« Home | மகிந்தவின் முகங்கள் » | மறுபக்கத்தின் நேர்முக தரிசனம் » | கிளிநொச்சி மீட்பு நடந்தது எவ்வாறு? » | திலீபனின் இறுதி உரையிலிருந்து... » | கேணல் சங்கர் » | திலீபனுடன் பன்னிரெண்டாம் நாள் - 26.09.1987 » | திலீபனுடன் பதினோராம் நாள் - 25.09.1987 » | திலீபனுடன் பத்தாம் நாள் -24-09-1987 » | திலீபனுடன் ஒன்பதாம் நாள் -23-09-1987 » | திலீபனுடன் எட்டாம்நாள்.-22.09.1887 »

இந்தியாவின் நோக்கம் என்ன?

-விதுரன்-
~~~~~~~~

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் சந்திக்க மறுத்ததானது, இலங்கை அரசுக்கும் இனவாதிகளுக்கும் மிகவும் மகிழ்ச்சியான செய்தியாகும். சமாதானப் பேச்சுக்களை விடுத்து உடனடியாக பாரிய இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கைக்கு இது மிகவும் வாய்ப்பாக அமையவுள்ளது.

புலிகள் பலவீனமடைந்திருப்பதாலேயே சமாதானப் பேச்சுக்களில் அவர்கள் ஆர்வம் காட்டுவதாகக் கருதும் இலங்கை அரசும் இனவாதிகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களை சந்திப்பதில்லையென்ற இந்தியப் பிரதமரின் நிலைப்பாடானது உடனடி சமாதானப் பேச்சுகளுக்கு செல்ல வேண்டுமென்ற மிகப் பெரும் அழுத்தத்திலிருந்து இலங்கை அரசை விடுவித்துள்ளது.

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலையின் பின்னர் மிக நீண்ட காலமாக இலங்கைப் பிரச்சினையில் `தலையிடாக் கொள்கை'யைக் கடைப்பிடித்து வந்த இந்தியாவுக்கு, அண்மைக் காலமாக நெருக்கடிகள் ஏற்படத் தொடங்கின.

ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த போது சர்வதேச பாதுகாப்பு வலையமைப்பொன்றை உருவாக்குவதில் தீவிரம் காட்டினார். புலிகளை சமாதானப் பேச்சுக்குள் சிக்க வைத்து காலத்தை இழுத்தடிக்கும் அதேநேரம், புலிகள் மீண்டும் யுத்தத்தை ஆரம்பிக்காதவாறு இந்த சர்வதேச பாதுகாப்பு வலையையும் பின்னத் திட்டமிட்டிருந்தார்.

இதனொரு அங்கமாக அவர் இந்தியாவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாடொன்றைக் கைச்சாத்திட ஆர்வம் காட்டினார். அந்த உடன்பாடானது, இலங்கையின் பாதுகாப்பு நலன்களை விட இந்தியாவின் பாதுகாப்புக்கு இலங்கையூடாக வரும் அச்சுறுத்தல்களைத் தடுத்துவிடும் வாய்ப்புகளிருந்ததால் அதில் இந்தியாவும் பெரிதும் ஆர்வம் காட்டியது.

ஈழத்தமிழர்களின் பிரச்சினைக்கு ஏற்புடைய தீர்வொன்றைக் காண்பதற்கு தனது, பிராந்திய வல்லரசென்ற செல்வாக்கை பயன்படுத்துவதைவிட ஈழத்தமிழரின் போராட்டத்தால் இலங்கை அரசு சந்திக்கும் நெருக்கடிகளைப் பயன்படுத்தி இலங்கையில் தனது செல்வாக்கை செலுத்துவதற்கு இந்தப் பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாட்டை சாதகமாக்கிக் கொள்ள வேண்டுமென இந்தியத் தலைவர்கள் பலர் ஆர்வம் காட்டினர் .

எனினும் இந்தப் பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாடானது, ஈழத் தமிழர்களை அழிக்க இந்தியா அங்கீகாரம் அளிப்பதாயிருக்குமென தமிழகக் கட்சிகள் மிகக் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவில்லை.

இது இந்திய அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்திய அதேநேரம், தமிழகத்தில் இதனால் ஏற்படும் மோசமான உணர்வுகள் நிலைமையை தலைகீழாக்கி விடலாமென்ற அச்சத்தில் பின்னர் இதனை இந்தியா பெரும்பாலும் கைவிட்டு விட்டது.

தருணம் பார்த்திருந்த பாகிஸ்தான் இதனை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டது. காலாகாலமாக இலங்கைக்கும் பாகிஸ்தானுக்குமிடையில் இராணுவ ரீதியான உறவுகளும் ஒத்துழைப்புகளும் பெரிதுமிருந்த போதிலும் கடந்த மூன்று நான்கு வருடங்களில் இரு தரப்புக்குமிடையே இது வெகுவாக அதிகரித்துள்ளது.

குறிப்பாக, இலங்கைக்கான பாகிஸ்தான் தூதராக பாகிஸ்தான் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் கேணல் பஸீர் முகமட் வலி நியமிக்கப்பட்ட பின்னர் இந்த உறவு மிகப்பெருமளவில் அதிகரித்தது.

இலங்கையுடன் இராணுவ ஒத்துழைப்புக்களை அதிகரித்து இந்தியாவின் பிடியிலிருந்து இலங்கையை தனது கைக்குள் போட, புதிய ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்‌ஷ பதவியேற்றது மிகவும் வாய்ப்பானது. போர்க்குணம்மிக்க அவர், மிக மோசமான இனவாத சிந்தனையுடைய ஜே.வி.பி.யின் ஆதரவுடன் பதவியேற்றமை பாகிஸ்தானுக்கு மிகவும் சாதகமானது.

இனப்பிரச்சினைக்கு சமாதானப் பேச்சுகளூடான தீர்வை விடுத்து விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடித்து அவர்களை மிகவும் பலவீனமாக்கி விருப்பமான தீர்வொன்றை திணித்துவிடலாமென்று பாகிஸ்தான் இவர்களுக்கு நம்பிக்கையூட்டியது மட்டுமல்லாது செயலிலுமிறங்கியது.

இலங்கைக்கான ஆயுத உதவிகளை வெகுவாக அதிகரித்தது. இலங்கையை இந்தியாவின் பிடியிலிருந்து விடுவிப்பதற்காக இராணுவ ரீதியில் புலிகளை சுலபமாகத் தோற்கடித்து விடலாமென திரும்பத் திரும்பக் கூறியதுடன் அதற்கேற்ப இலங்கை அரசு படைகளையும் தயார்படுத்துவதில் பெரும் ஆலோசனைகளையும் வழங்கியது.

புலிகளுக்கெதிராக தமிழ் குழுக்களைப் பயன்படுத்தி நிழல் யுத்தத்தை தீவிரப்படுத்தி போர் நிறுத்த உடன்பாட்டிலிருந்து புலிகளை வெளியேறச் செய்து அதன் மூலம் போரை ஆரம்பிக்கவும் அந்தப் போரில் புலிகளைத் தோற்கடிப்பதற்குத் தேவையான இராணுவ ரீதியிலான உதவிகளை வாரி வழங்கவும் பாகிஸ்தான் இலங்கையைத் தூண்டி வந்ததாக கூறப்படுகிறது.

இலங்கைக்கான பாகிஸ்தான் தூதர் பஸீர் முகமட் வலி, இலங்கைக்கும் பாகிஸ்தானுக்குமிடையிலான உறவை மிகப் பெருமளவில் அதிகரித்து, இராணுவ ரீதியிலான தீர்வென்ற எண்ணக் கருவை இலங்கை அரசின் மனதில் அழுத்தமாகப் பதிய வைத்ததுடன் இராணுவ ஆலோசகர்களையும் சிறந்த விமானிகளையும் இலங்கைக்கு அனுப்பச் செய்தார்.

அண்மைக் காலமாக களமுனைகளில் பாகிஸ்தான் படை அதிகாரிகள் பலர் நிலை கொண்டு இலங்கைப் படையினருக்கு ஆலோசனைகளை வழங்கி வருவதாகவும் பாகிஸ்தான் விமானிகளே தற்போது இலங்கையில் போர் விமானங்களைச் செலுத்துவதாகவும் இந்திய உளவுப் பிரிவு (றோ) குற்றஞ்சாட்டி வருகிறது.

வடக்கு - கிழக்கில் அதிகரித்த விமானத் தாக்குதலும் அப்பாவி மக்கள் அதிகளவில் உயிரிழக்கவும் பாகிஸ்தான் விமானிகளே காரணமென்றும் கூறப்படுகிறது. அத்துடன், அமெரிக்காவின் `ஜேன்ஸ் டிபென்ஸ் வீக்லி'யின் தகவல் படி இலங்கைக்கு பாகிஸ்தான் பெருமளவில் போர்த் தளபாடங்களை வழங்கியுள்ளது. 60 மில்லியன் அமெரிக்க டொலருக்கான ஆயுதக் கொள்வனவுக்குரிய பட்டியலை பாகிஸ்தானிடம் இலங்கை அரசு வழங்கியிருந்தது. இதில் விமானப் படையினருக்கான போர்த் தளபாடங்கள் மட்டும் 38.1 மில்லியன் டொலருக்குரியது. இதைவிட 110 மில்லியன் டொலர் பெறுமதியான 22 அல் - ஹாலித் டாங்கிகளையும் பாகிஸ்தான் வழங்கியுள்ளது.

இவையெல்லாம், இலங்கை மீதான கரிசனையில் பாகிஸ்தான் வழங்கியதல்ல. இந்தியாவின் பிடியிலிருந்து இலங்கையை விடுவிப்பதுடன் புலிகள் குறித்த பேரச்சத்திலிருந்தும் இலங்கையை விடுவித்து இராணுவ ரீதியில் புலிகளைத் தோற்கடிக்க முடியுமென்பதை இலங்கையின் சிந்தனையில் ஏற்றுவதுமாகும்.

இதற்காக இலங்கையிடமிருந்து பாகிஸ்தான் மிகப்பெரும் கைமாறை எதிர்பார்த்துள்ளது. இலங்கை மீதான இந்தியாவின் ஆதிக்கத்தையும் செல்வாக்கையும் தகர்த்து இந்தியாவிலிருந்து விலகி பாகிஸ்தானுடனான இலங்கையின் தொடர்புகளை அதிகரிக்கச் செய்வதன் மூலம் இலங்கையில் தனது செல்வாக்கை செலுத்த பாகிஸ்தான் முற்பட்டு வருகிறது.

இந்தியாவைச் சுற்றியுள்ள எந்தவொரு நாடும் இன்று இந்தியாவுக்கு ஆதரவாயில்லை. இந்தியாவிலிருந்து பிரிந்த பாகிஸ்தான் தான் இன்று இந்தியாவின் மிகப் பெரும் எதிரியென்பதுடன் இந்தியாவைச் சுற்றியிருக்கும் நாடுகளில் தனது செல்வாக்கை மிக அதிகம் செலுத்துகிறது.

பாகிஸ்தானின் கொடூரப்பிடியிலிருந்து இந்தியா, பங்களாதேஷை பிரித்துக் கொடுத்த போதும் பங்களாதேஷ் இன்று பாகிஸ்தானுடனேயே நிற்கிறது. உலகின் ஒரேயொரு இந்து நாடான நேபாளம் கூட இன்று முற்று முழுதாக பாகிஸ்தானதும் சீனாவினதும் செல்வாக்கினுள் சென்றுவிட்டது.

உலகின் அடுத்த வல்லரசாக உருவெடுத்து வரும் சீனா இந்தியாவின் எதிரியாக உள்ள அதேநேரம், பாகிஸ்தானின் மிகப்பெரும் நண்பனாகிவிட்டது. அப்பால் பூட்டானின் வெளியுறவுக் கொள்கையும் பாதுகாப்பும் இந்தியாவிடமிருந்தாலும் அங்கு கூட இந்தியாவால் பெரிதும் செல்வாக்கை செலுத்த முடியவில்லை.

இலங்கையும் காலங்காலமாக இந்தியாவின் செல்வாக்கிற்கு உட்பட்டதாயிருந்தாலும் சிங்களத் தலைவர்கள் என்றுமே இந்தியத் தலைவர்களை விட பாகிஸ்தான் தலைவர்களுடன் தொடர்புகளை வைத்திருப்பதையே அதிகம் விரும்புகின்றனர்.

இவையெல்லாம் இந்தியாவுக்கு நன்கு தெரியும். இதனால் தான், கொழும்பில் இடம்பெற்ற கிளேமோர் தாக்குதலிலிருந்து தப்பிய பாகிஸ்தான் தூதுவர், `றோ'வே தன்னைக் கொழும்பில் வைத்துக் கொல்லச் சதி செய்ததாகவும் மூன்றாம் நாடொன்றில் வைத்து இந்தியா தங்கள் மீது நிழல் யுத்தத்தை தொடுப்பதாகவும் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்த நிலையில் தான் இந்தியத் தூதுவர் நிருபமா ராவுக்கு எதிராக அமைச்சர் அநுரா பண்டாரநாயக்கா பாராளுமன்றில் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டு அரசியல் `கிளேமோர்' தாக்குதலை நடத்தினார்.

இலங்கையில் ஆதிக்கம் செலுத்த போட்டியிடும் இரு அயல் நாடுகளினதும் தூதர்கள் மிகக் குறுகிய கால இடை வெளிக்குள் இவ்வாறான தாக்குதலுக்கிலக்கான போது, ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் தூண்டுதலின் பேரிலேயே நிருபமா ராவை அநுரா பண்டாரநாயக்கா தாக்கியதாக இந்தியா கருதுகிறது.

இந்த நிலையில் தான், சமாதானப் பேச்சுகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டுமென்ற இணைத் தலைமை நாடுகளின் கடும் அழுத்தத்தையும் உதாசீனம் செய்து இலங்கை அரசு மற்றொரு யுத்தத்திற்கான முனைப்பில் தீவிரம் காட்டுகிறது.

அண்மைக் காலத்தில் அரச படைகளின் மிகக் கடுமையான தாக்குதலால் ஆயிரக் கணக்கான தமிழர்கள் இந்தியாவுக்கு தப்பியோடுகின்றனர். இலங்கை நிலைமைகள் தமிழகத்தில் கடுமையான உணர்வலைகளை ஏற்படுத்தியிருப்பதுடன் இந்தியா இப் பிரச்சினையில் தனது செல்வாக்கை செலுத்தி இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க முன் வரவேண்டுமென தமிழகம் கொந்தளிக்கிறது.

இலங்கையில் பாகிஸ்தானின் செல்வாக்கு பெருமளவில் அதிகரித்திருப்பது தனது நலனுக்கு மிகப் பெரும் ஆபத்தாகிவிடுமெனக் கருதும் இந்தியா, இலங்கையில் பாகிஸ்தானின் ஆதிக்கத்தையும் செல்வாக்கையும் குறைக்க எந்த விதத்திலும் ராஜதந்திர ரீதியில் நடவடிக்கை எடுக்கவில்லையென்பதுடன் எடுக்கவும் தவறிவிட்டது.

தற்போது கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களை இந்தியப் பிரதமர் சந்தித்திருந்தால் அது இலங்கை அரசுக்கும் பாகிஸ்தானுக்கும் ராஜதந்திர ரீதியான அழுத்தங்களைக் கொடுத்திருக்குமென்பதுடன் இலங்கையை பெரிதும் அச்சுறுத்துவதாகக் கூட இருந்திருக்கும்.

இலங்கைப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இந்தச் சந்திப்பு உதவுகின்றதோ, இல்லையோ பாகிஸ்தானின் பிடியில் விழுந்துள்ள இலங்கைக்கு இதுவொரு கடும் எச்சரிக்கையாக இருந்திருக்குமென்பதுடன் அது, இந்திய நலனுக்கு இலங்கையூடாக பாகிஸ்தானின் அச்சுறுத்தல் ஏதும் ஏற்படுவதை நிறுத்துமாறு இலங்கையை எச்சரிப்பதாகக் கூட இருந்திருக்கலாம்.

அத்துடன் இலங்கையில் இராணுவத் தீர்வில் அரசு அக்கறை காட்டுவதாலேயே இலங்கை அரசு பாகிஸ்தானுடன் நெருங்கி நிற்பது தெளிவாகும். இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்தித்து சமாதான முயற்சிகளை ஊக்குவித்து பேச்சுக்களை ஆரம்பித்து இலங்கையில் மற்றொரு யுத்தத்தை தவிர்ப்பதன் மூலம் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்குமிடையிலான நெருக்கமான உறவுக்கு இந்தியா ஆப்பு வைத்திருக்க முடியும்.

ஆனால் ,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்திக்க மறுத்ததன் மூலம், இலங்கைப் பிரச்சினையில் தனது பிடியை வலுவடையச் செய்து பாகிஸ்தானின் இராணுவச் செல்வாக்கை குறைத்திருக்கக் கூடிய வாய்ப்பையும் இந்தியா இழந்துவிட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்திப்பது புலிகளின் நிலைப்பாட்டை ஆதரிப்பதாக அமைந்துவிடலாமென இந்தியா கருதுவதன் மூலம் இந்தச் சந்திப்பை தவிர்த்து விட்டதாகக் கருதினால், இந்தியா இந்தச் சந்திப்பை தவிர்த்ததானது இலங்கையில் பாரிய படை நடவடிக்கையை மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கும் அரசுக்கு மிகவும் ஊக்கமளிப்பதாகவே இருக்கப் போகின்றது.

இலங்கை அரசு இராணுவ ரீதியிலான தீர்வொன்றுக்கு பெரிதும் ஆர்வம் காட்டுவதைத் தெரிந்ததும் விடுதலைப் புலிகளைத் தடை செய்ததன் மூலம் சமாதான முயற்சிகளை ஐரோப்பிய ஒன்றியம் சீர்குலைத்தது. அதுபோன்றே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனான சந்திப்புக்கு மறுப்புத் தெரிவித்ததன் மூலம் இந்தியாவும் சமாதான முயற்சிகளை சீர்குலைத்துள்ளது.

இவற்றின் மூலம் இனிவரும் நாட்களில் பாரிய யுத்தம் வெடிக்கும் பட்சத்தில், தங்களது செல்வாக்கை இப்பிரச்சினையில் செலுத்தும் தகுதியை ஐரோப்பிய ஒன்றியமும் இந்தியாவும் இழந்துள்ளன.
இது இலங்கையில் முழு அளவிலான போரைத் தோற்றுவித்து பெரும் இரத்தக்களரியை உருவாக்கப் போகின்றதென்பதுடன் ஏற்படப் போகும் பேரழிவுகளுக்கும் இவர்களே காரணமாயிருக்கப் போகின்றார்களென்பதும் வெளிப்படை 2000 ஆம் ஆண்டில் புலிகள் யாழ். .குடாவை கைப்பற்றும் நிலையிலிருந்த போது இந்தியா கடும் அழுத்தத்தை பிரயோகித்ததும் அங்கிருந்து புலிகள் விலகக் காரணமாயிருந்ததெனக் கூறப்படும் நிலையில் இனியேற்படப்போகும் பேரழிவுகளுக்கு காரணமாகிவிட்ட இவர்கள் எந்த அடிப்படையில் புலிகளின் பதில் தாக்குதலை தடுத்து நிறுத்த முன்வருவார்களென்ற கேள்வியை தமிழ் மக்கள் நிச்சயம் எழுப்புவர்.


நன்றி: ஞாயிறு தினக்குரல் September 24, 2006

_____________________________________________

Labels: , ,

வன்னி,
பதிவுக்கு நன்றி. இந்திய உளவுப்படையின் முன்னாள் தலைவர் சின்கா அவர்கள் ஈழப்பிரச்சனையில் இந்தியாவின் அணுகுமுறையை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்தியாவின் தவறான அணுகுமுறையால் இப்போது இந்தியா பெரும் பிசாசுக்கும் ஆழ்கடலுக்குமிடையில் சிக்குண்டு தவிப்பதாகச் சொல்கிறார்.
திரு. சின்கா அவர்கள் சொன்ன சில கருத்துக்களை தமிழ்நெற்றிலிருந்து எடுத்து இங்கு இணைக்கிறேன்.
----------------------------------
India’s former spy chief has criticised Delhi for not engaging with the both the Liberation Tigers and Sri Lanka’s government to prevent the slide into conflict. "India's inability to fully comprehend the ground realities in Sri Lanka and, hamstrung by the past, its reluctance to do business with LTTE to help evolve an equitable settlement may prove to be a monumental foreign policy blunder,” J.K. Sinha, former head of India’s external intelligence agency said

"India's ambivalence about the LTTE and its inability to pull its weight in Sri Lanka in favour of the peace process shall cost India dear. India is now caught between the devil and the deep sea,” Sinha warns.
"[Meanwhile] It is indeed ironical that Colombo, which conspired with LTTE to force the return of the Indian Army (in 1990), now looks up to New Delhi to rein in LTTE and play a decisive role as the regional superpower to bring about a durable peace."


[Source : www.tamilnet.com]

வெற்றி,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

நண்பர் சதயம் அவர்களே,

//தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தில்லியில் மான்புமிகு பிரதமரை சந்திக்க நேரம் கேட்டு காத்திருந்த போது, ஈழதமிழருக்காய் இந்தியாவிலிருந்தே அந்தர்பல்டி அடிக்கும் வைக்கோ என்னசெய்துகொண்டிருந்தார்?.//

நாம் நடந்தது என்னவென்று தெரியாமல் அவசரப்பட்டு சும்மா வார்த்தைகளை அள்ளி வீசுவது நல்லதல்ல என நினைக்கிறேன். அண்ணன் வைகோ அவர்களை இரு தடவைகள் நேரில் சந்தித்துப் பழகும் வாய்ப்பைப் பெற்றவன் நான். அவர் ஈழத்தமிழர் விடயத்தில் யாருடனும் சமரசம் செய்பவர் அல்லர். உண்மையில் வைகோ அவர்களின் ஏற்பாட்டில்தான் ஈழத்தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாரதப் பிரதமரைச் சந்திக்க புதுடெல்லி சென்றனர் எனவும் வைகோவின் ஏற்பாட்டில் ஈழத்தமிழ் நா.உக்கள் பிரதமரைச் சந்தித்தால் வைகோவுக்கு விளம்பரம் கிடைக்கலாமென கலைஞரே இச் சந்திப்பை நடக்கவிடாமல் செய்ததாகவும் ஒரு வதந்தி உலாவுகிறது. ஆனால் இதில் வருத்தப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் இன்றும் தமிழக அரசியல் கட்சிகள் ஈழத்தமிழர் பிரச்சனையை தமது அரசியல் இலாபங்களுக்காகத் தான் பயன்படுத்துகிறார்கள். பல நாட்களாக சென்னையில் தங்கியிருந்த ஈழ நா.உக்களை கலைஞர் சந்திக்காதது ஏன்?

சதயம், வெற்றி,

வருகைக்கும் உங்கள் கருத்துக்களுக்கும் நன்றி.