« Home | ஆனந்தசங்கரிக்கு யுனெஸ்கோ வருது கிடைத்தது எப்படி? » | இந்தியாவின் நோக்கம் என்ன? » | மகிந்தவின் முகங்கள் » | மறுபக்கத்தின் நேர்முக தரிசனம் » | கிளிநொச்சி மீட்பு நடந்தது எவ்வாறு? » | திலீபனின் இறுதி உரையிலிருந்து... » | கேணல் சங்கர் » | திலீபனுடன் பன்னிரெண்டாம் நாள் - 26.09.1987 » | திலீபனுடன் பதினோராம் நாள் - 25.09.1987 » | திலீபனுடன் பத்தாம் நாள் -24-09-1987 »

ஈழத்தமிழரின் நேச சக்திகள்

மறுபக்கம் - கோகர்ணன்

ஆஃப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தொடுத்த போரில் பாகிஸ்தான் ஒத்துழைக்கா விட்டால் பாகிஸ்தான் மீது குண்டு வீசி அழிக்கப் போவதாக அமெரிக்கத் தரப்பு தன்னை மிரட்டியதாக பாகிஸ்தானின் இராணுவ ஆட்சித் தலைவர் முஷாரப் தெரிவித்ததன் நோக்கம் என்னவென்று சொல்வது கடினம். அமெரிக்கா இப்படித் தான் உலக நாடுகளையெல்லாம் மிரட்டித் தனது காரியத்தைச் சாதிக்கிறது என்று உலக நாடுகளின் தலைவர்களையும் மக்களையும் எச்சரிப்பதுதான் அவரது நோக்கமென்றால் அது மெச்சத்தக்கது. ஆனாலும் அவர் புதிதாக எதையுமே சொல்லவில்லை. அமெரிக்கா மிரட்டியதற்கு அஞ்சியே அவர் அமெரிக்காவுடன் ஒத்துழைக்கிறதாக அவர் சொன்னாறராயிருந்தால் அவர் எப்படிப்பட்ட தலைவர் என்று நாம் நம்மையே கேட்டுக் கொள்ள வேண்டியதுதான். அமெரிக்காவுடன் ஒத்துழைப்பது தனது மதியூகம் என்று உலக மக்களும் தலைவர்களும் நம்பினாலும் நம்பாவிட்டாலும், அப்படி ஒத்துழைத்ததன் மூலம் தங்களை அழிவினின்று காப்பாற்றிய பாகிஸ்தான் மக்கள் அவருக்கு என்றென்றும் நன்றியுடையோராக இருப்பார்கள் என்று அவர் நினைத்திருப்பாராகில் அவருக்குப் பாகிஸ்தான் மக்களின் சுயமரியாதை பற்றி மிகவும் தாழ்வானதொரு மதிப்பீடுதான் இருக்க முடியும். அது எப்படியிருந்தாலும் முஷாரப் சொன்னது உலகின் இன்றைய யதார்த்தமான அவல நிலைபற்றிய ஒரு பிரகடனம்.

விரும்பியோ விரும்பாமலோ பல மூன்றாம் நாடுகளின் ஆட்சியாளர்கள் அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு எதிராக நிமிர்ந்து நிற்க அஞ்சுகிறார்கள். சில நாடுகளின் ஆட்சியாளர்கள் தங்களுடைய பிராந்திய மேலாதிக்க நோக்கத்துக்கு வசதியாக அமெரிக்காவின் மேலாதிக்க நோக்கங்கட்குத் துணை போகிறார்கள். ஈரானின் அணுசக்தி மேம்படுத்தல் முயற்சிகளைக் காரணங்காட்டி, ஈரான் மீது பொருளாதார தடை விதிக்கவும் காலப் போக்கில் ஈரான் மீது தாக்குதல்களை நடத்தவும் அமெரிக்கா திட்டமிடுகிறது என்பதைத் தெளிவாக அறிந்து கொண்டே சர்வதேச அணுசக்தி அமைப்பில் ஈரானுக்கு எதிராக இந்தியா வாக்களித்தது. தொடர்ச்சியாக பலஸ்தீன, லெபனிய அராபியர்களை இஸ்ரேல் எந்த விதமான சட்ட ரீதியான நியாயமும் இல்லாமல் கடத்திச் சென்றும் கைது செய்தும் சிறையில் அடைப்பது பற்றி உலக மக்கள் அறியமாட்டார்கள். உலகில் ஊடக சாம்ராச்சியங்களின் அக்கறை அது போன்ற விடயங்களைத் தெரிவிப்பது பற்றியதல்ல. ஆனால், சிறை பிடிக்கப்பட்டும் சட்ட விரோதமாக மறியலில் வைக்கப்பட்டுமுள்ள அராபியர்களை விடுவிக்கும் நோக்கில் இரண்டு இஸ்ரேலியச் சிப்பாய்களைச் சிறை பிடித்தபோது இஸ்ரேல் லெபனான் மீது நடத்திய கோரமான இராணுவத் தாக்குதலைக் கண்டிக்க இந்தியா தயங்கியது. இது ஏன் என்று விளங்கிக் கொள்வது கடினமானதல்ல.

எவ்வாறாயினும், இஸ்ரேலிய அழிவுச் செயல்களை கண்டிப்பதற்கும் சமாதான நோக்கங்கட்காக அணுசக்தியை விருத்தி செய்வதற்கு ஈரானுக்குள்ள உரிமையை ஆதரிப்பதற்கும் சில வாரங்கள் முன்னர் நடந்து முடிந்த அணிசேரா நாடுகளின் மாநாடு முழுமையான ஆதரவு தெரிவித்துள்ளது. இது இந்தியாவின் முன்முயற்சியால் நடந்ததல்ல. மாறாக, மூன்றாமுலக நாடுகளிடையே மேற்குறிப்பிட்ட பிரச்சினைகளையிட்டு ஏற்பட்டிருந்த மனக் கசப்பின் விளைவானதே. எனவேதான், அமெரிக்காவின் தனது மேலாதிக்க நோக்கங்கட்கு விரோதமான பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றி அணிசேரா நாடுகளின் கூட்டம் தனது நம்பகத் தன்மையை நிலை நிறுத்த முடியுமானது. பலஸ்தீன மக்களின் உண்மையான நண்பர்களின் வரிசையில் கியூபாவும் வெனிசுவேலாவும் முன்னிலை வகிக்கின்றன. ஈரானின்நியாயமான நிலைப்பாட்டை ஆதரிப்பதில் இஸ்லாமிய நாடுகளை விட கியூபாவும் வெனிசுவேலாவும் வேறு சில கத்தோலிக்க நாடுகளும் தீவிரமாக இருக்கின்றன. எனவே தான், நாங்கள் வெறுமனே இன, மத, அடிப்படைகளில் நாடுகளிடையிலான உறவையும் உலக நிகழ்வுகள் பற்றிய நிலைப்பாடுகளையும் பற்றிப் பொத்தம் பொதுவான முடிவுகளை வந்தடைய முடியாது.

இலங்கையின் தேசிய இனப் பிரச்சினையின் தொடக்கங்கட்குப் பல்வேறு வரலாற்று வேர்கள் உள்ளன. அதன் அண்மைக் கால விருத்தியும் போராக அதன் பரிணாமமும் போரிலிருந்து மீள இயலாத தவிப்பும் வெறுமனே தமிழ்- சிங்கள இனப் பகையின் அடிப்படையில் விளக்கக் கூடியதல்ல. அந்நியக் குறுக்கீடு கடந்த கால் நூற்றாண்டுக்குள் மிகவும் அதிகரித்துள்ளது. இந்தியாவின் குறுக்கீடு மறைமுகமாகவும் நேரடியாகவும் இருந்து வந்துள்ளது. இந்தியாவின் குறுக்கீட்டை எஸ்.ஜே.வி. செல்வநாயகம் 1970 களில் விரும்பியதாக அவரது மருமகனும் ஜே.ஆர்.ஜயவர்த்தனவுக்கு நெருக்கமானவராக இருந்தவருமான ஏ.ஜே.வில்சன் எழுதியிருக்கிறார். எனினும், 1978 வரை இலங்கை அரசிற்கு எதிராக இந்தியா குறுக்கிடும் வாய்ப்பு இருந்ததில்லை. பாகிஸ்தானின் உள்நாட்டுப் போரின்போது பாகிஸ்தானிய விமானங்கள் இலங்கையிற் தரித்துச் செல்ல இலங்கை அரசாங்கம் அனுமதித்தது பற்றி இந்திய ஆட்சியாளர்கள் மனத் திருப்தியடைய நியாயமில்லாவிட்டாலும் அது பற்றி எதிர்ப்புத் தெரிவிக்க அடிப்படை இருக்கவில்லை. இலங்கையின் நடுநிலையை விட ஒரு இந்தியச் சார்பு நிலையை இந்தியா விரும்பிய போதும் இலங்கையின் நடு நிலையான அயற் கொள்கையை வலிந்து குழப்புவதன் பிரச்சினைகள் இந்திய அதிகார வர்க்கம் அறிந்திருந்தது.

1978 முதல் இலங்கையின் அயற் கொள்கையில் ஏற்பட்ட அமெரிக்க சார்புப் பெயர்ச்சி இந்திய குறுக்கீட்டுக்கான நியாயங்களை ஏற்படுத்தியதுடன் தென்னாசிய அரசியல் இராணுவ, பொருளாதார ஆதிக்கத்துக்கான போட்டியில் இலங்கையை ஒரு முக்கியமான களமாகவும் மாற்றியது. 1983 க்கு முன்னரே இந்திய ஆட்சியாளர்கள் தமிழ்ப் போராளிக் குழுக்களுக்கு வரையறுக்கப்பட்ட ஆதரவு வழங்கியதோடு தனி நாட்டுக் கோரிக்கையை இந்தியா ஆதரிக்கும் என்ற மயக்கத்தையும் ஏற்படுத்தியிருந்தனர். இன்றுங் கூட இந்திரா காந்தி உயிரோடு இருந்தால், இன்று இந்தியா வேறு விதமாக நடந்து கொண்டிருக்கும் என்று நம்புகிறவர்கள் இருக்கிறார்கள். இது அரசு யந்திரம். வர்க்க நலன்கள் என்பன பற்றிய தெளிவீனங்கள் காரணமாகத் தொடரும் ஒரு மாயையாகும். பங்களாதேஷ் உருவாக உதவியாக இந்தியா குறிக்கிட்ட காலத்தின் இந்திய மேலாதிக்கத் தேவைகள் மாறிவிட்டன. சோவியத் யூனியனின் உடைவுக்கு முன்னமே அமெரிக்கர் சார்பான ஒரு போக்குக்கான அத்திபாரம் இடப்பட்டு விட்டது. இது இந்தியாவின் பெரு முதலாளிகளின் இரண்டாங் கட்ட வளர்ச்சியின் தவிர்க்க முடியாத ஒரு திசை மாற்றம். இன்று இந்தியா திறந்த பொருளாதாரம், உலகமயமாதல் என்பவற்றை ஏற்று அவற்றை மற்ற நாடுகட்கும் பரிந்துரைக்கிறது. இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையே தென்னாசிய மேலாதிக்கத்திற்கான போட்டியிற் சில உடன்பாடுகள் காணப்பட்டுள்ளன. அமெரிக்கா இப்போது சீனாவையும் ரஷ்யாவையும் தனிமைப்படுத்துவதற்கான உபாயங்களிற் காட்டுகிற கவனம் காரணமாக சீன- இந்திய, ரஷ்ய- இந்திய நல்லுறவுக்கும் ரஷ்யா- சீனா- இந்தியா ஆகியவற்றின் நெருங்கிய பொருளாதார- இராணுவ ஒத்துழைப்புக்கும் ஆப்பு வைக்கும் நோக்கில் இந்தியாவுடன் தனது `நட்பை' வலுப்படுத்த முனைகிறது. இந்த நட்பால் இந்திய மக்கள் நன்மை காணப் போவதில்லை. இந்தியாவின் பெரு முதலாளிகளும் புதிய தரகு முதலாளிகளும் நன்மை பெறுவர்.

எனவேதான், இந்திய - அமெரிக்க முரண்பாட்டையோ பாகிஸ்தான் - இந்திய முரண்பாட்டையோ காட்டி இலங்கையில் இந்தியா தமிழ் மக்கள் சார்பாகக் குறுக்கிட வேண்டும் என்று விரும்புவது எவ்வளவு தூரம் பொருளற்றது என்பதைத் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களது இரண்டு வார இலவுகாத்தல் நமக்கு உணர்த்தியிராவிட்டால், வேறெதுவும் உணர்த்தப் போவதில்லை. டில்லி அரசாங்கம் வெறுமனே பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கிற வாய்ப்பை மறுத்ததென்றால் பரவாயில்லை. போதாதற்கு மக்கள் நிராகரித்தவர்களை டில்லிக்கு வலிந்து அழைத்து வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியுள்ளது. இதற்கு காரணம் மு.கருணாநிதியின் குள்ள நரித்தனம் என்று சிலர் நினைக்கின்றனர். உண்மை அதற்கு நேரெதிரானது. டில்லியின் தயக்கத்தையே கருணாநிதியும் தனது நடத்தை மூலம் வெளிகாட்டியிருக்கிறார். அதன் மூலம் டில்லியின் இதயத் துடிப்புக்கும் தனது இதயத்துடிப்புக்கும் உள்ள நெருக்கம் டில்லியினதும் கோபாலசாமியினதற்கும் உள்ளதை விட வலியது என்று தமிழகத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் நேச சக்திகட்கும் உணர்த்தியுள்ளார். இதற்கு மேலும் நமது இந்திய கனவுகளும் தமிழகம் பற்றிய எதிர்பார்ப்புகளும் தொடர வேண்டுமா? ஏமாறுகிறவர்கள் அதைத் தங்களோடு நிறுத்திக் கொண்டு, தமிழ் மக்களை ஏய்க்காமல் இருப்பது உத்தமமானது.

அமெரிக்கா விடுதலைப் புலிகளைப் பற்றிய கடும்போக்கைக் கடந்த மூன்று ஆண்டுகட்கும் மேலாகவே கடைப்பிடித்து வருகிறது. அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற காலத்திற்கூட விடுதலைப் புலிகளைப் பல்வேறு கட்டாயங்கட்கு உட்படுத்துவதில் அமெரிக்காவின் இலங்கைத் தூதுவர்களும் பிராந்திய விவகாரப் பேச்சாளர்களும் முனைப்பாக இருந்தனர். அமெரிக்காவின் உலகமயமாக்கல் திட்டத்திற்கு வசதியாக யூ.என்.பி. ஆட்சி ஏற்படுவதை அமெரிக்க அதிகாரபீடம் விரும்பினாலும், அதன் நோக்கம் விடுதலைப் புலிகளைக் கொண்டு ராஜபக்ஷ ஆட்சியைக் கவிழ்ப்பதல்ல. நீண்ட கால நோக்கிலும் குறுகியகால நோக்கிலும் அமெரிக்க அதிகாரபீடம் `விடுதலைப் புலிகட்கு எதிரான ஒரு நிலைப்பாட்டையே எடுத்துள்ளது. விடுதலைப் புலிகளை வழிக்குக் கொண்டு வருகிற' நடவடிக்கைகளின் வரிசையிலேயே நாம் ஐரோப்பிய ஒன்றியத் தடைக்கான அமெரிக்க அழுத்தத்தையும் அண்மைக் காலங்களில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மீது எடுக்கப்பட்ட கடும் நடவடிக்கைகளையும் கருத வேண்டியுள்ளது. அவர்களது நடவடிக்கைகள் இன்று நேற்று அறியவந்த தகவல்களின் விளைவுகளல்ல.

தமிழ் மக்கள் எப்போதோ கற்றிருக்க வேண்டிய பாடங்களைக் கசப்பான அனுபவங்களின் மூலமே கற்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பிறருடைய அனுபவங்களிலிருந்து கற்க மறுக்கிறவர்கள் பிறரது கசப்பான அனுபவங்களை மேலும் கசப்பான முறையிலேயே கற்க வேண்டி வருகிறது. இன்று வரை, தமிழ் மக்களின் உண்மையான நண்பர்களையும் நட்பு வேடம் பூண்டவர்களையும் வேறுபடுத்த இயலாத விதமாகப் பல்வேறு புனைவுகள் நம்முன் காட்சிக்கு வைக்கப்பட்டு வந்துள்ளன.

இப்போது பாக்கிஸ்தான் இலங்கை ஒத்துழைப்பைக் காட்டி இந்தியாவைத் தமிழர் சார்பாகக் குறுக்கிடச் செய்ய இயலும் என்று ஒரு புதிய கனவு விரிகிறது. போதாதற்குச் சீனாவுடனான பொருளாதார ஒத்துழைப்புக்கும் ஒரு இடம் வழங்கப்படுகிறது. இலங்கையின் மீது வலுவடைந்து வருகிற இந்திய மூலதனத்தின் ஆதிக்கத்திற்குக் கேடாக இந்தியா எதையுமே செய்யப்போவதில்லை. அமெரிக்க- இந்தியப் பார்வைகள் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையில், ஆக மிஞ்சி, எட்ட நின்று வேடிக்கை பார்க்கிற அளவுக்கு மேலாகத் தமிழ் மக்களுக்குச் சாதகமாக அமையப் போவதில்லை.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் அதி முக்கியமான சக்தி தமிழ் மக்கள்தான். இதை மறக்கும் போதுதான் அந்நிய உதவிக் கரங்கட்காகத் தவங்கிடக்கிற அவலமும் அவசியமற்ற ஏமாற்றங்களும் நமக்குக் கிடைக்கின்றன. தமிழ் மக்கள் பலமுனைகளிலும் பலவகைகளிலும் ஒன்றுபட்டுப் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அமைதி பற்றிய பேச்சுகள் உரக்க ஒலிக்கிற அதேவேளை, போரை விடக்கொடிய போரில்லாத அழிவுகள் நடைபெறுகின்றன. மக்கள் தம் தலைவிதியைத் தாமே தமது கைகளில் எடுக்க வேண்டிய நேரம் இது.
____________________________________________
நன்றி: ஞாயிறு தினக்குரல் October 15, 2006

_____________________________________________

Labels:

எழுதிக்கொள்வது: Sri Rangan


//தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் அதி முக்கியமான சக்தி தமிழ் மக்கள்தான். இதை மறக்கும் போதுதான் அந்நிய உதவிக் கரங்கட்காகத் தவங்கிடக்கிற அவலமும் அவசியமற்ற ஏமாற்றங்களும் நமக்குக் கிடைக்கின்றன. தமிழ் மக்கள் பலமுனைகளிலும் பலவகைகளிலும் ஒன்றுபட்டுப் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அமைதி பற்றிய பேச்சுகள் உரக்க ஒலிக்கிற அதேவேளை, போரை விடக்கொடிய போரில்லாத அழிவுகள் நடைபெறுகின்றன. மக்கள் தம் தலைவிதியைத் தாமே தமது கைகளில் எடுக்க வேண்டிய நேரம் இது.//


இதைத்தாம் நாம் 1980களிலிருந்து கத்தோ கத்தென்று கத்துகிறோம்.சிவசேகரமும் தனது சிற்றுரையான-விஸ்வாநந்ததேவன் நினைவுரையிலும்"கனிவுமில்லைக் கருணையும் இல்லை"தொடர்ந்து சொல்கிறார்!ஆனால் தமிழ் மக்களின் அரசியலோ இன்னும் வெளிநாடுகளின் தயவில் போராட முனைகிறது.




20.0 15.10.2006

சிறிரங்கன்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Post a Comment