« Home | சிங்கள ஊடகங்களின் நடுநிலைமை » | மாவிலாறு நீர்முடக்கமும் சிங்களத்தின் படையெடுப்பும் » | மொட்டவிழ்ந்த கனவுகள் » | படையினரின் வலிந்து தாக்குதல் போருக்கான ஒரு அழைப்பா? » | ஒட்டுக்குழு அரசியலுக்கு வாகனேரியில் முற்றுப்புள்ளி » | தனியரசு அமைப்போம் - புலிகள் அறிவிப்பு » | தர்முசிவராம் (பிரமிள்) பற்றி » | இஸ்ரேலின் அடாவடியும் படிக்க வேண்டி பாடங்களும் » | பொஸ்பரஸ் தொடங்கி ஒற்றைத் துப்பாக்கி வரை... » | இந்து சமுத்திரத்தின திறவுகோல் யாருக்கு? »

உலகத்தை முட்டாளாக்கிய இஸ்ரேல் பயங்கரவாதம்.

மறுபக்கம்: கோகர்ணன்

ஐ.நா. கண்காணிப்பாளர்கள் இஸ்ரேலியத்தாக்குதலுக்கு இரையாகியிருக்கிறார்கள். கோஃபி அனான் அது பற்றி அதிர்ச்சி தெரிவித்திருக்கிறாரே ஒழிய இஸ்ரேலைக் கண்டிக்கவும் இல்லை இஸ்ரேல் மீதான கண்டனத் தீர்மானம் எதையும் நிறைவேற்றுவிக்கும் முயற்சியும் எடுக்கவில்லை. உலக நாடுகள் தாக்குதலை நிறுத்தும்படி இன்னமும் சொல்லாததால் தாக்குதலைத் தொடர்ந்தும் நடத்தப் போவதாக இஸ்ரேலிய அரசாங்கப் பேச்சாளர்கள் உலக நாடுகளின் தலைவர்களையே பகிரங்கமாக முட்டாள்களாக்கியிருக்கிறார்கள்.

இஸ்ரேலியத் தாக்குதலால் இறந்தோர் தொகை ஆயிரத்தை நெருங்கலாம். இப்படி நடக்குமென்று தெரியாமல் இஸ்ரேலிய அடாவடித்தனத்துக்கு அமெரிக்காவும் பிரித்தானியாவும் பிடிக்கப்பட்ட இஸ்ரேலிய படையினர் இருவரும் ஹிஸ்புல்லாவால் விடுவிக்கப்படுகிற வரை இஸ்ரேல் தனது தாக்குதலை நிறுத்த வேண்டுமென்று கேட்கப் போவதில்லை என்று சொன்னதற்கும் மேலாக இஸ்ரேலுக்கு என்னவிதமான அங்கீகாரம் தேவை? பிற மேலை நாடுகளும் சிப்பாய்கள் ஹிஸ்புல்லா இயக்கத்தால் விடுவிக்கப்படுவதை வற்புறுத்தும் அளவுக்கு இஸ்ரேலின் பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டிக்கவில்லை.

லெபனானில் இஸ்ரேலியக் குறுக்கீடு புதியதல்ல. 1982 ஆம் ஆண்டு பெய்ரூத்திற்கு அருகாக இருந்த இரண்டு பலஸ்தீன அகதி முகாம்களான ஸப்ரா, ஷட்டிலா இரண்டிலும் இஸ்ரேலியப் படைகள் நடத்திய வெறியாட்டம் உலக நாடுகள் பலவற்றின் கடுங்கண்டனத்தைச் சம்பாதித்தது. எனினும் இருபது வருடங்களுக்கு மேலாக இஸ்ரேல் தென் லெபனானில் தனது படைகளை நிலை நிறுத்தியிருந்தது. நீண்ட போராட்டத்தின் மூலமே இஸ்ரேலியப்படைகளை லெபனானிலிருந்து துரத்த முடிந்தது. பெய்ரூத் அகதி முகாங்களில் நடந்த படுகொலைகளை முன்னின்று வழி நடத்திய இராணுவத் தளபதியான அரியேல் ஷரோன் தனது அரசியல் அஞ்ஞாத வாசத்திலிருந்து மீண்டு இஸ்ரேலின் பிரதமராகிச் சென்ற ஆண்டு வரை பலஸ்தீனத்தில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பையும் அழிப்புச் செயல்களையும் வழி நடத்தினார். இப்போது அவர் `கோமா' மயக்க நிலையிலிருக்கிறார். ஆனாலும் இஸ்ரேலைப் பொறுத்த வரை தீவிர, மிதவாத என்கிற அரசியல் முத்திரைகட்கிடையில் அதிக வேறுபாடில்லை. சமாதானம் பற்றிப் பேசிக் கொண்டே பலஸ்தீனத்தையும் அதன் மக்களையும் அழிப்பவர்கட்கும் போர் பற்றி பேசிக் கொண்டு அதே வேலையைச் செய்கிறவர்கட்குமிடையே பேச்சில் இருந்த வேறுபாடு கூட இப்போது குறைந்துவிட்டது.

ஹமாஸ் ஒரு இஸ்ரேலியச் சிப்பாயைச் சிறைப்பிடித்ததும் ஹிஸ்புல்லா இருவரைச் சிறைப்பிடித்ததுமே இன்றைய பிரச்சினையின் தொடக்கப் புள்ளிகள் என்ற விதமாக நமது ஊடகங்கள் உலகத் தகவல் நிறுவனங்களின் பொய்களைத் திருப்பிச் சொல்லுகின்றன. பலஸ்தீன நிருவாகத்தின் ஹமாஸ் அமைச்சரவை உறுப்பினர்களில் அரைவாசிப் பேரை இஸ்ரேல் சிறையில் அடைத்து வைத்திருப்பது பற்றி யாரும் எதுவும் பேசுவதில்லை. இஸ்ரேலியப் படையினர் கடத்தப்பட முன்பு நடந்த இது போன்ற இஸ்ரேலிய அரசின் குற்றச் செயல்களைக் கண்டிக்க மறுக்கிறவர்கள் தான் ஹமாஸையும் ஹிஸ்புல்லாவையும் கண்டிக்கிறார்கள்.

பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பேரில் எவர் மீதும் பயங்கரவாதி என்று முத்திரை குத்திய பின்பு அவருக்கெதிரான எந்தக் கொடுமையையும் நியாயப்படுத்தலாம். அதேவேளை, தற்காப்புக்காகவோ தாங்க இயலாமையாலோ எடுக்கப்படுகிற ஒரு எதிர்ப்பு நடவடிக்கை கடுமையான விமர்சனத்துக்கு உட்படுத்தப்படுகிறது. கொடுமைகளை ஒப்பிடும் போது அவற்றின் அளவும் அவை நிகழ்ந்த சூழலும் அரச பயங்கரவாதத்திற்குச் சாதகமாகவே கணிப்பிடப்படுகிறது. விலக்காக வேண்டுமானால், அமெரிக்கா குழிபறிக்க முனைப்பாக உள்ள கியூபா, வெனசுவேலா போன்ற அரசாங்கங்களுக்கெதிரான பயங்கரவாதம் எதுவும் கண்டிக்கப்படாது.

முப்பது, நாற்பது ஆண்டுகட்கு முன்பு கொடுமைகளுக்கெதிராக மக்கள் போராடிய போதும் விடுதலைக்காகப் போராடிய போதும் சமூக நீதிக்காகப் போராடிய போதும் உலகின் ஒவ்வொரு மூலையிலும் வேறு யாராவது அந்தப் போராட்டத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருப்பார்கள். 60கள் முழுவதும் பின்பும் வியட்நாம் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாகவும் அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் அமெரிக்கா உட்பட உலக நாடுகளில் எல்லாம் போராட்டக் குரல்கள் ஒலித்தன. 1961 இல் கொங்கோவில் லுமும்பா படுகொலை செய்யப்பட்டு அங்கு ஏகாதிபத்தியச் சார்பான ஒரு ஆட்சி உருவான சூழலில் அணி சேரா நாடுகளிலும் மூன்றாமுலகம் முழுவதும் மேற்கு ஐரோப்பாவிலுங் கூடக் கண்டனக் குரல்கள் எழுந்தன. மூன்றாமுலக நாடுகளின் ஆட்சியாளர்கள் பலரும் மக்களின் இவ்வாறான நியாய உணர்வுக்குத் தலை வணங்க வேண்டியிருந்தது. இவ்வாறான வெகுசன ஆதரவே 1970களில் பலஸ்தீன விடுதலை இயக்கத்திற்கு உலகளாவிய அங்கீகாரத்தையும் ஐ.நா. சபையில் அதற்கு ஒரு இடத்தையும் பெற்றுக் கொடுத்தது.

சோஷலிஸத்தின் சரிவையும் சோவியத் யூனியனின் உடைவையும் உலக இடதுசாரி இயக்கம் 1980 கள் தொட்டுச் சில ஆண்டுகள் முன்பு வரை சந்தித்த பின்னடைவையும் பற்றிக் குதூகலித்தவர்கள் வெறுமனே முதலாளிய வாதிகளும் ஏகாதிபத்திய எசமானர்களும் மட்டுமல்ல, தாம் தேசிய வாதிகள் என்றும் தேசியமே முக்கியமானது வர்க்கமும் வர்க்கப் போராட்டமும் முக்கியமானவையல்ல என்றும் வாதித்துத் தேசிய விடுதலையைச் சமூக விடுதலையினின்று பிரித்துப் பேசியவர்களும் மதவாத அரசியலின் மூலம் கம்யூனிஸ எதிர்ப்பு என்ற பேரில் அமெரிக்காவின் கைப்பாவைகளாக இயங்கிய அல் - ஹைடா முதலான இஸ்லாமிய தீவிர வாத அமைப்புகளது ஆதரவாளர்களும் அனுதாபிகளும் கூட கம்யூனிஸம் ஒழிந்தது சோஷலிஸம் ஒழிந்தது என்று மகிழ்ச்சியில் ஆரவாரித்தனர்.

இடதுசாரிகளை ஓரங்கட்டுவதில் தேசிய வாதிகட்கும் முஸ்லிம் மத வாதிகட்கும் இருந்த ஆர்வத்தை ஏகாதிபத்திய வாதிகள் விரும்பினர். ஏனெனில், அதன் மூலம், ஏகாதிபத்தியம் என்கிற பொது எதிரிக்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்கள் இணைவதற்கு மாறாகத் தமக்குள்ளே போரிடும் வாய்ப்பு அதிகமாகும். சவூதி அராபியாவே இஸ்லாமிய அடிப்படைவாதம் எனப்படும் அரசியல் ஆயுதத்தின் பிரதான ஆதரவுத் தளமாக அமெரிக்காவால் பயன்படுத்தப்பட்டது. தலிபானைப் போன்ற அமைப்புகள், முஸ்லிம்கள் செறிவாக வாழ்ந்த சோவியத் குடியரசுகளிலும் சீனாவின் வடமேற்கு மாநிலமான சிங்கியாங்கிலும் உருவாக்கப்பட்டன. அவை கட்டுமீறிப் போனது இன்னொரு கதை.

யூகோஸ்லாவியாவைப் பிளவுபடுத்திச் சிதைக்க மதமும் தேசிய வாதமும் பயன்பட்டன. யூகோஸ்லாவியாவைச் சிதைத்த பின்பு அதற்குப் பயன்பட்ட சக்திகளைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கு அமெரிக்கா தனது புதிய கூட்டாளிகட்கு உதவி வருகிறது.

இன்று ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்காவின் போரை உலகின் பெருவாரியான மக்கள் எதிர்க்கின்றனர். பலஸ்தீனப் பிரச்சினையில் உலக மக்களின் அனுதாபம் பலஸ்தீன மக்களுடைய தரப்பிலேயே உள்ளது. கியூபாவையும் வெனசுவேலாவையும் பற்றி மூன்றாமுலக மக்கள் பெருமைப்படுகின்றனர். ஆனால் ஏன் லண்டனிலோ பிற ஐரோப்பியத் தலைநகரங்களிலோ ஈராக்கிற்கும் ஆப்கானிஸ்தானுக்கும் பலஸ்தீனத்திற்கும் ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள் நடக்கிற அளவுக்குக் கூட இங்கு நடக்கவில்லை? இந்தியாவில் ஜோஜ் புஷ்ஷின் வருகைக்கு எதிரான ஒரு மாபெரும் ஆர்ப்பாட்டம் பம்பாயில் நடந்தது. இங்கே ஏன் பலஸ்தீனம், ஈராக், ஆப்கானிஸ்தான் இன்று லெபனான் ஆகிய பிரச்சினைகள் பற்றி பொதுசன அபிப்பிராயம் அணிதிரட்டப்படவில்லை?

இலங்கையில் இடதுசாரி இயக்கத்தின் நலிவு ஒரு முக்கியமான காரணம் என்பதில் எனக்குச் சிறு ஐயமுமில்லை. எனினும் முக்கியமான வேறு காரணங்களும் உள்ளன. மேற்குறிப்பிட்ட பிரச்சினைகளை வெறுமனே மதம் சம்பந்தப்பட்ட பிரச்சினையாக்கி முஸ்லிம் - கிறிஸ்துவ மோதலாகச் சித்தரிப்பதில் ஏகாதிபத்தியவாதிகளது ஆதரவாளர்கட்கு உள்ள அக்கறைக்குச் சற்றுங் குறையாத அக்கறை இங்குள்ள இஸ்லாமியவாதக் குழுக்கள் சிலவற்றுக்கும் உண்டு. இவ்வாறு அமெரிக்காவுக்கும் அதன் எடுபிடியான இஸ்ரேலுக்கும் எதிரான போராட்டத்தை வேறுமனே முஸ்லிம்கள் தொடர்பான போராட்டமாகக் குறுக்குவதன் மூலம் இக் குழுக்கள் முஸ்லிம் மக்கள் நடுவே தம்மை வளர்த்துக் கொள்ள முயலுகின்றனவே ஒழியப் பலஸ்தீன, லெபனிய, ஈராக்கிய, ஆப்கானிய மக்களுக்கு ஆதரவான சக்திகளை அணிதிரட்டி அதன் மூலம் அரசாங்கத்தை எவ்விதத்திலும் கட்டாயப்படுத்தவோ, இங்குள்ள மக்களின் உணர்வுகளை அமெரிக்காவுக்கு வலிமையாக உணர்த்தவோ முயலவில்லை.

முஸ்லிம்களல்லாதோரும் பெருமளவிற் பங்குபற்றுகிற போராட்டங்கள் அமெரிக்க இஸ்ரேலிய அடாவடித்தனத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையர் உட்பட்ட பலரதும் பங்குபற்றலையும் இயலுமாக்கும். அவற்றின் மூலம் முஸ்லிம்களை ஏய்த்துப் பிழைக்கிற போலித் தலைமைகள் அம்பலமாகும் அல்லது தமது அரசியல் ஆயுளை நீடிப்பதற்காக நியாயத்திற்காக குரல் கொடுக்கும் நிலைக்கு அவை தள்ளப்படும்.

நம் முன்னுள்ள தெரிவு ஜோஜ் புஷ்ஷுக்கும் ஒஸாமா பின்லாடனுக்குமிடையிலானதல்ல. அல் - ஹைடாவோ வேறெந்த மதவாத, இனவாத அமைப்போ ஏகாதிபத்திய எதிர்ப்பை மையமாகக் கொண்டு போராடவில்லை. எனவேதான் ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டங்கள் யாவும் அவற்றின் பரந்துபட்ட ஒற்றுமைக்கான பொதுக் காரணிகளைத் தேட வேண்டும். அத் தேடலுக்கான உடனடியான களங்களில் பலஸ்தீன, லெபனான் மக்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதும் ஒன்று.


நன்றி: தினக்குரல் Sunday, August 06, 2006

Labels:


Get your own calendar

Links