« Home | மொட்டவிழ்ந்த கனவுகள் » | படையினரின் வலிந்து தாக்குதல் போருக்கான ஒரு அழைப்பா? » | ஒட்டுக்குழு அரசியலுக்கு வாகனேரியில் முற்றுப்புள்ளி » | தனியரசு அமைப்போம் - புலிகள் அறிவிப்பு » | தர்முசிவராம் (பிரமிள்) பற்றி » | இஸ்ரேலின் அடாவடியும் படிக்க வேண்டி பாடங்களும் » | பொஸ்பரஸ் தொடங்கி ஒற்றைத் துப்பாக்கி வரை... » | இந்து சமுத்திரத்தின திறவுகோல் யாருக்கு? » | கேணல் இறமணன் » | இரத்தம் தோய்ந்த நாளொன்றின் நினைவுகள். »

மாவிலாறு நீர்முடக்கமும் சிங்களத்தின் படையெடுப்பும்

மனிதாபிமானப் பிரச்சினையைத் தீர்க்க இராணுவ நடவடிக்கையை நாடும் அரசு!
* விமானத் தாக்குதல்கள் தொடர்ந்தால் யுத்தம் மூளக்கூடிய வாய்ப்பு?

வெருகல் மாவில் ஆற்றுப் பிரச்சினை பாரிய மோதலாக உருவெடுக்கப் போகிறது. சுமுகமாகத் தீர்க்கப்பட வேண்டிய, மக்களின் அன்றாடப் பிரச்சினையை அரசு இராணுவமயப்படுத்தி வருவதால் விளைவுகள் மிக மோசமாக இருக்கப் போகிறது.
மகாவலி ஆற்றின் கிளை ஆறான வெருகல் ஆற்று நீர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியினூடாகவே சிங்களப் பகுதிக்குச் செல்கிறது. இந்த ஆற்று நீர் சிங்களப் பிரதேசத்துக்குச் செல்வதை புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள வெருகல் மக்கள் கடந்தவாரம் முதல் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

மிக நீண்ட காலமாக, தாங்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகளை தீர்த்து வைக்குமாறு இந்த மக்கள் விடுத்து வந்த கோரிக்கைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு வந்த நிலையிலேயே இவ்வாறானதொரு அதிரடி நடவடிக்கையில் மக்கள் இறங்கினர்.
அவர்கள் விடுத்த கோரிக்கைகள் எதுவும் பாரதூரமானவையல்ல. தங்களது அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்குமாறு மிக நீண்ட காலமாகக் கேட்டும் எதுவித பலனும் ஏற்படாத நிலையில் அந்தக் கோரிக்கையை, அணைக் கட்டை மூடி சற்று அழுத்தமாக விடுத்த போதே அதனை அரசு பூதாகரமாக்கிவிட்டது.

* தங்கள் பகுதிகள் மீதான நீண்டகாலப் பொருளாதாரத் தடை நீக்கப்பட வேண்டும். * முப்படைகளதும் நடவடிக்கைகளால் சொந்த இடங்களிலிருந்து இடம்பெயர்ந்து காடுகளினுள்ளும் முகாம்களினுள்ளும் வாழும் ஆயிரக் கணக்கான மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். * காலம் காலமாக தங்கள் பகுதியில் நிலவும் குடிநீர்ப் பிரச்சினைக்கு உடன் தீர்வு காணப்பட வேண்டும். * இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் செல்லும் பொது மக்கள் கடத்தப்படுவதும் கொல்லப்படுவதும் வழமையாகிவிட்டதால் மக்களின் சுதந்திரமானதும் பாதுகாப்பானதுமான பயணத்துக்கு அரசு உத்தரவாதமளிக்க வேண்டும்.

இதுவே இந்த மக்கள் முன் வைத்துள்ள கோரிக்கையாகும். இதிலும், கடந்த பல வருடங்களாக குடி நீர்ப் பிரச்சினையால் மக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் அதனை உடனடியாக நிறைவேற்றித் தருமாறு 2000 ஆம் ஆண்டிலிருந்தே கேட்டு வந்துள்ளனர். ஆனாலும் அந்தச் சாதாரண அடிப்படை விடயத்தை கூட நிறைவேற்ற எந்த அரசும் முன்வரவில்லை.
இதனால் தான், சிங்களப் பகுதியில் தற்போது நெற்பயிர்ச் செய்கை மும்முரமாகியுள்ள இவ்வேளையில், ஆற்று நீரை வழிமறித்த மக்கள் அதனைப் பயன்படுத்தி தங்கள் அடிப்படைத் தேவை குறித்து பேரம் பேசுகின்றனர். இது குறித்து சிங்கள மக்கள் உணர்ந்து, தமிழ் மக்கள் எதிர் நோக்கும் அடிப்படை பிரச்சினை குறித்து அரசுக்கு அழுத்தம் கொடுத்து அதனைத் தீர்க்க முன்வந்திருக்க வேண்டும்.

இது அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலானதோ அல்லது இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலானதொரு பிரச்சினையோ அல்ல. காலம் காலமாக மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு வந்த தமிழ் மக்கள், தங்கள் பிரச்சினையை அரசோ படைத்தரப்போ புரிந்து கொள்ளாத நிலையில் சிங்கள மக்களாவது புரிந்து கொள்வார்களென எதிர்பார்த்தனர்.
தங்கள் பயிர், பச்சைகள் தண்ணீரின்றி வாடுவதால் கொதித்தெழும் சிங்கள மக்கள், காலம் காலமாக குடிநீரின்றியும் பொருளாதாரத் தடைகளாலும் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதை உணராதது துரதிர்ஷ்டமானதென்பதுடன், சிங்கள மக்கள் இவ்விடயத்தில் இனவாதக் கட்சிகளால் மிக மோசமாகத் தூண்டப்பட்டு மனிதாபிமானப் பிரச்சினையை அரசியலாக்கி வருகிறார்கள்.
எந்தவொரு மனிதனும் இயற்கை அளித்துள்ள கொடையை பெறுவதை தடுக்கும் உரிமை எவருக்குமில்லை. அது அராஜகமானதென்பதுடன் அடாவடித்தனமானதும் அநீதியானதுமான செயலாகும். இயற்கை வளம் எல்லோருக்கும் பொதுவானது. அதனை ஒருவர் இன்னொருவரிடமிருந்து கேட்டுப் பெறவும் கூடாது. அவ்வாறானதொரு நிலைமை ஏற்படவும் இடமளிக்கக் கூடாது.

ஆனால், இலங்கைத் தீவில் கடந்த 25 வருடங்களாக இனவாத அரசுகளின் செயல்களால் தமிழர்கள் அனுபவித்த துன்ப துயரங்கள் சொல்லிலடங்காது. காலாகாலமாக அவர்கள் பொருளாதாரத் தடைகளாலும் கடல் வலயத் தடைகளாலும் இடப்பெயர்வுகளாலும் அனுபவித்து வரும் கொடுமைகள் அளவிட முடியாதது.
இது குறித்தெல்லாம் இன்று வரை சிங்கள மக்கள் எவராவது சிந்தித்திருப்பார்களா என்று எவருக்கும் தெரியாது. தற்போது கூட மாவில் ஆற்றுப் பிரச்சினை அரசியல் மயப்படுத்தப்பட்டு பின்னர் இராணுவமயப்படுத்தப்பட்டுள்ளது.

புலிகளின் பகுதிகளிலுள்ள தமிழர்கள் எதிர்நோக்கும் மிக அத்தியாவசியப் பிரச்சினைகளில், குடி நீர்ப் பிரச்சினையையாவது தீர்த்து இந்தப் பிரச்சினைக்கு அரசால் தீர்வொன்றைக் காணமுடியும்.
ஆனால், அந்த மக்கள் விதித்த நிபந்தனைகள் எதனையும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லையெனக் கூறிவரும் அரசு, இராணுவ நடவடிக்கை மூலம் அந்தப் பிரதேசத்தை கைப்பற்றி அணையைத் திறக்கப் போவதாக சூளுரைத்ததுடன் படை நடவடிக்கையொன்றிலும் இறங்கியுள்ளது.
அணைக் கட்டை திறப்பதற்கான நடவடிக்கையெனக் கூறி அப்பகுதியில் விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனாலும் விமானக் குண்டு வீச்சு அணைக் கட்டை திறக்க எந்த வழியிலும் உதவாததால் திருகோணமலையில் மட்டுமல்லாது முல்லைத்தீவிலும் விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது.

திருமலையில் நடத்தப்பட்ட தாக்குதல் அணைக் கட்டை திறப்பதற்கென்றால் முல்லைத்தீவுத் தாக்குதல் எதற்கென்ற கேள்வி எழுப்பப்படுகிறது. அதன் மூலம் திருமலையில் அணைக்கட்டை திறந்து விடலாமென அரசு கருதுகின்றதா அல்லது தருணம் பார்த்து தாக்குதல்களை நடத்திவிட்டு அவற்றுக்கு அரசு காரணம் கற்பிக்க முயல்கின்றதா?
முல்லைத்தீவில் புலிகளின் புதிய விமான ஓடுபாதை இந்தக் குண்டு வீச்சால் பலத்த சேதமடைந்துள்ளதாக அரசும் படைத் தரப்பும் கூறுகின்றன. திருகோணமலையில் புலிகளின் பகுதி மக்களின் அன்றாடப் பிரச்சினையைத் தீர்த்து மாவில் ஆற்றுப் பிரச்சினையே எழாமல் அரசால் தடுத்திருக்க முடியும்.

ஆனால், அதை விடுத்து வான் வழித் தாக்குதல்கள், தரைவழித் தாக்குதல்களென ஆரம்பித்திருப்பதன் மூலம், தமிழர் பகுதிகளில் விதிக்கப்படும் பொருளாதாரத் தடைகளுக்கும் கடல் வலயத் தடைகளுக்குமெதிராக புலிகளும் இராணுவ நடவடிக்கையில் இறங்க வேண்டுமெனக் கூறமுற்படுகிறதா?
இப்பகுதிக் கள நிலைமையானது மாவில் ஆற்றுப் பகுதிக்கு படையினர் பெரும் விலை கொடுத்துச் சென்றாலும் அங்கு நிலை கொள்ள முடியாததை உணர்த்தும். அவ்வாறு நிலை கொள்வதாயின் பல கிலோமீற்றர் தூரத்திற்கு படைமுகாம்களும், மினி முகாம்களும், விநியோகப் பாதைகளும் அமைக்கப்பட வேண்டும்.
அதேநேரம், இராணுவ நடவடிக்கை மூலம் இந்த அணையைத் திறந்து விட்டு படையினரால் மீண்டும் பழைய இடங்களுக்குச் செல்ல முடியாது. அப்படி அவர்கள் திரும்பிச் சென்று விட்டால் அப்பகுதி மக்கள் மீண்டும் அணையை மூடிவிடுவர். பின்னர் அது நிரந்தரமாகவே மூடப்பட்டு விடும்.

இதனால், அணைக்கட்டுப் பகுதியிலும் முகாம் அமைத்து பல கிலோமீற்றர் தூரத்திற்கு முகாம்களையும் விநியோகப்பாதையையும் அமைப்பதானால், இதற்காக நூற்றுக் கணக்கான படையினரை இப்பகுதிகளில் நிறுத்த வேண்டும்.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் இவர்கள் மீது புலிகள் தாக்குதல் தொடுத்தால் படையினர் பாரிய உயிரிழப்புக்களைச் சந்திப்பதுடன் தினமும் பலரை இழந்து கொண்டிருக்க வேண்டியிருக்கும்.
இதேநேரம், இந்த அணையை திறந்து படையினரை தக்க வைத்து அதனைப் பாதுகாக்க வேண்டிய அளவுக்கு இந்த அணைக்கட்டு கேந்திர முக்கியமானதொரு நிலையுமில்லை. இதனால், இதற்காக மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கையானது படைத் தரப்புக்கும் அரசுக்கும் மோசமான பின் விளைவுகளையே ஏற்படுத்தும்.
இல்லையேல் இந்தப் பிரதேசத்தை முழு அளவில் கைப்பற்றுவதற்கும் அதனைத் தக்க வைப்பதற்கும் ஆயிரக் கணக்கில் படையினர் தேவை. அதுவும், அரசுக்கும் படையினருக்கும் சாத்தியப்படாததொன்று.

இதனால் இந்தப் பிரச்சினைக்கு கத்தியின்றி இரத்தமின்றி சமாதானமாகத் தீர்வைக் கண்டு புலிகளின் பகுதி மக்களது அடிப்படைப் பிரச்சினைக்கும் சிங்கள மக்களின் நீர்ப்பாசனப் பிரச்சினைக்கும் சுமுகமான தீர்வைக் காணலாம்.
சிங்களவருக்கு ஒரு நீதி, தமிழருக்கு ஒரு நீதியா? அல்லது சிங்களவர்கள் இவ்வாறான தடைகளால் பாதிக்கப்படக் கூடாது, தமிழர்கள் இவ்வாறான தடைகளால் பாதிக்கப்படாது இருக்கக் கூடாதென அரசும் இனவாதிகளும் கருதுகின்றனரா?
கடந்த சில தினங்களாக படைத் தரப்பு மேற்கொண்டு வரும் விமானக் குண்டு வீச்சும் இராணுவ நடவடிக்கையும், போர் நிறுத்த உடன்பாடு முடிவுக்கு வந்து விட்டதையே காட்டுகிறது. சாதாரணமாக பேசித் தீர்க்கப்பட வேண்டிய ,அன்றாட அடிப்படைப் பிரச்சினைக்கு கூட இராணுவத் தீர்வொன்றைக் காணவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விரும்புகிறார்.
போர் நிறுத்த உடன்பாட்டை அப்பட்டமாக மீறியே இராணுவ நடவடிக்கைகள் இடம் பெறுகின்றன. கண்காணிப்புக் குழுவின் தலைவர் இந்தப் பிரச்சினை தொடர்பாக புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் சென்று அப்பகுதி மக்களுடன் உரையாடிக் கொண்டிருக்கையில் கூட விமானத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

அரசின் இந்த நடவடிக்கைகளானது வலிந்து போருக்கு அறை கூவல் விடுப்பதாகவே தாங்கள் கருதுவதாகப் புலிகள் கூறியுள்ளனர். அத்துடன், இவற்றுக்கெல்லாம் மிக மோசமான எதிர் விளைவுகள் இருக்குமெனவும் விடுதலைப் புலிகள் எச்சரித்துள்ளனர்.
அவர்களது இந்த எச்சரிக்கையானது அவர்கள் மேற்கொள்ளவுள்ள பதில் நடவடிக்கை பற்றியதே. இதனால், அடுத்து வரும் நாட்களில் மிக மோசமான பதில் தாக்குதல்கள் இடம்பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அது பெரும் போராகக் கூட மாற்றம் பெறலாம்.
மாவில் ஆற்றை திறக்கவெனக் கூறி பொலநறுவை வெலிக்கந்தையிலிருந்து புறப்பட்ட படையணியொன்றை விடுதலைப் புலிகள் வழி மறித்து தாக்கி பலத்த இழப்புடன் திருப்பியனுப்பியுள்ளனர். மேலும், படை நடவடிக்கை தொடருமெனவும் அரசு தரப்பு எச்சரித்துள்ளது. புலிகளும் இதனை எதிர்கொள்ளத் தயாராயிருப்பதாக அறிவித்துள்ளனர்.
ஆற்று நீர் பிரச்சினையை மட்டுமன்றி அனைத்துப் பிரச்சினைக்கும் இராணுவத் தீர்வொன்றைக் காணும் முயற்சியிலேயே அரசு இருப்பது தெளிவாகியுள்ளது. அரசின் இந்த நிலைப்பாட்டை சர்வதேச சமூகமும் இன்று புரிந்து கொண்டுள்ளது. சாதாரண பிரச்சினைக்கெல்லாம் படை நடவடிக்கையென்றால் இனப் பிரச்சினைக்கு மட்டும் இந்த அரசு எப்படி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும்.

எந்த வித நோக்கமோ அல்லது சிந்தனையோ இன்றி பழிக்குப் பழி, இரத்தத்துக்கு இரத்தம் என்ற ரீதியிலேயே அரசின் செயற்பாடுகளுள்ளன. தமிழர்களின் அடிப்படை பிரச்சினைகளை தென்பகுதி மக்களுக்கு எடுத்துரைக்கக் கூட சிங்கள, ஆங்கில ஊடகங்களும் தயாரில்லை.
தங்கள் மீது ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்ததாலேயே கண்காணிப்புக் குழுவில் அங்கம் வகிக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை அதிலிருந்து வெளியேற்ற வேண்டுமெனப் புலிகள் வலியுறுத்துகின்றனர். ஆனால், அனைவரையுமே வெளியேற்ற வேண்டுமென இனவாதிகள் கூச்சலிடுகின்றனர்.
தெற்கிலுள்ள இன்றைய நிலைமை இது தான். தமிழர்கள் எதனைச் செய்தாலும் அதற்கு ஒரு படி மேல் சென்று ஏதாவது செய்ய வேண்டுமென நினைக்கிறார்களே தவிர, யதார்த்தமாக எதனையும் சிந்தித்து செயற்படும் நிலையில் எவருமேஇல்லையென்பது தான் தினமும் நடைபெறும் நிகழ்வுகள் மூலம் தெளிவாகிறது.

மாவில் ஆறு பிரச்சினைக்கான தீர்வை மிகச் சுமுகமாகக் கண்டிருக்கலாம். ஆற்றை திறக்க தமிழ் மக்கள் கோரும் விடயங்களைக் கூட நிறைவேற்ற மாட்டோமென்றால் இவர்கள் எதனைத் தான் எப்படி நிறைவேற்றப் போகிறார்கள்?
ஒற்றையாட்சிக்குள்ளேயே தீர்வு என்பது போல்தான் அனைத்துப் பிரச்சினையையும் கையாள அரசு முற்படுகிறது. சாதாரண பிரச்சினைகளெல்லாம் இனவாத அரசியல் மயப்படுத்தப்படுகிறது. இதனால், பேசித் தீர்க்கக் கூடிய பிரச்சினைக்கெல்லாம் மோதித் தான் தீர்வு காணலாமென்ற நிலை உருவாகியுள்ளது.
மாவில் ஆற்றை திறப்பதற்கு இராணுவ நடவடிக்கை எடுப்பதென்பது பேரழிவையே ஏற்படுத்தும். ஆனாலும், அரச படைகளால் அந்த இலக்கை எட்ட முடியுமா என்பது கேள்விக் குறியாகும். திருகோணமலை மாவட்டத்தை சிங்கள மயப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியே படை நடவடிக்கை மூலமான தீர்வாகும்.

தமிழர் தாயகப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சிங்களக் குடியேற்றப் பகுதிகளுக்கு வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தவே தமிழர் பகுதிகள் மீது பொருளாதாரத் தடைகளும் அடக்கு முறைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. படை நடவடிக்கைகள், பொருளாதாரத் தடைகளால் தமிழ் மக்கள் பெருமளவில் இடம்பெயரும் போது அப்பகுதிகளை ஆக்கிரமிப்பதும் இனவாதிகளின் சூழ்ச்சியாகும்.
இதனால், அரசும் படைகளும் படை நடவடிக்கை மேற்கொள்ள எடுத்துள்ள திட்டமானது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது. ஏற்கனவே, கிழக்கில் கருணா குழுவைப் பயன்படுத்தி தமிழர் பகுதிகளில் இடம்பெறும் மிக மோசமான அடாவடித்தனங்களின் மத்தியில் தற்போது திருமலையில் இவ்வாறானதொரு நிலைமையை ஏற்படுத்த முழு அளவில் திட்டமிடப்படுகின்றது.

திருமலையில் சிங்களவரோ பயிர் வாழ தண்ணீர் கேட்கின்றனர். ஆனால், தமிழர்களோ உயிர் வாழ தண்ணீர் கேட்கின்றனர். இந்தப் பிரச்சினைதான் இனப் பிரச்சினைத் தீர்வின் அடுத்த கட்டத்தை நகர்த்தப் போகிறது.
__________________________________

நன்றி: தினக்குரல்-பாதுகாப்பு நிலைவரம்-Sunday, July 30, 2006

Labels: , , ,


Get your own calendar

Links