« Home | அன்னியசக்திகளை ஈழத்தமிழர் நம்பலாமா? » | லெப்.கேணல் அக்பர் » | மலையக மக்களின் போராட்டம் » | சனநாயகமும் பயங்கரவாதமும் » | சிங்கள மனப்பான்மையும் சிறிலங்கா நிலைமையும் » | ஏழுகட்சிக்கூட்டணி - மாவோயிசப் போராளிகள் ஒப்பந்தம் » | இஸ்ரேலியப் பயங்கரவாதம் - சனநாயகத்துக்கான போராட்டம் » | இராணுவப்பிடியில் சிறிலங்கா » | அணுவாயுதப் பரிசோதனை அரசியல் » | சிங்களவரிடமுள்ள இனப்பிரச்சினைத் தீர்வு »

இந்தியா பிச்சை போடுமா?

மறுபக்கம் - கோகர்ணன்

டிசம்பர் முற்பகுதியில் தமிழர் தேசியக் கூட்டணித் தலைவர் இரா. சம்பந்தன் எழுதிய கட்டுரை ஒன்றில் தமிழக முதல்வர், இலங்கைத் தமிழரின் பிரச்சினைகள் பற்றி இந்தியப் பிரதமருக்குத் தெளிவாக எடுத்துக் கூறியிருக்கிறாரென்றும் இந்தியப் பிரதமருடன் தமது பேச்சுவார்த்தைகள் பயனுள்ளவையாய் அமைந்தனவென்றும் சொல்லியிருந்ததோடு, இந்தியா தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்கும் என்று உறுதிப்படுத்தும் என்றும் நம்மை நம்பவைக்க மிகவும் கடுமையாக முயன்றுள்ளார். சில மாதங்கள் முன்பு தங்களைக் காக்க வைத்து இரண்டு முறை ஏய்ததற்கான விளக்கங்களையும் வெகு சிரமப்பட்டு நம் முன்வைத்துள்ளார்.
இந்திய ஆட்சியாளர்களும் தமிழக முதல்வரும் யார் எசமான் என்பதை நமது தமிழ்த் தலைவர்களுக்குத் தெளிவுபடுத்தியுள்ளனர். அவர்கள் திரும்பி வருவதற்கு முன்பே இந்திய ஆட்சியாளர் தங்களது நோக்கங்கள் என்னவென்று தெளிவு படுத்தி விட்டனர். திருகோணமலை மீது இந்தியாவின் பிடியை மேலும் வலுப்படுத்துகிற நோக்கத்துடன் திருகோணமலைத் துறைமுகத்தை அண்டிய பகுதியில் அனல் மின் நிலையத்தை நிறுவுவது பற்றி இலங்கை அரசாங்கத்துடன் உடன்படிக்கையில் ஒப்பமிட்டுள்ளது. விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட சம்பூரிலா, ஏற்கனவே சிங்கள மயமாக்கப்பட்ட சீனன் குடாவிலா என்ற விவாதம் பற்றி நாம் அதிகம் அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை. சம்பூரில் அனல் மின் நிலையம் நிறுவப்பட்டாலும் படாவிட்டாலும் தமிழ் மக்கள் அங்கே போய் மீளக் குடியேற இயலாத விதமாக பாதுகாப்புக் காரணங்கள் கற்பிக்கப்படும் என்பது பற்றி நமக்கு ஐயங்கள் வேண்டாம்.

எனவே, தமிழ்த் தலைவர்கள் சம்பூரில் வேண்டாம் என்பதுடன் நிற்காமல் திருகோணமலையில் வேண்டாம் என்பது பற்றி உறுதியாக நிற்க வேண்டும். அல்லாது போனால் ,அது மின்சார நாற்காலிக்கும் தூக்கு மேடைக்கும் இடையிலான தெரிவு மாதிரியான ஒரு தெரிவாகவே இருக்கும். சம்பந்தனுக்கும் உள்ள வில்லங்கம் எப்படி ஏக காலத்தில் இந்திய மேலாதிக்க வாதிகட்கும் விடுதலைப் புலிகட்கும் அல்லலுறும் தமிழ் மக்களுக்குமிடையில் அரசியல் சம நிலை காணுவது என்பதாக இருக்களாம். ஆனால் அது நமது தமிழ் ஊடகங்களின் தலைவிதியாக இருக்க வேண்டியதில்லையே.

இலங்கையின் தேசிய இனப் பிரச்சினையில் இந்தியாவின் குறுக்கீட்டின் நோக்கங்கள் பற்றியும் அது நடைமுறைப்படுத்தப்பட்ட விதம் பற்றியும் நமக்குள் குழப்பங்கள் இருக்க நியாயமில்லை என்றே இதுவரை நினைத்து வந்தேன். தனிப்பட்ட காரணங்களுக்காக இந்திய ஆட்சியாளர்களை மறுத்து வாய்திறக்க இயலாத நிலையில் பல தமிழ்த் தலைவர்களும் பிரமுகர்களும் இருந்து வருகிறார்கள். விடுதலைப் புலிகளுக்கு நெருக்கமாக அவர்கள் நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்ட நாளிலிருந்து அவர்கள் இந்தியத் தூதரக வாயிலாகப் பல்வேறு நெருக்குவாரங்கட்குட்பட்டனர்.பின்பு அவர்களை ஓரங்கட்டுகின்ற முறையிலும் சில போட்டி இயக்கங்களை ஊக்குவிக்கின்ற விதமாகவும் இந்திய அதிகார நிறுவனம் நடந்து கொண்டதன் உச்சக் கட்டத்தை இரண்டு மாதங்களின் முன்பு கண்டோம். அதற்கு முன்பும் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அழிக்கப்பட்டனர். எனினும் முகத்திற் பூசப்பட்ட கரியை முழுதாகத் துடைக்காமலே இந்தியா எமது தாய் நாடு, எங்களுக்கு என்றும் இந்தியா துரோகம் செய்யாது" என்று பழைய பாடத்தை ஒப்பித்தனர். இம் முறை நடந்த சந்திப்பிலும் யார் தமிழர் தேசியக் கூட்டணியின் சார்பில் பங்குபற்றலாம் என்பதற்கான முன் நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன என அறிகிறேன். அதை உறுதிப்படுத்துகிற முறையிலேயே பங்கு பற்றினோரில் ஒருவர் தவிர மற்ற எல்லாரும் இந்திய அதிகார நிறுவனத்தின் செல்லப் பிள்ளைகளாக எப்போதோ இருந்து வந்தனர் என்ற விடயமும் அமைந்திருந்தது.

இவை எல்லாம் ஒரு புறமிருக்க, இந்திய விடுதலைப் புலிகள் மீதான தடையைப் பல ஆட்சி மாற்றங்களினூடாகவும் பதினைந்து ஆண்டுகளாகத் தொடர்ந்தும் கடைப்பிடிக்கிறது. விடுதலைப் புலிகளின் தலைவர் தண்டனைக்குரிய குற்றவாளியாக இந்தியாவால் வேண்டப்படுகிற ஒருவராக இருக்கிறார். இலங்கையில் அவர் தண்டனைக்குரிய குற்றவாளியாக இருக்கின்ற காரணத்தால் அவரை இந்தியாவுக்கு அனுப்புவது தொடர்பாகக் கருத்து வேறுபாட்டுக்கு இடமுண்டு. அது அவர் பிடிபடக் கூடிய ஒரு சூழல் வருகின்ற வரையும் ஒரு பிரச்சினையாக அமையாது. எனினும் இந்தியா இலங்கையின் தேசிய இனப் பிரச்சினையின் தீர்வுக்கு உதவும் ஒரு நாடு நிலையான சக்தியாகச் செயற்பட இயலுமா என்ற கேள்விக்கான விடையின் முக்கியமான ஒரு பகுதி, முற் குறிப்பிட்ட, விடுதலைப் புலிகள் தொடர்பான பிரச்சினைகளில் தங்கியுள்ளது.

இந்தியா எந்த வகையில் குறுக்கிட வேண்டுமென்று தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்பார்க்கின்றனர்? உண்மையாகவே இந்தியா அப்படிக் குறுக்கிடுமென்று அவர்கள் எதிர்பார்ககின்றார்களா? அப்படிக் குறிக்கிடாதெனின் எப்படி குறுக்கிடுமென எதிர்பார்க்கின்றார்கள்? இவற்றையெல்லாம் தமிழ் மக்கள் அறிய வேண்டாமா? அதற்கான உரிமை அவர்கட்கு இல்லையா? அல்லது இவை எல்லாம் பரம இரகசியங்களா? அவை அப்படிப்பட்ட இரகசியங்கள் என்றால் இந்தியா குறுக்கிடும் என்றோ எந்த நோக்கத்திற்காக என்றோ உறுதிப்படுத்தி குட்டை உடைப்பது இந்தியாவின் திட்டங்களில் மண்ணை அள்ளிக் கொட்டுகிற காரியமாகாதா?

உண்மை என்ன வென்றால் எல்லோரும் ஒரே விளையாட்டைத் தான் விளையாடுகிறார்கள். அதன் பேர் "காதில் பூச் சுற்றல்" அதன் முன்னேறிய வடிவங்களைத் "தலையில் மிளகாய் அரைத்தல்" என்றும் வேறு பேர்கள் கொண்டும் அழைப்பார்கள். எனினும் இது ஒரு தளத்தில் போட்டியின்றி விளையாடப்படுகிற விளையாட்டு. நமது தலைவர்கள் நம் காதில் பூச் சுற்றபவரா. மன்மோகன் சிங் முழு இந்திய மக்கள் காதிலும் பூச்சு சுற்றவார். ஜோர்ஜ் புஷ்....

என்றாலும் இன்னொரு தளத்தில் போட்டி உண்டு. கோபால சாமிக்கும் கருணாநிதிக்கும் உள்ள போட்டியில் ஈழத் தமிழர் பிரச்சினை பூச் சுற்றலுக்கு ஒரு முக்கியமான பங்குண்டு. இப்போதைக்குத் தமது காதில் கருணாநிதி பூச் சுற்றுவதையே தமிழர் தேசியக் கூட்டணியினர் விரும்புகிறார்கள். அது தமது தமிழ் ஊடகத் துறையினருக்கும் விருப்பமான ஒரு முடிவு போலவே தெரிகிறது. எனவே தான் கருணாநிதியின் திரு விளையாடல்கள் பற்றி மிகவும் அடக்கியே வாசிக்கப்படுகிறது.

கருணாநிதி ஐம்பது வருடங்களுக்கு முன் தண்ட வாளத்தில் தலையை வைத்த கதையைச் சொல்லியே வெகு தூரம் அரசியற் பயணம் நடத்தியவர். இன்று தமிழக ஊடகத்துறையில் ஒரு ஏகபோக நிறுவனமாக முனையும் அவருடைய குடும்பத்துக்குரிய `சன்' நிறுவனம் பத்திரிகைத் துறையிலும் தன்னை விஸ்தரித்து வருகிறது. அதன் அரசியல் நோக்கங்கள் தமிழகத்திற்குள் ஆதிக்கம் செலுத்தினாலும் பிற மாநிலங்களில் அது வணிக நோக்கிலேயே இயங்கி வந்துள்ளது. கருணாநிதியின் மகள் கனிமொழி அவர் ஈழத் தமிழர் பிரச்சினையில் ஏன் அரைமனதுடன் செயற்படுகிறாரென்று கேட்கப்பட்ட ஒரு கேள்வியை, மறுக்காமல் ஆட்சியில் உள்ள ஒரு தலைவர் என்ற வகையில் அவருக்குள்ள பிரச்சினைகள் பல என்ற விதமாகச் சமாதானம் சொல்லியிருக்கிறார். எதிர்க் கட்சியில் இருந்த போதும் அப்படித்தானே இருந்தார் என்று பதிற் கேள்வி கேட்கிறதற்கு ஏனோ பத்திரிகைகாரருக்குத் தோன்றவில்லை.

கருணாநிதியின் அரசியலை மட்டுமல்ல, தமிழ் மக்கள் நம்ப வேண்டும் என்று தமது தலைவர்களும் சில ஊடகத் துறையினரும் வற்புறுத்துகிற ஒவ்வொரு தலைவரது அரசியலையும் நமது ஊடகங்களில் பொறுப்பான இடங்களில் உள்ளவர்கள் கவனமாக ஆராய வேண்டும். அவர்களது ஊழல்கள், மோசடிகள் போன்றவற்றையும் தமிழ் வாசகர்கள் அறியத்தர வேண்டும். இலங்கை வாழ் தமிழ் மக்களிடையே திராவிட இயக்கம் பற்றிய ஒரு பற்றுக்குப் பல தோற்று வாய்கள் உள்ளன. அவற்றுட் பெறுமதி வாய்ந்த ஒன்று ஈ.வெ.ரா. (பெரியார்) தொடர்பானது. அவரது சுயமரியாதைச் சிந்தனைகள், பகுத்தறிவு, சாதிய எதிர்ப்பு, ஏன் பெண் சமத்துவம் போன்றவற்றால் கவரப்பட்டோர் பலர் இடது சாரிகளாகினர். சிலர் தமிழ்த் தேசியத்தின் பக்கம் திரும்பினர். திராவிட முன்னேற்றக் கழகம் அரசியலை விட முக்கியமாகச் சினிமா மூலம் தன்னை வளர்த்துக் கொண்ட ஒரு காலமும் இருந்தது. கவர்ச்சிகரமான ஆனால் விஷயமில்லாத அடுக்கு மொழி மேடைப் பேச்சு, சினிமா மூலமான கவர்ச்சி, தமிழ்த் தேசிய வாதம் என்பன மூலமான கவர்ச்சியாலேயே நடிக்கத் தெரியாத போதும் புரட்சி நடிகராக கொண்டாடப்பட்ட எம்.ஜி. இராமச்சந்திரன் போக, அண்ணரை ,கண்ணதாசன் ஆகியோரும் அறிஞர், கலைஞர், கவிஞர் என்று சிறப்பிக்கப்பட்டனர். இவர்களில் பலருக்கும் திராவிட நாடு பற்றியும் அக்கறையிருக்கவில்லை; தமிழ் நாடு பற்றிய தேசிய உணர்வும் இருக்கவில்லை. அண்ணா துரை காமராஜ ரோடு ஒப்பிடத்தக்களவு நாணயமானவர் எனலாம். ஆனால் தமிழக அரசியலுக்கு தமிழ் மொழிப் பற்றுக்கும் இனப் பற்றுக்கும் ஒரு தொடர்புமில்லை.

தமிழக அரசியலில் சினிமா உண்டு, சாதி உண்டு, இப்போது மதமும் உண்டு. தமிழ் கிடையாது .இடையிடை கிளறிவிடப்படுகிற மூர்க்கத்தனமான தமிழ் வெறி கூட மூன்று மாதத்துக்கு மேல் தாக்குப் பிடித்ததாகக் கூற முடியாது. என்ன இல்லா விட்டாலும் பயங்கரமான பண மோசடியும் ஊழலும் உண்டு. அதனாலே தான் கருணாநிதியை இந்திரா காந்தியால் ஆட்டிப் படைக்க முடிந்தது. எம்.ஜி.ராமச்சந்திரன் லஞ்சம் வாங்கியதாகக் கதையில்லாவிட்டாலும் சினிமா கறுப்புப் பணமும் வருமான வரி ஏய்ப்பும் பற்றிய விசாரணைகள் நடந்திருக்கின்றன.

தமிழக மக்கள் எல்லாவற்றையும் ஓரளவேனும் அறிவார்கள். ஆனால் முன் தெரிவுகள் இல்லை ஒரு உருப்படியான மாற்று அரசியல் இல்லாத வரை அவர்கள் தலித்தியங் கூட, சாதிக அரசியலை வளர்த்துள்ளதே ஒழிய விடுதலைக்கான அரசியலையல்ல. இலங்கை வாழ் தமிழ் மக்கள் இந்தியா பற்றியும் தமிழகம் பற்றியும் அறியாமல் ஏமாறுவதற்கு நமது ஊடகங்கள் துணை போகக் கூடாது.

சினிமா நடிக நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கையைத் துருவித் துருவி ஆராய்கிற அளவு அக்கறை கூட, தாம் அறிய வேண்டிய அரசியல் தலைமைகள் பற்றி விசாரிப்பதற்கு இல்லை என்றால், நமது எதிர்காலத்திற்கு நமது ஏடுகள் வழங்கவுள்ளதுதான் என்ன?

__________________________

நன்றி: ஞாயிறு தினக்குரல் January 21, 2007

Labels:

எழுதிக்கொள்வது: நாணயமானவர்

//கருணாநிதியின் அரசியலை மட்டுமல்ல, தமிழ் மக்கள் நம்ப வேண்டும் என்று தமது தலைவர்களும் சில ஊடகத் துறையினரும் வற்புறுத்துகிற ஒவ்வொரு தலைவரது அரசியலையும் நமது ஊடகங்களில் பொறுப்பான இடங்களில் உள்ளவர்கள் கவனமாக ஆராய வேண்டும். அவர்களது ஊழல்கள், மோசடிகள் போன்றவற்றையும் தமிழ் வாசகர்கள் அறியத்தர வேண்டும்.//

வன்னியன் பேராசிரியர் இதில் திரு.பிரபாகரனையும் சேர்த்துத்தான் சொல்கிறாரோ?

2.12 26.1.2007

நாணயமானவரே,
கவ்விப் பிடிச்சியள் பாருங்கோ ஒரு பிடி.
பேராசிரியர் சொல்கிற அரசியல், ஊழல் ஆராயப்பட வேண்டிய தலைவர்களுள் பிரபாகரனும் அடக்கமென்றுதான் நினைக்கிறேன். நான் பேராசிரியரின் சார்பில் கருத்துச் சொல்ல முடியாது பாருங்கோ. அதாலதான் அந்த 'நினைக்கிறேன்' எண்ட சொல். சரியான விளக்கத்துக்கு பேராசிரியரைத்தான் கேக்க வேணும்.

ஒருத்தரும் வந்து போகாத இடத்துக்கு உங்களை மாதிரி ஆக்கள் வந்து போறது பேச்சந்தோசம்.

Post a Comment

Get your own calendar

Links