« Home | சிங்களப் பேரினவாத ஊடகங்கள். » | தாக்குதலில் 2 புலிகள் கொலை. » | சு.ப.தமிழ்ச் செல்வனின் உரை. » | ஜெனீவாப் பேச்சுப் பற்றி தமிழ்ச்செல்வன் » | திருமாவளவனின் உரை » | ஹமாஸ் வெற்றி பற்றி விடுதலைப்புலிகள் » | போர் நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறியது யார்?: » | மறுபக்கம். » | தமிழர் புனர்வாழ்வுக் கழகம் அவசர வேண்டுகோள்! » | மாமனிதர் ஞானரதன் »

யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம்.

மறுபக்கம் - கோகர்ணன்

09.04.2006 அன்றைய ஞாயிற்றுத் தினக்குரல் வாரப்பத்திரிகையில் வெளிவந்த
மறுபக்கக் கட்டுரையை இங்கே தருகிறேன். மூலப்பதிப்புக்கு இங்குச் செல்லவும்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனம் இன்று ஒரு அரசியற் பிரச்சினையாகியுள்ளது. உண்மையில் பல காலமாக எல்லாப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களும் அரசியற் காரணங்கட்காகவே நியமிக்கப்பட்டுள்ளனர். பல்கலைக்கழகக் கவுன்சில் எனப்படும் நிருவாக சபையில் பல்கலைக்கழகப் பீடாதிபதிகளும் மூதவை (செனெற்) தெரிவு செய்யும் இருவரும் வெளி உறுப்பினர்களும் இருப்பர். வெளி உறுப்பினர்களது நியமனத்தை பல்கலைக்கழக மானிய ஆணையமே (யூ.ஜி.சி.) செய்கிறது. யூ.ஜி.சி. அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. உயர்கல்வி அமைச்சின் கீழ் யூ.ஜி.சி. வருவதாக பல்கலைக்கழகந் தொடர்பான சகல நியமனங்களும் அமைச்சரின் பொறுப்பிற்கு உட்படுகின்றன. சந்திரிகா குமாரதுங்க உயர்கல்வி அமைச்சுப் பொறுப்பை ஏற்ற பின்னர் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் பற்றிய முடிவு, சனாதிபதியிடமே இருந்தது. அது இன்னமும் அவ்வாறே நடைமுறையில் உள்ளது.

ஒவ்வொரு பல்கலைக்கழகக் கவுன்சிலும் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்கிறவர்களில் தகைமையுடைய வேட்பாளர்களில் மூவரைத் தேர்தல் மூலம் பரிந்துரைக்கலாம். முதலாவது தெரிவை ஏற்பது பொதுவான நியாயமானது. தெரியப்பட்டவர் பதவிக்குத் தகாதவர் என்று கருதப்பட்டால் இரண்டாமவரையோ அவரும் தகுதியற்றவராயின் மூன்றாமவரையோ நியமிக்கலாம். அல்லது நியமனத்திற்கு மீண்டும் பேர்களைப் பரிந்துரைக்குமாறு கேட்கவும் இடமுண்டு. இங்கே தலைமை என்பது முற்றிலும் அரசியல் அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்படுகிறது. இந்தக் குழறுபடியின் தொடக்கங்கள் 1978 ஆம் ஆண்டுப் பல்கலைக்கழகச் சட்டமூலத்தின் நோக்கங்களுடன் தொடர்புடையவை. எனவே, பதிலை இந்த அரசாங்கத்தின் மீது மட்டும் சுமத்த முடியாது.

பல்கலைக்கழகங்களைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிற தேவை சனநாயக விரோத அரசாங்கம் ஒவ்வொன்றுக்கும் இருக்கிறது. அதுபோக, அறிஞர் பெருமக்கள் எனப்படுவோரிடையேயுள்ள பதவி மோகம் அற்பமானதல்ல. எனவே, அரசாங்கத்திற்கு உடன்பாடாக நடந்துகொள்ளக் கூடியவர்கள் மட்டுமில்லாமல், அரசாங்கத்தின் மனமறிந்து அதற்கேற்ப நெகிழ்ந்து, திசையறிந்து காய் நகர்த்துவது ஒரு முக்கியமான தகைமையாகிறது. அப்படியிருந்தும் தப்பித் தவறி சில உருப்படியான துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனினும், அவர்களால் சுயாதீனமாக செயற்பட இயலுமாயிருந்ததாக நான் நம்பவில்லை.

பல்கலைக்கழகத் துணைவேந்தர்களின் நியமனங்கள் பற்றி ஆறேழு ஆண்டுகள் முன்னம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள ரத்னஜீவன் ஹூல் சொன்ன பல விடயங்கள் இன்றைய நிலைவரத்துக்கும் பொருந்தும்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கவுன்சிலின் முதலாவது பரிந்துரையைத் தவிர்த்து, இரண்டாவதாகப் பரிந்துரைக்கப்பட்டவரை யூ.ஜி.சி. சனாதிபதிக்குப் பரிந்துரைத்ததாகவும் அவர் மூன்றாவதாகப் பரிந்துரைக்கப்பட்டவரை நியமித்ததாகவும் அறிகிறேன். இதிற் சட்டப்படி எவ்விதமான பிழையுமில்லை. இதற்கு முந்திய முறையும் பல்கலைக்கழகத்தின் முதலாவது தெரிவு மதிக்கப்படவில்லை.

உண்மை என்னவென்றால், யூ.ஜி.சி. நியமனங்கள் போல துணைவேந்தர் நியமனங்களும் பல்கலைக்கழகங்கள் மீது திணிக்கப்படுகின்றன. ஒரு துணைவேந்தர் இரண்டு முறை பதவியிலிருக்கலாம். ஒரு முறைக்கு மூன்று ஆண்டுகளாக அடுத்தடுத்து ஆறு வருடப்பதவியை அனுபவிக்க விரும்புகிற எவரும் தனது முதல் மூன்று ஆண்டுகளில் கவனமாகவே அடியெடுத்து வைக்க வேண்டியிருக்கும். எனவே, பல்கலைக்கழகத்தின் நலன்களை விட அரச விசுவாசம் (உண்மையில் ஆளுங்கட்சிக்கு விசுவாசம்) முக்கியமானதாக இருக்கும்.

எனவே, ஒரு பல்கலைக்கழகத்தைக் குட்டிச்சுவராக்குவதற்கு யாரைப் பயன்படுத்தப் போகிறார்கள் என்பதுதான் ஆட்சியாளர்களின் உண்மையான தெரிவு. என்னுடைய அனுபவத்தில், பொதுப்படச் சொல்வதானால், இப்படிப்பட்ட பதவிகட்குப் பின்னால் அலைகிற எவரும் அப்பதவி மூலம் பயனுள்ள எதையுமே செய்ததில்லை. என்றாலும், பல்கலைக்கழகத் துணைவேந்தரின் நியமனத்தினால் நோயாளியாகப் பாதிக்கப்படக்கூடிய பல்கலைக்கழக ஆசிரியர்களும் ஊழியர்களும் மாணவர்களும் தம்மால் ஏற்க இயலாத ஒரு நியமனத்தை மறுக்க நியாயம் உண்டு. அவர்களது முறைப்பாடுகளைக் கேட்டு உரிய நடவடிக்கை எடுக்கும் கடமை உயர்கல்வி அமைச்சுக்கு உண்டு. இவ்வாறான பிரச்சினைகள் சுமுகமாகத் தீர்க்கப்படாவிட்டால், பல்கலைக்கழகத்தினுள் கொந்தளிப்பான நிலைமைகள் தொடரும். கல்வி மேலும் சீரழிய நேரிடும். எனவே, அரசாங்கம் மாணவர்களதும் பல்கலைக்கழக ஆசிரியர்களதும் ஊழியர்களது கருத்துக்களைக் கணிப்பிலெடுக்க வேண்டும். அவற்றை நிராகரித்து ஒரு நியமனத்தை அவர்கள் மீது திணிப்பது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு நல்லதல்ல. யாழ்ப்பாணச் சமூகத்துக்கும் நல்லதல்ல. நியமிக்கப்பட்டவருக்கும் நல்லதல்ல. ஏனெனில், ஒரு பல்கலைக்கழகம் பகைமையான சூழலில் இயங்குவது தகாது.

மக்களின் கருத்தை அரசாங்கம் காதுகொடுத்துக் கேட்க வேண்டும் என்று தமிழ் அரசியல்வாதிகள் வற்புறுத்துவது சரியானது. ஆனால், இன்னாரை நியமிக்க வேண்டும் இன்னாரை நியமிக்கலாகாது என்று கூற முற்படுவது சரியானதல்ல. இது அரசாங்கத்தின் நடத்தையையொத்தளவு தவறானது.
யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக வளாகம் நிறுவப்பட்டபோது, (1974 ஆம் ஆண்டு நாடு முழுவதற்கும் ஒரேயொரு பல்கலைக்கழகமே இருந்தது) கைலாசபதி வளாகத் தலைவராக நியமிக்கப்பட்டார். அவரும் கலைப்பீடப் பீடாதிபதியாக நியமிக்கப்பட்ட இந்திரபாலாவும் அரும்பாடுபட்டு யாழ் வளாகத்தைக் கட்டியெழுப்பினர். யாழ்ப்பாணச் சமூகத்திற்கும் யாழ்ப்பாண வளாகத்துக்கும் இருந்த ஒட்டுறவுபோல ஒன்று இலங்கையின் வேறெந்தப் பல்கலைக்கழகத்திற்கோ வளாகத்திற்கோ தனது சூழலில் வாழ்ந்த மக்களுடன் இருந்ததாக அறியேன்.

யாழ்ப்பாண வளாகம் நிறுவப்பட்ட காலந்தொட்டு அதற்குக் குழிபறிப்பதிலேயே கண்ணாக இருந்தவர்கள் தமிழரசுக் கட்சி அரசியல்வாதிகள். யாழ்ப்பாண வளாகம் பலவிதமான சூழ்ச்சிகட் கூடாக புரையோடித்தான் தன்னை நிலைநிறுத்த முடிந்தது. எனினும், 1978 ஆம் ஆண்டு புதிய பல்கலைக்கழகச் சட்டமூலத்தின் வருகையையொட்டி வளாகம் பல்கலைக்கழகமாகியபோது கைலாசபதியோ இந்திரபாலாவோ துணைவேந்தராகக் கூடாது என்பதற்காக தமிழரசுக் கட்சியினர் முனைப்பாகச் செயற்பட்டனர். அதில் வெற்றியும் பெற்றனர். முதலாவது துணைவேந்தரின் நியமனம் 1977 தேர்தலில் இரகசியக் கூட்டணிகளாக இயங்கிய யூ.என்.பி. யினதும் தமிழர் விடுதலைக் கூட்டணியினதும் பூரண ஆசிகளுடன் நடந்தது. இது நியமிக்கப்பட்டவர்கள் தகைமை பற்றிய எனது விமர்சனமல்ல. நியமனம் நடைபெற்ற பின்னணி பற்றிய எனது கூற்று.

தமிழ்த் தலைவர்கட்கும் பல்கலைக்கழகங்கள் ஒழுங்காக நடக்க வேண்டும் என்ற அக்கறை இருந்தால் பல்கலைக்கழக நிருவாகத்தில் குறுக்கிடாமல் இருப்பதன் மூலம் அவர்கள் அந்த அக்கறையைக் காட்டிக்கொள்ள முடியும். அப்போது பிற அரசியற் குறுக்கீடுகளை அவர்கள் கண்டிப்பதில் முழுமையான நியாயம் இருக்கும்.

இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் கடுமையான ஆள் பற்றாக்குறையை எதிர்நோக்குகிறது. முக்கியமான பல துறைகளில் தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் இல்லை. நான்கு ஆண்டுகட்கு முன்பு கட்டிடங்களோ ஆய்வுகூட, உபகரணங்களோ ஆசிரியர்களோ கல்வித்திட்டமோ, பாடவிதானமோ இல்லாமல், பொறியியற் பீடத்தைத் தொடங்கவும் மாணவர்களை அனுமதிக்கவும் திட்டமிடப்பட்டிருந்தது. அந்த ஆலோசனைக்குப் பின்னால் பல்வேறு அரசியற் கணிப்புகளும் தனி மனிதர்களது கவனமும் இருந்தன. பிரச்சினைகள் பகிரங்கமாக விவாதிக்கப்பட்டதன் விளைவாக அந்த அவசரத் திட்டம் கைவிடப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 1989 முதல் 1995 வரை கடுமையான அரசியல் நெருக்கங்கள் நடுவே செயற்பட வேண்டியிருந்த போது, காலஞ்சென்ற துரைராஜாவின் நிதானமான வழிநடத்தல் மூலம் பல்கலைக்கழக கல்வி இடையூறின்றி நடைபெற்றது. அதற்குப் பல்கலைக்கழகத்திற்கும் யாழ்ப்பாண மக்களுக்குமிடையில் இருந்த நல்லுறுவு மிகவும் உதவியது.
இந்த நேரத்தில் அந்த நெருக்கடியான சூழல் பற்றி, நினைவு கூராமல் இருக்க இயலவில்லை. இது பல்கலைக்கழக சமூக நலன்களை முதன்மைப்படுத்த வேண்டிய வேளை, அரசாங்கம் உட்பட அனைவரும் கவனமாகச் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.

நன்றி:தினக்குரல்

Labels:

நல்ல பதிவும் தேவையானதும் கூட

நல்ல பதிவும் தேவையானதும் கூட

Post a Comment