« Home | ஈழத்தமிழரின் நேச சக்திகள் » | ஆனந்தசங்கரிக்கு யுனெஸ்கோ வருது கிடைத்தது எப்படி? » | இந்தியாவின் நோக்கம் என்ன? » | மகிந்தவின் முகங்கள் » | மறுபக்கத்தின் நேர்முக தரிசனம் » | கிளிநொச்சி மீட்பு நடந்தது எவ்வாறு? » | திலீபனின் இறுதி உரையிலிருந்து... » | கேணல் சங்கர் » | திலீபனுடன் பன்னிரெண்டாம் நாள் - 26.09.1987 » | திலீபனுடன் பதினோராம் நாள் - 25.09.1987 »

ரணில் - மகிந்த கூட்டு ஒப்பந்தம்

மறுபக்கம் - கோகர்ணன்

அரசியலில் பரஸ்பர அவநம்பிக்கைக்கும் ஏமாற்றுகிற நோக்கங்கட்கும் ஏதோ வகையில் புரிந்துணர்வு உடன்படிக்கைகளுடன் நல்ல உறவு இருக்க வேண்டும். விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்குமிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையில் ஏ-9 பாதையைத் திறப்பதை விட எதுவுமே முழுமையாகவோ, ஏன் நியாயமாக ஏற்றுக் கொள்ளக் கூடியளவு திருப்திகரமாகவோ நிறைவேற்றப்பட்டதாகச் சொல்ல இயலவில்லை. அமைதிப் பேச்சுவார்த்தைகள் பலவும் தொற்றுப் பறியில் இருந்து அறுந்தறுந்து இழுபட்டு அழிந்துள்ளன. புரிந்துணர்வு உடன்படிக்கை தேசிய இனப் பிரச்சினையின் தீர்வின் அவசியம் பற்றிய புரிதலின் விளைவானதென நான் என்றுமே நம்பவில்லை. பலவேறு கட்டாயங்களின் விளைவாகவே அது ஏற்பட்டது. எனினும், அது அவசியமானதும் மக்களுக்கு நன்மையானதுமான ஒரு நடவடிக்கை என்பதில் எனக்குக் கருத்து வேறுபாடு இல்லை. அது சரியாக நடைமுறைப்படுத்தப்படுமா என்பதில் எனக்கு மிகுந்த ஐயங்கள் இருந்தன. ஆயினும் அதை நடைமுறைப்படுத்துவதற்கு எல்லாரும் தம்மாலானதைச் செய்ய வேண்டும் என்ற ஆவல் இருந்தது. தேசிய இனப் பிரச்சினையின் தீர்வுக்கான தேவை இன்னமும் மிகவும் தவறான கோணங்களிலிருந்தே அடையாளங் காணப்பட்டு வருகிறது.

ஜனாதிபதி ராஜபக்‌ஷ ஒரே நேரத்தில் ஜே.வி.பி. யுடனும், ஹெல உறுமயவுடனும் புரிந்துணர்வு உடன்படிக்கைகளைச் செய்ததோடு பலரும் பலவிதமாக வியாக்கியானஞ் செய்யக் கூடியதான ஒரு மகிந்த சிந்தனையையும் முன் வைத்தார். என்றாலும், ராஜபக்ஷவின் நோக்கம் அமைதியான தீர்வல்ல என்பதற்கான அறிகுறிகள் வெகு விரைவிலேயே தெளிவாகின. விடுதலைப் புலிகளுக்கும் படையினருக்குமிடையிலான மோதல்களும் விடுதலைப் புலிகளுக்கும் துணைப்படையினருக்குமான மோதல்களும் அரசாங்கத் தரப்பிலும் விடுதலைப் புலிகளின் தரப்பிலும் போதியளவு விட்டுக் கொடுப்பு மனப்பாங்கு இருந்திருந்தால் தவிர்த்திருக்கக் கூடியவை. எனினும், தேசிய இனப் பிரச்சினையின் தீர்வுக்கு எதிராகச் செயற்படுகிற சக்திகளின் வலிமை போர் நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்டபோது தோற்றத்தில் தான் குறைந்ததே ஒழிய, உண்மையில் அச்சக்திகட்கு அது ஒரு தற்காலிகப் பின்னடைவு மட்டுமே. அந்தச் சக்திகளைப் பலவீனப்படுத்துவதற்கான அரசியல் நடவடிக்கைகளை எடுப்பதில் பிரதான அரசியல் கட்சிகட்கு எந்தவிதமான அக்கறையும் இருக்கவில்லை. ஏனெனில், அவையும் அம்முயற்சிகளின் விளைவாக இழப்புகளைச் சந்திக்கும் ஆபத்து இருந்தது. பிரதான தமிழ் அரசியல் தலைவர்கள் தமது பராளுமன்ற நாற்காலிகள் பற்றியும் இந்தியாவையும் விடுதலைப் புலிகளையும் ஒரே நேரத்தில் எப்படி மகிழ்விப்பது என்பது பற்றியும் காட்டிய அக்கறையில் சிறு பகுதியையேனும் சமூக நீதி பற்றி அக்கறையுள்ள சக்திகளை அணி திரட்டுவது பற்றிக் காட்டவில்லை. மலையகத் தலைமைகளின் அரசியல் வறுமை தன்னை மேலும் மேலும் மோசமாகக் காட்டிக் கொண்டது. கிழக்கு முஸ்லிம் தலைமைகளின் அக்கறை முஸ்லிம் மக்களின் நலன்களை விட முக்கியமாகத் தங்களது சொந்த நலன்களைப் பற்றியது என்பது மேலும் தெளிவாக்கப்பட்டது.

கடந்த சில வாரங்களுள் நடந்த அரசியல் சோடி மாற்றங்கள் எந்த விபசார விடுதியையும் வெட்கித் தலை குனிய வைத்திருக்கும். பேரினவாதச் சிந்தனையும் அரசியல் விரக்தியும் இலங்கையின் ட்ரொட்ஸ்சியத்தின் தங்கை என்று சொல்லப்பட்ட பிலிப் குணவர்தனவை யூ.என்.பி. யுடன் கூட்டாளியாக்கியது. என்றாலும், பிலிப்பின் மனதில் கொஞ்சம் உறுத்தல் இருந்தது என்றே அவரது பேச்சும் செயலும் உணர்த்தின. எப்படியும் பிலிப் 1960 ஜூலை தேர்தலின் பின்பு அரசியல் செல்லாக்காசாகியதையடுத்து ஏற்பட்ட அவரது தடுமாற்றத்துக்கு எவ்விதமான பெறுமதியும் இருக்கவில்லை. இன்றைய நிலைமைகள் கொஞ்சம் வித்தியாசமானவை. ஒவ்வொரு கட்சிக்குள்ளும் குத்து வெட்டுகள் நடக்கின்றன. கட்சித் தாவல்கள் வழமைபோல ஆளுங்கட்சியின் திசையில் நடக்கின்றன. ஆட்சிக் கவிழ்ப்புக்கான பண்டமாற்றுக்களின் போது அவை எதிர்த் திசையிலும் நடக்கலாம். இவையெல்லாம் 1978 வரை மிக அரிதாக நடந்தவை. அதன் பின்பு ஆணைப் பெண்ணாக்கவும் பெண்ணை ஆணாக்கவும் மட்டுமே இயலாத அரசியல் யாப்பின் கீழ் எத்தனையோ அற்புதங்கள் நடந்தேறினாலும், இன்றைய கோமாளிக் கூத்துகட்கு இந்த நாடு அன்று நிச்சயமாக ஆயத்தமாக இருந்திராது.

ஜே.வி.பி., பொதுசன முன்னணி ஊடலின் இறுதி அத்தியாய முடிவில் முற்றுமுழுதான பிரிவு ஏற்படும் முன்னமே ஜே.வி.பி. க்கும், யூ.என்.பி. க்கும் இடையிலான உடன்பாடு காணப்பட்டதாகச் செய்தி வெளிவந்தது. பொதுசன முன்னணி- யூ.என்.பி. தேசிய அரசாங்கம் பற்றிய கதையும் வெட்ட வெட்டத் தழைத்து வந்தது. ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கை, இப்பத்தி அச்சாகு முன்னரே ஏற்படலாம். தமிழ் ஊடகங்களிலும் சகல தமிழ் அரசியல் தலைவர்கள் மத்தியிலும் ஒரளவுக்கு முஸ்லிம் தலைமைகளிடையிலும் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம். என்றாலும் நாம் கவனிக்க வேண்டிய விடயம் ஏதெனில், மூன்று பேரினவாதக் கட்சிகளாலும் ஒன்றோடொன்று இணைந்து செயற்பட இயலுகின்றது. இந்த நிலையில், இந்த மூன்று கட்சிகளையும் வேறு படுத்துவது என்ன? நிச்சயமாக அடிப்படையான அரசியல் வேறுபாடல்ல.

இந்த அரசியல்வாதிகள், சோமவன்ஸ அமரசிங்ஹ ஒரு நிர்ப்பந்தத்தின் கீழ் மிகவும் சரியாகச் சொன்னபடி, விபசாரிகளை விடக் கீழானவர்கள். அதுமட்டுமல்ல, என் கருத்தில், விபசார விடுதிகளை நடத்துகிற சமூக விரோதிகளை விடக் கீழானவர்கள். ஒரு விப சாரி தன் வயிற்றுப் பிழைப்புக்காகவோ தன் குடும்ப நலனுக்காகவோ தன்னை அழித்துக் கொள்ளுகிற ஒரு பிழைப்பில் ஈடுபடுகிறார். இந்தத் தலைமைகள் முழுக் சமூகங்களையல்லவா சிதைத்துப் பிழைப்பு நடத்துகிறார்கள். உண்மையில் இந்த மூன்று கட்சிகளும் ஹெல உறுமயவும் சேர்ந்து ஒரு தேசிய அரசாங்கம் அமைத்தாலும் நாட்டின் எந்தப் பிரச்சனையும் தீரப் போவதில்லை. எனவே தான் தமிழ்மக்கள் இந்தக் கொடுக்கல் வாங்கல்கள் பற்றித் தம்மை அதிகம் அலட்டிக் கொள்ள வேண்டிய தேவை இல்லை. முஸ்லிம் மக்களுக்கோ மலையக மக்களுக்கோ, கூட இதனால் ஒரு பாதிப்புமில்லை. அதை விடவும், சிங்கள மக்களுக்குக் கூட எதுவிதமான மாற்றமும் ஏற்படப் போவதில்லை. இந்த அரசியற் கட்சிகளில் எதுவுமே இந்த நாட்டின் மக்களின் நலனில் அக்கறையுடையவையல்லயென்பதை இப்போதைக்கு நாம் எல்லோருமே அறிந்திருக்க வேண்டும்.

ஜே.வி.பி.யை யாரும் மாக்ஸியவாதிகள் என்று அழைக்கிறார்கள் என்றால், அவர்கட்கு அபரிமிதமான நகைச்சுவை உணர்வு இல்லாத பட்சத்தில், அவர்களது நோக்கம் பற்றி நாம் ஜயப் பட வேண்டும். அல்லது அவர்களது அறிவுத்திறன் பற்றி ஜயப்பட வேண்டும். யூ.என்.பிக்கும், ஸ்ரீ.ல.சு.கட்சிக்குமிடையில் வேறுபாடுகள் காற்றோடு கலந்து பல ஆண்டுகளாகி விட்டது. பாராளுமன்றம் என்பது கள்வர் குகை என்று லெனின் சொன்னதாக நினைவு. நிச்சயமாக அவர் பாராளுமன்றத்தின் தகுதியை அதிகமாக மதிப்பிட்டுவிட்டார். என்றே நினைக்கிறேன். கள்வர்களிடையே கொஞ்சம் சுய கௌரவத்துக்கும் வாக்குச் சுத்தத்துக்கும் இடமுண்டு. என்றாலும் இன்றிருக்கிற பாராளுமன்ற அரசியலுக்கு மாற்று இராணுவ ஆட்சியோ, வேறு சர்வாதிகாரமோ அல்ல. இந்த நாட்டுக்குத் தேவையானவை உண்மையான சனநாயகம், உண்மைகளைத் சொல்லத் தயங்காத வஞ்சகமற்ற ஊடகங்கள், தமது வாழ்வு பற்றிய முடிவுகளை மக்களே எடுக்க அனுமதிக்கக் கூடிய அதிகாரப் பரவலாக்கம், இப்படி நிறையச் சொல்லலாம்.

ஏறத்தாழ ஒரு செயலூக்கமான எதிர்க்கட்சியுமில்லாமல் 17 ஆண்டுகளாக ஆட்சி நடத்திய யூ.என்.பி.இந்த நாட்டைப் பொருளாதாரச் சீர் குலைவுக்கும் அந்நிய ஊடுருவலுக்கும் போருக்கும் சமூகச் சீரழிவுக்கும் தான் கொண்டு சென்றது. அதிலிருந்து மீள் வதற்கான நோக்கமோ, மார்க்கமோ இல்லாத கட்சிகள் தான் ஆதிக்கத்திலுள்ளன. நமக்கு முன்னால் உள்ள தெரிவுகளை இந்தக் கட்சிகட்குள் மட்டுப்படுத்திவிடக் கூடாது என்பதற்கும் அப்பாற் சென்று, இந்த அரசியல்முறைக்குள் மட்டுப்படுத்தக் கூடாது என்பதை வற்புறுத்த விரும்புகிறேன்.

எந்த விதமான தேசிய அர சாங்கமும் தேசப்பற்றால் அமைக்கப்பட வில்லை என்கிறதையும் ஒரு சிறுபான்மையின நலன்கட்காகவே அரசு செயற்படுகிறது என்கிறதையும் மக்கள் தெளிவாக அறிவதற்கான ஒரு வாய்ப்பை யூ.என்.பியும் பொதுசன முன்னணியும் முன்னெடுக்கவுள்ள எந்த ஒத்துழைப்பும் வழங்கும். அது கெட்ட விஷயமல்ல.

தமிழ் மக்களின் விமோசனம் சிங்களப் பேரின அரசியல்வாதிகள் பிளவுபட்டிருப்பதில் தங்கியிருக்கிறது என்பது தமிழ்க் காங்கிரஸ், தமிழரசுக் கட்சியுகத்து அரசியற் கனவு - அது எப்போதோ பொய்த்துப் போய் விட்டதும். தமிழரின் விமோசனம் இந்த நாட்டின் சகல தேசிய இனங்களதும் ஒற்றுமையில் தங்கியுள்ளது என்பது என் எண்ணம். அதை அடையும் வழி எளிதல்ல.

தமிழ் மக்களின் விடுதலைக்கான போராட்டம் முழுநாட்டினதும் சனநாயகத்துக்கான போராட்டத்தின் முக்கியமான பகுதியாக அமையும் வாய்ப்பைப் பற்றி நாம் ஆழச் சிந்திக்க வேண்டும். ஏனெனில் நாட்டை எதிர் நோக்குகிற மிரட்டல்கள் மிகவும் பெரியன.

___________________________________
நன்றி: ஞாயிறு தினக்குரல் October 22, 2006



_____________________________________________

Labels: