« Home | பொஸ்பரஸ் தொடங்கி ஒற்றைத் துப்பாக்கி வரை... » | இந்து சமுத்திரத்தின திறவுகோல் யாருக்கு? » | கேணல் இறமணன் » | இரத்தம் தோய்ந்த நாளொன்றின் நினைவுகள். » | பிபிசி, உலகநாடுகளைப் புரிந்து கொள்வோம். » | திருகோணமலை வெறியாட்டம் -படங்கள் » | வாளைக் கைவிடாத சிங்கம். » | யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம். » | சிங்களப் பேரினவாத ஊடகங்கள். » | தாக்குதலில் 2 புலிகள் கொலை. »

இஸ்ரேலின் அடாவடியும் படிக்க வேண்டி பாடங்களும்

மறுபக்கம்:- கோகர்ணன்

பலஸ்தீனத்தின் பாராளுமன்ற ஆளுங்கட்சியாகவுள்ள ஹமாஸ் அமைப்புக்கு நெருக்கமான மூன்று போராளிக் குழுக்கள் காஸா பகுதியில் இஸ்ரேலின் எல்லைக்குக் குறுக்காகச் சுரங்கப் பாதையொன்றை வெட்டி இரண்டு இஸ்ரேலியச் சிப்பாய்களைச் சிறைப்பிடித்துக் கொண்டு செல்லுகையில் ஒருவர் இறந்து விட்டார். மற்றவர் காயப்பட்ட நிலையில் பலஸ்தீனத்தில் சிறைப் பிடிக்கப்பட்ட நிலையில் போராளிக் குழுக்களின் கண்காணிப்பில் உள்ளார். அதற்குப் பதிலாக இஸ்ரேல் காஸாவில் மின்சக்தி உற்பத்தி நிலையம் ஒன்றும் ஒரு பாலமும் உட்படப் பலவேறு பொதுப் பாவனைக்குரிய கட்டிடங்களைக் குண்டு வீசித் தகர்த்துள்ளது. அத்தாக்குதலின் விளைவாக காஸா பகுதியில் மக்களின் அன்றாட வாழ்வு பெரும் அல்லலுக்குள்ளாகியுள்ளது. எனினும் இஸ்ரேல் மீது அதன் போர்க்குற்றங்கட்கெதிரான நடவடிக்கை எடுப்பது பற்றி அமெரிக்காவோ, ஐரோப்பிய ஒன்றியமோ எதுவுமே சொல்லவில்லை.

பலஸ்தீனப் போராளிகளின் நடவடிக்கை மூலம் இஸ்ரேல் எழுப்பியுள்ள கொங்கிறீற்றினாலான நீண்ட பாதுகாப்பு வேலியின் பெறுமதி கேள்விக்குள்ளாகியுள்ளது. அது மட்டுமல்லாமல் பலஸ்தீன மக்களது தெரிவான ஹமாஸைப் பணிய வைக்கிற நோக்கில் பலஸ்தீன மக்களை வாட்டுவது உண்மையில் ஹமாஸையும் தீவிர வாதிகளையுமே வலுப்படுத்தியுள்ளது. பலஸ்தீனத்தின் ` சனாதிபதி' அபாஸ் இப்போது பெருமளவும் எகிப்து, ஜோர்டான் போன்ற அமெரிக்க சார்பு நாடுகளையே நம்பியிருக்கிறார். இன்று மத்திய கிழக்கில் உள்ள ஜனநாயகமற்ற நாடுகளில் எகிப்து மிகக் கொடிய அடக்குமுறை நிருவாகத்தைக் கொண்டது. ஜோர்டானில் பாராளுமன்றம் இருந்தாலும் அதிகாரம் அமெரிக்கச் சார்பு முடியாட்சியினதும் இராணுவத்தினதும் கையிலேயே உள்ளது. எனினும் ஜோர்டானின் வரலாற்றுப் பின்னணி காரணமாகவும் குறிப்பாக பலஸ்தீனப் பிரச்சினை ஜோர்டானுடன் தொடர்புடையது என்பதாலும் அதன் புவியியல் அமைப்பும் எல்லைகளும் அமைந்துள்ள முறையாலும் பொது மக்களிடையே பலஸ்தீனப் பிரச்சினை, ஈராக் பிரச்சினை போன்றவற்றில் அமெரிக்க - இஸ்ரேலிய எதிர்ப்புணர்வு வெளிப்படையாகக் காட்டப்படுவது ஒரு குறிப்பிடத்தக்க விடயமாகும். எனினும் இஸ்ரேலுடன் முதன்முறையாகத் தூதரக உறவுகளை ஏற்படுத்திய அரபு நாடுகளாக இவ்விரண்டு நாடுகளும் உள்ளமை அமெரிக்கச் செல்வாக்கின் வலிமையையே அடையாளங்காட்டுகிறது. இத்தகைய ஒரு சூழலே பலஸ்தீனத்தில் ஊழல் மிக்கதாகச் சீர்குலைந்து போன பலஸ்தீன விடுதலை இயக்கத் தலைமையைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.

பலஸ்தீன மக்களைப் பற்றிய `சர்வதே\u2970?' அக்கறை நமக்கு சில பாடங்களைக் கற்பிக்க வேண்டும். மேலைநாட்டு ஆட்சியாளர்களும் அவர்களை விடத் தந்திரமாக ஊடக நிறுவனங்களும் பலஸ்தீன மக்களுக்குப் பாதகமான முறையில் வெகுஜன அபிப்பிராயத்தைத் திருப்பவும் இஸ்ரேலிய அடாவடித்தனத்தை நியாயப்படுத்தவும் முனைப்பாக இருந்து வந்துள்ளன. இம்முறை இஸ்ரேலியச் சிப்பாயை விடுவிப்பதற்கான முன் நிபந்தனையாக இஸ்ரேல் சட்டத்தின் பேரிலும் சட்ட விரோதமாகவும் சிறையில் வைத்துள்ள நூற்றுக்கணக்கான பலஸ்தீன `சந்தேக நபர்களை' விடுவிக்க வேண்டும் என்று கோரப்பட்டதைத் கண்டிக்கிற தொனியில் ஹமாஸ் தலைவர் ஒருவரிடம் பி.பி.சி. நிருபர் விடாமல் கேள்வி கேட்டார். முடிவில் அவர் பத்து, இருபது ஆண்டு கட்கும் மேலாக இஸ்ரேல் வழக்கு விசாரணையில்லாமல் மறியலில் வைத்துள்ளவர்களைப் பற்றி நான் பேசுகிறேன். அது ஏன் உங்களுக்குக் கேட்கவில்லை என்று விடை கூறினார். ஆனாலும் அது பி.பி.சி. நிருபரின் காதில் விழவேயில்லை.

இஸ்ரேலியச் சிப்பாய்கள் பத்துப் பேர் பலஸ்தீன கெரில்லாக்களாற் கொல்லப்பட்டிருந்தாலும், இஸ்ரேலுக்கு இப்போது ஏற்பட்டுள்ள சங்கடம் ஏற்பட்டிராது என்பது தான் என் ஊகம். பதிலடியாக அப்பாவிப் பலஸ்தீனப் பெண்களும் குழந்தைகளும் உட்பட ஐம்பது, நூறு பேரைக் கொன்றிருப்பார்கள். அவ்வாறு, "கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்" என்கிற பழைய ஏற்பாட்டு பழிவாங்கல் மூலம் இஸ்ரேலிய மக்களை ஆறுதற்படுத்தியிருப்பார்கள். ஒரு பணயக் கைதியால் ஏற்படுகிற சிக்கல் பெரியது. பணயக் கைதியை மீட்க இயலாமை அரசாங்கத்தின் பலவீனமாகவே காட்டப்படும். எனவே தொடர்ந்து ஏதாவது செய்கிறதாக மக்களுக்குக் காட்டிக் கொண்டேயிருக்க வேண்டும். அதற்கான விலையை பலஸ்தீன மக்கள் கொடுத்துக் கொண்டிருப்பார்கள். `சர்வதேசம்' எனப்படுகிற ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் ஜப்பானும் `த்சொ, த்சொ" என்று மெல்லச் சப்புக் கொட்டி பலஸ்தீன மக்களின் பால் தமது அனுதாபத்தையும் இஸ்ரேலுக்கு தமது இரகசிய அங்கீகாரத்தையும் வழங்கிக் கொள்ளுவார்கள். இஸ்ரேல் விளைவித்த சேதங்கட்கு நிவாரணமோ, நட்டஈடோ பற்றி எதுவுமே பேசப்பட மாட்டாது. எப்படியாயினும் ஒன்று மட்டும் உறுதி. பலஸ்தீன மக்களுடைய உரிமைகள் முற்றாக மீட்டெடுக்கப்படாதளவும் இஸ்ரேலுக்கு அமைதியோ, பாதுகாப்போ இல்லை. இஸ்ரேலின் பாதுகாப்பு என்கிற பேரில் மத்திய கிழக்கில் தனது குறுக்கீட்டை வலுப்படுத்துகிற அமெரிக்காவின் உண்மையான நோக்கங்கள் மத்திய கிழக்கின் எண்ணெய் வளம் தொடர்பானது என்பதை நாம் அறியாமலிருக்க நியாயமில்லை. அமெரிக்காவின் அயற் கொள்கையில் அமெரிக்க யூதர்களதும் இஸ்ரேலினதும் அழுத்தம் பெரும்பாதிப்பை செலுத்துகிறதென்பதை விட இஸ்ரேலின் நடத்தை அமெரிக்க நலன்களால் வழி நடத்தப்படுகிறது என்பதே உண்மைக்குப் பொருந்தி வரும்.

இந்தப் பத்தி அச்சாவதற்கிடையில் பலஸ்தீன மக்கள் மீது மேலும் பல பாரிய தாக்குதல்கள் தொடுக்கப்படலாம். அதற்கும் மேலாக, அமெரிக்காவும் இஸ்ரேலும் சில காலமாகவே குறி வைத்துள்ள சிரியாவுக்கு எதிராக தாக்குதல்கள் நடத்தவும் வாய்ப்புகள் உள்ளன. சிரியா ஹமாஸை ஆதரிக்கிறதா, இல்லையா என்பது எவரதும் கேள்வியல்ல. சிரியா பலஸ்தீன விடுதலைக்காகப் போராடுகிற சக்திகள் பலவற்றை நீண்டகாலமாக ஆதரித்து வந்துள்ளது என்பதே பிரச்சினை. எனவே, அணுகுண்டுகளைக் கைவசம் வைத்துள்ள வட கொரியாவையோ, அணுசக்தி ஆராய்வில் அமெரிக்காவின் ஆணைக்குப் பணிய மறுக்கிற ஈரானையோ கடுமையாக மிரட்டி எது விதமான பயனும் இல்லாமையால் சிரியாவையாவது தண்டித்து அமெரிக்க வல்லரசின் நம்பகத் தன்மையை நிரூபிப்பது முக்கியமாகியுள்ளது. இதுவே இன்றைய உலக அரசியலின் யதார்த்தம். அரபு உலகம் எனப்படுவது பிளவுபட்டுள்ளது. முஸ்லிம்களின் ஐக்கியம் என்பது வாய்ப்பேச்சோடு நின்று விடுகிறது. எனவே தான் அமெரிக்கா போன்ற ஒரு பெரு வல்லரசின் ஆதிக்கத்தையும் ஆக்கிரமிப்பையும் எதிர்த்து நிற்பதானால் அதற்கு இன அடிப்படையிலோ ,மத அடிப்படையிலோ ஒன்றுபட்டுப் போராடுவது இயலாதது. தேசிய அடிப்படையிலான போராட்டங்கள் கூட, மிகவும் வரையறைக்குட்பட்டே செயற்பட இயலுமாகிறது.

ஏறத்தாழ ஒவ்வொரு அரபு நாட்டிலும் உள்ள அதிகாரவர்க்கங்களது நலன்களும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களுடன் தம்மை நெருக்கமாகப் பிணைத்துக் கொண்டுள்ளன. அமெரிக்காவை மீறி இஸ்ரேலைப் பகைக்க ஓரளவேனும் ஆயத்தமாக உள்ள ஒரே அரபு நாடாக மிஞ்சியுள்ளது சிரியா மட்டுமே. பிற இஸ்லாமிய நாடுகளுள் பலஸ்தீன விடுதலை பற்றிய தீவிர அக்கறை ஈரானிய ஆட்சியாளர்கட்குள்ளளவு வேறு இஸ்லாமிய நாடெதிலும் இருப்பதாகக் கூறுவது கடினம்.

அதேவேளை, சமூக நீதிக்காகப் போராடுகிற மக்களிடையேயும் முற்போக்கு சக்திகளிடையிலும் பலஸ்தீனத்தின் மக்களுக்கும் அவர்களது போராட்டத்துக்கும் மிகுந்த ஆதரவுண்டு. பலஸ்தீன மக்கள் இந்த ஆதரவை மேலும் முழுமையாகப் பயன்படுத்த வேண்டிய தேவை வளர்ந்து வருகிறது. ஹமாஸ் தனது இஸ்லாமிய அடையாளத்தை மறைக்காமலே மதச்சார்பற்ற பலஸ்தீன விடுதலைப் போராட்டம் ஒன்றின் புத்துயிர்ப்புக்கு வழி செய்யக் கூடிய சூழ்நிலை ஒன்றுக்கு புகாமல் பலஸ்தீன விடுதலையை மேலும் வலுப்படுத்த இயலாது. எந்த விதமான இன, மத அடையாளங்களும் அவை சார்ந்து தம்மைத் தனிமைப்படுத்துகிற போக்கும் பலஸ்தீன மக்களின் விடுதலைக்கு உதவப்போவதில்லை என்பதை ஹமாஸ் படிப்படியாகவேனும் உணர்ந்தேயாக வேண்டும். அதேவேளை, பலஸ்தீன மக்களின் விடுதலைக்கான போராட்ட உணர்வைக் கணிசமான அளவுக்கு சரியாக அடையாளப்படுத்துகிற சக்தியாக ஹமாஸ் இருக்கிறது என்ற உண்மையை உலக நாடுகளின் தலைமைகள் ஏற்குமாறு செய்கிற பொறுப்பு ஒவ்வொரு நாட்டிலும் நியாயத்திற்கும் மனித இனத்தின் விடுதலைக்கும் ஆதரவாக உள்ள அனைவரிடமும் உள்ளது.

விடுதலைப் புலிகளின் மீதான ஐரோப்பிய ஒன்றியத் தடையை வட அயர்லாந்தின் ஷின் ஃபெய்ன் தலைவர்களுள் ஒருவரான மாட்டின் மக்கினஸ் தைரியமாகக் கண்டித்துள்ளார். அதுபோன்று தேசிய எல்லைகளைக் கடந்த நியாயத்தின் குரல்கள் ஒவ்வொரு போராட்ட நியாயத்தையும் ஆதரித்துப் பேச வேண்டும். இன்று இஸ்ரேலின் கொடுமையைக் கண்டிக்கவும் இஸ்ரேலைத் தனிமைப்படுத்தவும் மூன்றாம் உலக நாடுகளிலிருந்து உரத்த குரல்கள் எழுமானால், அவை இஸ்ரேலின் எசமானனும் அடக்குமுறை ஆட்சிகள் பலவற்றின் ஆதரவுச் சக்தியாகவும் உள்ள அமெரிக்காவையும் தாக்கும். எனவே தான் பலஸ்தீனத்தின் விடுதலைப் போராட்டத்தின் பாடங்களையும் பலஸ்தீன விடுதலைச் சக்திகட்குச் சார்பாக பல வேறு உலக நாடுகளின் மக்களது நிலைப்பாடுகள் கூறுகிற செய்திகளையும் உலகின் சகல விடுதலை இயக்கங்களும் ஐயத்திற்கிடமின்றிக் கற்க வேண்டும். பலஸ்தீனத்தில் இஸ்ரேலின் கொடுமைகளை எதிர்க்கத் தவறுபவர்கள் உலகில் நடக்கிற எந்தக் கொடுமையையும் ஆதரிக்கக் கூடியவர்கள் என்பதை நாம் மறக்கலாகாது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நன்றி: தின்க்குரல்
Sunday, July 16, 2006

Labels:

இஸ்ரேல் பிரச்சனையைப் பற்றிய ஒரு நல்ல பதிவு. தற்பொழுதைய சூழலுக்கு மிகவும் அதியவசியமான பதிவு. வாழ்த்துக்கள்

/ஹமாஸ் தனது இஸ்லாமிய அடையாளத்தை மறைக்காமலே மதச்சார்பற்ற பலஸ்தீன விடுதலைப் போராட்டம் ஒன்றின் புத்துயிர்ப்புக்கு வழி செய்யக் கூடிய சூழ்நிலை ஒன்றுக்கு புகாமல் பலஸ்தீன விடுதலையை மேலும் வலுப்படுத்த இயலாது. எந்த விதமான இன, மத அடையாளங்களும் அவை சார்ந்து தம்மைத் தனிமைப்படுத்துகிற போக்கும் பலஸ்தீன மக்களின் விடுதலைக்கு உதவப்போவதில்லை என்பதை ஹமாஸ் படிப்படியாகவேனும் உணர்ந்தேயாக வேண்டும். அதேவேளை, பலஸ்தீன மக்களின் விடுதலைக்கான போராட்ட உணர்வைக் கணிசமான அளவுக்கு சரியாக அடையாளப்படுத்துகிற சக்தியாக ஹமாஸ் இருக்கிறது என்ற உண்மையை உலக நாடுகளின் தலைமைகள் ஏற்குமாறு செய்கிற பொறுப்பு ஒவ்வொரு நாட்டிலும் நியாயத்திற்கும் மனித இனத்தின் விடுதலைக்கும் ஆதரவாக உள்ள அனைவரிடமும் உள்ளது.//

இது போல் உலகில் எங்கு நடந்தாலும் அதற்க்கு சர்வதேச அள்வில் மனித விடுதலையில் நம்பிக்கை கொண்டவர்கள் குரல் கொடுக்க வேண்டும்.

இது விடுதலைப் புலிகளுக்கும் பொருந்தும் அல்லவா? அதாவது இன, மொழி அடையாளங்களை களைந்து. ஈழப் பிரச்சனையை வைத்து அங்கு அரசியல் நடத்தி தனது பொருளாதார நலன்களை உறுதிப்படுத்திக் கொள்ளும் ஏகாதிபத்தியங்களை அம்பலப்படுத்தி, அந்த சக்திகளின் தோல்வியை கடைசி லட்சியமாக கொண்டு விடுதலைப்புலிகள் இயங்க வேண்டும் என்று கூறுவதாக நான் புரிந்து கொள்கிறென்.

நன்றி,
அசுரன்

அசுரன்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அசுரன்.

ஆம்! நிச்சயமாக ஈழத்தமிழர்க்கும் அவர்களின் அரசியற்றலைமையாக நான் நினைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இது பொருந்தும்.
வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய தேவையுள்ளது.

//அதாவது இன, மொழி அடையாளங்களை களைந்து//
இது புலிகளுக்குச் சொல்லப்படும் அறிவுரையா?
அப்படியாயின் அதற்கான தேவையில்லையென்பதே என் கருத்து.
அவர்கள் களைந்துவிட்டார்கள் என்பதன்று கருத்து.
களையத் தேவையில்லையென்பதே.

Post a Comment

Get your own calendar

Links