« Home | யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம். » | சிங்களப் பேரினவாத ஊடகங்கள். » | தாக்குதலில் 2 புலிகள் கொலை. » | சு.ப.தமிழ்ச் செல்வனின் உரை. » | ஜெனீவாப் பேச்சுப் பற்றி தமிழ்ச்செல்வன் » | திருமாவளவனின் உரை » | ஹமாஸ் வெற்றி பற்றி விடுதலைப்புலிகள் » | போர் நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறியது யார்?: » | மறுபக்கம். » | தமிழர் புனர்வாழ்வுக் கழகம் அவசர வேண்டுகோள்! »

வாளைக் கைவிடாத சிங்கம்.

தினக்குரல் மறுபக்கம்.
-கோகர்ணன்-

சிங்கம் ஒரு போதும் வாளைக் கைவிடப் போவதில்லை

* பிரச்சினை தான் என்ன? அவர்களால் தொடர்ந்தும் இனவாத அரசியலுடனும், வெறித்தனமான
தமிழர் விரோதப் போக்குடனும் எவ்வாறு இணைந்திருக்க முடிகிறது?

-வசிஸ்டர்-

சமீபத்தில் திருகோணமலையில் நடந்த சம்பவங்களைக் கேள்வியுற்றதும் அன்றிரவே திருகோணமலையில் உள்ள எனது நண்பர் ஒருவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலைமைகளை விசாரித்தேன். சில நிமிட தொலைபேசி உரையாடலில் அவர் கூறிய ஒரு விடயம் எனக்கு மிகவும் முக்கியமாகப்பட்டது. அந்த நண்பர் தனக்குத் தெரிந்த விடயங்களை விபரித்து விட்டு "சிங்கம் வாளை ஒருபோதும் கைவிடப் போவதில்லை" என மிகுந்த ஆதங்கத்துடன் கூறினார். 'சிங்கம் ஒருபோதும் வாளைக் கைவிடப் போவதில்லை' இக் கூற்றை அவர் ஒரு வரலாற்றுப் பின்புலத்தில் கூறினாரோ என்னவோ ஆனால் அக்கூற்றானது ஒரு ஒடுக்குமுறை வரலாற்றையே உட்கொண்டிருக்கின்றது. இன்றுவரை அந்த ஒடுக்குமுறை வரலாற்றுப் பாரம்பரியத்தில்தான் சிங்கள மக்களின் அரசியல் வாழ்வு நகர்ந்து கொண்டிருக்கிறது. அந்த வரலாற்றுப்போக்கிலிருந்து சிங்கள மக்கள் எப்பொழுது விலகப்போகிறார்கள். அது குறித்துத்தான் இக்கட்டுரையில் பேசலாம் என நினைக்கிறேன்.

உண்மையில் திருகோணமலை சம்பவங்கள் என்னளவில் கோபத்தையும் துயரத்தையும் ஏற்படுத்தியதேயன்றி ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. சிங்கள பெருந்தேசியவாதத்தின் வரலாற்றுப் போக்கையும் ஒவ்வொரு காலகட்டத்திலும் வெளிப்பட்ட அதன் அசிங்கமான முகங்களையும் அறிந்துகொண்டிருக்கும் எவருக்கும் இவ்வாறான சம்பவங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தப்போவதில்லை. சிங்களம் பெரிதாக வெட்டி விழுத்தி விடப்போகிறதென எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு வேண்டுமானால் இச்சம்பவம் ஆச்சரியத்தைக் கொடுத்திருக்கலாம். ஒரு வகையில் திருகோணமலை சம்பவங்கள், கடந்த நான்கு வருடங்களாக சிங்கள மக்கள் இனவாதப் போக்கிலிருந்து விலகிவிட்டதாகவும் அவர்கள் சகவாழ்வை விரும்புவதாகவும் கதையளந்து கொண்டிருந்த பலரின் முகத்திரையை கிழித்திருக்கின்றது.

ஆனால் இச்சம்பவங்கள் குறித்து ஜே.வி.பி.யினர் வெளியிட்டிருக்கும் அறிக்கை நமது கவனத்துக்குரியது. அரசின் தவறுகள் காரணமாகவே திருகோணமலையிலுள்ள சிங்கள மக்கள் சட்டத்தை தமது கையில் எடுத்திருக்கின்றனர் என்பது ஜே.வி.பி.யின் வாதம். எனவே இங்கு சட்டம் என்பதன் அர்த்தம் நம்மைப் பொறுத்தவரையில் இவ்வாறுதானே அமைய முடியும். சிங்கள மேலாதிக்கத்தை பேணும்வகையில் தமிழர்களை அடக்கி ஒடுக்குதல் தேவைப்பட்டால் அழித்தொழித்தல் என்பதுதான் சிங்கள பௌத்தத்தின் சட்ட எல்லை. இந்த அரச கடப்பாட்டை மகிந்த அரசு செய்யத்தவறியதன் விளைவுதான் திருகோணமலையிலுள்ள சிங்கள மக்கள் அதனை நடைமுறைப்படுத்த வீதியில் இறங்கியிருக்கின்றனர். ஜே.வி.பி.யின் இக் கூற்றானது திருகோணமலையில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அழித்தொழிப்பு நடவடிக்கைகளுக்கு அரசியல் நியாயத்தை வழங்கியிருப்பதுடன் சிங்களவர்களை மேலும் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான மனோபலத்தையும் வழங்குகின்றது. ஜே.வி.பி.யினர் வெளிப்படையாகவே தமிழர் விரோதப் போக்கை கடைப்பிடித்துவரும் பௌத்தவாத அமைப்பினர் என்பதால் இதனை வெளிப்படையாக அவர்களால் கூறமுடிந்திருக்கிறது.

உண்மையில் சிங்கள மக்களின் பிரச்சினைதான் என்ன? அவர்களால் தொடர்ந்தும் இனவாத அரசியலுடனும், வெறித்தனமான தமிழர் விரோதப் போக்குடனும் எவ்வாறு இணைந்திருக்க முடிகிறது? நவீன சிந்தனைகளுக்கு அப்பாற்பட்ட இத்தகையதொரு போக்கு எவ்வாறு சிங்கள மக்களுக்குள் நிலையாகத் தொழிற்படுகிறது? ஒரு வகையில் இவைகள் சுவாரஸ்யமானதும் மறுபுறம் எரிச்சல் ஊட்டக் கூடியதுமான கேள்விகள்தான். ஆனால் என்ன செய்வது சிங்கள தேசத்தின் அரசியல் அத்தகையதொரு அடித்தளத்தில் இயங்கிவருவதால் எரிச்சலூட்டக் கூடிய இக் கேள்விகளை நாம் மீண்டும் மீண்டும் கேட்கவேண்டியிருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் என நினைக்கிறேன். ஜேர்மனியிலிருந்து வந்த நண்பரொருவர் கொழும்பு தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் தன்னிடம் கூறியதாக ஒரு விடயத்தைக் குறிப்பிட்டார். அதன் சாத்தியப்பாடுகள் பற்றியும் விவாதித்தார். இன்னும் பத்துவருடங்களில் சிங்கள இனவாதம் முற்றாக அழிந்து விடும். உலகமயமாக்கல் சிங்கள இனவாதப்போக்கை விழுங்கிவிடும் என்பதுதான் அந்த நண்பர் குறிப்பிட்ட விடயம்.

இப்படியான பார்வைகள் சிலரிடம் இருப்பதை நானறிவேன். ஆனால் இவ்வாறான கற்பனவாத கருத்துக்களை நிரூபிப்பதற்கான எந்தவிதமான சான்றுகளையும் சிங்களம் விட்டு வைக்கவில்லை. உலகத்தையே கிராமமாகச் சுருங்கிவிட்ட இந்த பகாசுர அரசியல் சூழலிலும் சிங்கள இனவாத அரசியல் மிகவும் இறுக்கமான நிலையில் தொழிற்படுவது சிலருக்கு வியப்பைக் கொடுக்கலாம். என்னளவில் இந்நிலைமை வியப்புக்குரிய ஒன்றல்ல. எனக்கு மட்டுமல்ல சிங்கள பௌத்த இனவாதப் போக்கை புரிந்துகொண்டவர்கள் எவருக்குமே இந்நிலைமைகள் வியப்புக்குரிய ஒன்றாக இருக்கப்போவதில்லை. சிங்கள இனவாத அரசியலானது சிங்கள பௌத்த அடிப்படைவாதமாக உருமாறி நீண்டகாலமாகிவிட்டது.

ஆரம்பத்திலிருந்தே சிங்களத்துவ அரசியல் அடிப்படைவாதப் பண்பு நிலையிலேயே தொழிற்பட்டு வந்திருக்கிறது. கடந்த முப்பது வருடங்களில் அது தீவிர நிலையை அடைந்துவிட்டது. தமிழீழத் தேசிய எழுச்சியும் குறிப்பாக சிறிலங்கா அரசு போரில் விடுதலைப்புலிகளிடம் படுதோல்வியடைந்ததும் இந்த தீவிர நிலையின் புறக்காரணிகளாக இருக்கின்றன. தமிழ்த் தேசிய எழுச்சிக்கு முன்னர் தமிழர்களுக்கு இந்த நாட்டில் இடமில்லையென்ற அடிப்படையில் நிலைபெற்றிருந்த சிங்கள அடிப்படைவாதம் தமிழர் விடுதலைப் போராட்டத்தை அடக்கும் முயற்சியில் தோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து சிங்கத்தின் இனமான சிங்களவர்கள் தமிழர்களிடம் தோற்றுவிட்டனர் என்னும் தோல்விவாத அரசியலின் அடிப்படையில் சிங்கள அடிப்படைவாதத்தை கட்டமைக்கின்றது. இவ் அரசியல் முன்னரைக் காட்டிலும் அதிதீவிரம் மிக்கதாகவும் சிங்கள மக்களை வெறித்தனமான தமிழர் விரோதத்தில் தக்கவைக்கக் கூடிய ஆற்றலைக் கொண்டதாகவும் இருக்கிறது.

எனவே இப்பொழுது இலங்கையின் இனமுரண்பாடு அரசியலானது சிங்கள பௌத்த அடிப்படைவாதத்திற்கும் ஒடுக்கப்பட்ட தேசியத்திற்கும் இடையிலான முரண்பாடாக உருமாறிவிட்டது. இந்த இடத்தில் சிலருக்கு இருக்கும் நம்பிக்கைக்கு இசைவாகவே நாம் ஒரு கேள்வியைக் கேட்போம். உலகமயமாக்கல் சிங்கள அடிப்படைவாதத்தை விழுங்கக் கூடிய சாத்தியமுண்டா? இன்றைய உலக அரசியல் போக்கில் உலகமயமாக்கல் மிகவும் சக்திவாய்ந்த ஒன்றாக மேலெழுந்திருப்பது உண்மைதான். ஆனால் மறுபுறமாக இந்த ஒற்றையொழுங்கு அரசியலுக்கு சவால்விடக்கூடிய சக்திவாய்ந்த தீவிர அரசியல்போக்காக அடிப்படைவாத அரசியல் மேலெழுந்து வருகிறது. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டுத்தான் இஸ்லாமிய அடிப்படைவாதமாகும். மார்க்சிய அரசியலின் வீழ்ச்சிக்குப் பின்னர் ஒற்றையொழுங்கு அரசியல் போக்கிற்கு சவால்விடக் கூடிய மாற்று அரசியல் அற்ற நிலையிருந்தது. தற்போது அந்த இடத்தை அடிப்படைவாத அரசியல் கைப்பற்றியிருக்கிறது.

இஸ்லாமிய அடிப்படைவாதமானது மேற்கு எதிர்ப்பில் குறிப்பாக அமெரிக்க எதிர்ப்பில் மையங் கொண்டிருக்கிறது. இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் அதன் அமெரிக்க எதிர்ப்பின் மீதான தீவிரத்தைப் பொறுத்தே அமையும். ஆனால் சிங்கள பௌத்த அடிப்படைவாதமானது முற்றிலும் தமிழர் விரோதத்தில் மையங் கொண்டிருக்கிறது. அவ்வப்போது சிங்கள அடிப்படைவாதம் மேற்கு எதிர்ப்பினை இனங்காட்டினாலும் அதன் சாரமாக இருப்பதும் தமிழர் விரோத அரசியலேயன்றி வேறொன்றுமில்லை. நாம் ஜே.வி.பி.யின் நோர்வே எதிர்ப்பை இதற்கான சிறந்த உதாரணமாகக் கொள்ளலாம்.

இத்தகையதொரு பின்புலத்தில்தான் சாதாரண சிங்கள மக்களின் அரசியல் வாழ்வு கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு சாதாரண சிங்களக் குடியானவனும் யோசிக்கிறான் இது எனக்கு மட்டுமே உரிய நாடு. தமிழர்கள் எனக்கு கீழாக வாழ வேண்டியவர்கள். அதனை அவர்கள் மீறும் பட்சத்தில் அவர்களை தண்டிக்கும் அழிக்கும் தார்மீகப் பொறுப்பும் கடப்பாடும் தனக்குண்டென சாதாரண சிங்கள மக்கள் தமது நம்பிக்கை உண்மையானது என நம்புகின்றனர். இதற்கான அரசியல் நியாயத்தையும் சமூக உளவியலையும்தான் நான் மேற்குறிப்பிட்ட சிங்கள பௌத்த அடிப்படைவாதம் வழங்கிவருகிறது. சிங்கள பௌத்த அடிப்படைவாதம் சிங்கள மக்கள் மத்தியில் நான்கு தரப்பாக தொழிற்படுகிறது. ஒன்று சிங்கள அடிப்படைவாதத்தை சிந்தனைச் சூழலில் தக்கவைக்கும் அதற்கான கருத்துருவாக் கங்களில் ஈடுபடும் சிங்கள புத்திஜீவிகள் ஊடகத்தரப்பினர், இரண்டு, அரசியல் மட்டத்தில் சிங்கள அடிப்படைவாத மேலாதிக்கத்தை தக்கவைக்கும் அரசியல் தரப்பினர். மற்றையவர்கள் அரசில் தரப்பினரது பௌத்த அடிப்படைவாதக் கட்டமைப்பிற்கு தமிழர் விரோத நிலையில் செயல் வடிவம் கொடுக்கும் சாதாரண சிங்கள மக்கள். இந்த மூன்றுபிரிவினரும் ஒருவரில் ஒருவர் தங்கியும் ஒருவரை ஒருவர் பலப்படுத்தும் வகையிலும் தமது இணைவை ஒழுங்கமைத்திருக்கின்றனர்.

சில காலகட்டங்களில் இதில் ஒன்று சற்று நெகிழ்வடையும் நிலையில் மற்றைய பிரிவுகள் நெகிழ்வை ஈடு செய்யும் வகையில் தொழிலாற்றும். இதில் சிங்கள ஆங்கில ஊடக தரப்பினரின் பங்கு எப்போதுமே நெகிழ்வற்ற முறையில் இயங்கிவருகிறது. இதன் காரணமாகத்தான் சாதாரண சிங்கள மக்கள் மத்தியில் எப்போதும் வெறித்தனமான தமிழர் விரோதம் ஆழ வேரூன்றியிருக்கிறது.

சிங்கள மக்களுக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகள் விளங்குவதில்லை. அவர்கள் நமது பிரச்சினைகளை விளங்கிக்கொள்ளும் பட்சத்தில் அவர்களது மேலாதிக்க மனோநிலையில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு என்று விவாதிக்கும் ஒரு தரப்பினர் நம்மத்தியில் இருக்கின்றனர். இது குறித்து எனக்கு ஓரளவு இருந்த நம்பிக்கையும் திருகோணமலை சம்பவங்களுக்கு பின்னர் இல்லாமல் போய்விட்டது. வெறித்தனமான மேலாதிக்க மனோபாவத்தையும் ஒடுக்கும் வரலாற்றையும் பெருமைக்குரிய விடயங்களாகக் கருதும் ஒரு மக்கள் கூட்டத்தை வெறும் விளக்கங்களால் மாற்றிவிட முடியுமென நான் நம்பவில்லை.

சிங்கள மக்களைப் பொறுத்தவரையில் தோற்றத்தில் 21ஆம் நூற்றாண்டையும் சிந்தனையில் 5ஆம் நூற்றாண்டையும் ஒருங்கே கொண்ட இனமது. அவர்களது பழைய சிந்தனை முறையில் நவீன சிந்தனைகள் எதுவுமே தாக்கம் செலுத்த முடியவில்லையாயின் நமது விளக்கங்களால் எதைச் சாதிப்பது. என்னைப் பொறுத்தவரையில் சிங்கள தேசமானது விகாரைக்குள் புதையுண்டு கிடக்கும் ஒரு தேசம். 1953ஆம் ஆண்டு பௌத்தத்தின் 2500 ஆண்டுகால நினைவைக் குறிக்கும் முகமாக டி.சி.விஜவர்த்தனவால் விகாரைக்குள் புரட்சி (The revolt in Temple) என்னும் நூல் வெளியிடப்பட்டது. இந்நூல் சிங்கள பௌத்த மேலாதிக்கத்திற்கு முழுமையானதொரு சித்தாந்த பலத்தை வழங்கியதாகக் கூறப்படுகிறது. இன்றுவரை சிங்கள தேசத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் எல்லாமே விகாரைக்குள் புரட்சியாகத்தான் இருக்கின்றது. சிங்களம் ஒருபோதுமே விகாரைக்குள்ளிருந்து வெளியில் வரப் போவதில்லை. ஒருவேளை தமிழர் தேசியம் அதன் உச்ச இலக்கை அடையும் பொழுது அது சாத்தியப்பட சிறிது வாய்ப்புண்டு.

Labels: