடற்புலிகளைப் பொறுத்து உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட கலங்கள் வெளியிணைப்பு இயந்திரங்களுடன் பாவனையில் உள்ளன. 20 எம்.எம் பீரங்கிகள் மற்றும் தானியங்கி ஆயுதங்களைக் கொண்ட இப்பீரங்கிக் கலங்கள் சிறிலங்காக் கடற்படையினரிடம் உள்ள டோறா பீரங்கிக் கலங்களுடன் சண்டையிடும் வலுவைக் கொண்டவையாகவுள்ளன.

இதனைவிட சிறிய அளவிலான சண்டைப் படகுகளையும், விடுதலைப் புலிகள் தமது படையணியில் கொண்டுள்ளனர். வேகமான நகர்வு, இப்படகுகளின சிறப்பம்சமாக இருப்பதோடு, அர்ப்பணிப்பு மிக்கப் போராளிகளை அவை கொண்டவையாக இருப்பதினால் இப்படகுகள் பல தடவைகளில் தமது சக்திக்கும் மேம்பட்டதான காரியங்களைக் கூட ஆற்றுவதுண்டு.

இவற்றைவிட கடற்புலிகளிடம் சமர்களின் போக்கையே தீர்மானிக்கத்தக்கதாகவும், திருப்பத்திற்கு உள்ளாக்கக்கூடியதுமான கடற்கரும் புலிகள் அணி - அதாவது தற்கொடைத் தாக்குதல் அணி - ஒன்றும் உள்ளது. இதுவரையில் இக் கடற்கரும்புலி அணி கடற்சண்டைகளில் காத்திரமான பங்காற்றியுள்ளமை அறியப்பட்டதொன்றே.
சிறிலங்காக் கடற்படையினரைப் பொறுத்தும் சரி, விடுதலைப் புலிகளைப் பொறுத்தும் சரி அவை இரண்டு பணிகளை முக்கியமாக ஆற்றுகின்றன.

01. தமது கடல்வழி விநியோகங்களுக்கான பாதுகாப்பு

02. எதிர்த்தரப்பினரது விநியோகங்களைத் தடுத்தல்

இவை இரண்டும் இவ்விரு கடற்படையினரதும் முக்கிய பணியாகும். அதாவது, விடுதலைப் புலிகளுக்கு கடல்மார்க்கமாக இடம்பெறும் ஆயுத விநியோகத்தைத் தடுத்தலும், வடக்கிற்கும், கிழக்கிற்கும் இடையிலான போராளிகளின் போக்குவரத்து ஆயுத விநியோகம் என்பனவற்றை முடக்குதல் என்பது சிறிலங்காக் கடற்படையினரின் முக்கிய பணியாகும்.

இதேசமயம், யாழ். குடாநாட்டிலுள்ள சிறிலங்கா இராணுவத்தினரின் போக்குவரத்து, ஆயுத தளவாட விநியோகத்தை முடக்கத்திற்கு உள்ளாக்குதல் கடற்புலிகளின் பணியாக இருக்கக்கூடியதாகும். ஆனால், யுத்த நிறுத்தம் பெயரளவிலாயினும் அமுலில் இருப்பதன் காரணமாக, கடற்புலிகளின் நடவடிக்கைகளை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலானதாகவே மேற்கொள்ள வேண்டியுள்ளது.

ஆனால், யுத்தமொன்று முழு அளவில் மூளுமாயின் கடற்பரப்பில் மேலாதிக்கம் என்பது முக்கியத்துவம் மிக்கதொன்றாகவும், யுத்தத்தில் வெற்றி தோல்விகளைத் தீர்மானிக்கும் ஒன்றாகவும் நிச்சயமாக மாற்றமடையும் என்பதில் சந்தேகமில்லை. இத்தகையதொரு நிலையில் கடந்த ஆண்டில் இடம்பெற்ற மோதல்களின் அடிப்படையில் மதிப்பீடு ஒன்றை மேற்கொள்வது ஓரளவு பொருத்தப்பாடானதொன்றாகவே இருக்கும்.

***

கடந்த வருடத்தில் குறிப்பிடத்தக்க கடற்சமர்களில் மே - 11 ஆம் திகதி வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் இடம்பெற்ற மோதல், அதன் பின்னர் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி திருமலைத் துறைமுகப்பகுதிக்குள் இடம்பெற்ற மோதல்கள், செப்ரெம்பர் இரண்டாம் திகதி வடமராட்சிக் கடலில் சுமார் ஒன்பது மணி நேரம் நிகழ்ந்த உக்கிர மோதல், நவம்பர் மாதம் ஒன்பதாம் திகதி வடபகுதிக் கடலில் இடம்பெற்ற கடும்மோதல் என்பன கடல் மேலாதிக்கம் குறித்த விடயத்தில் முக்கியமான சமர்களாகக் கொள்ளத்தக்கவையாகும்.

இச்சமர்கள் குறித்து சுயாதீனமான செய்திகள் கிடைக்கப்பெறவில்லை. ஆயினும், சிறிலங்காக் கடற்படையினரின் தகவல்களின் அடிப்படையிலும், எம்மால் அறியப்பட்ட சில தகவல்களின் அடிப்படையிலும் இப்பிராந்தியத்தின் அதாவது வடக்கு மற்றும் கிழக்குக் கடற்பரப்பில் சிறிலங்காக் கடற்படையின் செயற்பாட்டைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் பலத்தைக் கடற்புலிகள் பெற்று வருவதாகவே கொள்ளமுடியும்.

இதனை மேற்குறிப்பிட்ட சமர்களின் முடிவுகளில் இருந்தே மதிப்பீடக்கூடியதாக இருக்கும். இதில் முதலாவதாக, சிறிலங்காவின் முக்கிய போரிடும் கலமான டோறா பீரங்கிப் படகுகள் செயல்திறன் மிக்கவையாக இருப்பினும், கடற்புலிகளினால் அவற்றை மோதலில் செயலிழக்கச் செய்ய முடியும் என்பதையே கடந்த ஒருவருட காலக் கடற்சமர்கள் நிரூபிப்பவையாகவுள்ளன. கடற்புலிகளுக்கும் - சிறிலங்கா கடற்படையினருக்கும் இடையிலான மோதல்களைக் கடற்புலிகளின் அதிவேகப் பீரங்கிப் படகுகளுக்கும் - டோறா அதிவேகப் பீரங்கிப் படகுகளுக்கும் இடையில் என்றுகூடக் கூறலாம்.

அதிலும் குறிப்பாக, திருமலையிலுள்ள டோறாப் பீரங்கிப் படகுகளின் தொகுதியே கடற்படையின் முனைப்பான போரிடும் அணியாகும். அடுத்தாக 'N;டாறா" பீரங்கிப் படகுகள் காங்கேசன்துறை துறைமுகத்தில் அதிகளவில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதேவேளை, சிறிலங்கா கடற்படைக்கும் கடற்புலிகளுக்கும் இடையிலான முக்கிய மோதல்கள் இவ்விரண்டு தளங்களுக்கும் இடையிலேயே நடைபெற்றுள்ளன என்பதும் சிறிலங்கா கடற்படையின் இரு தளங்களில் இருந்தும் 'டோறா" பீரங்கிக்கலங்கள் இதில் பங்கேற்றன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இச்சண்டைகள் யாவற்றிலும் சிறிலங்காக் கடற்படை தமது டோறா பீரங்கிக் கலன்கள் ஒன்றிற்கு மேற்பட்டவற்றை இழந்துள்ளது. அடுத்ததாக இச்சண்டைகள் பற்றிக் குறிப்பிடத்தக்க விடயமானது இச்சண்டைகள் யாவற்றிலும் களமுனையில் இருந்து சிறிலங்காக் கடற்படையினரே பின்வாங்கிச் சென்றுள்ளனர் என்பதாகும்.

அதாவது, சமர்களின்போது கடற்புலிகளின் மேலாதிக்கம் நிலைநாட்டப்பட்டமை காரணமாகவே சிறிலங்காக் கடற்படை விலகிக் கொள்ள வேண்டியதாகியது. இதனை வேறு சில நிகழ்வுகளும் ஊர்ஜிதம் செய்பவையாகவே இருந்துள்ளன.

எடுத்துக்காட்டாக, மே. 11 இல் நடந்த சண்டையின் போது இராணுவத்தினரை ஏற்றி வந்த ~வேல்ட்குறூசர் எனும் கப்பல் அப்பிராந்தியத்தில் இருந்து சர்வதேச கடற்பரப்பிற்குள் தப்பியோடியது. சிறிலங்காக் கடற்படைத்தரப்பும், அரச தரப்பும் இதனைப் பாதுகாத்துக் கொண்டமை தமது சாதனைஃ திறமை எனக் கூறிக் கொண்டாலும் உண்மையில் அக்கப்பல் தப்பிப்பிழைக்க ஓடி ஒழித்தது என்பதே உண்மையாகும். அக்கப்பல் குறித்து இரு நாட்களுக்கு அரசாங்கம் தகவல் வெளிவிட மறுத்ததில் இருந்தே கடற்படையும், சிறிலங்கா அரசு அடைந்த பீதியும் வெளிப்பட்டிருந்தது.

இத்தகையதொரு சம்பவம் மீண்டும் ஒரு தடவை இடம்பெற்றது. சிறிலங்கா கடற்படையினருக்கும் கடற்புலிகளுக்கும் வடமராட்சிக் கடலில் கடந்த நவம்பர் மாதத்தில் மோதல் ஒன்று மூண்டதையடுத்து இராணுவத்தினரை ஏற்றிய கப்பல் ஒன்று தன்னைக் காத்து இந்தியக் கடற்பிராந்தியத்திற்குத் தப்பியோடியது. ஆனால், இம்மோதலில் டோறாப் பீரங்கிக் கலன்கள் பலமாக அடிவாங்கின. ஆனால், அரசு கூறுவது போன்று மோதல்களின் போது விடுதலைப் புலிகளின் இலக்காக இக்கப்பல்கள் இருந்தனவா என்பது வேறு விடயம்.

இது ஒரு புறமிருக்க, சிறிலங்கா கடற்படைக் கலங்களைக் குறிப்பாக, டோறா அதிவேகத் தாக்குதல் கலன்களை முன்னர் கரும்புலித் தாக்குதல் ஊடாகத் தாக்கி அழித்து வந்த கடற்புலிகள் - தற்பொழுது நேரடிச் சமரின் மூலம் முடக்கத்திற்கு உள்ளாக்கித் தாக்கி அழிக்கும் அளவிற்கு முன்னேற்றம் கண்டுள்ளனர். கடந்த நவம்பர் மாதத்தில் வடமராட்சிக் கடற்பரப்பில் இரண்டு டோறா படகுகளை மூழ்கடித்து ஒன்றைப் பலத்த சேதத்திற்குள்ளாக்கிய தாக்குதலில் ஒரு கலத்தைக் கைப்பற்றி ஆயுதங்களை மீட்டபின் மூழ்கடித்தமையும், அதில் நான்கு கடற்படையினரைக் கைது செய்திருந்தமையும் கடற்சமரில் முக்கியமானதொரு அம்சமே ஆகும். அதாவது, கடற்புலிகளின் தாக்குதல் திறன் அதிகரித்ததன் வெளிப்பாடாகும்.

இவை ஒருபுறம் இருக்க, கடந்த ஒரு வருட காலத்திற்குள் சிறிலங்காவின் முக்கிய துறைமுகங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. இத்தாக்குதல்களுக்கு கடற்புலிகள் உரிமை கோராது விடினும், சிறிலங்கா அரசாங்கமோ கடற்புலிகள் இத்தாக்குதல்களை மேற்கொண்டதாகக் கூறுகின்றது.

அந்த வகையில் பார்க்கையில், கடற்புலிகளினால் சிறிலங்காவின் அனைத்துத் துறைமுகங்களையும் எட்டமுடியும் என்பது கடந்த ஆண்டில் உறுதி செய்யப்பட்டதாகியுள்ளது. இத்தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டதாக சிறிலங்கா அரசாங்கம் கூறிக்கொண்டாலும் தாக்குதல்களினால் துறைமுகத்திற்கும் சிறிலங்கா கடற்படைக்கும் துறைமுக நடவடிக்கைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டது என்பதை மறுக்க முடியாது.

காலித்துறைமுகம் மீதான தாக்குதலினால் போர்க் கப்பலான பராக்கிரமபாகு தரைதட்டிதை யும் ஒரு டோறா உட்பட இரு படகுகள் மூழ்கடிக்கப்பட்டதையும், கட்டிடங்கள் சேத மடைந்ததையும் அரசாங்கத்தால் மறுத்துவிட முடியவில்லை.

இதேவேளை, கொழும்புத்துறைமுகத்தின் மீதான தாக்குதலின்போது பெரும் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனக்கூறிக் கொண்டாலும் உண்மைகளை மூடிமறைத்து மூன்று டிங்கிப் படகுகள் மூழ்கடிக்கப்பட்டதாகவும், கப்பல் ஒன்று சேதத்திற்கு உள்ளானதாகவும் கூற வேண்டிய கட்டாயம் அரசிற்கு எழுந்தே இருந்தது.

அதேசமயம் கடற்புலிகளின் படகெனக் கூறி சிறிலங்காக் கடற்படை தாக்கி மூழ்கடித்தவை மீன்பிடிப் படகுகள் என்பதும் கைது செய்யப்பட்டவர்கள் நீர்கொழும்பு மீனவர்கள் என்பதும் பின்னர் ஊர்ஜிதம் செய்யப்பட்டவை ஆகின. இந்த நிலையில், கடற்புலிகள் கொழும்பு துறைமுகப்பகுதிக்குள் தாக்குதல்களை நடத்தியுள்ளனர் என்பது மட்டுமல்ல, சிலர் தாக்குதல் நடத்திவிட்டு திரும்பிச் சென்றுள்ளமையும் ஊர்ஜிதம் ஆகின்றது.

இவற்றைப் பார்க்கையில், கடந்த ஓராண்டு காலத்தில் சிறிலங்கா கடற்படையானது முழுவீச்சில் செயற்பட்டபோதும் கடற்படையினரின் நடவடிக்கைகளை தமிழர் தாயகக் கடற்பரப்பில் விடுதலைப் புலிகளால் கட்டுப்படுத்த முடியும் என்பது பெரும்பாலும் உறுதி செய்யப்பட்டதொன்றாகவே உள்ளது.

இதனைச் சிறிலங்காக் கடற்படையினரும், அதன் ஆலோசகர்களும் புரிந்துகொண்டுள்ளனர் என்பதையே அவர்களின் அண்மைக்கால நடவடிக்கைகள் உணர்த்துகின்றன. குறிப்பாக, கூறுவதானால், டோறா பீரங்கிக் கலங்களுக்கு 30 எம்.எம். பீரங்கிகள் பொருத்தும் நடவடிக்கைகளிலும் சமரின்போது சிறிலங்கா விமானப் படையின் உதவியைக் கோருவதும் இதன் விளைவுகளே ஆகும்.

ஆனால், இக்காலப் பகுதியில் இடம்பெற்ற மோதல்கள் பெரும்பாலும் மட்டுப்படுத்தப்பட்டவையே. இம்மோதல்கள் தமிழ் மக்களின் இறுதிப் போரின் அங்கமாக இல்லாது விடினும் அச்சமர்கள் பற்றிக் கட்டியம் கூறுபவையாகக் கொள்ளப்படத்தக்கவையே. இந்த ரீதியில் எதிர்காலத்தில் கடலில் இடம்பெறப்போகும் பெரும் சமர்களில் சிறிலங்காக் கடற்படை கடற்புலிகளிடம் இருந்து பெரும் சவாலை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். இது நெப்போலியனுக்கு டிரல்பல்கார் போன்றதாகவோ, ஸ்பெயினுக்கு அமெல்டா போன்றதாகவோ கூட அமையலாம்.

நன்றி: ஈழநாதம் (19.02.07)

_____________________________________________


Labels: ,

Saturday, February 17, 2007

அமெரிக்க ஏகாதிபத்தியம்

மறுபக்கம் - கோகர்ணன்

வியட்நாம் போரின் போது அமெரிக்காவின் ஆயுத வலிமை வியட்நாமிய மக்களின் போராட்ட உணர்விற்கு ஈடுகொடுக்க இயலாமல் அல்லற்பட்டது. வியட்நாமிய மக்களுக்கு உலகம் முழுவதும் வாழ்ந்த ஒடுக்கப்பட்ட மக்களின் மனப்பூர்வமான ஆதரவு இருந்தது. சோவியத் ஒன்றியத்தினதும் மக்கள் சீனக் குடியரசினதும் ஆயுத உதவியும் பொருளாதார உதவியும் இருந்தன. அவை யாவும் வெற்றிக்கு உறுதுணையானவையேயாயினும் வெற்றியைத் தீர்மானித்தது வியட்நாமிய மக்களின் ஒன்றுபட்ட போராட்டமே. வியட்நாமிய மக்களின் தேசிய உணர்விற்கும் மேலாக ஒன்றுபடுத்தக்கூடிய எல்லாரையும் ஒன்றுபடுத்திப் போராட்டத்தைச் சரியான முறையில் நெறிப்படுத்துவதில் வியட்நாமிய கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையின் வழிகாட்டல் முதன்மையானது. மக்கள் சக்தியை வெல்லற்கரிய ஒரு ஆயுதமாக்கியதிற் சரியான அரசியல் வழிகாட்டலுக்கு ஒரு பெரும்பங்கு இருந்ததை நாம் மறக்கலாகாது.
வியட்நாம் போரில் வெற்றி வாய்ப்புகள் கை நழுவிப் போன நிலையில், அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது தோல்விக்கான பழியை மற்றவர்கள் மீது சுமத்தியது. தென் வியட்நாமில் நடந்த தனது ஆக்கிரமிப்புப் போரைக் குண்டு வீச்சின் மூலம் விட, வியட்நாமிற்கு விஸ்தரிக்க முயன்று தோல்வி கண்டது. வடக்கிலிருந்து தெற்கிற்கு ஆட்களும் ஆயுதங்களும் காம்போஜத்தின் வழியாக நகர்த்தப்படுவதைக் காரணமாக்கி காம்போஜத்தினுள்ளும் தனது தாக்குதல்களை மேற்கொண்டது. அதுவும் பயனளிக்காத நிலையில் 1970 இல் காம்போஜத்தில் ஒரு ஆட்சிக் கவிழ்ப்பை நடத்தியது. அதன் விளைவாக வியட்நாம் போர் காம்போஜத்தினுள் இன்னொரு போரையும் அதன் விளைவாக அங்கு பெரும் பொருளாதார அழிவையும் ஏற்படுத்தியது. எனினும் 1975 இல் காம்போஜத்திலிருந்தும் வியட்நாமிலிருந்தும் அமெரிக்கப் படைகள் பெருந்தலைக் குனிவுடன் வெளியேற நேர்ந்தது.

அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது பாடத்தைக் கற்றுக் கொள்ளவில்லை என்பதை அடுத்தடுத்து நடந்த உலக நிகழ்வுகள் காட்டின. அமெரிக்கா தொடர்ந்தும் தனது இராணுவக் குறுக்கீடுகளை நடத்தியது. அமெரிக்கா விரும்பிய ஆட்சிகளைச் சில இடங்களில் நிறுவ முடிந்தது. சோவியத் யூவியனின் செல்வாக்கின் சரிவும் இறுதியில் அதன் உடைவும் அமெரிக்காவின் மேலாதிக்கம் துரிதமடைய உதவின. எனினும் எங்கெல்லாம் ஒடுக்குமுறை வலுப்பெற்றதோ அங்கெல்லாம் கொதிப்பும் அதிகமாயிற்று.

அமெரிக்காவின் கொல்லைப்புறம் என்று கருதப்பட்ட தென் அமெரிக்காவின் மீது அமெரிக்காவின் இரும்புப் பிடி மிக இறுக்கமாக இருந்த பின்னணியில் 1980 களில் உலகவங்கியும் சர்வதேச நாணய நிதியமும் தென் அமெரிக்க நாடுகளில் அமெரிக்காவின் உலகமயமாதலை நடைமுறைப்படுத்தத் தொடங்கின. தொடக்கத்தில் பெரிய பொருளாதார வளர்ச்சிக்கான சாத்தியப்பாடுகளைக் காட்டிய பொருளாதார சீர்திருத்தங்கள் சென்ற நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளில் ஒவ்வொரு நாட்டிலும் மேலும் வறுமைக்கும் வேலையின்மைக்கும் பொருளாதார சீர்குலைவுக்கும் வழிகோலின. ஒவ்வொரு நாட்டிலும் ஏகாதிபத்திய எதிர்ப்பு வலுவடைந்து இன்று பெரும்பாலான நாடுகளில் ஓரளவேனும் இடதுசாரி முனைப்புடைய ஆட்சிகள் ஏற்பட்டுள்ளன.

சோவியத் யூனியனிலும் கிழக்கு ஐரோப்பாவிலும் சீனாவிலும் சோஷலிஸத்திலிருந்து விலகல் ஏற்பட்டதால் அமெரிக்கா விரும்பிய உலக மேலாதிக்கம் நிலை பெறவில்லை. மாறாக ஒருபுறம் சீனாவும், ரஷ்யாவும் தமக்கிடையிலிருந்த வேறுபாடுகளைக் களையுமாறு கட்டாயப்படுத்தப்பட்டன. இன்னொருபுறம் சோவியத் யூனியனுக்கும் சீனாவுக்கும் குழிபறிக்கும் நோக்கில் ஊட்டி வளர்க்கப்பட்ட இஸ்லாமிய தீவிரவாதம் அமெரிக்காவுக்கு எதிராகத் திரும்பியது.

அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒரு காகிதப்புலி என்பது நன்கறியப்பட்ட ஒரு வாசகம். அது எவ்வளவு தூரம் உண்மையானது என்பது அமெரிக்க இராணுவ வலிமை அதிகமாகிக் கொண்டிருந்தபோது தான் கூடக் கூடத் தெளிவாகி வருகிறது. அமெரிக்கா ஈராக்கிற்குள் நுழைந்த நோக்கம் நல்லது என்று நினைத்தவர்கள் இருந்தார்கள். சதாம் ஹுசெய்ன் மீது ஈராக்கிய மக்கள் கொண்டிருந்த வெறுப்பு காரணமாக அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு உடனடியாக இருந்த வரவேற்பு வெகு விரைவிலேயே உலர்ந்து போய்விட்டது. ஏனென்று அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களுக்கு விளங்காமலிருக்க நியாயமில்லை. ஆனாலும், அவர்களது நடத்தையை அவர்களால் மாற்ற இயலவில்லை. அவர்களது நடத்தையைத் தீர்மானிப்பது அமெரிக்க மக்களினது விருப்பங்களோ தெரிவுகளோ அல்ல. மாறாக அமெரிக்காவின் அரசாங்கத்தையும் அதன் பாதுகாப்பு, சட்ட, நீதித்துறைகள் அனைத்தையும் தமது ஆதிக்கத்தின் கீழ்க் கொண்டிருக்கும் ஏகபோக முதலாளிய நிறுவனங்களின் தெரிவுகளே அமெரிக்காவின் அயற் கொள்கைகளையும் பெரும்பாலான தேசிய பொருளாதாரக் கொள்கைகளையும் சமூக நலன் பற்றிய கொள்கைகளையும் முடிவு செய்கின்றன. அவர்களுடைய தெரிவுகள் ஜனநாயகம் பற்றிய அக்கறையாலோ உலக அமைதி பற்றிய ஆர்வத்தாலோ வழி நடத்தப்படுவதில்லை. இலாப நோக்கத்தையும் முழுமையான உலகப் பொருளாதார ஆதிக்கத்தையும் விட்டால் அவர்களுக்கு உலகம் எக்கேடு கெட்டாலும் அக்கறையில்லை. இது தான் ஏகாதிபத்தியத்தின் சாராம்சம்.

எனவே தான் நாங்கள் விரும்புகிற விதமான தர்க்க ரீதியான, நியாயப்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை ஏகாதிபத்தியவாதிகளிடம் எதிர்பார்க்க இயலாது. சோவியத் யூனியனின் உடைவுக்குப் பின்பான சூழலில் அமெரிக்க ஏகாதிபத்தியம் தான் எதைச் செய்தாலும் தட்டிக் கேட்க ஆளில்லை என்ற தோரணையில் நடந்து கொள்ளுகிறது. சோமாலியாவில் தனது அதிகாரத்திற்குட்பட்டதும் மக்களால் வெறுக்கப்பட்டதுமான ஆட்சியை இஸ்லாமிய இயக்கங்கள் போராடி முறியடித்த பின்பு சோமாலியாவின் ஆட்சிக் கவிழ்ப்பை நடத்த எதியோப்பியாவை ஏவிவிட்டது. எதியோப்பியப் படைகளை ஆதரிக்கிற நோக்கில் பல நூறு அப்பாவிகளைக் குண்டு வீசி அழித்துள்ளது. அமெரிக்கக் குண்டு வீச்சுப் பற்றிய செய்திகளை அமெரிக்க அரசு மறுத்திருந்தாலும் தட்டிக் கழிக்க இயலாதபடி ஆதாரங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இப்படிக் குண்டு வீச்சுக்கள் மூலமும் கூலிப்படைகள் மூலமும் அடியாள் ஆட்சியாளர்கள் மூலமும் சோமாலியாவில் அமெரிக்க ஆட்சிக் கவிழ்ப்பை நடத்தி இஸ்லாமிய அடிப்படைவாதத்தை முறியடித்து விட்டதாகப் பெருமை பேசினாலும் குறுகிய காலத்திலேயே நிலைமைகள் தலைகீழாக மாறலாம். ஏனெனில், எதியோப்பிய கிறிஸ்தவர்களை மட்டுமே கொண்ட நாடல்ல. அங்குள்ள கிறிஸ்தவர்கள் கத்தோலிக்கர்களிடமிருந்தும் புரட்டஸ்தாந்து மதத்தினரிடமிருந்தும் வேறுபட்டவர்கள் என்பது போக, அங்கு முஸ்லிம்கள் கணிசமான விகிதத்தில் வாழுகின்றனர். எனவே, சோமாலியாவில் எதியோப்பிய ஆக்கிரமிப்புக்கு எதிரான கிளர்ச்சியின் தொடர் விளைவாக எதியோப்பியாவிலேயே உள்நாட்டுக் கலவரங்கள் வெடித்தெழுகிற வாய்ப்பும் உண்டு. அண்டை நாடான கென்யாவுக்கும் அதற்கு அப்பாலும் பரவுமானால் அமெரிக்காவுக்கு எதிரான உணர்வுகள் மேலும் வலுப்படுமே ஒழிய அமெரிக்காவுக்கு நண்பர்கள் கிடைக்கப் போவதில்லை.

அமெரிக்காவின் மிரட்டலின் முன்னால் அதிகம் அரண்டு போகிறவர்கள் மக்கள் ஆதரவு குறைந்த ஆட்சியாளர்கள்தான். அவர்கள் அமெரிக்காவுடன் ஒத்துழையாவிடின் ஆட்சியில் நிலைக்க இயலாது. அதற்கு மாறாக, மக்கள் ஆதரவையே தங்களது வலிமையாகக் கொண்ட கியூபா, வெனேசுவேலா, பொலிவியா போன்ற தென் அமெரிக்க நாடுகளில் அமெரிக்காவின் குறுக்கீடு நடந்தாலும் ஆட்சியைக் கவிழ்ப்பது இயலாத காரியமாக இருந்துள்ளது. அது மட்டுமில்லாமல், ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகள் அண்மைக் காலத்தில் வெனெசுவேலாவில் மேலும் இடதுசாரி முனைப்புள்ளதும் மக்கள் ஆதரவு மிகுந்ததுமான ஒரு ஆட்சியை உறுதி செய்துள்ளன.

மெக்சிகோவின் சியபாஸ் மாகாணத்தில் அமெரிந்தியப் பழங்குடிகளின் சமூக விடுதலைக்கான எழுச்சி ஸப்பாட்டிஸ்ற்றா இயக்கத்தின் தலைமையில் கண்ட வரையறுக்கப்பட்ட வெற்றியின் விளைவாக மெக்சிகோவின் ஜனநாயகத்திற்கும் சமூக நீதிக்குமான போராட்டச் சக்திகள் வலிமை பெற்றுள்ளன. சில ஆண்டுகள் முன்பு அமெரிக்காவுடனும், கனடாவுடனும் ஒஃப்ட்டா எனும் வட -அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒன்றிணைவுக்குள் புகுந்த மெக்சிகோவின் தென் பகுதிக்குள் அமெரிக்க சுற்றுலாப் பயணிகள் செல்வது உகந்ததல்ல என அமெரிக்க அரசாங்கம் பரிந்துரைக்கும் அளவுக்கு மெக்சிக்கோவின் நிலைமைகள் மாறிவிட்டன.

அமெரிக்காவின் ஆயுத வலிமையைக் கண்டு அஞ்சாத மக்களால் தமது நாட்டையும் முழு உலகையும் விடுவிக்க இயலும் என்பதே கடந்த சில தசாப்தங்களின் வரலாற்றுப் பாடமாகும்.

அமெரிக்காவின் வெறித்தனமான நடவடிக்கைகள் அமெரிக்காவின் வலிமையின் அளவுகோல்களல்ல. மாறாக, அவை அமெரிக்காவின் அச்சத்தின் வெளிப்பாடுகளே. ஈராக் போரின் விளைவாக நிச்சயமின்மையும், அமெரிக்கச் செல்வாக்கிற்கு நேர்ந்துள்ள சரிவும் காரணமாக அமெரிக்காவுக்குப் புதிய போர்களும் புதிய வெற்றிகளும் தேவைப்படுகின்றன. இரண்டாம் உலகப் போரின் பின்பு அமெரிக்க ஆதிக்கத்தின் வளர்ச்சியையும் அதை உறுதிப்படுத்திப் பேண அமெரிக்கா எடுத்து வந்துள்ள நடவடிக்கைகளையும் நோக்கினால் நாம் மூன்றாம் உலகப் போர் மூளுகிற அபாயம் பற்றி அஞ்ச வேண்டியதில்லை. ஏனெனில், நாம் மூன்றாம் உலகப் போருக்குள்ளே வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றே எண்ணத் தோன்றுகிறது.

அமெரிக்கா உலக அமைதிக்கெதிராகப் போர் தொடுத்துள்ளது. எனவே, நியாயமான, நிலையான அமைதியை வேண்டும் எவரையும் அமெரிக்கா தனது எதிரியாகவே கொள்ளுகிறது.

அந்த அளவிற்கு அமெரிக்காவால் வெறுத்தொதுக்கப்படுவதும் தடை செய்யப்படுவதும் அமெரிக்கா பற்றிய பிரமைகளிலிருந்து விடுபடுவதும் நல்ல விடயங்களே.

ஆனாலும், தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் குறிப்பாக உயர் நடுத்தர வகுப்பினர் இன்னமும் அமெரிக்கா பற்றிய கனவுகளில் வாழ்கின்றனர். அவர்கள் விடுதலை பெறுவது எப்போது?

_______________________________

நன்றி: ஞாயிறு தினக்குரல் February 11, 2007

Labels:

Thursday, February 08, 2007

இலங்கையில் ஊடகங்களும் பிரித்தாளும் தந்திரமும்

மறுபக்கம் - கோகர்ணன்

இலங்கையில் கருத்துச் சுதந்திரம் நசுக்கப்படும் அபாயம் பற்றிய எச்சரிக்கைகள் அண்மைக் காலத்தில் அடிக்கடி விடுக்கப்பட்டுள்ளன. சென்ற மாதம் போருக்கு எதிரான ஒரு கூட்டத்தைப் போர்வெறியர்கள் குழப்பினர். அது வன் முறையும் நடந்தது. அந் நிகழ்வின் சிறப்பு ஏதெனின், அதை ஏற்பாடு செய்தவர்கள் ஆளுங்கட்சிப் பிரமுகர் ஒருவர் அவர் பாராளுமன்ற உறுப்பினருங் கூட, அவர் அவ்வாறு செய்யப் போகிறார் என்ற தகவல் ஜனாதிபதிக்கு நெருக்கமான நண்பரும் போர் நிறுத்தத்தையும் நியாயமான அரசியல் தீர்வையும் தொடர்ந்தும் வற்புறுத்தி வருபவருமான வாசுதேவ நாணயக்காரவுக்கு எட்டியதையடுத்து அவர் ஜனாதிபதிக்குத் தகவல் கொடுக்கக் கடுமையாக முயன்றும் அவருடன் பேசக் கிடைக்க வில்லை என்று தெரிய வருகிறது. எனினும், பொறுப்பில் உள்ளவர்கட்குத் தகவல் கிடைத்திருந்தும் தடுப்பதற்கான முயற்சி எடுக்கப்படவில்லை என்பது முக்கியமானது.
அரசாங்க ஆதரவுடன் இந்த நாட்டிற் பேரினவாத வன்முறை ஊக்குவிக்கப்பட்டிருக்கிறது. அவ் வன்முறை கட்டுக் கடங்காமற் போன சூழ்நிலைகள் தவிர்ந்து, பிற நேரங்களில் அரசாங்கம் கண்டுங் காணாமல் இருந்திருக்கிறது. 1983 வன்முறை `சர்வதேச சமூகத்திற்கும் அதிர்ச்சியூட்டும் முறையில் விளம்பரப்படுத்தப்பட்டதால், அரசாங்கம் ஒரு இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டது. நியாயப்படுத்த இயலாத முறையில் கட்டவிழ்த்து விடப்பட்ட அவ் வன்முறை தமிழகத்திற் கடுமையான வெகுசனச் சீற்றத்தைக் கிளறிவிட்டது. எனினும், இந்தச் சீற்றங் காரணமாக இந்திய ஆட்சியாளர்கள் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையில் குறுக்கிட்டனர் என்பது உண்மையல்ல .அதை ஒரு வசதியாக மட்டுமே இந்திய ஆட்சியாளர்கள் பயன்படுத்தினர். இந்திய வம்சாவளித் தமிழர் பற்றி அக்கறை காட்டாத இந்திய ஆட்சியாளர்கள் வடக்கு, கிழக்கின் தமிழர் நலன் பற்றி அக்கறை காட்ட மெய்யாகவே நியாயம் இல்லை. எனவே, கேட்க இனிய கொச்சையான அரசியல் விளக்கங்கள் பற்றி நாம் கவனமாயிருப்பது நல்லது.

இலங்கையின் இன்றைய பிரதான முரண்பாடு தேசிய இனப்பிரச்சினை தொடர்பானது என்பதில் நமக்கு ஐயம் வேண்டாம். எனினும் அது மட்டுமே முரண்பாடு என்று மற்றையவற்றைப் புறக்கணிப்பது ஆபத்தானது. அதை விடத் தேசிய இனப்பிரச்சினையைப் பகை முரண்பாடாக்கி அதைப் பிரதான முரண்பாடாகவும் போராகவும் வளர்ப்பதில் யாருக்கு நன்மை இருந்தது என்பதையும் நாம் கவனிக்கத் தவறலாகாது.

பிரித்தாளும் தந்திரம் என்பது, ஏதோ, பிரித்தானியக் கொலனிய ஆட்சியாளர்களுக்கு மட்டுமே கைவந்த கலையல்ல. அது அந்நிய மேலாதிக்கம் ஒன்று நாடுகளை அடக்கியாளப் பயன்படுத்துகிற உபாயம் மட்டுமல்ல, அமெரிக்கத் தொழிலாளர்களைப் பிளவு படுத்த இனவேறுபாடு பயன்பட்டது. ஆனால், கறுப்பு, வெள்ளை என்ற வேறுபாடு அதிகாரத்தில் இருப்பவர்கட்கு எப்படிப் பயன்படுகிறது என்று பார்த்தால், நிற வேறுபாடு இல்லாமல் எல்லாத் தொழிலாளரையும் ஒட்ட உறிஞ்ச அது உதவுகிறது என அறியலாம்.

மக்களை அடக்கியாளுவதற்கான முறைகள் சமூகஅமைப்புகளின் வேறுபாடுகட்கமைய மாறுகின்றன. அடிமைச் சமூகத்திற் போல நிலப்பிரபுச் சமூகத்திற் செய்ய இயலவில்லை. முதலாளியம் மேலும் வேறுபட்ட முறைகளைப் பயன்படுத்துகிறதும் உழைப்பின் மீது தனி மனிதர்களின் கட்டுப்பாட்டின் தன்மையை முதலாளிய உற்பத்தி முறை மாற்றிவிட்டது. கட்டுப்பாடின்றி உழைப்பை வாங்கி விற்கிற ஒரு சமூக அமைப்பில் தனி மனிதச் சுதந்திரம் என்ற சிந்தனையை மறுக்க இயலாமற் போகிறது தோற்றப்பாடான ஒரு தனி மனிதச் சுதந்திரம் இல்லாமல், முதலாளிய தொல்லையின்றி இயங்க இயலாது. எனவே அந்தச் சுதந்திரத்தை வழங்குவது போல வழங்கி அதை அனுபவிக்க இயலாத விதமாகப் பறிப்பது தான் முதலாளிய ஜனநாயக ஆட்சிமுறையின் திறமை.

கருத்துச் சுதந்திரம் என்பதை முதலாளிய ஜனநாயகம் பெரிதுங் கொண்டாடுகிறது. எனினும் அது எல்லாவிதமான கருத்துகட்குமான, சமத்துவமான , எல்லாரும் ஒரே விதமாக அனுபவிக்கக் கூடியதான சுதந்திரமாக இருப்பதில்லை. தகவல்களை வெளியிடவும் பரிமாறவுமான சுதந்திரம் உண்டென்று சொல்லப்பட்டாலும், எவ்விதமான எந்த நோக்கத்திற்கான தகவல்கள் என்பது இன்னொரு விடயமாக உள்ளது. இங்கே ஒரு ஊடக நிறுவனம், "தெரிவிப்பது நாங்கள், தீர்மானிப்பது நீங்கள்" என்ற சுலோகத்தை மேலை நாட்டு ஊடக நிறுவனமொன்றிடமிருந்து பெற்றுத் தனது கருத்துச் சுதந்திர நிலைப்பாட்டை விளம்பரப் படுத்திக் கொள்கிறது. ஆனால் எதைச் சொல்வது, எதைச் சொல்லாமல் விடுவது, சொல்லுவதை எப்போது, எப்படிச் சொல்வது என்பன பற்றிய தீர்மானங்களை யார் எடுக்கிறார்கள்?

இலங்கையின் ஊடகச் சுதந்திரம் பேரினவாதத்தை வளர்க்க மிகவும் உதவியுள்ளது. இன்று பேரினவாத இனவெறியை ஊட்டுவதில் மும்முரமாக உள்ளவர்களுக்கு ஏறத்தாழ எல்லாப் பெரிய சிங்கள, ஆங்கில ஒலி, ஒளிபரப்பு அச்சு ஊடகங்களும் துணைபோகின்றன. தமிழில், தமிழ்த் தேசியவாத அரசியல் கோலோச்சுறது. அதுபற்றிச் சிங்களப் பேரினவாதிகட்குக் கவலை இல்லை. ஏனெனில், அதனால் அவர்களது நோக்கங்கட்குக் கேடேதும் இல்லை.

மாற்றுக் கருத்துகளை அரச அதிகாரமோ, அதிகார வர்க்கமோ சகித்துக் கொள்கின்ற சூழ்நிலைகள் இருக்கின்றன. மாற்றுக் கருத்துகள் அரசினதும், அதிகார வர்க்கத்தினதும் இருப்பிற்கும் நிலைப்பிற்கும் மிரட்டலாக இல்லாத வரையில் அவை சகித்துக் கொள்ளப்படுவதுடன் வரையறைக்குட்பட்டு ஊக்குவிக்கவும்படுகின்றன. ஏனெனில், அவற்றின் இருப்பு சனநாயகத் தோற்றம் ஒன்றைக் காட்டுவதற்கு உதவுகின்றது. கருத்துகள் செயல்வடிவம் பெற்று ஒரு அரசியல் சக்தியாக வளரக் கூடிய சூழ்நிலையில் அவை ஆபத்தானவையாகின்றன. புத்திசாலித்தனமான முறையில் இயங்குகின்ற அரசு கருத்துகள் செயல் வடிவம் பெறுமுன்னமே அவற்றைக் களையெடுப்புக்குட்படுத்தி விடுகிறது. ஊடகங்கள் மீது அரசுக்கு உள்ள கட்டுப்பாடு அதற்கேற்ற முறையில் இயங்குகிறது. அல்லாதவிடத்து ஊடகங்கள் மீது ஆளுமையுடையவர்களது வர்க்க நலன்கள் உரிய விதமாகக் குறுக்கிடுகின்றன.

நிலைமைகள் கட்டுக்கடங்காமல் போய் மாற்றுச் சிந்தனைகள் மாற்று நடவடிக்கைகளை விருத்தி பெறக்கூடிய சூழ்நிலையில் அரச வன்முறை தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைக் குரலையும் பின்பு விடுதலைப் போராட்டத்தையும் நசுக்க எழுச்சி கொண்ட அரச வன்முறை, குறிப்பிட்ட வர்க்க நலன்களைக் காப்பாற்ற வேண்டிச் சிங்களத் தேசியவாதத்தின் ஒரு பகுதியை அடையாளப்படுத்திய ஜே.வி.பி. மீது பாய்ந்தது. ஜே.வி.பி. அரசிற்கெதிராக ஆயுதமேந்திய நிலையில் தனது வன்முறையை அரசு எளிதாக நியாயப்படுத்த இயலுமாயிற்று. எனினும், வேறு வகையான எதிர்ப்புகளைச் சமாளிக்க அரச வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவது அரசுக்கு எதிராக மக்களைக் கிளர்ந்தெழச் செய்யலாம். அப்போது அரச அடையாளமற்ற வன்முறை உதவுகிறது. அது எந்த வடிவத்திலும் வரலாம்.

1977 க்குப் பின்பு ஜே.வி.பி.யைப் பயன்படுத்திப் பாராளுமன்ற இடதுசாரிகளையும், ஷ்ரீ.ல.சு.கட்சியையும் யு.என்.பி. ஆட்சியாளர்கள் செயலிழக்கச் செய்தனர். ஜே.வி.பி. குண்டர்களுக்குத் துணையாக இல்லாவிடினும் அவர்களது வன்முறையில் குறுக்கிட்டுத் தடுக்காமல் அரசின் சட்ட ஒழுங்கின் கரங்கள் கட்டுப்பட்டிருந்தன. எனவே, அரச வன்முறை என்பது நேரடியான அரச படைகளினதும் ஆயுதப் பொலிஸாரதும் குறுக்கீடாக இல்லாமல் கவனமாகக் கையாளப்பட்ட செயலின்மையாகவும் அமைய முடியும் என்பதை மீண்டும் 1983 ஆம் ஆண்டு தெளிவாகக் கண்டோம்.

இப்போது போருக்கு எதிரான இயக்கத்திற்கு எதிரான வன்முறை, முதலில் ஆளும்கட்சி சாராத குண்டர்கள் மூலமும் பின்பு ஆளும்கட்சி சார்ந்த குண்டர்கள் மூலமும் நடந்தேறுகிறது என்றால், அரசு போருக்கெதிரான இயக்கத்தின் வளர்ச்சியைப் பற்றி அஞ்சுகிறது என்பதே அதன் பொருள். அமைதியான முறையில் நடைபெறும் சமாதானப் பேரணிகளை அரச வன்முறை மூலம் நசுக்குவது இப்போதைக்கு அரசுக்குப் பாதகமானது என்பதால் அரசு ஜனநாயக விரோதச் சக்திகளைக் கொண்டு தனது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்கிறது. இதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

பயங்கரவாதத்தையும் பிரிவினைக் கோரிக்கையையும் காட்டிச் சிங்கள மக்களைப் பேய்க்காட்ட இயலாத ஒரு நிலை பற்றி நம்மில் பலர் இப்போதைக்கு எண்ண ஆயத்தமாயில்லை என்று நினைக்கிறேன். ஆனால், பேரினவாத அரசு அது பற்றிச் சிந்திக்கிறது. அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவுந் தொடங்கிவிட்டது. அது பற்றி யாரும் அசட்டையாக இருக்க முடியாது.

ஃபாஸிஸம் எவ்வகையானது என அறிவோம். ஆனால், எப்படி அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பதற்கு அதற்கு முன்பு பல தெரிவுகள் உள்ளன. இலங்கையில் ஒரு ஃபாஸிஸ அரசு உருவாகுமானால் `சர்வதேச சமூகம்', இந்தோனேசியாவிலும் சிலியிலும் நடந்து கொண்ட விதமாகவே இங்கும் நடந்து கொள்ளும் என்பதில் நமக்கு ஐயம் வேண்டாம்.

_________________________________________
நன்றி: ஞாயிறு தினக்குரல் February 04, 2007

Labels: ,

Friday, February 02, 2007

பகிரப்படாத பக்கங்கள். 1.

மயக்கம் தெளிந்து கண்களைத் திறந்து பார்த்தான். கண்ணெதிரே கம்பியில் குருதிப்பை தொங்கிக்கொண்டிருந்தது. கையில் குருதி ஏற்றப்பட்டிருந்தது. மருந்துமணம் மூக்கைத் துளைத்தது. மெல்லக் கால்களை அசைக்க முயன்றான், முடியவில்லை. உணர்வற்று உயிரற்ற சடமாய் கால்கள் மரத்துப்போய்க் கிடந்தன. முதுகு விண் விண்ணென வலித்தது.

நினைவுகளை மீட்டுப்பார்த்தான். இராணுவ ஆக்கிரமிப்புக்கெதிரான முறியடிப்புச் சமரில் விழுப் புண்ணடைந்ததை உணர்ந்து கொண்டான். அவனது கரங்கள் கனரகத் துப்பாக்கியை இயக்கிக் கொண்டிருந்தபோது, ராங்கியொன்று அவர்களின் நிலையைத் தாக்கியது. அவனுக்கு வயிற்றுப் பகுதியில் ஆழமான காயம் ஏற்பட்டிருந்தது. கால்கள் நிற்கமுடியாமல் சோர்ந்து துவண்டன. குருதி வெளியேறிக்கொண்டிருந்தது. எதிரே இராணுவத்தினர் முன்னேறிக்கொண்டிருந்தனர். துப்பாக்கியைத் தோழனிடம் கொடுத்தான். தோழன் சிதைந்த காவல்நிலையை விட்டு மற்றைய நிலைக்கு மாறி இராணுவத்தை முன்னேற விடாமல் கனரகத் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டிருந்தான்.

ராங்கிகளின் உறுமல் அவனுக்கருகில் கேட்டது. கால்களை தடவிப் பார்த்தான். குளிர்ந்துபோயிருந்தன. இராணுவத்தினரிடம் உயிரோடு பிடிபடக்கூடாது என எண்ணியவன் சயனைற் குப்பியை வாய்க்குள் வைத்தான். அங்குவந்த மருத்துவப் போராளி சயனைற் குப்பியைப் பறித்துவிட்டு வயிற்றுக் காயத்துக்குக் கட்டுப்போட்டான். களமருத்துவத்தை வெற்றிகரமாய் நிறைவேற்றி காவு குழுவிடம் அவனை ஒப்படைத்தான்.

அவனுக்குக் கண்கள் இருண்டன. அப்போது மயங்கியவன் இங்குத்தான் விழித்துக் கொண்டான். அன்று அந்த மருத்துவப் போராளியின் முயற்சியினால் உயிர்தப்பியதை நினைத்துப் பார்த்தான். மருத்துவ வீட்டில் இரண்டு மாதங்கள் இருக்கவேண்டியிருந்தது. காயங்கள் மாறியபோதும் கால்கள் இயங்க மறுத்துவிட்டன. மருத்துவப் போராளிகளின் அரவணைப்பு அவனுக்கு அம்மாவை ஞாபகமூட்டியது.

இரண்டு மாதங்களின் பின் முகாமுக்கு வந்துசேர்ந்தான். அவனுக்கு எந்தக் குறையும் இருக்கவில்லை. தோழர்கள் முழு நிறைவாக கவனித்துக் கொண்டார்கள். அவனுடைய கால்களின் நரம்புகளைத் தூண்ட காலையும், மாலையும் பயிற்சிகள் செய்துவிட்டார்கள். எப்படியாவது மீண்டும் களத்துக்குப் போகவேண்டுமென்ற அவா அவனில் நிறைந்துபோயிருந்தது.

படிப்படியாகத் தனது பணிகளைத் தானே செய்ய முயற்சித்தான். ஆறுமாதங்களின் பின் கால்களில் மாற்றம் ஏற்படுவதை உணர்ந்தான். கால் விரல்களை இப்போது அவனால் அசைக்க முடிந்தது. மெலிந்து குச்சியாய் இருந்த கால்கள் மெருகேறத்தொடங்கின. அவன் முயற்சியைக் கைவிடாமல் தொடர்ந்து பயிற்சியிலீடுபட்டான். ஓராண்டின் பின் அவனால் மீண்டும் நடக்கமுடிந்தது. அவனுக்கு அளவு கடந்த மகிழ்ச்சி. மீண்டும் களத்துக்குப் போவேனென சொல்லிக்கொண்டிருந்தான். ஆனால் அவன் இன்று உயிரோடு இருக்கக் காரணமாயிருந்த மருத்துவப் போராளியுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள முடியாமையை எண்ணிக் கவலைப்பட்டான்.

அந்தப் போராளி பிறிதொரு சமரில் வீரச்சாவடைந்திருந்தான். ஒவ்வொரு மருத்துவப் போராளியும் போராளிகளின் உயிர்களைக் காப்பதற்காய் படும் பாடுகள் அவன் கண்முன்னே தோன்றின. முச்சக்கர வண்டியில் மாவீரர் துயிலுமில்லத்துக்குச் சென்று வந்தவன் இன்று கால்கள் பதித்து கல்லறை நோக்கி நடந்தான். மாவீரர் நினைவுப் பாடல்கள் காற்றில் கலந்து காதில் புகுந்து மனதை நிரப்பிக்கொண்டிருந்தன.
____________________
நன்றி: விடுதலைப் புலிகள்

Labels: , , ,

அமெரிக்க அரசியலும் சதாமும்

மறுபக்கம் - கோகர்ணன்

சதாம் ஹுசெய்னின் தூக்குத் தண்டனை பற்றிய விவாதங்களின் சூடு ஓரளவுக்கேனுந் தணிந்து விட்டது. அதை மெச்சிப் பேசிய ஜோர்ஜ் புஷ், அக் கொலைக் காட்சிகள் ஏற்படுத்திய அருவருப்பையுஞ் சினத்தையும் எடுத்து ஈராக்கிய ஆட்சியாளர்கள் மீது பழியைப் போட்டு விட்டு நழுவிக் கொள்ள முயன்றாலும், சதாம் மீதான நீதிமன்ற விசாரணை மிகவும் ஒழுங்கீனமான முறையில் நடத்தப்பட்டதும் சதாமின் வழக்கறிஞர்கள் கொல்லப்பட்டதுட்பட்ட வன்முறைச் சூழலும் அமெரிக்காவின் பூரண ஆசிகளுடனேயே என்பதை மாற்ற இயலாது. சதாம் மீதான குற்றச் சாட்டுக்களில் ஒரு பகுதி மட்டுமே விசாரிக்கப்பட்ட நிலையில் அவர் தூக்கிலிடப்பட்டார். அவற்றுக்கு முன்னமே விசாரித்திருக்க வேண்டிய குற்றங்களான ஈரானுடன் போர்க்காலத்தின் போது நிகழ்ந்தவையும் குர்திய மக்கள் மீதான நச்சு வாயுப் பிரயோகமும் விசாரணைக்கு வந்திருந்தால், குற்றவாளிக் கூண்டில் நின்றிருக்க வேண்டியவர்களுள் அமெரிக்கக் குடியரசுத் தலைவர்களும் உள்ளடங்கியிருப்பர். தூக்குக் கயிறு கொண்டு சதாமின் வாய் அடைக்கப்பட்டு விட்டது என்ற உண்மையைப் பலர் கணிப்பிலெடுக்கத் தவறி விட்டனர்.
அமெரிக்கக் குடி மக்கள் தங்கள் ஜனநாயக உரிமை பற்றியும் சட்டத்தின் முன் அனைவரதும் சமத்துவம் பற்றியும் நுகர்வோரின் உரிமைகள் பற்றியும் இன்னும் பல சமூக உரிமைகள் பற்றியும் மிகுந்த விழிப்புணர்வுடையவர்கள். அதேவேளை அமெரிக்காவின் பாதுகாப்பு, அமெரிக்க வாழ்க்கை முறை, அமெரிக்க சனநாயகம் என்பன பற்றிய மயக்கங்களையும் உடையவர்கள். செப்டெம்பர் 11 பயங்கரவாதத்தின் பின்பு அமெரிக்க மக்களை சர்வதேசப் பயங்கரவாதம் பற்றியும் குறிப்பாக இஸ்லாமியப் பயங்கரவாதம் பற்றியும் மிரட்டி அந்த அடிப்படையிலேயே அல்-ஹைடா ஒழிப்பு என்ற பேரில் இஸ்லாமிய விரோதப் பிரசாரம் ஒன்றையும் உரை ஆதிக்கத்திற்கான தனது அடுத்தகட்ட ஆக்கிரமிப்பு முயற்சிகளையும் மேற்கொண்டது.

தன்னை உலகின் மேலாதிக்க வல்லரசாக நிலை நிறுத்துவதற்குச் சவாலாக இருந்த எந்த ஆட்சியையும் கவிழ்க்கப் பயங்கரவாதம், இராணுவச் சதி, ஆக்கிரமிப்பு உள்ளிட்ட எதையுமே பயன்படுத்த அமெரிக்கா தயங்கியதில்லை. அமெரிக்க மக்கள் அமெரிக்காவின் அயல் விவகாரங்கள் பற்றி அதிகம் அக்கறைப் படாமல் இருந்து வந்தது ஒரு புறமிருக்க, கம்யூனிஸ மிரட்டல் என்பது இரண்டாம் உலகப் போரின் பின் பயன்பட்டது. அமெரிக்காவின் உள்ளே இடது சாரிகட்கெதிரான களையெடுப்பு 1950 களில் நடந்தது. இன்று பலராலும் மறக்கப்பட்டு விட்டாலும் "மக்கார்த்தி யுகம்" பற்றிய இலக்கியப் பதிவுகள் இன்னமும் உள்ளன. வியற்நாம் போர் பற்றிய நினைவுகள் மங்கவைக்கப்பட்டு அமெரிக்காவின் கொடுமைகளை மறைத்து முக்கியமாக அமெரிக்கா வெல்லத் தவறிய ஒரு "தர்ம யுத்தமாக" அது இன்று காணப்படுகிறது. கம்யூனிஸ்ற்றுக்கள் என்று கருதப்பட்ட ஐந்து இலட்சம் பேராவது (சிலரது மதிப்பீட்டில் பத்து இலட்சம் பேர்) இந்தோனேசிய ஃபாஸிஸ நரபலி வெறியாட்டத்தில் இரையானவர்கள். இதே கதை இன்னும் எத்தனையோ நாடுகளில் எண்ணிக்கை வேறுபாடுகளுடன் அமெரிக்க வழிகாட்டலில் நடந்தேறியது.

நம்மிடையே அமெரிக்காவின் குடியரசுக் கட்சியின் தீவிர வலது சாரி நிலைப்பாட்டுக்கும் ஜனநாயகக் கட்சியின் மிதவாத நிலைப்பாட்டுக்குமிடையே வேறுபாடு தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். நல்லவர்கள் பட்டியலில் ஜோன் கெனடி, ஜிமி காட்டர், பில் கிளின்ற்றன் ஆகியோரையும் கெட்டவர்கள் பட்டியலில் றிச்சட் நிக்ஸன், ஜோர்ஜ் புஷ் தந்தையும் மைந்தனும் ஆகியோரையும் கோமாளிகள் பட்டியலில் ஜெரல்ட் ஃபோர்ட், றொனால்ட் றேகன் ஆகியோரையும் போட்டு அமெரிக்க அரசியலை விளக்குவது சிலருக்கு எளிது. ஆனால் உண்மைகள் வேறுவிதமானவை.

அமெரிக்காவின் உள்நாட்டு அலுவல்களில் முக்கியமாகச் சமூக சேவைகள், பொது மருத்துவ சேவை, வறியோர் நலன் போன்ற விடயங்களில் இரண்டு கட்சிக்கும் தோற்றப்பாடான கொள்கை வேறுபாடுகள் உள்ளன. எனினும், எல்லாக் கொள்கைகளையும் நடைமுறைப் படுத்த இயலாது செய்யவும் நடை முறைப்படுத்துகின்றவற்றை மட்டுப்படுத்தவுமென வலிமை ஏகபோக முதுலாளிய நிறுவனங்களிடம் உள்ளது. எனவே ஆட்சி மாற்றம் அடிப்படையான மாற்றமாக இல்லாதது மட்டுமன்றி அற்பளவான மாற்றமாகவே அமைகிறது.

அமெரிக்க அயல் நாட்டுக் கொள்கையைப் பொறுத்தவரை ஆட்சி மாற்றங்களால் எதுவும் மாறுவதில்லை. கெனடி ஆட்சியின் போது தான் கியூபாவில் ஆட்சிக் கவிழ்ப்புக்கான பே ஒவ் பிக்ஸ் (பன்றிக் குடா) அதிரடித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அவரது ஆட்சியின் கீழேயே அமெரிக்கா வியற்நாமில் தனது படைகளின் இருப்பைப் பெரிதும் அதிகரித்தது. ஜோன்சன் ஆட்சி கெனடி காட்டிய வழியில் தொடர்ந்தது. நிக்ஸனின் ஆட்சியில் அமெரிக்கா சமாதானத்திற்கு உடன்பட்டது என்பதன் காரணம் நிக்ஸன் சமாதான தேவன் என்பதல்ல, அமெரிக்கா வியற்நாம் போருக்குக் கொடுத்த விலை அதிகம் என்பது தான்.

புஷ் - கிளின்றன் - புஷ் என்று ஒரே அரசியற் கொள்கை தான் யூகோஸ்லாவியாவிலும் மத்திய கிழக்கிலும் கடைப்பிடிக்கப்பட்டது. எனவே, அமெரிக்காவின் எந்த ஆட்சி மாற்றமும் மூன்றாமுலகம் பற்றிய அமெரிக்கக் கொள்கையை மாற்றப் போவதில்லை. அடிப்படை உண்மையைச் சொல்லப் போனால், அமெரிக்காவை ஆளுகிறவர் அமெரிக்கச் சனாதிபதியல்லர்; அமெரிக்காவின் பாராளுமன்றத்தின் பெரும் பான்மையினரோ மூதவையின் பெரும்பான்மையினரோ அல்ல. அமெரிக்க மூலதனமே ஆளுகிறது. அண்மையில் ஈராக் போரின் நேரடி விளைவாகக் குடியரசுக் கட்சி இரண்டு அவைகளிலும் தனது பெரும்பான்மை உரிமையை இழந்தாலும் அமெரிக்கா ஈராக்கிலிருந்து வெளியேறப் போவதில்லை. அங்கு மேலும் இருபதினாயிரம் படையினர் அனுப்பப்படவுள்ளனர்.

அதை அமெரிக்காவின் ஜனநாயகமோ தெரிந்தெடுக்கப்பட்ட பெரும்பான்மை உறுப்பினர்களோ தடுத்து நிறுத்தப் போவதில்லை. ஈராக் போர் பற்றிய அமெரிக்க அரசியல் வாதிகளது விவாதம் போர் சரியானதா இல்லையா என்பது பற்றியதல்ல; போர் சரிவர நடத்தப்பட்டதா இல்லையா என்பது பற்றியதே.

அமெரிக்கா மத்திய கிழக்கில் இஸ்ரேல் நடத்திய லெபனான் மீதான தாக்குதலை நியாயப்படுத்தியது. அப்பாவி மக்கள் குண்டுவீசி அழிக்கப்பட்டதை அலட்சியம் செய்தது. பலஸ்தீன மக்கள் இஸ்ரேலின் ஆணையை ஏற்க வேண்டுமென்ற நோக்கத்தில் பல்வேறு நெருக்குவாரங்களைக் கொடுக்கிறது. இதில் எதுவும் அமெரிக்காவில் ஏற்படும் ஆட்சி மாற்றத்தால் நிற்கப் போவதில்லை.

ஈரான் மீதான போரொன்றுக்கு அது புதிய நியாயங்களைத் தேடுகிறது. அண்மையில் ஈராக்கில் அரசாங்க எதிர்ப்பு ஷியா போராளிகட்கு ஈரான் ஆயுதப் பயிற்சி கொடுப்பதாகக் குற்றஞ் சுமத்தியது. போராளிகளிடையே ஈரானியர்களைப் பிடித்துள்ளதாகவும் கூறியுள்ளது. இவையெல்லாம் எதற்கான முன்னேற்பாடுகள் என்று ஊகிக்க எவரும் அரசியல் நிபுணராக இருக்கத் தேவையில்லை. ஈரான் மீது போர் தொடுப்பதற்கு இடைஞ்சலாக ரஷ்யாவும், சீனாவும், இருப்பதால், போருக்கான நியாயங்களை உருவாக்கவும் சீனாவோ ரஷ்யாவோ ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இடையூறு செய்தால் அதற்கான மாற்று உபாயங்களை வகுக்கவும் தேவை உள்ளது. எனவே குறுகிய காலத்தில் போருக்கான வாய்ப்பு இல்லை என்றாலும் அவ் வாய்ப்பு எப்படியும் உருவாக்கப்படும் என்பதற்கு அமெரிக்காவின் அயற் கொள்கையில் நிறைய உதாரணங்கள் உள்ளன.

தமக்கு எவ்விதமான ஐயங்களும் இருக்கக் கூடாது எனவும் எதுவும் நமக்கு வியப்பூட்டக் கூடாது எனவும் உறுதிப்படுத்துகிற விதமாக அமெரிக்கா சோமாலியாவில் எதியோப்பியப் படைகள் மூலம் குறுக்கிட்டுள்ளது. அமெரிக்க விமானங்கள் குண்டு வீசி சோமாலியக் குடிமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதன் பின்பு சோமாலியாவில் அமெரிக்கச் சார்பானதும் எதியோப்பிய இராணுவ உதவி மீது முற்றாகத் தங்கியிருக்கக் கூடியதுமான ஒரு ஆட்சி உருவாகியது. அதனால் எதியோப்பியாவிற்குள்ளும் சோமாலியாவின் அண்டை நாடுகட்குள்ளும் புதிய உள்நாட்டுக் கலவரங்கள் உருவாகும் வாய்ப்பை அமெரிக்க ஏகாதிபத்தியம் எவ்வளவு தூரம் சரியாகக் கணக்கிலெடுத்திருந்தாலும், முடிவில் அமெரிக்கா தான் தூக்கிய கல்லைத் தன் கால் மீதே போட்டுக் கொள்ளப் போகிறது என்பது உறுதி. வரலாறு கூறுகிற பாடம் அது. ஆக்கிரமிப்பாளர்கள் கற்கத் தவறிய பாடமும் அதுவாகும். இலங்கையில் அமெரிக்க நோக்கங்கள் என்ன என்பதற்குப் பலவாறான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. சீனாவின் கடல் வழி வணிகத்தைக் குறிப்பாக, இந்து மா கடலின் குறுக்காகச் சீனாவின் எண்ணெய் இறக்குமதியைக், கட்டுப்படுத்துவதற்கும் தேவையான போது குறிக்கிட்டுத் தடுக்கவுமான தேவை அவற்றுள் ஒன்று. சீனக் கப்பல்கள் தரித்துச் செல்ல இந்து மா கடலில் உள்ள முக்கியமான துறைமுகங்கள் இந்தியா போலே மாலை தீவுகளிலும் இலங்கையிலுமே உள்ளன. இலங்கையில் ஒரு ஆட்சிக் கவிழ்ப்பை நடத்துவதை விடத் துரிதமாக மாலைதீவுகளில் நடத்தலாம். எனவே இலங்கையை அமெரிக்காவின் பூரண கட்டுப்பாட்டுக்குட் கொண்டு வரும் நோக்கத்தை முன்னிட்டே இலங்கையில் அமெரிக்கக் கொள்கை அமையும். அதற்கு உடன்பாடான எவ்விதமான கொடுமையும் சகிக்கப்படும்.

அமெரிக்காவுடனான இந்திய ஒத்துழைப்பு இலங்கை மீதான ஆதிக்கப் பகிர்வு பற்றிய பிரச்சினை மீதும் தங்கியுள்ளது. எனினும், அமெரிக்கா வகுக்க எண்ணும் சீன எதிர்ப்பு வியூகத்தில் இந்தியா இணையுமாயின் இலங்கை பற்றிய பிரச்சினையில் ஒத்துழைப்புக்கு மிகுந்த இடம் உண்டு. அமெரிக்கக் கணக்கிலோ இந்தியக் கணக்கிலோ தமிழ் மக்களின் நிலை முக்கியமானதல்ல என்று சொல்லி வந்திருக்கிறேன். அதனாலேயே அமெரிக்காவினதும் இந்தியாவினதும் மேலாதிக்கத் தேவைகட்கு இலங்கைத் தமிழரின் விடுதலை பொருந்தாது என நினைக்கிறேன்.

சதாம் ஹுசெய்ன் உட்பட அமெரிக்காவை நம்பி மற்றவர்களைப் பகைத்த எவரது சதியும் சதாமினதை விட நல்லதாக இருக்காது. இன்று அமெரிக்காவின் ஆசியுடனும் இந்தியாவின் மௌன அங்கீகாரத்துடனும் பேரினவாதிகள் இன ஒழிப்புப் போரில் தீவிரமாக உள்ளனர். தமிழ் மக்கள் தம்மைப் பிணைத்துக் கொள்ளத் தக்க சக்திகள் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்ட இயக்கங்கள் மட்டுமே என்ற உண்மையை நாம் மறக்கலாகாது.

__________________________________________
நன்றி: ஞாயிறு தினக்குரல் January 28, 2007

Labels:


Get your own calendar

Links