« Home | திலீபனுடன் பன்னிரெண்டாம் நாள் - 26.09.1987 » | திலீபனுடன் பதினோராம் நாள் - 25.09.1987 » | திலீபனுடன் பத்தாம் நாள் -24-09-1987 » | திலீபனின் இறுதி உரையிலிருந்து... » | திலீபனுடன் ஒன்பதாம் நாள் -23-09-1987 » | திலீபனுடன் எட்டாம்நாள்.-22.09.1887 » | திலீபனுடன் ஏழாம் நாள் -21-09-1987 » | திலீபனுடன் ஆறாம் நாள் -20-09-1987 » | திலீபனுடன் ஐந்தாம் நாள் -19-09-1987 » | திலீபனுடன் நான்காம் நாள் -18-09-1987 »

கிளிநொச்சி நகரம் மீட்கப்பட்டதெப்படி?

ஓயாத அலைகள் -02 கிளிநொச்சி மீட்பு நடந்தது எவ்வாறு?
-இ.சசிக்குமார்-

சிறிலங்கா இராணுவத்தின் 54 ஆவது டிவிசனின் 3 ஆவது படைப்பிரிவு, பிரிகேடியர் உபாலி எதிரிசிங்கவின் தலைமையில் கிளிநொச்சிப் பகுதியை 1996 ஆம் ஆண்டுகாலப் பகுதியில் தமது ஆக்கிரமிப்புக்குள்ளாக்கியிருந்தது.
1996-07-26 அன்று ஆரம்பமான 'சத்ஜெய" எனும் இராணுவ நடவடிக்கை மூலம் புலிகளுக்கெதிரான இறுதி யுத்தம் எனக்கூறிக் கொண்டு 70 நாட்கள் மூன்று கட்டங்களாக 12 கிலோமீற்றர் பகுதிக்குள் ஆமை வேகத்தில் முன்னேறி 22.09.1996 அன்று கிளிநொச்சியை ஆக்கிரமித்தன சிறிலங்காப்படைகள்.

இவ் ஆக்கிரமிப்பினால் அன்று ஒன்றரை இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்தனர். 1,279 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்கனவே ஆனையிறவு, பரந்தன் படைத்தளங்கள் அமைந்திருந்த நிலையில் சத்ஜெய 60 சதுர கிலோமீற்றர் நிலத்தை விழுங்கிக்கொண்டது.

இந்நடவடிக்கைக்கெதிராக புலிகள் 15 நாட்கள் தான் எதிர்சமரை மேற்கொண்டனர். இதன்போது நாளொன்றுக்கு 3,000 எறிகணைகள் என்ற வீதத்தில் புலிகள் மீது எறிகணைகளை ஏவியும், நாளொன்றுக்கு நான்கு தடவைகள் இரண்டு கிபிர் விமானங்கள் குண்டுகளை வீசியும் தாக்குதலை நடாத்தியே ஆக்கிரமிப்பை நடத்தின. இதன்போது சிறிலங்காப் படைகள் பயன்படுத்திய எறிகணைகளின் எடை மட்டும் 500 தொன் எனவும் கிபிர் குண்டுகளின் எடை 325 தொன் எனவும் மொத்தமாக சத்ஜெயவிற்கு 825 தொன் வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் ஆய்வு ஒன்று குறிப்பிடுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகள் மரபுவழிச் சமரை வெற்றிகரமாகக் கையாண்ட சமராக இது அமைவதோடு, 120 மில்லி மீற்றர் மோட்டார் உட்பட பெயர் குறிப்பிடாத பல சுடுகலன்களை விடுதலைப் புலிகள் முதன்முதல் பயன்படுத்திய சமராகவும் இது அமைகிறது. எனினும் புலிகள் தமது ஆட்பலத்தைத் தக்கவைப்பதற்காக தற்காலிக பின்வாங்கல்களையும் மேற்கொள்ள நேர்ந்தது.

இச்சமரில் 700 இற்கு மேற்பட்ட படையினர் கொல்லப்பட 2,500 இற்கும் மேற்பட்ட படையினர் படுகாயமடைந்திருந்தனர். விடுதலைப் புலிகள் தரப்பில் 254 போராளிகள் வீரச்சாவடைந்தனர்.

இவ்வாறு ஆக்கிரமித்திருந்த படைகளுக்கு இடிவிழுந்த நாள் 27.09.1998 அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் பல உயிர்த்தியாகங்களைச் செய்து கிளிநகரை மீட்பதற்கான ஓயாத அலைகள் - 02 ஐ ஆரம்பித்தனர். இன்று நீரோடும் கால்வாய்கள் அன்று மாவீரரின் குருதி சிந்திக்கிடந்த கால்வாய்களாகக் காணப்பட்டன. இன்று நாம் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் அன்று பல புலி வீரர்களின் உடல்கள் சரிந்த நிலங்களாகக் காணப்பட்டன.
இற்றைக்கு ஏழு வருடங்களுக்கு முன் நடந்த ஓயாத அலைகள் - 02 சமர் எவ்வாறு நடைபெற்றதென்பதை அன்றைய சமர்க்களங்களில் எதிரியைப் புறமுதுகிட்டு ஓடச்செய்த வீரர்கள் நினைவுபடுத்துகிறார்கள்.

ஓயாதஅலை - 02 சமரின் வெற்றிக்கு வலுச்சேர்த்தவர்களில் எதிரியின் முகாம்களுக்குள் ஊடுருவி தாக்குதலுக்கான தரவுகளையும் உள்ளே எதிரியின் ஒவ்வொரு அசைவையும் அவதானித்த வேவு வீரர்கள் தாம் எவ்வாறு எதிரியின் நிலைகளுக்குள் ஊடுருவினார்கள் என்பதையும், தாக்குதலுக்கான தகவல்களை எவ்வாறு திரட்டினார்கள் என்பதையும் இதுவரை வெளியிடாத தகவல்களை வேவுப்புலி வீரர்கள் ஓயாத அலைகள் - 02 இன் 7 ஆவது ஆண்டு நினைவுநாளில் பகிர்ந்து கொள்கின்றார்கள். அதில் வெற்றிக்கு வழிவகுத்த அம்சங்களை- பல புதிய தகவல்களை வேவு வீரர்களை நெறிப்படுத்தியவரும் அன்றைய விசேட வேவுப் பிரிவின் தளபதிகளில் ஒருவராகவும் இருந்த லெப்ரினன்ட் கேணல் ஜெரி இவ்வாறு கூறுகிறார்.

'ஓயாத அலை இரண்டுக்கான வேவு நடவடிக்கையை ஆரம்பிக்கும் முன்பே நாங்கள் கிளிநொச்சிப் பகுதியை அண்டிய இராணுவ காவலரண்களைச் சுற்றி ஓரளவு கண்காணிப்பை வைத்திருந்தோம் கிளிநொச்சி முகாமை அடிக்க வேண்டுமென்று எல்லாரும் உறுதியோடு இருந்தோம் ஆனால் எப்போது அடிக்கிறதென்ற திட்டம் எங்களுக்குத்தரப் படவில்லை.
ஓயாத அலை - 02 நடவடிக்கைக்கு ஒரு மாதத்திற்குள்தான் இந்த வேவு நடவடிக்கையை வேகப்படுத்தினோம். ஆரம்பத்தில் விசேட வேவுப்பிரிவினர்தான் இதைப் பார்த்தார்கள்.
சண்டைக்கு அணிகளை இறக்குவதற்கான வேவுக்காக ஒவ்வொரு படையணிகளையும் இந்த வேவு நடவடிக்கையில் ஈடுபடுத்தியே இதனை முழுமைப்படுத்தினோம்.

ஆரம்பத்திலே வேவு பார்த்ததற்கும் கடைசிக் கட்டங்களில் வேவு பார்த்ததற்கும் நிறையப் பிரச்சினைகள் இருந்தன. என்னவென்றால் வேறு நடவடிக்கைகளுக்கு வேவு பார்க்கும் போது குறிப்பிட்ட இடத்தில் சிக்கல் என்றால் 500 அல்லது 600 மீற்றர் விலத்தியும் பார்ப்போம். ஆனால் இந்தப் பிரதேசத்தைப் பொறுத்த மட்டில். எங்களுக்கென குறிப்பிட்டுச் சொல்லப்பட்ட இடத்தில் பாதை எடுத்து கொடுக்க வேண்டிய தேவை இருந்தது. ஏனென்றால் அந்த இடத்தில் உடைப்பை ஏற்படுத்தினால் மட்டும்தான் இலகுவான முறையில் கைப்பற்ற முடியும் என்ற நிலை இருந்தது. இதே நேரத்தில் எதிரியும் எதிர்பார்க்கக்கூடிய இடத்தில்தான் உடைப்பு பகுதியும் இருந்தது. மூன்று பேரைக் கொண்ட வேவு அணி உட்புகுந்து வேவு பார்க்க முடியும். ஆனால் பெரும் அணி நகரும் போது எதிரி அவதானிக்காதவாறும் வேவுபார்க்க வேண்டியிருந்தது.

வேவின் ஆரம்பத்தில் சிக்கல் குறைவாக இருந்தாலும் அடுத்தடுத்து வந்த நாட்களில் எல்லாப் பாதைகளிலும் எதிரியின் பதுங்கித் தாக்கும் அணிகளின் அச்சுறுத்தல்கள் அதிகமாக இருந்தது. பகல் வேளைகளிலும் இரவிலும் எதிரி தனது அரணுக்கு வெளியிலும் அவதானிப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்தியிருந்தான். இதற்கும் பின்புதான் நாங்கள் முழுமையான வேவுகளை பார்க்க வேண்டியிருந்தது. அதாவது எமது அணிநகரும் போது அவர்களுக்கு பாதுகாப்பாக மற்றுமொரு அணியை நகர்த்த வேண்டிய நிலையும் ஏற்பட்டது. கூடிய பாதைகளால் அணிகளை நகர்த்துவதற்கான வேவுகளைப் பார்த்து நகர்த்தியதென்பதும் எமக்கு பெரும் வெற்றி என்றே கருதலாம். இதில் எல்லா வேவுப் போராளியும் கடுமையாக உழைத்தார்கள்.
கடைசிக் கட்டங்களில் இரவு, பகல் முழுமையாக ஓய்வின்றி செயற்பட்டார்கள். ஏனென்றால் சண்டையினுடைய முழுப்பொறுப்பும் வேவு வீரனுக்குரியதாக இருக்கும். உண்மையில் ஒரு வேவுப் போராளி தனது உயிரை மதிக்காமல் கடும் ஆபத்தான பகுதிகளுக்குள் சென்று வருகிறானென்றால் அதன் உண்மையான நோக்கம் தான் உயிரோடு திரும்பினால் அந்தப் பாதையில் ஏனைய போராளிகளின் இழப்புக்களை குறைப்பது தான் வேவுப் போராளியின் நோக்கமாக இருக்கும். வேவில் பிரச்சினைகள் இருந்தால் இழப்புக்கள் கூடும் ஆகவே வேவுப் போராளிகள் சரியாக இதை உணர்ந்து கொண்டுதான் இதில் ஈடுபடுவார்கள் ஒரு சண்டையில் வெற்றியடைந்தால் அதனுடைய ஆரம்ப வெற்றி வேவுவீரனையே சாரும்.

இந்த ஓயாத அலை - 02 ஐப் பொறுத்த வரையில் முழுப்பாதையாலும் குறித்த நேரத்திற்கு சண்டை தொடங்கி முழுப்பாதைகளையும் உடைத்து அணிகள் உட்புகுந்தன. ஒருபாதையால் 50 பேர் கொண்ட அணி அமைதியாக உள்ளே சென்றுதான் சண்டையில் ஈடுபட்டன.

வேவுப் போராளிகளுக்கு இந்தப் பிரதேசத்தில் அமைந்த சாதகம் என்னவென்றால் நடை தூரம் குறைவாக இருந்தது. இந்த போராளிகளுக்கு வேவின் கடைசிக்கட்டங்களில் ஓய்வு கொடுக்க முடியாதிருந்தது. ஏனென்றால் ஓய்வெடுத்தால் சண்டையில் பெரும் மாற்றம் ஏற்படும் அவர்களும் ஓய்வினை எதிர்பார்க்க மாட்டார்கள். ஏனென்றால் சண்டைக்கு முதல்நாள் நகர்விற்கான பாதையில் சிக்கல் ஏற்பட்டால் மற்றுமொரு பாதையை அவர்தான் எடுக்கவேண்டும் இந்த சண்டையிலும் சண்டைக்கு முதல் நாள் ஒரு பாதையில் குழப்பம் ஏற்பட்டுவிட்டது. ஆனால் அந்தபாதைக்குரியவர் அடுத்தநாள் நான்கு மணிக்கிடையில் இன்னுமொரு பாதையை எடுத்தார்.

நகர்வுப்பாதைகளை எடுப்பதிலும் நிறைய விடயங்களை அவதானிக்க வேண்டும். ஒவ்வொரு பாதையும் எங்களுக்கு சாதகமான முறையில் இருக்க வேண்டும் பாதையால் அணிகள் நகரும் போது எதிரி அவதானிக்காதவாறிருக்க வேண்டும். எதிரியின் பதுங்கித்தாக்கும் அணிகளின் நடமாட்டமற்ற பகுதியாக இருக்க வேண்டும். இது போன்ற பல விடயங்களை அவதானித்துத் தான் பாதை எடுக்க வேண்டும். அதாவது இராணுவம் எந்த உசார் நிலையிலிருந்தாலும் தேவைக்கேற்ப பாதை எடுத்தே ஆகவேண்டும்.
ஓயாத அலை - 02 இல் குறிப்பிட வேண்டிய ஒரு விடயம் உண்டு அதாவது பயிற்சி முடித்த குறுகிய காலத்திற்குள்ளேயே ஓர் அணியையும் இந்த வேவில் ஈடுபடுத்தினோம். இவர்களுக்கு வேவுப்பயிற்சியை வழங்கும்போது அதிலே சில போராளிகளின் திறமையான செயற்பாடும் இந்த சண்டையில் முக்கியத்துவம் பெறுகிறது.

2 ஆம் லெப்டினன் ரகுவரன் எனும் போராளி ஆரம்பத்தில் வேலைத் திட்டங்களுக்கு அனுப்பும்போது ஒரு வித்தியாசமான துணிச்சல், நகர்வு, பண்பு என்பவற்றை கொண்டிருந்தார். அவரின் திறமையை அவதானித்து இந்த பாதை எடுக்கும் செயற்பாட்டில் அவரையும் ஈடுபடுத்தினோம். பாதைகள் எடுக்கப்பட்ட பின் மேற்கொண்ட பகுப்பாய்வில் அவரின் செயற்பாடு மிகவும் வித்தியாசமானதாகவிருந்தது. ஒரு அனுபவமுள்ள வேவுவீரன் எவ்வாறு செயற்படுவாரோ அதேபோல் இவர் பயிற்சியையும் பொறுப்பாளர்களால் விளங்கப்படுத்தப்பட்ட விடயத்தையும் வைத்து இராணுவத்தின் நடவடிக்கைகளை மிகவும் நுணுக்கமாக அவதானித்திருந்தார். அவ்வாறுதான் ஒவ்வொரு வேவுப் போராளிகளும் செயற்பட்டிருந்தார்கள்.

சண்டை நடைபெறுகின்ற சந்தர்ப்பங்களில் வேவுப்போராளிகளின் பணி என்ன வென்றால் திட்டத்திற்கேற்ப அணிகளை நகர்த்தி சண்டையை தொடங்கி மண் அரண்களில் ஏறி காப்பரண்களைக் கைப்பற்றியவுடன் வெளி லைனுக்குரியவர்கள் அங்கு நிற்க உள்ளே அணிகளை கொண்டு செல்ல வேண்டியவர்கள் அணிகளுடன் உட்செல்வார்கள்.

சில பாதைகளை எடுக்கும் காலத்தில் எங்களுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது. ஏனென்றால் அப்பகுதிகள் வெளியான பிரதேசம், அங்கு எதிரியின் அணிகள் வந்து பதுங்கியிருந்து தாக்குதல்களை பெருமளவில் மேற்கொண்டு வந்தன. இந்த நிலையில் சண்டைக்கு முதல் நாள் அப்போது பொறுப்பாக இருந்தவரால் சொல்லப்பட்டது இந்தப்பகுதியால் பாதை எடுக்கப்படா விட்டால் சண்டையை நிறுத்த வேண்டிய சூழல் ஏற்படுமென்று இதனை அந்த பாதைக்குரிய போராளிகளுக்கு தெரியப்படுத்தினோம். அதாவது இந்தப்பாதை தளபதி பால்ராஜ் அண்ணாவின் அணி போகவேண்டிய பாதை இந்த அணிதான் கட்டவுட்போட வேண்டிய அணி.

எனவே ஒரு புதுவிதமான முறையில் இதில் வேலையை மேற்கொண்டோம். அதாவது நாங்கள் ஒரு அணியை தயார்ப்படுத்தி நகர்ந்து சண்டை ஏற்பட வேண்டிய நிலை உருவானால் சண்டையிட்டாவது பாதையை எடுப்பது என்ற நிலையில். மிகக்கூடிய ஆபத்துக்களை சந்திக்க வேண்டிய சந்தர்ப்பத்திலும் அந்த போராளிகளின் திறமையான செயற்பாட்டினால் அந்தப்பாதையை எடுத்து அதனூடாகவே மறுநாள் அணிகளை நகர்த்தினோம்.
ஒரு பகுதிக்கு சுகந்திரன் என்ற போராளி பொறுப்பாக நின்று செயற்பட்டார். அவர்கள் மாலை 6.30 இற்கு குளத்து தண்ணிக்குள் இறங்கினால் காலை 4.30 இற்கு பிறகுதான் அவர்கள் கரைக்கு வருவார்கள் 10 மணித்தியாலம் வரையில் தண்ணிக்குள்ளிருந்து நீண்டநேரம் அவதானித்தார்கள் அதாவது சில இடங்களில் தாழ்வான பகுதியும் சில இடங்களில் தாழ்வற்ற பகுதியுமாக இருந்தது. அதற்குள் சத்தமின்றி அணிகள் நகர்வது என்றால் மிகக் கடினம் அதற்கேற்றவாறு வேவு பார்க்க வேண்டியிருந்தது. இதன்படி இப்பகுதியால் குறிப்பிட்ட நேரத்திற்குள் அணிகள் நகர்த்தப்பட்டன.

சண்டைக்கான பயிற்சிகளை அணிகளுக்கு வழங்கும் போது வேவுப் போராளிகளும் ஈடுபடுவார்கள் ஏனென்றால் இவர்களின் வழிகாட்டல் அணிகளுக்கு அவசியமானதாக இருக்கும்.
ஒரு பகுதியால் சண்டை அணிகள் நகர்ந்து கைப்பற்ற வேண்டிய அரண்கள் எல்லாம் பிடிக்கப்பட்டு விட்டன. இதற்கு லெப். கேணல் சித்தா பொறுப்பாக சென்றார். பின்பு பகலில் இராணுவம் மிக முனைப்பாக சண்டையிட ஆரம்பிக்கும் போது இந்த அணியினரின் துப்பாக்கிகள் நீருக்குள்ளால் சென்றதால் செயற்படாது போனது இதனால் அணிக்கு இழப்பு அதிகரிக்க தொடங்கியது லெப். கேணல் சித்தா உட்பட 40 பேர் வரை குளத்து பண்டில் வீரச்சாவடைந்தனர். இதேபோன்று இன்னுமொரு பாதையிலும் குழப்பங்கள் ஏற்பட்டன. இவ்வாறு இராணுவம் அதி உசார் நிலையில் இருந்த போதும் வேவு வீரர்களின் ;திறமையான வேவுச் செயற்பாட்டினால் தான் ஓயாத அலைகள் - 02 சமரை வெற்றி கொள்ள முடிந்ததென அன்று பொறுப்பாக இருந்த தளபதிகள் கூறினார்கள் அது உண்மையும் கூட.

ஓயாத அலைகள் - 02 இல் உள்வேவு என்பதும் முக்கியமானதொன்று இதை பொறுத்த வரையில் வேவுப்போராளிகள் முகாமிற்குள் ஊடுருவி விட்டார்கள் என்பதை எதிரி அறிந்திருந்த நிலையிலும் போராளிகள் உட்புகுந்து மிகவும் துல்லியமாக வேவு பார்த்திருந்தார்கள்.
அதாவது எதிரியின் முகாமுக்குள் அவனது கட்டளைத் தளங்கள், ஆயுத களஞ்சியங்கள், முக்கிய தளங்கள், மோட்டார் தளங்கள், உள் அரண்கள் முட்கம்பி வேலிகள் அனைத்தும் எவ்வாறு எந்த அளவு உசார் நிலையில் இருக்கின்றன என்பதையும் உள் அரண்கள் எத்தனை எந்த அளவு தூரத்தில் உள்ளன என்பனவற்றைக் கூட வேவுப் போராளிகள் தெளிவாக அவதானித்திருந்தார்கள்.

வேவைப் பொறுத்த வரையில் தடையங்களை விட்டால் அந்த சண்டையே குழம்பிவிடும். அதற்கேற்றவாறு வேவு வீரன் செயற்பட வேண்டும். உண்மையில் வேவு வீரன் விசுவாசமானவனாகவும் நம்பிக்கையுடையவனாக துணிச்சல் நிறைந்தவனாக இல்லாதிருந்தால் அந்த வேவு வீரனாலேயே பல போராளிகள் வீரச்சாவடைய வேண்டிய நிலை ஏற்படும் ஆகவே இந்த சண்டையில் அவ்வாறு எந்த செயற்பாடும் நடைபெறாதது வேவு வீரரின் திருப்திகரமான செயற்பாட்டையே வெளிப்படுத்துகின்றது.
பொதுவாக சண்டை ஆரம்பிக்கின்ற நேரத்தில் அனைத்து பாதைகளும் ஒழுங்கமைக் கப்பட்டு குறித்த நேரத்திற்குள் அணிகள் நகர்ந்து சண்டையில் ஈடுபட்டன. இந்த சண்டையில் தடை உடைப்பிற்கான செயற்பாட்டில் வீரச்சாவுமிகக்குறைவாகவே இருந்தது.

பொதுவாக வேவு வீரர்கள் திரட்டும் தகவல்கள் அனைத்தும் தளபதிகளுடாக தேசியத் தலைவருக்கு அனுப்பப்பட்டு தேசியத் தலைவராலேயே சண்டைக்குரிய திட்டங்கள் வகுக்கப்படும் அவரின் திட்டத்திற்கேற்பதான் மாற்றங்கள் மேற்கொள்வதானால் செய்வோம். இந்த சண்டையில் ஏற்கனவே நாங்கள் தெரிவு செய்த சில பாதைகளை தலைவர் நிறுத்தினார். அதற்கேற்ப அடுத்த பாதைகளை எடுத்துத்தான் அணிகளை நகர்த்தினோம்.
இவ்வேவுப்புலி வீரர்களின் அணிகளின் துணிகரச் செயற்பாட்டுக்கு வித்திட்டவர்கள் வீரச்சாவைத் தழுவிய வேவுப்புலி மாவீரர்கள் என்பதே மிகப்பொருத்த முடையது. ஏனெனில் வேவுக்காக செல்கின்ற ஒவ்வொரு போராளியும் வீரச்சாவடைகின்ற பொழுது அடுத்த வேவு வீரனுக்கு ஏற்படுகின்ற உணர்வு எதிரியின் மீது தாக்குதலை நடத்தவேண்டுமென்ற உத்வேகத்தை அதிகரிக்கும். ஆகவே எமது விடுதலையின் ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னும் வீரச்சாவ டைந்த ஒவ்வொரு மாவீரனின் தியாகமும் விடுதலை உணர்வுமே உத்வேகத்தை அளிக்கின்றன.


தொடரும்.
நன்றி:தமிழ்நாதம்.

Labels: , ,

எழுதிக்கொள்வது: amala singh

சிறப்பாக இருக்கு.

10.9 30.9.2005

Post a Comment