« Home | பேச்சுவார்த்தையும் பேய்க்காட்டலும் » | புலிகளின் பலம் மக்கள் சக்தியே » | ரணில் - மகிந்த கூட்டு ஒப்பந்தம் » | ஈழத்தமிழரின் நேச சக்திகள் » | ஆனந்தசங்கரிக்கு யுனெஸ்கோ வருது கிடைத்தது எப்படி? » | இந்தியாவின் நோக்கம் என்ன? » | மகிந்தவின் முகங்கள் » | மறுபக்கத்தின் நேர்முக தரிசனம் » | கிளிநொச்சி மீட்பு நடந்தது எவ்வாறு? » | திலீபனின் இறுதி உரையிலிருந்து... »

சிங்களவரிடமுள்ள இனப்பிரச்சினைத் தீர்வு

மறுபக்கம் - கோகர்ணன்

தேசிய இனப்பிரச்சினைக்கான ஒரு தீர்வு ஆலோசனை இல்லாமல் விடுதலைப் புலிகளுடன் பேசிப் பயனில்லை என்று `தமிழர் விடுதலைக் கூட்டணி' தலைவர் ஆனந்தசங்கரி எழுதிய ஒரு கருத்துரையை ஆங்கில நாளேடான ஐலண்ட் அண்மையில் வெளியிட்டிருந்தது. அக்கருத்து 1983 இன ஒழிப்பு வன்முறைக்குப் பிறகு நடந்த ஒவ்வொரு பேச்சுவார்த்தைக்கும் பொருந்தக்கூடியது. 1957 இல் ஏற்பட்ட பண்டாரநாயக்க - செல்வநாயகம் உடன்படிக்கை தமிழ் பேசும் மக்கள் என்ற அடிப்படையில், தேசிய இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வுக்கான நல்ல வழியை முன்வைத்தது. எழுதிய மை உலரய முன்பே அது பேரினவாதிகளின் கட்டாயத்தின் பேரில் கிழித்தெறியப்பட்டது. அதன் பின்பு ஏற்படக்கூடிய ஒவ்வொரு உடன்படிக்கையின் கதையும் அதுவாகவே இருக்கும் என்பதை அன்று பலரும் ஊகித்திருக்க நியாயமில்லை. இந்த விதமாக ஏற்பட்ட உடன்படிக்கைகளில் தமிழ் மக்களின் எண்ணங்கள் பற்றி அவர்களுடன் கலந்தாலோசனை இல்லாமலும், இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையின் புதிய பரிமாணங்களான முஸ்லிம் தேசியவாத அரசியல் பற்றியும் மலையக மக்களின் இருப்பும் தேசிய இன அடையாளமும் பற்றிய அக்கறையே இல்லாமலும், இந்திய ஆட்சியாளர்களும் இலங்கையின் கொடுங்கோலாட்சியாளர்களும் 1987 இல் செய்த உடன்படிக்கையின் நோக்கமும் பயனும் பற்றிய ஆழமான கேள்விகளை வடக்கின் மாக்ஸிய - லெனினியவாதிகள் மட்டுமே எழுப்பினர். இந்தியக் குறுக்கீட்டின் நோக்கங்கள் பற்றி அவர்கள் மட்டுமே வெளிவெளியாகக் கேள்விகளை எழுப்பினர். உடன்படிக்கையின் போதாமைகளை அவர்கள் தொடர்ந்தும் சுட்டிக்காட்டி வந்தனர்.
உடன்படிக்கை ஏற்பட்டு இரண்டே ஆண்டுகளில் இந்தியாவின் பங்களிப்புப் பற்றி எல்லோருக்கும் விளங்கியிருக்க வேண்டும். ஆனாலும், இந்தியாவின் தயவில் தமது அரசியல் வாழ்க்கையையும் தனிப்பட்ட வாழ்க்கையையும் நடத்தி வந்த தமிழத் தலைவர்கள் பலருக்கு அதைப் பற்றிப் பேச இயலவில்லை. மற்றத் தமிழ்த் தேசியவாதிகளும் இந்தியாவையோ அமெரிக்காவையோ எதிர்த்து வாய் திறக்க ஆயத்தமாக இருக்கவில்லை. இந்தியாவால் வழிநடத்தப்பட்ட தமிழ்த்தேசியவாதத் தலைவர்களும் முன்னாள் விடுதலைப் போராளிகளும் நாட் போக்கில் பேரினவாத அரசாங்கங்களின் கூட்டாளிகளாக மாறினர். சிலர் தமது பாராளுமன்றப் பதவிகளைப் பெறும் நோக்கில் விடுதலைப் புலிகளுக்கு உடன்பாடான நிலைப்பாட்டை மேற்கொண்டனர். இன்று வரை தமிழ்த் தேசியவாதிகள் எவருமே தெட்டத் தெளிவாகத் தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்தில் அவர்களின் நண்பர்கள் யாரென்றோ எதிரிகள் யாரென்றோ சொல்லியதில்லை. சிங்கள மக்களை எதிரிகளாகக் காட்டுகிற அளவுக்குச் சிங்களப் பேரினவாதத்தின் வர்க்க அடிப்படை எது என்றோ அதற்கு உடந்தையாக உள்ள அந்நிய சக்திகள் எவை என்றோ சுட்டிக்காட்டுவதில் அக்கறை என்றுமே இருந்ததில்லை.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் பரந்துபட்ட ஒற்றுமையின் அடிப்படையில் அமையாமை அன்று முதல் இன்றுவரை அதன் பெரிய பலவீனமாகவே இருந்துவந்துள்ளது. இந்தியக் குறுக்கீடும் துரோகத்தனமான தலைமைகளும் தமிழ் மக்களிடையே போராட்ட ஐக்கியத்திற்கும் தமிழ் மக்களுக்கும் பிற ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களுக்குமிடையிலான ஒத்துழைப்புக்கும் பாரிய கேடு விளைவித்தன. எனினும், விடுதலைப் புலிகளின் தரப்பிற் செய்யப்பட்ட தவறுகளும் போராட்டத்திற்குக் கேடு விளைவித்துள்ளன. முக்கியமான சில தவறுகளை விடுதலைப் புலிகள் ஒத்துக் கொண்ட போதும், இன்னமும் மூர்க்கத்தனமாக அவற்றை நியாயப்படுத்துகிற சக்திகளும் உள்ளன. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் அடிப்படையான பலவீனம், அது ஒரு வெகுசனப் போராட்டமாக விருத்தியடையாமை என்பது எனது உறுதியான கருத்து. பரந்துபட்ட ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதிலும் தீய அல்லது துரோகத்தனமான சக்திகளை அடையாளங் காட்டித் தனிமைப்படுத்துவதிலும் வெகுசன அரசியலை மிஞ்சி எதுவும் இருக்க முடியாது. சகோதரப் படுகொலைகளைத் தொடங்கிய கேடு இன்று அரசாங்கத் துணைப்படைகளின் வன்முறையாயும் அதற்கெதிரான வன்முறையாயும் மட்டுமில்லாமல் சாதாரண மக்களையே காவுகொள்கிற ஒரு அவலமாக தமிழ்ப் பிரதேசங்களில் நிலவுகிறது. இதை ஆயுதங்கள் கொண்டு மட்டுமே தீர்க்க இயலாது. தமிழ் மக்கள் அரசியல் அதிகாரமுடையவர்களாக விருத்திபெறாமல் இக் குற்றச்செயல்களைக் தடுத்து நிறுத்த முடியாது.

தமிழ் மக்கள் போராடாமல் இருக்க முடியாது. ஆயுதமேந்திய கொடிய எதிரிகட்கெதிராக சாத்வீகப் போராட்டம் பற்றிப் பேசிப் பயனில்லை. ஆனால், எல்லாப் போராட்டங்களும் ஆயுதப் போராட்டங்களாக அமைய முடியாது. அமையவும் வேண்டியதில்லை. எங்கே ஆயுதம் ஏந்துவது என்பதை விடுதலையின் அரசியல் (என் எண்ணத்தில் வெகுசன அரசியல்) முடிவு செய்ய வேண்டும். துவக்கு அரசியல் வழிநடத்துவதுக்குக் கீழ்படிய வேண்டும். இன்றைய அரசியல் நிலவரங்களும் பிரகடனம் செய்யப்படாத போரின் தொடர்ச்சியும் விடுதலைப் போராட்டம் வெகுசன அரசியலையும் மக்கள் யுத்தத்தையும் நோக்கி நகர வேண்டிய தேவையை வற்புறுத்துகின்றன.

ஆனந்த சங்கரி சொன்னதை நாம் கவனித்துப் பார்த்தால் அரசாங்கத்திடம் தீர்வுக்கான ஆலோசனை எதுவுமே இல்லை என்பது தெளிவாகும். தீர்வுக்கான ஆலோசனைகளை அவரும் முன்வைக்கிறார். அவற்றைப் பேரினவாதக் கட்சிகள் ஏற்கும் என்ற நம்பிக்கையையும் அவர் இடையிடை தெரிவிக்கிறார். அவரது நம்பிக்கைகளுக்கான அடிப்படை என்ன என்று எனக்குத் தெரியாது. அவருக்குத் தெரிந்திருக்கலாம். ஆனாலும், இதுவரை ஜே.வி.பி. பற்றியும் மகிந்த ராஜபக்ஷ ஆட்சி பற்றியும் அவர் கூறிவந்தவற்றையும் அவரது பிற எதிர்பார்ப்புகளையும் வைத்துக் கணிப்பிடும் போது, அவர் எந்தச் சோதிடரிடம் ஆலோசனை கேட்கிறார் என்று தான் யோசிக்கத் தோன்றியது.

விடுதலைப் புலிகள் முதலில் தனிநாட்டுத் தீர்வை வைத்திருந்தனர். பேச்சுவார்த்தைகளின் போக்கில், உள்ளக சுயநிர்ணயத்துடன் கூடிய சமஷ்டிக்கு இணக்கம் தெரிவித்திருந்தனர். பேச்சுவார்த்தைகள் பயனற்றுப் போன நிலையில், இடைக்கால நிருவாகத்திற்கான ஒரு யோசனையை முன்வைத்தார்கள். அதைக் கவனிப்பதாக யூ.என்.பி. பாசாங்கு செய்தது. அதற்குச் சந்திரிகா குமாரதுங்க முட்டுக்கட்டை போட்டார். பின்பு பாராளுமன்றத் தேர்தல் ஒன்று வலிந்து சுமத்தப்பட்டது. புதிய அரசாங்கம் அமைதிப் பேச்சுவார்த்தைகள் பற்றி அக்கறை காட்டவில்லை.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஏற்படுத்தப்பட்ட பிளவில் யூ.என்.பி. தலைவரின் பங்கும் அமெரிக்காவின் வஞ்சகமும் பற்றிப் பலர் மறந்திருக்க மாட்டோம். எனவே, இன்றுள்ள பிரச்சினை, பேரினவாத ஆட்சியாளர்களையும் `சர்வதேச சமூகம்' எனப்படுகிற ஏகாதிபத்திய நாடுகளையும் பொறுத்தவரை, விடுதலைப் புலிகளை நிராயுதபாணிகளாக்கித் தமிழ் மக்கள் மீது தாம் விரும்புகிற ஒரு தீர்வைத் திணிப்பது தான். பேரினவாதிகள் உடன்படக்கூடிய இந்திய வகையிலான சமஷ்டி (?) ஆட்சியும் ஒற்றையாட்சியும் தமிழ் மக்களின் சமத்துவத்தையோ சுயநிர்ணயத்தையோ மதிப்பன அல்ல.

அவசரகாலச் சட்ட காலத்தை நீடிப்பது முதல், தமிழ் மக்களின் அடிப்படையான உரிமைகளை மறுக்கிற பல்வேறு காரியங்கள் உட்பட, வடக்கு, கிழக்கைப் பிரிப்பது வரை எவ்விடயத்திலும் அரசாங்கம் எடுக்கும் எந்தத் தீர்மானத்தையும் யூ.என்.பி. எதிர்த்து நிற்கப் போவதில்லை. ஷ்ரீ.ல.சு.க. ஆரவாரத்துடன் செய்கிற அத்தனை பேரினவாத நீசத்தனங்களையும் யூ.என்.பி. தடையின்றிச் செய்ய வல்லது. ஜே.ஆர்.ஜயவர்தனவின் போர்ப் பிரகடனக் காலத்தில் மட்டுமே யூ.என்.பி.யின் சுயரூபம் அப்பட்டமாக வெளிச்சமானது.

தேசிய இனப் பிரச்சினைக்குரிய நியாயமான தீர்வு எதுவுமே பேரினவாதக் கட்சிகளான யூ.என்.பி., ஷ்ரீ.ல.சு.க., ஜே.வி.பி., ஹெல உறுமய ஆகியவற்றிடமோ அவற்றின் கூட்டாளிகளிடமோ இல்லை. அவர்களிடையிலான கருத்து வேறுபாடுகள் விடுதலைப் புலிகளை எப்படி வழிக்குக் கொண்டு வருவது என்பது பற்றியது மட்டுமே. இலங்கைக்கு கொலனி ஆட்சியிலிருந்து விடுதலை கிடைப்பதற்கு முன்பிருந்தே அவை கடைப்படித்து வந்துள்ள பேரினவாதக் கொள்கை எதையும் அவை கைவிட ஆயத்தமாக இல்லை.

சர்வகட்சி மாநாடுகள் எல்லாம் இதுவரை சாதித்ததென்ன? காலங்கடத்துவதை விட வேறென்ன நடந்திருக்கிறது? அரசாங்கத்தை நம்பிப் பேச்சுவார்த்தைகட்குப் போகவில்லை என்று தமிழ்ச்செல்வன் சொல்லியிருப்பது சரியானதும் நியாயமானதுமாகும். எனினும், சர்வதேச சமூகத்தை நம்புவதாக அவர் சொன்னது பற்றி எனக்கு மிகுந்த மனத்தடைகள் உள்ளன. அரசாங்கத்தை விட வஞ்சகமான சக்திகளே இந்தச் சர்வதேச சமூகத்தில் உள்ளன. விடுதலைப் புலிகள் சர்வதேச நெருக்குவாரங்கட்குட்பட்டுப் பேச்சுவார்த்தைகட்குப் போகிறார்கள் என்பது தான் உண்மையான நிலவரம்.

அப்பாவித் தமிழ் மக்கள் அரசாங்கப் படைகளால் பத்தாயிரக் கணக்கில் அகதிகளாக்கப்பட்டு நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டு அவர்களது வாழ்வாதாரங்கள் சிதைக்கப்பட்டபோது கண்டுங்காணாமல் இருந்த சர்வதேசச் சமூகம், ஒரு ஃபிரெஞ்சு என்.ஜி.ஓ. ஊழியர்கள் என்ற ஒரு காரணத்திற்காக மட்டுமே மூதூர்ப் படுகொலைகள் பற்றி அக்கறை காட்டியது. ஆனால், அரசாங்கம் விஷமத்தனமான முறையில் விசாரணைகளைத் திசை திருப்புவதை அறிந்தும் செல்லமாகக் கடிந்துகொண்டதற்கு மேலாக எதையும் செய்யவில்லை. இனியாவது சர்வதேச சமூகம் எனப்படுகிற ஏகாதிபத்திய நாடுகளையும் இந்திய மேலாதிக்கவாதிகளையும் நம்புவதையும் அவர்களை ஈடுபடுத்துவதற்கு முயற்சி எடுப்பதையும் தமிழ் மக்கள் மறப்பது நல்லது.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் வெற்றிக்கு ஒரே ஒரு பாதைதான் உண்டு. அது ஏகாதிபத்திய எதிர்ப்புத் திசையிலான வெகுசனப் போராட்டப் பாதைகளாகும். தமிழ் மக்களின் முன்மாதிரியாக ஒரு காலத்தில் இஸ்ரேலைக் கருதிய காலம் இருந்தது. தமிழ் மக்களின் உண்மையான நிலை என்றுமே ஏகாதிபத்தியத்தின் கைப்பாவையான இஸ்ரேலினதல்ல. அதற்கு நேரெதிரானது. தமிழ் மக்களின் நண்பர்கள் எந்த ஆட்சியாளர்களுமல்ல. உலகின் ஒடுக்கப்பட்ட மக்களும் விடுதலைக்காகப் போராடும் சக்திகளுமே என்றென்றும் தமிழ் மக்களின் நண்பர்கள். கற்க விரும்புவோமானால் அவர்களிடமிருந்து கற்க நிறைய உண்டு.

__________________________
நன்றி: ஞாயிறு தினக்குரல் October 29, 2006



_____________________________________________

Labels:


Get your own calendar

Links