« Home | சிங்களவரிடமுள்ள இனப்பிரச்சினைத் தீர்வு » | பேச்சுவார்த்தையும் பேய்க்காட்டலும் » | புலிகளின் பலம் மக்கள் சக்தியே » | ரணில் - மகிந்த கூட்டு ஒப்பந்தம் » | ஈழத்தமிழரின் நேச சக்திகள் » | ஆனந்தசங்கரிக்கு யுனெஸ்கோ வருது கிடைத்தது எப்படி? » | இந்தியாவின் நோக்கம் என்ன? » | மகிந்தவின் முகங்கள் » | மறுபக்கத்தின் நேர்முக தரிசனம் » | கிளிநொச்சி மீட்பு நடந்தது எவ்வாறு? »

அணுவாயுதப் பரிசோதனை அரசியல்

மறுபக்கம் - கோகர்ணன்

அமெரிக்க மிரட்டலை அலட்சியப்படுத்தி, வடகொரியா அணு ஆயுதமொன்றைப் பரிசோதித்துள்ளது. ஐ.நா.பாதுகாப்புச் சபை அதைக் கண்டித்தும் வட கொரியா மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்தும் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது. வடகொரியா அசைந்து கொடுக்கவில்லை. இப்போதைக்கு இன்னொரு பரிசோதனையை நடத்துகிற நோக்கம் இல்லை எனவும் அமெரிக்காவின் ஆயுத மிரட்டல் வலுப்படும் பட்சத்தில், பரிசோதனைகளைத் தொடருகிற உரிமையையும் வலியுறுத்தியுள்ளது. வடகொரியா மனவருத்தம் தெரிவித்தது எனவும் இன்னொரு பரிசோதனையை நடத்தப் போவதில்லை எனவும் மேலை நாட்டு ஊடகங்கள் தெரிவித்த செய்திகளை வடகொரியத் தலைவர்களைச் சந்தித்த சீனப் பிரதிநிதிகள் மறுத்துள்ளனர்.
சீனாவும் இந்தியாவும் உட்பட ஏற்கனவே அணு ஆயுதங்களை வைத்திருக்கிற நாடுகள் யாவும் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையைக் கண்டித்துள்ளன. அணு ஆயுதங்களைக் கொண்டிராத ஐரோப்பிய நாடுகள் பலவும் வடகொரியாவைக் கண்டித்துள்ளன. ஜப்பான் மிகுந்த கவலை தெரிவித்து பொருளாதாரத் தடைகளை வரவேற்றுள்ளது. இவற்றுக்கெல்லாம் சொல்லப்படுகிற காரணம், அணு ஆயுதப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துகிற நோக்கம் என்றாலும், உண்மையான காரணம் வேறு. அது பற்றி அதிகம் இரகசியமில்லை.

உலகின் முதலாவது அணு ஆயுத வல்லரசு அமெரிக்கா. மக்களைக் கொன்றொழிப்பதற்காக அணு ஆயுதங்களை இதுவரை பயன்படுத்தியுள்ள ஒரே நாடும் அமெரிக்கா தான். அது மட்டுமன்றி, அணு உலைகளிலிருந்து பெறப்பட்ட கதிரியக்கங் கொண்ட உலோகங்கள் கொண்ட ஏவுகணைகளை ஈராக்கில் பயன்படுத்தியதும் அமெரிக்கா தான். அதன் விளைவாக பத்தாயிரக் கணக்கானோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். ஆயிரக் கணக்கான குழந்தைகள் புற்றுநோய் உட்பட கடும் உபாதைக்குட்பட்டுள்ளார்கள். 1950 களின் பிற்பகுதியில் அமெரிக்கா சீனாவுக்கு எதிரான அணு ஆயுத மிரட்டலை விடுத்த போது, மாஓ அணுகுண்டு ஒரு காகிதப்புலி என்று தைரியமாகக் கூறினார். அதேவேளை, அமெரிக்கா சீனாவைத் தாக்க முற்பட்டால் அதற்குப் பதிலடியாகத் தாக்கச் சீனாவை ஆயத்தப்படுத்தும் தேவையை அறிந்திருந்தார். சோவியத் யூனியனில் குருஷ்ச்சொவ் அதிகாரத்திற்கு வந்தபின்பு, அமெரிக்காவுக்கு எதிராகச் சீனாவை சோவியத் யூனியன் பாதுகாக்க வாய்ப்பில்லை என்பதனால், சீனா தனது பாதுகாப்பை உறுதிப்படுத்துகிற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. தரைக் கீழான நீண்ட சுரங்க அறைகளும் பாதைகளும் மக்களின் பாதுகாப்புக்காக கட்டப்பட்டன. சீனா 1963 அளவில் தனது அணு ஆயுதப் பரிசோதனையை வெற்றிகரமாக நடத்தியவுடன் ஏற்கனவே அணு ஆயுதங்களை வைத்திருந்த அமெரிக்காவும் பிரித்தானியாவும் அதைக் கண்டித்தன. சோவியற் யூனியன் தனது அதிருப்தியைத் தெரிவித்தது. அமெரிக்காவுடனும் பிரித்தானியாவுடனும் முரண்பட்டிருந்த பிரான்ஸ் அணு ஆயுதப் பரிசோதனைகளை நடத்தச் சீனாவுக்கு இருந்த உரிமையைக் கேள்விக்குட்படுத்த மறுத்தது. அதேவேளை, சீனா எந்த நிலையிலும் அணு ஆயுதங்களை எந்த ஒரு நாட்டுக்கும் எதிராக முதல் முதலாகப் பாவிக்கப் போவதில்லை என்று அன்று அளித்த உறுதிமொழி இன்றுவரை தொடர்ந்தும் இருக்கிறது. மறுபுறம், அமெரிக்காவும் சோவியத் யூனியனும் அணு ஆயுதப் போட்டியில் தீவிரமாக இருந்தன. இது கெடுபிடி யுத்தத்தின் போது சோவியத் அமெரிக்க ஒத்துழைப்பு பற்றி பேசப்பட்ட சூழ்நிலையிலும் தொடர்ந்தது. அணு ஆயுதக் குறைப்பு பற்றிய உடன்படிக்கைகள் ஏற்பட்ட போதும் பழைய ஆயுதங்களின் இடத்தில் புதிய, பாரிய ஆயுதங்கள் வந்தனவே ஒழிய, அணு ஆயுத வலிமை குறைக்கப்படவில்லை.

ஆயுதப் போட்டியின் விளைவாகவும் தவறான பொருளியற் கொள்கைகளாலும் சோவியத் பொருளாதாரம் சீர்குலைந்து சோவியற் யூனியனின் செல்வாக்கு நலிந்து சோவியத் யூனியன் உடைந்த பின்பும் அமெரிக்கா தனது அணு ஆயுத வல்லமையை மேலும் அதிகப்படுத்தி வந்துள்ளது ஏன்? அது அமெரிக்காவின் பாதுகாப்புக்காகவா? நிச்சயமாக இல்லை. உலக நாடுகள் மீது போர் மிரட்டல் தொடுத்து தான் எண்ணியதைச் சாதிக்கிற போக்கைக் கொண்ட அமெரிக்கா பெரும் தொகையான ஆயுதங்களை வைத்திருப்பது பிற நாடுகளை மிரட்ட மட்டுமே. அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக் கரமான இஸ்ரேலிடம் அணு ஆயுதங்கள் நிறைய இருப்பதும் அதற்காகவே.

இந்தியா சோவியத் யூனியனின் ஆதரவையும் சோவியத் யூனியனுடன் பாதுகாப்பு உடன்படிக்கை ஒன்றையும் கொண்டிருந்த காலத்திலேயே 1974 இல் இந்தியாவின் முதலாவது அணு ஆயுதப் பரிசோதனை நடந்தது. இன்று அணு குண்டைப் பரிசோதித்துள்ள வடகொரியாவுக்கும் சமாதான நோக்கங்கட்காக அணு வலுவைப் பயன்படுத்துவதாக உறுதி கூறியுள்ள ஈரானுக்கும் எதிராக விடுக்கப்படுகிற மிரட்டல்கள் போல, இந்தியாவுக்கு எதிராக மிரட்டல்கள் விடுக்கப்படவில்லை. ஆனால், இந்திய அணு ஆயுதப் பரிசோதனையை மேற்கு நாடுகள் கண்டித்தன. சோவியத் யூனியன் கண்டிக்கவில்லை. தென்னாசியாவில் அணு ஆயுதப் போட்டி உருவாகி அப்பகுதியின் பாதுகாப்பு மிரட்டலுக்குள்ளாவது பற்றிச் சீனா கவலை தெரிவித்தது.

இந்தியாவின் அணு ஆயுதத் திட்டம் எந்த வெளிமிரட்டலுக்கும் எதிராக மேற்கொள்ளப்படவில்லை. இந்தியாவை ஒரு பிராந்திய வல்லரசாக அறிவிப்பதே அதன் நோக்கமாயிருந்தது. அதன் தொடர் விளைவாகவே பாகிஸ்தானிய அணு ஆயுதப் பரிசோதனை நடந்தது. பாகிஸ்தானின் அணு ஆயுதப் பரிசோதனையை நமது தமிழ் ஊடகவியலாளர்களும் தமிழ்த் தேசிய வாதிகளும் கண்டித்திருந்தனர். ஆனால், இந்தியாவின் அணு ஆயுதப் பெருக்கமும் அதன் ஏவுகணைகளின் விருத்தியும் அவர்கட்குப் பிரச்சினையாக இருந்ததில்லை.

ஆழ்ந்து நோக்கினால், இந்தியாவையும் அமெரிக்காவையும் மேற்கு ஐரோப்பாவையும் குறிப்பாகப் பிரித்தானியாவையும் பற்றிய மூட நம்பிக்கை ஒன்று இன்னமும் தமிழ்ச் சமுதாயத்தைப் பீடித்திருப்பதைக் காணலாம். கம்யூனிட் என்பது தீயது என்பதே நமது தலைவர்களதும் ஊடகங்களதும் மாறாத எண்ணமாகவும் தெரிகிறது. இது ஏன்? கம்யூனிஸ்ற்றுகள் மட்டுமில்லாமல் சோஷலிசச் சிந்தனை உள்ளவர்களும் பகையுடனேயே நோக்கப்பட்டு வருகின்றனர். இது நமது சமூகத்தின் தலைமைத்துவம் பற்றி எதைச் சொல்கிறது?

தமிழ் மக்களின் மீது தொடுக்கப்பட்ட இன ஒழிப்புப் போருக்கு நேரடியாகவே உதவி செய்துள்ள அமெரிக்காவையும் இஸ்ரேலையும் விமர்சிக்க தமக்குத் திராணி இல்லை. இந்திய அதிகார வர்க்கத்தின் நோக்கங்கள் தெரிந்தும் அதைப் பூசிமழுப்பி மொண்னதையான நியாயங்கள் கொண்டு சரிக்கட்ட ஆயத்தமாக உள்ள அளவுக்கு, அவை பற்றி மக்களுக்கு விளக்க நமது சமூக, அரசியல் தலைமைகள் ஆயத்தமாக உள்ளனவா? தமிழ் மக்களின் விடுதலைக்கு ஐரோப்பிய நாடுகள் உதவும் என்கிற நம்பிக்கை விடுதலைப் புலிகளின் மீதான தடைக்குப் பிறகும் தொடருவது எப்படி? நாங்கள் யாரை நம்புவது? நமது நண்பர்கள் யார்? நமது எதிரிகள் யார்?

தமிழர்கட்குக் கிரக பலன் பற்றி பத்திரிகைகள் சொல்லுகிற அளவுக்கு நம்மைச் சூழ உள்ள உலகம் பற்றிச் சொல்லுவதில்லை. மற்ற நாடுகள் அனுபவிக்கின்றவற்றை நாமும் அனுபவிக்கக் கூடும் என்று மக்களைச் சிந்திக்கத் தூண்டுவதில்லை. பழைய வாய்ப்பாடுகட்குள்ளேயே பத்திரிகை உலகம் சுருண்டு கிடக்கிறது.

பலஸ்தீனமும், நேபாளமும் லெபனானும் ஈராக்கும் ஆப்கானிஸ்தானும் வேறொரு உலகிலோ வேறோரு யுகத்திலோ இல்லை. நமக்கு நடப்பதும் நடக்கப் போவதும் ஏலவே பிறர்க்கு நடந்தவையும் நடந்து கொண்டிருப்பவையுந் தான். நேபாள மக்களின் விடுதலையிலும் பலஸ்தீன மக்களின் உரிமைகளிலும் லெபனானின் இறைமையிலும் குறுக்கிடுவோரும் ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் பேரழிவுப் போரை நடத்துவோரும் அவற்றுக்கு நேரடியாயும் மறைமுகமாயும் உதவுவோருக்கு என்றென்றைக்கும் நமக்கு நண்பர்கள் அல்ல. எந்த வகையிலும் நாம் நம்பக் கூடியவர்களுமல்ல.

நேபாள விடுதலைப் போராளிகளைப் பயங்கரவாதிகள் என்று சொல்லிக் கொண்டு நேபாள மக்களால் வெறுக்கப்படுகிற நேபாள இராணுவத்தின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திக் கொண்டு நேபாள போராளிகளின் தலைமையை மிரட்டிப் பணிய வைக்கப் பார்த்து மூக்குடைபட்ட றிச்சட் பவுச்சர் இலங்கை வந்தார். அவர் என்ன சொல்லுவார் என்பது நேபாளத்தில் அவரது சாகசங்களை அறிந்த எவரும் அறிந்த விடயம். ஆனால், அவரது வாயிலிருந்து விழப் போகிற முத்துகளுக்காக இங்கே நமது தலைவர்களும் ஊடகங்களும் வாய்பிளந்து காத்துக் கிடந்தார்கள். அவர் மாவோவாதிகட்கு சொன்னதற்கும் தமிழ் மக்களுக்குச் சொன்னதற்கும் அதிகம் வேறுபாடு இருக்கவில்லை. ஏன் இருக்க வேண்டும்!

அமெரிக்க ஏகாதிபத்திய விஸ்தரிப்பு நோக்கங்கட்குத் தடையாக இல்லாதளவில் எந்த அரச பயங்கரவாதமும் அமெரிக்காவின் தண்டனைக்குரியதல்ல. யு.என்.பி.-பொதுசன முன்னணி ஒத்துழைப்பு இல்லாமலே தமிழர்களுக்கு எதிரான தனது நடவடிக்கைகளைத் தொடர்ந்து வந்துள்ள அமெரிக்காவிடமிருந்து தமிழ் மக்கள் எதை எதிர்பார்க்க இயலும்? சிலர் நம்ப விரும்புவது போல செப்டெம்பர் 11 தாக்குதலின் பின்பு தான் அமெரிக்கா `பயங்கரவாதத்திற்கு' எதிரான கடும் போக்கை எடுக்கவில்லை. அமெரிக்காவுக்கு எதிரான எந்த அரசையும் கவிழ்க்கிற நோக்கத்திற்காக என்ன கொலை பாதகத்தைச் செய்தாலும் அது விடுதலைப் போராட்டம்; அமெரிக்க நோக்கங்கட்கு உதவாத எந்த விடுதலைப் போராட்டமும் பயங்கரவாதம். இது மிகவும் சுலபமாக விளங்கிக் கொள்ள இயலுமான விதி என்பதால் இது தவறானதாகிவிட்டது.

கியூபா ஆகட்டும், வட கொரியா ஆகட்டும், ஈரான் ஆகட்டும், வெனிசுவேலா ஆகட்டும்-அமெரிக்காவுக்கு அதன் எடுபிடிகளான உலக அமைப்புகட்கும் கூட்டாளிகட்கும் எதிராக நிமிர்ந்து நிற்பதை விட அவை வாழ வேறு வழியில்லை. அமெரிக்காவையும் அதன் கூட்டாளிகளையும் மகிழ்வித்து ஒரு விடுதலை கிடைக்கப் போவது இல்லை. அமெரிக்க உதவியுடன் எது கிடைத்தாலும் அது விடுதலையாக இருக்கப் போவதுமில்லை.

எந்த விடயத்திலும் அமெரிக்க நிலைப்பாடு அமெரிக்க மேலாதிக்க நோக்கங்களால் மட்டுமே வழிநடத்தப்படுகிறது. விடுதலை என்பது எல்லா மேலாதிக்கங்கட்கும் பணிய மறுப்பதைப் பற்றியது.

_____________________________________
நன்றி: ஞாயிறு தினக்குரல் November 05, 2006

_____________________________________________

Labels:


Get your own calendar

Links