Thursday, October 26, 2006

புலிகளின் பலம் மக்கள் சக்தியே

பலவீனமாகத் தோற்றமளிக்கும் புலிகளின் பலம் மக்கள் சக்தியே
-சி.இதயச்சந்திரன்-


பலராலும் கேட்கப்படும் கேள்வியொன்று தற்போது உலகெங்கும் வலம் வந்து கொண்டிருக்கிறது. அதாவது, புலிகள் பலமிழந்து விட்டார்களா?

கேள்வி கேட்பவர்கள் பலதரப்பட்ட ஈடுபாடு கொண்டவர்களாகக் காணப்படுவதும் கவனிக்கத்தக்கது. புலிகள் பலமிழக்க வேண்டுமென ஆத்மார்த்தமாக விரும்பும் ஒரு சாராரும், தமது பங்களிப்பிற்குத் தளமில்லையென அங்கலாய்க்கும் அறிவுஜீவிகள் கூட்டமும், புளிச்சல் ஏவறை விடும்போது அரசியல் பேசுவோராகவும், உளமார தேச விடுதலைக்கு ஏங்கும் ஆர்வலர் கூட்டமுமாக பரந்துள்ளனர்.

புலிகள் பலமிழக்க வேண்டுமென விரும்பு வோர் கூட்டத்தின் கருத்துக்களை முதலில் பார்ப்போம்.

இக்கூட்டத்தில் இரு வகையினர் முன்னிலை வகிக்கின்றனர். ஒரு பிரிவு முன்பு ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோவொரு நிலையில் பங்குகொண்டவராவர். மறுபிரிவினர், சமூக அங்கீகாரம் பெற மாற்றுவழி தேடுபவராவர்.

முதற்பிரிவினரைப் பொறுத்த வரையில், புலிகளின் ஒவ்வொரு அரசியல், இராணுவ நகர்வுகளையும் மறுதலிக்க, சிறிலங்காவின் பிரசார உத்தியை தமது ஆயுதமாகக் கொள்கிறார்கள். அது மட்டுமல்லாமல் பன்முகத் தன்மை, மக்கள் ஜனநாயகம், முஸ்லிம்கள் உரிமை என்று பல கூறுகளை தமது கோஷங்களாக முன்வைக்கின்றனர்.

அரசின் அடக்குமுறை குறித்து இவர்கள் விவாதிக்க விரும்ப மாட்டார்கள். மக்களின் அவல நிலை, 1987க்குப் பின்னரே உருவானது போன்றதொரு தோற்றப்பாட்டினை புலி எதிர்ப்பு பிரசாரத்தினூடு முன்னெடுக்கின்றனர்.

புலிகள் இயக்கம் இல்லாவிட்டால், தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்ந்து விடுமென்பது போல தமது ஆய்வுகளை மேற்கொள்கிறார்கள். ஒருபடி மேலே சென்று, மட்டக்களப்பிலிருந்து புலிகள் வெளியேறினால், கொலைகள் நிறுத்தப்படலாமென்றும் கூறுகிறார்கள். இவர்களுக்கு சில விடயங்களில் தேர்ந் தெடுக்கப்பட்ட ஞாபகமறதி (ளுநடநஉவiஎந யுஅநௌயை) இருப்பது போலுள்ளது.

இராணுவம் சம்பூரைக் கைப்பற்றியது ஞாபகமிருக்கும். ஆயினும் மூதூரின் 90 வீதமான நிலப்பரப்பைத் தாண்டி இறங்குதுறை வரை புலிகள் பாய்ந்தது மறக்கப்பட்டு விடும்.

முகமாலையிலிருந்து எழுதுமட்டுவாள் வரை சென்று 53 ஆவது படையணியை செயலிழக்கச் செய்து புலிகள் திரும்பியது கனவாகத் தென்படும். முகமாலை முன்னரங்க நிலையிலிருந்து 300 மீற்றர் இராணுவம் நகர்ந்தது, நனவாக மனதில் நிலைத்து நிற்கும்.

தமிழர் தரப்பிற்கு, இந்தியாவின் இலங்கை தொடர்பான வெளியுறவுக் கொள்கை குறித்து தெளிவாகப் புரிந்தாலும், நல்லுறவைப் பேண அவர்கள் எடுத்த சந்திப்பு முயற்சி நிறைவேறாமல் போனதையிட்டு புளகாங்கிதம் அடைபவர்களாக இத்தரப்பினர் இருக்கின்றனர்.

இவர்களின் செயற்பாடுகள் மூன்றாவது தரப்பாக அமையாமல் ஜனாதிபதி மஹிந்தவுடன் நேரடியாக இணைந்து தமது அபிப்பிராயங்களை முன்வைப்பதே ஜனநாயக பன்முகத் தன்மைக்கு வலுச்சேர்ப்பதாக அமையும்.

அரசின் நியாயப்பாடுகளுக்கு, பக்கப்பாட்டு வாசிப்பதைவிட, பட்டினிச்சாவினை எதிர்கொள்ளும் தமிழ் மக்களுக்கு, ஜனாதிபதியின் நிதியுதவியுடன் ஜனநாயகத்தைப் பேணுவது பற்றிப் போதிக்கலாம்.

இப் புதிய ஜனநாயகவாதிகள், மூதூரை பிறப்பிடமாகக் கொண்ட மட்டக்களப்பு பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பாலசுகுமாரின் ஜனநாயக விடுதலை பற்றி வாய்திறக்க மாட்டார்கள். பொத்துவிலில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம் சகோதரர்கள் குறித்து ஒரு விசாரணைக் கமிஷனை ஏற்படுத்தும் படியும் கோரிக்கை விடமாட்டார்கள்.

இராணுவ அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் கொல்லப்பட்ட தமிழ் மக்களைப் பற்றி கேட்டால், தாம் அக்காலங்களில் அமீனிசியா நோயால் பாதிப்படைந்திருந்ததாகவும் சொல்ல வாய்ப்புண்டு.

இதைவிட தமிழ் மக்களைக் கிலி கொள்ள வைக்கும் இன்னுமொரு வகையான பரப்புரையொன்றும் மேற்கொள்ளப்படுகிறது. குண்டு மழை பொழியும் கிபீர் பறவைகளை வீழ்த்தும் வல்லமை புலிகளுக்கு இல்லையென்றும், இப்போதுதான் அமெரிக்காவில் அதைக் கொள்வனவு செய்வதற்கான முயற்சிகள் நடைபெறுவதாகவும் கூறுகிறார்கள்.

2002க்கு முன் வீழ்த்தப்பட்ட பல விமானங்கள், கல்லெறிபட்டு கவிழ்ந்ததாக எண்ணுகிறார்கள் போல் தெரிகிறது.

இவர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வுகளை உள்ளடக்கிய பிரசார முறையானது தமிழ் மக்கள் மீதுள்ள அக்கறையின் பாற்பட்டு செய்யப்படுவதாக கருதினால் மனதில் குழப்பமே மிஞ்சும்.

இன்னொரு பிரிவினரான, சமூக அந்தஸ்தை தேடிக்கொள்ள மாற்றுவழி நாடுவோர் கூட்டமும் புலியைக் கேலி செய்யும் பரப்புரைகளை மேற்கொள்கின்றனர்.

உலக நாடுகளில் முன்னெடுக்கப்பட்ட பல போராட்ட வரலாறுகளைக் கற்றுத்தேர்ந்தாலும், ஈழப்போராட்டம் குறித்து இந்தியா என்கிற பச்சைக் கண்ணாடியூடாகவே பார்க்க விரும்புகிறார்கள். பச்சையாகத் தெரியாத எவ்விடயமும் கறுப்பாகவே இவர்களுக்குத் தெரிகிறது.

இவர்கள் மிகச்சிறிய கூட்டமாக (நுடவைந) இருந்தாலும் ஏற்கனவே இழந்த சமுதாய அந்தஸ்தை மீட்டெடுக்க உயர்குடிச் சிந்தனையிலும், கொழும்பு கறுவாக்காட்டு மனோபாவத்திலும், பழைய லண்டன் கனவுகளிலும் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.

இந்நபர்கள் சமுதாய மாற்றத்திற்கான சிறு துரும்பையும் அசைக்க வல்லமையற்றவர்கள்.
அடுத்ததாக மிக முக்கியமாக சமூகத்தில் கருத்துருவாக்கம் படித்த கூட்டமொன்று அறிவுஜீவிகளாகி கற்பனை உலகில் சஞ்சரிக்கிறது.

இக்குழுக்கள், முகந்தெரியாத வெளிநாட்டு சிந்தனாவாதிகளின் மேற்கோள்களையும், கருத்துக்களையும் சரளமாகவே தொடர்பாடலின் போதே இடைச்செருகி விடுவார்கள்.

இவர்கள் இனம்புரியாதவொரு கற்பனா உலகத்தளத்தில் மிதந்து கொண்டு யதார்த்தத்திலிருந்து வேறுபட்ட மூன்றாவது மனிதனாக காட்டிக் கொள்வதையே விரும்புகிறார்கள்.

இக்கூட்டம் நேரடியாக ஆயுதப்போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர்த்தே வரும் ஆலோசகர்களாகவும், கொள்கை உருவாக்கிகளாகவும், நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் குறித்து ஆழமாக விமர்சிப்பவர்களாகவும் இருக்க விரும்புவர்.

நடைமுறையும், சித்தாந்தமும் இணைய வேண்டிய அவசியம் குறித்து பிரஸ்தாபித்தாலும், தமது இயல்பிற்கு அவை பொருந்தாத விடயமாக இருப்பதாக விளக்கமளித்து, ஏனையோரை முன்னுக்குத் தள்ளிவிடும் காரியத்தை கனகச்சிதமாக நிறைவேற்றுவார்கள்.

நடைபெறும் தேசிய விடுதலைப் போரில், தாமரை இலையில் நீர்த்துளி போன்றதொரு ஒட்டுறவில்லாத இருக்கை ஒன்றினை யாராவது தரமாட்டார்களாவென ஏங்குவதே இவர்களின் வாழ்க்கையாகிவிட்டது.

இவர்களின் ஆய்வுகளும், விமர்சனங்களும் எப்போதுமே போராட்டத்தை முன்னெடுக்கும் தலைமையை நோக்கியே இருக்கும். போராட்ட முன்னோடிகளின் பார்வை இவர்கள் மீது பட்டு, தம்மையும் ஒரு ஆலோசக ஆய்வாளராக ஏற்க மாட்டார்களாவென எதிர்பார்த்து, அவை நிறைவேறாத நிலையில், எதிர்நிலைவாதியாக மாறவும் செய்வார்கள்.

இவ்வகையான புலி எதிர்ப்பாளர்கள் பற்றிய ஆய்வொன்றை மேற்கொண்டால், அதில் முன்னிலை வகிக்கும் பலர், மேட்டுக்குடி மனோபாவம் நிறைந்த உயர்குடிகளாக இருப்பதை தெளிவாகக் காணலாம். அதில் அவர்களது வர்க்க நலன் கலந்தே இருக்கிறது. இது வரலாற்று இயங்கியலின் தவிர்க்க முடியாத வெளிப்பாடாகும்.

எப்போதுமே தமிழர்களுக்கென்றொரு தனிக்குணமுண்டு. மாற்றான் தோட்டத்துக்கு மல்லிகை மட்டுமே மணம் வீசுமென்று கூசாமல் கூறுவர். இவ்வாறான தாழ்வுச் சிக்கல், அறிவுஜீவிகளின் கருத்தாளுமையைச் சிதைத்து விடுகிறது.

விஞ்ஞான பூர்வமான அறிவியல் சார் அணுகுமுறைகளும், நடைமுறைச் சிக்கல் பற்றிய சித்தாந்தத் தெளிவும் நடைமுறையோடு இணைக்கப்பட்டதொன்றாக இருப்பதை இவர்கள் ஏற்க மறுப்பது ஆச்சரியத்திற்குரியது.

இன்னமும் முற்றுப்பெறாத ஈழத் தேசிய விடுதலைப் போராட்ட வரலாறு பற்றி தமது முடிவுற்ற ஆய்வுகளை சமகால நிகழ்வுகளோடு பொருத்திப் பார்ப்பதிலேயே சிக்கல் எழுகிறது.

ஏகாதிபத்தியங்கள் உலகை பல கூறாக்கி விழுங்க எத்தணிக்கும் நிலையில், எமது தேச விடுதலைப் போர் எவ்வகையான புதிய திருப்பங்களையும், வெளி அழுத்தங்களையும் உள்வாங்கி முன்னோக்கி நகருமென்று இந்த அறிவுஜீவிகளால் கணிக்க முடியாதுள்ளது.

அடக்கும் அரச இயந்திரத்தின் அரசியல் இராணுவ நகர்வுகளை பலமிக்கதொன்றாக காட்டுவதிலும், புலிகளின் தந்திரோபாய பின்னடைவுகளை பலவீனமான தொன்றாகச்சித்திரிப்பதிலும் இந்த புத்திஜீவிகள் திருப்தியடைகிறார்கள்.

முழுமையான உளவியல் சார் கண்ணோட்டத்தில் இவர்களின் செயற்பாடுகளை நோக்கினால், தமிழ் மக்களின் விடுதலைப் போரை தனிப்பட்ட புலிகளின் போராகக் காட்டவே இவர்கள் முனைவதாகக் கொள்ளலாம்.

இறுதியாக தேச விடுதலையை உளமார நேசிக்கும் பரந்துபட்ட மக்கள் கூட்டத்தின் சமகால நிலை பற்றிப் பார்ப்போம். கொடூரங்களின் கோரப்பல் வடுக்களை ஆழமாகப் பதிய வைத்துள்ள இம்மக்கள், விடியலை நோக்கிய பெருவெற்றிச் செய்தி ஒன்றிற்காக காத்திருக்கிறார்கள். பலமும், பலவீனமும் சார்பு நிலையானது என்ற கணிப்பீடு அவசியமானது.

சிறு வெற்றிச் செய்திகள் ரணங்களை ஆற்றுப் படுத்தினாலும், அரசின் கோயபல்ஸ் பரப்புரைகள் ரணங்களை கீறி ஆழப்படுத்தி விடுகின்றன.

அரசின் போலிப் பிரசாரங்களின் வீரியமும், எதிர்ப் புரட்சிவாதிகளின் நரித்தனமான பரப்புரைகளும், சகல ஊடகங்களிலும் வியாபித்து, போராட்ட உணர்வை மழுங்கடிக்கக்கூடிய வகையில் திட்டமிடப்படுகின்றன.

புலிகள் பலவீனமாகி விட்டார்கள், ஆதலால், மாற்றுச் சிந்தனையை நாடுங்களென்ற வகையில், மக்கள் மத்தியில் உச்சகட்ட குழம்பல் நிலையை உருவாக்கி விட முனைவோரை இனங்கண்டு அம்பலப்படுத்த வேண்டிய அவசியம் போராட்ட சார்பு ஊடகங்களின் தலையாய கடமையாக இருக்க வேண்டும்.

குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கும் வல்லமையுள்ள சில புலம்பெயர் அறிவாளிகள் குறித்தும், அவர்தம் காழ்ப்புணர்வுப் பரப்புரைகள் பற்றியும் மிகுந்த அவதானம் மக்களுக்குத் தேவை.

பார்வையாளர்கள் பங்காளிகளாக மாறும் இந்த இக்கட்டான காலத்தில், உறுதிதளரா மனம் வேண்டும். நேரிய பார்வை வேண்டும். வரலாற்றுப் பதிவுகளில் பொறிக்கப்பட்ட விடுதலைப் போர்கள் அனைத்திலும், பின்னகர்த்தும் குழப்பல்வாதிகளின் தடங்களும் பதிந்திருக்கின்றன என்பதை உணரவேண்டும்.

நன்றி: வீரகேசரி வார வெளியீடு (15.10.06)
நன்றி: தமிழ்நாதம்

_____________________________________________

Labels: , ,

Tuesday, October 24, 2006

ரணில் - மகிந்த கூட்டு ஒப்பந்தம்

மறுபக்கம் - கோகர்ணன்

அரசியலில் பரஸ்பர அவநம்பிக்கைக்கும் ஏமாற்றுகிற நோக்கங்கட்கும் ஏதோ வகையில் புரிந்துணர்வு உடன்படிக்கைகளுடன் நல்ல உறவு இருக்க வேண்டும். விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்குமிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையில் ஏ-9 பாதையைத் திறப்பதை விட எதுவுமே முழுமையாகவோ, ஏன் நியாயமாக ஏற்றுக் கொள்ளக் கூடியளவு திருப்திகரமாகவோ நிறைவேற்றப்பட்டதாகச் சொல்ல இயலவில்லை. அமைதிப் பேச்சுவார்த்தைகள் பலவும் தொற்றுப் பறியில் இருந்து அறுந்தறுந்து இழுபட்டு அழிந்துள்ளன. புரிந்துணர்வு உடன்படிக்கை தேசிய இனப் பிரச்சினையின் தீர்வின் அவசியம் பற்றிய புரிதலின் விளைவானதென நான் என்றுமே நம்பவில்லை. பலவேறு கட்டாயங்களின் விளைவாகவே அது ஏற்பட்டது. எனினும், அது அவசியமானதும் மக்களுக்கு நன்மையானதுமான ஒரு நடவடிக்கை என்பதில் எனக்குக் கருத்து வேறுபாடு இல்லை. அது சரியாக நடைமுறைப்படுத்தப்படுமா என்பதில் எனக்கு மிகுந்த ஐயங்கள் இருந்தன. ஆயினும் அதை நடைமுறைப்படுத்துவதற்கு எல்லாரும் தம்மாலானதைச் செய்ய வேண்டும் என்ற ஆவல் இருந்தது. தேசிய இனப் பிரச்சினையின் தீர்வுக்கான தேவை இன்னமும் மிகவும் தவறான கோணங்களிலிருந்தே அடையாளங் காணப்பட்டு வருகிறது.

ஜனாதிபதி ராஜபக்‌ஷ ஒரே நேரத்தில் ஜே.வி.பி. யுடனும், ஹெல உறுமயவுடனும் புரிந்துணர்வு உடன்படிக்கைகளைச் செய்ததோடு பலரும் பலவிதமாக வியாக்கியானஞ் செய்யக் கூடியதான ஒரு மகிந்த சிந்தனையையும் முன் வைத்தார். என்றாலும், ராஜபக்ஷவின் நோக்கம் அமைதியான தீர்வல்ல என்பதற்கான அறிகுறிகள் வெகு விரைவிலேயே தெளிவாகின. விடுதலைப் புலிகளுக்கும் படையினருக்குமிடையிலான மோதல்களும் விடுதலைப் புலிகளுக்கும் துணைப்படையினருக்குமான மோதல்களும் அரசாங்கத் தரப்பிலும் விடுதலைப் புலிகளின் தரப்பிலும் போதியளவு விட்டுக் கொடுப்பு மனப்பாங்கு இருந்திருந்தால் தவிர்த்திருக்கக் கூடியவை. எனினும், தேசிய இனப் பிரச்சினையின் தீர்வுக்கு எதிராகச் செயற்படுகிற சக்திகளின் வலிமை போர் நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்டபோது தோற்றத்தில் தான் குறைந்ததே ஒழிய, உண்மையில் அச்சக்திகட்கு அது ஒரு தற்காலிகப் பின்னடைவு மட்டுமே. அந்தச் சக்திகளைப் பலவீனப்படுத்துவதற்கான அரசியல் நடவடிக்கைகளை எடுப்பதில் பிரதான அரசியல் கட்சிகட்கு எந்தவிதமான அக்கறையும் இருக்கவில்லை. ஏனெனில், அவையும் அம்முயற்சிகளின் விளைவாக இழப்புகளைச் சந்திக்கும் ஆபத்து இருந்தது. பிரதான தமிழ் அரசியல் தலைவர்கள் தமது பராளுமன்ற நாற்காலிகள் பற்றியும் இந்தியாவையும் விடுதலைப் புலிகளையும் ஒரே நேரத்தில் எப்படி மகிழ்விப்பது என்பது பற்றியும் காட்டிய அக்கறையில் சிறு பகுதியையேனும் சமூக நீதி பற்றி அக்கறையுள்ள சக்திகளை அணி திரட்டுவது பற்றிக் காட்டவில்லை. மலையகத் தலைமைகளின் அரசியல் வறுமை தன்னை மேலும் மேலும் மோசமாகக் காட்டிக் கொண்டது. கிழக்கு முஸ்லிம் தலைமைகளின் அக்கறை முஸ்லிம் மக்களின் நலன்களை விட முக்கியமாகத் தங்களது சொந்த நலன்களைப் பற்றியது என்பது மேலும் தெளிவாக்கப்பட்டது.

கடந்த சில வாரங்களுள் நடந்த அரசியல் சோடி மாற்றங்கள் எந்த விபசார விடுதியையும் வெட்கித் தலை குனிய வைத்திருக்கும். பேரினவாதச் சிந்தனையும் அரசியல் விரக்தியும் இலங்கையின் ட்ரொட்ஸ்சியத்தின் தங்கை என்று சொல்லப்பட்ட பிலிப் குணவர்தனவை யூ.என்.பி. யுடன் கூட்டாளியாக்கியது. என்றாலும், பிலிப்பின் மனதில் கொஞ்சம் உறுத்தல் இருந்தது என்றே அவரது பேச்சும் செயலும் உணர்த்தின. எப்படியும் பிலிப் 1960 ஜூலை தேர்தலின் பின்பு அரசியல் செல்லாக்காசாகியதையடுத்து ஏற்பட்ட அவரது தடுமாற்றத்துக்கு எவ்விதமான பெறுமதியும் இருக்கவில்லை. இன்றைய நிலைமைகள் கொஞ்சம் வித்தியாசமானவை. ஒவ்வொரு கட்சிக்குள்ளும் குத்து வெட்டுகள் நடக்கின்றன. கட்சித் தாவல்கள் வழமைபோல ஆளுங்கட்சியின் திசையில் நடக்கின்றன. ஆட்சிக் கவிழ்ப்புக்கான பண்டமாற்றுக்களின் போது அவை எதிர்த் திசையிலும் நடக்கலாம். இவையெல்லாம் 1978 வரை மிக அரிதாக நடந்தவை. அதன் பின்பு ஆணைப் பெண்ணாக்கவும் பெண்ணை ஆணாக்கவும் மட்டுமே இயலாத அரசியல் யாப்பின் கீழ் எத்தனையோ அற்புதங்கள் நடந்தேறினாலும், இன்றைய கோமாளிக் கூத்துகட்கு இந்த நாடு அன்று நிச்சயமாக ஆயத்தமாக இருந்திராது.

ஜே.வி.பி., பொதுசன முன்னணி ஊடலின் இறுதி அத்தியாய முடிவில் முற்றுமுழுதான பிரிவு ஏற்படும் முன்னமே ஜே.வி.பி. க்கும், யூ.என்.பி. க்கும் இடையிலான உடன்பாடு காணப்பட்டதாகச் செய்தி வெளிவந்தது. பொதுசன முன்னணி- யூ.என்.பி. தேசிய அரசாங்கம் பற்றிய கதையும் வெட்ட வெட்டத் தழைத்து வந்தது. ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கை, இப்பத்தி அச்சாகு முன்னரே ஏற்படலாம். தமிழ் ஊடகங்களிலும் சகல தமிழ் அரசியல் தலைவர்கள் மத்தியிலும் ஒரளவுக்கு முஸ்லிம் தலைமைகளிடையிலும் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம். என்றாலும் நாம் கவனிக்க வேண்டிய விடயம் ஏதெனில், மூன்று பேரினவாதக் கட்சிகளாலும் ஒன்றோடொன்று இணைந்து செயற்பட இயலுகின்றது. இந்த நிலையில், இந்த மூன்று கட்சிகளையும் வேறு படுத்துவது என்ன? நிச்சயமாக அடிப்படையான அரசியல் வேறுபாடல்ல.

இந்த அரசியல்வாதிகள், சோமவன்ஸ அமரசிங்ஹ ஒரு நிர்ப்பந்தத்தின் கீழ் மிகவும் சரியாகச் சொன்னபடி, விபசாரிகளை விடக் கீழானவர்கள். அதுமட்டுமல்ல, என் கருத்தில், விபசார விடுதிகளை நடத்துகிற சமூக விரோதிகளை விடக் கீழானவர்கள். ஒரு விப சாரி தன் வயிற்றுப் பிழைப்புக்காகவோ தன் குடும்ப நலனுக்காகவோ தன்னை அழித்துக் கொள்ளுகிற ஒரு பிழைப்பில் ஈடுபடுகிறார். இந்தத் தலைமைகள் முழுக் சமூகங்களையல்லவா சிதைத்துப் பிழைப்பு நடத்துகிறார்கள். உண்மையில் இந்த மூன்று கட்சிகளும் ஹெல உறுமயவும் சேர்ந்து ஒரு தேசிய அரசாங்கம் அமைத்தாலும் நாட்டின் எந்தப் பிரச்சனையும் தீரப் போவதில்லை. எனவே தான் தமிழ்மக்கள் இந்தக் கொடுக்கல் வாங்கல்கள் பற்றித் தம்மை அதிகம் அலட்டிக் கொள்ள வேண்டிய தேவை இல்லை. முஸ்லிம் மக்களுக்கோ மலையக மக்களுக்கோ, கூட இதனால் ஒரு பாதிப்புமில்லை. அதை விடவும், சிங்கள மக்களுக்குக் கூட எதுவிதமான மாற்றமும் ஏற்படப் போவதில்லை. இந்த அரசியற் கட்சிகளில் எதுவுமே இந்த நாட்டின் மக்களின் நலனில் அக்கறையுடையவையல்லயென்பதை இப்போதைக்கு நாம் எல்லோருமே அறிந்திருக்க வேண்டும்.

ஜே.வி.பி.யை யாரும் மாக்ஸியவாதிகள் என்று அழைக்கிறார்கள் என்றால், அவர்கட்கு அபரிமிதமான நகைச்சுவை உணர்வு இல்லாத பட்சத்தில், அவர்களது நோக்கம் பற்றி நாம் ஜயப் பட வேண்டும். அல்லது அவர்களது அறிவுத்திறன் பற்றி ஜயப்பட வேண்டும். யூ.என்.பிக்கும், ஸ்ரீ.ல.சு.கட்சிக்குமிடையில் வேறுபாடுகள் காற்றோடு கலந்து பல ஆண்டுகளாகி விட்டது. பாராளுமன்றம் என்பது கள்வர் குகை என்று லெனின் சொன்னதாக நினைவு. நிச்சயமாக அவர் பாராளுமன்றத்தின் தகுதியை அதிகமாக மதிப்பிட்டுவிட்டார். என்றே நினைக்கிறேன். கள்வர்களிடையே கொஞ்சம் சுய கௌரவத்துக்கும் வாக்குச் சுத்தத்துக்கும் இடமுண்டு. என்றாலும் இன்றிருக்கிற பாராளுமன்ற அரசியலுக்கு மாற்று இராணுவ ஆட்சியோ, வேறு சர்வாதிகாரமோ அல்ல. இந்த நாட்டுக்குத் தேவையானவை உண்மையான சனநாயகம், உண்மைகளைத் சொல்லத் தயங்காத வஞ்சகமற்ற ஊடகங்கள், தமது வாழ்வு பற்றிய முடிவுகளை மக்களே எடுக்க அனுமதிக்கக் கூடிய அதிகாரப் பரவலாக்கம், இப்படி நிறையச் சொல்லலாம்.

ஏறத்தாழ ஒரு செயலூக்கமான எதிர்க்கட்சியுமில்லாமல் 17 ஆண்டுகளாக ஆட்சி நடத்திய யூ.என்.பி.இந்த நாட்டைப் பொருளாதாரச் சீர் குலைவுக்கும் அந்நிய ஊடுருவலுக்கும் போருக்கும் சமூகச் சீரழிவுக்கும் தான் கொண்டு சென்றது. அதிலிருந்து மீள் வதற்கான நோக்கமோ, மார்க்கமோ இல்லாத கட்சிகள் தான் ஆதிக்கத்திலுள்ளன. நமக்கு முன்னால் உள்ள தெரிவுகளை இந்தக் கட்சிகட்குள் மட்டுப்படுத்திவிடக் கூடாது என்பதற்கும் அப்பாற் சென்று, இந்த அரசியல்முறைக்குள் மட்டுப்படுத்தக் கூடாது என்பதை வற்புறுத்த விரும்புகிறேன்.

எந்த விதமான தேசிய அர சாங்கமும் தேசப்பற்றால் அமைக்கப்பட வில்லை என்கிறதையும் ஒரு சிறுபான்மையின நலன்கட்காகவே அரசு செயற்படுகிறது என்கிறதையும் மக்கள் தெளிவாக அறிவதற்கான ஒரு வாய்ப்பை யூ.என்.பியும் பொதுசன முன்னணியும் முன்னெடுக்கவுள்ள எந்த ஒத்துழைப்பும் வழங்கும். அது கெட்ட விஷயமல்ல.

தமிழ் மக்களின் விமோசனம் சிங்களப் பேரின அரசியல்வாதிகள் பிளவுபட்டிருப்பதில் தங்கியிருக்கிறது என்பது தமிழ்க் காங்கிரஸ், தமிழரசுக் கட்சியுகத்து அரசியற் கனவு - அது எப்போதோ பொய்த்துப் போய் விட்டதும். தமிழரின் விமோசனம் இந்த நாட்டின் சகல தேசிய இனங்களதும் ஒற்றுமையில் தங்கியுள்ளது என்பது என் எண்ணம். அதை அடையும் வழி எளிதல்ல.

தமிழ் மக்களின் விடுதலைக்கான போராட்டம் முழுநாட்டினதும் சனநாயகத்துக்கான போராட்டத்தின் முக்கியமான பகுதியாக அமையும் வாய்ப்பைப் பற்றி நாம் ஆழச் சிந்திக்க வேண்டும். ஏனெனில் நாட்டை எதிர் நோக்குகிற மிரட்டல்கள் மிகவும் பெரியன.

___________________________________
நன்றி: ஞாயிறு தினக்குரல் October 22, 2006



_____________________________________________

Labels:

Monday, October 16, 2006

ஈழத்தமிழரின் நேச சக்திகள்

மறுபக்கம் - கோகர்ணன்

ஆஃப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தொடுத்த போரில் பாகிஸ்தான் ஒத்துழைக்கா விட்டால் பாகிஸ்தான் மீது குண்டு வீசி அழிக்கப் போவதாக அமெரிக்கத் தரப்பு தன்னை மிரட்டியதாக பாகிஸ்தானின் இராணுவ ஆட்சித் தலைவர் முஷாரப் தெரிவித்ததன் நோக்கம் என்னவென்று சொல்வது கடினம். அமெரிக்கா இப்படித் தான் உலக நாடுகளையெல்லாம் மிரட்டித் தனது காரியத்தைச் சாதிக்கிறது என்று உலக நாடுகளின் தலைவர்களையும் மக்களையும் எச்சரிப்பதுதான் அவரது நோக்கமென்றால் அது மெச்சத்தக்கது. ஆனாலும் அவர் புதிதாக எதையுமே சொல்லவில்லை. அமெரிக்கா மிரட்டியதற்கு அஞ்சியே அவர் அமெரிக்காவுடன் ஒத்துழைக்கிறதாக அவர் சொன்னாறராயிருந்தால் அவர் எப்படிப்பட்ட தலைவர் என்று நாம் நம்மையே கேட்டுக் கொள்ள வேண்டியதுதான். அமெரிக்காவுடன் ஒத்துழைப்பது தனது மதியூகம் என்று உலக மக்களும் தலைவர்களும் நம்பினாலும் நம்பாவிட்டாலும், அப்படி ஒத்துழைத்ததன் மூலம் தங்களை அழிவினின்று காப்பாற்றிய பாகிஸ்தான் மக்கள் அவருக்கு என்றென்றும் நன்றியுடையோராக இருப்பார்கள் என்று அவர் நினைத்திருப்பாராகில் அவருக்குப் பாகிஸ்தான் மக்களின் சுயமரியாதை பற்றி மிகவும் தாழ்வானதொரு மதிப்பீடுதான் இருக்க முடியும். அது எப்படியிருந்தாலும் முஷாரப் சொன்னது உலகின் இன்றைய யதார்த்தமான அவல நிலைபற்றிய ஒரு பிரகடனம்.

விரும்பியோ விரும்பாமலோ பல மூன்றாம் நாடுகளின் ஆட்சியாளர்கள் அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு எதிராக நிமிர்ந்து நிற்க அஞ்சுகிறார்கள். சில நாடுகளின் ஆட்சியாளர்கள் தங்களுடைய பிராந்திய மேலாதிக்க நோக்கத்துக்கு வசதியாக அமெரிக்காவின் மேலாதிக்க நோக்கங்கட்குத் துணை போகிறார்கள். ஈரானின் அணுசக்தி மேம்படுத்தல் முயற்சிகளைக் காரணங்காட்டி, ஈரான் மீது பொருளாதார தடை விதிக்கவும் காலப் போக்கில் ஈரான் மீது தாக்குதல்களை நடத்தவும் அமெரிக்கா திட்டமிடுகிறது என்பதைத் தெளிவாக அறிந்து கொண்டே சர்வதேச அணுசக்தி அமைப்பில் ஈரானுக்கு எதிராக இந்தியா வாக்களித்தது. தொடர்ச்சியாக பலஸ்தீன, லெபனிய அராபியர்களை இஸ்ரேல் எந்த விதமான சட்ட ரீதியான நியாயமும் இல்லாமல் கடத்திச் சென்றும் கைது செய்தும் சிறையில் அடைப்பது பற்றி உலக மக்கள் அறியமாட்டார்கள். உலகில் ஊடக சாம்ராச்சியங்களின் அக்கறை அது போன்ற விடயங்களைத் தெரிவிப்பது பற்றியதல்ல. ஆனால், சிறை பிடிக்கப்பட்டும் சட்ட விரோதமாக மறியலில் வைக்கப்பட்டுமுள்ள அராபியர்களை விடுவிக்கும் நோக்கில் இரண்டு இஸ்ரேலியச் சிப்பாய்களைச் சிறை பிடித்தபோது இஸ்ரேல் லெபனான் மீது நடத்திய கோரமான இராணுவத் தாக்குதலைக் கண்டிக்க இந்தியா தயங்கியது. இது ஏன் என்று விளங்கிக் கொள்வது கடினமானதல்ல.

எவ்வாறாயினும், இஸ்ரேலிய அழிவுச் செயல்களை கண்டிப்பதற்கும் சமாதான நோக்கங்கட்காக அணுசக்தியை விருத்தி செய்வதற்கு ஈரானுக்குள்ள உரிமையை ஆதரிப்பதற்கும் சில வாரங்கள் முன்னர் நடந்து முடிந்த அணிசேரா நாடுகளின் மாநாடு முழுமையான ஆதரவு தெரிவித்துள்ளது. இது இந்தியாவின் முன்முயற்சியால் நடந்ததல்ல. மாறாக, மூன்றாமுலக நாடுகளிடையே மேற்குறிப்பிட்ட பிரச்சினைகளையிட்டு ஏற்பட்டிருந்த மனக் கசப்பின் விளைவானதே. எனவேதான், அமெரிக்காவின் தனது மேலாதிக்க நோக்கங்கட்கு விரோதமான பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றி அணிசேரா நாடுகளின் கூட்டம் தனது நம்பகத் தன்மையை நிலை நிறுத்த முடியுமானது. பலஸ்தீன மக்களின் உண்மையான நண்பர்களின் வரிசையில் கியூபாவும் வெனிசுவேலாவும் முன்னிலை வகிக்கின்றன. ஈரானின்நியாயமான நிலைப்பாட்டை ஆதரிப்பதில் இஸ்லாமிய நாடுகளை விட கியூபாவும் வெனிசுவேலாவும் வேறு சில கத்தோலிக்க நாடுகளும் தீவிரமாக இருக்கின்றன. எனவே தான், நாங்கள் வெறுமனே இன, மத, அடிப்படைகளில் நாடுகளிடையிலான உறவையும் உலக நிகழ்வுகள் பற்றிய நிலைப்பாடுகளையும் பற்றிப் பொத்தம் பொதுவான முடிவுகளை வந்தடைய முடியாது.

இலங்கையின் தேசிய இனப் பிரச்சினையின் தொடக்கங்கட்குப் பல்வேறு வரலாற்று வேர்கள் உள்ளன. அதன் அண்மைக் கால விருத்தியும் போராக அதன் பரிணாமமும் போரிலிருந்து மீள இயலாத தவிப்பும் வெறுமனே தமிழ்- சிங்கள இனப் பகையின் அடிப்படையில் விளக்கக் கூடியதல்ல. அந்நியக் குறுக்கீடு கடந்த கால் நூற்றாண்டுக்குள் மிகவும் அதிகரித்துள்ளது. இந்தியாவின் குறுக்கீடு மறைமுகமாகவும் நேரடியாகவும் இருந்து வந்துள்ளது. இந்தியாவின் குறுக்கீட்டை எஸ்.ஜே.வி. செல்வநாயகம் 1970 களில் விரும்பியதாக அவரது மருமகனும் ஜே.ஆர்.ஜயவர்த்தனவுக்கு நெருக்கமானவராக இருந்தவருமான ஏ.ஜே.வில்சன் எழுதியிருக்கிறார். எனினும், 1978 வரை இலங்கை அரசிற்கு எதிராக இந்தியா குறுக்கிடும் வாய்ப்பு இருந்ததில்லை. பாகிஸ்தானின் உள்நாட்டுப் போரின்போது பாகிஸ்தானிய விமானங்கள் இலங்கையிற் தரித்துச் செல்ல இலங்கை அரசாங்கம் அனுமதித்தது பற்றி இந்திய ஆட்சியாளர்கள் மனத் திருப்தியடைய நியாயமில்லாவிட்டாலும் அது பற்றி எதிர்ப்புத் தெரிவிக்க அடிப்படை இருக்கவில்லை. இலங்கையின் நடுநிலையை விட ஒரு இந்தியச் சார்பு நிலையை இந்தியா விரும்பிய போதும் இலங்கையின் நடு நிலையான அயற் கொள்கையை வலிந்து குழப்புவதன் பிரச்சினைகள் இந்திய அதிகார வர்க்கம் அறிந்திருந்தது.

1978 முதல் இலங்கையின் அயற் கொள்கையில் ஏற்பட்ட அமெரிக்க சார்புப் பெயர்ச்சி இந்திய குறுக்கீட்டுக்கான நியாயங்களை ஏற்படுத்தியதுடன் தென்னாசிய அரசியல் இராணுவ, பொருளாதார ஆதிக்கத்துக்கான போட்டியில் இலங்கையை ஒரு முக்கியமான களமாகவும் மாற்றியது. 1983 க்கு முன்னரே இந்திய ஆட்சியாளர்கள் தமிழ்ப் போராளிக் குழுக்களுக்கு வரையறுக்கப்பட்ட ஆதரவு வழங்கியதோடு தனி நாட்டுக் கோரிக்கையை இந்தியா ஆதரிக்கும் என்ற மயக்கத்தையும் ஏற்படுத்தியிருந்தனர். இன்றுங் கூட இந்திரா காந்தி உயிரோடு இருந்தால், இன்று இந்தியா வேறு விதமாக நடந்து கொண்டிருக்கும் என்று நம்புகிறவர்கள் இருக்கிறார்கள். இது அரசு யந்திரம். வர்க்க நலன்கள் என்பன பற்றிய தெளிவீனங்கள் காரணமாகத் தொடரும் ஒரு மாயையாகும். பங்களாதேஷ் உருவாக உதவியாக இந்தியா குறிக்கிட்ட காலத்தின் இந்திய மேலாதிக்கத் தேவைகள் மாறிவிட்டன. சோவியத் யூனியனின் உடைவுக்கு முன்னமே அமெரிக்கர் சார்பான ஒரு போக்குக்கான அத்திபாரம் இடப்பட்டு விட்டது. இது இந்தியாவின் பெரு முதலாளிகளின் இரண்டாங் கட்ட வளர்ச்சியின் தவிர்க்க முடியாத ஒரு திசை மாற்றம். இன்று இந்தியா திறந்த பொருளாதாரம், உலகமயமாதல் என்பவற்றை ஏற்று அவற்றை மற்ற நாடுகட்கும் பரிந்துரைக்கிறது. இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையே தென்னாசிய மேலாதிக்கத்திற்கான போட்டியிற் சில உடன்பாடுகள் காணப்பட்டுள்ளன. அமெரிக்கா இப்போது சீனாவையும் ரஷ்யாவையும் தனிமைப்படுத்துவதற்கான உபாயங்களிற் காட்டுகிற கவனம் காரணமாக சீன- இந்திய, ரஷ்ய- இந்திய நல்லுறவுக்கும் ரஷ்யா- சீனா- இந்தியா ஆகியவற்றின் நெருங்கிய பொருளாதார- இராணுவ ஒத்துழைப்புக்கும் ஆப்பு வைக்கும் நோக்கில் இந்தியாவுடன் தனது `நட்பை' வலுப்படுத்த முனைகிறது. இந்த நட்பால் இந்திய மக்கள் நன்மை காணப் போவதில்லை. இந்தியாவின் பெரு முதலாளிகளும் புதிய தரகு முதலாளிகளும் நன்மை பெறுவர்.

எனவேதான், இந்திய - அமெரிக்க முரண்பாட்டையோ பாகிஸ்தான் - இந்திய முரண்பாட்டையோ காட்டி இலங்கையில் இந்தியா தமிழ் மக்கள் சார்பாகக் குறுக்கிட வேண்டும் என்று விரும்புவது எவ்வளவு தூரம் பொருளற்றது என்பதைத் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களது இரண்டு வார இலவுகாத்தல் நமக்கு உணர்த்தியிராவிட்டால், வேறெதுவும் உணர்த்தப் போவதில்லை. டில்லி அரசாங்கம் வெறுமனே பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கிற வாய்ப்பை மறுத்ததென்றால் பரவாயில்லை. போதாதற்கு மக்கள் நிராகரித்தவர்களை டில்லிக்கு வலிந்து அழைத்து வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியுள்ளது. இதற்கு காரணம் மு.கருணாநிதியின் குள்ள நரித்தனம் என்று சிலர் நினைக்கின்றனர். உண்மை அதற்கு நேரெதிரானது. டில்லியின் தயக்கத்தையே கருணாநிதியும் தனது நடத்தை மூலம் வெளிகாட்டியிருக்கிறார். அதன் மூலம் டில்லியின் இதயத் துடிப்புக்கும் தனது இதயத்துடிப்புக்கும் உள்ள நெருக்கம் டில்லியினதும் கோபாலசாமியினதற்கும் உள்ளதை விட வலியது என்று தமிழகத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் நேச சக்திகட்கும் உணர்த்தியுள்ளார். இதற்கு மேலும் நமது இந்திய கனவுகளும் தமிழகம் பற்றிய எதிர்பார்ப்புகளும் தொடர வேண்டுமா? ஏமாறுகிறவர்கள் அதைத் தங்களோடு நிறுத்திக் கொண்டு, தமிழ் மக்களை ஏய்க்காமல் இருப்பது உத்தமமானது.

அமெரிக்கா விடுதலைப் புலிகளைப் பற்றிய கடும்போக்கைக் கடந்த மூன்று ஆண்டுகட்கும் மேலாகவே கடைப்பிடித்து வருகிறது. அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற காலத்திற்கூட விடுதலைப் புலிகளைப் பல்வேறு கட்டாயங்கட்கு உட்படுத்துவதில் அமெரிக்காவின் இலங்கைத் தூதுவர்களும் பிராந்திய விவகாரப் பேச்சாளர்களும் முனைப்பாக இருந்தனர். அமெரிக்காவின் உலகமயமாக்கல் திட்டத்திற்கு வசதியாக யூ.என்.பி. ஆட்சி ஏற்படுவதை அமெரிக்க அதிகாரபீடம் விரும்பினாலும், அதன் நோக்கம் விடுதலைப் புலிகளைக் கொண்டு ராஜபக்ஷ ஆட்சியைக் கவிழ்ப்பதல்ல. நீண்ட கால நோக்கிலும் குறுகியகால நோக்கிலும் அமெரிக்க அதிகாரபீடம் `விடுதலைப் புலிகட்கு எதிரான ஒரு நிலைப்பாட்டையே எடுத்துள்ளது. விடுதலைப் புலிகளை வழிக்குக் கொண்டு வருகிற' நடவடிக்கைகளின் வரிசையிலேயே நாம் ஐரோப்பிய ஒன்றியத் தடைக்கான அமெரிக்க அழுத்தத்தையும் அண்மைக் காலங்களில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மீது எடுக்கப்பட்ட கடும் நடவடிக்கைகளையும் கருத வேண்டியுள்ளது. அவர்களது நடவடிக்கைகள் இன்று நேற்று அறியவந்த தகவல்களின் விளைவுகளல்ல.

தமிழ் மக்கள் எப்போதோ கற்றிருக்க வேண்டிய பாடங்களைக் கசப்பான அனுபவங்களின் மூலமே கற்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பிறருடைய அனுபவங்களிலிருந்து கற்க மறுக்கிறவர்கள் பிறரது கசப்பான அனுபவங்களை மேலும் கசப்பான முறையிலேயே கற்க வேண்டி வருகிறது. இன்று வரை, தமிழ் மக்களின் உண்மையான நண்பர்களையும் நட்பு வேடம் பூண்டவர்களையும் வேறுபடுத்த இயலாத விதமாகப் பல்வேறு புனைவுகள் நம்முன் காட்சிக்கு வைக்கப்பட்டு வந்துள்ளன.

இப்போது பாக்கிஸ்தான் இலங்கை ஒத்துழைப்பைக் காட்டி இந்தியாவைத் தமிழர் சார்பாகக் குறுக்கிடச் செய்ய இயலும் என்று ஒரு புதிய கனவு விரிகிறது. போதாதற்குச் சீனாவுடனான பொருளாதார ஒத்துழைப்புக்கும் ஒரு இடம் வழங்கப்படுகிறது. இலங்கையின் மீது வலுவடைந்து வருகிற இந்திய மூலதனத்தின் ஆதிக்கத்திற்குக் கேடாக இந்தியா எதையுமே செய்யப்போவதில்லை. அமெரிக்க- இந்தியப் பார்வைகள் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையில், ஆக மிஞ்சி, எட்ட நின்று வேடிக்கை பார்க்கிற அளவுக்கு மேலாகத் தமிழ் மக்களுக்குச் சாதகமாக அமையப் போவதில்லை.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் அதி முக்கியமான சக்தி தமிழ் மக்கள்தான். இதை மறக்கும் போதுதான் அந்நிய உதவிக் கரங்கட்காகத் தவங்கிடக்கிற அவலமும் அவசியமற்ற ஏமாற்றங்களும் நமக்குக் கிடைக்கின்றன. தமிழ் மக்கள் பலமுனைகளிலும் பலவகைகளிலும் ஒன்றுபட்டுப் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அமைதி பற்றிய பேச்சுகள் உரக்க ஒலிக்கிற அதேவேளை, போரை விடக்கொடிய போரில்லாத அழிவுகள் நடைபெறுகின்றன. மக்கள் தம் தலைவிதியைத் தாமே தமது கைகளில் எடுக்க வேண்டிய நேரம் இது.
____________________________________________
நன்றி: ஞாயிறு தினக்குரல் October 15, 2006

_____________________________________________

Labels:

Saturday, October 07, 2006

ஆனந்தசங்கரிக்கு யுனெஸ்கோ வருது கிடைத்தது எப்படி?

மறுபக்கம்: கோகர்ணன்

ஆனந்தசங்கரிக்கு யுனெஸ்கோவின் பரிசு கிடைத்துள்ளது பற்றி கொண்டாடக் கூடிய மனநிலையில் தமிழ் மக்கள் இல்லை. பரிசுகளைப் பொறுத்தவரையிலோ பட்டங்களைப் பொறுத்தவரையிலோ பெருமளவும் அவை அவற்றைப் பெறுகிறவர்களைப் பற்றிச் சொல்லுவதை விடக் கொஞ்சம் அதிகமாக அவற்றை வழங்குபவர்களைப் பற்றிச் சொல்லுகின்றன. நொபெல் சமாதானப் பரிசும் இலக்கியப் பரிசும் ஏகாதிபத்திய அரசியல் நோக்கங்களால் தீர்மானிக்கப்படுகின்றன. முற்றிலும் தகுதி வாய்ந்தோராகத் தெரிகிற எவருக்கேன் அப்பரிசு இடையிடை கிடைத்திருந்தால் அது மற்ற நேரங்களில் வழங்கப்படுகின்ற பலவற்றைத் தகுதியுடையனவாகக் காட்டுவதற்காகவே. எனினும், குறிப்பிடத்தக்களவு உலக முக்கியம் பெற்றோரே இப்பரிசுகளைப் பெறுகின்றனர். இப்பரிசுகள் பற்றி நான் வலியுறுத்த விரும்புவது அவை நடுநிலையான முடிவுகளின் படி கிடைப்பதில்லை என்பதையே. பொருளியலுக்கு வழங்கப்பட்ட பரிசுகள் பெரும்பாலும் ஏகாதிபத்திய, முதலாளியப் பொருளியலின் நியாயங்களை ஏற்போருக்கே கிடைத்துள்ளன. அமர்த்யா சேனுக்குப் பரிசு கிடைத்தபோது அதுபற்றி மூன்றாமுலகிலும் முக்கியமாக இந்தியாவிலும் பெருமகிழ்ச்சி காணப்பட்டது.பொருளியல் விருத்திக்கு ஒரு மனித மேம்பாட்டு வளர்ச்சிப் பரிமாணத்தை வழங்கியதற்காக அவர் மெச்சப்பட்டார். எனினும், முற்றிலும் முதலாளிய மறுப்பான மாற்றுப் பொருளியல் சிந்தனையாளர் எவரும் இதுவரை நொபல் பரிசு பெறவில்லை என்றே நினைக்கிறேன்.

சில விருதுகள் பற்றி அதிக இரகசியம் இல்லை. அவற்றுக்கான அரசியல் தகுதிகள் வெளி வெளியாகவே தெரிந்தவை. அந்தளவுக்கு அவை நேர்மையானவை. நடுநிலை,நீதி, நியாயம் என்கிற பேர்களில் வழங்கப்படுகிற அநீதியான, அநியாயமான பக்கச்சார்பான முடிவுகள் பற்றிப் பல சமயங்களிலும் உண்மைகள் வெளியே சொல்லப்படுவதில்லை. ஆனந்தசங்கரிக்கு கிடைத்த பரிசு பற்றி யுனெஸ்கோவுக்கு ஆட்சேபனை மனுக்கள்போவது பற்றி அறிந்தேன். அவை எதையும் மாற்றப்போவதில்லை. அந்தப் பரிசு தவறுதலாக வழங்கப்பட்டது என்றால் அல்லவா அது மீளாய்வுக்குட்படும்? அவரை அப்பரிசுக்கு யார் பரிந்துரைத்தாரென்று எனக்குத் தெரியாது. எனினும், தெரிவுக் குழுவில் இருந்தவர் முன்னாள் இந்தியப் பிரதமர் குஜ்ரால். குஜ்ராலின் அரசியல் அவருக்கு முன்பு, அதே கூட்டணியின் பிரதமராயிருந்த வி.பி.சிங், தேவகௌடா ஆகியோருடையதைவிட ஈழத் தமிழர் பற்றி அனுதாபக் குறைவானது. தேவ கௌடாவைப் பதவி விலக்குவதிலும் குஜ்ராலுக்கு ஒரு பங்கிருந்தது. விடுதலைப் புலி எதிர்ப்பைக் கடுமையாக கடைப்பிடிக்கிற பிரமுகர்களில் குஜ்ரால் ஒருவர். பொதுமக்களிடையே செல்வாக்கு குறைவான ஒருவர் என்றாலும் டில்லியில் மேலிடத்துச் செல்வாக்கு உள்ளவர். தெரிவுக் குழுவில் குஜ்ரால் இருந்ததற்கும் ஆனந்தசங்கரிக்குப் பரிசு வழங்கப்பட்டதற்கும் தொடர்பே இல்லாமலிருக்கலாம். ஆனாலும் என்னால் அப்படி நினைக்க முடியவில்லை.

ஆனந்தசங்கரி அமைதிக்கும் புரிந்துணர்வுக்காகவும் ஆற்றிய பணிக்காக யுனெஸ்கோ பரிசு என்றால் உண்மையில் அப்பரிசுக்கு அவரை விடப் பன்மடங்கு தகுதியான சிங்கள அரசியல்வாதிகளை என்னால் அடையாளங் காட்ட முடியும். மேற்படி பரிசு உண்மையிலேயே ஆனந்தசங்கரியின் பங்களிப்பு இலங்கையில் அமைதியை நிலைநாட்ட உதவும் நோக்கிலானது என்றால், அவர் எந்தளவு தூரத்துக்கு போரிடும் இரண்டு தரப்புகளையும் நெருக்கமாகச் செயற்பட்டிருக்கிறார் என்ற கேள்விக்கு நல்லதொரு விடை தேவை. இரண்டு தரப்பினரும் செய்கிற நியாயமற்ற செயல்களையும் மனித உரிமை மீறல்களையும் படுகொலைகளையும் சமநோக்கிலிருந்து கண்டித்தாரா என்ற கேள்விக்குச் சரியான விடை தேவை. இன்றைக்கு ஆனந்த சங்கரியை ஹெல உறுமய மெச்சுமளவுக்கு, ஐலன்ட், திவயின பத்திரிகைகள் மெச்சுமளவுக்கு, ஜே.வி.பி. மெச்சுமளவுக்கு தமிழ் மக்களுக்காக இரங்கக்கூடிய எவராவது மெச்சுவதாகத் தெரியவில்லை. அவரது அறிக்கையின் ஒரு காலத்தில் "மனித உரிமைக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் (யாழ்ப்பாணம்)" என்கிற பேரில் ஓரிவர் வெளியிட்டு வந்த அறிக்கைகளைவிடப் பேரினவாத ஊடகங்களால் உருவாக்கப்படுகின்றன. அவர் விடுதலைப் புலிகளை வெறுக்கத் தனிப்பட்ட காரணங்கள் இருக்கலாம், அரசியல் காரணங்கள் இருக்கலாம். அவருக்கு அதற்கான பூரண உரிமை உண்டு. அவை மதிக்கப்பட வேண்டும். அதேவேளை, அவரைத் தமிழ் மக்கள் நிராகரித்துள்ளனர். அதை அவர் மதித்து ஏற்க வேண்டும்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் என்ற பட்டத்தைப் பயன்படுத்த அவருக்கு இந்த நாட்டின் ஊழல் மிக்க நீதித் துறையினூடாக சட்டப்படி உரிமை இருக்கலாம். ஆனால் அவருக்கு அதற்கான தார்மிக உரிமை சிறிதும் இல்லை என்பது அவருக்கே தெரிய வேண்டும். தமிழர் விடுதலைக் கூட்டணிச் செயற்குழு அவரைப் பதவி நீக்குவதிற் காட்டிய நியாயமற்ற அவசரம் காரணமாகவே அவரால் தனது பதவியைப் பிடித்து வைத்திருக்க இயலுமானது. வேறெந்தக் கட்சியிலும் இம் மாதிரி நடந்திருந்தால் நீதிமன்றம் வேறு விதமாக நடந்து கொண்டிருக்கும் என்று நினைக்கிறேன்.

செஞ்சோலைப் படுகொலை பற்றிப் பேசுகையில், கொல்லப்பட்டோர் விடுதலைப் புலிப் போராளிகள் என்று அவரால் அறிக்கை விட முடிகிறது. மூதூர் படுகொலைகளைச் செய்தவர்கள் யாரென்று அவர் அறியார். அண்மைய நிந்தவூர் படுகொலைகளைப் பற்றியும் கண்டித்துப் பேசிய அதேவேளை, யார் இந்த நீசத்தனத்தைச் செய்தார்கள் என்பது சரியாக விசாரித்தறியப்பட வேண்டும் என்றும் வற்புறுத்தியிருக்கிறார். இவற்றுக்கு முந்திய பல படுகொலைகள் பற்றிய அவரது நிசப்தம், பலரது செவிப் பறைகளை அதிரவைத்திருக்கும்.

சில விஷயங்கள் பற்றி அவர் காட்டுகிற நிதானமும் அமைதியும் வேறு சில பற்றிய அவரது அவசர முடிவுகளும் நமக்கு வியப்பளிக்கின்றன. இராணுவத்தலைமையகத் தற்கொலைத் தாக்குதல் பற்றி இன்னமும் சரியான தகவல்கள் இல்லை. கெப்பித்திக்கொல்லாவ படுகொலைகள் பற்றியும் தகவல்கள் முழுமையாகக் கிடைக்கவில்லை. விடுதலைப் புலிகள் மீது சந்தேகப்பட ஒருவருக்குப் போதிய நியாயமும் உரிமையும் இருக்கிறது ஒரு விடயம். அமைதிக்காகவும் புரிந்துணர்வுக்காகவும் பாடுபட்டதற்காகப் பரிசு பெறுகிற ஒருவர், விடுதலைப் புலிகளே அவற்றைச் செய்தனர் என்று குற்றஞ் சாட்டுகிறது தகுதியான நடத்தையா என்பது இன்னொரு விடயம்.

யுனெஸ்கோ தெரிவுக் குழுவில் இருந்த எல்லாருக்கும் இலங்கை அரசியலின் சகல நெளிவு சுழிவுகளும் தெரிந்திருக்க நியாயமில்லை. அதை விடத் தனது அரசியல் முக்கியத்துவத்தை இப்போதே இழந்து விட்ட ஓர் அரசியல் வாதியின் அரசியல் நடத்தை பற்றி அவர்கள் அறிந்திருக்க நியாயமில்லை. என்றாலும் குஜ்ரால் போல ஒருவர் அதை அறியாமலிருக்க மாட்டார். ஏனெனில், இந்தியாவின் ஆணைக்குட்பட்டுச் செயற்பட்டு வந்த ஒவ்வொரு அரசியல் வாதியினது அரசியல் நடவடிக்கைகள் பற்றியும் இந்திய அதிகார நிறுவனம் அறியும். குஜ்ரால் அரசியற் குழந்தை அல்ல. அவர் எதையுமே தெரியாத்தனமாகச் செய்ய நியாயம் இல்லை.

யுனெஸ்கோ என்பது ஐ.நா. சபையின் ஒரு கரம். ஐ.நா. சபையைப் போல அதற்கும் ஓர் அரசியல் இருக்கிறது. உலகின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கை தருவதற்காக அவை நாடகமாடுகின்றனவே ஒழிய, வல்லரசுகளின் நலன்கட்கு எதிராக அவை எதையும் செய்ததில்லை. பல்வேறு பிராந்திய மேலாதிக்கச் சக்திகளது செல்வாக்குக்கு அங்கே இடமுண்டு. ஏகாதிபத்திய நலன்கட்கு வசதியாக இல்லாத எந்தக் கிளர்ச்சிக்கார அமைப்பிற்கும் அங்கே இடமில்லை. யுனெஸ்கோ மிக அருமையாகவே தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநியாயங்கள் தொடர்பாக உண்மையான நிலைமைகளை அறிந்து கவலை காட்டியிருக்கிறது. உண்மையில் அது இன்னொரு என்.ஜி.ஓ. நிறுவனம் மட்டுமே.

த.வி.கூ. தலைவர் என்கிற கேள்விக்குரிய தகுதியை விட அதுவும் போக ஏதோ ஒரு சூழலில் பறிக்கப்படக் கூடியதான அந்தத் தகுதியை விட, நிலையான ஒரு தகுதியை யுனெஸ்கோ அவருக்கு வழங்கியிருக்கிறதென்றால் நாம் எதைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்? யுனெஸ்கோ போன்ற அமைப்புகளின் மீது நாம் வைத்திருக்கிற மூட நம்பிக்கை பற்றி நாம் கவலைப்பட வேண்டாமா?

எத்தனையோ தகுதியற்றவர்கட்கு வழங்கப்பட்ட பரிசுகளைப் பற்றி அலட்டிக் கொள்ளாத நாம், ஏன் பத்தோடு பதினொன்றாக இந்த ஒன்றைப் பற்றி அலட்டிக் கொள்ள வேண்டும்? இங்கே பிரச்சினைக்குரியவர் ஆனந்தசங்கரியல்ல. பிரச்சினைக்குரியவை மேலாதிக்க அரசியல் நோக்கங்கட்காகப் பரிசுகளை வழங்குகிற நிறுவனங்கள் தாம். எனவே, ஆனந்தசங்கரிக்கும் அப்பால் நமது தேடல் விரிவடைய வேண்டும்.

__________________________________________________

நன்றி: ஞாயிறு தினக்குரல் October 01, 2006

_____________________________________________

Labels:

Monday, October 02, 2006

இந்தியாவின் நோக்கம் என்ன?

-விதுரன்-
~~~~~~~~

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் சந்திக்க மறுத்ததானது, இலங்கை அரசுக்கும் இனவாதிகளுக்கும் மிகவும் மகிழ்ச்சியான செய்தியாகும். சமாதானப் பேச்சுக்களை விடுத்து உடனடியாக பாரிய இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கைக்கு இது மிகவும் வாய்ப்பாக அமையவுள்ளது.

புலிகள் பலவீனமடைந்திருப்பதாலேயே சமாதானப் பேச்சுக்களில் அவர்கள் ஆர்வம் காட்டுவதாகக் கருதும் இலங்கை அரசும் இனவாதிகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களை சந்திப்பதில்லையென்ற இந்தியப் பிரதமரின் நிலைப்பாடானது உடனடி சமாதானப் பேச்சுகளுக்கு செல்ல வேண்டுமென்ற மிகப் பெரும் அழுத்தத்திலிருந்து இலங்கை அரசை விடுவித்துள்ளது.

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலையின் பின்னர் மிக நீண்ட காலமாக இலங்கைப் பிரச்சினையில் `தலையிடாக் கொள்கை'யைக் கடைப்பிடித்து வந்த இந்தியாவுக்கு, அண்மைக் காலமாக நெருக்கடிகள் ஏற்படத் தொடங்கின.

ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த போது சர்வதேச பாதுகாப்பு வலையமைப்பொன்றை உருவாக்குவதில் தீவிரம் காட்டினார். புலிகளை சமாதானப் பேச்சுக்குள் சிக்க வைத்து காலத்தை இழுத்தடிக்கும் அதேநேரம், புலிகள் மீண்டும் யுத்தத்தை ஆரம்பிக்காதவாறு இந்த சர்வதேச பாதுகாப்பு வலையையும் பின்னத் திட்டமிட்டிருந்தார்.

இதனொரு அங்கமாக அவர் இந்தியாவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாடொன்றைக் கைச்சாத்திட ஆர்வம் காட்டினார். அந்த உடன்பாடானது, இலங்கையின் பாதுகாப்பு நலன்களை விட இந்தியாவின் பாதுகாப்புக்கு இலங்கையூடாக வரும் அச்சுறுத்தல்களைத் தடுத்துவிடும் வாய்ப்புகளிருந்ததால் அதில் இந்தியாவும் பெரிதும் ஆர்வம் காட்டியது.

ஈழத்தமிழர்களின் பிரச்சினைக்கு ஏற்புடைய தீர்வொன்றைக் காண்பதற்கு தனது, பிராந்திய வல்லரசென்ற செல்வாக்கை பயன்படுத்துவதைவிட ஈழத்தமிழரின் போராட்டத்தால் இலங்கை அரசு சந்திக்கும் நெருக்கடிகளைப் பயன்படுத்தி இலங்கையில் தனது செல்வாக்கை செலுத்துவதற்கு இந்தப் பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாட்டை சாதகமாக்கிக் கொள்ள வேண்டுமென இந்தியத் தலைவர்கள் பலர் ஆர்வம் காட்டினர் .

எனினும் இந்தப் பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாடானது, ஈழத் தமிழர்களை அழிக்க இந்தியா அங்கீகாரம் அளிப்பதாயிருக்குமென தமிழகக் கட்சிகள் மிகக் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவில்லை.

இது இந்திய அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்திய அதேநேரம், தமிழகத்தில் இதனால் ஏற்படும் மோசமான உணர்வுகள் நிலைமையை தலைகீழாக்கி விடலாமென்ற அச்சத்தில் பின்னர் இதனை இந்தியா பெரும்பாலும் கைவிட்டு விட்டது.

தருணம் பார்த்திருந்த பாகிஸ்தான் இதனை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டது. காலாகாலமாக இலங்கைக்கும் பாகிஸ்தானுக்குமிடையில் இராணுவ ரீதியான உறவுகளும் ஒத்துழைப்புகளும் பெரிதுமிருந்த போதிலும் கடந்த மூன்று நான்கு வருடங்களில் இரு தரப்புக்குமிடையே இது வெகுவாக அதிகரித்துள்ளது.

குறிப்பாக, இலங்கைக்கான பாகிஸ்தான் தூதராக பாகிஸ்தான் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் கேணல் பஸீர் முகமட் வலி நியமிக்கப்பட்ட பின்னர் இந்த உறவு மிகப்பெருமளவில் அதிகரித்தது.

இலங்கையுடன் இராணுவ ஒத்துழைப்புக்களை அதிகரித்து இந்தியாவின் பிடியிலிருந்து இலங்கையை தனது கைக்குள் போட, புதிய ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்‌ஷ பதவியேற்றது மிகவும் வாய்ப்பானது. போர்க்குணம்மிக்க அவர், மிக மோசமான இனவாத சிந்தனையுடைய ஜே.வி.பி.யின் ஆதரவுடன் பதவியேற்றமை பாகிஸ்தானுக்கு மிகவும் சாதகமானது.

இனப்பிரச்சினைக்கு சமாதானப் பேச்சுகளூடான தீர்வை விடுத்து விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடித்து அவர்களை மிகவும் பலவீனமாக்கி விருப்பமான தீர்வொன்றை திணித்துவிடலாமென்று பாகிஸ்தான் இவர்களுக்கு நம்பிக்கையூட்டியது மட்டுமல்லாது செயலிலுமிறங்கியது.

இலங்கைக்கான ஆயுத உதவிகளை வெகுவாக அதிகரித்தது. இலங்கையை இந்தியாவின் பிடியிலிருந்து விடுவிப்பதற்காக இராணுவ ரீதியில் புலிகளை சுலபமாகத் தோற்கடித்து விடலாமென திரும்பத் திரும்பக் கூறியதுடன் அதற்கேற்ப இலங்கை அரசு படைகளையும் தயார்படுத்துவதில் பெரும் ஆலோசனைகளையும் வழங்கியது.

புலிகளுக்கெதிராக தமிழ் குழுக்களைப் பயன்படுத்தி நிழல் யுத்தத்தை தீவிரப்படுத்தி போர் நிறுத்த உடன்பாட்டிலிருந்து புலிகளை வெளியேறச் செய்து அதன் மூலம் போரை ஆரம்பிக்கவும் அந்தப் போரில் புலிகளைத் தோற்கடிப்பதற்குத் தேவையான இராணுவ ரீதியிலான உதவிகளை வாரி வழங்கவும் பாகிஸ்தான் இலங்கையைத் தூண்டி வந்ததாக கூறப்படுகிறது.

இலங்கைக்கான பாகிஸ்தான் தூதர் பஸீர் முகமட் வலி, இலங்கைக்கும் பாகிஸ்தானுக்குமிடையிலான உறவை மிகப் பெருமளவில் அதிகரித்து, இராணுவ ரீதியிலான தீர்வென்ற எண்ணக் கருவை இலங்கை அரசின் மனதில் அழுத்தமாகப் பதிய வைத்ததுடன் இராணுவ ஆலோசகர்களையும் சிறந்த விமானிகளையும் இலங்கைக்கு அனுப்பச் செய்தார்.

அண்மைக் காலமாக களமுனைகளில் பாகிஸ்தான் படை அதிகாரிகள் பலர் நிலை கொண்டு இலங்கைப் படையினருக்கு ஆலோசனைகளை வழங்கி வருவதாகவும் பாகிஸ்தான் விமானிகளே தற்போது இலங்கையில் போர் விமானங்களைச் செலுத்துவதாகவும் இந்திய உளவுப் பிரிவு (றோ) குற்றஞ்சாட்டி வருகிறது.

வடக்கு - கிழக்கில் அதிகரித்த விமானத் தாக்குதலும் அப்பாவி மக்கள் அதிகளவில் உயிரிழக்கவும் பாகிஸ்தான் விமானிகளே காரணமென்றும் கூறப்படுகிறது. அத்துடன், அமெரிக்காவின் `ஜேன்ஸ் டிபென்ஸ் வீக்லி'யின் தகவல் படி இலங்கைக்கு பாகிஸ்தான் பெருமளவில் போர்த் தளபாடங்களை வழங்கியுள்ளது. 60 மில்லியன் அமெரிக்க டொலருக்கான ஆயுதக் கொள்வனவுக்குரிய பட்டியலை பாகிஸ்தானிடம் இலங்கை அரசு வழங்கியிருந்தது. இதில் விமானப் படையினருக்கான போர்த் தளபாடங்கள் மட்டும் 38.1 மில்லியன் டொலருக்குரியது. இதைவிட 110 மில்லியன் டொலர் பெறுமதியான 22 அல் - ஹாலித் டாங்கிகளையும் பாகிஸ்தான் வழங்கியுள்ளது.

இவையெல்லாம், இலங்கை மீதான கரிசனையில் பாகிஸ்தான் வழங்கியதல்ல. இந்தியாவின் பிடியிலிருந்து இலங்கையை விடுவிப்பதுடன் புலிகள் குறித்த பேரச்சத்திலிருந்தும் இலங்கையை விடுவித்து இராணுவ ரீதியில் புலிகளைத் தோற்கடிக்க முடியுமென்பதை இலங்கையின் சிந்தனையில் ஏற்றுவதுமாகும்.

இதற்காக இலங்கையிடமிருந்து பாகிஸ்தான் மிகப்பெரும் கைமாறை எதிர்பார்த்துள்ளது. இலங்கை மீதான இந்தியாவின் ஆதிக்கத்தையும் செல்வாக்கையும் தகர்த்து இந்தியாவிலிருந்து விலகி பாகிஸ்தானுடனான இலங்கையின் தொடர்புகளை அதிகரிக்கச் செய்வதன் மூலம் இலங்கையில் தனது செல்வாக்கை செலுத்த பாகிஸ்தான் முற்பட்டு வருகிறது.

இந்தியாவைச் சுற்றியுள்ள எந்தவொரு நாடும் இன்று இந்தியாவுக்கு ஆதரவாயில்லை. இந்தியாவிலிருந்து பிரிந்த பாகிஸ்தான் தான் இன்று இந்தியாவின் மிகப் பெரும் எதிரியென்பதுடன் இந்தியாவைச் சுற்றியிருக்கும் நாடுகளில் தனது செல்வாக்கை மிக அதிகம் செலுத்துகிறது.

பாகிஸ்தானின் கொடூரப்பிடியிலிருந்து இந்தியா, பங்களாதேஷை பிரித்துக் கொடுத்த போதும் பங்களாதேஷ் இன்று பாகிஸ்தானுடனேயே நிற்கிறது. உலகின் ஒரேயொரு இந்து நாடான நேபாளம் கூட இன்று முற்று முழுதாக பாகிஸ்தானதும் சீனாவினதும் செல்வாக்கினுள் சென்றுவிட்டது.

உலகின் அடுத்த வல்லரசாக உருவெடுத்து வரும் சீனா இந்தியாவின் எதிரியாக உள்ள அதேநேரம், பாகிஸ்தானின் மிகப்பெரும் நண்பனாகிவிட்டது. அப்பால் பூட்டானின் வெளியுறவுக் கொள்கையும் பாதுகாப்பும் இந்தியாவிடமிருந்தாலும் அங்கு கூட இந்தியாவால் பெரிதும் செல்வாக்கை செலுத்த முடியவில்லை.

இலங்கையும் காலங்காலமாக இந்தியாவின் செல்வாக்கிற்கு உட்பட்டதாயிருந்தாலும் சிங்களத் தலைவர்கள் என்றுமே இந்தியத் தலைவர்களை விட பாகிஸ்தான் தலைவர்களுடன் தொடர்புகளை வைத்திருப்பதையே அதிகம் விரும்புகின்றனர்.

இவையெல்லாம் இந்தியாவுக்கு நன்கு தெரியும். இதனால் தான், கொழும்பில் இடம்பெற்ற கிளேமோர் தாக்குதலிலிருந்து தப்பிய பாகிஸ்தான் தூதுவர், `றோ'வே தன்னைக் கொழும்பில் வைத்துக் கொல்லச் சதி செய்ததாகவும் மூன்றாம் நாடொன்றில் வைத்து இந்தியா தங்கள் மீது நிழல் யுத்தத்தை தொடுப்பதாகவும் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்த நிலையில் தான் இந்தியத் தூதுவர் நிருபமா ராவுக்கு எதிராக அமைச்சர் அநுரா பண்டாரநாயக்கா பாராளுமன்றில் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டு அரசியல் `கிளேமோர்' தாக்குதலை நடத்தினார்.

இலங்கையில் ஆதிக்கம் செலுத்த போட்டியிடும் இரு அயல் நாடுகளினதும் தூதர்கள் மிகக் குறுகிய கால இடை வெளிக்குள் இவ்வாறான தாக்குதலுக்கிலக்கான போது, ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் தூண்டுதலின் பேரிலேயே நிருபமா ராவை அநுரா பண்டாரநாயக்கா தாக்கியதாக இந்தியா கருதுகிறது.

இந்த நிலையில் தான், சமாதானப் பேச்சுகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டுமென்ற இணைத் தலைமை நாடுகளின் கடும் அழுத்தத்தையும் உதாசீனம் செய்து இலங்கை அரசு மற்றொரு யுத்தத்திற்கான முனைப்பில் தீவிரம் காட்டுகிறது.

அண்மைக் காலத்தில் அரச படைகளின் மிகக் கடுமையான தாக்குதலால் ஆயிரக் கணக்கான தமிழர்கள் இந்தியாவுக்கு தப்பியோடுகின்றனர். இலங்கை நிலைமைகள் தமிழகத்தில் கடுமையான உணர்வலைகளை ஏற்படுத்தியிருப்பதுடன் இந்தியா இப் பிரச்சினையில் தனது செல்வாக்கை செலுத்தி இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க முன் வரவேண்டுமென தமிழகம் கொந்தளிக்கிறது.

இலங்கையில் பாகிஸ்தானின் செல்வாக்கு பெருமளவில் அதிகரித்திருப்பது தனது நலனுக்கு மிகப் பெரும் ஆபத்தாகிவிடுமெனக் கருதும் இந்தியா, இலங்கையில் பாகிஸ்தானின் ஆதிக்கத்தையும் செல்வாக்கையும் குறைக்க எந்த விதத்திலும் ராஜதந்திர ரீதியில் நடவடிக்கை எடுக்கவில்லையென்பதுடன் எடுக்கவும் தவறிவிட்டது.

தற்போது கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களை இந்தியப் பிரதமர் சந்தித்திருந்தால் அது இலங்கை அரசுக்கும் பாகிஸ்தானுக்கும் ராஜதந்திர ரீதியான அழுத்தங்களைக் கொடுத்திருக்குமென்பதுடன் இலங்கையை பெரிதும் அச்சுறுத்துவதாகக் கூட இருந்திருக்கும்.

இலங்கைப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இந்தச் சந்திப்பு உதவுகின்றதோ, இல்லையோ பாகிஸ்தானின் பிடியில் விழுந்துள்ள இலங்கைக்கு இதுவொரு கடும் எச்சரிக்கையாக இருந்திருக்குமென்பதுடன் அது, இந்திய நலனுக்கு இலங்கையூடாக பாகிஸ்தானின் அச்சுறுத்தல் ஏதும் ஏற்படுவதை நிறுத்துமாறு இலங்கையை எச்சரிப்பதாகக் கூட இருந்திருக்கலாம்.

அத்துடன் இலங்கையில் இராணுவத் தீர்வில் அரசு அக்கறை காட்டுவதாலேயே இலங்கை அரசு பாகிஸ்தானுடன் நெருங்கி நிற்பது தெளிவாகும். இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்தித்து சமாதான முயற்சிகளை ஊக்குவித்து பேச்சுக்களை ஆரம்பித்து இலங்கையில் மற்றொரு யுத்தத்தை தவிர்ப்பதன் மூலம் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்குமிடையிலான நெருக்கமான உறவுக்கு இந்தியா ஆப்பு வைத்திருக்க முடியும்.

ஆனால் ,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்திக்க மறுத்ததன் மூலம், இலங்கைப் பிரச்சினையில் தனது பிடியை வலுவடையச் செய்து பாகிஸ்தானின் இராணுவச் செல்வாக்கை குறைத்திருக்கக் கூடிய வாய்ப்பையும் இந்தியா இழந்துவிட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்திப்பது புலிகளின் நிலைப்பாட்டை ஆதரிப்பதாக அமைந்துவிடலாமென இந்தியா கருதுவதன் மூலம் இந்தச் சந்திப்பை தவிர்த்து விட்டதாகக் கருதினால், இந்தியா இந்தச் சந்திப்பை தவிர்த்ததானது இலங்கையில் பாரிய படை நடவடிக்கையை மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கும் அரசுக்கு மிகவும் ஊக்கமளிப்பதாகவே இருக்கப் போகின்றது.

இலங்கை அரசு இராணுவ ரீதியிலான தீர்வொன்றுக்கு பெரிதும் ஆர்வம் காட்டுவதைத் தெரிந்ததும் விடுதலைப் புலிகளைத் தடை செய்ததன் மூலம் சமாதான முயற்சிகளை ஐரோப்பிய ஒன்றியம் சீர்குலைத்தது. அதுபோன்றே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனான சந்திப்புக்கு மறுப்புத் தெரிவித்ததன் மூலம் இந்தியாவும் சமாதான முயற்சிகளை சீர்குலைத்துள்ளது.

இவற்றின் மூலம் இனிவரும் நாட்களில் பாரிய யுத்தம் வெடிக்கும் பட்சத்தில், தங்களது செல்வாக்கை இப்பிரச்சினையில் செலுத்தும் தகுதியை ஐரோப்பிய ஒன்றியமும் இந்தியாவும் இழந்துள்ளன.
இது இலங்கையில் முழு அளவிலான போரைத் தோற்றுவித்து பெரும் இரத்தக்களரியை உருவாக்கப் போகின்றதென்பதுடன் ஏற்படப் போகும் பேரழிவுகளுக்கும் இவர்களே காரணமாயிருக்கப் போகின்றார்களென்பதும் வெளிப்படை 2000 ஆம் ஆண்டில் புலிகள் யாழ். .குடாவை கைப்பற்றும் நிலையிலிருந்த போது இந்தியா கடும் அழுத்தத்தை பிரயோகித்ததும் அங்கிருந்து புலிகள் விலகக் காரணமாயிருந்ததெனக் கூறப்படும் நிலையில் இனியேற்படப்போகும் பேரழிவுகளுக்கு காரணமாகிவிட்ட இவர்கள் எந்த அடிப்படையில் புலிகளின் பதில் தாக்குதலை தடுத்து நிறுத்த முன்வருவார்களென்ற கேள்வியை தமிழ் மக்கள் நிச்சயம் எழுப்புவர்.


நன்றி: ஞாயிறு தினக்குரல் September 24, 2006

_____________________________________________

Labels: , ,

Sunday, October 01, 2006

மகிந்தவின் முகங்கள்

மறுபக்கம் - கோகர்ணன்
~~~~~~~~~~~~~~~~~~~~~

விடுதலைப் புலிகளை இயன்றளவும் பலவீனப்படுத்தி அதன் பின்பு தாம் விரும்பியவாறான தீர்வொன்றை ஏற்குமாறு அவர்களை வற்புறுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாக இருக்கலாம். மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல்கள் என்ற பேரில் தொடர்ந்தும் விடுதலைப் புலிகளின் மீதான தாக்குதல்களையும் அவர்களுடைய கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள மக்கள் மீதும் நடத்துவதற்கு வேறு நோக்கம் இருக்க நியாயமில்லை.
விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைகட்கு ஆயத்தமாயிருந்தால் அவர்கள் பலவீனப்பட்டுள்ளனர் என்பதுதான் பொருள் என்கிற கருத்து பிரதம மந்திரி விக்ரமநாயக்கவாலும் பிற அரசாங்கப் பேச்சாளர்களாலும் திரும்பத் திரும்பக் கூறப்பட்டு வருகிறது. விடுதலைப் புலிகள் பயங்கரமான இராணுவத் தோல்வியை எதிர்நோக்குகின்றனர் என்ற கருத்துப் பலவேறு வட்டாரங்களிலிருந்தும் கூறப்பட்டு வந்துள்ளது. அரசாங்கத்திற்குள்ளும் அவ்வாறான எண்ணம் வலுப்பெற்று வருகிறதாகவே எண்ண இடமுண்டு. குறுகிய கால நோக்கில் விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்துவது இயலாத காரியமல்ல. ஆயினும் இதுவரை இந்த ஆண்டில் மட்டும் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ள நடவடிக்கைகளை நோக்கும்போது, சில பிரதேசங்களிலிருக்கும் தமிழ் மக்களைப் பல வகைகளிலும் பயமுறுத்தியும் கொன்றும் பட்டினியிட்டும் அவர்களுக்கான அடிப்படைத் தேவைகள் கிடையாமல் மறுத்தும் ஊரைவிட்டே விரட்டுகிற காரியங்கள் தீவிரமடைந்துள்ளன. விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்துவதை விட விஷமத்தனமான நோக்கங்களை இங்கு நாம் காணலாம். பேரினவாதிகளின் இன ஒழிப்பிற்கு ` விடுதலைப்புலிகளின் பயங்கரவாத' நடவடிக்கைகள் ஒரு வசதியான சாட்டே ஒழிய வேறில்லை.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் பரந்துபட்ட வெகுசன ஒற்றுமையின் அடிப்படையிலும் ஒடுக்கப்படுகிற சகல தேசிய இனங்களதும் ஒடுக்குமுறைக்குட்படுகிற சிங்கள மக்களதும் ஆதரவுடனும் முன்னெடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் பலவும் தவறவிடப்பட்டுள்ளன. அதற்கான பழியைக் குறிப்பிட்ட எந்த ஒரு அமைப்பின் மீதும் சுமத்துவதைவிடத் தமிழ்த்தேசிய இன விடுதலை இயக்கத்தின் பொதுவான வரலாற்று வளர்ச்சியை விமர்சிப்பது பொருத்தமாயிருக்கும். இப்போது, பின்நோக்கிய பார்வையிலோ, சுயநல நோக்கிலோ, பம்மாத்தாகவோ ஆயுதப் போராட்டத்தை நிராகரிக்கிறவர்கள் எல்லாரும் தமிழ் மக்கள் முன்னால் எந்தவிதமான தெரிவுகள் உள்ளன என்பதைச் சொல்லத் திணறுகின்றனர். மறுபுறம், விடுதலைப் புலிகளை முழு அளவிலான போரை நோக்கித் தள்ளிவிடுகிற விதமான பொறுப்பற்ற கருத்துகளும் கூறப்பட்டு வருகின்றன. அவையும் பொறுப்பற்றவையே.

ஆயுதமேந்திய போராட்டம் என்பது கட்டுப்பாடற்று எல்லாவிடத்தும் எல்லாவற்றையும் ஆயுதங்கள் மூலம் தீர்ப்பதல்ல. ஆயுதமேந்தாமல் எங்கேயும் ஒடுக்குமுறையாளர்கள் செயற்பட்டதில்லை. சட்டத்தினதும் ஒழுங்கினதும் பேரிலான அரச வன்முறையைச் சமூக நீதிக்கான போராட்டம் எவ்வாறு எதிர்கொள்வது என்ற கேள்வியிலிருந்து தொடங்கினால், ஆயுதமேந்திய போராட்டம் ஏன் தவிர்க்க இயலாததாகிறது என விளங்கும். ஆனால், மக்கள் பொதுவாக அமைதியையே விரும்புகின்றனர். எனவே, எடுத்த எடுப்பிலேயே ஆயுதப் போராட்டங்களில் பங்குபற்றவோ அவற்றை ஆதரிக்கவோ தயங்குவார்கள். பல விதமான அமைதியான சட்டரீதியான போராட்டங்களின் அனுபவங்களினூடாகவே ஆயுதந்தாங்கிய சட்டவிரோதமான போராட்டங்களை நோக்கிய நகர்வு நிகழுகிறது. ஆயுதப் போராட்டத்தை மறுக்கிறவர்கள் இவை பற்றிப் பேச விரும்புவதில்லை. அதேவேளை, முழுமையாக ஆயுதப் போராட்டத்தை மட்டுமே வேண்டுகிறவர்கள் போராட்டத்தின் சமூக அரசியல் பரிமாணங்களைத் தவறவிட்டு விடுகின்றனர்.

விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே வைத்த பின்புதான் பேச்சுவார்த்தைகள் என்றும் பிரபாகரன் சில உத்தரவாதங்களைத் தந்தால் மட்டுமே பேச்சுவார்த்தைகள் என்றும் அரசாங்கம் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைகட்கு எப்போதுமே தயார் என்றும் ஏக காலத்தில் பலவேறு குரல்களில் அரசாங்கம் பேசுகிறது. இதில் எது அரசாங்கத்தின் குரல் என்று தெரியவில்லை. மகிந்த ராஜபக்ஷ தேசிய அரசாங்கம் பற்றி யூ.என்.பி.யுடன் பேசுகிறார். ரணில் விக்கிரமசிங்கவுடன் கை குலுக்குகிற போதே யூ.என்.பி. பிரமுகர்களை இரை வைத்துப் பிடிக்கிறார். ஜே.வி.பி. பிரமுகர் விமல் வீரவன்ஸ படையினருக்கு உரையாற்றியதையும் ஜே.வி.பி. படையினருடன் ஏற்படுத்தியுள்ள தொடர்புகள் பற்றியும் ஆளுங்கட்சியில் பிரமுகர்கள் கண்டித்துப் பேசுகிற போது அதை ஏற்கிற விதமாக காட்டிக் கொண்டே சோமவன்ஸ அமரசிங்கவை ஆரத் தழுவுகிறார். பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் வெவ்வேறு முகங்களைக் காண்பிக்கிறார்.

"உண்மையான ராஜபக்‌ஷவே முன்னால் வருக" என்று எல்லோரும் கூடி அழைத்தால் நாம் எந்த ராஜபக்ஷவைக் காணுவோமென்று என்னால் கூற முடியாது. சண்முகப் பெருமாள் மாதிரி ஆறு தலைகளுடனோ அல்லது ராவணேசன் மாதிரிப் பத்துத் தலைகளோடோ அல்லது அதைவிட அதிகமான தலைகளுடனும் ஒவ்வொரு வாயிலிருந்தும் ஒன்றுக்கு மேற்பட்ட குரல்களுடனும் ஒரு ராஜபக்ஷ வெளிவரலாம். அல்லது பக்தர்கள் ஒவ்வொருவரும் நம்பி வேண்டுகிற மாதிரி அன்றும் இன்றும் என்றும் ஒவ்வொருவருக்கும் அவர் ஒவ்வொரு தோற்றங் காட்டலாம். இப்போது உலகநாடுகளுக்கு நம் அரசாங்கத்தின் நாடகம் விளங்குகிறது என்று நாம் அகமகிழ்வது மடமையென்றே நினைக்கிறேன். அது அவர்கள் எப்போதுமே அறிந்து அறியாததுபோல காட்டி வந்ததுதான்.

தேசிய இனப்பிரச்சினையைப் பொறுத்த வரை, ஜே.ஆர். ஜயவர்தன எப்படித் தான் சொல்ல விரும்பினாலும் சொல்ல இயலாததை சிறில் மத்தியூ மூலம் சொல்லுவித்தாரோ, அது போலவே ராஜபக்‌ஷவுடைய மனமும் பலவேறு உடல்கள் மூலம் தன்னை வெளிப்படுத்துகிறது. மகிந்த சிந்தனை எப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தோற்றம் தந்து வந்துள்ளதோ அது போலவே மகிந்த ராஜபக்ஷவும் விளங்குகிறார்.

உண்மையில் யாருமே அவரது தோற்றங்களால் ஏமாறவில்லை. அவருக்கும் அவருக்கு முன்னர் அதிகாரத்திலிருந்த பேரினவாத சனாதிபதி எவருக்குமிடையில் அதிக வேறுபாடில்லை என்பது எல்லாரும் அறிந்ததே. எனினும், அவரை ஒவ்வொருவரும் தங்களது வசதிக்கேற்பத் தாங்கள் விரும்பியபடி காட்சிப்படுத்திக் கொள்ளுகிறார்கள். எனவே தான் தமிழ் மக்களின் தரப்பில் அமைதி பற்றிப் பேசுகிறவர்கள் மேற்கொண்டு அரசாங்கத்தின் பேரில் எழுகிற முரணான குரல்களைப் புறக்கணித்து மகிந்த ராஜபக்ஷவின் நிலைப்பாடு என்ன என்பதைப் பகிரங்கமாகக் கூறுமாறு வற்புறுத்த வேண்டும்.

பிரபாகரன் சில உத்தரவாதங்களை வழங்கினாலேயே பேச்சுவார்த்தைகள் என்று சொல்லுகிறவர்கள் முழு அரசாங்கத்தின் சார்பாகவும் சனாதிபதி சில உத்தரவாதங்களை வழங்குமாறு வற்புறுத்துவார்களா?

விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கொள்வனவு செய்யக் கூடாது என்பதை ஏற்கிற எவரும் அரசாங்கமும் அவ்வாறே நடக்க வேண்டுமென்று ஏன் கேட்பதற்கு மறுக்கிறார்கள்? கடந்த அரை நூற்றாண்டுக் காலத்தில் அரச படையின் ஆயுதங்களில் எவையும் எந்த அந்நியப்படைக்கும் எதிராகப் பயன்பட்டுள்ளதா? இந்த நாட்டின் மக்களை அல்லது மக்களில் ஒரு பகுதியினரை அழிப்பதற்கு அரசாங்கம் ஆயுதமேந்தலாமெனில், தற்காப்புக்காக ஆயுதமேந்தும் உரிமை பாதிக்கப்பட்டவர்கட்கு இல்லையா? அகிம்சை அரசியல் பற்றிப் பேசி வந்துள்ள எல்லாருமே ஒடுக்கப்பட்ட மக்களின் ஆயுதங்களைத் தான் பறிக்க முயன்றுள்ளனர்.

அண்மையில், நோர்மன் ஃஸிங்கெல்ற்றைன் எனும் அமெரிக்க ஆய்வாளர் "அவரும் ஒரு யூதராக இருக்கலாம்". இஸ்ரேலுக்கு ஆதரவாக முன்னெடுக்கப்படுகிற பிரசாரங்களின் வஞ்சகத்தை விளக்கி "பியோண்ட் சுட்ஸ்பாஸ்" என்ற நூலை வெளியிட்டிருக்கிறார். அதை வாசித்த போது நமது நாட்டின் சிங்கள, ஆங்கில ஏடுகளின் நடத்தையை விளங்கிக் கொள்ள இயலுமாயிருந்தது.

பலஸ்தீன மக்களுக்கு போராடுவதை விட வேறு வழியில்லை. குர்தியமக்களுடைய கதையும் அதேதான். மத்திய தென் அமெரிக்கப் பழங்குடிகள் இப்போதுதான் விழித்துள்ளனர். எல்லாப் போராட்டங்களும் நெளிவு சுழிவான பாதைகளிலேயே முன்னேறி வந்துள்ளன. அவற்றின் வெற்றி தோல்விகளிலிருந்து நாம் கற்க வேண்டியவை நிறைய உள்ளன. முக்கியமாக ஒவ்வொரு போராட்டத்தினதும் நண்பர்கள் யார் எதிரிகள் யார் என்பதில் மிகுந்த தெளிவு அவசியம். தமிழ் மக்களிடையே இவ்விடயத்திற்கு போதிய தெளிவு உள்ளதாகத் தெரியவில்லை. குறிப்பாக நமது தமிழ் ஊடகங்கள் இன்னமும் தமிழ் மக்களுடைய விடுதலைப் போராட்டங்கட்குக் குழி பறிக்கிறவர்களது மேலாதிக்க நோக்கங்களைப் புறக்கணித்து அந்நியர் தயவிலேயே போராட்டத்தை வெல்லுகிறதற்கும், அமைதியான தீர்வை அடைவதற்கும் வழிகாட்டுகின்றன.

தமிழ் மக்களின் நேச சக்திகள் உலகெங்கும் உள்ளனர். ஆனால், நிச்சயமாக எந்த நாட்டினதும் ஆளும் அதிகார வர்க்கத்தினரிடையில் இல்லை என்பதை நாம் மறத்தலாகாது.

நன்றி: ஞாயிறு தினக்குரல் September 24, 2006

___________________________________________

Labels:


Get your own calendar

Links