« Home | இலங்கையில் இந்தியத் தூதுவராலயம் » | பெண் புலிகள் பற்றி றொய்ட்டர் » | வை.கோ. ஆற்றிய உரையின் ஒலிவடிவம். » | தந்தை பார்த்திருக்க மகனைக்கொன்றனர் படையினர். » | வீரமணி, வை.கோவின் உரைகள் ஒலிவடிவம் » | வை.கோ.வின் உரை » | இனச்சிக்கலில் இந்திய நிலைப்பாடு » | யாழில் அரசஊழியர்கள் புறக்கணிப்புப் போராட்டம் » | தமிழின உணர்வாளர் ஆட்டோ ஆனந்தராஜ் காலமானார். » | இலங்கைத் தேர்தலில் வென்றது யார்? »

ஜே.வி.பி கட்சியும் அதன் தலைமையும்.

வெளிவந்த சில உண்மைகள்.

"கட்சியின் தங்கத்தையும்பணத்தையும் திருடிமோசடியில் ஈடுபட்ட சோமவன்ஸவுக்கு மரணதண்டனை விதித்தது ஜே.வி.பி"


ஜே.வி.பியின் உத்தியோகபூர்வ நிதியையும், அந்த அமைப்பினால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தங்கத்தையும் மோசடி செய்து, தனது குடும்பத்தவர்களின் பெயர்களில் சொத்துக்களை வாங்கினார் என்பதால் ஜே.வி.பியின் அதியுயர் பீடம் சோமவன்ஸ அமரசிங்கவுக்கு மரண தண்டனை விதித்திருந்தது என 'வன்முறைகளற்ற பாதையில் ஜே.வி.பி.' என்ற அமைப்பின் சர்வதேச அமைப்பாளர் டாக்டர் சுபாஷ் சந்திரா பெர்னாண்டோ திடுக்கிடும் தகவல்களை இப்போது வெளியிடுகின்றார்.

சுடர் ஒளி'க்கு அளித்த விசேட பேட்டி ஒன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

"முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டார நாயக்காவை அவரது றொஸ்மிட் பிளேஸ் இல்லத்தில் இருந்து கடத்துவதற்குத் திட்டமிட்டவரும் இதே சோமவன்ஸதான். மருதானையில் உள்ள வீடு ஒன்றில் கூடி ஐவர் கொண்ட குழுவை அமைத்து 1971 ஏப்ரல் 5ஆம் திகதி சிறிமாவைக் கடத்த அவர் திட்டமிட்டார். ஆனால், அம்முயற்சி முறியடிக்கப்பட்டது. இல்லையேல் ஜனாதிபதி சந்திரிகாவின் கணவர் விஜயகுமாரதுங்கவை கொலை செய்வதற்கு முன்னர் ஜனாதிபதியின் தாயார் சிறிமாவோவை இவர்கள் கொலை செய்திருப்பார்கள்'' என்றும் டாக்டர் பெர்னாண்டோ பழைய விடயங்களைப் புட்டுப் புட்டு வைக்கிறார்."



"ஜே.வி.பியினரின் மரண தண்டனைக்குப் பயந்து, அன்று ஐக்கிய தேசியக் கட்சியில் அதிகாரமிக்க ஒருவராக இருந்த சிறிசேன கூரேயிடம் தஞ்சம் அடைந்தார் சோமவன்ஸ அமரசிங்க. அவருடைய உதவியின் மூலம் கள்ளத்தோணியில் இந்தியாவுக்குத் தப்பி ஓடினார்."
"அந்தச் சமயத்தில் இந்திய அமைதி காக்கும் படையை இலங்கையில் இருந்து திருப்பி அனுப்பியதற்காக அப்போது இலங்கை ஜனாதிபதியாக இருந்த ஆர்.பிரேமதாஸ மீது கடுப்பாக இருந்தது இந்தியா. அந்தச் சூழ்நிலையை வசமாக வகையாக பயன்படுத்திக் கொண்டார் சோமவன்ஸ.

இந்தியாவில் "றோ' இவருக்கு சகல பாதுகாப்பையும் வழங்கியதுடன் லண்டன் செல்லவும் உதவியது.'' என்றும் டாக்டர் பெர்னாண்டோ சுட்டிக் காட்டினார். சோமவன்ஸ தலைவரான கதை"

உண்மையான ஜே.வி.பி.க்குத் துரோகம் இழைத்தவராகக் கூறப்படும் சோமவன்ஸ அமரசிங்க எப்படிப் பின்னர் கட்சிக்கே தலைவரானார்?'' என்று டாக்டர் பெர்னாண்டோவிடம் கேட்டோம்."

இது நியாயமான கேள்விதான். சோமவன்ஸ அமரசிங்க நான்கு ஐந்து தடவைக்குக்கு மேல் கூட ஜே.வி.பி. தலைவர் ரோஹண விஜேவீரவை நேரடியாகச் சந்தித்தவரல்லர். பிரதான தலைவர்கள் கொல்லப்பட்டபின் பணத்தையும், தங்கத்தையும் சுருட்டிக்கொண்டு ஓடிய சோமவன்ஸ சிறிது காலம் சென்ற பின்னர் தன்னைத்தானே தலைவராக மகுடம் சூட்டிக் கொண்டார். அதுதான் உண்மை'' எனத்தெளிவுபடுத்தினார் பெர்னாண்டோ.

ஜே.வி.பியுடன் தொடர்பு
தொழில் ரீதியாக நீங்கள் ஒரு டாக்டர் உங்களுக்கும் தீவிரவாத இயக்கத் தலைவர் ரோஹண விஜேவீரவுக்கும் எப்படி உறவேற்பட்டது?
என்று கேட்டோம்.

"எனது சகோதரர் எச்.எஸ்.பெர்னாண்டோ அகில இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவராக இருந்தவர். அவர் சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளர். எனது சகோதரும், ரோஹண விஜேவீரவும் நண்பர்கள்."
"1965ஆம் ஆண்டு கொழும்பு மருத்துவக் கல்லூரி விடுதிக்கு ரோஹண விஜேவீரவை அழைத்து வந்து எனக்கு அறிமுகப்படுத்தினார் எனது சகோதரர்."
"வைத்தியபீட மாணவர் விடுதியில் இருந்தே ரோஹண விஜேவீர தனது ஜே.வி.பி. இயக்கம் தொடர்பான பாட விதானங்களைத் தாயாரித்தார். மிகவும் அன்பாகவும் அமைதியாகவும் பழகுவார்."


"படித்தால் மட்டும் போதாது. படிப்போடு அரசியலிலும் ஈடுபடவேண்டும். அரசியலில் இளைஞர்கள் ஈடுபடாவிட்டால் முதலாளித்துவ வாதிகளிடமிருந்து மக்களைக் காப்பாற்ற முடியாது என உபதேசம் செய்வார். அவருடைய பேச்சும் போக்கும் மாணவர்களாகிய எங்களை அவர் பால் ஈர்த்தன."
"நான் வைத்தியபீட ஜே.வி.பி. மாணவர் அணியின் தலைவரானேன். அதேபோன்று அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் பிரிவுத் தலைவர்களாக முன்னாள் அமைச்சர் மஹிந்த விஜேசேகர, எம்.ஏ.மெண்டிஸ், ஈரிய கொல ஆகியோர் முன்நின்று செயற்பட்டனர். ஆரம்பம் முதலே எங்களுடைய தொடர்பு இறுக்கமானதாக இருந்தது. இப்படித்தான் எங்களுக்கிடையில் தொடர்பு ஏற்பட்டன''
உணர்ச்சிகரமாக தனது இளமைக் கால நினைவுகள் மலர விவரிக்கின்றார் டாக்டர்.

சுபாஷ் சந்திரா பெர்னாண்டோ என்பது உங்களுடைய இயற் பெயரா? அல்லது இயக்கப் பெயரா?
இது எமது கேள்வி.

"அது என்னுடைய இயற் பெயர்தான். இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் சுபாஷ் சந்திரபோஸ் இறந்த செய்தியை இந்திய வானொலி அறிவித்த தினத்திலேயே நான் பிறந்துள்ளேன். சுதந்திர வெறியுடையவரான எனது தந்தை அப்போதே சுபாஷ் சந்திர பெர்னாண்டோ என்று எனக்குப் பெயர் வைத்துள்ளார்.''
சிறுபுன்னகையுடன் டாக்டரிடமிருந்து பதில் வருகிறது.

டாக்டராகப் பணிபுரிந்த உங்களை எப்போது பொலிஸார் கைது செய்தனர்?'

1970ஆம் ஆண்டு இரத்தினபுரி ஆதார வைத்தியசாலையில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்பிரதேசத்திலுள்ள பிரபலமான தனியார் வைத்தியசாலை உரிமையாளரான டாக்டர் ஒருவர் (அவரின் பெயர் இப்போது ஞாபகம் இல்லை) அரசாங்க வைத்தியசாலையில் இருந்த சில அதிகாரிகளின் உதவியுடன் மருந்து வகைகளைத் திருடிக் கொண்டிருந்தார். இம்மோசடியைக் கண்டு பிடிப்பதற்கு வைத்தியசாலைப் பணிப்பாளர் டாக்டர் அன்டன் ஜயசூரியவுக்கு நான் உதவினேன். இது அந்தத் தனியார் வைத்தியருக்கு எரிச்சலை மூட்டியது. இந்தத் தனியார் டாக்டர் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த வாசுதேவ நாணயக்கார, நந்தா எல்லாவல ஆகியோரின் தேர்தல் செலவுகளுக்குப் பெருந்தொகைகளை வழங்குபவர். இவருடைய செல்வாக்கினால் வாசுதேவ நாணயக்காரவும், நந்தா எல்லாவலையும் இரகசியப் பொலிஸாருக்கு அனுப்பிய முறைப்பாட்டின் படியே இரகசியப் பொலிஸார் என்னைக் கைது செய்தனர்.'' என்றார் டாக்டர் பெர்னாண்டோ.



சாவின் விளிம்பு வரை
"இந்த விவரம் உங்களுக்கு எப்படி தெரிய வந்தது?''
என்று கேள்வி எழுப்பினோம்.

"1971 புரட்சியின்போது வாசுதேவ நாணயக்காரவும் கைது செய்யப்பட்டு எங்களுடன் சிறையில் அடைக்கப்பட்டார். அந்தச் சந்தர்ப்பத்திலேயே வாசுதேவ இந்த உண்மையை ஒப்புக்கொண்டு என்னிடம் மன்னிப்புக் கேட்டார்''
என்று விளக்கினார் டாக்டர் பெர்னாண்டோ.
"இரத்தினபுரி வைத்தியசாலையில் இருந்த எமது விடுதிக்கு ரோஹண விஜேவீர அடிக்கடிவருவார். எனது அறையிலேயே ஜே.வி.பி. தொடர்பான அறிக்கைகள் மற்றும் பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. என்னுடன் கைதுசெய்யப்பட்ட நான்குபேர் இரத்தினபுரி மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு முன் உயிரோடு தீயிட்டுக் கொளுத்தப்பட்டனர். என்னை நிர்வாணப்படுத்தி பெட்ரோல் ஊற்றி தீவைக்க முற்பட்டபோது தெய்வாதீனமாக அங்குவந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நீல் வீரசிங்க என் உயிரைக் காப்பாற்றினார்''
எனத் தனக்கு நேர்ந்த திகில் அனுபவத்தை எம்மோடு பகிர்ந்துகொள்கிறார் டாக்டர்.

மறக்க முடியாத அனுபவம்
"உங்களுடைய சிறை அனுபவம் தொடர்பாக மறக்க முடியாத சம்பவங்கள் ஏதும் உண்டா?''

"விட்டு விட்டும், தொடர்ந்தும் நான் 17 வருடங்கள் மொத்தமாகச் சிறைத்தண்டனை அனுபவித்துள்ளேன். கொடுமையான சித்திரவதைகளையும் அனுபவித்துள்ளேன். ஆனால், இரண்டு தமிழ்ப் பெரியார்கள் எனது உயிரைக் காப்பாற்றியுள்ளனர். ஒருவர் உயர் நீதிமன்ற நீதியரசராக இருந்த விக்னேஸ்வரன். அடுத்தவர் யாழ். சிறைச்சாலை அத்தியட்சகராக இருந்த கந்தையா. இவர்கள் இல்லாவிட்டால் இன்று நான் உயிருடன் இருக்கமுடியாது''
என்றும் பெர்னாண்டோ கண்ணீர் மல்கக் கூறினார்.

இந்தச் சந்தர்ப்பத்தில் மற்றும் ஒரு முக்கியமான விடயத்தையும் கோடிட்டுக் காட்டினார் டாக்டர் பெர்னாண்டோ.
"ரோஹண விஜேவீர கைது செய்யப்பட்டு யாழ். சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது லொக்கு அத்துல, அத்துல நிமலசிறி, ஜயசிங்க ஆகியோர் மாற்றுக் குழு ஒன்றை அமைத்து விஜேவீரவைக் கொலைசெய்யவும் திட்டமிட்டனர். ஆனால் அது பலிக்கவில்லை. இவர்களுக்கு உடந்தையாக சோமவன்ஸதான் செயற்பட்டார்'' என்றும் குறிப்பிட்டார் பெர்ணான்டோ.

83 கலவரத்தில் ஜே.வி.பியின் பங்கு
"1983ஆம் ஆண்டில் ஏற்பட்ட இனக்கலவரத்திற்கு ஜே.வி.பிதான் காரணம் என்று கூறப்படுகின்றதே. இது சரிதானா?''
என்ற கேள்வியை எழுப்பினோம்.

"இது தவறு. 1983 ஜூலை மாதம் ரோஹண விஜேவீர எனக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார் யூ.என்.பி. குண்டர்களும் , சிறில்மதியூ மற்றும் சிறிசேனகுரே ஆகியோரின் அடியாட்களும் இனக்கலவரத்தை ஏற்படுத்திவிட்டு அப்பழியை ஜே.வி.பி. மீது போடத் திட்டமிட்டுள்ளனர். நான் எனது மனைவி பிள்ளைகளுடன் தலைமறைவாகிப் போகின்றேன்; நீரும் எப்படியாவது தலைமறைவாகிவிடவும்.' என அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். அக்கடிதம் இன்றும் என்னிடம் உள்ளது''
என்றார் பெர்ணான்டோ.

"அப்படியானால் நீங்கள் எப்படி கைதானீர்கள்?''
இது எமது சந்தேகம்.

"இனக்கலவரம் உக்கிரமாகிக்கொண்டிருக்கும்போது கம்பஹாவில் என்னிடம் சிகிச்சைபெறும் கந்தையா என்ற முதலாளி ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு வீதியில் கிடந்தார். அவரைக் காப்பாற்றும்படி கம்பஹா பொலிஸில் முறையிட்டேன். நீர் உமது வேலையைப் பாரும். தமிழ் நாய்கள் பற்றிக் கவலைப்படாதீர் எனக்கூறி என்னை விரட்டினர். நான் திரும்பிவரும்போது கந்தையா முதலாளியை அவரது வீட்டுக்குள் போட்டு தீவைத்துக் கொளுத்திவிட்டனர். ஆனால், மறுநாள் என்னைக் கைதுசெய்தனர். இனக்கலவரத்தைத் தூண்டி விட்டேன் எனத் தெரிவித்து நாடாளுமன்ற குண்டுவெடிப்பு உட்பட பலவற்றுடன் தொடர்புபடுத்தி, 17 குற்றாச்சாட்டுகளைச் சுமத்தி மீண்டும் என்னை சிறையில் தள்ளிவிட்டனர். ஆனால், எந்த ஒரு குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை. நான்கு வருடங்களின் பின் விடுதலை செய்தனர்.
"இந்தச் சந்தர்ப்பத்தில் சோமவன்ஸ அமரசிங்க, சிறிசேன குரேயிடம் தஞ்சம் புகுந்தார். தங்களுக்கு எதுவுமே தெரியாது, எல்லாவற்றிற்கும் ரோஹண விஜேவீரதான் காரணம் எனக்கூறிவிட்டார் அவர். அவர் இரகசியப் பொலிஸாரின் ஒற்றனாகச் செயற்பட்டு ஜே.வி.பி யினரை காட்டிக் கொடுத்துவந்தார். "
"ஜே.வி.பி. தலைவர் ரோஹணவிஜேவீர பண்டாரவளையிலும், உலப்பனையிலும் மாறி மாறி மறைந்து வாழ்ந்து வந்தார். இந்தத் தகவலை சோமவன்ஸவின் நண்பர்களும் மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்களுமான ஆனந்த, ஹேரத் ஆகிய இருவரும் அவரிடம் தெரிவித்தபின், அவர்களைப் பொலிஸில் மாட்டிவிட்டு அவர்கள் மூலமாக ரோஹண விஜேவீரவின் மறைவிடத்தைப் பொலிஸாருக்கு காட்டிக் கொடுத்தார் சோமவன்ஸ. என்றாலும் தான் நல்ல பிள்ளைபோல் வெளியே காட்டிக்கொண்டார்.

"கொடுக்கப்பட்ட தகவலின்படி ரோஹண விஜேவீர உலப்பனையில் வைத்துக் கைதுசெய்யப்பட்டு அன்றிரவே சுட்டுக்கொல்லப்பட்டார். அதேயிரவில் சோமவன்ஸ கொடுத்த தகவலின்படி ஆயிரத்திற்கும் அதிகமான ஜே.வி.பி. உறுப்பினர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.''
என்றும் டாக்டர் பெர்ணான்டோ கட்சியின் பயங்கர அனுபவங்களை எடுத்துக் கூறினார்.

ஜே.வி.பி. ஆயுதம் தூக்கிய வரலாறு
புரட்சிகர அரசியலில் ஈபட்ட ஜே.வி.பி எப்படி ஆயுதம் தூக்கியது?
என வினாவினோம்.

அது ஒரு சுவாரஸ்யமான கதை என்றபடியே அதைச் சொல்லாத் தொடங்குகின்றார் டாக்டர்.

"ரோஹண கைதுசெய்யப்பட்டு யாழ். சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தென்பகுதியில் எமது இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர். இதனால், லொக்கு அத்துல, ஆயுதத் தாக்குதலில் ஈடுபடவேண்டும் என்றார். ஆனால், தலைவரின் அனுமதியின்றி ஆயுதம் தூக்க முடியாது என்று கட்சி உறுப்பினர்கள் கூறிவிட்டனர்.

"இதன்படி லொக்கு அத்துல, ஒஸ்மன் சில்வாவின் தாயார் ஆகியோர் உட்பட ஒரு தூதுக் குழுவினர் யாழ்ப்பாணம் சென்று ரோஹண விஜேவீரவைச் சந்தித்து விடயத்தைக் கூறினர்.
"அன்றைய நிலையில் எம்மிடம் இருந்தவை ஒரு சில ரைபிள்களும், கட்டுத் துவக்குகளும், வெடிகுண்டுகளும் மட்டும்தான். இதை வைத்துக் கொண்டு பலமிக்க இராணுவம், பொலிஸுடன் மோத முடியாது. எனவே,ஆயுதங்களைப் பதுக்கி வைத்துவிட்டு தற்காலிகமாக இயக்க நடவடிக்கைகளை நிறுத்தி வையுங்கள் என ரோஹண விஜேவீர தன் கைப்பட கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். ஆனால்,ரோஹண விஜேவீரவின் கடிதத்தை லொக்கு அத்துல மறைத்து விட்டு தலைவர் ஆயுதத் தாக்குதலை நடத்தும்படி உத்தரவிட்டுள்ளார் எனக் கூறி தாக்குதலை ஆரம்பித்தார். இதனால், எங்களுடைய ஆயுதப் போராட்டம் தோல்வியில் முடிந்தது''
என்று டாக்டர் பெர்ணாண்டோ பதில் அளித்தார்.

இறுதியாக இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஒன்றை ஏற்படுத்த வேண்டுமானால், ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, எதிர் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் ஒத்த கருத்துடன் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் நேரடியாக பேசுவதன் மூலமே அதனைச் சாதிக்க முடியும், எனவும் தாம் கருதுகிறார் என டாக்டர் பெர் னாண்டோ கூறி விடை பெற்றார்.
-----------------------------
நன்றி: சுடரொளி



Labels: ,

எழுதிக்கொள்வது: mohan

undefined

10.48 18.1.2006

Post a Comment

Get your own calendar

Links