« Home | லெப்.கேணல் அக்பர் » | மலையக மக்களின் போராட்டம் » | சனநாயகமும் பயங்கரவாதமும் » | சிங்கள மனப்பான்மையும் சிறிலங்கா நிலைமையும் » | ஏழுகட்சிக்கூட்டணி - மாவோயிசப் போராளிகள் ஒப்பந்தம் » | இஸ்ரேலியப் பயங்கரவாதம் - சனநாயகத்துக்கான போராட்டம் » | இராணுவப்பிடியில் சிறிலங்கா » | அணுவாயுதப் பரிசோதனை அரசியல் » | சிங்களவரிடமுள்ள இனப்பிரச்சினைத் தீர்வு » | பேச்சுவார்த்தையும் பேய்க்காட்டலும் »

அன்னியசக்திகளை ஈழத்தமிழர் நம்பலாமா?

மறுபக்கம் - கோகர்ணன

இந்த அரசாங்கம் விடுதலைப் புலிகட்கோ `பயங்கரவாதத்துக்கோ' எதிரான ஒரு போரை நடத்துவதாக நான் நம்பவில்லை. விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளல்ல என்று சொல்லிக் கொள்கிற அரசாங்கம் இன்று எல்லாத் தமிழ் மக்களையும் சந்தேக நபர்களாகவே நோக்குகிறது. மன்னார், முல்லைத் தீவு, வாகரைப் பகுதிகளில் நடத்திய குண்டு வீச்சுகள் எல்லாமே சாதாரணக் குடி மக்களையே தாக்கிக் கொன்றும் படுகாயப்படுத்தியுமுள்ளன. இவையெல்லாம் கவனமாகக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்கள் என்று அரசாங்கம் சொல்வதை நாம் நம்பலாம். ஆனால் எதைக் குறிவைத்தார்கள் என்று அரசாங்கம் சொல்வதை நாம் நம்புவது கொஞ்சங் கடினம். எல்லாத் தாக்குதல்களின் பின்பும், பொது மக்களின் உயிரிழப்புகள் பற்றிய தகவல்கள் வெளிவரத் தொடங்கியவுடன் விடுதலைப் புலிகள் பொது மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டு அரசாங்கத்தின் பதிலாக வழங்கப்படுகிறது. இந்த வாதம் காசைச் சுண்டிப் போட்டு விட்டுத், "தலை விழுந்தால் எனக்கு வெற்றி, பூ விழுந்தால் உனக்குத் தோல்வி" என்று சொல்லுகிற மாதிரி, தோற்கடிக்க முடியாத ஒரு வாதம்.
அரசாங்கப் படைகள் அண்மைக் காலங்களில் நடத்திய தாக்குதல்களில் கொல்லப்பட்ட எந்தத் தமிழர் பற்றியும் அரசாங்கம் எவ்விதமான அனுதாபமும் தெரிவிக்கவில்லை. எந்த உயிரிழப்பிற்கும் பொருட் சேதத்திற்கும் உடற்சேதத்திற்கும் நட்ட ஈடு வழங்க முன் வரவில்லை. இதை விடுதலைப் புலிகளின் தாக்குதல்களுக்கு இலக்கானவர்கள் என்று நம்பப்படுகிற சிங்கள மக்களுக்கோ படையினருக்கோ காட்டப்படுகிற பிரிவுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது பயனுள்ளது. அரசாங்கப் படைகள் இலக்கு வைப்பதாகக் கூறுகிற எந்த விடுதலைப் புலிகளின் தளமும் தாக்கப்படுவதற்கான விளக்கங்கள் அத் தாக்குதல்கள் போர் நிறுத்த உடன்படிக்கையின் மீறல்களல்ல என்று நியாயப்படுத்த போதாதவை.

போர் நிறுத்த கண்காணிப்புக் குழு, அண்மைக் காலங்களில் அரசாங்கத் தரப்பையே அதிகளவில் குற்றஞ்சாட்டி வந்துள்ளது. அரசாங்கத்திடமிருந்து போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு போதியளவு ஒத்துழைப்பைப் பெறவில்லை என்பதும் ஒரு முக்கியமான விடயம். போர் நிறுத்த கண்காணிப்புக் குழு பற்றிய அதிருப்தியை அரசாங்கம் தெரிவித்து வந்துள்ளதோடு, தாங்கள் போர் என்று சொல்லாமலே கண்காணிப்புக் குழுவினர் தாங்கள் இலங்கை அரசாங்கத்திற்கு வேண்டாத விருந்தாளிகள் என உணர்ந்து வெளியேறச் செய்கிற விதமாகவே அரசாங்கப் பேச்சாளர்களது கருத்துகள் அமைந்துள்ளன.

ஐ.நா. சபையின் மனித உரிமைக் குழுவினரும் பதவியிலிருந்த செயலாளர் நாயகமான கோஃபி அனானும் இலங்கை நிலைவரம் பற்றி அண்மைக் காலங்களில் மிகுந்த கவலை தெரிவித்துள்ளார். கவலை தெரிவித்திருக்க வேண்டிய காலங்களில் எல்லாம் கையைக் கட்டிக் கொண்டிருந்தவர்கள் பலர் காலங் கடந்து கவலை தெரிவிக்கின்றனர். கண்டனம் தெரிவிக்க வேண்டிய இடங்களிலெல்லாம் கவலை தெரிவிப்பதும் அரசாங்கத்தைக் குற்றங் கூறுவதைத் தவிர்க்கு முகமாக இரு தரப்பினரையும் குற்றங் கூறிப் பேச்சுவார்த்தைகளில் இறங்குமாறு வற்புறுத்தி அறிக்கை விடுவதும் பயனற்ற செய்கைகள் மட்டுமல்ல, அவை எல்லாமே வெறும் மாய்மாலம் தான்.

ெகாஃபி அனான் போல வெட்கக் கேடான ஒரு ஐ.நா. பொதுச் செயலாளர் இருந்திருக்க இயலாது என்று பல முறை நினைத்திருக்கிறேன். தனிப்பட்ட முறையில் நண்பர்களிடம் சொல்லியுமிருக்கிறேன். இன்னொரு புறம் யோசித்துப் பார்த்தால், ஐ.நா. சபை அண்மைக் காலத்தில் மிகவும் வெட்கக்கேடான ஒரு நிலைக்குத் தன்னைக் கீழிறக்கியுள்ளது என்கிற நிலையில், அந்தப் பதவிக்கு ஒருவர் வருவதனால் தனது நேர்மை, சுய மரியாதை, பெருமிதம் போன்ற விலைமதிப்பற்ற உடைமைகளை எல்லாம் தியாகம் செய்ய ஆயத்தமாக இருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் அவர் மிகவும் அவமதிக்கப்படவும் பலவிதமான குற்றச் சாட்டுக்கட்சிக்கு உள்ளாகவும் பதவியை இழக்கவும் நேரலாம். கோஃபி அனான், ஈராக் போர் தொடர்பாக, அமெரிக்காவுக்கு அதிருப்தி ஏற்படுத்துகிற விதமாக இரண்டு ஆண்டுகள் முன்பு எதையோ சாடைமாடையாகச் சொன்ன பின்பு, அவர் தொடர்பாக நிதி மோசடி பற்றிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதை நாம் நினைவு கூர்வது நல்லது.

அவருக்கு முன்பு பதவியிலிருந்த பூட்ரஸ் பூட்ரஸ் காலி தனது முதலாவது தவணை முடியுமுன்பே அமெரிக்காவின் ஆணைக்குக் கீழ்ப் படியாத விதமாகச் சிறிது பேசியதால், அவருக்கு இரண்டாவது தவணை மறுக்கப்பட்டது. கோஃபி அனான் சூடு கண்ட பூனையைப் பார்த்துப் பாடங்கற்ற பூனை என்பதாலேயே இரண்டாவது தவணையைப் பெற்றார். அதற்கு மேல் பதவி நீடிப்பு இல்லை என்ற தைரியத்தில் அவர் ஒரு வேளை வாய்திறந்திருக்கலாம். அமெரிக்காவா, கொக்கா? கோஃபி அனானை எங்கே எப்படி அமுக்குவது என்றெல்லாம் முன் கூட்டியே தெரியாமலா அவர் ஐ.நா. பொதுச் செயலாளராக அனுமதித்தார்கள். ஐ.நா. எப்படியோ, அதன் செயலாளரும் அப்படியே!

தமிழ் மக்களுடைய நிலை 1983 ஆம் ஆண்டு இன வெறியாட்டத்தின் பின்பு இருந்ததை விட மோசமாக உள்ளது. சர்வதேச சமூகம் என்பது பிரச்சினையை விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்திற்கும் அரசாங்கத்தின் இராணுவ நடவடிக்கைக்கும் இடையிலான மோதல் பற்றிய ஒன்றாகத் தான் இன்னமும் காணுகின்றன. இலங்கையில் தேசிய இனப் பிரச்சினையின் தீர்வுக்கான பேச்சுகளைக் குழப்புவதிலும் கிழக்கில் தமிழ்- முஸ்லிம் முறுகலுக்குத் தூண்டுகோலாகவும் இருந்த நாடு எது என்பதையும் நாம் மறந்திருக்க மாட்டோம். பிரச்சினையின் தீர்வைச் சிக்கலாக்குவதில் பேரினவாத ஆட்சியாளர்கள் தமது முழு ஈடுபாட்டையும் காட்டி உழைத்து வந்துள்ளனர்.

அமைதிப் பேச்சுகள் தேசிய இனப் பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வைச் சென்றடையாமல் தடுப்பதற்கு யார் எல்லாரும் எவ்வாறு பங்களித்தனர் என்பதைக் கவனிப்போமானால், அவர்களில் எவரும் அமைதியை நிலைநாட்டுகின்ற பேரில் இந்த நாட்டின் உள் விவகாரங்களில் குறுக்கிடுவது பற்றி நாம் மிகவும் கவனமாக இருப்போம். ஆனால், நாம் என்ன செய்கிறோம்? இந்திய மேலாதிக்கவாதிகளின் குறுக்கீட்டைத் தமிழ்த் தலைவர்களும் ஜாதிக ஹெல உறுமயவும் ஏக காலத்தில் வரவேற்கின்றனரென்றால் இந்தியா இரு தரப்புகளிலும் ஒரு தரப்பையாவது முட்டாளாக்கியிருக்கிறது அல்லது இரண்டு தரப்புகளையுமே முட்டாள்களாக்கியிருக்கிறது என்று தான் நாம் விளங்கிக் கொள்ள இயலும். அநேகமாக இந்தியா இரண்டு தரப்புகளையும் இலங்கை அரசாங்கத்தையும் முழு நாட்டையும் சேர்த்து முட்டாளாக்குகிற பணியிலே தனது கவனத்தைக் குவித்துள்ளது. விடுதலைப் புலிகளை முட்டாள்களாக்குகிறதற்கும் அவர்கள் தம்மாலானதைச் செய்வார்கள் என்பதை நாம் மறக்கலாகாது. யாரும் முட்டாளாக்கப்படுவது முக்கியமாக அவர்களது அறிவுபூர்வமான தெரிவின் பேரிலேயேதான்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை ஜேர்மனிக்குரியதாகியுள்ளதால், ஏற்கனவே இலங்கைக்கான நிவாரண உதவிகளை நிறுத்தியுள்ள ஜேர்மனி, விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத் தடையை நீக்க வழி செய்வர் என்று ஒரு கதை தமிழ் ஊடகங்களில் பரப்பப்பட்டிருந்தது. ஐரோப்பிய ஒன்றியத் தடைக்குப் பின்னாலிருந்து செயற்பட்ட சக்தி அமெரிக்கா. அமெரிக்காவின் சார்பாக அதை வற்புறுத்திய பெருமை பிரித்தானியாவுக்குரியது. அமெரிக்க அழுத்தத்தை எதிர்த்து நிற்க இயலுமான நாடு எதுவும் ஐரோப்பிய ஒன்றியத்தினுள் இப்போதைக்கு இல்லை. அப்படி அமெரிக்காவுக்கு எதிராக உறுதியாக நிற்பதானாலும் அது விடுதலைப் புலிகட்காகவோ இலங்கைத் தமிழர்கட்காகவோ அல்ல. ஈராக் விடயத்திலேயே பணிந்து போன நாடுகளிடம் தமிழர் எதை எதிர்பார்க்க இருக்கிறது?

தமிழ் மக்கள் `பயங்கரவாதத்தை' அதாவது ஆயுதமேந்திய அரச பயங்கரவாதத்திற்கெதிரான ஆயுதமேந்திய உரிமைப் போராட்டத்தை, நிராகரிக்கும் வரை அமெரிக்கா தமிழ் மக்களுக்கு எதிராகவே நிற்கும் என்று திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டுள்ளது. அதில் மாற்றம் நிகழப்போவதில்லை. தமிழ் மக்கள் ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டால் அவர்களது உரிமைகளைப் பெற அமெரிக்கா எவ்வாறு உதவும் என்பதற்கு எதுவிதமான உத்தரவாதமும் உண்டா? உரிமைகள் கிடைப்பது போகட்டும், அரச படைகள் வடக்கு, கிழக்கில் நடத்துகிற அட்டூழியங்கள் முடிவுக்கு வரும் என்பதற்கு என்ன உத்தரவாதம் உண்டு? இற்றைவரையிலான தேசிய இனப் பிரச்சினையின் வரலாறு தமிழ் மக்களுக்கு என்ன பாடங்களைப் கற்பித்துள்ளது? தமிழ் மக்கள் எவ்வளவு கற்றுள்ளனர்?

கற்ற பாடங்களையே மாற்றி எழுதுவதற்குத் தான் எங்களுக்குத் தலைமைகள் உள்ளன என்றால் அந்தத் தலைமைகளைக் கைகழுவிவிட்டு மக்கள் தமக்குள்ளேயே தமது தலைமைத்துவத்தை உருவாக்கிப் பேண வேண்டிய காலம் வந்து விட்டது என்றுதான் பொருள்.

ஆயுதப் போராட்டத்தைக் கைவிடுவதோ, ஆயுதங்களைக் கீழே வைப்பதோ எந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் நியாயமான உணர்வுள்ள எவரும் பரிந்துரைக்கக் கூடிய ஆலோசனைகளல்ல. அவற்றுக்கான சூழ்நிலையை உருவாக்க உதவாமல் ஒடுக்கப்பட்ட மக்களை நிராயுதபாணிகளாக்குவது அவர்களது அடிமை நிலையை உருவாக்க உதவாமல் உதவும். எனவே, சர்வதேச சமூகத்தின் கனிவான ஆலோசனைகளையும் கட்டாயங்களையும் புறக்கணித்தே ஒரு விடுதலைப் போராட்டம் வெற்றி பெற இயலும் என்பதை நாம் மறக்கலாகாது.

இப்போது கருணாநிதியின் ஆதரவு பற்றி நமது தமிழ் தலைவர்களும் தமிழ் ஊடகங்களும் நெகிழ்ந்து போயுள்ளன. சிலபேருக்கு கோபாலசாமி பற்றிய நினைவுகள் மீது தூசு படிந்து போகிற அளவுக்கு தமிழக அரசியல்வாதிகள் போல இங்குள்ளவர்களும் நடந்து கொள்கிறார்கள்.

இலங்கைத் தமிழர்கள் அந்நிய அரசியல் மாயமான்களைத் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கக் கூடாது. தமக்கு என்ன நடக்கிறது என்பதை அவர்கள் தெளிவாக உணராத வரை விடுதலைக்கு வழி ஏற்படாது. அவர்களிடமிருந்து அது பற்றிய உண்மைகளை மறைப்பது பாரதூரமான துரோகச் செயலாகும்.

________________________________________
நன்றி: ஞாயிறு தினக்குரல் January 14, 2007

Labels:


Get your own calendar

Links