Saturday, August 13, 2005

ஈழத்துக் கவிதைகள் சில.

கீழ்க்கண்ட கவிதைகள் ஈழவிடுதலைப் போராளிகளாலும் அது சார்ந்தவர்களாலும் எழுதப்பட்டவை. இவையும் ஈழத்துக் கவிதைகள் பரப்புக்குள் வருமென்று நினைக்கிறேன்.

முதலில் புதுவை இரத்தினதுரை தன் 'நினைவழியா நாட்கள்’ கவிதைத் தொகுப்புக்கு முன்னுரையாக எழுதியதன் ஒரு பகுதி. தன் கவிதைகள் எரிக்கப்பட்டன் ஆத்திரத்திற் சொல்கிறார் இப்படி:

“இராமாயண காவியம் மெய்யானால்
அநுமானே
எம்மண்ணில் ஆதியில் கால்வைத்த
ஆக்கிரமிப்பாளன் ஆகிறான்.
பொய்யானால்
வால்மீகியின் ஆதிக்க உணர்வைக் கண்டு எனக்கு
ஆத்திரம் வருகின்றது.

பாரதப்படைகள் இங்கு வந்த ஒவ்வொரு தடவையும்
எங்கள் மண் பற்றியெரிந்தது.
எல்லோரையும் போலவே
பாரதப்படைகளை
நானும் என் பரம்பரையும் மறக்க மாட்டோம்;
மன்னிக்க மாட்டோம்.

நானெழுதி வைத்த
எண்ணிலடங்காக் கவிதைகளையும்
என்னைத்தேடி வீடு வந்த இந்தியச் சிப்பாய்கள்
எப்படிச் சிதைக்க முடியும்?
கைநடுங்காமலும் மெய் பதறாமலும்
என் கவிதைகளை எப்படி எரிக்க முடிந்தது?

தகனத்தின் பின் தளிர்த்தவைகளும்
நினைவில் நிழலாடி நின்றவைகளும்
பலரின் வீடுகளில் படுத்திருந்தவைகளும்
நண்பர்களால் தேடிச் சேர்த்தபின்
‘நினைவழியா நாட்கள்’ என்றாகியுள்ளது.”
---------------------------------------------------

அடுத்து உமா ஜிப்ரானின் கவிதையொன்று.
வன்னியிலிருந்து எழுதிய இளைய படைப்பாளி.
செம்மணி கவிதைத் தொகுப்பிலிருந்து ஒரு கவிதை.

சிலுவையூன்றாச் சவக்காலை.

கழுத்தை வளைத்தசுருக்குக் கயிற்றைப் பழிதீர்க்க
துர்நாற்றம் மிகுந்த உண்மைகளை
*மண்தூர்த்தகைகள் கக்கின.
உண்மைகள்

காணாமற்போன மனிதர்களைப்
பிணங்களாய்க் கிளர்த்தின.
மண்ணகழ்ந்த கிடங்குகளில்
மனிதர்களை நிரவி
செம்மணிவயலில் சாவிளைத்த இராணுவச் சாகசம்
சந்தி சிரித்தது.

உயிர்ப்பொறை உரியுண்டு உயிர்சுண்டிய
எம் புருஷர் தேகப்பொதிகள்
செம்மணியின் ‘கள்ளறை’யிலிருந்து புகைந்தன.
வனப்புமிகு எம் பெண்டிர்
தசைபுசித்த வெறியுடல்கள்
தசைகுளிரும் பொழுதுவரை புசித்த
தசைவெறி உடல்கள்
செம்மணியின் பசியமண்ணில் பதனமிட்ட பிண்டங்கள்
தெருக்களில் சம்மணமிட்டு வார்த்தையாடின.

குழிகளிற் புழுத்த
உடல்கிளைத்த வயிறுகளின்
ஒப்பாரிப்பாடல்பெற்ற தலமாயிற்று செம்மணி.

சுடலை மூடிச் சுடர்ந்த செம்மணியின்
சிலுவையூன்றாச் சவக்காலைக் குரூரம்
மனங்களைத் தின்றது.

கம்பிச் சிறையொன்றுள்
உயிரைக் கிடுக்கிக் கிடக்கும் என்ற
குருதித் துயர் தேற்றலில்
அழுகிய குருதி நாறிற்று.

கண்ணிலொற்றிய தாலிகள் அறுந்தன.
சுமந்த சூலறைகள் கருவழிந்தவாறாய்க் கலங்கின.
உண்டியொழித்து
வயிறு சுண்ட நோற்ற நோன்புகள் பொய்த்தனவா?

பிணவீச்சம் கமழ வெட்டியான்கள் பவனிவருகிறார்கள்
எந்த ஒப்பனைகளாலும் முடியவில்லை
சவக்களை பொருந்திய முகங்களைச் சிங்காரிக்க.

வயல்வெளிகளில் இடுகாட்டின் அமைதியுறைகிறது.
சொப்பனங்கள் வியர்க்க
நெற்குலைகள் பிணங்களாய் ஊசலிடுகின்றன.
நடுநிசிமயமான பல்லிடுக்கில் கந்தலாகக் கழிகிறது இருப்பு.

சிலுவையூன்றாச் சவக்காலைக்கிரையாகுமோ வாழ்வு?
வாழ்வைச் சப்புகிறது எண்ணம்.

*மண்தூர்த்தகைகள்:-

நீதிமன்றத்தில் கொல்லப்பட் தமிழர்களின் 400 வரையான உடல்களைத் தாம் செம்மணியிற் புதைத்ததாக வாக்குமூலமளித்த படைவீரன் சோமரட்ண ராஜபக்ஷ.


---------------------------------------------------------

சோமரண்ட ராஜபக்ஷவின் வாக்குமூலத்தின் பின் செம்மணியில் ஓரு கண்துடைப்பு "அகழ்வாராய்ச்சி" நடத்தப்பட்டது. அதுவும் பலமாதங்கள் கழித்து. இதற்கிடையில் செம்மணிப் பாதை முற்றாகத் தடை செய்யப்பட்டது. யாரும் அருகே நெருங்காவண்ணம் பார்த்துக் கொள்ளப்பட்டது. செம்மணியிலிருந்து நாளாந்தம் புகைமூட்டங்கள் எழும்புவதாக மக்காளால் புகார் சொல்லப்பட்டது. இடையில் ஒரு மாரிகாலம் வந்து அடுத்த கோடையில் 'அகழ்வாராய்ச்சி' நடத்தப்பட்டது. பின் சில எலிகளின் எலும்புக்கூடுகளும் இரு மனித எலும்புக்கூடுகளும் கண்டெடுக்கப்பட்டதாகச் செய்தி வெளியாகியது. இது சம்பந்தமான ஒரு கவிதை.

இருபத்தொராம் நூற்றாண்டில்
காலடி வைப்பதற்காய்
இருவிழி முடாது காத்திருக்கும்
இவ்வையகத்திலுள்ளோரே..
வாரீர்..வந்து பாரீர்..
சட்டை போட்டதோர்
எலியின் எலும்புக் கூடுபற்றி -
நீர் கண்டதுண்டோ?
கேட்டதுண்டோ?
திகைக்காதீர்..
இந்து சமுத்திரத்து
நித்திலத் தீவதனில்
இதுவும் உண்டு..
இன்னமும் உண்டு..
யாழ்ப்பாணத்து மண்ணில்
வாழ்ந்த எலிகள்
சட்டை போட்டுத்தான் வாழ்ந்தனவாம்..
இருக்கலாம்..
இவர்கள்ஆயுததாரிகளைப் புலிகள் என்றும்
அப்பாவிகளை எலிகள் என்றும் தான்
எண்ணுகின்றார்ளோ?

சொன்னாயே ஒரு சொல்சோமரட்ண..அப்பா.. உனக்காய்ச்சொர்க்கவாசல்திறந்திருக்கு..
நீ பாவியோ?அப்பாவியோ?
நானறியேன்..எனில்,
உன் பாவங்களுக்குப்பரிகாரம் தேடிவிட்டாய்..
உன் பணி முடிந்தது..நீ சொன்ன சொல் பலித்தது..
இனி,உலகே..உன் பணி ஆரம்பம்..

கண்டெடுத்த காலெலும்பும் கையெலும்பும்
கற்காலச் சுவடென்பார்..
மண்டையோடுகளைக்கண்டால்
அவைபுத்த பிட்சுகளின்பிச்சைப் பாத்திரங்களென்பார்..
பல்லொன்றைக்கண்டெடுத்தால்
அதுபுனிதத் தந்தமென்றங்கோர்
புதுக் கோவிலுங் கட்டிடுவார்..
சிதைந்து போனசிறுதுணிகள்
பாம்புச் சட்டையென்பார்..
புத்தன் தேசமதுபுனைகதைகள் கூறாதெனச்
செத்தாலும் நீவிர்ஒத்துக் கொண்டிடாதீர்..
எங்கும் அணிதிரண்டுஆர்ப்பரித்து எழுந்திடுவீர்..
எங்களுக்கு வேண்டும்
நீதியான விசாரணையென
எங்கும் குரல் கொடுக்கஒன்றுபட்டு எழுந்திடுவீர்..
-----------------------------------------------------------
நன்றி: நினைவழியா நாட்கள், செம்மணி.

இன்னும் "ஈழத்துக் கவிதைகள்" வரும்.

Labels: , ,


Get your own calendar

Links