Saturday, May 13, 2006

பிபிசி, உலகநாடுகளைப் புரிந்து கொள்வோம்.

மறுபக்கம்
கோகர்ணன்.



திருகோணமலை மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குட்பட்ட மக்கள் செறிவாக வாழும் பகுதிகளில் அரசாங்கம் பல முனைகளிலிருந்தும் வெறித்தனமான தாக்குதலை நடத்தியதையொட்டி பி.பி.சி. வானொலியின் ஆங்கிலச் செய்தி அறிக்கை ஒன்றைக் கேட்டேன். அதற்கெல்லாம் முன்னோடியான நிகழ்வு விடுதலைப் புலிகள் தம்பலகமத்தில் நடத்திய கண்ணி வெடித் தாக்குதல் என்று சொல்லப்பட்டது. அதைக் கேட்டபோது, க்ளாஸ்கோ பல்கலைக்கழக ஊடகத்துறைக் குழுவினர் 2004 இல் வெளியிட்ட ஒரு நூலின் நினைவு வந்தது. நூலின் தலைப்பு இஸ்ரேலிலிருந்து கெட்ட செய்தி (பாட் நியூஸ் ஃப்றொம் இஸ்ரேல்) அந்நூலில் பலஸ்தீன - இஸ்ரேல் பிரச்சினை தொடர்பான தகவல்கள் எவ்வாறு பிரித்தானிய ஊடகங்களால் மக்களுக்கு வழங்கப்படுகின்றன என்று விரிவாக ஆராயப்பட்டிருந்தது. பொதுப்பட, இஸ்ரேலியப் படைகள் எந்த அட்டூழியத்தைச் செய்தாலும் அதற்கு முன்னோடியாகப் பலஸ்தீன தீவிரவாதக் குழுவொன்று நடத்திய தாக்குதல் பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கும். பலஸ்தீனப் பேராளிகளுக்கு சினமூட்டுகிற காரியங்கள் அன்றாடம் இஸ்ரேலில் நடைபெறுகின்றன. சட்டவிரோதமான குடியேற்றங்கள் படையினரின் துணையுடன் நடைபெறுகின்றன. பலஸ்தீன மக்கள் தமது இருப்பிடங்களிலிருந்து விரட்டப்படுகின்றனர். அவர்கள் அன்றாடம் முகங்கொடுக்கின்ற அவமதிப்புகளும் துன்புறுத்தல்களும் பற்றியே பேசப்படுவதில்லை. ஈசாப் கதையில் வருகிற ஓநாய் ஆட்டுக்குட்டி மீது குற்றஞ் சுமத்துகிற மாதிரி, இஸ்ரேலால் எதையுஞ் செய்ய முடியும்; எதையுஞ் செய்ய முடியும். இஸ்ரேலைக் கண்டித்து ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றினாலும் இரண்டு நாடுகள் மட்டும் எப்போதும் எதிர்த்து வாக்களிக்கும். ஒன்று இஸ்ரேல், மற்றது அமெரிக்கா. அமெரிக்காவிடம் வீற்றோ அதிகாரம் உண்டு. ஐ.நா. சபையால் மேற்கொண்டு எதுவும் செய்ய இயலாது.
அதேவேளை, இஸ்ரேலின் நடத்தை பற்றியோ பலஸ்தீன மக்களின் நியாயங்கள் பற்றியோ பிரித்தானிய ஊடகங்கள் செய்தியை வெளியிடுகிற விதம் இரண்டு தரப்பினரிடையிலான மோதல் என்ற விதமாகவோ அல்லது போனால் பயங்கரவாதிகட்கும் இஸ்ரேலிய அரசுக்கும் இடையிலான போராட்டம் என்ற விதமாகவோ தான் அமைகிறது. மோதல்களின் பின்னால் உள்ள நியாய, அநியாயங்கள் சொல்லப்படுவதில்லை. நூற்றுக் கணக்கானோர் வாழுங் குடியிருப்புக்களையும் பல உயிர்களையும் பலிகொள்ளும் இஸ்ரேலிய இராணுவமும் ஒரு சிறிய தாக்குதலை நடத்திய ஒரு போராளிக்குழுவும் ஏற்படுத்திய அழிவுகள் அவற்றின் அளவின் அடிப்படையில் அல்லாமல் ஒவ்வொன்றும் ஒரு சம்பவம் என்றவாறு ஒப்பிடப்படுகின்றன. இது தற்செயலானதல்ல. திட்டமிட்ட முறையிலேயே நடக்கிறது என்பதை அந்த நூல் தெளிவுபடுத்தியிருந்தது. நம்மிற் பலர் நம்புவது போலன்றி பி.பி.சி. நடுநிலையானதல்ல. தமிழோசையில் இலங்கைத் தமிழருக்கு அனுதாப விதமாகச் செய்திகள் வருவதால் பி.பி.சி. பற்றிய சாதகமான படிமம் ஒன்று தமிழரிடையே உருவாகிறது. அதே தமிழோசை மூலம் குறிப்பிட்ட சில நாடுகட்கெதிரான விஷமத்தனமான பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. பி.பி.சி.யின் கபடத்தைத் தோலுரித்துக் காட்டுவதானால் ஆங்கிலத்திற் கூறப்படுகிறவை பற்றித் தமிழிற் கேள்வி எழுப்ப வேண்டும். பி.பி.சி. தனது நடுநிலை வேடத்தைக் கவனமாகப் பேணும் விதமாக தமிழோசையில் இங்கிருந்தும் தமிழகத்திலிருந்தும் பலரைத் தொலைபேசி மூலம் செவ்வி காணுகிறது. யாராவது இதுவரை பி.பி.சி.யின் யோக்கியம் பற்றிப் பேசியுள்ளார்களா? பி.பி.சி.யில் தங்களது குரலைக் கேட்பதே பெரும் பாக்கியம் என்று நினைக்கிறோமானால், பி.பி.சி.யை விமர்சிப்பது தெய்வ நிந்தனை மாதிரி ஆகி விடாதா?

இன்று வரை, தமிழ் மக்களின் உரிமைகள் பற்றிய பிரச்சினை பயங்கரவாதப் பிரச்சினையாகப் பார்க்கப்படும் அளவுக்குத் தமிழ் மக்களின் அடிப்படையான அரசியற் பிரச்சினையாகப் பார்க்கப்பட்டுள்ளதா? தமிழ் மக்களிடையிலும் புலி ஆதரவு அல்லது புலி எதிர்ப்பு என்ற விதமாகவே விவாதங்கள் முன்னெடுக்கப்படுகிறதை நாம் கவனிக்கலாம். புலம் பெயர்ந்த தமிழரிடையே இப்போக்கு மிக அதிகம். அதைவிட, நிபுணர்கள் என்று தங்களை அடையாளப் படுத்திக் கொள்ளுகிற சிலர் பி.பி.சி.யைவிடப் பயங்கரமான நடுநிலை நாடகம் ஆடுகிறார்கள். திருகோணமலைச் சந்தையில் வெடித்த குண்டு விடுதலைப் புலிகள் வைத்தது என்று அருகிலிருந்து பார்த்தவர் போல எழுதியிருந்தார். இந்த மாதிரியான நிபுணர்கள் எல்லாரும் எங்கேயிருந்து தகவல்களைப் பெறுகிறார்கள் என்று ஊகிப்பது கடினமல்ல. எனினும் ,இது தான் இன்றைய பத்திரிகைத் தொழிலாகியுள்ளது. இதன் விளைவாக மக்கள் உண்மைகளை அறியும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

இன்று தென்னிலங்கையில் உள்ளவர்கட்கு வடக்கு - கிழக்கில் என்ன நடக்கிறது என்று தெரியுமா? தெற்கிலுள்ள தமிழ் மக்களிற் பலருமே அறியமாட்டார்கள். தொலைக்காட்சியும் அவசரச் செய்திகளை வழங்கும் வானொலியும் அருகி வரும் வாசிப்புப் பழக்கமும் தமிழ் மக்களின் சாபக்கேடாகியுள்ளன. உலகில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி அறிய அக்கறையில்லாதவர்கள் ஊடகத்துறையின் உச்ச நிலையில் உள்ளனர். பிரதான சிங்களச் செய்திப் பத்திரிகைகள் இன்று முழுமையாகப் பேரினவாதச் சிந்தனைக்குச் சேவகம் செய்கின்றன. அவர்கள் மக்களிடம் எப்படி உண்மைகளைக் கூற இயலும்? உண்மையை அறிய அக்கறையில்லாதவர்கள் தாம் விரும்பினாலும் மக்களிடம் உண்மையைச் சொல்ல இயலாது. அந்தளவுக்கு வரலாறுபற்றிய புனைவுகளும் குறுகிய மனப்பான்மையும் நமது ஊடகத்துறையில் ஆதிக்கம் செலுத்துகின்றன.

முதலில் நாங்கள் நம்ப விரும்புகிற பொய்களிலிருந்து நாங்கள் விடுபட வேண்டும். இந்தியாவைப் பற்றிய கனவுகளில் வாழுகிறவர்கள் இருக்கிறார்கள். மன்மோகன் சிங் ராஜபக்‌ஷவுக்கு எச்சரிக்கை விடுத்ததாலேயே திருகோணமலையில் வன்முறை கட்டுப்பாட்டுக்குள் வந்தது என்றும் இந்தியாவை மீறி இலங்கையில் யாரும் எதுவும் செய்ய இயலாது என்றும் இந்தியாவைப் பகைக்காமல் தமிழ் மக்கள் விடுதலையை வெல்ல வேண்டும் என்றும் பலவாறான கதைகளைக் கடந்த சில வாரங்களில் வாசித்திருக்கிறேன். சிங்கள மக்களுக்கு இந்தியாவைப் பற்றி வித்தியாசமான ஒரு படிமம் காட்டப்படுகிறது. சம்பூரில் குண்டு மாரி பெய்த போது இந்தியாவுடனான தொலைபேசித் தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருந்தனவா என்று நமது நிபுணர்கள் விரைவில் தெரியத் தருவார்கள் என நினைக்கிறேன்.

அமெரிக்கா பற்றியும் நோர்வே பற்றியும் நம்மிடையே கனவுகள் உள்ளன. இதிற் பரிதாபத்திற்குரியது ஏதென்றால் உலக வல்லரசுகளின் மேலாதிக்க பகடை ஆட்டத்தில் நம்மை வலிந்து ஈடுபடுத்துமாறு நாம் தூண்டப்படுகிறோம் என்பது தான். தமிழ் மக்களின் விடுதலை இந்தியாவையோ அமெரிக்காவையோ மகிழ்விப்பதால் கிட்டுவது அல்ல. நோர்வேயின் சமாதானப் பணி அமெரிக்காவின் மேலாதிக்க நோக்கங்களினின்றும் சுயாதீனமானதுமல்ல. விடுதலைப் புலிகளை ஒரேயடியாகக் கை கழுவுவதைத் தவிர்க்கவே நோர்வே பயன்படுகிறது. போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவானது ராஜதந்திர நாடகம் ஆடுகிற அளவுக்குப் போர் நிறுத்தத்தைக் கண்காணிக்கவோ உண்மைகளை அறிந்து எல்லோருக்கும் அறியத் தரவோ அக்கறைப் படுகிறது என நான் நம்பவில்லை.

நமது அரசியல் ஆய்வாளர்கள் சர்வதேசக் காய் நகர்த்தல்கள் பற்றிக் கவலைப்படுவதிலும் எந்த ஏகாதிபத்தியப் பூனைக்கு எந்த எலியைப் பிடித்து மணிகட்டுவிப்பது என்பதிலும் செலவழிக்கிற நேரத்திற் சிறு பகுதியைச் சர்வதேச ஊடகங்களின் அரசியல் பற்றித் தெளிவுபடுத்தப் பயன்படுத்தினால் நல்லது.

நாம் யாரையும் வலிந்து பகைக்க வேண்டியதில்லை. நண்பர்களல்லாதவர்களை எல்லாம் எதிரிகளாகக் கொள்ள வேண்டியதில்லை. என்றாலும் நம்முடைய கனவுகளையும் புனைவுகளையும் நாமே நம்பி ஏமாறும் அவலம் நமக்கு வேண்டாம். இந்த நாடு அந்நிய ஆதிக்கச் சக்திகளால் தூண்டப்படும் அபாயம் பற்றி நாம் அக்கறை காட்டுகிறோமா? பேரினவாத மேல்கொத்மலைத் திட்டத்தின் மூலம் ஜப்பான் தனது தேவைகளை நிறைவேற்றப் பார்க்கிறது. இந்தியா இலங்கையைச் சுற்றி வளைக்கும் தேவைக்காக சேது சமுத்திரத்தில் கால்வாய் வெட்டுகிறது. திருகோணமலை மக்களை நிர்க்கதிக்குள்ளாக்கித் துறைமுகத்தில் தமது ஆதிக்கத்தைச் செலுத்த இந்தியாவும் இன்னொரு புறம் அமெரிக்காவும் சூழ்ச்சிகளில் இறங்குகின்றன.

உலக நாடுகளின் அதாவது பெரிய வல்லரசுகளின், அனுதாபம் என்பது அவர்களது இலாப, நட்டக் கணக்குகளை வைத்தே வெளிப்படுத்தப்படுகிறது. அந்த அனுதாபத்தை வெல்லுகிற நோக்கத்தைத் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் முதன்மைப்படுத்துமானால் அப்போராட்டம் இன்னொரு அடிமைத் தனத்துக்கான போராட்டமாகவே முடியும்.

நேபாளத்தின் அரச வன்முறையைக் கண்டித்துக் கொண்டே அதற்கு மறைமுகமாக ஆதரவு வழங்கி வந்த அமெரிக்காவிடமிருந்தும் ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்தும் இந்தியாவிடமிருந்தும் நாம் எதை எதிர்பார்க்க இயலும்? சரத் பொன்சேகா கொலை முயற்சியைக் கண்டித்த ஆட்சியாளர்களும் ஐ.நா. பொதுச் செயலாளரும் அப்பாவி மக்கள் மீது குண்டெறிந்ததை ஏன் கண்டிக்கவில்லை? அவர்கள் அரசாங்கத்தைக் கொஞ்சங் கடிந்து கொண்டதாகத் தமிழ் மக்களும் மெச்சியதாகச் சிங்கள மக்களும் நம்புமாறு தூண்டப்படுகின்றனர். இது தான் நமது ஊடகங்களின் பரிதாபமான நிலை. இது தொடருமானால் அமைதியைக் குலைக்க அரசியல் வாதிகளோ அந்நிய விஷமக்காரர்களோ தேவையில்லை.

உலக அரசாங்கங்களையும் வல்லரசுகளையும் வைத்துக் கணித்தால், எந்த விடுதலைப் போராட்டமும் இன்று மிகவும் தனிமைப்பட்டே உள்ளது. விடுதலைக்காகப் போராடும் மக்களையும் விடுதலை இயக்கங்களையும் கொண்டு கணித்தால், நமக்கு உலகெங்கும் நண்பர்கள் உள்ளனர். அந்த உறவுகளை வலுப்படுத்துவதன் மூலமே ஒரு விடுதலை இயக்கம் ஒரு முழுமையான விடுதலை இயக்கமாக முகிழ்க்கிறது.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்குத் தென்னாபிரிக்காவின் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ், பலஸ்தீன விடுதலை இயக்கங்கள் போன்ற பல நட்புச் சக்திகள் இருந்தன. இன்றும் இந்தியாவின் தமிழரல்லாத மாக்ஸிய, லெனினிய வாதிகள் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்கின்றனர். பிலிப்பினிய கம்யூனிஸ்டுகள் ஆதரிக்கிறார்கள். இது தான் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள உகந்த தளம். இவை தான் நாம் உதறித் தள்ளக் கூடாத உறவுகள்.

***********************

நன்றி: தினக்குரல்.

Labels:


Get your own calendar

Links