« Home | இந்தியா பிச்சை போடுமா? » | அன்னியசக்திகளை ஈழத்தமிழர் நம்பலாமா? » | லெப்.கேணல் அக்பர் » | மலையக மக்களின் போராட்டம் » | சனநாயகமும் பயங்கரவாதமும் » | சிங்கள மனப்பான்மையும் சிறிலங்கா நிலைமையும் » | ஏழுகட்சிக்கூட்டணி - மாவோயிசப் போராளிகள் ஒப்பந்தம் » | இஸ்ரேலியப் பயங்கரவாதம் - சனநாயகத்துக்கான போராட்டம் » | இராணுவப்பிடியில் சிறிலங்கா » | அணுவாயுதப் பரிசோதனை அரசியல் »

அமெரிக்க அரசியலும் சதாமும்

மறுபக்கம் - கோகர்ணன்

சதாம் ஹுசெய்னின் தூக்குத் தண்டனை பற்றிய விவாதங்களின் சூடு ஓரளவுக்கேனுந் தணிந்து விட்டது. அதை மெச்சிப் பேசிய ஜோர்ஜ் புஷ், அக் கொலைக் காட்சிகள் ஏற்படுத்திய அருவருப்பையுஞ் சினத்தையும் எடுத்து ஈராக்கிய ஆட்சியாளர்கள் மீது பழியைப் போட்டு விட்டு நழுவிக் கொள்ள முயன்றாலும், சதாம் மீதான நீதிமன்ற விசாரணை மிகவும் ஒழுங்கீனமான முறையில் நடத்தப்பட்டதும் சதாமின் வழக்கறிஞர்கள் கொல்லப்பட்டதுட்பட்ட வன்முறைச் சூழலும் அமெரிக்காவின் பூரண ஆசிகளுடனேயே என்பதை மாற்ற இயலாது. சதாம் மீதான குற்றச் சாட்டுக்களில் ஒரு பகுதி மட்டுமே விசாரிக்கப்பட்ட நிலையில் அவர் தூக்கிலிடப்பட்டார். அவற்றுக்கு முன்னமே விசாரித்திருக்க வேண்டிய குற்றங்களான ஈரானுடன் போர்க்காலத்தின் போது நிகழ்ந்தவையும் குர்திய மக்கள் மீதான நச்சு வாயுப் பிரயோகமும் விசாரணைக்கு வந்திருந்தால், குற்றவாளிக் கூண்டில் நின்றிருக்க வேண்டியவர்களுள் அமெரிக்கக் குடியரசுத் தலைவர்களும் உள்ளடங்கியிருப்பர். தூக்குக் கயிறு கொண்டு சதாமின் வாய் அடைக்கப்பட்டு விட்டது என்ற உண்மையைப் பலர் கணிப்பிலெடுக்கத் தவறி விட்டனர்.
அமெரிக்கக் குடி மக்கள் தங்கள் ஜனநாயக உரிமை பற்றியும் சட்டத்தின் முன் அனைவரதும் சமத்துவம் பற்றியும் நுகர்வோரின் உரிமைகள் பற்றியும் இன்னும் பல சமூக உரிமைகள் பற்றியும் மிகுந்த விழிப்புணர்வுடையவர்கள். அதேவேளை அமெரிக்காவின் பாதுகாப்பு, அமெரிக்க வாழ்க்கை முறை, அமெரிக்க சனநாயகம் என்பன பற்றிய மயக்கங்களையும் உடையவர்கள். செப்டெம்பர் 11 பயங்கரவாதத்தின் பின்பு அமெரிக்க மக்களை சர்வதேசப் பயங்கரவாதம் பற்றியும் குறிப்பாக இஸ்லாமியப் பயங்கரவாதம் பற்றியும் மிரட்டி அந்த அடிப்படையிலேயே அல்-ஹைடா ஒழிப்பு என்ற பேரில் இஸ்லாமிய விரோதப் பிரசாரம் ஒன்றையும் உரை ஆதிக்கத்திற்கான தனது அடுத்தகட்ட ஆக்கிரமிப்பு முயற்சிகளையும் மேற்கொண்டது.

தன்னை உலகின் மேலாதிக்க வல்லரசாக நிலை நிறுத்துவதற்குச் சவாலாக இருந்த எந்த ஆட்சியையும் கவிழ்க்கப் பயங்கரவாதம், இராணுவச் சதி, ஆக்கிரமிப்பு உள்ளிட்ட எதையுமே பயன்படுத்த அமெரிக்கா தயங்கியதில்லை. அமெரிக்க மக்கள் அமெரிக்காவின் அயல் விவகாரங்கள் பற்றி அதிகம் அக்கறைப் படாமல் இருந்து வந்தது ஒரு புறமிருக்க, கம்யூனிஸ மிரட்டல் என்பது இரண்டாம் உலகப் போரின் பின் பயன்பட்டது. அமெரிக்காவின் உள்ளே இடது சாரிகட்கெதிரான களையெடுப்பு 1950 களில் நடந்தது. இன்று பலராலும் மறக்கப்பட்டு விட்டாலும் "மக்கார்த்தி யுகம்" பற்றிய இலக்கியப் பதிவுகள் இன்னமும் உள்ளன. வியற்நாம் போர் பற்றிய நினைவுகள் மங்கவைக்கப்பட்டு அமெரிக்காவின் கொடுமைகளை மறைத்து முக்கியமாக அமெரிக்கா வெல்லத் தவறிய ஒரு "தர்ம யுத்தமாக" அது இன்று காணப்படுகிறது. கம்யூனிஸ்ற்றுக்கள் என்று கருதப்பட்ட ஐந்து இலட்சம் பேராவது (சிலரது மதிப்பீட்டில் பத்து இலட்சம் பேர்) இந்தோனேசிய ஃபாஸிஸ நரபலி வெறியாட்டத்தில் இரையானவர்கள். இதே கதை இன்னும் எத்தனையோ நாடுகளில் எண்ணிக்கை வேறுபாடுகளுடன் அமெரிக்க வழிகாட்டலில் நடந்தேறியது.

நம்மிடையே அமெரிக்காவின் குடியரசுக் கட்சியின் தீவிர வலது சாரி நிலைப்பாட்டுக்கும் ஜனநாயகக் கட்சியின் மிதவாத நிலைப்பாட்டுக்குமிடையே வேறுபாடு தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். நல்லவர்கள் பட்டியலில் ஜோன் கெனடி, ஜிமி காட்டர், பில் கிளின்ற்றன் ஆகியோரையும் கெட்டவர்கள் பட்டியலில் றிச்சட் நிக்ஸன், ஜோர்ஜ் புஷ் தந்தையும் மைந்தனும் ஆகியோரையும் கோமாளிகள் பட்டியலில் ஜெரல்ட் ஃபோர்ட், றொனால்ட் றேகன் ஆகியோரையும் போட்டு அமெரிக்க அரசியலை விளக்குவது சிலருக்கு எளிது. ஆனால் உண்மைகள் வேறுவிதமானவை.

அமெரிக்காவின் உள்நாட்டு அலுவல்களில் முக்கியமாகச் சமூக சேவைகள், பொது மருத்துவ சேவை, வறியோர் நலன் போன்ற விடயங்களில் இரண்டு கட்சிக்கும் தோற்றப்பாடான கொள்கை வேறுபாடுகள் உள்ளன. எனினும், எல்லாக் கொள்கைகளையும் நடைமுறைப் படுத்த இயலாது செய்யவும் நடை முறைப்படுத்துகின்றவற்றை மட்டுப்படுத்தவுமென வலிமை ஏகபோக முதுலாளிய நிறுவனங்களிடம் உள்ளது. எனவே ஆட்சி மாற்றம் அடிப்படையான மாற்றமாக இல்லாதது மட்டுமன்றி அற்பளவான மாற்றமாகவே அமைகிறது.

அமெரிக்க அயல் நாட்டுக் கொள்கையைப் பொறுத்தவரை ஆட்சி மாற்றங்களால் எதுவும் மாறுவதில்லை. கெனடி ஆட்சியின் போது தான் கியூபாவில் ஆட்சிக் கவிழ்ப்புக்கான பே ஒவ் பிக்ஸ் (பன்றிக் குடா) அதிரடித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அவரது ஆட்சியின் கீழேயே அமெரிக்கா வியற்நாமில் தனது படைகளின் இருப்பைப் பெரிதும் அதிகரித்தது. ஜோன்சன் ஆட்சி கெனடி காட்டிய வழியில் தொடர்ந்தது. நிக்ஸனின் ஆட்சியில் அமெரிக்கா சமாதானத்திற்கு உடன்பட்டது என்பதன் காரணம் நிக்ஸன் சமாதான தேவன் என்பதல்ல, அமெரிக்கா வியற்நாம் போருக்குக் கொடுத்த விலை அதிகம் என்பது தான்.

புஷ் - கிளின்றன் - புஷ் என்று ஒரே அரசியற் கொள்கை தான் யூகோஸ்லாவியாவிலும் மத்திய கிழக்கிலும் கடைப்பிடிக்கப்பட்டது. எனவே, அமெரிக்காவின் எந்த ஆட்சி மாற்றமும் மூன்றாமுலகம் பற்றிய அமெரிக்கக் கொள்கையை மாற்றப் போவதில்லை. அடிப்படை உண்மையைச் சொல்லப் போனால், அமெரிக்காவை ஆளுகிறவர் அமெரிக்கச் சனாதிபதியல்லர்; அமெரிக்காவின் பாராளுமன்றத்தின் பெரும் பான்மையினரோ மூதவையின் பெரும்பான்மையினரோ அல்ல. அமெரிக்க மூலதனமே ஆளுகிறது. அண்மையில் ஈராக் போரின் நேரடி விளைவாகக் குடியரசுக் கட்சி இரண்டு அவைகளிலும் தனது பெரும்பான்மை உரிமையை இழந்தாலும் அமெரிக்கா ஈராக்கிலிருந்து வெளியேறப் போவதில்லை. அங்கு மேலும் இருபதினாயிரம் படையினர் அனுப்பப்படவுள்ளனர்.

அதை அமெரிக்காவின் ஜனநாயகமோ தெரிந்தெடுக்கப்பட்ட பெரும்பான்மை உறுப்பினர்களோ தடுத்து நிறுத்தப் போவதில்லை. ஈராக் போர் பற்றிய அமெரிக்க அரசியல் வாதிகளது விவாதம் போர் சரியானதா இல்லையா என்பது பற்றியதல்ல; போர் சரிவர நடத்தப்பட்டதா இல்லையா என்பது பற்றியதே.

அமெரிக்கா மத்திய கிழக்கில் இஸ்ரேல் நடத்திய லெபனான் மீதான தாக்குதலை நியாயப்படுத்தியது. அப்பாவி மக்கள் குண்டுவீசி அழிக்கப்பட்டதை அலட்சியம் செய்தது. பலஸ்தீன மக்கள் இஸ்ரேலின் ஆணையை ஏற்க வேண்டுமென்ற நோக்கத்தில் பல்வேறு நெருக்குவாரங்களைக் கொடுக்கிறது. இதில் எதுவும் அமெரிக்காவில் ஏற்படும் ஆட்சி மாற்றத்தால் நிற்கப் போவதில்லை.

ஈரான் மீதான போரொன்றுக்கு அது புதிய நியாயங்களைத் தேடுகிறது. அண்மையில் ஈராக்கில் அரசாங்க எதிர்ப்பு ஷியா போராளிகட்கு ஈரான் ஆயுதப் பயிற்சி கொடுப்பதாகக் குற்றஞ் சுமத்தியது. போராளிகளிடையே ஈரானியர்களைப் பிடித்துள்ளதாகவும் கூறியுள்ளது. இவையெல்லாம் எதற்கான முன்னேற்பாடுகள் என்று ஊகிக்க எவரும் அரசியல் நிபுணராக இருக்கத் தேவையில்லை. ஈரான் மீது போர் தொடுப்பதற்கு இடைஞ்சலாக ரஷ்யாவும், சீனாவும், இருப்பதால், போருக்கான நியாயங்களை உருவாக்கவும் சீனாவோ ரஷ்யாவோ ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இடையூறு செய்தால் அதற்கான மாற்று உபாயங்களை வகுக்கவும் தேவை உள்ளது. எனவே குறுகிய காலத்தில் போருக்கான வாய்ப்பு இல்லை என்றாலும் அவ் வாய்ப்பு எப்படியும் உருவாக்கப்படும் என்பதற்கு அமெரிக்காவின் அயற் கொள்கையில் நிறைய உதாரணங்கள் உள்ளன.

தமக்கு எவ்விதமான ஐயங்களும் இருக்கக் கூடாது எனவும் எதுவும் நமக்கு வியப்பூட்டக் கூடாது எனவும் உறுதிப்படுத்துகிற விதமாக அமெரிக்கா சோமாலியாவில் எதியோப்பியப் படைகள் மூலம் குறுக்கிட்டுள்ளது. அமெரிக்க விமானங்கள் குண்டு வீசி சோமாலியக் குடிமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதன் பின்பு சோமாலியாவில் அமெரிக்கச் சார்பானதும் எதியோப்பிய இராணுவ உதவி மீது முற்றாகத் தங்கியிருக்கக் கூடியதுமான ஒரு ஆட்சி உருவாகியது. அதனால் எதியோப்பியாவிற்குள்ளும் சோமாலியாவின் அண்டை நாடுகட்குள்ளும் புதிய உள்நாட்டுக் கலவரங்கள் உருவாகும் வாய்ப்பை அமெரிக்க ஏகாதிபத்தியம் எவ்வளவு தூரம் சரியாகக் கணக்கிலெடுத்திருந்தாலும், முடிவில் அமெரிக்கா தான் தூக்கிய கல்லைத் தன் கால் மீதே போட்டுக் கொள்ளப் போகிறது என்பது உறுதி. வரலாறு கூறுகிற பாடம் அது. ஆக்கிரமிப்பாளர்கள் கற்கத் தவறிய பாடமும் அதுவாகும். இலங்கையில் அமெரிக்க நோக்கங்கள் என்ன என்பதற்குப் பலவாறான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. சீனாவின் கடல் வழி வணிகத்தைக் குறிப்பாக, இந்து மா கடலின் குறுக்காகச் சீனாவின் எண்ணெய் இறக்குமதியைக், கட்டுப்படுத்துவதற்கும் தேவையான போது குறிக்கிட்டுத் தடுக்கவுமான தேவை அவற்றுள் ஒன்று. சீனக் கப்பல்கள் தரித்துச் செல்ல இந்து மா கடலில் உள்ள முக்கியமான துறைமுகங்கள் இந்தியா போலே மாலை தீவுகளிலும் இலங்கையிலுமே உள்ளன. இலங்கையில் ஒரு ஆட்சிக் கவிழ்ப்பை நடத்துவதை விடத் துரிதமாக மாலைதீவுகளில் நடத்தலாம். எனவே இலங்கையை அமெரிக்காவின் பூரண கட்டுப்பாட்டுக்குட் கொண்டு வரும் நோக்கத்தை முன்னிட்டே இலங்கையில் அமெரிக்கக் கொள்கை அமையும். அதற்கு உடன்பாடான எவ்விதமான கொடுமையும் சகிக்கப்படும்.

அமெரிக்காவுடனான இந்திய ஒத்துழைப்பு இலங்கை மீதான ஆதிக்கப் பகிர்வு பற்றிய பிரச்சினை மீதும் தங்கியுள்ளது. எனினும், அமெரிக்கா வகுக்க எண்ணும் சீன எதிர்ப்பு வியூகத்தில் இந்தியா இணையுமாயின் இலங்கை பற்றிய பிரச்சினையில் ஒத்துழைப்புக்கு மிகுந்த இடம் உண்டு. அமெரிக்கக் கணக்கிலோ இந்தியக் கணக்கிலோ தமிழ் மக்களின் நிலை முக்கியமானதல்ல என்று சொல்லி வந்திருக்கிறேன். அதனாலேயே அமெரிக்காவினதும் இந்தியாவினதும் மேலாதிக்கத் தேவைகட்கு இலங்கைத் தமிழரின் விடுதலை பொருந்தாது என நினைக்கிறேன்.

சதாம் ஹுசெய்ன் உட்பட அமெரிக்காவை நம்பி மற்றவர்களைப் பகைத்த எவரது சதியும் சதாமினதை விட நல்லதாக இருக்காது. இன்று அமெரிக்காவின் ஆசியுடனும் இந்தியாவின் மௌன அங்கீகாரத்துடனும் பேரினவாதிகள் இன ஒழிப்புப் போரில் தீவிரமாக உள்ளனர். தமிழ் மக்கள் தம்மைப் பிணைத்துக் கொள்ளத் தக்க சக்திகள் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்ட இயக்கங்கள் மட்டுமே என்ற உண்மையை நாம் மறக்கலாகாது.

__________________________________________
நன்றி: ஞாயிறு தினக்குரல் January 28, 2007

Labels:


Get your own calendar

Links