« Home | பகிரப்படாத பக்கங்கள். 1. » | அமெரிக்க அரசியலும் சதாமும் » | இந்தியா பிச்சை போடுமா? » | அன்னியசக்திகளை ஈழத்தமிழர் நம்பலாமா? » | லெப்.கேணல் அக்பர் » | மலையக மக்களின் போராட்டம் » | சனநாயகமும் பயங்கரவாதமும் » | சிங்கள மனப்பான்மையும் சிறிலங்கா நிலைமையும் » | ஏழுகட்சிக்கூட்டணி - மாவோயிசப் போராளிகள் ஒப்பந்தம் » | இஸ்ரேலியப் பயங்கரவாதம் - சனநாயகத்துக்கான போராட்டம் »

இலங்கையில் ஊடகங்களும் பிரித்தாளும் தந்திரமும்

மறுபக்கம் - கோகர்ணன்

இலங்கையில் கருத்துச் சுதந்திரம் நசுக்கப்படும் அபாயம் பற்றிய எச்சரிக்கைகள் அண்மைக் காலத்தில் அடிக்கடி விடுக்கப்பட்டுள்ளன. சென்ற மாதம் போருக்கு எதிரான ஒரு கூட்டத்தைப் போர்வெறியர்கள் குழப்பினர். அது வன் முறையும் நடந்தது. அந் நிகழ்வின் சிறப்பு ஏதெனின், அதை ஏற்பாடு செய்தவர்கள் ஆளுங்கட்சிப் பிரமுகர் ஒருவர் அவர் பாராளுமன்ற உறுப்பினருங் கூட, அவர் அவ்வாறு செய்யப் போகிறார் என்ற தகவல் ஜனாதிபதிக்கு நெருக்கமான நண்பரும் போர் நிறுத்தத்தையும் நியாயமான அரசியல் தீர்வையும் தொடர்ந்தும் வற்புறுத்தி வருபவருமான வாசுதேவ நாணயக்காரவுக்கு எட்டியதையடுத்து அவர் ஜனாதிபதிக்குத் தகவல் கொடுக்கக் கடுமையாக முயன்றும் அவருடன் பேசக் கிடைக்க வில்லை என்று தெரிய வருகிறது. எனினும், பொறுப்பில் உள்ளவர்கட்குத் தகவல் கிடைத்திருந்தும் தடுப்பதற்கான முயற்சி எடுக்கப்படவில்லை என்பது முக்கியமானது.
அரசாங்க ஆதரவுடன் இந்த நாட்டிற் பேரினவாத வன்முறை ஊக்குவிக்கப்பட்டிருக்கிறது. அவ் வன்முறை கட்டுக் கடங்காமற் போன சூழ்நிலைகள் தவிர்ந்து, பிற நேரங்களில் அரசாங்கம் கண்டுங் காணாமல் இருந்திருக்கிறது. 1983 வன்முறை `சர்வதேச சமூகத்திற்கும் அதிர்ச்சியூட்டும் முறையில் விளம்பரப்படுத்தப்பட்டதால், அரசாங்கம் ஒரு இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டது. நியாயப்படுத்த இயலாத முறையில் கட்டவிழ்த்து விடப்பட்ட அவ் வன்முறை தமிழகத்திற் கடுமையான வெகுசனச் சீற்றத்தைக் கிளறிவிட்டது. எனினும், இந்தச் சீற்றங் காரணமாக இந்திய ஆட்சியாளர்கள் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையில் குறுக்கிட்டனர் என்பது உண்மையல்ல .அதை ஒரு வசதியாக மட்டுமே இந்திய ஆட்சியாளர்கள் பயன்படுத்தினர். இந்திய வம்சாவளித் தமிழர் பற்றி அக்கறை காட்டாத இந்திய ஆட்சியாளர்கள் வடக்கு, கிழக்கின் தமிழர் நலன் பற்றி அக்கறை காட்ட மெய்யாகவே நியாயம் இல்லை. எனவே, கேட்க இனிய கொச்சையான அரசியல் விளக்கங்கள் பற்றி நாம் கவனமாயிருப்பது நல்லது.

இலங்கையின் இன்றைய பிரதான முரண்பாடு தேசிய இனப்பிரச்சினை தொடர்பானது என்பதில் நமக்கு ஐயம் வேண்டாம். எனினும் அது மட்டுமே முரண்பாடு என்று மற்றையவற்றைப் புறக்கணிப்பது ஆபத்தானது. அதை விடத் தேசிய இனப்பிரச்சினையைப் பகை முரண்பாடாக்கி அதைப் பிரதான முரண்பாடாகவும் போராகவும் வளர்ப்பதில் யாருக்கு நன்மை இருந்தது என்பதையும் நாம் கவனிக்கத் தவறலாகாது.

பிரித்தாளும் தந்திரம் என்பது, ஏதோ, பிரித்தானியக் கொலனிய ஆட்சியாளர்களுக்கு மட்டுமே கைவந்த கலையல்ல. அது அந்நிய மேலாதிக்கம் ஒன்று நாடுகளை அடக்கியாளப் பயன்படுத்துகிற உபாயம் மட்டுமல்ல, அமெரிக்கத் தொழிலாளர்களைப் பிளவு படுத்த இனவேறுபாடு பயன்பட்டது. ஆனால், கறுப்பு, வெள்ளை என்ற வேறுபாடு அதிகாரத்தில் இருப்பவர்கட்கு எப்படிப் பயன்படுகிறது என்று பார்த்தால், நிற வேறுபாடு இல்லாமல் எல்லாத் தொழிலாளரையும் ஒட்ட உறிஞ்ச அது உதவுகிறது என அறியலாம்.

மக்களை அடக்கியாளுவதற்கான முறைகள் சமூகஅமைப்புகளின் வேறுபாடுகட்கமைய மாறுகின்றன. அடிமைச் சமூகத்திற் போல நிலப்பிரபுச் சமூகத்திற் செய்ய இயலவில்லை. முதலாளியம் மேலும் வேறுபட்ட முறைகளைப் பயன்படுத்துகிறதும் உழைப்பின் மீது தனி மனிதர்களின் கட்டுப்பாட்டின் தன்மையை முதலாளிய உற்பத்தி முறை மாற்றிவிட்டது. கட்டுப்பாடின்றி உழைப்பை வாங்கி விற்கிற ஒரு சமூக அமைப்பில் தனி மனிதச் சுதந்திரம் என்ற சிந்தனையை மறுக்க இயலாமற் போகிறது தோற்றப்பாடான ஒரு தனி மனிதச் சுதந்திரம் இல்லாமல், முதலாளிய தொல்லையின்றி இயங்க இயலாது. எனவே அந்தச் சுதந்திரத்தை வழங்குவது போல வழங்கி அதை அனுபவிக்க இயலாத விதமாகப் பறிப்பது தான் முதலாளிய ஜனநாயக ஆட்சிமுறையின் திறமை.

கருத்துச் சுதந்திரம் என்பதை முதலாளிய ஜனநாயகம் பெரிதுங் கொண்டாடுகிறது. எனினும் அது எல்லாவிதமான கருத்துகட்குமான, சமத்துவமான , எல்லாரும் ஒரே விதமாக அனுபவிக்கக் கூடியதான சுதந்திரமாக இருப்பதில்லை. தகவல்களை வெளியிடவும் பரிமாறவுமான சுதந்திரம் உண்டென்று சொல்லப்பட்டாலும், எவ்விதமான எந்த நோக்கத்திற்கான தகவல்கள் என்பது இன்னொரு விடயமாக உள்ளது. இங்கே ஒரு ஊடக நிறுவனம், "தெரிவிப்பது நாங்கள், தீர்மானிப்பது நீங்கள்" என்ற சுலோகத்தை மேலை நாட்டு ஊடக நிறுவனமொன்றிடமிருந்து பெற்றுத் தனது கருத்துச் சுதந்திர நிலைப்பாட்டை விளம்பரப் படுத்திக் கொள்கிறது. ஆனால் எதைச் சொல்வது, எதைச் சொல்லாமல் விடுவது, சொல்லுவதை எப்போது, எப்படிச் சொல்வது என்பன பற்றிய தீர்மானங்களை யார் எடுக்கிறார்கள்?

இலங்கையின் ஊடகச் சுதந்திரம் பேரினவாதத்தை வளர்க்க மிகவும் உதவியுள்ளது. இன்று பேரினவாத இனவெறியை ஊட்டுவதில் மும்முரமாக உள்ளவர்களுக்கு ஏறத்தாழ எல்லாப் பெரிய சிங்கள, ஆங்கில ஒலி, ஒளிபரப்பு அச்சு ஊடகங்களும் துணைபோகின்றன. தமிழில், தமிழ்த் தேசியவாத அரசியல் கோலோச்சுறது. அதுபற்றிச் சிங்களப் பேரினவாதிகட்குக் கவலை இல்லை. ஏனெனில், அதனால் அவர்களது நோக்கங்கட்குக் கேடேதும் இல்லை.

மாற்றுக் கருத்துகளை அரச அதிகாரமோ, அதிகார வர்க்கமோ சகித்துக் கொள்கின்ற சூழ்நிலைகள் இருக்கின்றன. மாற்றுக் கருத்துகள் அரசினதும், அதிகார வர்க்கத்தினதும் இருப்பிற்கும் நிலைப்பிற்கும் மிரட்டலாக இல்லாத வரையில் அவை சகித்துக் கொள்ளப்படுவதுடன் வரையறைக்குட்பட்டு ஊக்குவிக்கவும்படுகின்றன. ஏனெனில், அவற்றின் இருப்பு சனநாயகத் தோற்றம் ஒன்றைக் காட்டுவதற்கு உதவுகின்றது. கருத்துகள் செயல்வடிவம் பெற்று ஒரு அரசியல் சக்தியாக வளரக் கூடிய சூழ்நிலையில் அவை ஆபத்தானவையாகின்றன. புத்திசாலித்தனமான முறையில் இயங்குகின்ற அரசு கருத்துகள் செயல் வடிவம் பெறுமுன்னமே அவற்றைக் களையெடுப்புக்குட்படுத்தி விடுகிறது. ஊடகங்கள் மீது அரசுக்கு உள்ள கட்டுப்பாடு அதற்கேற்ற முறையில் இயங்குகிறது. அல்லாதவிடத்து ஊடகங்கள் மீது ஆளுமையுடையவர்களது வர்க்க நலன்கள் உரிய விதமாகக் குறுக்கிடுகின்றன.

நிலைமைகள் கட்டுக்கடங்காமல் போய் மாற்றுச் சிந்தனைகள் மாற்று நடவடிக்கைகளை விருத்தி பெறக்கூடிய சூழ்நிலையில் அரச வன்முறை தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைக் குரலையும் பின்பு விடுதலைப் போராட்டத்தையும் நசுக்க எழுச்சி கொண்ட அரச வன்முறை, குறிப்பிட்ட வர்க்க நலன்களைக் காப்பாற்ற வேண்டிச் சிங்களத் தேசியவாதத்தின் ஒரு பகுதியை அடையாளப்படுத்திய ஜே.வி.பி. மீது பாய்ந்தது. ஜே.வி.பி. அரசிற்கெதிராக ஆயுதமேந்திய நிலையில் தனது வன்முறையை அரசு எளிதாக நியாயப்படுத்த இயலுமாயிற்று. எனினும், வேறு வகையான எதிர்ப்புகளைச் சமாளிக்க அரச வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவது அரசுக்கு எதிராக மக்களைக் கிளர்ந்தெழச் செய்யலாம். அப்போது அரச அடையாளமற்ற வன்முறை உதவுகிறது. அது எந்த வடிவத்திலும் வரலாம்.

1977 க்குப் பின்பு ஜே.வி.பி.யைப் பயன்படுத்திப் பாராளுமன்ற இடதுசாரிகளையும், ஷ்ரீ.ல.சு.கட்சியையும் யு.என்.பி. ஆட்சியாளர்கள் செயலிழக்கச் செய்தனர். ஜே.வி.பி. குண்டர்களுக்குத் துணையாக இல்லாவிடினும் அவர்களது வன்முறையில் குறுக்கிட்டுத் தடுக்காமல் அரசின் சட்ட ஒழுங்கின் கரங்கள் கட்டுப்பட்டிருந்தன. எனவே, அரச வன்முறை என்பது நேரடியான அரச படைகளினதும் ஆயுதப் பொலிஸாரதும் குறுக்கீடாக இல்லாமல் கவனமாகக் கையாளப்பட்ட செயலின்மையாகவும் அமைய முடியும் என்பதை மீண்டும் 1983 ஆம் ஆண்டு தெளிவாகக் கண்டோம்.

இப்போது போருக்கு எதிரான இயக்கத்திற்கு எதிரான வன்முறை, முதலில் ஆளும்கட்சி சாராத குண்டர்கள் மூலமும் பின்பு ஆளும்கட்சி சார்ந்த குண்டர்கள் மூலமும் நடந்தேறுகிறது என்றால், அரசு போருக்கெதிரான இயக்கத்தின் வளர்ச்சியைப் பற்றி அஞ்சுகிறது என்பதே அதன் பொருள். அமைதியான முறையில் நடைபெறும் சமாதானப் பேரணிகளை அரச வன்முறை மூலம் நசுக்குவது இப்போதைக்கு அரசுக்குப் பாதகமானது என்பதால் அரசு ஜனநாயக விரோதச் சக்திகளைக் கொண்டு தனது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்கிறது. இதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

பயங்கரவாதத்தையும் பிரிவினைக் கோரிக்கையையும் காட்டிச் சிங்கள மக்களைப் பேய்க்காட்ட இயலாத ஒரு நிலை பற்றி நம்மில் பலர் இப்போதைக்கு எண்ண ஆயத்தமாயில்லை என்று நினைக்கிறேன். ஆனால், பேரினவாத அரசு அது பற்றிச் சிந்திக்கிறது. அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவுந் தொடங்கிவிட்டது. அது பற்றி யாரும் அசட்டையாக இருக்க முடியாது.

ஃபாஸிஸம் எவ்வகையானது என அறிவோம். ஆனால், எப்படி அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பதற்கு அதற்கு முன்பு பல தெரிவுகள் உள்ளன. இலங்கையில் ஒரு ஃபாஸிஸ அரசு உருவாகுமானால் `சர்வதேச சமூகம்', இந்தோனேசியாவிலும் சிலியிலும் நடந்து கொண்ட விதமாகவே இங்கும் நடந்து கொள்ளும் என்பதில் நமக்கு ஐயம் வேண்டாம்.

_________________________________________
நன்றி: ஞாயிறு தினக்குரல் February 04, 2007

Labels: ,


Get your own calendar

Links