« Home | திலீபனுடன் இரண்டாம் நாள் -16-09-1987 » | திலீபனுடன் முதலாம் நாள் -15-09-1987 » | திலீபனுடன் பன்னிரண்டு நாட்கள். » | சம்பூரும் சமாதானத்துக்கான வாய்ப்பும். » | ஊடகப்பொறுப்புணர்வு » | ஊடகத் தணிக்கை » | உலகத்தை முட்டாளாக்கிய இஸ்ரேல் பயங்கரவாதம். » | சிங்கள ஊடகங்களின் நடுநிலைமை » | மாவிலாறு நீர்முடக்கமும் சிங்களத்தின் படையெடுப்பும் » | மொட்டவிழ்ந்த கனவுகள் »

சம்பூர் சமர் புலிகளுக்கு ஒரு பின்னடைவா?

-விதுரன்-

சம்பூர் மீதான இராணுவ நடவடிக்கை நாட்டில் முழு அளவிலான போருக்கு வழி வகுத்துள்ளது. சம்பூரை ஆக்கிரமித்த படைகள் உடனடியாக அங்கிருந்து வெளியேறாவிட்டால் பெரும் போர் வெடிக்குமென எச்சரித்துள்ள புலிகள், அங்கு பதில் தாக்குதல் தொடுக்கப்போவதாகவும் கடும் தொனியில் எச்சரித்துள்ளனர்.
போர் நிறுத்த உடன்பாடு அமுலிலிருந்த போது அந்த உடன்பாட்டுக்கு மாறாகவே அனைத்தும் நடைபெற்றன. ஆனால், அதில் ஒன்றேயொன்றுதான் நடைபெறவில்லை. அதுவும் தற்போது நடைபெற்று முடிந்து விட்டதால் இனிப் போர் நிறுத்த உடன்பாடு எதற்காக என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதாவது, இதுவரை காலமும் உடன்பாட்டுக்கு மாறாக எல்லாம் நடந்தபோதும் ஒருவரது பிரதேசத்துக்குள் மற்றவர் புகுந்து ஆக்கிரமித்ததில்லை. தற்போது புலிகளின் பகுதியிலிருந்த மாவிலாற்றுப் பகுதிக்குள்ளும் சம்பூர் மற்றும் அதனைச் சூழ்ந்த பல பிரதேசங்களினுள்ளும் புகுந்து அப்பிரதேசங்களை படையினர் ஆக்கிரமித்ததன் மூலம் உடன்பாட்டின் அனைத்து விதிகளும் மீறப்பட்டுள்ளன.
திருகோணமலைத் துறைமுகத்தினதும் கடற்படைத் தளத்தினதும் சீனன்குடா விமானப்படைத் தளத்தினதும் பாதுகாப்புக்கு சம்பூர் பாரிய அச்சுறுத்தலாயிருந்ததாலேயே தாங்கள் அதனைக் கைப்பற்ற வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டதாகவும் சம்பூரிலிருந்து விடுதலைப் புலிகள் ஆட்லறி ஷெல் தாக்குதல் மூலம் திருமலைத் துறைமுகத்தை செயலிழக்கச் செய்து வந்ததாகவும் அரசும் படைத்தரப்பும் கூறுகின்றன.
சர்வதேச சமூகத்துக்கும் இணைத்தலைமை நாடுகளுக்கும் இலங்கையிலுள்ள வெளிநாட்டுத் தூதர்களுக்கும் இதைத்தான் அரசும் படைத்தரப்பும், சம்பூர் ஆக்கிரமிப்புக்கான காரணமாகக் கூறியுள்ளன.
ஆனால், சம்பூரிலிருந்து புலிகள் திருகோணமலை கடற்படைத்தளம் மீது தாக்குதல் நடத்தியதற்கான காரணத்தை கூறவில்லை.

கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி கொழும்பு இராணுவத் தலைமையகத்தினுள் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து அன்று மாலை, சம்பூரை மையமாக வைத்து முப்படைகளும் மூதூர் கிழக்குப் பகுதிகளை மிகக் கொடூரமாகத் தாக்கத் தொடங்கின. சம்பூரை படையினர் கைப்பற்றும் வரை சுமார் நான்கு மாதங்கள் இடைவிடாது இந்தத் தாக்குதல் நடைபெற்றது.
கொழும்பில் குண்டு வெடித்ததற்காக மூதூர் கிழக்கில் முப்படைகளும் ஏன் தாக்குகின்றன என புலிகளின் திருமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன், போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிடம் பல தடவைகள் கேட்டிருந்தார். கண்காணிப்புக் குழுவும் அரசிடம் இந்தக் கேள்வியைக் கேட்டபோது, புலிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலைகள் மீதான மட்டுப்படுத்தப்பட்ட படை நடவடிக்கையே இதுவெனப் பதிலளிக்கப்பட்டது.
ஆனாலும், புலிகள் பதில் தாக்குதலெதனையும் நடத்தவில்லை. பொறுமை காத்து வந்தனர். முப்படைகளதும் தாக்குதல் மூதூர் கிழக்கை துவம்சமாக்கிய நிலையிலேயே, சுமார் மூன்றரை மாதங்களின் பின்னர் சம்பூரிலிருந்து ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி நண்பகல் முதல் தடவையாக திருகோணமலை கடற்படைத்தளம் மீது புலிகள் ஆட்லறி ஷெல் தாக்குதலை நடத்தியிருந்தனர். துறைமுகம் மீது எந்தத் தாக்குதலும் நடைபெறவில்லை.
இவற்றின் மூலம் திருகோணமலையில் பெரும் போரைத் தொடங்கிய அரசும் படைத்தரப்பும், இன்று திருமலைத் துறைமுகத்தினதும் அங்குள்ள எண்ணெய்க் குதங்களினதும், பிறீமா மா ஆலையினதும் பாதுகாப்புக்கு சம்பூர் புலிகள் வசமிருப்பது பெரும் ஆபத்தென்பதாலேயே அதனைக் கைப்பற்ற பாரிய படை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கின்றன.
சம்பூர் ஒருபோதுமே ஒரு யுத்த முனையாக இருந்ததில்லை. மிக நீண்ட காலமாக இந்தப் பகுதி படையினர் வசமிருந்தது. 2000 ஆம் ஆண்டில் வடக்கில் படையினர் பெரும் பின்னடைவுகளையும் அழிவுகளையும் சந்தித்தபோது சம்பூர் உட்பட பல பகுதிகளிலுமிருந்து படையினர் விலகிக் கொண்டபோது இப்பகுதிகள் புலிகள் வசமாகின.
அப்போது திருமலையில் புலிகள் வசம் நீண்டதூர ஆட்லறிகள் இருக்கவில்லை. ஆனால், அண்மைக் காலங்களில் புலிகள் சம்பூரில் 130 மில்லி மீற்றர் ஆட்லறி ஒன்றையும் 122 மில்லி மீற்றர் ஆட்லறிகள் இரண்டையும் 120 மில்லி மீற்றர் ஆட்லறிகள் நான்கையும் நிறுத்தியிருந்ததாக படைத்தரப்பு கூறுகிறது.
130 மி.மீ ஆட்லறி 25 கி. மீற்றர் தூரமும் 122 மி.மீ. ஆட்லறி 20 கி. மீற்றர் தூரமும் 120 மி.மீ. ஆட்லறி 15 கி. மீற்றர் தூரமும் செல்லக் கூடியன.

புலிகளின் இந்த ஆட்லறி படைத்தரப்புக்கு பேரச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. போர் நிறுத்த உடன்பாடு முறிவடைந்து பெரும் போர் வெடிப்பதற்கிடையில் சம்பூரை கைப்பற்றி திருமலைத் துறைமுகம் மீதான புலிகளின் அச்சுறுத்தலை நீக்கிவிட வேண்டுமென்ற எண்ணம் படையினர் வசமிருந்தபோதிலும் தற்போது சம்பூரைக் கைப்பற்ற அவசர காரணமொன்றிருந்தது. ஆனால், அதுபற்றி அரசோ, படைத்தரப்போ மூச்சுவிடவில்லை.
யாழ். குடாவில் தென்மராட்சிப் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற பாரிய சமரைத் தொடர்ந்து யாழ். குடாவிற்கான தரைவழிப் பாதையை (ஏ-9) திறப்பதில்லையென அரசும் படைத்தரப்பும் தீர்மானித்தன. தரைவழிப் பாதையை திறப்பதில்லையென்றால் அதற்கு மாற்றாக கடல்வழிப் போக்குவரத்தை உடனடியாக ஆரம்பிக்கக் கூடிய வசதிகள் அரசிடம் இருக்க வேண்டும்.
ஆனால், சம்பூரில் நிலை கொண்டுள்ள புலிகள் ஆட்லறித் தாக்குதல் மூலம் திருமலைத் துறைமுகத்தை செயலிழக்கச் செய்திருக்கையில் திருமலைத் துறைமுகத்திலிருந்து எப்படி யாழ். குடாநாட்டுக்கான கப்பல் போக்குவரத்தையும் விநியோகத்தையும் மேற்கொள்ள முடியுமா என்ற கேள்வி எழுந்தது.
இதனாலேயே யாழ். தரைவழிப் பாதையை திறக்காத அதேநேரம், கடல் வழிப் போக்குவரத்தை ஆரம்பிப்பதற்காக திருமலைத் துறைமுகம் மீதான புலிகளின் தாக்குதல் அச்சுறுத்தலை நீக்க அவசர அவசரமாக சம்பூர் மீதான பாரிய படை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஆனாலும், சம்பூரைக் கைப்பற்றி திருமலைத் துறைமுகம் மீதான புலிகளின் தாக்குதல் அச்சுறுத்தலை நீக்கியதன் மூலம் திருமலைக்கும் யாழ். குடாநாட்டுக்குமிடையிலான கடல் வழி விநியோகப் பாதையை தாங்கள் திறந்துள்ளதாக படைத்தரப்பு கருதுமானால் அது நகைப்புக்கிடமானது.

திருமலைக்கும் யாழ். குடாவுக்குமிடையிலான படையினரின் கடல் வழிப்போக்குவரத்தை தடுப்பதற்கு புலிகளிடம் மூன்று வழிகளிருந்தன.
* சம்பூரை தொடர்ந்தும் தக்க வைத்து ஆட்லறி தாக்குதல் மூலம் திருமலைத் துறைமுகத்தை செயலிழக்கச் செய்து கடல் வழி விநியோகப் பாதையை தடை செய்வது.
* திருகோணமலைக்கும் யாழ். குடாவுக்குமிடையிலான கடல் வழிப்போக்குவரத்தானது முல்லைத்தீவு கடற்பரப்பினூடாகவே நடைபெற வேண்டுமென்பதால் திருகோணமலைக்கும் யாழ். குடாவுக்குமிடையிலான கடற்பரப்பை தங்கள் பூரண கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலம் கடல்வழி விநியோகப் பாதையை தடை செய்யலாம்.
தற்போது கூட இவ்விரு பகுதிகளுக்குமான கடல்வழிப் பயணத்துக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பாதுகாப்பை அரசு கோருவதன் இப் பயணத்திற்கு மூலம் புலிகளின் பாதுகாப்பு உத்தரவாதத்தைப் பெற அரசு முயல்வது புலனாகிறது.
* மூன்றாவதாக, காங்கே சன்துறை துறைமுகத்துக்கு பூநகரியிலிருந்து ஆட்லறி ஷெல் தாக்குதல்களை நடத்துவதன் மூலம் அந்தத் துறைமுகச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தி அதனையும் செயலிழக்கச் செய்ய முடியும்.
இந்த நிலையில்தான், சம்பூரைக் கைப்பற்றியதற்கு வழங்கப்படும் பெரும் முக்கியத்துவம் மூலம் இதுவரைகாலப் போரில் புலிகளை அரச படைகள் தோற்கடித்துவிட்டது போன்றதொரு தோற்றப்பாட்டை அரசும் படைத்தரப்பும் சிங்கள, ஆங்கில ஊடகங்களும் ஏற்படுத்தி வருகின்றன.

சம்பூர் புலிகள் வசமிருந்தபோது இருந்த இராணுவ கேந்திர முக்கியத்துவத்தை விட அதனைத் தாங்கள் கைப்பற்றி விட்டதாகக் கூறி அதற்கு வழங்கப்படும் அரசியல் ரீதியானதும் பிரசார ரீதியானதுமான முக்கியத்துவம் மிகவும் அதிகம்.
சம்பூரின் புவியியல் அமைப்பை தெரிந்து கொண்டால் அது பாரிய எதிர்ச் சமருக்குரியதொரு பிரதேசமல்ல என்பது நன்கு தெரியும். மூதூர் கிழக்கில், திருகோணமலை- மட்டக்களப்பு வீதியில் (ஏ-15) படையினர் வசமிருக்கும் பிரதேசத்திற்கும் அதற்கு கிழக்கே கடலுக்குமிடையே மிகக் குறுகலான பிரதேசமே விடுதலைப் புலிகளின் வசமிருந்த, சம்பூர் அடங்கலான மூதூர் கிழக்குப் பகுதியாகும்.
கட்டைபறிச்சான், பச்சனூர், செல்வநகர் மற்றும் தோப்பூர் படைமுகாம்கள், புலிகள் வசமிருந்த மூதூர் கிழக்குப் பகுதியை மேற்குப் புறம் சூழ்ந்திருந்த அதேநேரம், வடக்குப்புறம் கொட்டியாற்றுக் குடா கடல் பரப்பாகும். தெற்கே மட்டும் புலிகள் ஈச்சிலம்பற்று மற்றும் வெருகல் பகுதியுடன் தொடர்புகளை வைத்திருந்த குறுகிய நிலப்பிரதேசத்தைக் கொண்டிருந்தது.
இதனால் சம்பூர் பகுதியானது பாரிய எதிர்ச்சமருக்கானதொரு கள முனையாக இருக்கவில்லை. இதனாலேயே புலிகள் சம்பூரை விட்டு விலகிச் செல்ல வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டது. இதனைப் படைத்தரப்பும் நன்கறியும்.

இதனால்தான் அந்தப் பிரதேசத்தை பாரிய சமர் எதுவுமின்றிக் கைப்பற்றிவிட்டு புலிகளை முழுமையாகத் தோற்கடித்துவிட்டது போன்றதொரு தோற்றப்பாட்டை அரசும் படைத்தரப்பும் பெரும் பிரசாரம் மூலம் ஏற்படுத்தி வருகின்றன.
25 வருடகாலப் போரில் புலிகள் கள நிலைமைக்கேற்பவும் தேவைக்கேற்பவும் பெரும் போர் புரிந்துள்ளனர். தேவையேற்படில் மரபு வழிச் சமரிலும், தேவையேற்படின் கெரில்லாப் போரிலும் தேவையற்படின் தந்திரோபாய பின் நகர்விலும் ஈடுபட்டது போரியல் வரலாறு.
1995 இல் கூட யாழ். குடாச் சமரில் புலிகள் தாக்குதல் யுத்தத்தை நடத்தவில்லை. அன்று அங்கு அவர்கள் தாக்குதல் போரை நடத்தியிருந்தால் யாழ். குடாவை படையினர் கைப்பற்ற மிக நீண்ட காலம் கூட ஏற்பட்டிருக்கலாம். ஆனால், அந்தத் தாக்குதல் சமர் மூலம் புலிகள் ஆட்பலத்தையும் ஆயுத வளத்தையும் பெருமளவில் இழந்திருப்பர். அது பிற்காலத்தில் புலிகளுக்கு மிகப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கும்.
ஆனால், தற்காப்புச் சமர் மூலம் முடிந்தளவு எதிரிக்கு பலத்த சேதங்களை ஏற்படுத்திக் கொண்டு தங்களுக்கான
சேதத்தை முடிந்தளவு குறைத்துக் கொண்டு தங்களது அனைத்து வளங்களையும் (போர்த் தளபாடங்கள் உட்பட) வன்னிக்கு நகர்த்தியிருந்தனர். அதன் பின்னர் ஈழப்போரில் ஏற்பட்ட பாரிய மாற்றங்களை உலகறியும்.

புலிகள் அன்று யாழ். குடாவிலிருந்து வன்னிக்குப் பின்நகர தரைவழிப் பாதை இல்லாதபோதும் கிளாலி கடற்பரப்பினூடாக அனைத்து வளங்களையும் அங்கு நகர்த்தியிருந்தனர்.
அதேநேரம், ஆனையிறவு படைத்தள அழிப்பின்போது பல நூற்றுக்கணக்கான படையினர் பெருமளவு ஆட்லறிகள், பீரங்கிகள், டாங்கிகள், கவச வாகனங்கள் உட்பட பல நூறு கோடி ரூபா பெறுமதியான போர்த்தளபாடங்களையும் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களையும் கைவிட்டு ஒற்றையடிப் பாதையூடாக கிளாலிக்கும் சென்றது வரலாறு.
அவ்வேளையில் யாழ். குடாநாடு படையினர் வசமிருந்த போதும் ஆனையிறவுக்கும் தென்மராட்சிக்குமிடையிலான தரைவழிப் பாதையை அப்போது புலிகளிடம் படையினர் இழந்ததால் படையினருக்கு இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டது.
ஆனையிறவு படைத்தள வீழ்ச்சியின் பின்னர் புலிகள் யாழ்.குடாவை முற்றுகையிட்டு பலாலி விமானத்தளத்தையும் காங்கேசன்துறை கடற்படைத்தளத்தையும் ஆட்லறித் தாக்குதல் மூலம் செயலிழக்கச் செய்த போது, திருமலைத் துறைமுகம் கடற்படையினரின் பூரணகட்டுப்பாட்டிலிருந்தும் யாழ். குடாவிலிருந்த 40,000 படையினரையும் வெளியேற்ற கடற்படையினரால் உதவமுடியவில்லை.

அவசர அவசரமாக 40,000 படையினரையும் வெளியேற்றுவதற்கு இந்தியாவின் உதவிகள் கோரப்பட்டதும் பின்னர் புலிகள் தங்கள் யாழ்.முற்றுகையை கைவிட்டதால் 40,000 படையினருக்கும் ஆபத்தெதுவும் ஏற்படாததும் அனைவரும் அறிந்த விடயமாகும்.
ஆனால், இவைபற்றியெல்லாம் உணராது இன்று புலிகள் சம்பூரை விட்டு வெளியேறியது குறித்து பெரும் பிரசாரங்கள் நடைபெறுகின்றன. சம்பூர் படை நடவடிக்கையில் புலிகள் தாக்குதல் சமரை மேற்கொண்டிருக்கவில்லை. தற்காப்புச் சமர் மூலம் சம்பூரிலிருந்த தங்களது பெருமளவு வளங்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு நகர்த்தியுள்ளனர்.
சம்பூரை நோக்கி பாரிய படைநகர்வு ஆரம்பமானபோது சம்பூர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலிருந்த தங்களது 14 முகாங்களிலிருந்தும் ஐந்திற்கும் மேற்பட்ட ஆட்லறிகளையும் மோட்டார் மற்றும் பீரங்கிகளையும் போர்த்தளபாடங்களையும் பின்நகர்த்தினர்.
மிகவும் குறுகலான பகுதிகளூடாக ஊடறுத்துச் சென்று புலிகளை சிக்கவைக்க படையினர் பெருமளவில் முயன்ற போதும் புலிகள் அதற்கு இடமளிக்கவில்லை.
தோப்பூரிலிருந்து கிழக்கே சுமார் மூன்று கிலோ மீற்றர் தூரம் முன்நகர்ந்து படையினர் கடற்கரைக்குச் சென்றிருந்தால் புலிகளின் அனைத்து வளங்களையும் அனைத்துப் போராளிகளையும் சுற்றிவளைத்து சிக்கவைத்திருக்க முடியும். ஆனால், படையினரால் அது முடியாது போய்விட்டது.
சம்பூரிலிருந்து புலிகள் ஈச்சிலம்பற்று பகுதிக்கு முற்றாக நகர்ந்த பின்பே தோப்பூரிலிருந்து கடற்கரை வரை படையினர் நகர்ந்தனர். இது படையினரின் மிகப்பெரும் பலவீனத்தையே காட்டுகிறது.

சம்பூர், பகுதியில் சூடைக்குடா, இலக்கந்தை மற்றும் கடற்கரைக் சேனையில் கடற்புலிகளின் மூன்று தளங்களிருந்தன. இதைவிட உள் பகுதியில் 14 சிறிய முகாம்களுமிருந்தன. சம்பூரை நோக்கிய பாரிய படைநகர்வு ஆரம்பமானதும் கடற்படையினரும் விமானப்படையினரும் புலிகளின் கடல் வளத்தை அழிக்க முயற்சித்த போதும் அது முடியாது போய் விட்டது. அவற்றையும் புலிகள் பாதுகாப்பாக நகர்த்தியுள்ளனர்.
சம்பூர் நேற்று வரை திருமைலத் துறை முகத்திற்கான முற்றுகைத் தளமாயிருந்த போதும் இன்று சம்பூருக்கு ஆபத்து ஏற்பட்ட போது திருமலைத் துறைமுக முற்றுகையைப் பற்றி யோசித்ததை விட சம்பூரிலிருந்து தங்கள் படைபலத்தை தற்காலிகமாகவேனும் பாதுகாப்பாக நகர்த்த வேண்டிய தேவை புலிகளுக்கிருந்தது.
சம்பூரை நோக்கி பாரிய படை நகர்வு ஆரம்பமான போது, திருமலைத் துறைமுகம், கடற்படைத்தளம் மற்றும் பல பகுதிகளிலிருந்து சம்பூரை நோக்கி தொடர்ச்சியாக பலத்த ஆட்லறி ஷெல் வீச்சும் பல்குழல் ரொக்கட் தாக்குதலும் நடைபெற்றன.
எனினும் கடற்படைத்தளம் மற்றும் படை முகாம்கள் மீது பலத்த ஆட்லறி ஷெல் தாக்குதலை நடத்தி துறைமுகத்தை செயலிழக்கச் செய்திருக்க புலிகளால் முடிந்திருக்கும் ஆனால், அதனை அவர்கள் செய்யவில்லை.

அதேபோல் சம்பூர் கடற்பரப்பிலிருந்து மிகக் குறுகிய தூரத்திலிருந்த புலிகளின் நிலைகள் மீது பலத்த தாக்குதலை நடத்திக் கொண்டிருந்த கடற்படையின் பீரங்கிப் படகுகள் மீதும் புலிகள் கடும் தாக்குதலைத் தொடுத்திருக்க முடியும். ஆனால், அது அந்த வேளையில் தற்கொலைக்குச் சமனானதாயிருந்திருக்கும். துறைமுகம் மீதும் கடற்படை பீரங்கிப் படகுகள் மீதும் கவனத்தை செலுத்தி, மிகக் குறுகலான மூதூர் கிழக்கை படையினர் ஊடறுக்க வாய்ப்பளித்திருந்தால் தங்கள் வளங்கள் எதனையும் புலிகளால் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தியிருக்க முடியாது.
புலிகளைப் பொறுத்தவரை சில வேளைகளில் நிலப் பிரதேசங்களைத் தக்க வைப்பதை விட போர்த்தளபாடங்கள் போன்ற வளங்களை பாதுகாக்க வேண்டியது மிக முக்கியமானது. இதனால்தான், சாதகமற்றதொரு களமுனையில் தாக்குதல் சமரைத் தொடுக்காது சம்பூரில் புலிகள் தற்காப்புச் சமரைத் தொடுத்தவாறு பின் நகர்ந்தனர்.
திருகோணமலையில் முன்னைய காலங்களில் கெரில்லா தாக்குதலையே நடத்தி வந்த புலிகள் மாவிலாறு, மூதூர் மற்றும் சம்பூரில் மரபுவழிச் சமரையும் நடத்தியதன் மூலம் கிழக்கில் அவர்களது வளர்ச்சி பெருமளவில் அதிகரித்துள்ளது தெளிவாகிறது.
முன்னைய காலங்களைப் போன்றே தொடர்ந்தும் படையினர் அகலக்கால் வைத்து வருகின்றனர். பெரும் ஆட்பற்றாக் குறை மத்தியில் படையினரை அகலக்கால் வைக்கச் செய்து விட்டு பின்னர் அப்பிரதேசங்களில் பாரிய ஊடறுப்புத் தாக்குதலை நடத்தி பேரழிவுகளை ஏற்படுத்தி பிரதேசங்களை மீட்பதும் புலிகளின் தந்திரம்.
சம்பூர் சமர் இதனை உணர்த்தப் போகின்றதா அல்லது வேறெதனையும் தீர்மானிக்கப் போகிறதா?

அரசு கூறும் காரணங்கள்:
நாட்டின் இராணுவ, பொருளாதாரத்தை நிலை குலைய வைக்கும் பலம் `சம்பூர்' விடுதலைப்புலிகளுக்கு இருந்தமையால் படை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அரச சமாதான செயலகம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
வட பகுதியில் மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகளுக்கு இன்றியமையாத ஆதரவை திருகோணமலையில் அமைந்துள்ள கடற்படை மற்றும் அதற்கு அருகிலுள்ள விமானப் படைத்தளம் ஆகியவை வழங்குகின்றன.
2006 ஆகஸ்ட் 01 ஆம் திகதி சம்பூரிலிருந்து பல முறை பீரங்கி வேட்டுக்களைத் தீர்ப்பதன் மூலம் கடற்படைத் தளத்திலுள்ள கட்டடங்களுக்கு விடுதலைப்புலிகள் சேதம் விளைவித்ததோடு திருகோணமலையிலுள்ள கடற்படைத் தளத்தை தாக்குவதற்கான பலம் தமக்கிருப்பதையும் தெளிவாக நிரூபித்துக் காட்டினர்.
மேலும், ஆகஸ்ட் 12 ஆம் திகதி திருகோணமலைத் துறைமுகத்துக்கு அருகே சீனன்குடாவிலுள்ள விமானப் படைத்தளத்தை நோக்கியும் பீரங்கிக் குண்டுகளை ஏவினர்.
சம்பூரிலிருந்து நீண்ட தொலை செல்லக்கூடிய ஆயுதங்களைப் பிரயோகித்துப் பாதுகாப்புப் படையினருக்கு பொருட்களை எடுத்துச் செல்லும் திருகோணமலை துறைமுகப் பகுதியிலுள்ள முக்கிய வழிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய விடுதலைப்புலிகளின் திறன் இத்தாக்குதல்கள் மூலம் தெளிவாகியது.
திருகோணமலையில் உள்ள இராணுவத் தளங்களின் பாதுகாப்புக்கு விடுதலைப்புலிகளின் அதிக தூரம் தாக்கக் கூடிய ஆயுதங்கள் சந்தேகத்துக்கிடமின்றி ஒரு அச்சுறுத்தலாகவே உள்ளன என்பதை திருகோணமலை கடற்படைத் தளம் எதிர்நோக்கும் ஆபத்துக்கள் பற்றியதொரு அறிக்கையில் ஐக்கிய அமெரிக்க குடியரசின் பசுபிக் சமுத்திரக் கட்டளைப்பீடம் தெரிவித்துள்ளது.
திருகோணமலை துறைமுகம் நாட்டின் தேசிய பொருளாதாரத்தில் முக்கியமானதொரு பங்கினை வகிக்கின்றது. இலங்கையில் 40 வீதம் எரிபொருள் நிலையங்களை நிர்வகிக்கும் இலங்கை - இந்திய எண்ணெய்க் கூட்டுத்தாபன நிறுவனம், திருகோணமலைத் துறைமுகத்துக்கு அருகில் உள்ள சீனன்குடாவில் இருக்கும் எண்ணெய்த் தாங்கிகளில் அதன் களஞ்சியத்தைப் பேணுகிறது.
அங்குள்ள விமானப் படைத் தளத்தை இலக்குப் பார்க்கக் கூடிய விடுதலைப்புலிகளின் திறன் இலங்கை- இந்திய எண்ணெய்க் கூட்டுத்தாபனத்தின் களஞ்சிய வசதியையும் இலக்குப்பார்த்துத் தாக்கி, அதனால் விளையும் எரிபொருள் தட்டுப்பாட்டினால் நாட்டின் பொருளாதாரத்தில் பாரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தவும் கூடும்.
திருகோணமலையில் அமைந்துள்ள பிறிமா கோதுமை மா ஆலை ஸ்ரீலங்காவின் முழுக் கோதுமை மா தேவையை நிறைவு செய்கிறது. சம்பூரில் உள்ள விடுதலைப்புலிகளின் தொலை தூரம் தாக்கக் கூடிய ஆயுதங்கள் பிறிமா ஆலையையும் அதன் களஞ்சியங்களையும் இலக்குப் பார்க்கவும் முடியும்.
திருகோணமலைத் துறைமுகம் எதிர்நோக்கும் அச்சுறுத்தல் காரணமாக கோதுமையை இறக்குவதற்காக போக்குவரத்துச் செய்யும் சர்வதேச கப்பல் நிறுவனங்கள் தமது தயக்கத்தையும் தெரிவித்துள்ளன.
அந்த ஆலைக்கு சேதம் ஏதும் விளைந்தால் அது நாட்டின் உணவு விநியோகத்தைப் பாரிய அளவில் பாதிக்கும்.
திருகோணமலைத் துறைமுகத்துக்குப் புறம்பாக டோக்கியோ சீமெந்து நிறுவனம் போன்ற ஏனைய பல தொழிற்சாலைகளும் அங்கு அமைந்துள்ளன.
எனவே, நாட்டின் நன்மை கருதி, சம்பூரில் நிலை கொண்டுள்ள விடுதலைப்புலிகளின் தூரஇலக்குகளைத் தாக்கக் கூடிய ஆயுதங்களை செயலிழக்கச் செய்வதற்கான சகல முயற்சிகளையும் மேற்கொள்ளத் தேவைப்படுகிறது.
சம்பூரில் இருந்து திருகோணமலை துறைமுகத்துக்கான அச்சுறுத்தலை நீக்குவதற்கு வேறு வழியில்லை என்ற நிலையில் இது தொடர்பாகத் தெளிவானதொரு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

________________________________________-
நன்றி: ஞாயிறு தினக்குரல் Sunday, September 10, 2006
********************************** ***************

இதுமட்டில் என் கருத்து:
சம்பூர் இழப்பு அரசியல் - இராணுவ ரீதியில் பேரிழப்புத்தான். மிக முக்கிய அரசியல் - இராணுவக் கேந்திர முக்கியத்துவமான நிலையொன்றின் மீதான ஆதிக்கத்தைச் செலுத்தும் வாய்ப்பை இழந்தது பேரிழப்புத்தான்.
ஆனால் அது இயலாமையால் வந்த நிலையன்று என்பது தெளிவு.
இப்போதுள்ள அரசியல் நெருக்கடியிலிருந்து போராட்டச் சக்தி மீளும்.
இனிமேல் ஒருபோதுமே சமாதானப் பேச்சுவார்த்தைகள் தமிழர் போராட்டத் தரப்புக்கு விருப்புக்குரியனவாக இரா என்பது தெளிவு.
இந்தப் பொறியிலிருந்து மீண்டு பழைய மிடுக்கோடு போராட்டம் செல்லும். அப்போது சம்பூர் வீழும்.

Labels: , ,