இலங்கைத் தேர்தலும் தமிழர்களும்.
வடக்கு-கிழக்கு மக்களின் பகிஷ்கரிப்பால் மிகவும் கசந்து போனவர்கள் ரணில் விக்கிரமசிங்கவும் அவருடைய கட்சியினரும் மட்டுமல்ல. விடுதலைப் புலிகள் அவர்கட்கு எந்த விதமான கடப்பாடும் உடையவர்கள் அல்ல என்பதை அவர்கள் நினைவிலிருத்த வேண்டும். கருணா குழுவினரின் விலகலும் விடுதலைப் புலிகளுடனான மோதலும் ரணில் விக்கிரமசிங்கவின் உபயம் என்பதை நவீன் திஸாநாயக்கவும் மிலிந்த மொறகொடவும் அம்பலமாக்கிய பின்பு, ரணில் விக்கிரமசிங்கவால் மனவருத்தம் தெரிவிக்க முடிந்ததேயொழிய மறுக்க முடியவில்லை. ஒரு முறைக்கும் பலமுறை அவசரகாலச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டபோதெல்லாம் தவறாமல் ஆதரித்துக் கையுயர்த்திய கட்சி தான் யு.என்.பி. அக் கட்சியினர் எந்த முகத்தைக் கொண்டு தமிழ் மக்கள் தங்களைக் கைவிட்டு விட்டனர் என்று சொல்ல முடியும்?
ஆறுமுகன் தொண்டமானுக்கு நாட்டை ரணில் ஆண்டாலென்ன ராஜபக்ஷ ஆண்டாலென்ன, அவர் கேட்கிற கப்பத்தை எந்த விதத்திலாவது தந்துவிட்டால் போதும், பாராளுமன்றத்தில் போதியளவு ஆசனங்களைப் பிடிப்பதற்கு மேலாக அவருக்கு எந்தவிதமான கொள்கைப் பிரச்சினையும் இல்லை. ரவூஃப் ஹக்கீம் முதலாக கிழக்கு மாகாண முஸ்லிம் அரசியல் கழைக்கூத்தாடிகள் எல்லாருக்கும் இந்தத் தேர்தல் முடிவைத் தமிழ் மக்களின் பகிஷ்கரிப்பு இப்படி மாற்றிவிட்டதே என்ற கவலைக்கு நியாயமில்லை. எல்லாருக்கும் எப்படி எப்போது மனம் மாறுகிறது என்பதை அறிய வேண்டின் திரை மறைவில் எத்தனை தரகு வேலைகளும் பேரங்களும் நடக்கின்றன என்பதை நாம் அறிய வேண்டும்.
விடுதலைப் புலிகளை விடத் தீவிர விடுதலைப் புலியாகத் தன்னைக் காட்டிக் கொண்டு வருகிற சந்திரசேகரனுக்கு தேர்தலைப் பற்றி தாம் அக்கறையில்லை என்ற விடுதலைப் புலிகளின் பிரகடனம் பெரிய பிரச்சினையாயிருக்கவில்லை. என்றாலும் யு.என்.பி.யை ஆதரிக்கின்ற அவரது முடிவை ஒரு அரசியல் நெருக்கடி ஆக்குகிற விதமாக நவீன் திஸாநாயக்க பேசிய பின்பு, அதிலிருந்து தன்னை மீட்கும் நோக்கத்துடன் வன்னிக்குத் தூது போனார்.
வெறுங்கையுடன் மீண்டதும் போதாமல், இத்தேர்தலில் இலங்கையின் தமிழ் மக்கள் எவருக்கும் அக்கறை இருக்க நியாயமில்லை என்ற நிலைப்பாடு உறுதியாகத் தெரிவிக்கப்பட்ட பின்பு மேலும் சங்கடமாகி விட்டது. எனவே, அந்தத் தகவலை மறுத்ததும் போதாமல், தான் யு.என்.பி.யை ஆதரிப்பதை விடுதலைப் புலிகள் வரவேற்கிறதாகவும் ஒரு கதையைப் பரப்பினார். கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் என்பார்கள். சந்திரசேகரனுடைய புளுகு அதை விட வேகமாக விடுதலைப் புலிகளின் முழுமையான புறக்கணிப்பின் மூலம் அம்பலமாகிவிட்டது.
சில தமிழர் தேசியக் கூட்டணிப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடைசிவரை ஒரு நப்பாசை இருந்தது. எனினும், பதினான்காம் திகதியுடன் தமிழ்த் தலைவர்கள் யாரையும் ஆதரிப்பதில்லை என்ற முடிவை அதிகார பூர்வமாக வெளியிட்ட பின்பு இவர்களுக்குச் சங்கடமாகிவிட்டது.
முற்குறிப்பிட்டவர்களுடைய ஆதங்கங்கள் எல்லாம் ஏதோ தேவை கருதி நேரடியாக யு.என்.பி.யு.டன் தங்கள் நலன்களை நெருக்கமாகப் பிணைத்துக் கொண்டவர்களுடைய கவலைகளுடன் தொடர்புடையவை. தெற்கில் வாழ்கின்ற தமிழ் மக்களில் ஒரு பகுதியினரிடையே ஜே.வி.பி. பற்றியும் ஹெல உறுமய பற்றியுமான அச்சங் காரணமாக யு.என்.பி. பற்றியும் குறிப்பாக ரணில் விக்கிரமசிங்க பற்றியுமான நம்பிக்கை அல்லது ஏதோ வகையான எதிர்பார்ப்பு வளர்ந்துள்ளது. யு.என்.பி.யின் பேரினவாதத்தின் நீசத்தனம் இன்னமும் மாறவில்லை என்பதும் யு.என்.பி.யினுள்ளே இருக்கிற சில பேரினவாதிகள் நவீன் திஸாநாயக்கவை விட மோசமான இனத்துவேசிகள் என்பதும் ரணில் விக்கிரமசிங்கவின் ஆசிகளுடனேயே விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைகள் வேண்டுமென்று இழுத்தடிக்கப்பட்டு முடிவுகள் செயலற்றுப் போயின என்பதும் சில வேளைகளில் நம் நினைவுக்கு வருவதில்லை. 1958, 1977, 1983 ஆகிய ஆண்டுகளில் இனக் கலவரங்களில் யு.என்.பி.யின் பங்கு பெரியது. தேசிய இனப்பிரச்சினை திட்டமிட்டே போராக்கப்பட்டது யு.என்.பி.யின் கீழேயே தான்.
சந்திரிகா குமாரதுங்கவோ புதிய சனாதிபதி ராஜபக்ஷவோ எவ்வகையிலும் ரணில் விக்கிரமசிங்கவை விடத் தமிழ் மக்களின் தேவைகள் பற்றியோ உரிமைகள் பற்றியோ பாதுகாப்புப் பற்றியோ பெரிய அக்கறை கொண்ட தலைவர்களல்ல. பேரினவாதமும் முதலாளி வர்க்க நலன்களுமே இவர்கள் எல்லாரையும் வழிநடத்துகின்றன. எனவேதான், இந்தத் தேர்தல் தமிழ்த் தேசிய இனத்தைப் பொறுத்தவரை, எந்தவிதமான பயனும் முக்கியத்துவமும் இல்லாதது என்ற நிலைப்பாடு சரியானது. அதிலும் முக்கியமாக முஸ்லிம்களுக்கும் மலையகத் தமிழ் மக்களுக்குங் கூட யார் சனாதிபதியானாலும் அவர்கள் முகங்கொடுக்கின்ற பிரச்சினைகள் தீரப்போவதில்லை என்று துணிந்து கூறியிருக்க முடியும். சிங்கள மக்களும் எதுவித நன்மையும் காணப்போவதில்லை.
இன்னொரு கோணத்திலிருந்து பார்த்தால், ராஜபக்ஷவைப் பதவிக்குக் கொண்டு வந்தளவு சிறிய பெரும்பான்மையுடன் தமிழ் மக்களின் ஆதரவுடனோ இல்லாமலோ , ரணில் விக்கிரமசிங்க வென்றிருந்தால், மகிந்த ராஜபக்ஷவின் பலவீனமான வெற்றி பற்றி அவர் சொல்வதுபோல், சிங்கள மக்களின் ஆதரவு இல்லாமல் அவர் பெற்ற வெற்றி பற்றி மறுதரப்பினர் பேசியிருக்க முடியாதா? தேசிய இனப்பிரச்சினையின் தீர்வுக்கு அந்தப் பலவீனமான வெற்றி ஒரு முட்டுக்கட்டையாகியிராதா? அநேகமாகத் தமிழ் மக்களுக்குத் திருப்தியில்லாத ஒரு தீர்வைத் திணிப்பதற்கு யு.என்.பி. சிங்கள மக்களின் ஆதரவின்மையை ஒரு வசதியாக்கியிருக்கும். இந்தோனேசியாவின் அச்சே மாகாண விடுதலை இயக்கத்தை நிராயுதபாணியாக்கி ஒரு தீர்வைத் திணித்தது போல இங்கேயும் செய்வதுதான் பேரினவாதிகளதும், அவர்கள் அந்நிய எசமானர்களதும் எண்ணம். அதில் தமிழ் மக்கள் மண்விழுத்தி விட்டார்கள்.
இந்தப் பகிஷ்கரிப்பின் வெற்றியைப் பஃப்ரல் என்கிற `சுதந்திரமான தேர்தல்' என்.ஜி.ஓ.வால் சீரணிக்கமுடியவில்லை. அதன் சார்பில் பேசிய பாக்கியசோதி சரவணமுத்து வடக்கில் வன்முறை மூலமே பகிஷ்கரிப்பு இயலுமானது என்ற தொனிப்படப் பேசியிருக்கிறார். அவர் மட்டுமன்றி, அண்மைக் காலங்களில் விடுதலைப் புலிகளுக்குக் கொஞ்சம் அனுதாபமாகப் பேசி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு திரட்ட முயன்ற என்.ஜி.ஓ.நிறுவனங்களைச் சேர்ந்தோரும் வடக்கு, கிழக்கில் மக்கள் வாக்களிக்காததை சனநாயக உரிமை மறுப்பு என்று பேசியிருக்கிறார்கள்.
யாழ்ப்பாணத்தில் தபால் வாக்களிப்பே மிகக் குறைந்த அளவில் நடந்துள்ளது. இது மிரட்டல் மூலம் நடத்தக்கூடிய ஒரு புறக்கணிப்பல்ல. தமிழ் மக்கள் நிர்ப்பந்தம் இல்லாமல் வாக்களிக்கக்கூடிய விதமாக அரச கட்டுப்பாட்டிலிருக்கிற பல வேறு நகரங்களிலும் தமிழ் மக்கள் பங்குபற்றாமலே இருந்துள்ளனர். எனவே, தமிழ் மக்களின் சனநாயக உரிமை மறுக்கப்பட்டது என்பது உண்மையல்ல. மாறாக, அது மிகச் சரியாகவும், முழுமையாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதே உண்மை.
மதச் சுதந்திரம் என்பது எந்த ஒரு மதத்தையும் பின்பற்றும் சுதந்திரம் மட்டுமல்ல, அது எந்த ஒரு மதத்தையும் பின்பற்றாமல் இருக்கும் சுதந்திரமும் ஆகும். ஏதாவது ஒரு மதத்தை ஏற்றேயாக வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது எந்தளவு பெரிய உரிமை மறுப்போ, அதேயளவு பெரிய உரிமை மறுப்புத்தான் விரும்பாத ஒருவருக்கு வாக்களிக்குமாறு கட்டாயப்படுத்துவதும்.
தமிழ் மக்களின் முக்கியமான சாதனை, இந்தத் தேர்தலில் அரசியல் வெறுமையை உலகுக்கு உணர்த்தியது மட்டுமல்ல. யு.என்.பி. யைத் தெரிவு செய்யுமாறு தூண்டும் விதத்தில் அமெரிக்காவின் தலைமை பேசி வந்ததற்குத் தகுந்த ஒரு மறுமொழியைக் கூறியுள்ளதுமாகும். ஒரு அரசியற் கட்சி என்ற முறையில் பகிஷ்கரிப்பு ஆலோசனையை முதலில் முன்வைத்த பெருமை புதிய ஜனநாயகக் கட்சியினது. வேறு காரணங்களாலேனும் அதன் பெறுமதியை உணர்ந்து தமிழ் மக்கள் நடுவே யு.என்.பி. யையும் ரணில் விக்கிரமசிங்கவையும் பற்றிப் பரப்பப்பட்ட மாயையும் ஊடகப் பிரமைகளையும் விளம்பர மோசடிகளையும் மறுக்குமாறு தமிழ் மக்களை கேட்டுக் கொண்ட அத்தனை தமிழ் அரசியல் தலைவர்களும் பாராட்டப்பட வேண்டியவர்களே.
---------------------------------------------
ஆக்கம்: மறுபக்கம்-கோகர்ணன்.
நன்றி: தினக்குரல்.
Labels: அரசியற்கட்டுரை, ஈழ அரசியல்
Search
Previous posts
- நெருப்புக்கு நேரியனே
- தேர்தல் முடிவுபற்றி பாலகுமாரன்
- கிளிநொச்சி நகரம் மீட்கப்பட்டதெப்படி?
- திலீபனுடன் பன்னிரெண்டாம் நாள் - 26.09.1987
- திலீபனுடன் பதினோராம் நாள் - 25.09.1987
- திலீபனுடன் பத்தாம் நாள் -24-09-1987
- திலீபனின் இறுதி உரையிலிருந்து...
- திலீபனுடன் ஒன்பதாம் நாள் -23-09-1987
- திலீபனுடன் எட்டாம்நாள்.-22.09.1887
- திலீபனுடன் ஏழாம் நாள் -21-09-1987
களஞ்சியம்
இறுதிப் பின்னூட்டங்கள்
Links
- Wikipedia
- Firefox
hit Counter
_____________________
Click Here To Earn Money____________________
நல்லதொரு பதிவு, பதிவுக்கு வாழ்த்துக்கள்.
சொன்னவர் 12/02/2005 09:14:00 PM
எழுதிக்கொள்வது: g
nallathoru avasiyamaana pathivu
8.17 2.12.2005
சொன்னவர் 12/03/2005 12:15:00 AM
விவரமானப் பதிவு தான்...
வாழ்த்துக்கள்!
சொன்னவர் 12/04/2005 12:21:00 AM