« Home | யாழில் அரசஊழியர்கள் புறக்கணிப்புப் போராட்டம் » | தமிழின உணர்வாளர் ஆட்டோ ஆனந்தராஜ் காலமானார். » | இலங்கைத் தேர்தலில் வென்றது யார்? » | இலங்கைத் தேர்தலும் தமிழர்களும். » | நெருப்புக்கு நேரியனே » | தேர்தல் முடிவுபற்றி பாலகுமாரன் » | கிளிநொச்சி நகரம் மீட்கப்பட்டதெப்படி? » | திலீபனுடன் பன்னிரெண்டாம் நாள் - 26.09.1987 » | திலீபனுடன் பதினோராம் நாள் - 25.09.1987 » | திலீபனுடன் பத்தாம் நாள் -24-09-1987 »

இனச்சிக்கலில் இந்திய நிலைப்பாடு

இந்தியா தொடர்பாக புலிகளின் நிலைப்பாடு.
-க.வே. பாலகுமாரன்.-

புலிகளின் குரல் வானொலியில் சனிக்கிழமை ஒலிபரப்பாகிய அரசியல் அரங்கம் நிகழ்வில் விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் கா.வே.பாலகுமரன் ஆற்றிய உரை:

நாள்தோறும் நீங்கள் பத்திரிகைகளைப் பார்த்து வருகிறீர்கள். எமது போராட்ட முனைப்பு பல்வேறு பக்கங்களாகக் கிளைத்தெழுந்து, ஏலவே நாம் சொன்னதைப் போல எதிர்வினைகள் ஆற்றப்படுவதையும் அதன் விளைவாக ஒரு புதிய பரிணாமம் தோன்றப் போவதையும் நாம் முன்னமே சொல்லி வைக்கிறோம்.

கொழும்பு அரசியலை நீங்கள் பார்க்கும் போது நிச்சயமாக உங்களுக்குத் தெளிவாகத் தெரியும். சிங்களத் தலைவராகத் தோற்றமளிக்கும் மகிந்தர் இப்பொழுது வழமைபோன்ற மிகத் தந்திரமான, ஒரு குள்ளநரியாக, ஒரு சந்திரிகாவாக, ஒரு பிரேமதாசாவாக மாறக் கூடிய நிலைக்கு வந்துவிட்டார்.
அவருடைய அரசியல் நடவடிக்கைகள் வழமையான நரித்தந்திரம் நிரம்பிய அரசியல்தன்மைகள் கொண்டிருப்பதை நாம் தெளிவாகப் பார்க்கிறோம். அதனை இந்தப் பேச்சுவார்த்தையின் அறிவிப்பில் பார்க்கலாம்.
பேச்சுவார்த்தை என்றாலே இரண்டு தரப்பும் ஒருமித்து சந்திக்க வேண்டிய இடம். அந்த இடமே பிரச்சனையாக்கப்படும்போது அந்தப் பேச்சுவார்த்தை என்பது எத்தகைய வேறு நோக்கங்களைக் கொண்டது என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது.

ஆகவே சிங்கள அரசியல் தொடர்பாக இனி நாம் பெரிதாகப் பேசுவதற்கோ அல்லது மகிந்தரின் செயற்பாடுக்கு ஊடாக அமைதிக்கான ஒரு வாய்ப்பு அல்லது கதவு திறக்கப்படும் என்பதற்கான அனைத்து வாய்ப்புகளையும் அவரே அடைத்துவிட்டார். அவரே கதவைத் திறந்து அவரே கதவை சாத்தி பூட்டையும் பூட்டி திறப்பை எடுத்துக்கொண்டு அவர் இந்தியாவுக்குப் போகிறார்.

இந்தியா, இந்தியா என்கிற சொல் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முக்கியமான பதிவாக இருக்கிறது. எங்கள் மக்கள் மத்தியில் இந்தியா தொடர்பாக ஒரு நெகிழ்வு, ஒரு அன்பு, ஒரு அச்சம், மிகைப்படுத்தப்பட்ட பயம், சில முற்கற்பிதங்கள் என்று எண்ணங்கள் பலவாறாக இருக்கின்றன.
நாங்கள் எங்கே எவரைச் சந்தித்தாலும் இந்தியா தொடர்பான கேள்விகளைக் கேட்காமல் விடுவது கிடையாது. ஏதோ இந்தியா எங்களுக்கு பரம எதிரி போலவும் எங்களது விடுதலைப் போராட்டத்துக்கு இந்தியா தடையாக இருப்பது போலவும் இந்தத் தடையை எவ்வாறு மீறுவது என்று நாங்கள் சிந்திப்பது போலவும் இது தொடர்பாக பல்துறை சார்ந்த அறிஞர்களும் இந்தியாவோடு உறவை ஏற்படுத்தி இந்தியாவுக்கு நிலைமைகளை விளங்கப்படுத்தி இந்தியாவுடன் நாங்கள் கீழிறங்கி உறவைப் பேணாவிட்டால் என்ன செய்வது என்று தலையில் கை வைத்து வியக்கிற துன்பகர நிலையையும் நாங்கள் பார்த்து வருகிறோம்.

இது தொடர்பாக தேசியத் தலைவருடன் நாங்கள் நீண்டகாலமாக பேசியும் வருகிறோம். அவரும் இது தொடர்பாக பல கருத்துகளையும் சொல்லி இருக்கிறார்கள்.

இந்தியா என்று சொல்லுகிறபோது நாங்கள் இந்திய மக்களைத்தான் நம்புகிறோம். குறிப்பாகத் தமிழ்நாட்டு மக்களை நம்புகிறோம்.
தமிழ்நாட்டு மக்கள் தற்போது உள்ள சூழ்நிலையில் பல்வேறு அடக்குமுறை ஒடுக்குமுறைச் சட்டங்களின் வெளிப்பாடு காரணமாக தங்களுடைய ஆர்வத்தை அந்த ஈடுபாட்டை மறைத்து மனதுக்குள்ளே வைத்திருக்கிறார்கள். இவை நீங்கும்போது அவை வெளிவரும் என்று சொன்னார்கள். அது முதலிலே சொன்ன கருத்து.

அதுபோலவே இப்போது பொடா சட்டம் எடுத்ததற்குப் பின்னாலே தமிழ்நாட்டில் உணர்வலைகள் மெல்ல மெல்ல பொங்கி மேலே வருவதையும் எங்களுடைய செய்திகள் தமிழ்நாட்டிலே முக்கிய இடத்தைப் பெறுவதையும் அண்மையிலே கூட புங்குடுதீவு பாலியல் வல்லுறவுச் சம்பவம் தமிழ்நாட்டிலே மிகப் பெரிய செய்தியாக சென்றதையும் தமிழருடைய உரிமையை சிங்களவன் மறுப்பதைத் தெளிவாகச் சொல்லக்கூடிய கட்டுரைகளும் முக்கியமான பத்திரிகைகளில் அங்கு வருவதை நாம் அறிகிறோம்.

அவ்வாறு பார்க்கும்போது எங்களுக்குப் பழைய ஞாபகங்கள் எல்லாம் வருகின்றன. அதை ஒருபுறம் தள்ளிவைத்துவிட்டு இந்தியா தொடர்பான சில கருத்துகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.
அண்மைக்கால நிகழ்ச்சிகளுக்கு ஊடாக இந்தியாவில் போக்கில் எவ்வாறு மாற்றம் பெறுகிறது என்று பாருங்கள்.

இந்தியா என்று நாம் சொல்லும்போது இந்திய அரசு என்று பார்க்கின்றபோது சில நலன்கள் இருக்கின்றன. அந்த நலன்களை அடைவதற்காக காலம்காலமாக தன்னுடைய கொள்கைகளை மாற்றிக்கொண்டும் சிலவற்றை வேறு பாதைக்கு திருப்பிக்கொண்டு போவதையும் பார்க்கலாம்.
உதாரணத்துக்கு நீங்களே அறியலாம்.

ரணிலுடைய சமாதான முயற்சிகள் நடைபெற்ற காலத்தில் இந்தியா ஒருவகையான அமைதி நிலைப்பாட்டை எடுத்தது. அதேவேளையில் சந்திரிகா போன்ற தலைவர்களையும் ஜே.வி.பி. போன்ற கட்சிகளையும் பயன்படுத்தி இந்த அமைதி முயற்சிகளுக்கு இந்தியா ஒரு தடையாக இருந்தது என்ற அவச்சொல்லும் அந்த காலகட்டத்திலே பல்வேறு தரப்புகளால் கருத்துகள் சொல்லப்பட்டது.

இப்போது நீங்கள் பார்க்கலாம். இந்த முறை மகிந்தர் பதவியை எடுத்தபோது இந்தியாவை துணைக்கு அழைத்தார். எதற்கெடுத்தாலும் இந்தியாவை துணைக்கு அழைக்கின்ற போது இந்தியாவுக்கு ஒரு அச்சம் தோன்றியிருக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த மகிந்தர் போன்ற தலைவர்கள் தங்களுடைய தவறான செயற்பாடுகளுக்கு இந்தியாவை துணைக்கு அழைப்பது எவ்வளவு சரி என்ற கேள்வி இந்தியக் கொள்கை வகுப்பாளர்களிடம் நிச்சயமாக எழுந்திருக்க வேண்டும்.

மகிந்தர் நிச்சயமாக நம்பினாராம் இந்தியா தன்னோடு இந்தியா நல்லுறவைப் பேணும் என்று. அந்த நம்பிக்கையில்தான் அவர் நோர்வேயை எடுத்தெறிந்தும் புலிகளைச் சீண்டியும் பல்வேறாகப் பேசிக் கொண்டு வந்தார்.
ஆனால் மங்கள சமரவீர இந்தியா சென்றபோது இந்தியா மிகத் தெளிவாகச் சொன்னதாக செய்திகள் வெளிவந்தன. வடக்கு - கிழக்கு இணைப்பு தொடர்பான இந்திய நிலைப்பாடு உங்களுக்குத் தெரியும். இந்தியாதான் முதன்முறையாக வடக்கு - கிழக்கு நிலைப்பாடு தொடர்பாக சட்ட ரீதியான ஒரு கருத்தை முன்வைத்து இந்திய-இலங்கை ஒப்பந்தத்திலே சொல்லப்படுகிற நிலைக்குத் தள்ளப்பட்டது எல்லோருக்கும் நன்றாகத் தெரியும்.

நாங்கள் தனிப்பட்ட முறையிலே ராஜீவ் காந்தியைச் சந்தித்தபோது கூட அவர் சொன்ன கருத்து, வடக்கு - கிழக்கு இணைப்பை நாங்கள் ஒருபோதும் பிரிக்கவிடமாட்டோம். நீங்கள் அதுபற்றி கவலைப்பட வேண்டாம் என்று எங்களுக்கு வாக்குறுதி தந்திருந்தார். இவையெல்லாம் வரலாற்றிலே பதிவுகளாக நாங்கள் சொல்லக்கூடிய வாய்ப்பு இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது.
ஆகவே அந்த வகையிலும் இன்னொரு வகையிலே பார்த்தீர்கள் என்றால் போர் நிறுத்த உடன்பாட்டை மாற்றுவது அல்லது மூன்றாம் தரப்பு மத்தியஸ்த்துக்கு மாற்றுவது போன்ற விடயங்களிலும் இந்தியா ஆர்வமாக இருக்கவில்லை. இந்தியா சொன்ன செய்தி மிகத் தெளிவானது. இதே பாதையில் தொடர்ந்து சென்று ஒரு இணக்கப்பாட்டிற்கு வர முயலுங்கள் என்று இந்தியா திருப்பி அனுப்பிய கதையை நாங்கள் அறிவோம்.
ஜே.வி.பி. போன்ற சக்திகள் இந்தியாவை பயன்படுத்தி தங்களுடைய இலக்கை அடைவதற்காக முயற்சிப்பது குறித்து இந்தியாவுக்கு அச்சம் தோன்றியிருப்பது எங்களுக்குத் தெளிவாகத் தெரிகிறது.
அதன் விளைவாகத்தான் ஜே.வி.பி. போன்ற சக்திகள் ஜப்பான் அல்லது சீனாவை முன் நிறுத்தும் போது அது இந்தியாவுக்கு உவப்பாக இருக்க முடியாது.

இந்த விடயங்களில் இந்தியா பெரிதும் தலையிடுவதாகத் தெரியவில்லை.
ஆகவே மகிந்தர் ஜப்பானை தரப்பாக எடுத்தபோது நாங்கள் அதை மறுத்த பொழுது இந்தியாவுக்கு அதிலே ஒரு செய்தி இருப்பதை இந்தியா உணர்ந்திருக்கக் கூடும்.

நாங்கள் இந்த விடயங்களில் தெளிவாக இருக்கிறோம். எங்களுக்கு இந்தியாவுடன் எந்தப் பகைமையும் கிடையாது. நாங்கள் விரும்பி இருந்தால் இந்தியாவுக்கு ஒரு சிறு பகைமையுள்ள ஒரு போட்டியாக வரக்கூடிய சீனா, ஜப்பான் போன்ற நாடுகளை நாங்களும் முன்நிறுத்தி நாங்கள் செயற்படவில்லை.

எங்களுடைய நோக்கம் எப்போதும் இந்தியாவைப் பகைப்பது கிடையாது. இந்தியாவின் நலன்களுக்கு எதிராக நாங்கள் செயற்படப்போவதும் கிடையாது. அதேவேளையில் எங்களுடைய நலன்களுக்கு எதிராக இந்தியாவும் செயற்படக் கூடாது. இதுதான் தலைவரின் முக்கியமான எண்ணம். இதை நாங்கள் தெளிவாகச் சொல்லி இருக்கிறோம்.
இந்தியத் தரப்பு எங்களுடைய உணர்வுகளைப் புரிந்து கொள்ள மறுப்பது எங்களுக்குப் பெருத்த வேதனையாக இருக்கிறது.

இன்று நிலைமைகள் மாறி இருக்கின்றன. இந்தியத் தரப்பு அண்மைக்காலமாக தங்களுடைய நிலைப்பாடை மறு ஆய்வுச் செய்யக் கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதை நாங்கள் தெளிவாக அறியக் கூடியதாக இருக்கிறது.
15.12.2005 அன்று உதயன் பத்திரிகையில் கூட இலங்கை விரிக்கும் வலையில் இந்தியத் தரப்பு சிக்குமா என்று தலையங்கம் எழுதியுள்ளது.
இந்தியாவோடு பேச்சுவார்த்தை நடத்தச் செல்லுகிற தூதுக்குழுவில் இடம்பெற ஜே.வி.பி. மறுத்ததற்கான பிரதான காரணம் என்று நாங்கள் அறியும்போது இந்தியாவுடனான தனது உறவில் இந்தியா போடக்கூடிய அழுத்தங்களைத் தவிர்ப்பதற்காக ஜே.வி.பி. செல்லவில்லை என்பது தெளிவான செய்தியாக இருக்கிறது.

ஒரு காலகட்டத்திலே ஜே.வி.பிக்கு உவப்பாக இருந்த இந்தியா இன்று சிறிது சிறிதாக விட்டுச் செல்கிறது. இதைப்பார்க்கும்போது அரசியலிலே நண்பர்களும் இல்லை பகைவர்களும் இல்லை என்ற செய்தி தெளிவாகப் புலப்படுகிறது.

இங்குள்ள ஒரு முக்கியமான செய்தி என்னவெனில் இந்தியாவுக்கு மாற்றான ஒரு சக்தியைக் கொண்டுவர புலிகள் விரும்பவில்லை என்பதும் அந்த மாற்று சக்தியைக் கொண்டுவருவதற்கு இந்தியாவுடன் கூட நின்ற சக்திகள்தான் முயலுகின்றன என்பதை நாங்கள் இங்கே சுட்டிக்காட்ட வேண்டிய தேவை இருக்கிறது. அதை இந்தியா புரிந்தும் இருக்கிறது.
இதற்கு அப்பால் எங்கள் மக்களிடம் பேசும்போது நாங்கள் சொல்லக்கூடிய செய்தி என்னவெனில், இந்தியா தொடர்பான அச்சம் எங்கள் மக்களிடத்திலே இருக்க வேண்டி அவசியம் இல்லை என்பதுதான் எங்களுடைய பிரதான நிலைப்பாடு.

இந்தியா தொடர்பான முற்கற்பிதங்களை நாங்கள் மாற்றிக்கொள்வோம். ஏனென்று சொன்னால் எங்களுடைய விடுதலைப் போராட்டம் இன்று ஒரு உன்னதமான நிலையை அடைந்து அதனுடைய இறுதிப் பக்கங்களைத் தயாரிக்கிற இந்த வேளையிலே நாங்கள் அச்சம், ஐயுறவு எதுவுமற்று ஒரு தெளிவான மக்கள் கூட்டமாக மாற வேண்டும் என்பதற்காக இந்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று நாங்கள் தாழ்மையாக வேண்டிக்கொள்கிறோம்.

இந்திய மத்திய அரசு என்பது நாங்கள் நினைப்பதுபோல் ஒரு அரசு அல்ல. ஏலவே உள்ளது போன்ற பலமான அரசு இன்றைக்கு கிடையாது.
இந்தியாவில் இன்று கூட்டாட்சி என்பது ஒரு நிலையாக வந்துவிட்டது. மத்தியில் உள்ள ஆட்சி என்பது ஒவ்வொரு பிரதான கட்சிக்கும் கிட்டத்தட்ட 15-க்கும் மேற்பட்ட கூட்டுக் கட்சிகள் உள்ளன. அந்த மாநிலக் கட்சிகள் இல்லாமல் இந்தியாவில் ஒருபோதும் ஆட்சி அமைக்க முடியாது.
இந்தியாவில் ஏறத்தாழ 25-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் இருக்கின்றன. மொழிவாரியாக பிரிவிக்கப்பட்ட போது 18-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. இன்று ஒவ்வொரு மாநிலமும் தனிநாடு கோரிக்கை என்று கூறாவிட்டாலும் கூட தன்னுடைய உரிமைக்காக அதிகாரத்திற்காக போராட்டங்களை நடத்திக் கொண்டு வருவதும் அதை ஏற்க வேண்டிய நிலைக்கு இந்திய மத்திய அரசு தள்ளப்படுவதும் மாநிலக் கட்சிகளுடைய கை ஓங்கி வருவதும் இன்றைக்கு இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு வெளிப்பாடாக வெளிவருகிறது. இதை நாங்கள் வரவேற்கிறோம்.
இந்தியாவில் தனிநாடு கோருகிற சக்திகளுடன் நாங்கள் ஒருபோதும் உறவு வைத்ததும் கிடையாது. வைக்கப்போவதும் கிடையாது. எங்களைப் பொறுத்தவரையில் அந்த மக்கள் தங்களது உரிமைகளுக்காகப் போராடுவதை நாங்கள் ஆதரிக்கிறோம்.

அந்த வகையில்தான் இந்தியாவினுடைய அரைகுறை சமஸ்டி ஆட்சிக்கு அப்பால் எங்களுடைய இனத்தின் சிக்கல்கள் வெவ்வேறாக இருப்பதால் நாங்கள் இடைக்கட்டத் தீர்வுக்குப் போனோம் என்பதை இந்தியா கட்டாயம் கவனத்தில் கொண்டிருக்கும் என்று நம்புகிறோம்.
பி.ஜே.பி.யினது கூட்டுக் கட்சிகளின் சார்பில் 185 பேர் என்றால் காங்கிரஸ் கட்சிக்கு 220 என்றால் முக்கியமாக தமிழ்ப் பிரதேச கட்சிகள்- தமிழ் மாநிலக் கட்சிகள் அதிக அங்கத்துவம் வகிக்கின்றன.
அந்த வகையில்தான் அண்மையில் ம.தி.மு.க. தலைவர் வைகோ தெரிவித்திருந்த கருத்தை இந்தியா நிச்சயமாக கவனத்தில் கொள்ள வேண்டும்.
தொடர்ந்தும் தமிழ் மக்களினது நலன்கள் புறக்கணிப்படுமானால் தமிழகம் ஒரு காஸ்மீரமாகும் என்று அவர் சொன்னது வெறும் அச்சுறுத்தல் அல்ல. ஒரு யதார்த்தமான களநிலைமை. இன்று காஸ்மீரில்தான் தனிநாட்டுக் கோரிக்கையும் அதனால் ஏற்பட்ட பல இரத்தக் களறிகளும் அதற்கு அப்பால் காஸ்மீருக்கு விசேடமான தனியான அதிகாரம் கொடுக்கப்பட வேண்டும் என்ற தீர்மானமும் வருவதற்கு காஸ்மீரிலே நடந்து வருகிற சம்பவங்களைக் மனதில் வைத்துக் கொண்டுதான் வைகோ பேசியிருக்கிறார்.
முன்னைய மத்திய அரசு போல் இல்லை இன்று இருக்கிற அரசு. அது பலமுனையிலே இருக்கின்றது.

15-க்கும் மேற்பட்ட தேசிய இனங்களைக் கட்டுப்படுத்தி வைத்திருப்பதால் அந்த இனங்களுடைய நலன்கள் தொடர்பாக இந்திய அரசு தனது நலன்களைத் திருப்ப வேண்டிய தேவை ஏற்படுகிறது.
அதேபோல் கிளர்ச்சிகள் நடந்த அருணாச்சலப்பிரதேசம், நாகாலாந்து போன்ற போர் நடந்த இடங்களில் கூட பேச்சுவார்த்தைக்கு இந்திய அரசு இறங்கி மிக இரகசியமாகப் பேசினாலும் கூட மேலைத்தேய நகரங்களிலே இந்தியா தனது பிரதிநிதிகளை அனுப்பி உலகுக்குத் தெரியாத வகையில் பேசினாலும் கூட அந்தப் பேச்சுவார்த்தைகள் இன்று பகிரங்கப்படுத்தப்பட்டதாக நடந்து கொண்டிருக்கின்றன.

அந்தப் பேச்சுவார்த்தைகளில் கூட மூன்றாம் தரப்பாக சில சக்திகள் செயற்படுவதை நாம் அறிவோம். ஆகவே இந்திய அரசு நல்லபோக்கிலே போவதை நாம் அறிவோம். இந்தியாவின் இந்த போக்கிற்கு ஒருபோதும் நாம் தடையாக இருக்கப்போவதில்லை. இதை நாம் வரவேற்கிறோம்.
மகிந்தர் போன்ற ஆட்களை நம்பி இந்திய அரசு தனது வெளிநாட்டுக் கொள்கையை வகுக்கும் என்று சொன்னால் அது மிகவும் முட்டாள்தனமாகிவிடும் என்பது அவர்களுக்கு மிக நன்றாகத் தெரியும்.
மகிந்தர் டில்லிக்குச் செல்கின்ற போது அவருக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது என்று நாங்கள் நம்புகிறோம்.

தமிழ் மக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்தியா எடுக்காவிட்டாலும் கூட இந்தியா தன்னுடைய சுயமரியாதைக்காக, சுயகௌரவத்துக்காக தன்னுடைய வெளிநாட்டுக் கொள்கையைத் தெளிவாகச் சொல்ல வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. ஆகையால்தான் மகிந்தர் போகும்போது எல்லோரையும் இழுத்துக் கொண்டு போகிறார். அதிலே தொண்டமானும் செல்வதாக செய்திகள் வருகின்றன. தொண்டமானை நாங்கள் வேண்டுகிறோம். செல்லுங்கள். சென்றுவரும்போது செய்தியை எங்களுக்குச் சொல்லுங்கள்.

எங்கள் மக்களுக்கு உங்கள் நிலைப்பாடை விளங்கப்படுத்துங்கள். மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனது அறிக்கை ஒன்றை இந்த நேரத்தில் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.
"இந்தியா தமிழ் பேசுகிற மக்களுக்குச் செய்கிற அந்த நிலைப்பாடு என்பது தமிழ்நாட்டு தமிழ் மக்களினது மனங்களிலே புண்ணாக இருக்கிறது. மலையக மக்களுக்கு என்ன செய்தார்கள் இந்தியா. எங்களைக் கை கழுவிவிட்டார்கள். இவர்களை நம்பியா தமிழகத் தமிழர்கள் இருக்க முடியும்" என்று மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கூறியிருக்கிறார்.
இந்தக் கருத்துகள் எல்லாம் இந்தியாவுக்குச் சென்று சேர்ந்திருக்க வேண்டும் என்று நம்புகிறோம்.

எங்களைப் பொறுத்தவரை இந்திய அரசு எதிரி அல்ல. தன்னுடைய போக்கைத் திருப்பி எங்களுடைய தேசியத் தலைவர் சொன்னது போல் எங்களது தேசிய விடுதலைப் போராட்டத் தலைமையை மாசுபடுத்தாமல் அதனுடைய வலிமையைக் குறைக்காமல் தமிழ் மக்களின் போராட்டத்தை போராட்டமாகக் கருதிச் செயற்பட வேண்டுகிறோம்.

1926 ஆம் ஆண்டு மகாத்மா காந்தியை இலங்கைக்கு வரவழைத்தது தமிழர்கள். இந்தியாவினது விடுதலைப் போராட்டத்திலே காங்கிரஸ் என்ற அந்த அமைப்பில் முன்னணி வகித்தவர்கள் தமிழர்கள். தமிழர்களின் தெளிவான வேண்டுகோளுக்கு இணங்க மகாத்மா காந்தி இலங்கைக்கு வருகை தந்து கொக்குவில் உட்பட 7 இடங்களிலே கூட்டங்கள் வைத்து இலங்கைக்குச் சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்ற கருத்தை மகாத்மா காந்தி பேசுவதற்கு தளம் அமைத்துக் கொடுத்தவன் தமிழன்.
தமிழனுக்கு இருக்கிற உணர்வுகூட சிங்களவனுக்கு இல்லையே என்று அப்போது காந்தி சொன்னாராம். அப்படியான நிலையிலே வாழ்ந்தவர்கள் நாங்கள்.

ஆய்வாளர் திருநாவுக்கரசர் சொன்னது போல், இந்தியாவுடன் தமிழ் மக்கள் தொடர்புகொண்டமையால்தான் ஆங்கில அரசு தமிழ் மக்களைக் கைவிட்டு சிங்களவர் பக்கம் சாய்வது என்ற முடிவு கூட வரலாற்றில் எடுக்கப்பட்டிருக்கிறது.

ஆகவே இந்த விடயங்களை இந்திய ஆய்வாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். கருத்தில் கொள்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.
இன்று ஏற்பட்டிருக்கிற சூழ்நிலை விடுதலைப் போராட்டத்தின் வெற்றிக்கான சூழ்நிலை என்பது எங்களைப் பொருத்தவரையான கருத்து.
மகிந்தர் போன்றோரது செயற்பாட்டு இந்திய அரசு துணை போனால் வரலாற்றிலே தீராத களங்கம் ஏற்படும் என்பதை மகிந்தருக்கு இந்த முறை சொல்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

பேச்சுவார்த்தையிலே மகிந்தருக்கு நம்பிக்கை இல்லை. எங்களுடைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் மகிந்தரைச் சந்தித்த போது தன்னுடைய நல்லெண்ணத்தைக் காட்டவில்லை.
தொடர்ந்தும் ஜப்பானையே அவர் பேச்சுவார்த்தைக்கான இடம் என்று கூறுவதற்கு காரணம் அவர் பேச விரும்பவில்லை. இந்த நிலையில் எங்கள் மக்கள் எடுக்க வேண்டிய முடிவு என்ன என்பது அண்மைக்காலமாக எங்கள் மக்களின் செயற்பாடுகளுக்கு ஊடாக வெளிவந்திருக்கிறது.

இப்போ நிச்சயமாகத் தெரியும். புங்குடுதீவில் தர்சினி என்ற எங்கள் சகோதரிக்குச் செய்யப்பட்ட பாலியல் வல்லுறவுக் கொடுமை ஏற்கெனவே தென் தமிழீழத்தில் ஒவ்வொரு தமிழ்ப்பெண்ணிற்கும் செய்யப்பட்டிருக்கும் கொடுமைகளுக்கும் மாற்றாக அதனை உரைக்க வைப்பதற்காக தமிழ்ப் பெண்கள் மீது கைவைத்தால் என்ன நடக்கும் என்பதை வெளிப்படுத்துவதற்காக மக்கள் தாங்களாக முன்வந்து பயிற்சி பெற்று பயிற்சி பெற்ற மறுகணமே செயற்பட்டு இழிசெயலில் ஈடுபட்ட அந்த கடற்படையினருக்குத் தக்கபாடம் படைத்திருப்பதை இன்றைக்குச் செய்தியாக அறிந்தோம்.

எதையும் மூடிமறைக்க முடியாது என்பது உலகத்துக்கு நன்றாகத் தெரியும்.
தமிழ் மக்களுக்குச் செய்யப்பட்ட கொடுமைகளை இத்தனை காலம் மூடி மறைத்தது போல் இனிமேல் மூடிமறைக்க முடியாது. அப்படிச்செய்யவும் இயலாது. இந்த அடிப்படையில் இந்தியா மற்றும் சர்வதேச நாடுகள் மகிந்தரின் நாடகத்தைச் சரியாகப் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும் என்று விரும்புகிறோம்.

நாங்கள் சொல்ல வேண்டிய செய்தி..
இந்தியாவிலே மூன்றாம் தரப்பாக ஒரு சக்தி உருவெடுக்கிறது.
அந்த சக்தி எங்களுக்கு நேச சக்தி.

உரிமை கோருகிற இனங்களின் கட்சிகள் அதிகாரங்கள் கோருவது என்பது எங்களுக்கு உவப்பான செய்தி. அதை நாங்கள் ஆதரிக்கிறோம். ஆனால் தனிநாட்டுக் கோரிக்கையை அல்ல. அதேபோல் உலகத்தில் கூட மூன்றாம் தரப்பு சக்தியாக தென் அமெரிக்க நாடுகளிலே பொலிவியா, அர்ஜென்ரினா, கியூபா ஆகிய இடங்களிலே ஒரு புதிய அணி வெனிசூலா தலைமையில் உருவாகி வருவதை நாம் கவனத்தில் கொண்டு வருகிறோம்.
------------------------------------
இது உரையைப் பகிர்ந்துகொள்ளும் பதிவு மட்டுமே.
------------------------------------
நன்றி: புதினம்.

Labels: , ,

எழுதிக்கொள்வது: undefined

undefined

8.52 27.12.2005

Post a Comment

Get your own calendar

Links