Saturday, June 10, 2006

கேணல் இறமணன்

ஒரு போராளியின் குருதிச் சுவடுகள்

பாடசாலைக் கட்டிடத்திற்குள் இருந்த புழுக்கத்தை ஆற்றங்கரைக் காற்று கழுவிக்கொண்டிருந்தது. அது வகுப்புக்களுக்கான நேரம் அல்ல. வகுப்பறைகள் வெறிச்சோடிப்போய்க்கிடந்தன. காவலாளியும் காணப்படவில்லை. முற்றிலும் ஆளரவமற்றிருந்தது அந்தப் பாடசாலை, மதிலோரமும் தொருவோரக்
கட்டிடத்திற்குள்ளும் பதுங்கியிருந்த சிலரைத் தவிர.

பச்சைக்கரைப் பாவாடையைப் போல வயலும் நீலத்தாவணிபோல வாவியும் கதிரவன் எழும்போதும் விழும்போதும் சிவக்கும்வானமுமாக கண்களுக்கு எப்போதுமே விருந்துவைக்கும் பழுகாமம், நாட்டுக் கலைகளுக்கும் நாவன்மை மிக்க பேச்சாற்றலுக்கும் நாவூறவைக்கும் மீன்கறி வகைகளுக்கும் பேர்போனது. அந்த ஊரின்வரலாற்றுத் தொன்மை பற்றி "மட்டக்களப்பு பூர்வ சரித்திரம்" (ஏட்டுச் சுவடிப்பிரதி- வித்துவான் சா.இ.கமலநாதன்) புகழுடன் பேசுகிறது. எமது தாயகத்தின் பண்பாட்டுத் தொட்டில்களில் ஒன்றான பழுகாமத்தின் இப்போதைய சிறப்பிற்கு கண்டுமணி மகாவித்தியாலயமும் காரணம்.


படுவான்கரையை முன்னேற்றுவதற்கு ஓயாது உழைத்து அந்தப்பாடசாலை உருவாவதற்கு அத்திவாரமிட்ட கண்டுமணி ஐயாவின் பெயரே அந்தப் பாடசாலைக்கும் இடப்பட்டதில் ஊரில் உள்ள அனைவருக்கும் மகிழ்ச்சியே. இப்போது அது கிழக்குப்புறமாக தாராளமான அளவில் ஒரு மைதானமும் இரண்டுமாடிக் கட்டிடங்களும் பரிசோதனைச் சாலையுமாக அந்தப்பகுதியின் கொத்தணிப் பாடசாலை என்ற களையோடு இருந்தது. பழுகாமத்தில் இன்றிருக்கும் பெரியவர்களில் பலர் கற்றுத்தேர்ந்ததும் சமூக முன்னேற்றத்திற்கும் விடுதலைக்கும் உழைத்த பலருக்கு எழுத்தறிவித்ததும் அதன்மேல் எழுதப்படாத பெருமைகள்.

அவற்றோடு சேர்த்து தாயக மீட்புப் போரிலும் பங்கேற்கப்போகும் பெருமிதத்துடன் தலை நிமிர்ந்து நின்றுகொண்டிருந்த அந்தப் பாடசாலையை ஓர் உழவு இயந்திரம் நெருங்கிக் கொண்டிருப்பதற்கான இரைச்சல் இப்போது கேட்கிறது. மதிலின் பின்னால் பதுங்கியிருக்கும் உருவங்கள் அசையாவிட்டாலும் ஒரு பரபரப்பிற்கு உள்ளாகின்றன. ஒரேயொரு உருவம் மட்டும் மெதுவாக தலையை நீட்டி நெருங்கும் உழவு இயந்திரத்தை உற்றுப்பார்க்கிறது. அதன் முகத்தில் திருப்தி தெரிய தலையை உள்ளே இழுத்த பின் பின்புறத்தில் பதுங்கிக்கொண்டிருந்த உருவங்களுக்கான சைகைகள் கிடைக்கின்றன. இப்போது மறைந்திருந்த உருவங்களின் கைகளில் ஆயுதங்கள்தெரிகின்றன. பெரும்பாலானவை கைக்குண்டுகள். தாக்குதல் ரைபிள்கள் இரண்டு. உழவு இயந்திரத்தின் பெரிய சில்லுக்களின் மீதான சுரிக்காப்புத்தகடுகளிலும் பெட்டியிலுமாக வந்துகொண்டிருந்த ஆட்களில் சிலர் சீருடை அணிந்திருந்தார்கள். சிலர்சாதாரண உடையில் இருந்தார்கள்.எல்லோருடைய கைகளிலும் ஆயுதங்கள்.

அருகிலிருந்த முகாமிலிருந்து மனிதவேட்டைக்காகக் கிளம்பி வந்துகொண்டிருந்த அவர்கள் முதல் நாளும் அதேபோல வந்து மனித வேட்டையை நடத்தியிருந்தார்கள். அவர்களின் வேட்டையில்
குருத்துக்கள் முறிக்கப்பட்டன. எல்லா வயதுப் பெண்களும் சூறையாடப்பட்டார்கள். வயல் வாடிகளுக்குள்ளே உயிருடன் குடும்பங்கள் எரிக்கப்பட்டன. ஒவ்வொரு இரவும் உயிர் பிழைப்பதற்கான ஓய்வில்லாத ஒட்டமாக இருந்தது. பிய்த்தெறியப்பட்ட குடும்பங்கள் காடுகளிலும் வெளியூர்களிலுமாக கொடிய குற்றவாளிகளைப் போல ஒளித்தோடிக் கொண்டிருந்தார்கள்.மனித வேட்யைக்காரர்கள் தகப்பனுக்காக மகனையும் தமையனுக்காகத் தங்கையையும் குதறிக்கொண்டிருந்தார்கள்.

அவ்வகையான வெறியாட்டத்திற்காக வந்துகொண்டிருந்த அந்தக்கும்பல் பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்தை நெருங்கியபோது திடீரெனத் தோன்றிய ஓர் உருவம் கையிலிருந்த ரைபிளால் சரமாரியாகச் சுடத்தொடங்கியது. அதைத்தொடர்ந்து உழவு இயந்திரத்தைச் சுற்றிலும் தோன்றிய உருவங்கள் கைக்குண்டுகளாலும் ரைபிளாலும் தாக்கத்தொடங்க திருப்பிச்சுடும் திராணியற்றுச் செத்து விழுந்தது மனிதவேட்டைக் கும்பல். தலை தெறிக்கத் தப்பி ஓடியோர் போக விழுந்து கிடந்தவர்களிடமிருந்த ஆயுதங்கள் களையப்பட்டன. தாக்கிய உருவங்கள் ஒவ்வொன்றாகப் பின்வாங்கிய பின் வெடிப்புகையும் இரத்தமுமாகக் கிடந்த சாலையில் விழுந்துகிடந்த இந்திய ஆக்கிரமிப்புப் படையினரையும் துரோகிகளையும் ஒருமுறை உற்றுப் பார்த்துவிட்டு விடுபட்டுக் கிடந்த மேலுமொரு ஆயுதத்தையும் எடுத்துக்கொண்டு அந்த இடத்தைவிட்டு வெளியேறிய கடைசி உருவம், ரமணன்.

அந்தச் சண்டையின் வேவு நடவடிக்கையைத் கேணல் இறமணன் திட்டமிட்டதிலிருந்து கடைசியாக நின்று போராளிகளைப் பாதுகாப்பாக மறைவிடத்திற்குக் கொண்டுவந்து சேர்த்தது வரை தலைமை தாங்கி நடத்திய ரமணனின் வயது அப்போது 21. பயிற்சி பெற்று ஒரு வருடம் தான் ஆகியிருந்தது. கந்தையா உலகநாதன் என்ற இயற்பெயருடன் பழுகாமத்தில் பிறந்து கண்டுமணி மகாவித்தியாலயத்தில் கல்விகற்று 86ஆம் ஆண்டின் முற்பகுதியில் போராட்டத்தில் இணைந்து மட்டக்களப்பு 3ஆம் பாசறையில் பயிற்சி முடித்தவர் இரமணன்.
ரமணனின் குடும்பம் விடுதலைக்காகச் செலுத்திய விலை சாதாரணமானதல்ல.

ரமணன் இயக்கத்தில் இணைந்த சில நாட்களிலேயே அவரின் அண்ணனும் இணைந்து விடுகிறார். இன்னுமோர் அண்ணன் (கந்தையா மோகனதாஸ்) ஆரம்பத்தில் பிறிதொரு அமைப்பில் தனது விடுதலைப் பணியை ஆரம்பித்திருந்தாலும், தேசியத் தலைவரின் மகத்துவத்தின் பால் ஈர்க்கப்பட்டு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டுக் கொண்டிருந்தபோது இந்தியப் படையாலும் துரோகிகளாலும் கொடூரமான முறையில்
கொல்லப்பட்டவர். அடுத்த தங்கையும் போராளியாக பல வருடங்களை நிறைவு செய்தவர். இன்னுமொரு சகோதரர் போராளியாகவிருந்து இப்போது காவற்றுறையில் பணியாற்றுபவர். போராட்டத்தை அன்றிலிருந்து
இன்றுவரை வருடிக்கொடுக்கும் அவரின் தாயார் அனுபவித்த வேதனைகளும் கொஞ்சமல்ல. அடிக்கடி தேடிவரும் படைகளுக்கும் தொடரும் துரோகிகளுக்கும் ஈடுகொடுப்பதிலேயே அந்தத் தாயின் வாழ்க்கை கழிந்துகொண்டிருந்தது. அவ்வாறான ஒரு சம்பவத்தில் ஆத்திரமுற்ற எதிரிகள் அவரின் வீட்டைக் குண்டு வைத்துத் தரைமட்டமாகத் தகர்த்து விடுகிறார்கள். அவரின் தங்கை வீட்டில்தஞ்சமடைய, அந்த வீடும் தாக்குதலுக்கு உள்ளாகிறது.

இவ்வாறான சோதனைகள் சூழ்ந்த வாழ்க்கையினுள்ளும் எதிரி மீதான தனது தாக்குதல்களில் சற்றும் தளர்வைக் காட்டியவரல்ல ரமணன். தனது வீட்டை எதிரிகள் நெருங்குவதை அறிந்து அங்கே வைக்கப்பட்டிருந்த மரங்களுக்குக் கீழே பொறி குண்டை அமைத்துவிட்டு விலகிச் செல்ல அங்கேவந்து அடாவடி செய்த படையினர் இருவர் கொல்லப்படுகிறார்கள். பலர் காயமடைகிறார்கள். தேசியத் தலைவரின் கெரில்லாத் தந்திரோபாயங்களுக்கு மிகச்சிறந்த முறையில் களநிலை வடிவம் தந்தவர்களில் ரமணனும் ஒருவர். எந்தப்பொருள் எப்போது வெடிக்கும், எங்கிருந்து சன்னங்கள் கிளம்பும் என்று இரவும்பகலும் எதிரியை ஏங்கவைத்த பெருமை ரமணனுக்கே உண்டு.

நியுட்டன் அவர்கள் மட்டக்களப்பில் இருந்தபோது தனது புலனாய்வு வாழ்வின் முதல் அத்தியாயத்தைத் துவக்கிய ரமணன், துரோகி ஒழிப்பிலும் ஊடுருவல்களை முறியடிப்பதிலும் தனது தனித்துவ முத்திரையை பதித்திருக்கிறார். ரமணனைக் கொல்வதற்கான பல சதிகளை சிறிலங்காப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டிருந்த போதும் அத்திட்டங்கள் அனைத்துமே ரமணனின் நுட்பமான தகவற் கட்டமைப்பால் முறியடிக்கப்பட்டன. அவரின் தந்திரோபாயச் செயற்பாடுகள் தாயகத்திற்கு வெளியிலும் நீண்டிருந்தன. ரமணனின் புலனாய்வுப் பேறுகளைப் பட்டியலிடுவது சிரமம்.

"ரமணனை மத்திய புலனாய்வுத்துறையில் இணைக்க விரும்பினேன். தேவை கருதி அவர் மாவட்ட மட்டத்தில்பணியாற்ற வேண்டியதாயிற்று"
என்கிறார் தமிழீழப் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ச.பொட்டு.

இந்தியப் படைகளின் ஆக்கிரமிப்புக் காலத்தில் தனித்துவமான திட்டங்களைத் தீட்டி தாக்குதல்களைத் தலைமை தாங்கி நடத்திய ரமணன், தம்பிலுவில் துரோகிகளின் முகாம் தகர்ப்பில் ஒரு பகுதித் தலைமையை ஏற்றுச்சமர் செய்தவர். அந்தச் சமரில் விழுப்புண்ணடைந்தவர். அதன் பின், பூநகரித் தவளைச் சமரிலும், ஆனையிறவுப் பீரங்கித்தளத்தின் மீதான தாக்குதலிலும் அணித்தலைமைப் பங்கேற்றுப் படைநடத்தியவர். ஜயசிக்குரு விஞ்ஞானகுளச் சமரின்போது விழுப்புண்ணடைந்தார். கேணல் ரமணனின் ஆரம்ப நாட்களில் இருந்தே அவரோடு நெருக்கமாகப்பழகியவரும் பல சமர்க்களங்களை அவரோடு பகிர்ந்துகொண்டவருமான கேணல் ரமேஸ் தனது நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளும்போது,
"ஒரு சமரிலே ரமணனின் சம்பந்தம் இருப்பதைப் போராளிகள் அறியும்போது அவர்களுக்கு நம்பிக்கையும் சிறிலங்கா படையினர் அறியும்போது அவர்களுக்குப் பயமும் ஏற்படுவதுண்டு. அந்தளவிற்கு ரமணனின் திட்டமிடல்கள் புகழ்பெற்றவையாக இருந்தன" என்றார்.

படைத்துறைச் செயற்பாடுகளைப் புலனாய்வுத் தன்மையோடு நகர்த்துவது ரமணனின் தனித்துவம். 2004ம் ஆண்டு ஏப்ரல் மாதம். துரோகி கருணா எமது மாவீரர்களை அவமதிக்கும் வகையில் தாயகக்கோட்பாட்டிற்கு எதிரான நீசத்தனத்தில்இறங்கியபோது கொதித்தெழுந்த உள்ளங்களில் ரமணன் முக்கியமானவர். அவமானத்தில் இருந்தும் அழிவிலிருந்தும் எமது மக்களையும் போராளிகளையும் காப்பாற்றும் பணியில் மிகப் பழுவான பணியொன்றை விரும்பி ஏற்கிறார் ரமணன். மிகச் சில போராளிகளுடன் மட்டக்களப்புப் பகுதியைப் பின்புறமாக அண்மித்து உள்நுளைகிறார். ரமணன் வந்துவிட்ட செய்தி விடுதலையை விரும்பிய மக்களுக்குத் தேனாக, துரோகி கருணாவிற்கோ இடியாகக் கேட்கிறது. ஏற்கனவே வாகரையை இழந்துவிட்ட கருணா இப்போது மாவடி முன்மாரியையும் இழந்து கொண்டிருப்பதைக் காண்கிறான். இந்த நேரத்தில் ரமணன் தொடுத்த தந்திரோபாயத் தாக்குதலால் நிலை இலக்குலைந்துபோய் தனது கையாட்களைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் கருணா தப்பியோட முயற்சிக்கிறான். முதல்அணியாக குடும்பிமலைப் பிரதேசத்திற்குள் நுழைந்து கருணாவினால் கடைசி நேரத்தில் படுகொலை செய்யப்பட்ட நீலனின் வித்துடலை மீட்ட அணி ரமணனுடையது.

அதன் பின்னர் சிறிலங்கா படைப் புலனாய்வினரும் ஒட்டுக்குழுக்களும் செய்த பெரும்பாலான சதிகளை முறியடித்து மாவடி முன்மாரிப் பிரதேசத்தின் காவலனாகவும் மட்டக்களப்பின் துணைத் தளபதியாகவும் இருந்த கேணல் ரமணன் வவுணதீவிலுள்ள போராளிகளின் காவலரண்களைப் பார்வையிட்டுக் கொண்டிருக்கும்போது எதிரியின் சதிச் சூட்டிற்கு இலக்காகி வீரச்சாவடைகிறார்.

மண்ணின் மணத்தோடும் அதற்கேயுரிய இயல்புகளோடும் சீற்றத்தோடும் வளர்ந்த ரமணன் அந்தமண்ணின் தனிச் சிறப்பான கலைகளிலும் பேச்சாற்றலிலும் சிறந்து விளங்கியவர். பூநகரித் தகர்ப்பின் பின் எழுதுமட்டுவாள் ஜெயந்தன் முகாமில் அவர் எலும்புக்கூட்டு உடையணிந்து நடனமாடியதைப் பார்த்தவர்கள் இன்றுவரை மறந்திருக்க மாட்டார்கள். தளங்களில் நடக்கும் கலை நிகழ்வுகளில் பாடியதோடு மட்டுமல்லாது தான் கற்றதும், எதிரியை மறைந்திருந்து சுட்டதுமான பாடசாலையின் மைதானத்தில் கடந்தவருட தியாகி திலீபன் நினைவு நிகழ்வின்போது தனது உற்றவரும் பெற்றவரும் பார்த்திருக்க தலைவனைப் பற்றிய பாடலைப் பாடியதும் அனைவரது கண் முன்னும் அகலாது நிற்கும்.

கலைகளோடு மட்டுமல்லாது விளையாட்டுக்களிலும் நேரே பங்கெடுத்து போராளிகளுடன் விளையாடி தளத்தை உற்சாகமாக வைத்திருந்த நாட்களும் பதிவுகளுக்குரியவை. சுனாமியின் பின்னான நாட்களில் அம்பாறை மாவட்டத்தில் மக்களின் சேவைக்காகத் தன்னை அர்ப்பணித்துச் செயற்பட்டபோது, எதிரியால் இலக்கு வைக்கப்பட்டிருப்பது தெரிந்தும் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் மக்களோடு நின்றதும் நினைவழியா நிகழ்வுகள். பன்சேனைக் கிராமத்தில் திலீபன் மருத்துவமனையைக் கட்டுவதற்கான அவரின் காத்திரமான பங்களிப்பு அந்தக் கட்டிடத்தைப் பார்க்கும் ஒவ்வொரு பொழுதிலும் கண்முன் ஆடும். பழுகாமமும் அதற்குத் தலைப்பாகை கட்டி நிற்கும் ஒட்டிச் சதுப்பு நிலமும் ரமணனுடைய நினைவுகளைத் தன் ஆழங்களில் தாங்கி நிற்கின்றன. கண்ணாக் காடுகளின் சலசலப்பிலும் கொக்குப் பீச்சல் திடலில் ஓய்வு கொள்ளும் பறவையினங்களின் பாட்டிலும்
ரமணனின் பெயர் நிச்சயம் சொல்லப்படும்.

தாயகப் பயணப் பாதையில் விழுமுன்னமே முளை விட்ட விருட்சமாகத் தனது தனித்துவமான போர் உத்திகளைத் தந்து சென்ற ரமணன் என்றும் அந்த உத்திகளின் வடிவத்திலும் நினைவுகளின் ஆழத்திலும் வாழ்ந்து கொண்டிருப்பார்.


மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி
கேணல். ரமணன்
(கந்தையா உலகநாதன்)
திருப்பளுகாமம்
மட்டக்களப்பு
பிறப்பு - 14.10.1965
வீரச்சாவு - 21.05.2006

__________________
நன்றி: விடுதலைப்புலிகள் சித்திரை-வைகாசி -2006. ஏடு

Labels: ,

Friday, June 09, 2006

இரத்தம் தோய்ந்த நாளொன்றின் நினைவுகள்.

இரத்தம் தோய்ந்த தமிழர் படுகொலை நாளொன்றின் நினைவுகள்.

கடந்த சிங்கள, இந்துப் புத்தாண்டன்று திரு(க்)கோணமலையில் தமிழர் படுகொலையொன்று நடந்தது நினைவிருக்கலாம். அந்நாளில் பாதிக்கப்பட்ட நேரடி சாட்சியங்கள் சிலவற்றைக் கொண்டு எழுதப்பட்டது இக்கட்டுரை.
_____________________________

"ஜயா தம்பி இதை எரிக்காதியுங்கோ" என்று மன்றாடிய 60வயது வயோதிபத் தாயார் ஒருவரை வெட்டிக் கொன்றுவிட்டே இக்கோயிலை எரித்திருக்கின்றனர் காடையர்கள்.


1983 யூலை இன அழித்தொழிப்பில் இத்தீவு தமிழ் மக்களின் இரத்தத்தில் தோய்ந்த வரலாற்றை எவரும் மறந்திருக்கமாட்டார்கள்.
ஓவ்வொரு தமிழனின் மனங்களிலும் ஆழப்புதைந்துகிடக்கும் ரணமது. இதிலுள்ள துரதிஸ்டம் என்னவென்றால் அந்தக் கொடூரத்திற்கு மீண்டும் மீண்டும் தமிழ் மக்கள் பலியாகிவருவதுதான். புரிந்துணர்வு ஒப்பந்தம், நல்லிணக்கப் பேச்சுவார்த்தை, சர்வதேசத்தலையீடு எவையுமே சிங்களத்தின் கொடூரமனோபாவத்தில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. எஞ்சிக்கிடந்த கொஞ்ச நம்பிக்கைகளும் பொய்த்துப் போனதன் சாட்சியாக இருக்கிறது அந்தநாள்.

புதுவருடக் கொண்டாட்டங்களுக்கான முனைப்பில் கிடந்தனர் திருமலைவாழ் தமிழ் மக்கள். அப்பொழுதுதான் அந்தக்கொடூரங்கள் அரங்கேறின. 2006 ஏப்பிரல் 12ஆம் திகதி அன்று , மாலை 3.45 மணியளவில் திருமலை நகரின் மத்தியசந்தையின் பின்வாயில் பகுதியில் ஒரு குண்டு வடிக்கிறது. அதில் 8 தமிழ்மக்கள் உட்பட 10பேர் காயமடைகின்றனர். அதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த சிங்களக் காடையர்கள் கூட்டம் சிலமணி நேரம் வெறித்தாண்டவமாடினர். அந்த வெறித்தாண்டவம் பற்றிய சிலரது நினைவுகள்தாம் இங்குப் பதிவாகின்றன.

இத்தாக்குதல்களில் சிங்களவர் காட்டிய வேகத்தைப் பார்த்தால் முன்கூட்டியே எல்லாம் தயார்நிலையில் இருந்திருக்கிறது போல்தான் தெரிகிறது. சரியாக 4.20 மணியளவில் சிங்களக்காடையர்கள் கடையில் பொருட்கள் வாங்கிக்கொண்டிருந்த தமிழ்மக்கள் மீது குண்டு வீச்சை நடாத்தினர். அதில் 4 தமிழர்கள் கொல்லப்பட்டும் 12பேர் காயமடைந்தனர். தொடர்ந்து மத்திய வீதியில்புகுந்த காடையர்கள் கூட்டம் கத்திகள், இரும்புக்கம்பிகள், பொல்லுகள் சகிதம் தமிழ்மக்கள் மீது தாக்குதல் தொடுத்தனர். அதேவேளை நகரின் பல பகுதிகளிலும் தமிழ் மக்கள் தாக்கப்படுகின்றனர். லிங்கநகர் பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் நின்றுகொண்டிருந்த ஒருவர் வெட்டிக்கொல்லப்பட்டு எரிக்கப்படுகின்றார். அனுராதபுரச்சந்தியில் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்த தமிழர்கள் இருவர் வெட்டிக்கொல்லப்பட்டு எரிக்கப்படுகின்றனர். இதனை அப்பகுதி மக்கள் பலர் பார்த்திருக்கின்றனர்.

இவையனைத்தும் சிறிலங்காவின் முப்படையினரின் பார்வையிலும் ஆசியிலுமே நடந்தேறின. முதல்நாள் வெறித்தாக்குதல்களில் திருப்தியடையாத சிங்களக் காடையர் கூட்டம் மறுநாள் புதுவருடதினத்தன்று தமிழ்மக்கள் வாழும் கிராமங்கள் மீது தமது தாக்குதல்களை நடாத்தியது. தமிழ் மக்களின் வீடுகளை எரித்து சொத்துக்களையும் கொள்ளையடித்தனர். இதுவும் பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்புடனேயே நடந்துமுடிந்தது. இதன்போது கன்னியா சிவயோகபுரம் நடேசர்கோயில் சிங்களக் காடையர்களால் எரிக்கப்பட்டிருக்கிறது.
"ஜயா தம்பி இதை எரிக்காதியுங்கோ" என்று மன்றாடிய 60வயது வயோதிபத் தாயார் ஒருவரை வெட்டிக்கொன்றுவிட்டே இக்கோயிலை எரித்திருக்கின்றனர் காடையர்கள். சிங்களக்காடையர்களின் கோரத்தாண்டவத்தின்போது தமிழ்பெண்கள் சித்திரவதைக்கு உள்ளாகியிருக்கின்றனர். சிங்களக்காடையர்கள் இறந்தவர்களின் நகைகளையும் ஒன்று விடாமல் எடுத்திருக்கின்றனர். இதன்போது தோடுகளை எடுப்பதற்காகக் காதுகளை வெட்டியிருக்கின்றனர்.
இவைகள் பற்றி ஆதங்கப்பட்ட திருகோணமலையின் கல்விமான் ஒருவர்
"இந்த நூற்றாண்டில் இப்படிக் கொடுமைசெய்தவர்கள் சிங்களவர்களாகவும் இப்படியொரு கொடுமைக்கு ஆளாகியவர்கள் தமிழ்மக்களாகவும்தான் இருக்கமுடியும்" என்றார்.

இந்தக்கொடுமைகளில் அகப்பட்டு தப்பிப்பிழைத்தவர்கள் சிலர் தங்களது வேதனைகளையும் ஆதங்கத்தினையும் இப்படிக் கொட்டித்தீர்த்தனர். மேற்படி நடேசர் கோயிலில் வெட்டிக்கொல்லப்பட்ட தாயாரின் மருமகனான திரு.ரவீந்திரன் தனது அனுபவங்களை இவ்வாறு விபரித்தார்:

"புதுவருசத்தண்டு சொந்தக்காரர் எல்லோருமாகச்சேர்ந்து எங்கடவீட்டில் சந்தோசமாகச் சமைத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். நாலு நாலரை மணியிருக்கும், சிங்கள இளைஞன் ஒருவன் காணாமல்போய்விட்டதாகச் செய்திகள் வந்தது. அந்தச்செய்தி வந்து 10 நிமிடங்களிருக்கும் எங்கடவீட்டுக்கு முன் பக்கத்தில் இருந்த வீடுகள் எரியுது. கூடவே ஐயோ அம்மா என்ற அவலக்குரல்களும் கேட்குது. உயிரைக்காப்பாற்றிக் கொண்டால் போதுமென்டு பொருட்கள் எல்லாத்தையும்விட்டிட்டு வளவுக்குப் பின்னாலிருந்த வயலுக்கால ஓடினம். என்ர மாமி வயதானவர்.அண்டைக்கு கோயில்ல பஜனை இருக்குதெண்டு உயிர் போனாலும் வரமாட்டன் எண்டு சொல்லிட்டார். என்ர கண்ணால பார்த்தனான். சிங்களக்காடையர்கள் கத்திகள், பொல்லுகளோட ஓடி வந்தாங்கள். பொலிஸ் அல்லது ஆமி நினைச்சிருந்தால் இதையெல்லாம்தடுத்திருக்கலாம். காலுக்கு கீழ் சுட்டிருந்தால் ஓடியிருப்பாங்கள். ஆனால் அவங்கள் காடையர்களின் காடைத்தனங்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தாங்கள். இதேநேரம் தமிழனெண்டால் சுட்டுவிட்டு கலவரத்தை அடக்கச் சுட்டம் எண்டிருப்பாங்கள். இனி ஒரே வழி ஆயுதத்தை எடுத்துக் கொண்டு தலைவரோட போறது தான்".

மூன்று பிள்ளைகளின்தாயான கிருபாகரன்- யோகராணி கோரமான தனது அனுபவங்கள்குறித்து இவ்வாறு குறிப்பிட்டார்.
"வீட்டில் நாங்கள் நித்திரை. திடீரென்டு எங்கட வீட்டைச் சுற்றியிருந்த வீடுகள் எல்லாம் எரியுது. ஒரே புகைமண்டலம் எங்கட நடேசர்
கோயிலைப் பார்த்தால் அங்கேயும் புகைமண்டலம். எல்லாத்தையும் பொலிஸ் பாத்துக்கொண்டு தானிருந்தது. அவங்கள விட்டுப்போட்டு பயத்தில ஓடிவந்த எங்கள வீட்ட போகச் சொல்லியது பொலிஸ். இப்ப எங்களிட்ட ஒன்றுமில்ல எல்லாத்தையும் இழந்து நிக்கிறம்
"
என்றார் அவர்.

இதன்போது பாதிக்கப்பட்ட சந்திரன் ஜெகநாதன் என்பவர் கூறும் போது,
"நான் என்ர கண்ணால பாத்தனான். ஊர்க்காவல்படையும் மகிந்தபுரம் சிங்களவரும் டயரைக் கொளுத்திக்கொண்டு வந்தாங்கள். நான்
தனியாளாத்தான் இங்க இருக்கிறன். வாய்க்கால் கரையோட நிண்டு பார்த்தனான் எனக்கு நல்லாத் தெரியும். மகிந்தபுரத்தைச் சேர்ந்த ஆட்டோக்காரங்கள், அந்தப் பகுதியைச் சேர்ந்த ஊர்காவல் படையைச் சேர்ந்தவங்கள் முகத்தைக் கறுப்புத்துணியால் கட்டிக்கொண்டு
வந்த வங்கள், சிலர் ஆமியின்ர சேட் போட்டிருந்தாங்கள். கத்திகள் பொல்லுகளோட வந்தாங்கள். எங்கட பகுதியிலிருந்த 42 வீடுகளை எரிச்சும், எங்கட சாமாங்களையெல்லாம் கொள்ளையடிச்சிட்டுப் போனாங்கள் இவங்களுக்குப் பாதுகாப்பாக மோட்டார் சைக்கிள் குறுப் முன்னால் சென்றது
"


இது பற்றி ஓர் ஆசிரியை இவ்வாறு கூறினார். திருகோணமலை மத்தியசந்தை குண்டு வெடிப்புச் சம்பவம் நடைபெற்ற வீதியைச்சேர்ந்த அந்த ஆசிரியை,
"நாங்கள் வாயில்கதவை மூடிக்கொண்டு இருந்தம். பெரும் சத்தத்தோட சிங்களக் காடையர் கூட்டம் எங்கட வீட்டுக் கதவைத் தட்டி உதைத்தனர். எங்கள் வளவிற்கு மதில் இல்லாததால் நாங்கள் தப்பினம். எங்கட வீட்டிற்கு முன்னால் இருந்த வீடொன்றையும் எரித்தனர். வெளியிலிருந்துதான் பல காடையர்கள் கொண்டுவரப்பட்டிருகின்றனர். யாரோ ஒருவர் இது தமிழருடையது என அடையாளம் காட்ட ஒவ்வொரு கடையாக எரிக்கப்பட்டிருக்கிறது. இதில எல்லாச் சிங்களவரும் பங்கு கொண்டார்கள் எண்டுதான் நான் சொல்லுவன். இங்கயிருக்கிற சிங்களவர்கள் நினைச்சிருந்தால் நாங்கள் இஞ்ச ஒண்டா இருக்கிறம் இஞ்ச நீங்கள் இப்படியெல்லாம் செய்ய நாங்கள் அனுமதிக்கமாட்டம் எண்டு சொல்லித் தடுத்திருக்கலாம். சிங்களவர்கள் எப்போதும் எங்கள அழிக்கத்தான் காத்துக் கொண்டிருக்கிறாங்கள். அவங்கள் திருந்தப்போறதில்ல"
என்று ஆதங்கப்பட்டார்.

சிங்களக் காடையர்களுக்குப் பயந்துபாடசாலைகளில் தஞ்சமடைந்த மக்களையும் சோதனை என்ற பெயரில் பாதுகாப்புப்படையினர் கொடுமைப்படுத்தியிருக்கின்றனர். இது பற்றி கருத்துத் தெரிவித்த ஒரு தன்னார்வ நிறுவனப் பிரதிநிதி தங்கட வேலையெல்லாம் விழலுக்கு இறைத்த நீர் போலத்தான் என ஆதங்கப்பட்டார்.
இந்த நாலுவருட காலமாக நாங்கள் நல்லிணக்கம், ஜக்கியம், மனிதப்பாதுகாப்பு என்றெல்லாம் காசச்செலவளித்ததுதான் மிச்சம். ஜ.நா அகதி மக்களின் உரிமையெல்லாம் பேசிச்சு. நாங்களும் பேசினம். ஆனால் அகதி முகாமிலிருக்கும் மக்களையே சந்தேகத்தின்பேரில் ராணுவம் கைது செய்கிறது. விசாரணைக்கு என அழைத்துக்கொண்டு செல்கிறது. அவர்களது அகதி உரிமைவாதங்களின் அர்த்தம் என்ன?"

இவ்வாறு இந்தக் கொடூர இன அழித்தொழிப்பு தொடர்பில் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரிடமும் ஒவ்வொருவிதமான கதையிருக்கிறது. திருமலை இன்று அச்சம் கலந்த அமைதியுடன் தன் மண்ணின் கீழே கொதித்துக்கொண்டிருக்கும் சிங்கள இனவாத எரிமலைக்குழம்பின் மேல் உள்ளது.
***********************

தொகுப்பு: கதிரவன்.

நன்றி விடுதலைப்புலிகள்:சித்திரை-வைகாசி-2006.

(எழுத்துரு மாற்றியபோது வந்த எழுத்துப்பிழைகளை இயன்றவரை திருத்தியுள்ளேன்.)

Labels: , ,


Get your own calendar

Links