« Home | இலங்கைத் தேர்தலும் தமிழர்களும். » | நெருப்புக்கு நேரியனே » | தேர்தல் முடிவுபற்றி பாலகுமாரன் » | கிளிநொச்சி நகரம் மீட்கப்பட்டதெப்படி? » | திலீபனுடன் பன்னிரெண்டாம் நாள் - 26.09.1987 » | திலீபனுடன் பதினோராம் நாள் - 25.09.1987 » | திலீபனுடன் பத்தாம் நாள் -24-09-1987 » | திலீபனின் இறுதி உரையிலிருந்து... » | திலீபனுடன் ஒன்பதாம் நாள் -23-09-1987 » | திலீபனுடன் எட்டாம்நாள்.-22.09.1887 »

இலங்கைத் தேர்தலில் வென்றது யார்?

ஜனாதிபதி தேர்தல் முடிவு வழங்கிய பெரு வீழ்ச்சி ரணிலுக்கல்ல, உண்மையில் மகிந்தவுக்கே உரியது.
-க.வே.பாலகுமாரன்

தொடர்புடைய அனைவரும் அதிர்ச்சியால் உறைந்து போயுள்ளார்கள். இப்படியும் நடக்குமா என ஏங்கித்தான் போய்விட்டார்கள். அடக்குமுறையாளர் கையிலிருக்கும் அனைத்து ஆயுதங்களும் ஒன்றில் பயனற்றுப் போகச் செய்யப்படுகின்றன; அல்லது அடக்குமுறையாளருக்கு எதிராகத் திருப்பப்படுகின்றன. வரலாற்றின் அபூர்வ கணங்களாக இவை பதிவாகின்றன. மானிட விடுதலையின் பால் பற்றுக்கொண்டோர் மகிழ்வடையும் காலமிது. சனநாயகம் என்பது பெரும்பான்மையோர் முடிவு என்கிற நிலைக்கப்பாலும் சென்று நாடாளுமன்றத்தையே இணக்கப்பாட்டிற்குப் பதிலாக அடக்குமுறைக்கு பயன்படுத்தியோர் தமது செயற்பாடுகள் செல்லாக்காசாகிவிட்டது கண்டு அச்சமடைகின்றனர். தீவிரவாதம், பயங்கரவாதம் எனத் தந்திரமாக வடிவமைத்து விடுதலைப் போராட்டங்களை திசை திருப்ப அல்லது மென்மைப்படுத்த சனநாயக வழி முறைகளை நம்பிய மேற்குலகிற்கோ இதுவொரு சவாலாகிவிட்டது. தமிழீழ மக்கள் இது வரை தமது மனப்பொந்தில் அணையாது காத்த தீப்பொறியைப் பற்றவைத்துவிட்டார்கள். அடைந்த அனை த்து அவமானங்களையும் துடைத்தெறிந்து சம்பந்தப்பட்டோருக்கு கடும் தண்டனையும் பாடங்களையும் வழங்கிவிட்டார்கள். ரணிலுக்கு மட்டுமல்ல, மகிந்தருக்கும் தோல்வியையே எம் மக்கள் தம் வாக்குகளால் வாக்களியாது வாக்களித்துவிட்டார்கள். எனவே, வென்றவரும் எம் மக்கள் முன் தோற்றவராகிவிட்டார். எவ்வாறு நோக்கினும் வரலாற்றில் முதன்முறையாக தமிழீழ மக்களே இத்தேர்தல் முடிவுகளை தீர்மானித்துள்ளனர்.


ஒருமுறை மேலோட்டமாக சிறீலங்காவின் ஐந்தாவது சனாதிபதித் தேர்தல் முடிவுகளை நோக்கலாம். 1 கோடியே 33 இலட்சத்திற்கு மேற்பட்ட வாக்காளர்களில் 73.74 விழுக்காடு அதாவது, 98 இலட்சத்திற்கு மேற்பட்டோர் வாக்களித்தனர். மகிந்தர் 50.29 விழுக்காடு வாக்குகளையும் ரணில் 48.40 விழுக்காட்டளவு வாக்குகளையும் பெற்றனர். வெற்றியின் மயிரிழை இடைவெளி வெறுமனே ஒரு இலட்சத்து எண்பத்தாறாயிரம் மட்டுமே. (இதுவரை நடைபெற்ற சனாதிபதித் தேர்தல்களில் மிகக் குறைவாகப் பெறப்பட்ட பெரும்பான்மையிது) யாழ். தேர்தல் மாவட்ட வாக்களிப்பு 1.21 விழுக்காடு, முல்லைத்தீவில் எவரும் வாக்களிக்காத போதும் வெலிஓயா சிங்களவர் வாக்கும் சேர்க்கப்பட்டதால் 891 வாக்குகள் பதிவாகின. வன்னித் தேர்தல் மாவட்டத்தின் வாக்களிப்பு 34.30 விழுக்காடாகவும், மட்டக்களப்பில் 48.51, திருமலையில் 63.84, திகாமடுல்ல எனச் சிதைக்கப்பட்ட அம்பாறையில் 72.70 விழுக்காடாகவுமுள்ளன. திருமலையிலும் அம்பாறையிலும் தமிழ்மக்கள் வாக்களிக்காத நிலையிலும் வாக்களிப்பு விழுக்காடு கூடுதலாக இருப்பதற்குக் காரணம் தெரிந்ததே. சிங்களக் குடியேற்றங்களால் சிதைந்த தமிழரின் சனத்தொகைப் பரம்பலின் பாதக நிலையிது.

ஒரு சாதாரணமான சனாதிபதித் தேர்தலின் முடிவுகள் வரலாற்றினையே திருப்பிப் போடுமளவிற்குப் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தப்போகும் நிலையில் மிக நீண்டகாலத்திற்கு எதிரொலிக்கப்போகும் முடிவிது. தாமாகப் போடுவார்கள் என எண்ணிய கட்சியும் போடாவிட்டாலென்ன என எண்ணிய கட்சியும் மனம் புகைந்த நிலையை தேர்தல் முடிவுகள் உருவாக்கிவிட்டன. சமாதானம், பேச்சு என்கிற சிறு சீசாவிற்குள் தமிழ்மக்களது விடுதலையுணர்வினை அடைத்துவிட்டோம். எனவே, வெற்றுக் காசோலையில் போட்ட கையெழுத்தாக தமிழ்மக்கள் வாக்குகள் பற்றி கனவிலிருந்தார் ரணில். அக்கனவை நனவென நினைத்து புலிக்கும் யானைக்கும் இரகசிய தொடர்பென கதைவிட்டார் மகிந்தர். (எது எப்படியானாலும் சென்ற சனாதிபதி தேர்தலில் (1999) 36 இலட்சம் வாக்குகள் (42.71%) பெற்ற ரணில் இம்முறை அதிகமாக மடக்களப்பில் 79.51%, அம்பாறையில் 55.81%, திருமலையில் 61.33%, கண்டியில் 54.33%, நுவரெலியாவில் 70.37% எனப் பெற்றதற்கு யார் காரணம் என்பது புள்ளிவிபரம் தரும் தகவல்) இவ் வாக்குகளும் கிடைக்காவிட்டால் ரணிலின் வீழ்ச்சி எவ்வளவு மோசமானதாக இருந்திருக்கும். இருந்தும் இத் தேர்தல் தனக்கு மணிமகுடம் சூட்டும் என எதிர்பார்த்தவருக்கு கிட்டியது முட்கிரீடமே. அவரது அரசியல் வாழ்வு மட்டுமல்ல, சேனநாயக்க/ ஜே.ஆர். குடும்ப ஆட்சியும் அஸ்தமனமாகிவிட்டது. உடனடியாகவே ரணிலின் கையாளான கட்சித் தலைவர் மலிக் பதவி விலகிவிட்டார். இனி பதவி விலகல் அங்கு தொடர்கதை. ஆகவே, ரணிலின் வீழ்ச்சியென்பது குறிப்பதென்ன?

சமாதானம், இயல்பு நிலையென கதையளந்து மேற்குலகம் என் பக்கம், இந்தியப் பின்புல ஆதரவென பயம் காட்டி மிக நவீன அரசியலுதவிகள்/ அழுத்தங்கள் என்பவற்றினைப் பிரயோகித்து மேட்டிமைக் குடும்பத்தின் வலுவாக்கல் கோட்பாட்டிற்கு வீழ்ச்சி- எமது தாயகத்தின் அரிய வளமிக்க தாய் நிலங்களை விழுங்கி ஏப்பமிட்டு சிங்கள மயமாக்கிய நில அபகரிப்பிற்கும், தந்திரத்திற்கும் இனப்படுகொலைகளை மகிழ்ச்சியோடு ஏவி வெலிக்கடையில் குட்டிமணியின் தமிழ்க் கண்களை குதறி, இந்தியப் படைகளை ஏவி எம் மக்களை கொன்றொழித்து குமரப்பா, புலேந்திரன் தொட்டு ஈழத்தின் இமயம் திலீபன் வரை தேசிய விடுதலை வீரரின் வீரச்சாவுகளுக்கு வினை விதைத்து வெறியாட்டம் போட்ட கொடுமைக்கும் குரூரத்திற்கும் வீழ்ச்சி என நீளும் இவ் வீழ்ச்சிக் கதை முடிவிலி.

ஒரு கணக்கு- நெடுநாள் கணக்கு எம் மக்களால் தீர்த்தாகிவிட்டது. இன்னொரு கணக்குத் தீர்க்கப்பட வேண்டியுள்ளது. இத் தேர்தல் முடிவு உண்மையில் வழங்கியது ரணிலுக்கல்ல பெரு வீழ்ச்சி. அது மகிந்தருக்கே உரியது. இற்றைவரையான எம் மக்கள் மீதான அனைத்து அடக்குமுறைகளினதும் திரட்சியின் பிணச்சுமையைத் தாங்கத் தாமாகவே முன்வந்த மகிந்தர் இவற்றிற்கான கணக்குகளைத் தீர்க்கும் போது அதனையேற்கப் போகின்றார். அதாவது, தன் முன்னோர் விதைத்த வினைகள் யாவற்றிற்குமான மொத்த அறுவடையைச் செய்ய ஆயத்தமாகின்றார். அவசரம், அவசரமாக எங்கே பதவி பறிபோய்விடுமோ என்கிற அச்சத்தில் பதவியேற்று மகிந்த அப் பதவியை மாதக்கணக்கிலல்ல, நாட்கணக்கிலல்ல மணித்துளிக் கணக்கில் காக்கும் நிலையிலுள்ளார். ஏதோ எதிர்க்கட்சித் தலைவர் பதவியேற்றது போல அவரது கட்சியின் ஆட்களே விரட்டப்படுகின்றனர். நாம் ஏலவே விடுதலைப்புலிகள் ஏட்டில் குறிப்பிட்டது போலவே பண்டா குடும்பத்திற்கெதிரான ராஜபக்ஷ குடும்ப ஆட்சியை முன்னிறுத்த வந்தவர் "சேனா"க்கள் நாயக்க, "பண்டாக்கள்" நாயக்க குடும்ப ஆட்சிக்கு குழி தோண்டிய பின் செய்யப்போவதென்ன?

சிங்களத்திலே தனது குடும்ப ஆட்சியைத் தொடங்கும்போதே அதன் வீழ்ச்சியையும் கூடவே உறுதிப்படுத்திய மகிந்தர் எப்படியான அரசியல்வாதி? அவரது தளம், பலம், வெற்றி எல்லாமே அவருக்கு மட்டுமே உரியதல்ல. அது ஜே.வி.பி.யினருக்கும் பொதுவானது. ஒரு உறையில் இரு வாட்களா? முதலில் எவர் வாளை உருவக்கூடும்? அவ்வாறு உருவும் போது உருவாகப்போகும் கொந்தளிப்பிற்கு வரலாறு பின்னால் என்ன பெயர் சூட்டும்? கிளர்ச்சியா? புரட்சியா? சதிப்புரட்சியா? உள்நாட்டுப் போரா? மூன்றாவதும் இறுதியுமாக தன் புதல்வர்களான ஜே.வி.பி. மீதான சிங்கள ஆட்சியமைப்பின் பலியெடுப்பா? ஜே.வி.பி.யினரின் கதை முடிவா? புதிய தொடக்கமா? சிங்களத்தில் அமைதி காக்கவென தலையீடுகள் நிகழுமா? நாமொன்று மட்டும் கூறமுடியும். ராஜபக்ஷ குடும்ப வீழ்ச்சியாக மட்டும் இந் நிகழ்வு அமையப்போவதில்லை. முழுச் சிங்களக் குடும்பங்களுக்குமே இது வீழ்ச்சியாகும். இங்கே நாம் சாபமூட்டவில்லை. கலம்பகமும் பாடவில்லை, வரலாற்றின் தருக்க விதிகளின் இயக்கத்தை உணர்த்தி மட்டும் நிற்கின்றோம்.

இரு வேறு தேசங்களின் அடிப்படைப் பகை முரண்பாடுகள் உச்ச அளவிற்குக் கூர்மையடைகின்றன. அவை முற்றி வெடிக்கும் போது விளையும் விளைபொருட்கள் வெவ்வேறாகின்றன. சிங்களத்தில் அது வேறாகவும் தமிழீழத்திலோ அது வேறாகவும் அமையும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக தமது அடிப்படை பகை முரண்பாடுகளை இன்னமும் சிங்களம் சரியாக இனங்காணவில்லை. மகிந்தர் எவ்வாறு வென்றார்? சிங்கள மக்களின் கும்பி கொதிக்கின்றது. அதனைத் தணிவிக்க வேண்டும் என்கிற உண்மையையும் (இந்தளவில் இது முற்போக்கான தேசியமே) ஆனால், அதேவேளை பேரினவாத, அடிப்படைவாத சிந்தனைகளின் விளைவாக தமது இயலாமையை, பதவியாசையை மறைக்க, திசை திருப்ப தமிழரை பகடையாக அவர் பயன்படுத்தியது வரலாற்றின் மிகப் பாரிய தவறாகப் போகின்றது. (மகிந்தரது வாக்கு வங்கி- கம்பஹாவில் 54.70%, காலியில் 58.41%, மொனறாகலையில் 57%, மாத்தறையில் 61.85%, அம்பாந்தோட்டையில் 63.43%) இந்தளவில் அவர் "தவறான சுவரில் சாத்தி வைக்கப்பட்டுள்ள ஏணி." இப் பாரிய சிக்கலை ஆய்வாளர் மு.திருநாவுக்கரசின் வார்த்தைகளில் சொல்ல விரும்புகின்றோம். மிக விரைவில் வெளிவந்து மிகப் பரபரப்பைத் தோற்றுவிக்கப் போகும் "இலங்கை - 2007" என்கிற நூலிலிருந்து அவரது அனுமதியோடு சில வரிகள், "காலத்திற்குக் காலம் இலங்கை அரசியலானது நரபலியெடுக்கும் தன்மையைக் கொண்டுள்ளது. அந்த நரபலி ஒரு பொருளாதாரப் பொறிமுறையிலிருந்து பிறக்கின்றது." இங்கேயுள்ள முக்கிய பட்டறிவு என்னவென்றால், அது தமிழரை பலியெடுக்க முடியாவிட்டால் சிங்களவரை பலியடுக்கும் என்கிற முக்கிய தகவலை நூலாசிரியர் விளக்கியமை தான். இங்கே பல வினாக்கள் வாசகர் மனதிலே எழும். சிங்களத்திற்கும் தமிழீழத்திற்குமான அடிப்படை பகை முரண்பாடு எப்போது தீர்க்கப்படும்? அதேபோல் சிங்களவரும் சிறீலங்கா ஆட்சியாளர்க்குமான முரண்பாடு எப்போது தீர்க்கப்படும்? எது முந்தும்? எது பிந்தும்? இரண்டும் சம காலத்திலா? இக் கேள்விகளுக்கான விடை அனைத்தையும் இலங்கைத்தீவின் தீர்மானிப்பாளரும் தமிழீழத்தின் நம்பிக்கைப் பொறுப்பாளருமான ஒருவரிடம் விட்டு விடுகின்றோம். "எல்லோருக்கும் விழிகள் உண்டு உலகினைப் பார்க்க, ஆனால், ஒரு சிலருக்கு தரிசனமுண்டு காலத்தினைக் கடந்து உலகினைப் பார்க்க." எனக் கவிஞர் மு.பொ. பாடிய அந்த ஒருவரின் (நன்றி:விடுதலைப் பேரொளி) முடிவுகளை அறிய முயல்வதே எம்மாலியன்றது.

இது கட்டுரையின் இறுதிப்பகுதி. வாக்களிக்காமல் வாக்களித்த எம் மக்கள் உலகிற்குச் சொல்லும் "வாக்குகள்" எவை? முதலில் சிங்களத்தாருக்குக் குறிப்பாக, ஜே.வி.பி.யினருக்கு - "வரலாறு தரும் வாய்ப்பைத் தவறவிட்டு விடாதீர்கள்" உங்களது நல் வாழ்விற்கு எவர் எதிரியோ அவரே எமக்குமான பொது எதிரி. உங்களது வாழ்வை அபகரித்த நில பிரபுத்துவ, முதலாளிய, மேட்டிமைத்தன குடும்பக்குழு ஆட்சியாளரே எம்மையும் ஒடுக்கினர். ஒரு குடும்பக்குழு இப்போது அஸ்தமனம் கண்டுள்ளது. மறு குடும்பக் குழுவோடு கூட்டுச் சேர்ந்திருப்பது ஆட்சியதிகாரத்தினைப் பங்கு போடவா? அல்லது கூடவிருந்து குழிபறிக்கவா? தெளிவாக தீர்மானித்தால் நிழற்றிரை அகலும். இயலாமையால் திசை திரும்பலை. பதவியாசையைப் பற்றி நின்றால் விளைவது "நரபலியே". தமிழர் தலையை உருட்டுவதை இனிமேலாவது விட்டு விடுங்கள்.

அதுபோலவே ஏனைய எம் தமிழ் பேசும் மக்களின், மலையக மக்களின் தலைமைகளுக்கு தமிழ்மக்கள் கொடுக்கும் வாக்கு சற்றுக் கடுமையானது. எமக்குமான உங்கள் எல்லாருக்குமான பொது எதிரியை பலமிழக்கச் செய்து வீழ்த்தும் போது முண்டுகொடுக்க முற்படாதீர். உங்கள் சூழல், இருப்பு, சனநாயக செயற்பாட்டில் வேறு தெரிவின்மை என்பதை நாம் புரிந்தாலும் இலக்குகளைக் கைவிட்டும் சொந்தநலன் கருதியும் தடம்புரள்வது இறுதியில் கசப்பான பாடங்களையே கற்றுத்தரும். இனிமேல் நிகழவிருக்கும் புதிய பரிமாணத்தினைப் புரிந்து கொள்ளுங்கள்; அரசியல் நுண்ணுணர்வுடன் நிகழ்வதை அவதானியுங்கள். தன்னலமின்றி பொறுமையுடன் செயற்படுங்கள்.

இறுதியாக சர்வதேசத்திற்கும் எம் மக்கள் வாக்கொன்று சொல்கிறார்கள். ஆளும் தரப்பு ஒத்துழைக்காத அபூர்வமான அமைதி முயற்சியில் ஈடுபட்டிருக்கும் நீங்கள் முன்னர் இந்தியாவினை/ அதன் படையை ஜே.ஆர். கையாண்ட கதை (நடுவரை ஆடும் தரப்பாக மாற்றிய கதை)யை அறியுங்கள். தமிழ் மக்களை கொன்றொழிக்கவும், அவர்கள் அடிப்படை உரிமைகளைப் பயங்கரவாதத்தின் பெயரால் உங்களைக் கொண்டுவித்து மறுக்கவும் பயன்படும் பகடையாகாதீர். போகிற போக்கில் உங்கள் முதுகுகளுக்குப் பின்னால் சிங்களத்தில் உருவாகும் பேரினவாத, இனவெறி பிடித்த, மத அடிப்படைவாதம் வளர்வதை அவதானியுங்கள். இன்றேல் அமைதி முயற்சிகள் இருந்த அமைதியினையும் குலைத்தன என்கிற பழியே மிஞ்சும்.

இவை தான் வாக்குகள். எங்கள் அன்பிற்குரியவர்களே, தேர்தல் புறக்கணிப்பென தமிழீழ மக்கள் வீசிய சாட்டை எவரெவர் முதுகில் பட்டதோ அவரவர் உணரவேண்டியது;
வலியையல்ல
வரலாற்றின் தீர்ப்பை.
-------------------------------------------
ஆக்கம்: க.வே.பாலகுமாரன்.
மூலம்: தினக்குரல்.

Labels: ,

Good article.
Thanks.

R.Mohan.

Post a Comment