« Home | புதிய தரிசனம் -ஓர் அறிமுகம். » | பொஸ்பரஸ் தொடங்கி ஒற்றைத் துப்பாக்கி வரை... » | சேது சமுத்திரம் கால்வாய்த்திட்டம் » | அமைதியை நோக்கிய சூடான் மக்களின் பயணம். » | ஆனையிறவும் அந்த நாட்களும்... » | மன்னார் மீனவரின் துயரம் » | சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கிறார்கள் » | கௌசல்யன் மருத்துவமனையின் பணி » | வணக்கம். »

ஜோன் பீற்றர்சனின் தலைக்குக்குறி

சிறிலங்காவின் சனாதிபதித் தேர்தல் என்பது கட்சிகளை மட்டுமல்ல தேர்தல் ஆணையாளர், சட்டமா அதிபர் போன்ற அதிகாரிகளை மட்டுமல்ல வேறு பலரையும் விவகாரத்தில் மாட்டிவிடும் ஒரு விடயமாக உருவெடுத்துள்ளது. சிங்களத்தின் இரண்டு பிரதான கட்சி களுமே சனாதிபதித் தேர்தல் நடத்தப்படுவது எப்போது? என்பதில் நேரெதிரான கருத்துக்களோடு களமிறங்கியிருப்பதும், இருதரப்பும் தமக்குத் தமக்கு ஊடகங்கள் ஆள் அம்பு சேனைகளைத் திரட்டிப் பரப்புரைப்போரை நடத்துவதும்தான் இந்த நிலைமைக்குக் காரணமாகும்.

ஏதோ ஒரு தரப்பின் நிலைப்பாட்டை அண்மித்து கருத்துத் தெரிவிப்பவர்கள் மறுதரப்பினதும் அதன் ஆதரவு ஊடகங்களினதும் ஏச்சுக்கும் வசைபாடலுக்கும் உள்ளாக நேரிடுகிறது. இந்த வகையில் இந்த விவகாரத்தில் சிக்கியுள்ள குறிப்பிடத்தக்கவர்கள் நோர்வே வெளிவிவகார அமைச்சர் ஜோன் பீற்றர்சனும் அவர் செயலாளராக இருக்கும் சர்வதேச ஜனநாயக சங்கம் என்ற அமைப்பு மாகும்.

"முன்னால் போனால் கடிக்கும் பின்னால் சென்றால் உதைக்கும்". சட்டத்தை குறித்து இவ்வாறு சொல்லுவார்கள். சிறிலங்கா சனாதிபதியின் பதவிக்காலம் எப்போது முடிவடைகிறது? என்ற கேள்விக்கு இரண்டு கட்சிகளுமே அரசியலமைப்புச் சட்டத்தை தமக்கு வசதியானபடி பொருள் கோடல் செய்து கொண்டு அதற்கேற்றாற்போல தேர்தல் திகதி இந்தாண்டில்தான், இல்லை அடுத்தாண்டில்தான் எனச் சாதிக்கின்றன.

இந்தச் சூழலில், தனது அமைப்பில் உறுப்பினராக இருக்கும் ரணில் விக்கிரமசிங்கவின் நிலைப்பாட்டை ஆதரித்து 'சர்வதேச சனநாயக சங்கம்' தனது ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி விட்டது. அதுபற்றி சங்கத்தின் செயலாளரான ஜோன் பீற்றர்சனும் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்து விட்டார். "மக்களின் இறைமையை மதித்து சிறிலங்காவில் இவ்வருடமே சனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும்" என்பதே சர்வதேச சனநாயக சங்கமும், அதன் தலைவர் ஜோன் ஹாவர்ட் (அவுஸ்திரேலியப் பிரதமர்) ,செயலாளரான நோர்வே வெளிவிவகார அமைச்சர் ஜோன் பீற்றர்சன் ஆகியோரும் வெளியிட்ட கருத்து. பின்னர் இக்கருத்தினை அமெரிக்க சனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்கூட வழிமொழிந்திருந்தார்.

பெரும்பாலும் மேற்குலகம் சார்ந்து சிந்திக்கும் ஐக்கிய தேசியக் கட்சி இதனைத் தலைக்கு மேல் தூக்கிக் கொண்டாடியது. அதனது ஊடகப்பிரிவு இந்த விடயத்தை அறிக்கையாக்கி அதற்கு பெருமெடுப்பிலான முக்கியத்துவமும் கொடுத்து விளம்பரப்படுத்தியது. ஜோர்ச் புஷ் உடனும் ஹாவர்ட் மற்றும் பீற்றர்சனுடனும் ரணில் விக்கிரமசிங்க பெருமைபொங்க நின்று சிரிக்கும், கைகுலுக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு மகிழ்ந்தது. இங்கேதான் தொடங்கியது சிக்கல்.

உள்நாட்டுத் தேர்தல் விவகாரத்துக்கு வெளிநாட்டு அழுத்தத்தை ரணில் கொண்டுவர முனைவதை வேரிலேயே களைந்து விடமுனையும் ஆளுங்கட்சியோ பிரச்சினையைப் பூதாகாரப்படுத்தியது. இது சிறிலங்காவின் இறைமையை மீறும் செயல் எனவும், சர்வதேச சனநாயக சங்கம் என்பது வலதுசாரிக்கட்சிகளை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்தும் ஆக 146 அரசியல்வாதிகளின் அமைப்பே தவிர இது நாடுகளின் அமைப்பல்ல எனவும், இதன் செயலாளராக இருந்துகொண்டு சனாதிபதித் தேர்தல் 2005 இல் நடத்தப்படவேண்டுமென ஒரு கட்சிக்கு சார்பாகக் கருத்துவெளியிட்ட நோர்வேயின் வெளிவிவகார அமைச்சர் ஜோன் பீற்றர்சன் இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் ஏற்பாட்டாளர், அனுசரணையாளராக பங்குபற்றத் தகுதியானவரா? எனவும் மும்முனைகளில் தனது பதில் கருத்துப் போரை சிறிலங்கா சுதந்திரக்கட்சி ஆரம்பித்துவிட்டது.

இதில் மூன்றாவதாக முன்வைக்கப்பட்ட நோர்வேயின் அனுசரணையாளர் பாத்திரத்தின் மீதான சந்தேகம் கொள்ளல் என்பது மிகப் பாரதூரமான ஒரு விடயமாகும். எவ்வாறெனில் இன்று "கட்சி சார்ந்து செயற்படுபவர்" என பீற்றர்சன் அவர்களை வசைபாடுகின்ற கட்சியானது, நாளை இனப்பிரச்சினை விவகாரத்தில் எட்டப்படும் ஏதாவது உடன்பாட்டின் பின்பும் "அனுசரணையாளர்கள் புலிகள் சார்ந்து செயற்பட்டார்கள்" என்று சொல்லிவிட அதிக நேரம் எடுக்காது. இந்த வகையிலான கருத்துக்கள் பல சந்தர்ப்பங்களில் அரசாங்கத்தின் பின்வரிசைகளில் இருந்து வெளிவந்தும் இருக்கின்றன. ஆனால் அவை அப்போதைய அரசியல் கள நிலவரம் காரணமாக பூதாகாரப்படுத்தப்படவில்லை. அல்லது முன்னிலை விவகாரமாக முன்னிறுத்தப்படவில்லை.

இது ஒரு புறம் இருக்க, சிறிலங்காவின் தேர்தல் ஆணையாளர் "அரசியல் அமைப்பின் படி சனாதிபதித் தேர்தல் இவ்வருடமே நடத்தப்படுதல் வேண்டும்" என்ற தனது முடிவை கசியவிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அம்மையாரின் அரசாங்கத்தின் மூத்த அமைச்சர் ஒருவருக்கு ஆணையாளரின் இந்த முடிவு அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் அதனால் அரசாங்கத்திற்குள் சலசலப்புக்கள் எழுந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. இதன் விளைவே சிறிலங்கா சுதந்திரக்கட்சி தனது சனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்ய முனைந்துள்ள அல்லது தெரிவு செய்துள்ளதாகும். ஆனால் தேர்தல் ஆணையாளரின் இந்த முடிவை ஏற்றுக்கொள்வதற்கு சுதந்திரக்கட்சி தயாராக இல்லை. அரசியல் அமைப்புக்கு மாறாக பிழையான முடிவை தேர்தல் ஆணையாளர் எடுத்தால் தாம் உயர் நீதிமன்றத்திற்குச் செல்வோம் என அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் கர்ச்சிக்கிறார்கள். ஆனால் அரசியலமைப்பின்படி தேர்தல் திகதியை நிர்ணயிக்கும் பொறுப்பு தேர்தல் ஆணையாளருக்குத்தான் பொறுப்பளிக்கப்பட்டுள்ளது என்பதனை சுதந்திரக்கட்சி திரும்பத் திரும்ப வலியுறுத்திவரும் சமநேரத்தில் தேர்தல் அடுத்த வருடமே நடத்தப்படும் எனவும் வலியுறுத்தி தெரிவித்தும் வருகிறது.

இது தேர்தல் ஆணையாளரை அச்சுறுத்துவதாக ஆகாதா? இத்தனைக்கும் தேர்தல் ஆணையாளர் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்றபிறகே இந்த முடிவுக்கு வந்திருப்பதாக தெரிகிறது. சட்டமா அதிபரின் காரியாலயத்திற்குச் சென்றிருந்த தேர்தல் ஆணையாளர் அவருடன் நீண்ட நேரம் தனிமையில் ஆலோசனை கலந்ததாக சில வாரங்களுக்கு முன்பு தெரிவிக்கப்பட்டிருந்தது இங்கு கவனிக்கவேண்டியதாகும். அப்படியாயின், தனக்கு சாதகமில்லாத கருத்தையோ முடிவையோ வெளியிடுபவர்களை தூசிப்பதும், விமர்சிப்பதும், நீதிமன்றத்திற்கு இழுப்பதுவும்தான் சுதந்திரக்கட்சியின் தந்திரோபாயமாக இருக்கிறதா? (இனப்பிரச்சினை விவகாரத்திலும் இந்த நிலைப்பாடு ஒட்டுமொத்த சிங்கள அரசியல் சமூகத்தாலும் பேரினவாதிகளாலும் பின்பற்றப்படுவது கவனிக்கத் தக்கது) ஏற்கனவே பிரதம நிதியரசர்மீது பலவிதமான குற்றச்சாட்டுக்களும் பல தரப்பாலும் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் ஆணையாளரை உயர் நீதிமன்றின் முன் நிறுத்துவது என்பது இன்னும் நெருடலான சூழலை உருவாக்கக் கூடும். இந்த எல்லாப்பொல்லாப்புக்களிலும் இருந்து தப்பிக்கொள்வதற்கு சுதந்திரக்கட்சிக்கும் அதன் அரசாங்கத்திற்கும் இருக்கக்கூடிய குறுக்குவழி நாட்டைப் பதற்றத்துக்குள்ளாக்குவதே.

இதன் ஒரு அங்கமாக நோர்வேயின் அனுசரணைப் பணியின் நேர்மைத்தன்மை பற்றிய ஒரு சுற்று விவாதம் கொழும்பு அரசியற்களத்தில் எழக்கூடும். அனுசரணையாளர்களை மாற்றவேண்டும் என்று முன்னர் எழுப்பப்பட்ட குரல்களுக்கு மீள உற்சாகமூட்டப்படவும் கூடும். ஏற்கனவே தொந்துப்பறியிலுள்ள சமாதான முயற்சிகளையும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் இந்தக் கூச்சல், குழப்பங்கள் இன்னும் பலவீனப்படுத்திவிடவும் கூடும். ஆனால் இந்தக் குழப்பங்கள் அனைத்துமே அம்மையாருக்குத் தேவையாக உள்ளன. எனவே அவை நிகழ்வதற்கான ஏதுக்கள் அதிகமாகவே உள்ளன.

பு. சத்தியமூர்த்தி

நன்றி: வெள்ளிநாதம்.

Labels: ,

Comments


Get your own calendar

  • வன்னியன் commented:
    நாணயமானவரே,கவ்விப் பிடிச்சியள் பாருங்கோ ஒரு பிடி.பேராசிரியர் சொல்கிற அரசியல், ஊழல் ஆராயப...

    Anonymous commented:
    எழுதிக்கொள்வது: நாணயமானவர்//கருணாநிதியின் அரசியலை மட்டுமல்ல, தமிழ் மக்கள் நம்ப வேண்டும் என...

    வெற்றி commented:
    வன்னி,பதிவுக்கு மிக்க நன்றி.

    Anonymous commented:
    //1930 களில் ஜேர்மனியில் உருவான யூத இனவிரோதம் பின்பு கம்யூனிச/ இடதுசாரி விரோதமாகி இறுதியில...

    வன்னியன் commented:
    வருகை தந்து கருத்துத் தெரிவித்தவர்களுக்கு நன்றி.

    Anonymous commented:
    வைகோ பிர்பாகரனின் தமிழக கொள்கை பரப்பு செயளாளர், வைக்கோ அவரின் கடைமை செய்கிறார், தமிழகத்தில...

    Anonymous commented:
    நல்ல கட்டுரை.பதிந்ததற்கு நன்றி.

Links