« Home | ஊடகத் தணிக்கை » | உலகத்தை முட்டாளாக்கிய இஸ்ரேல் பயங்கரவாதம். » | சிங்கள ஊடகங்களின் நடுநிலைமை » | மாவிலாறு நீர்முடக்கமும் சிங்களத்தின் படையெடுப்பும் » | மொட்டவிழ்ந்த கனவுகள் » | படையினரின் வலிந்து தாக்குதல் போருக்கான ஒரு அழைப்பா? » | ஒட்டுக்குழு அரசியலுக்கு வாகனேரியில் முற்றுப்புள்ளி » | தனியரசு அமைப்போம் - புலிகள் அறிவிப்பு » | தர்முசிவராம் (பிரமிள்) பற்றி » | இஸ்ரேலின் அடாவடியும் படிக்க வேண்டி பாடங்களும் »

ஊடகப்பொறுப்புணர்வு

மறுபக்கம் - கோகர்ணன்

பாகிஸ்தான் தூதரை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாகச் சொல்லப்பட்ட தாக்குதல் பற்றி பாகிஸ்தானின் முக்கியமான நாளேடுகளில் ஒன்றான `டோன்' வெளியிட்ட சந்தேகம் வெறுமனே இந்தியாவின் உளவு நிறுவனமான `றோ' பற்றிய கேள்விகளை எழுப்புவதற்கும் மேலாக உள்நாட்டு நிலைவரங்கள் பற்றிய பாரிய கேள்விகளை எழுப்புகிறது. அவற்றில் எவையும் நமது பிரதான ஊடகங்களின் கவனிப்பைப் பெற்றதாகத் தெரியவில்லை. அத் தாக்குதலை மேற்கொண்டோர் விடுதலைப் புலிகளே என்பது பற்றி எதுவிதமான விசாரணையுமில்லாமல் குண்டு என்றால் விடுதலைப் புலிகளாகவே இருக்க முடியும் என்று முடிவு காட்டக் கூடிய தமது தகவல் ஊடகத்துறையினரது ஒரே அக்கறை விடுதலைப் புலிகளது நோக்கம் என்று என்பது பற்றியதாகவே இருந்தது. மூதூரிலிருந்து முஸ்லிம்கள் வெளியேறியதையும் இன்னொரு `இனச் சுத்திகரிப்பு' என்று வியாக்கியானம் செய்கிற நிபுணர்கட்குப் பாகிஸ்தான் மீதான தாக்குதலுக்கும் தமிழ்,முஸ்லிம் பகைமைக்கும் உறவு காணுவதில் அதிகம் சிரமம் இராது. என்றாலும் முன்னாள் அமைச்சரும் அரசாங்கத்தில் பதவி பெறத் துடியாய்த் துடித்துக் கொண்டிருப்பவருமான ரவூஃப் ஹக்கீம் ஏன் இன்னமும் கலந்தாலோசனைகட்காக இந்தியாவுக்குப் போய் வரவேண்டியுள்ளது என்பது எனக்குப் புதிராகவே உள்ளது. நமது அரசியல் தலைவர்கள் எல்லாருக்கும் ஆன்மீக வழிகாட்டிகளும் அரசியல் வழிகாட்டிகளும் இந்தியாவில் இருந்து வருவது இந்த நாட்டின் நன்மைக்கானதாக இருக்க முடியாது.
`றோ' பற்றிய சந்தேகத்திற்கு நியாயம் இல்லாமல் இல்லை. அமெரிக்காவின் சி.ஐ.ஏ.பற்றிக் கொஞ்சம் கேள்விப்பட்டவர்களுக்கு, `றோ' ஒரு சுண்டைக்காயளவு விஷம நிறுவனம். பாகிஸ்தான் தன் பங்குக்கு ஐ.எஸ்.எஃப் என்று ஒன்றை வைத்திருக்கிறது. பேரளவில் தகவல் ஆய்வு நிறுவனங்களாக இருந்தாலும் களவு வேலைகட்கும் அப்பால் குழி பறிப்பு வேலைகளில் ஈடுபடுவது இவை போன்ற அமைப்புகளது முக்கியமான பணியாகும்.அவை அரசாங்கங்கள் எளிதாகத் தட்டிக் கேட்க இயலாதளவுக்கு அதிகாரமுடையவை. அதனால் எந்த ஒரு அரசாங்கமும் தனது உளவு நிறுவனத்தின் அத்துமீறல்கட்குப் பொறுப்பேற்காமல் இருக்க இயலாது. அமெரிக்காவின் உலக மேலாதிக்க நோக்கமும் இந்தியாவின் பிராந்திய மேலாதிக்க நோக்கமும் இப்போது இருண்டு மேலாதிக்க நோக்கங்கட்குமிடையில் உள்ள தற்காலிக உடன்பாடும் தென்னாசியாவின் நாடுகளின் இறைமைக்கும் அரசியல் உறுதிப்பாட்டுக்கும் கேடானவை. மேலாதிக்கவாதிகள் மேலாதிக்கவாதிகளாகவே நடந்து கொள்வார்கள். நாம் தான் நமது நலன்களைப் பேணிக் கொள்ள வேண்டும். 1977 க்குப் பின்பான சர்வதேச அரசியற் கொள்கையும் பொருளாதாரக் கொள்கையுமே இன்றைய அந்நியக் குறுக்கீடுகளை இயலுமாக்கின.

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையின் வேர்கள் கொலனிய யுகத்துடனும் அப்போது உருவாகி வளர்ந்த ஒரு புதிய உள்ளூர் முதலாளி வர்க்கத்தின் அதிகார மோதல்களுடனும் தொடர்புடையவை. அதற்கான பலியை கொலனிய நிர்வாகத்தின் பிரித்தாளும் உபாயத்தின் மீது மட்டுமே சுமத்தி விட இயலாது.தேசிய இனப் பிரச்சினையை ஒரு போராக வளர்த்தெடுக்கும் அளவுக்கு வளரவிட்டதும் நியாயமான நின்று பிடிக்கக் கூடிய தீர்வுகளை இயலாமலாக்கியதும் முற்றிலும் பேரினவாத அரசியலுக்கு ஆதாராமாயிருந்த உள்ளூர் அதிகார வர்க்கங்களது நடவடிக்கைகளே.எனினும், பேரினவாதம் சிறுபான்மைத் தேசிய இனங்களை இலக்கு வைப்பதுடன் நின்று விட முடியாது. அது தனது அடக்குமுறை அரசியலின் போக்கில் பல சமூகச் சீரழிவுச் சக்திகளைக் கட்டவிழ்த்து விடுகிறது. அவற்றின் பிடிப்பிலிருந்து ஒரு சமூகத்தால் எளிதில் விடுபட இயலாது. இலங்கையில் நிகழுகிற போர் தேசிய இனங்கட்கிடையிலானதல்ல. அது ஒரு தேசிய இனத்தின் மீது சுமத்தப்பட்ட போர். அது இன்னொரு தேசிய இனத்தின் போராற் சுமத்தப்பட்ட போரே ஒழிய அதனாற் தொடுக்கப்பட்ட போரல்ல. எனினும் தூண்டப்பட்டு வந்துள்ள சந்தேகங்களும் பகையை மூட்டக் கூடிய தீய செயல்களும் மிகுந்த கசப்புணர்வை ஏற்படுத்தியுள்ளன என்பது உண்மை. அதைக் களையாமல் நிலையான ஒரு தீர்வைக் காண இயலாது. போர் யாருடைய நலன்கட்காக நடக்கிறதோ அவர்கள் தேசிய இனங்களிடையிலான நல்லுறவை விரும்பமாட்டார்கள். அதைவிட போரின் சிக்கலான தன்மையும் வெவ்வேறு பிரிவினர்களிடையேயான முரண்பாடுகளும் அயற் குறுக்கீட்டை மேலும் வசதியாக்குகின்றன. அயற்குறுக்கீடு சிலவேளைகளில் முரண்படும் தரப்புகளால் விரும்பப்பட்டாலும் அதன் விளைவுகள் குறுக்கீட்டை விரும்புவோர் விரும்புகிற விதமாக அமைவதில்லை. இது தென்னாசியப் பகுதியில் மட்டுமன்றி மூன்றாம் உலக நாடுகள் பலவற்றிலும் கடந்த சில பத்தாண்டு காலங்களில் நான் கண்டது.

எந்த அயல்நாடு ஏன் எவ்வாறு குறுக்கிட முனைகிறது என்பதை நாம் விளங்கிக் கொள்ளாமல். அயற் தலையீடுகளை தவிர்ப்பதும் அவற்றுக்கும் முகங்கொடுப்பதும் கடினம் . பல சமயங்களில் உண்மையிலேயே உள்ள பிரச்சினைகளிலிருந்தும் நிகழக்கூடிய குறுக்கீடுகளிலிருந்தும் கவனத்தை திசைதிருப்புகிற விதமான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.நாம் பல முறை ஏமாந்தும் இருக்கின்றோம். அண்மையில் கூட இந்தியாவின் விஸ்தரிப்புவாத நடவடிக்கையான சேது சமுத்திரத் திட்டத்தை நியாயப்படுத்துவதற்கு சீனாவிடமிருந்து இந்து சமுத்திரப் பகுதியை பாதுகாக்கும் தேவைபற்றிய பல்வேறு விளக்கங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. சீனா இந்து சமுத்திரப் பகுதியில் கடற்படைத் தளங்களை நிறுவுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் பூட்டானின் எல்லையில் இராணுவ நடவடிக்கைகளை அதிகரித்திருப்பதாகவும் சொல்லப்பட்டிருக்கின்றது. இத் தகவல்களின் தோற்றுவாயை இணையத்தளத்தில் தேடினேன். இந்திய-சீன நல்லுறவை குழப்புவதற்கென்றே செயற்படுகின்ற ஒரு அமைப்பிலிருந்து சில தகவல்கள் உற்பத்தி செய்யப்பட்டிருந்தன. வேறு சில திட்டமிட்ட திரிபுகளாக இருந்தன. எனினும், இரண்டாங்கை மூன்றாங்கையாகவே இத் தகவல்கள் சிலரால் பெறப்பட்டு திரும்பத் திரும்ப கூறப்பட்டு உண்மையாக்கப்படுகின்றன.

நம் மனங்களில் ஆழப் பதிய வைக்கப்பட்டுள்ள சில எண்ணங்களிலிருந்து நாம் விடுதலை பெற வேண்டும். பிற சமூகங்கள் பற்றி ஒவ்வொரு சமூகத்தினரிடையே பரப்பப்பட்டுள்ள புனைவுகள் சமூகங்களிடையிலான நல்லுறவுக்குக் கேடானவை. எனினும் அதிகம் ஆராய்வின்றி நாம் அவற்றை நம்புகிறோம். சில அயற் சக்திகளை சில உள்நாட்டுச் சமூகங்களின் இயல்பான நட்புச் சக்திகள் என்று கற்பனை செய்கிறோம். நடைமுறை அனுபவம் அவ்வாறான நம்பிக்கைக்கு மாறாக இருந்தாலும், நமது நம்பிக்கைகட்கு முரணானவற்றைக் கருத்திற் கொள்ள மறுக்கின்றோம்.

பாகிஸ்தான் இலங்கை அரசாங்கத்திற்கு ஆயுதங்களை விற்பது முஸ்லிம்களது பாதுகாப்புக்காக அல்ல. இலங்கையை யாரிடமிருந்தும் பாதுகாப்பதற்காகவும் அல்ல. இந்தியாவின் பிராந்திய மேலாதிக்க நோக்கம் பாகிஸ்தானின் ஆட்சியாளர்கட்கு ஒரு பிரச்சினையாக உள்ளளம் அதற்கு தடையான முயற்சிகளை பாகிஸ்தான் மேற்கொள்ளும். எனினும், இலங்கையில் நேரடியாக தலையிடுகிற வாய்ப்பு வசதியோ, நோக்கமோ பாகிஸ்தானுக்கு இருக்க இயலாது. பாகிஸ்தான் ஆயுதங்களை வழங்கியதாலேயே தமிழ் மக்கள் மீதான தாக்குதல்களை தொடுக்க பேரினவாத ஆட்சியாளர்கட்கு இயலுமாயுள்ளது என்பது வெறும் கற்பனையே. உண்மையில் அண்மைக் காலங்களில் விமானத் தாக்குதல்கள் மூலம் ஏற்பட்ட பேரழிவுக்கு பயன்பட்டவை இஸ்ரேலிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட க்ஃபீர் விமானங்களே. இஸ்ரேல் முஸ்லிம்களின் நண்பனல்ல. லெபனான் தொடர்பாக இஸ்ரேலுக்கு எதிரான வெனிசுவேலாவின் சனாதிபதி ஹ்யூகோ சாவேஸ் எடுத்துள்ள நிலைப்பாட்டை ஒத்த நிலைப்பாட்டை பெருவாரியான அரபு ஆட்சியாளர்கள் எடுக்கத் துணிய வில்லை. அமெரிக்காவின் இராணுவ ஆதிக்கத்திலுள்ள ஈராக்கின் ஆட்சியாளர்கள் அமெரிக்காவை மீறி இஸ்ரேலை கண்டிக்கத் துணிந்த அளவுக்கு கூட எகிப்தோ சவூதி அரேபியாவோ துணியவில்லை. எனவே தான் எளிமையான சூத்திரங்கள் பற்றி நாம் எச்சரிக்கையாயிருக்க வேண்டும்.

இன்னொரு புறம், இலங்கையில் அயல் நாடுகளின் குறுக்கீட்டைப் பற்றிக் கட்டுரைகளையும் சில நேரங்களில் ஆசிரிய தலையங்கங்களையும் வெளியிடுகிற ஏடுகள் கூடத் தகவல்களைக் கையாளும் போது தமது குறுகிய நோக்கங்கட்கு வசதியாக இல்லாத விடயங்களைத் தவிர்க்கின்றன. பேரினவாத ஏடுகள் எப்போதோ இந்திய மேலாதிக்கம் பற்றியோ அமெரிக்க ஏகாதிபத்தியம் பற்றியோ கண்டித்து எழுதினார். அவற்றின் பேரினவாத நோக்கங்கட்குப் போதியளவு உடன்பாடாக இந்தியாவோ அமெரிக்காவோ நடந்து கொள்ளாததன் பின்னணியிலேயே அவ்வாறு எழுதப்பட்டிருப்பதைக் காணலாம்.

இந்த நாடு ஒரு அந்நிய மேலாதிக்கச் சுழிக்குள் சிக்கத் திணறிக் கொண்டுள்ளது. தேசிய இனப் பிரச்சினையின் தீர்வுக்குக் கூட அயல் நாடுகளின் தலையீட்டை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக வேண்டி நிற்கிற வரை, இந்த நாடு தேசிய இனப் பிரச்சினைக்கு நிலைக்கக் கூடிய தீர்வு எதையும் காணப் போவதில்லை. அமைதிக்கான அந்நிய முயற்சி எதுவும் இந்த நாட்டு மக்களின் அவல நிலை பற்றிய கவலையினதும் அவர்களது நலன் பற்றிய கரிசனையினதும் அடிப்படையிலிருந்து எழவில்லை. அயற் குறிக்கீடு தேவைப்படுகிற ஒரு சூழ்நிலையை நாமே உருவாக்கியுள்ளோம். அது தொடர்வதற்கும் நாமே காரணமாக இருந்து வருகிறோம். அமைதிக்கான தேவை உள்நாட்டிலேயே முழுமையாக உணரப்படவும் வற்புறுத்தப்படவும் வேண்டும். அமைதிக்காக தென்னிலங்கையில் எழுப்பப்படுகிற குரல்களை அடக்கப் பேரினவாதக் குண்டர்கள் முன் வருகின்றனர். இது ஒரு வகையில் நல்லதும் கூட. ஏனெனில் பேரினவாதம் போர் வெறியர்களுடனான துணிவான மோதல்கள் மூலமே அமைதிக்கான சக்திகள் தம்மை மேலும் வலுப்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறான மோதல்களை தீய சக்திகளை மக்கள் முன்னிலையில் அம்பலப்படுத்துகின்றன. அவை அமைதிக்கான சக்திகள் வலிந்து தேடுகிற சண்டைகளல்ல. அவற்றுக்கும் விடுதலைப் போராட்டங்கட்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. அவற்றினூடு உருவாகிற மாற்றுச் சின்னங்கள் பதிவு அரசியற் சக்திகளாக விருத்தி பெற முடியும். இது தென்னிலங்கையின் மக்களது விடுதலைக்கு மிகவும் தேவையானது.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றியும் தமிழ் மக்கள் துன்புறுத்தப்படுவது பற்றியும் சிங்கள மக்கள் அறிவது முக்கியமானது. அதைத் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் புறக்கணிக்கலாகாது. தமிழ் மக்களின் விடுதலையை அந்நிய மேலாதிக்கத்தினின்று முழு நாட்டினதும் விடுதலையுடன் இணைப்பதற்கான வாய்ப்புகள் பாராளுமன்ற அரசியலுக்கு வெளியே அமைதிக்கான போராட்டங்கள் உட்பட்ட வெகுசனப் போராட்டங்களில் உள்ளன. அதைப் பற்றித் தமிழ், முஸ்லிம் மக்கள் கவனஞ் செலுத்துவது அவசியம்.

நன்றி: ஞாயிறுத் தினக்குரல் Sunday, September 03, 2006

Labels:


Get your own calendar

Links