« Home | மறுபக்கத்தின் நேர்முக தரிசனம் » | கிளிநொச்சி மீட்பு நடந்தது எவ்வாறு? » | திலீபனின் இறுதி உரையிலிருந்து... » | கேணல் சங்கர் » | திலீபனுடன் பன்னிரெண்டாம் நாள் - 26.09.1987 » | திலீபனுடன் பதினோராம் நாள் - 25.09.1987 » | திலீபனுடன் பத்தாம் நாள் -24-09-1987 » | திலீபனுடன் ஒன்பதாம் நாள் -23-09-1987 » | திலீபனுடன் எட்டாம்நாள்.-22.09.1887 » | திலீபனுடன் ஏழாம் நாள் -21-09-1987 »

மகிந்தவின் முகங்கள்

மறுபக்கம் - கோகர்ணன்
~~~~~~~~~~~~~~~~~~~~~

விடுதலைப் புலிகளை இயன்றளவும் பலவீனப்படுத்தி அதன் பின்பு தாம் விரும்பியவாறான தீர்வொன்றை ஏற்குமாறு அவர்களை வற்புறுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாக இருக்கலாம். மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல்கள் என்ற பேரில் தொடர்ந்தும் விடுதலைப் புலிகளின் மீதான தாக்குதல்களையும் அவர்களுடைய கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள மக்கள் மீதும் நடத்துவதற்கு வேறு நோக்கம் இருக்க நியாயமில்லை.
விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைகட்கு ஆயத்தமாயிருந்தால் அவர்கள் பலவீனப்பட்டுள்ளனர் என்பதுதான் பொருள் என்கிற கருத்து பிரதம மந்திரி விக்ரமநாயக்கவாலும் பிற அரசாங்கப் பேச்சாளர்களாலும் திரும்பத் திரும்பக் கூறப்பட்டு வருகிறது. விடுதலைப் புலிகள் பயங்கரமான இராணுவத் தோல்வியை எதிர்நோக்குகின்றனர் என்ற கருத்துப் பலவேறு வட்டாரங்களிலிருந்தும் கூறப்பட்டு வந்துள்ளது. அரசாங்கத்திற்குள்ளும் அவ்வாறான எண்ணம் வலுப்பெற்று வருகிறதாகவே எண்ண இடமுண்டு. குறுகிய கால நோக்கில் விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்துவது இயலாத காரியமல்ல. ஆயினும் இதுவரை இந்த ஆண்டில் மட்டும் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ள நடவடிக்கைகளை நோக்கும்போது, சில பிரதேசங்களிலிருக்கும் தமிழ் மக்களைப் பல வகைகளிலும் பயமுறுத்தியும் கொன்றும் பட்டினியிட்டும் அவர்களுக்கான அடிப்படைத் தேவைகள் கிடையாமல் மறுத்தும் ஊரைவிட்டே விரட்டுகிற காரியங்கள் தீவிரமடைந்துள்ளன. விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்துவதை விட விஷமத்தனமான நோக்கங்களை இங்கு நாம் காணலாம். பேரினவாதிகளின் இன ஒழிப்பிற்கு ` விடுதலைப்புலிகளின் பயங்கரவாத' நடவடிக்கைகள் ஒரு வசதியான சாட்டே ஒழிய வேறில்லை.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் பரந்துபட்ட வெகுசன ஒற்றுமையின் அடிப்படையிலும் ஒடுக்கப்படுகிற சகல தேசிய இனங்களதும் ஒடுக்குமுறைக்குட்படுகிற சிங்கள மக்களதும் ஆதரவுடனும் முன்னெடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் பலவும் தவறவிடப்பட்டுள்ளன. அதற்கான பழியைக் குறிப்பிட்ட எந்த ஒரு அமைப்பின் மீதும் சுமத்துவதைவிடத் தமிழ்த்தேசிய இன விடுதலை இயக்கத்தின் பொதுவான வரலாற்று வளர்ச்சியை விமர்சிப்பது பொருத்தமாயிருக்கும். இப்போது, பின்நோக்கிய பார்வையிலோ, சுயநல நோக்கிலோ, பம்மாத்தாகவோ ஆயுதப் போராட்டத்தை நிராகரிக்கிறவர்கள் எல்லாரும் தமிழ் மக்கள் முன்னால் எந்தவிதமான தெரிவுகள் உள்ளன என்பதைச் சொல்லத் திணறுகின்றனர். மறுபுறம், விடுதலைப் புலிகளை முழு அளவிலான போரை நோக்கித் தள்ளிவிடுகிற விதமான பொறுப்பற்ற கருத்துகளும் கூறப்பட்டு வருகின்றன. அவையும் பொறுப்பற்றவையே.

ஆயுதமேந்திய போராட்டம் என்பது கட்டுப்பாடற்று எல்லாவிடத்தும் எல்லாவற்றையும் ஆயுதங்கள் மூலம் தீர்ப்பதல்ல. ஆயுதமேந்தாமல் எங்கேயும் ஒடுக்குமுறையாளர்கள் செயற்பட்டதில்லை. சட்டத்தினதும் ஒழுங்கினதும் பேரிலான அரச வன்முறையைச் சமூக நீதிக்கான போராட்டம் எவ்வாறு எதிர்கொள்வது என்ற கேள்வியிலிருந்து தொடங்கினால், ஆயுதமேந்திய போராட்டம் ஏன் தவிர்க்க இயலாததாகிறது என விளங்கும். ஆனால், மக்கள் பொதுவாக அமைதியையே விரும்புகின்றனர். எனவே, எடுத்த எடுப்பிலேயே ஆயுதப் போராட்டங்களில் பங்குபற்றவோ அவற்றை ஆதரிக்கவோ தயங்குவார்கள். பல விதமான அமைதியான சட்டரீதியான போராட்டங்களின் அனுபவங்களினூடாகவே ஆயுதந்தாங்கிய சட்டவிரோதமான போராட்டங்களை நோக்கிய நகர்வு நிகழுகிறது. ஆயுதப் போராட்டத்தை மறுக்கிறவர்கள் இவை பற்றிப் பேச விரும்புவதில்லை. அதேவேளை, முழுமையாக ஆயுதப் போராட்டத்தை மட்டுமே வேண்டுகிறவர்கள் போராட்டத்தின் சமூக அரசியல் பரிமாணங்களைத் தவறவிட்டு விடுகின்றனர்.

விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே வைத்த பின்புதான் பேச்சுவார்த்தைகள் என்றும் பிரபாகரன் சில உத்தரவாதங்களைத் தந்தால் மட்டுமே பேச்சுவார்த்தைகள் என்றும் அரசாங்கம் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைகட்கு எப்போதுமே தயார் என்றும் ஏக காலத்தில் பலவேறு குரல்களில் அரசாங்கம் பேசுகிறது. இதில் எது அரசாங்கத்தின் குரல் என்று தெரியவில்லை. மகிந்த ராஜபக்ஷ தேசிய அரசாங்கம் பற்றி யூ.என்.பி.யுடன் பேசுகிறார். ரணில் விக்கிரமசிங்கவுடன் கை குலுக்குகிற போதே யூ.என்.பி. பிரமுகர்களை இரை வைத்துப் பிடிக்கிறார். ஜே.வி.பி. பிரமுகர் விமல் வீரவன்ஸ படையினருக்கு உரையாற்றியதையும் ஜே.வி.பி. படையினருடன் ஏற்படுத்தியுள்ள தொடர்புகள் பற்றியும் ஆளுங்கட்சியில் பிரமுகர்கள் கண்டித்துப் பேசுகிற போது அதை ஏற்கிற விதமாக காட்டிக் கொண்டே சோமவன்ஸ அமரசிங்கவை ஆரத் தழுவுகிறார். பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் வெவ்வேறு முகங்களைக் காண்பிக்கிறார்.

"உண்மையான ராஜபக்‌ஷவே முன்னால் வருக" என்று எல்லோரும் கூடி அழைத்தால் நாம் எந்த ராஜபக்ஷவைக் காணுவோமென்று என்னால் கூற முடியாது. சண்முகப் பெருமாள் மாதிரி ஆறு தலைகளுடனோ அல்லது ராவணேசன் மாதிரிப் பத்துத் தலைகளோடோ அல்லது அதைவிட அதிகமான தலைகளுடனும் ஒவ்வொரு வாயிலிருந்தும் ஒன்றுக்கு மேற்பட்ட குரல்களுடனும் ஒரு ராஜபக்ஷ வெளிவரலாம். அல்லது பக்தர்கள் ஒவ்வொருவரும் நம்பி வேண்டுகிற மாதிரி அன்றும் இன்றும் என்றும் ஒவ்வொருவருக்கும் அவர் ஒவ்வொரு தோற்றங் காட்டலாம். இப்போது உலகநாடுகளுக்கு நம் அரசாங்கத்தின் நாடகம் விளங்குகிறது என்று நாம் அகமகிழ்வது மடமையென்றே நினைக்கிறேன். அது அவர்கள் எப்போதுமே அறிந்து அறியாததுபோல காட்டி வந்ததுதான்.

தேசிய இனப்பிரச்சினையைப் பொறுத்த வரை, ஜே.ஆர். ஜயவர்தன எப்படித் தான் சொல்ல விரும்பினாலும் சொல்ல இயலாததை சிறில் மத்தியூ மூலம் சொல்லுவித்தாரோ, அது போலவே ராஜபக்‌ஷவுடைய மனமும் பலவேறு உடல்கள் மூலம் தன்னை வெளிப்படுத்துகிறது. மகிந்த சிந்தனை எப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தோற்றம் தந்து வந்துள்ளதோ அது போலவே மகிந்த ராஜபக்ஷவும் விளங்குகிறார்.

உண்மையில் யாருமே அவரது தோற்றங்களால் ஏமாறவில்லை. அவருக்கும் அவருக்கு முன்னர் அதிகாரத்திலிருந்த பேரினவாத சனாதிபதி எவருக்குமிடையில் அதிக வேறுபாடில்லை என்பது எல்லாரும் அறிந்ததே. எனினும், அவரை ஒவ்வொருவரும் தங்களது வசதிக்கேற்பத் தாங்கள் விரும்பியபடி காட்சிப்படுத்திக் கொள்ளுகிறார்கள். எனவே தான் தமிழ் மக்களின் தரப்பில் அமைதி பற்றிப் பேசுகிறவர்கள் மேற்கொண்டு அரசாங்கத்தின் பேரில் எழுகிற முரணான குரல்களைப் புறக்கணித்து மகிந்த ராஜபக்ஷவின் நிலைப்பாடு என்ன என்பதைப் பகிரங்கமாகக் கூறுமாறு வற்புறுத்த வேண்டும்.

பிரபாகரன் சில உத்தரவாதங்களை வழங்கினாலேயே பேச்சுவார்த்தைகள் என்று சொல்லுகிறவர்கள் முழு அரசாங்கத்தின் சார்பாகவும் சனாதிபதி சில உத்தரவாதங்களை வழங்குமாறு வற்புறுத்துவார்களா?

விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கொள்வனவு செய்யக் கூடாது என்பதை ஏற்கிற எவரும் அரசாங்கமும் அவ்வாறே நடக்க வேண்டுமென்று ஏன் கேட்பதற்கு மறுக்கிறார்கள்? கடந்த அரை நூற்றாண்டுக் காலத்தில் அரச படையின் ஆயுதங்களில் எவையும் எந்த அந்நியப்படைக்கும் எதிராகப் பயன்பட்டுள்ளதா? இந்த நாட்டின் மக்களை அல்லது மக்களில் ஒரு பகுதியினரை அழிப்பதற்கு அரசாங்கம் ஆயுதமேந்தலாமெனில், தற்காப்புக்காக ஆயுதமேந்தும் உரிமை பாதிக்கப்பட்டவர்கட்கு இல்லையா? அகிம்சை அரசியல் பற்றிப் பேசி வந்துள்ள எல்லாருமே ஒடுக்கப்பட்ட மக்களின் ஆயுதங்களைத் தான் பறிக்க முயன்றுள்ளனர்.

அண்மையில், நோர்மன் ஃஸிங்கெல்ற்றைன் எனும் அமெரிக்க ஆய்வாளர் "அவரும் ஒரு யூதராக இருக்கலாம்". இஸ்ரேலுக்கு ஆதரவாக முன்னெடுக்கப்படுகிற பிரசாரங்களின் வஞ்சகத்தை விளக்கி "பியோண்ட் சுட்ஸ்பாஸ்" என்ற நூலை வெளியிட்டிருக்கிறார். அதை வாசித்த போது நமது நாட்டின் சிங்கள, ஆங்கில ஏடுகளின் நடத்தையை விளங்கிக் கொள்ள இயலுமாயிருந்தது.

பலஸ்தீன மக்களுக்கு போராடுவதை விட வேறு வழியில்லை. குர்தியமக்களுடைய கதையும் அதேதான். மத்திய தென் அமெரிக்கப் பழங்குடிகள் இப்போதுதான் விழித்துள்ளனர். எல்லாப் போராட்டங்களும் நெளிவு சுழிவான பாதைகளிலேயே முன்னேறி வந்துள்ளன. அவற்றின் வெற்றி தோல்விகளிலிருந்து நாம் கற்க வேண்டியவை நிறைய உள்ளன. முக்கியமாக ஒவ்வொரு போராட்டத்தினதும் நண்பர்கள் யார் எதிரிகள் யார் என்பதில் மிகுந்த தெளிவு அவசியம். தமிழ் மக்களிடையே இவ்விடயத்திற்கு போதிய தெளிவு உள்ளதாகத் தெரியவில்லை. குறிப்பாக நமது தமிழ் ஊடகங்கள் இன்னமும் தமிழ் மக்களுடைய விடுதலைப் போராட்டங்கட்குக் குழி பறிக்கிறவர்களது மேலாதிக்க நோக்கங்களைப் புறக்கணித்து அந்நியர் தயவிலேயே போராட்டத்தை வெல்லுகிறதற்கும், அமைதியான தீர்வை அடைவதற்கும் வழிகாட்டுகின்றன.

தமிழ் மக்களின் நேச சக்திகள் உலகெங்கும் உள்ளனர். ஆனால், நிச்சயமாக எந்த நாட்டினதும் ஆளும் அதிகார வர்க்கத்தினரிடையில் இல்லை என்பதை நாம் மறத்தலாகாது.

நன்றி: ஞாயிறு தினக்குரல் September 24, 2006

___________________________________________

Labels:

எழுதிக்கொள்வது: Mootheevi

சிவசேகரத்தின் கருத்தோடு ஒத்துப் போகிறேன்!

8.25 1.10.2006

மூதேவி,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நல்ல வேளை 'ஓ'வன்னா போட்டு எழுதாமல் விட்டியள், உங்கட குரு மாதிரி.

எழுதிக்கொள்வது: மு.மயூரன்

தினக்குரல் வாங்குவதை விட்டுவிட்டபிறகு நான் அதிகமாக தவறவிட்டது மறுபக்கம் பத்திதான்.
நீங்கள் மீளப்பதிந்தமையால் இந்த நல்ல பத்தியினை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நன்றி வன்னியன்.


23.40 1.10.2006

மயூரன்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
தினக்குரல் இணையத்தில் கிடைக்கிறதுதானே?
நான் இங்கு எடுத்துப்போடுவது, ஒரு தொகுப்புக்காகத்தான். ஏதாவது சந்தர்ப்பத்தில் சுட்டிகள் கொடுக்கலாம்.
சிலவேளை தினக்குரல்காரர் கடவுச்சொல் போட்டுவிட்டால் நேரடியான இணைப்பு சரிவராது. அல்லது தங்கள் கோப்பு வரிசைகளை மாற்றிவிட்டாலும் சரிவராது.
ஏற்கனவே எங்கள் தமிழ் வலைலயுலகத்திலிருந்து படங்களுக்கு இணைப்புக் கொடுத்து நல்ல அனுபவம்.

Post a Comment