« Home | அணுவாயுதப் பரிசோதனை அரசியல் » | சிங்களவரிடமுள்ள இனப்பிரச்சினைத் தீர்வு » | பேச்சுவார்த்தையும் பேய்க்காட்டலும் » | புலிகளின் பலம் மக்கள் சக்தியே » | ரணில் - மகிந்த கூட்டு ஒப்பந்தம் » | ஈழத்தமிழரின் நேச சக்திகள் » | ஆனந்தசங்கரிக்கு யுனெஸ்கோ வருது கிடைத்தது எப்படி? » | இந்தியாவின் நோக்கம் என்ன? » | மகிந்தவின் முகங்கள் » | மறுபக்கத்தின் நேர்முக தரிசனம் »

இராணுவப்பிடியில் சிறிலங்கா

மறுபக்கம் - கோகர்ணன்

தேசிய இனப் பிரச்சினையைத் தீர்ப்பதில் இந்த அரசாங்கத்திற்கோ இதற்கு முந்திய அரசாங்கம் எதற்குமோ அக்கறை இருந்ததா இல்லையா என்பது இப்போது காலங் கடந்த கேள்வி. அக்கறை இருந்தாலும் கூட, அரசாங்கத்தால் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியுமாமென்பது கூடப் பொருத்தமான கேள்வி. இன்று நடக்கிற போர் யாரால், யாருடைய நலன் கருதி நடக்கிறது என்பதை நாம் கவனிப்பிற்கு எடுப்போமானால் போர் ஏன் முடிவின்றித் தொடர்கின்றது என்பதற்கும் தேசிய இனப் பிரச்சினை ஏன் தீர்வின்றி இழுபட்டுக் கொண்டு போகிறது என்பதும் விளங்கும்.
கடந்த சில மாதங்களில் நடந்த காய் நகர்த்தல்கள் கூட வெறுமனே உள்ளூர்ப் பாராளுமன்ற அரசியல் தொடர்பானவையாவென்று சிந்திக்க வேண்டியுள்ளது. விடுதலைப் புலிகளைப் போரில் தோற்கடிக்கிறதற்குக் கொடுக்க வேண்டிய விலையை மனித உயிர்களில் அரசாங்கம் கணக்கெடுக்காவிட்டாலும் நாட்டின் பொருளாதாரம் படுவேகமாக சரிவை எதிர்நோக்குகிறது. அதனால் ஏற்படக்கூடிய அதிருப்தி, அரசியல் உறுதியின்மைக்கு வழி செய்யும். விடுதலைப் புலிகளைத் தாக்கி பலவீனப்படுத்தி முறியடிப்பது மட்டுமே அரசாங்கத்தின் இப்போதைய நோக்கம் அல்ல. அதனுடைய விடயங்கள் சிக்கலானவை.

அரசாங்கம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பாரிய சமூகப் பொருளியல் பிரச்சினைகளை உருவாக்குகிற நோக்கத்துடன் செயற்படுகிறது. அரசாங்கம் தான் திட்டமிட்டே உருவாக்குகிற ஒரு மனிதாபிமானப் பிரச்சினைக்கான பழியை விடுதலைப் புலிகள் மீது சுமத்துகிறது. பல்வேறு காரணங்களுக்காகப் பேரினவாதிகளுடன் ஒத்துழைக்கவும் தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பு வேலைகளை நியாயப்படுத்தவும் அரசாங்கப் படைகளுடன் சேர்ந்து நின்று விடுதலைப் புலிகளை எதிர்க்கிற போரில் தமிழ் மக்களை இலக்கு வைக்கும் முன்னாள் தமிழீழ விடுதலை சக்திகள் ஆயத்தமாக உள்ளன. எனினும், இவற்றை விட முக்கியமான சக்திகள் தேசிய இனப்பிரச்சினையின் தீர்வுக்குத் தடையாகவும் போரைத் தொடர்வதற்குத் தூண்டுதலாகவும் உள்ளன.

ஜனாதிபதியின் முக்கியமான ஆலோசகர்கள் இருவர், அவரது சகோதரர்கள். இருவரும் அமெரிக்கப் பிரஜைகள். இருவருமே இந்த நாட்டிற்கு வெளியே நீண்ட காலம் வாழ்ந்து புதிய ஜனாதிபதி பதவியேற்க முன்பு தேர்தலில் உதவி செய்ய வந்து பின்பு ஆலோசகர்களானவர்கள். பாதுகாப்பு ஆலோசகரான கோத்தபாய ராஜபக்ஷ படைத்தலைமையகத்துக்கு வழிகாட்டுவாரா அல்லது படைத்தலைவர்கள் ஏற்கனவே எடுத்த முடிவுகளை நியாயப்படுத்துவாரா என்பதை உங்களது ஊகத்துக்கே விட்டு விடுகிறேன். போர், போரை நடத்துகிறவர்களின் பொறுப்பில் விடப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பு என்ற பேரில் மேலும் மேலும் அதிகாரங்கள் முப்படையினரின் கைகளிலும் பொலிஸாரிடமும் குவிகின்றன. ஆனால், நாட்டின் பாதுகாப்பை யாராலும் எவ்வகையிலும் உறுதிப்படுத்த இயலவில்லை. எனினும், முப்படையினரின் ஆதரவின்றி இந்நாட்டின் எந்த அரசாங்கமும் சர்வ வல்லமையுள்ள ஜனாதிபதியும் தமது பதவியில் சில நாட்கள் கூட நிலைக்க இயலாது.

இந்த நாட்டில் இன்னமும் போர் நிறுத்தம் நடைமுறையில் உள்ளதுபோல், இன்னமும் பாராளுமன்ற அரசாங்கமே அதிகாரத்தில் உள்ளது. பிரகடனஞ் செய்யப்படாத முழுமையான போர் போல பிரகடனஞ் செய்யப்படாத ஒரு இராணுவ அரசாங்கம் இந்த நாட்டில் உருவாகிற அபாயம் பற்றி நாம் எச்சரிக்கையாயிருக்க வேண்டும். நூற்றுக்கணக்கான அரசாங்கப் படையினரின் உயிர்கள் ஒரே சமரில் பறிக்கப்பட்ட நிகழ்வுகள் பல நடத்திருக்கின்றன. ஆயுதக் கொள்வனவுகளிலும் பல்வேறு இறக்குமதிகளிலும் ஒப்பந்தங்களிலும் நடந்த ஊழல்கள் எத்தனையோ ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. முன்னொரு நாட்டில் அல்லது இந்த நாட்டின் இன்னொரு காலத்தில் இவை எத்தனையோ பதவிகட்கு புதிய முகங்களைக் கொண்டு வந்திருக்கும். எத்தனையோ பேரைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்திச் சிறையில் தள்ளியிருக்கும். அப்படி எதுவும் நடக்கவில்லை. ஏன்? இந்த நாட்டில் உண்மையான அதிகாரம் யாருடைய கையில் உள்ளதென்பது பற்றிய கேள்வி எழ வேண்டாமா?

அமெரிக்காவும் அதன் கூட்டணிகளான ஐரோப்பிய முதலாளிய நாடுகளும் ஜப்பானும் ஒரு புறம் தமக்குள் போட்டியிடுகின்றன. இன்னொரு புறம், அவை மூன்றாமுலக நாடுகள் மீதான தமது ஆதிக்க நோக்கங்கட்காக ஒத்துழைக்கின்றன. அவை நம்மைப் பிரித்தாளவல்லன. நம்மால் அவற்றை ஒன்றுக்கொன்று எதிராக மோதவிட்டுப் பலனடைய முடியாது. அப்படி நினைப்போமானால் நாம்தான் முட்டாள்களாக்கப்படுவோம்.

கருணா அணியின் பிரிவை ஏன் அமெரிக்கா முன்னின்று அரங்கேற்றியது? 2004 டிசம்பர் அனர்த்தத்தின் பின்பு நிவாரணப் பணிகட்காக மற்ற நாடுகள் மருத்துவர்களையும் தொழில் நிபுணர்களையும் அனுப்பின. அமெரிக்கா தனது மரைன்ஸ் எனப்படும் கடல்வழி இராணுவப்படையினரை அனுப்பியது நிவாரண வேலைகள் முடிந்த பின்பும் அமெரிக்க முகவர்கள் பலர் தொடர்ந்தும் வடக்கு, கிழக்கில் தங்கியிருந்தனர். அவர்கள் விடுதலைப் புலிகளின் படைவலிமை தொடர்பான தகவல்களையும் குறிப்பாக 26 டிசம்பரில் ஏற்பட்ட இழப்புகளை பற்றித் தகவல்களைத் திரட்டியிருக்க மாட்டார்களா? அமெரிக்காவும் இலங்கை அரசாங்கமும் இப்போது இராணுவ அடிப்படையில் ஒத்துழைக்கின்றன. சில வாரங்கள் முன்பு இரண்டாம் ஜெனீவா பேச்சுக்களுக்கான ஆயத்தங்கள் நடந்த காலத்தில் அமெரிக்கக் கடற்படையுடனான சில கூட்டு நடவடிக்கைகள் அம்பாந்தோட்டைக்கு அப்பாலான கடற்பகுதியில் நடைபெற்றன. அது பற்றி தமது பாராளுமன்ற இடதுசாரிகட்கு கவலையில்லை. ஒப்புக்காகவேனும் அவர்கள் கவலை தெரிவிக்கவில்லை. பேரினவாத ஜே.வி.பி.யின் ஏகாதிபத்திய எதிர்ப்பு முணுமுணுப்புக்கூட எழவில்லை.

அமெரிக்கா விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் அரசாங்கத்தின் தரப்பில் நிற்கும் எனவும் விடுதலைப் புலிகளை முறியடித்து இலங்கையின் ஐக்கியத்தைப் பேண அமெரிக்கா உதவி தேவையெனவும் சகல பேரினவாதக் கட்சிகளும் நம்புகின்றன. அந்த நம்பிக்கைக்கு அமெரிக்க அதிகார நிறுவனம் தீனி போடுகிறது. நேபாளத்தில் மாஓவாதிகளை ஓரங்கட்டுவதற்கு உதவுகிற பேரில் நேபாள இராணுவத்தின் மூலமும் சில அரசியல் தலைவர்கள் மூலமும் அமெரிக்கா கடந்த சில ஆண்டுகளாகத் தனது குறுக்கீட்டை வலுப்படுத்தி வந்துள்ளது. அதுபோலவே இங்கும் விடுதலைப் புலிகளை முறியடிக்க உதவுகிற பேரில் அமெரிக்கா இராணுவ அடிப்படையில் தனது ஆதிக்கத்திற்கு அத்திவாரம் இட்டுள்ளது.

இரண்டு நாடுகளிலும் அமெரிக்கக் குறுக்கீடு இந்தியாவின் பிராந்திய மேலாதிக்க நோக்கங்கட்குச் சிறிது இடைஞ்சலாகவே இருந்தாலும், அமெரிக்காவின் தயவுக்காக ஈரானுக்குத் துரோகம் செய்த இந்திய ஆட்சியாளர்கள் அமெரிக்கா இந்தியாவின் அரசியல், பொருளாதார மேலாதிக்க நோங்கங்கட்கு அதிகம் கேடு விளைவிக்காத வரை இரண்டு நாடுகளிலும் அமெரிக்காவின் செயற்பாடுகள் பற்றிப் பொறுத்துதான் நடந்து கொள்வார்கள். 1977 தேர்தலின் பின்பு இலங்கை அமெரிக்கச் சார்பான அந்த கொள்கை ஒன்றைக் கடைப்பிடித்த போது இந்தியா இலங்கையின் உள் விவகாரங்களில் குறுக்கிட்ட விதத்துடன் இப்போதைய ஒதுக்கீட்டையும் அதன் விருத்தியையும் ஒப்பிட்டால் எதிர்மாறான பண்புகள் பல தெரியும்.

இந்திய சமாதானக் குழுத் தலைவரும் பிரபல பத்திரிகையாளருமான குல்தீப் நாயர் இந்தியா விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கி அமைதிக்கான முயற்சிகட்குப் பங்களிக்க வேண்டுமென்று சொல்லியிருப்பது பற்றிப் பல தமிழ்த் தேசியவாதிகள் உச்சி குளிர்ந்து போயுள்ளனர். குல்தீப் நாயர் இதுவரை ஈழத் தமிழருக்கு ஆதரவாகப் பேசியவரோ விடுதலைப் புலிகட்குச் சாதகமான கருத்துக்களை வெளியிட்டவரோ அல்ல. அவர் இந்திய அதிகார நிறுவனத்துக்கு மிகவும் நெருக்கமானவர். ஆனால், அவர் கொள்கைகளை வகுப்பவரல்லர்.

இந்திய அதிகார நிறுவனம் எப்படி செப்டெம்பர் மாதம் தமிழ் தேசியக் கூட்டணிப்பாராளுமன்ற உறுப்பினர்களை அழ அழச் செய்து, முடிவில் "தீராத விளையாட்டுப் பிள்ளைபோல" மக்களால் தெரிவு செய்யப்படாத ஒரு மூன்று கட்சித் கூட்டத்தின் தலையிலே பூச்சூட்டி விளையாடியது. விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம் இப்போதைக்கு நடப்பது என்பது ஐமிச்சம். நடந்தாலும் இந்தியா தமிழ் மக்களுக்கு நன்மையான முறையில் குறுக்கிடுவது அதைவிட ஐமிச்சம். வடக்கு, கிழக்கின் "மனிதாபிமான நெருக்கடி" வேண்டுமென்றே முற்றவிடப்படுகிறது. மனிதாபிமானத்தின் பேரில் ஏகாதிபத்தியம் பல்வேறு நாடுகளும் புகுந்து குட்டை குழப்பியுள்ளது. ஐ.நா. சபையின் கொடியின் கீழ் இக் குறுக்கீடு நிகழலாம். எனினும், அதன் முடிவில் தமிழ் மக்களின் தேசிய இன விடுதலைக்கான எழுச்சிக்கு ஆப்பு வைக்கப்படும். தமிழ் மக்கள் தமது அன்றாடத் தேவைகட்காக அந்நியரிடம் கைநீட்டி இறந்து வாழுகிற ஒரு நிலைக்கு ஒடுக்கப்படுவர். அதேவேளை, அமெரிக்கக் குறுக்கீடும் இலங்கை மீதான இராணுவ அரசியல் ஆதிக்கமும் மேலும் மேலும் வளர்த்தெடுக்கப்படும். இது தமிழர்கட்கு மட்டுமல்ல, முஸ்லிம்கட்கும் கெடுதலானது. ஏனெனில், அமெரிக்க மேலாதிக்கம் முஸ்லிம்களின் நண்பனல்ல. அதை விட முக்கியமாக அந்நிய ஆதிக்கத்தை வெறுக்கக் கூடிய அனைவருக்கும் தீயது. எனவே, முடிவில் சிங்கள மக்களும் பெரிதும் பாதிக்கப்படுவர்.

ஏ-9 பாதையைத் திறக்கிற பிரச்சினை மனிதாபிமானப் பிரச்சினை மட்டுமல்ல, தமிழ் மக்களின் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலான முடிவு காணும் அடிப்படையான பிரச்சினை. தமிழ் மக்களின் போராட்டம் மீண்டும் சுயாதீனமான பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நிலைக்கு வந்துள்ளது. பேரினவாதிகளின் நல்லெண்ணம் பற்றிக் கடந்த ஒரு வருடத்தில் நிறையக் கற்றிருக்கிறோம். தமிழ் மக்கள் மேலாதிக்கம் சக்திகளின் நல்லெண்ணம் பற்றிப் பட்டுத்தான் அறிய வேண்டிய நிலை வரக்கூடாது.

_________________________________
நன்றி: ஞாயிறு தினக்குரல் November 12, 2006


_____________________________________________

Labels:

நல்ல கட்டுரை.
பதிந்ததற்கு நன்றி.

வைகோ பிர்பாகரனின் தமிழக கொள்கை பரப்பு செயளாளர், வைக்கோ அவரின் கடைமை செய்கிறார், தமிழகத்தில் ஈழ மக்களுக்கு ஒரு துளி கூட ஆதரவோ அனுதாபமோ கிடையாது.

வருகை தந்து கருத்துத் தெரிவித்தவர்களுக்கு நன்றி.

Post a Comment

Get your own calendar

Links