« Home | உலகத்தை முட்டாளாக்கிய இஸ்ரேல் பயங்கரவாதம். » | சிங்கள ஊடகங்களின் நடுநிலைமை » | மாவிலாறு நீர்முடக்கமும் சிங்களத்தின் படையெடுப்பும் » | மொட்டவிழ்ந்த கனவுகள் » | படையினரின் வலிந்து தாக்குதல் போருக்கான ஒரு அழைப்பா? » | ஒட்டுக்குழு அரசியலுக்கு வாகனேரியில் முற்றுப்புள்ளி » | தனியரசு அமைப்போம் - புலிகள் அறிவிப்பு » | தர்முசிவராம் (பிரமிள்) பற்றி » | இஸ்ரேலின் அடாவடியும் படிக்க வேண்டி பாடங்களும் » | பொஸ்பரஸ் தொடங்கி ஒற்றைத் துப்பாக்கி வரை... »

ஊடகத் தணிக்கை

கோகர்ணன்
மறுபக்கம்


கெபிதிகொல்லாவ கிளேமோர் தாக்குதலை யாருமே நியாயப்படுத்த முயலவில்லை. இவ்வாறான அலுவல்களில் எது சரி, எது பிழை என்ற தெளிவு அதற்குப் பொறுப்பானவர்கட்கு இருந்தாலும் இல்லாவிட்டாலும், அதை எந்த விதத்திலும் நியாயப்படுத்த இயலாது என்கிற தெளிவாவது இருந்தது. எனவே தான் அதற்கு யாருமே உரிமை கோரவில்லை அண்மை வரையிற் கூட. இராணுவமோ அரசாங்கமோ தம்மீது குற்றம் விழாமல் விளக்கங்களைத் தருவதிலே கவனங் காட்டின. திருகோணமலை வாலிபர் படுகொலையில் அது பயங்கரவாதிகளின் குண்டு வெடிப்பு என விளக்கும் முயற்சி தோல்வியடைந்தமை இன்னொரு விடயம். அல்லைப்பிட்டியில் ஒரு குடும்பம் கொல்லப்பட்ட போதுஞ் சரி, யாழ்ப்பாணத்தில் பல்வேறு படுகொலைகளில் போதுஞ் சரி, மன்னார் மாவட்டத்தில் மாதா கோவிலில் தஞ்சம் புகுந்தோரின் மீது குண்டு வீசப்பட்ட போதுஞ் சரி, நாங்கள் இல்லை என்பதுதான் பொதுவான பதிலாக இருந்தது. அண்மைய மூதூர் என்.ஜி.ஓ. ஊழியர்களின் படுகொலையைக் கூட இவ்வாறே விளக்க முயன்றனர். இவை பற்றியெல்லாம் விசாரணைகள் விடிய விடிய நாட்கணக்காக, மாதக்கணக்காக, வருடக் கணக்காக நடக்கும் என்று நாம் அறிவோம். அதைவிட, விசாரணைகளின் முடிவையுங் கூட நாம் அறிவோம்.
செஞ்சோலை மாணவியர் படுகொலைகளைப் பொறுத்தவரை, விமானப் படையின் மெய்யாகவே குறி தவறாத குண்டு வீச்சின் இன்னொரு இலக்கு அது. ஆயுதந் தரியாதவர்களைக் கொல்வது யுத்த விதிகளை மீறுவதாகும். ஆனால் இப்போது நடப்பது யுத்தமல்ல என்பதால் அது யுத்த விதிகளின் மீறலல்ல என்று நாம் கொள்வோமாக. கொல்லப்பட்டோர் இராணுவ பயிற்சி பெறவே அங்கு கூடினர் என்பதுதான் அரசாங்கத் தரப்பினதும் இராணுவத்தினதும் கதை. அதை நம்ப விரும்புகிறவர்கள் அதை நம்புவார்கள். நம்பிக்கை என்பது கடைப்பிடிக்கும் மக்களுக்கு வேண்டியதை விடவும் மத வெறிக்கும் இன வெறிக்கும் மிக அவசியமானது. வெறித்தனமான நம்பிக்கையைத் தகர்ப்பது கடினம். அதைத் தகர்க்க முயலுவதை விட கருங்கற் பாறையில் தலையை முட்டிக் கொள்வது பயனுள்ளது. அரசாங்கத்தின் பிரதான பேச்சாளராக உள்ள கெஹலிய ரம்புக்வல்ல எப்போதாவது வாய் தவறி ஏதாவது உண்மையைச் சொல்லுவாரா என்று கொஞ்சக் காலமாக ஆவலுடன் காத்திருந்து ஏமாற்றமடைந்தேன் என்பதை நான் ஒப்புக் கொள்ள வேண்டும். இப்போது உண்மை பற்றிய அவருடைய பிரச்சினை யூனிசெஃப் நிறுவனத்துடனும் போர் நிறுத்த கண்காணிப்பாளர்களுடனுமானது போலத் தெரிகிறது. நேரில் பார்த்தவர்கட்டு எந்த விதமான போர்த் தொடர்பும் தெரியாத செஞ்சோலையில், விமானங்கள் சுற்றுப் பார்த்து எதையோ கண்டு பிடித்ததாகத் தொலைக் காட்சியிற் படங்காட்டினார்கள். மாவிலாறு மதகை இராணுவம் திறந்து விட்டதாகச் சொல்லி `ஐலன்ட்' ஏட்டில் வெளியாகி தொலைக்காட்சியிலும் காட்டப்பட்ட படம் அதை விட நம்பகமாக இருந்ததென்பேன். பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டும் என்பார்கள். நமது பொய்யர்கட்கு அதற்கான பயிற்சி அறவே போதாது போலத் தெரிகிறது. அல்லது போனால், யாருமே எதையும் நம்பப் போவதில்லையென்பதால் எதைச் சொன்னாலும், ஒன்றுதான் என்று அவர்கள்நினைப்பதால் இப்படி நடக்கக் கூடும். எது எப்படியிருந்தாலும், அரசாங்கத்திற்கு உண்மை பற்றிய கவலை அதிகம். எனவேதான் அண்மையில் சில தனியார் வானொலி, தொலைக்காட்சி நிறுவனங்களின் நிர்வாகத்தினரிடம் சில விடயங்கள் வற்புறுத்தப்பட்டு, அவர்கள் செய்திகளை அடக்கி வாசிக்கின்றனர் போலத் தெரிகிறது. எனினும் அது போதுமானதல்ல என்பதாற், சனாதிபதி தணிக்கை விதிகளைப் புகுத்துவதற்கு இப்போதே அச்சாரம் போட்டுவிட்டார். உதயன், சுடரொளி பத்திரிகைகள் மீதான அரசாங்கக் கோபத்திற்கான காரணம் ஒரு புறமிருக்க, அவ்வேடுகள் மீதான பலமுனைத் தாக்குதல்கள், அவற்றுக்கெதிரான எச்சரிக்கைகள் மட்டுமில்லை. உண்மையில், அவை அவற்றிற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கைகள் அல்ல; அவை மற்ற ஊடகங்கட்கான எச்சரிக்கை. இறுதி நோக்கம் என்னவெனின், மக்களுக்கு எந்தப் பொய்களை எப்படிச் சொல்வது என்பன பற்றிய முடிவுகள் அனைத்துமே அரசாங்கத்தின் உள்வட்டத்திடமே இருக்கும். ஏற்கனவே பெரும்பாலான அரசாங்க ஆதரவாளர்கட்குக் கூட ரூபவாஹினியினதும் இலங்கை வானொலியினதும் ஏரிக்கரை ஏடுகளதும் கதைகளைக் கேட்கவே அலுப்பாக உள்ளது. இனி அந்த இன்பம் எல்லா ஊடகங்கட்கும் விரிவுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கலாம். கணினி வசதியுள்ளோர் மட்டும் மின் ஊடகங்களை நாடலாம்.

ஊடகங்களின் மீதான அரச கட்டுப்பாடு, சனநாயகம் நெருக்கடிக்குள்ளாகும் போது அதிகமாகிறது. ஒரு அரசு சனநாயகத் தோற்றத்தைக் காட்டிக்கொண்டு ஊடகங்களைக் கட்டுப்படுத்துவது கடினம். எனவே, நாட்டில் பாதுகாப்புக்கு மிரட்டல் என்பது அத்தகைய கட்டுப்பாடுகட்கு அத்தியாவசியமான ஒரு முன் நிபந்தனையாகிறது. ஒரு நாட்டின் அரசாங்கத்திற்கும் அதிகார வர்க்கத்திற்கும் முரண்பாடு ஏற்படும்போது, வேறு முதலாளிமாரின் கட்டுப்பாட்டிலுள்ள ஊடகங்கள் அரசாங்கத்திற்கு எதிராகச் சனநாயகம் பற்றி துணிந்து பேசுகின்றன. எனினும், தமது வர்க்க நலன்கள் என்று வரும்போது அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றன. இதை நாம் இலங்கையின் ஊடகங்களின் நடத்தையில் தெளிவாகவே காணலாம். தமிழ் மக்களின் ஆதரவை நாடி நிற்கிற தமிழ் ஊடகங்கள் கிடுக்கிப்பிடிக்குள் அகப்பட்டுள்ளன. சில ஏடுகளின் வணிக நோக்குக்கும் வர்க்க நலன்கட்குமிடையிலான முரண்பாடுகள், அவை செய்திகளைச் கையாளத் திணறுகிற விதத்திலிருந்து தெரியும். எவ்வாறாயினும், தமிழ் ஏடுகளில் நிலை கொஞ்சம் அந்தரமானது தான். அதேவேளை, அவை தமிழ் மக்களுக்கு அவர்களது பிரச்சினைகள் தொடர்பான முழுமையான ஒரு பார்வையை அதாவது பிரச்சினையின் பல்வேறு கோணங்களைக் காட்டத் தவறிவிடுகின்றன. சிங்கள, ஆங்கில ஏடுகளில் நிதானமான சிலவும், நெருக்கடியான சூழ் நிலைகளில் பேரினவாதத்தை எதிர்த்து நிற்கத் திராணியில்லாது போவதை மீண்டும் மீண்டுங் காணுகிறோம்.

ஊடகங்கள் எதைச் சொல்லுகின்றன என்பதை விட எதைச் சொல்லாமல் தவிக்கின்றன என்பது முக்கியமானது. தமிழ் மக்களுக்குப் படையினரும் அரச நிருவாகமும் இவ்வளவு காலமாக இழைத்து வந்த அநீதிகள் பற்றிய மேலோட்டமான பார்வை கூடச் சிங்கள - ஆங்கில ஊடகங்களில் இல்லை எனலாம். வசதி கருதி யூ.என்.பி. ஆட்சியில் நடந்த 1983 ஜூலை பயங்கரத்தைப் பற்றிப் பொதுசன முன்னணி பேசுவதும் ஷ்ரீ.ல.சு.க. ஆட்சிக் காலத்தில் இழைக்கப்பட்ட பாரிய கொடுமைகளை யூ.என்.பி. தொட்டுக் காட்டுவதும் பிரச்சினையின் அடி ஆழத்தைத் தொடுகிற நோக்கிலல்ல. தமது பேரினவாத வாக்கு வங்கிக்கு ஊறில்லாமல், தமிழ் மக்களைப் பயங்கரவாதத்திலிருந்து மீட்கிற காரியங்களை மேற்கொள்வதாக அவை பாசாங்கு செய்கின்றன. தமிழ் மக்களுக்கு தாம் மனமுவந்து வழங்குவதற்கு மாறாக எதையும் தமிழ் மக்கள் போராடி வென்றதாக இருக்கக்கூடாது என்ற கண்ணோட்டமே பேரினவாதிகளிடம் உள்ளது. அதுவே போர் உட்பட அவர்களது சகல நடவடிக்கைகளையும் தீர்மானித்து வருகிறது.

தமிழ் மக்களின் நியாயத்தைச் சொல்லக்கூடிய சிங்கள அரசியல் தலைவர்கள் சொல்வன ஊடகங்களில் அதிக முக்கியத்துவம் பெறுவதில்லை. விக்கிரமபாகு கருணாரத்தினவோ வாசுதேவ நாணயக்காரவோ தொலைக்காட்சி விவாதங்கட்கு அழைக்கப்படுவது குறிப்பிட்ட ஊடகங்களது அரசியல் எதிரிகளைக் சாடுவதற்கு வசதியாகவும் தமக்கு ஒரு நடுநிலைத் தோற்றங் காட்டவுமே ஒழிய, தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் பற்றிச் சிங்கள மக்களுக்குக் கல்வி புகட்டுவதற்காக அல்ல.

அண்மையில், மூதூரிலிருந்து முஸ்லிம் மக்கள் பாதுகாப்புக் கருதி வெளியேறியதன் பின்பு கொழும்பில் ஆமர் வீதியில் நடந்த கடையடைப்பில் ஒத்துழையாமைக்காகத் தமிழ் கடைகள் சில தாக்கப்பட்டன. அதை வன்மையாகக் கண்டித்து முஸ்லிம் மக்கள் கூடிய பொறுப்புணர்வுடன் நடக்க வேண்டுமென்று மூத்த தொழிற்சங்கவாதியும் ஷ்ரீ.ல.சு.க. பிரமுகருமான அலவி மௌலானா பேசியிருந்தார். அதற்கு ஊடகங்களில் அதிகம் முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. அதேவேளை, தமிழ் - முஸ்லிம் பகைமையை ஊக்குவிக்கிற விதமாகச் சில தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளது `எச்சரிக்கைகள்' கணிசமான முக்கியத்துவம் பெற்றன.

இன்னமும் தேசிய இனப்பிரச்சினையுடன் விளையாடுவதில் பேரினவாத அரசியலினளவுக்குப் பேரினவாத ஊடகங்களும் தீவிரமாகவே உள்ளன. தமிழ் மக்களுக்கு அரச தரப்பு நியாயங்களைச் சொல்லக்கூடிய ஊடகங்கள் உள்ளனவே ஒழிய தேசிய இனங்களிடையே சமத்துவம் பற்றிய அக்கறையுள்ள ஊடகங்கள் இல்லை. இந்த நிலையை நோக்கும் போது சோவியத் யூனியனில் புரிந்துணர்வை பற்றிய வேடிக்கை அக்கறையுள்ள ஊடகங்கள் இல்லை. இந்த நிலையை நோக்கும்போது சோவியத் யூனியனில் சொல்லப்பட்ட ஒரு துணுக்கு நிலைக்கு வருகிறது. சோவியத் யூனியனின் பிரதான நாளேடுகளில் இருந்தவை ப்ராவ்டா (உண்மை), இஸ்வெஸ்தியா (செய்தி) என்பனவாகும். "ப்ராவ்டாவில் இஸ்வெஸ்தியா இல்லை. இஸ்வெஸ்தியாவில் ப்ராவ்டா "இல்லை" என்று சொல்வார்கள். நமது ஊடகங்கள் போகிற போக்கைக் கவனித்தால் புதிய தணிக்கை விதிகளும் நடைமுறைப்படுத்தப்படுகிற நிலையில், நமது ஊடகங்களில் ப்ராவ்டாவும் இல்லை இஸ்வெஸ்தியாவும் இல்லை என்றே சொல்ல வேண்டியிருக்கும்.

நாட்டின் எதிர்காலம் பற்றிய எந்தவிதமான அக்கறையோ எதிர்பார்ப்போ இல்லாத தலைமைகள் அரசியல் முதலாக வணிகம், பாதுகாப்பு, ஊடகத்துறை போன்ற அனைத்திலும் ஆதிக்கம் செலுத்துகின்ற வரை மக்களின் அவலத்திற்கு பிரசாரப் பெறுமதிக்கு மேலாக எதுவும் நடக்கப்போவதில்லை.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நன்றி: Sunday, August 27, 2006

Labels:


Get your own calendar

Links