« Home | அமைதியை நோக்கிய சூடான் மக்களின் பயணம். » | ஆனையிறவும் அந்த நாட்களும்... » | மன்னார் மீனவரின் துயரம் » | சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கிறார்கள் » | கௌசல்யன் மருத்துவமனையின் பணி » | வணக்கம். »

சேது சமுத்திரம் கால்வாய்த்திட்டம்

கோகர்ணனின் மறுபக்கம்.

சேது சமுத்திரம் கால்வாய்த்திட்டத்திற்கான அடிக்கல் இம்மாதம் நாட்டப்பட்டுள்ளது. ஆயினும், அதைத்தடுத்து நிறுத்த இன்னமும் நாட் கடந்துவிடவில்லை. இப்போது தமிழக மீனவர்கள் தமது எதிர்ப்பைத் தெரிவித்துப் போராடத் தொடங்கியிருக்கிறார்கள். இத் திட்டம் மீனவர்களை மட்டும் பாதிக்கும் திட்டமல்ல. தமிழகத்தின் மண்வளத்தையும் பாதிக்கும் வாய்ப்புகள் உண்டு. எனினும், நிபுணர்கள் எனப்படுவோர் கூலிப்படைகள் போலவே செயற்படுகின்றனர். நீதிமன்றத்தில் எதிரெதிரான கருத்துகளை வலியுறுத்துவதற்கு வழக்கறிஞர்கள் நிபுணர்களைப் பயன்படுத்துகின்றனர். விஞ்ஞானத்தின் பேராலும் தமது தகைமைகளைக் காட்டி மற்றவர்களை நம்பவைக்கும் வல்லமையாலும் நிபுணர்கள் தமது தரப்புக்கு ஏற்றவிதமாகத் தகவல்களைத் தெரிந்து விளக்கங்களைத் தருகிறார்கள்.

பெரிய அணைக்கட்டுகளால் ஏற்படும் தீய விளைவுகள் பற்றிய விஞ்ஞான அடிப்படையிலான உண்மைகள் கடந்த இருபது, முப்பது வருடங்களாகவே தெரியவந்துள்ள போதும், அவற்றை அலட்சியம் செய்து பெரிய அணைக்கட்டுகளைக் கட்டுவதற்கு ஆதரவாக பேசுகிற புவியமைப்பியல் நிபுணர்கள் இருக்கிறார்கள். இன்று அளவு மீறிய எரிபொருள் நகர்வால் புவி மண்டலம் வெப்பமடைந்து வருகிறது என்பதற்கான சான்றுகள் போதியளவுக்கும் மேலாகக் கிடைத்திருக்கிற போதும், அந்த ஆதாரங்கள் போதியனவல்ல என்று வாதிக்கவும் ஒரு நிபுணர் கூட்டம் இருக்கிறது. மரபணு மாற்றத்தின் மூலம் உருவாக்கப்படும் பயிர்வகைகளால் ஏற்படக்கூடிய அழிவுகள் பற்றிய எச்சரிக்கைகளை மீறி அவ்வாறான தாவரங்கள் வணிக நோக்கில் மூன்றாமுலக நாடுகளிற் பயிரிடப்படுகின்றன. இது பற்றிப் பலவேறு நோக்குகளில் எச்சரிக்கப்பட்டுள்ள போதும், விதைகளை உற்பத்தி செய்து அவற்றின் மீதான காப்புரிமை மூலம் பணத்தைக் குவிக்கும் பொன்ஸான்றோ போன்ற கம்பனிகளின் சார்பாக விஞ்ஞான ரீதியான நியாயங்களை வழங்கவும் நிபுணர்கள் இருக்கிறார்கள்.

விஞ்ஞானத்தைப் பற்றி மக்கள் நம்பிக்கை இழப்பதற்கும் நிபுணர்கள் பற்றி மக்களின் நிச்சயமின்மை கூடிக்கொண்டு வருவதற்கும் பல நிபுணர்களின் மேற்குறிப்பிட்டவாறான நடவடிக்கைகள் காரணமாக இருந்து வருகின்றன. எனவே, மக்கள் நேர்மையான நிபுணர்களையும் நேர்மையற்றோரையும் ஒரேவிதமாகவே நோக்குகின்றனர். இது அடிப்படையில் நியாயமானதும் நன்மையானதும் என்றே நினைக்கிறேன். நிபுணர்கள் மக்களைப் பாதிக்கும் விடயங்கள் பற்றிப் பேசும் போது மக்களுக்கு விளங்கக் கூடிய மொழியிற் பேசுவது மட்டுமில்லாமல் அவர்கள் சொல்கிற ஒவ்வொரு விடயத்தையும் மக்கள் ஆராய்ந்து அலசி விசாரணைக்கு உட்படுத்தக் கூடிய விதமாகவும் முன்வைக்கப் பழக வேண்டும். ஒருவர் நிபுணர் என்பதால் நிபுணத்துவம் இல்லாதவர்கள் அவரைக் கேள்விக்கு உட்படுத்தக் கூடாது என்பதில் நியாயமில்லை. இந்த விதமான போக்குக்கு முடிவு காணப்பட வேண்டும்.

இன ஒழிப்புப் போரை விட வேறெதைப் பற்றியுமே சிந்திக்க நேரமற்றுக் கிடந்த பேரினவாத ஆட்சிகள் சேது சமுத்திரத்திட்டம் பற்றி எதுவிதமான அக்கறையும் காட்டவில்லை. திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்ற அறிவிப்பின் பின்பு கூட அரசாங்கமோ பிரதான எதிர்க்கட்சியோ அதையிட்டுக் கவலைகாட்டவில்லை. ஜே.வி.பி.யும் தமிழ் மக்களின் காவலர்களாக அணிவகுத்து நிற்கிற தலைமைகளும் கூட இந்தத் திட்டத்தினால் இலங்கைக்கு ஏற்படக் கூடிய தீய விளைவுகள் பற்றி மௌனஞ் சாதிக்கின்றனர். இந்த நாட்டைப்பற்றிய அக்கறையீனத்தில் நமது அரசியல் தலைமைகளிடையே உள்ள ஒற்றுமையில் ஒரு சிறுபகுதி இந்த நாட்டு மக்களின் நலன் பேணும் விடயங்களிற் காணப்பட்டால் எவ்வளவு அருமையாக இருக்கும்?

இலங்கைக் கடற்படைத் தலைமையினரோ, இந்தத் திட்டத்தின் மூலம் இலங்கையின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உட்படுகிறது என்று அரசாங்கத்திடம் நெருக்கியுள்ளனர். கப்பற்போக்குவரத்து, துறைமுக விருத்தி போன்ற துறைகளில் உள்ள கவலைகள் அண்மைக் காலங்களில் வெளிவெளியாகப் பேசப்பட்டாலும் போதியளவுக்கு அரசாங்கத்தின் மீதோ பிரதான எதிர்க்கட்சி மீதோ வற்புறுத்தல்கட்கான சான்றுகள் இல்லை. இது நாட்டின் பொருளாதாரத்தையும் நாட்டு மக்களின் ஒரு பகுதியினரது தொழிலையும் நீண்ட காலத்தில் நாட்டின் கணிசமான ஒரு பகுதியின் நில, நீர் வளங்களையும் பாதிக்கக் கூடிய பிரச்சினைகள் என்பது பற்றி உணர இயலாத அரசியற் தலைமைகள் தானா நமக்குக் கிடைத்துள்ளன?

அண்மையில் சேது சமுத்திரத் திட்டம் பற்றி மூன்று `தமிழ் நிபுணர்கள்' கூறியிருந்த விடயங்களை இணையத் தளத்திலிருந்து மீட்டெடுத்துப் பார்த்த போது, நமது அறிஞர்களின் அவல நிலையை எண்ணிப் பெருமூச்சு விட்டேன்.

சேது சமுத்திரத் திட்டம் இலங்கையின் வட, வடமேற்குக் கரையில் வரலாற்றுப் பெருமைமிக்க துறைமுகங்கட்குப் புத்துயிரூட்டும் என்றும் அதன் விளைவாக இலங்கைக்கு நன்மையே ஒழிய தீமை இல்லை என்று அடித்துரைத்திருக்கிறார் ஒரு மூத்த தமிழ்ப் பேராசிரியர். அவரது சிறப்புத் துறை இடைக்கால இலங்கை வரலாறு.

இன்னொரு நிபுணர் சமூகவியலாளர். உலக வங்கிக்காகப் பணியாற்றுகிற தமிழர். இந்தியாவின் சேது சமுத்திரத் திட்டம் நனவாகுமாயின் வட இலங்கைக்கும் தென்னிந்தியாவுக்குமிடையே கடல் வழி வணிகம் செழித்த ஒரு மகத்தான் காலம் மீளும் என்று கனவு காணுகிறார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியலாளர் ஒருவர், கால்வாயை அமைக்க நீரிணையை ஆழப்படுத்தினால் யாழ்ப்பாண மேற்குக் கரையிற் கணிசமான பகுதி மண்ணரிப்புக்கு ஆளாகும் என்ற அச்சம் அடிப்படையற்றது என்றும், கால்வாய் இலங்கைக் கரையினின்று வெகுதொலைவிலுள்ளதால் எதுவித பாதிப்புக்கும் இடமில்லை என்றும் கூறுகிறார். இந்த அறிஞருக்கு திரவங்களின் பாய்ச்சல் பற்றியும், கடல் உயிரியல் பற்றியும், புவியமைப்பியல் பற்றியும் எவ்வளவு அறிவு உண்டு என்று சொல்வது கடினம். எனினும், இந்த அறிஞர் சில காலம் முன்பு சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்து பேசியவர் என்பது கவனிக்கத்தக்கது.

இந்த நிபுணர்களில் எவருக்கும் சேது சமுத்திரத்தின் பாதிப்புகள் பற்றிய கவலைகளுடன் தொடர்பான துறைகளில் அடிப்படையான அறிவு கூட இருக்கிறதா என்பது முக்கியமான ஒரு கேள்வி. எனினும், பேராசிரியர், கலாநிதி, விரிவுரையாளர் என்ற மக்கள் பதவிகள் அவர்கள் எந்தத் துறை பற்றியும் நிபுணர்கள் போலப் பேச இடமளிக்கிறது. அவர்கள் பேசுவது இந்திய மேலாதிக்கத்துக்கு உடன்பாடானது என்பதால் அங்கே அவர்களது கருத்துகட்கு முக்கியத்துவம் கிட்டுகிறது. அதன்மூலம் இந்தியத் தமிழரை ஏய்க்க இயலுமாகிறது.

இப்படிப்பட்ட நிபுணர்களை விட ஒரு சராசரி சினிமா கதாநாயகனோ கதாநாயகியோ அறிவு மிகுந்த விடைகளைத் தர வாய்ப்பு உண்டு.

நமது பிரச்சினை எங்கே உள்ளதென்றால் மக்களைப் பாதிக்கிற விடயங்கள் பற்றிய விவாதங்கள் குறுகிய அரசியல் நோக்கங்களின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகின்றன. "கஞ்சி குடிப்பதற்கிலார் அதன் காரணம் இவையென்னும் அறிவுமிலார்" என்று பாரதி எண்பது ஆண்டுகள் மனம்நொந்த நிலையிலேயே மூன்றாமுலகின் மக்கள் உள்ளனர். காரணங்களை மக்கள் அறியாத வரை மக்களை ஏய்க்கிற அரசியல்வாதிகளுக்கும், பணமுதலைகட்கும், பகல்வேடக்கார ஆன்மீகவாதிகட்கும், அறிஞர்கள் என்ற பேரில் உலா வருகிற சந்தர்ப்பவாதிகட்கும் நல்ல வேட்டை தான்.

பிரச்சினைகள் பற்றிய சிந்தனைகள் மக்கள் மத்தியில் முளைவிட வேண்டுமானால், பிரச்சினைகள் பற்றி விரிவாகப் பேசவும் விவாதிக்கவும் தேவை உண்டு. வெகுசனங்கள் நடுவே பிரசாரம் முன்னெடுக்கப்படும் தேவை உண்டு. போராட்டங்களின் போக்கிலேயே சமூகம் விழிப்படைகிறது.

மக்களின் பங்கு பற்றுதல் வாக்குச் சாவடிக்கும் கட்சிக் கூட்டங்களுக்கும் அப்பால் வளருவதை விருப்பாத ஒரு அரசியல் மரபினின்று மக்கள் தம்மைத் தாமே விடுவிக்க வேண்டும். இதில் ஊடகங்கட்கு ஒரு பலனுள்ள பங்குண்டு.

சேது சமுத்திரத் திட்டத்தின் பாதிப்புகள் பற்றிய விவாதங்கள் அறிஞர்களது அபிப்பிராய வாக்கெடுப்புகளாக இல்லாமல் விஞ்ஞான, சமூகவியல் அடிப்படையிலான ஆழமான ஆய்வுகளாக முன்னெடுக்கப்படுவது அவசியம். நம் ஊடகங்கள் உதவுமா?

கோகர்ணனின் மறுபக்கம்.
நன்றி-தினக்குரல்.

Labels: ,