« Home | ரணில் - மகிந்த கூட்டு ஒப்பந்தம் » | ஈழத்தமிழரின் நேச சக்திகள் » | ஆனந்தசங்கரிக்கு யுனெஸ்கோ வருது கிடைத்தது எப்படி? » | இந்தியாவின் நோக்கம் என்ன? » | மகிந்தவின் முகங்கள் » | மறுபக்கத்தின் நேர்முக தரிசனம் » | கிளிநொச்சி மீட்பு நடந்தது எவ்வாறு? » | திலீபனின் இறுதி உரையிலிருந்து... » | கேணல் சங்கர் » | திலீபனுடன் பன்னிரெண்டாம் நாள் - 26.09.1987 »

புலிகளின் பலம் மக்கள் சக்தியே

பலவீனமாகத் தோற்றமளிக்கும் புலிகளின் பலம் மக்கள் சக்தியே
-சி.இதயச்சந்திரன்-


பலராலும் கேட்கப்படும் கேள்வியொன்று தற்போது உலகெங்கும் வலம் வந்து கொண்டிருக்கிறது. அதாவது, புலிகள் பலமிழந்து விட்டார்களா?

கேள்வி கேட்பவர்கள் பலதரப்பட்ட ஈடுபாடு கொண்டவர்களாகக் காணப்படுவதும் கவனிக்கத்தக்கது. புலிகள் பலமிழக்க வேண்டுமென ஆத்மார்த்தமாக விரும்பும் ஒரு சாராரும், தமது பங்களிப்பிற்குத் தளமில்லையென அங்கலாய்க்கும் அறிவுஜீவிகள் கூட்டமும், புளிச்சல் ஏவறை விடும்போது அரசியல் பேசுவோராகவும், உளமார தேச விடுதலைக்கு ஏங்கும் ஆர்வலர் கூட்டமுமாக பரந்துள்ளனர்.

புலிகள் பலமிழக்க வேண்டுமென விரும்பு வோர் கூட்டத்தின் கருத்துக்களை முதலில் பார்ப்போம்.

இக்கூட்டத்தில் இரு வகையினர் முன்னிலை வகிக்கின்றனர். ஒரு பிரிவு முன்பு ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோவொரு நிலையில் பங்குகொண்டவராவர். மறுபிரிவினர், சமூக அங்கீகாரம் பெற மாற்றுவழி தேடுபவராவர்.

முதற்பிரிவினரைப் பொறுத்த வரையில், புலிகளின் ஒவ்வொரு அரசியல், இராணுவ நகர்வுகளையும் மறுதலிக்க, சிறிலங்காவின் பிரசார உத்தியை தமது ஆயுதமாகக் கொள்கிறார்கள். அது மட்டுமல்லாமல் பன்முகத் தன்மை, மக்கள் ஜனநாயகம், முஸ்லிம்கள் உரிமை என்று பல கூறுகளை தமது கோஷங்களாக முன்வைக்கின்றனர்.

அரசின் அடக்குமுறை குறித்து இவர்கள் விவாதிக்க விரும்ப மாட்டார்கள். மக்களின் அவல நிலை, 1987க்குப் பின்னரே உருவானது போன்றதொரு தோற்றப்பாட்டினை புலி எதிர்ப்பு பிரசாரத்தினூடு முன்னெடுக்கின்றனர்.

புலிகள் இயக்கம் இல்லாவிட்டால், தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்ந்து விடுமென்பது போல தமது ஆய்வுகளை மேற்கொள்கிறார்கள். ஒருபடி மேலே சென்று, மட்டக்களப்பிலிருந்து புலிகள் வெளியேறினால், கொலைகள் நிறுத்தப்படலாமென்றும் கூறுகிறார்கள். இவர்களுக்கு சில விடயங்களில் தேர்ந் தெடுக்கப்பட்ட ஞாபகமறதி (ளுநடநஉவiஎந யுஅநௌயை) இருப்பது போலுள்ளது.

இராணுவம் சம்பூரைக் கைப்பற்றியது ஞாபகமிருக்கும். ஆயினும் மூதூரின் 90 வீதமான நிலப்பரப்பைத் தாண்டி இறங்குதுறை வரை புலிகள் பாய்ந்தது மறக்கப்பட்டு விடும்.

முகமாலையிலிருந்து எழுதுமட்டுவாள் வரை சென்று 53 ஆவது படையணியை செயலிழக்கச் செய்து புலிகள் திரும்பியது கனவாகத் தென்படும். முகமாலை முன்னரங்க நிலையிலிருந்து 300 மீற்றர் இராணுவம் நகர்ந்தது, நனவாக மனதில் நிலைத்து நிற்கும்.

தமிழர் தரப்பிற்கு, இந்தியாவின் இலங்கை தொடர்பான வெளியுறவுக் கொள்கை குறித்து தெளிவாகப் புரிந்தாலும், நல்லுறவைப் பேண அவர்கள் எடுத்த சந்திப்பு முயற்சி நிறைவேறாமல் போனதையிட்டு புளகாங்கிதம் அடைபவர்களாக இத்தரப்பினர் இருக்கின்றனர்.

இவர்களின் செயற்பாடுகள் மூன்றாவது தரப்பாக அமையாமல் ஜனாதிபதி மஹிந்தவுடன் நேரடியாக இணைந்து தமது அபிப்பிராயங்களை முன்வைப்பதே ஜனநாயக பன்முகத் தன்மைக்கு வலுச்சேர்ப்பதாக அமையும்.

அரசின் நியாயப்பாடுகளுக்கு, பக்கப்பாட்டு வாசிப்பதைவிட, பட்டினிச்சாவினை எதிர்கொள்ளும் தமிழ் மக்களுக்கு, ஜனாதிபதியின் நிதியுதவியுடன் ஜனநாயகத்தைப் பேணுவது பற்றிப் போதிக்கலாம்.

இப் புதிய ஜனநாயகவாதிகள், மூதூரை பிறப்பிடமாகக் கொண்ட மட்டக்களப்பு பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பாலசுகுமாரின் ஜனநாயக விடுதலை பற்றி வாய்திறக்க மாட்டார்கள். பொத்துவிலில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம் சகோதரர்கள் குறித்து ஒரு விசாரணைக் கமிஷனை ஏற்படுத்தும் படியும் கோரிக்கை விடமாட்டார்கள்.

இராணுவ அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் கொல்லப்பட்ட தமிழ் மக்களைப் பற்றி கேட்டால், தாம் அக்காலங்களில் அமீனிசியா நோயால் பாதிப்படைந்திருந்ததாகவும் சொல்ல வாய்ப்புண்டு.

இதைவிட தமிழ் மக்களைக் கிலி கொள்ள வைக்கும் இன்னுமொரு வகையான பரப்புரையொன்றும் மேற்கொள்ளப்படுகிறது. குண்டு மழை பொழியும் கிபீர் பறவைகளை வீழ்த்தும் வல்லமை புலிகளுக்கு இல்லையென்றும், இப்போதுதான் அமெரிக்காவில் அதைக் கொள்வனவு செய்வதற்கான முயற்சிகள் நடைபெறுவதாகவும் கூறுகிறார்கள்.

2002க்கு முன் வீழ்த்தப்பட்ட பல விமானங்கள், கல்லெறிபட்டு கவிழ்ந்ததாக எண்ணுகிறார்கள் போல் தெரிகிறது.

இவர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வுகளை உள்ளடக்கிய பிரசார முறையானது தமிழ் மக்கள் மீதுள்ள அக்கறையின் பாற்பட்டு செய்யப்படுவதாக கருதினால் மனதில் குழப்பமே மிஞ்சும்.

இன்னொரு பிரிவினரான, சமூக அந்தஸ்தை தேடிக்கொள்ள மாற்றுவழி நாடுவோர் கூட்டமும் புலியைக் கேலி செய்யும் பரப்புரைகளை மேற்கொள்கின்றனர்.

உலக நாடுகளில் முன்னெடுக்கப்பட்ட பல போராட்ட வரலாறுகளைக் கற்றுத்தேர்ந்தாலும், ஈழப்போராட்டம் குறித்து இந்தியா என்கிற பச்சைக் கண்ணாடியூடாகவே பார்க்க விரும்புகிறார்கள். பச்சையாகத் தெரியாத எவ்விடயமும் கறுப்பாகவே இவர்களுக்குத் தெரிகிறது.

இவர்கள் மிகச்சிறிய கூட்டமாக (நுடவைந) இருந்தாலும் ஏற்கனவே இழந்த சமுதாய அந்தஸ்தை மீட்டெடுக்க உயர்குடிச் சிந்தனையிலும், கொழும்பு கறுவாக்காட்டு மனோபாவத்திலும், பழைய லண்டன் கனவுகளிலும் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.

இந்நபர்கள் சமுதாய மாற்றத்திற்கான சிறு துரும்பையும் அசைக்க வல்லமையற்றவர்கள்.
அடுத்ததாக மிக முக்கியமாக சமூகத்தில் கருத்துருவாக்கம் படித்த கூட்டமொன்று அறிவுஜீவிகளாகி கற்பனை உலகில் சஞ்சரிக்கிறது.

இக்குழுக்கள், முகந்தெரியாத வெளிநாட்டு சிந்தனாவாதிகளின் மேற்கோள்களையும், கருத்துக்களையும் சரளமாகவே தொடர்பாடலின் போதே இடைச்செருகி விடுவார்கள்.

இவர்கள் இனம்புரியாதவொரு கற்பனா உலகத்தளத்தில் மிதந்து கொண்டு யதார்த்தத்திலிருந்து வேறுபட்ட மூன்றாவது மனிதனாக காட்டிக் கொள்வதையே விரும்புகிறார்கள்.

இக்கூட்டம் நேரடியாக ஆயுதப்போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர்த்தே வரும் ஆலோசகர்களாகவும், கொள்கை உருவாக்கிகளாகவும், நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் குறித்து ஆழமாக விமர்சிப்பவர்களாகவும் இருக்க விரும்புவர்.

நடைமுறையும், சித்தாந்தமும் இணைய வேண்டிய அவசியம் குறித்து பிரஸ்தாபித்தாலும், தமது இயல்பிற்கு அவை பொருந்தாத விடயமாக இருப்பதாக விளக்கமளித்து, ஏனையோரை முன்னுக்குத் தள்ளிவிடும் காரியத்தை கனகச்சிதமாக நிறைவேற்றுவார்கள்.

நடைபெறும் தேசிய விடுதலைப் போரில், தாமரை இலையில் நீர்த்துளி போன்றதொரு ஒட்டுறவில்லாத இருக்கை ஒன்றினை யாராவது தரமாட்டார்களாவென ஏங்குவதே இவர்களின் வாழ்க்கையாகிவிட்டது.

இவர்களின் ஆய்வுகளும், விமர்சனங்களும் எப்போதுமே போராட்டத்தை முன்னெடுக்கும் தலைமையை நோக்கியே இருக்கும். போராட்ட முன்னோடிகளின் பார்வை இவர்கள் மீது பட்டு, தம்மையும் ஒரு ஆலோசக ஆய்வாளராக ஏற்க மாட்டார்களாவென எதிர்பார்த்து, அவை நிறைவேறாத நிலையில், எதிர்நிலைவாதியாக மாறவும் செய்வார்கள்.

இவ்வகையான புலி எதிர்ப்பாளர்கள் பற்றிய ஆய்வொன்றை மேற்கொண்டால், அதில் முன்னிலை வகிக்கும் பலர், மேட்டுக்குடி மனோபாவம் நிறைந்த உயர்குடிகளாக இருப்பதை தெளிவாகக் காணலாம். அதில் அவர்களது வர்க்க நலன் கலந்தே இருக்கிறது. இது வரலாற்று இயங்கியலின் தவிர்க்க முடியாத வெளிப்பாடாகும்.

எப்போதுமே தமிழர்களுக்கென்றொரு தனிக்குணமுண்டு. மாற்றான் தோட்டத்துக்கு மல்லிகை மட்டுமே மணம் வீசுமென்று கூசாமல் கூறுவர். இவ்வாறான தாழ்வுச் சிக்கல், அறிவுஜீவிகளின் கருத்தாளுமையைச் சிதைத்து விடுகிறது.

விஞ்ஞான பூர்வமான அறிவியல் சார் அணுகுமுறைகளும், நடைமுறைச் சிக்கல் பற்றிய சித்தாந்தத் தெளிவும் நடைமுறையோடு இணைக்கப்பட்டதொன்றாக இருப்பதை இவர்கள் ஏற்க மறுப்பது ஆச்சரியத்திற்குரியது.

இன்னமும் முற்றுப்பெறாத ஈழத் தேசிய விடுதலைப் போராட்ட வரலாறு பற்றி தமது முடிவுற்ற ஆய்வுகளை சமகால நிகழ்வுகளோடு பொருத்திப் பார்ப்பதிலேயே சிக்கல் எழுகிறது.

ஏகாதிபத்தியங்கள் உலகை பல கூறாக்கி விழுங்க எத்தணிக்கும் நிலையில், எமது தேச விடுதலைப் போர் எவ்வகையான புதிய திருப்பங்களையும், வெளி அழுத்தங்களையும் உள்வாங்கி முன்னோக்கி நகருமென்று இந்த அறிவுஜீவிகளால் கணிக்க முடியாதுள்ளது.

அடக்கும் அரச இயந்திரத்தின் அரசியல் இராணுவ நகர்வுகளை பலமிக்கதொன்றாக காட்டுவதிலும், புலிகளின் தந்திரோபாய பின்னடைவுகளை பலவீனமான தொன்றாகச்சித்திரிப்பதிலும் இந்த புத்திஜீவிகள் திருப்தியடைகிறார்கள்.

முழுமையான உளவியல் சார் கண்ணோட்டத்தில் இவர்களின் செயற்பாடுகளை நோக்கினால், தமிழ் மக்களின் விடுதலைப் போரை தனிப்பட்ட புலிகளின் போராகக் காட்டவே இவர்கள் முனைவதாகக் கொள்ளலாம்.

இறுதியாக தேச விடுதலையை உளமார நேசிக்கும் பரந்துபட்ட மக்கள் கூட்டத்தின் சமகால நிலை பற்றிப் பார்ப்போம். கொடூரங்களின் கோரப்பல் வடுக்களை ஆழமாகப் பதிய வைத்துள்ள இம்மக்கள், விடியலை நோக்கிய பெருவெற்றிச் செய்தி ஒன்றிற்காக காத்திருக்கிறார்கள். பலமும், பலவீனமும் சார்பு நிலையானது என்ற கணிப்பீடு அவசியமானது.

சிறு வெற்றிச் செய்திகள் ரணங்களை ஆற்றுப் படுத்தினாலும், அரசின் கோயபல்ஸ் பரப்புரைகள் ரணங்களை கீறி ஆழப்படுத்தி விடுகின்றன.

அரசின் போலிப் பிரசாரங்களின் வீரியமும், எதிர்ப் புரட்சிவாதிகளின் நரித்தனமான பரப்புரைகளும், சகல ஊடகங்களிலும் வியாபித்து, போராட்ட உணர்வை மழுங்கடிக்கக்கூடிய வகையில் திட்டமிடப்படுகின்றன.

புலிகள் பலவீனமாகி விட்டார்கள், ஆதலால், மாற்றுச் சிந்தனையை நாடுங்களென்ற வகையில், மக்கள் மத்தியில் உச்சகட்ட குழம்பல் நிலையை உருவாக்கி விட முனைவோரை இனங்கண்டு அம்பலப்படுத்த வேண்டிய அவசியம் போராட்ட சார்பு ஊடகங்களின் தலையாய கடமையாக இருக்க வேண்டும்.

குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கும் வல்லமையுள்ள சில புலம்பெயர் அறிவாளிகள் குறித்தும், அவர்தம் காழ்ப்புணர்வுப் பரப்புரைகள் பற்றியும் மிகுந்த அவதானம் மக்களுக்குத் தேவை.

பார்வையாளர்கள் பங்காளிகளாக மாறும் இந்த இக்கட்டான காலத்தில், உறுதிதளரா மனம் வேண்டும். நேரிய பார்வை வேண்டும். வரலாற்றுப் பதிவுகளில் பொறிக்கப்பட்ட விடுதலைப் போர்கள் அனைத்திலும், பின்னகர்த்தும் குழப்பல்வாதிகளின் தடங்களும் பதிந்திருக்கின்றன என்பதை உணரவேண்டும்.

நன்றி: வீரகேசரி வார வெளியீடு (15.10.06)
நன்றி: தமிழ்நாதம்

_____________________________________________

Labels: , ,