சு.ப.தமிழ்ச் செல்வனின் உரை.
பேச்சு மேசையில் நடந்த சுவாரசியமான சம்பவங்களையும், தமது தரப்பு நியாயங்களையும் தெளிவுபடுத்துகிறார்.
தமிழ்ப்பதிவுகள்
நன்றி: தமிழ்நாதம்.
Labels: ஈழ அரசியல், உரை
Friday, February 24, 2006
ஜெனீவாப் பேச்சுப் பற்றி தமிழ்ச்செல்வன்
நன்றி: தமிழ்நாதம்.
தமிழ்ப்பதிவுகள்
Thursday, February 16, 2006
திருமாவளவனின் உரை
தமிழ்ப்பதிவுகள்
Labels: ஆதரவாளர், ஈழ அரசியல், உரை
Monday, February 13, 2006
ஹமாஸ் வெற்றி பற்றி விடுதலைப்புலிகள்
"உலகின் மனச்சாட்சியை உலுக்கும் வகையில் உலகத்தால் பயங்கரவாத இயக்கம் என தடை செய்யப்பட்ட ஹமாஸ் இயக்கத்திடம் பலஸ்தீன அரசாங்கப் பொறுப்பை பலஸ்தீன மக்கள் ஒப்படைத்துள்ளமை மகிழ்ச்சிக்குரியது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய க.வே.பாலகுமாரன் தெரிவித்துள்ளார்.
"விடுதலைப் புலிகளின் வானொலியான புலிகளின் குரல் வானொலியில் கடந்த சனிக்கிழமை (04.02.06) அரசியல் அரங்கம் பகுதியில் இது தொடர்பாக விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்:"உலகையே மிகுந்த பரபரப்புக்கும் எதிர்பார்ப்புக்கும் உள்ளாக்கி இருக்கக் கூடிய- உலகத்தை பாரிய இக்கட்டில் சிக்கிவிட்டிருக்கக் கூடிய ஒரு மாற்றம் குறித்து உங்களோடு பேசுகிறோம்.
"பலஸ்தீன அதிகார சபைக்கான தேர்தலில் ஹமாசினது வெற்றிதான் இன்று மிக பரபரப்பாக பேசப்படுகிற செய்தியாக இருக்கிறது.
"கடந்த மே மாதம் நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தல்களில் ஹமாஸ் இயக்கமானது மூன்றில் ஒரு பங்கு சபைகளைத் தன்வசம் கைப்பற்றிக் கொண்டது.
"அப்போதே ஹமாசின் எதிர்கால வெற்றி பற்றி எதிர்கூறப்பட்டாலும் ஹமாசே எதிர்பார்க்காதது என்று அந்த இயக்கம் சொல்கிற வகையில் பாரிய வெற்றி பெற்றிருக்கிறது.
"பலஸ்தீன நாடாளுமன்றத் தேர்தலில் 132 ஆசனங்களில் 80 ஆசனங்களை ஹமாஸ் கைப்பற்றியிருப்பது உலகத்தில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. எவரும் எதிர்பார்க்காத ஒரு மிகப் பெரிய கேள்விக்குறியை ஹமாஸ் எழுப்பியிருக்கிறது.
"உலகத்தையே குறிப்பாக ஆக்கிரமிப்பாளர்களை அவர்களது கடைசி ஆயுதங்களை- தந்திரோபாயங்களை எல்லாம் மிகுந்த இக்கட்டுக்கும் சிக்கலுக்கும் உள்ளாக்கியிருக்கிற ஹமாசின் வெற்றி குறித்து நாம் விரிவாக இன்று பேசுகிறோம்.
"ஹமாஸ் இயக்கத்தின் வெற்றியானது முற்றிலுமாக ஒரு புதிய விழிப்புணர்வுள்ள அமைப்பை சர்வதேசத்துக்குள் பிரதிநிதித்துவம் செய்கிறது. குறிப்பாக மிகப் பழைய அமைப்பான தாய் அமைப்பான பத்தா அமைப்பை மறுத்து- அதன் மூல உபாயத்தை முற்றாக மறுத்து ஒரு புதிய நிகழ்ச்சித் திட்டத்தின் அடிப்படையில் ஹமாஸ் எழுந்திருக்கிறது.
"இன்றைய அரபு உலகின் யதார்த்தமே ஹமாஸ் வெற்றிகளுக்கூடாக பிரதிபதிலிப்பதாக உலகம் கருதுகிறது. இந்தப் புதிய நிலைமைகளுக்கு ஏற்றவாறு உலகம் தன்னை தகவமைத்துக் கொள்ள வேண்டிய இக்கட்டு ஏற்பட்டுள்ளது.
"இஸ்ரேலில் வருகிற மார்ச் மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இஸ்ரேலில் வாக்களிக்க உள்ள மக்கள் கூட இன்று மிகுந்த இக்கட்டுக்குள் சிக்கியுள்ளனர். அப்படியான ஒரு நெருக்கடியை ஹமாசின் இந்த வெற்றி ஏற்படுத்தியிருக்கிறது.
"ஹமாஸ் என்ற சொல்லின் கருத்து தீரமும் துணிவும் என்பதோடு இஸ்லாமிய தேசியப் பற்றுணர்வைத் தாங்கிப் பிடித்தலை அந்தச் சொல் வெளிப்படுத்துகிறது.
"ஹமாஸ் இயக்கத்தின் தோற்றம் மிக நீண்ட வரலாற்றைக் கொண்டது.
"1920-களில் ஏற்பட்ட முஸ்லிம் சகோதரத்துவம் என்ற இஸ்லாமிய சிந்தனையின் அடிப்படையில் ஹமாஸ் தோற்றம் பெற்றது.
"அதனது விளைவாக 1987 களில் காசா போன்ற இடங்களில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புகளின் கிளையாக இந்த ஹமாஸ் உருவெடுத்தது.
"சேக் முகமது யாசின் மற்றும் முகமது அல் சகார் ஆகியோரால் இந்த இயக்கம் தோன்றியது.
"2004 ஆம் ஆண்டு இஸ்ரேலிய குண்டு வீச்சினால் முகமது யாசின் கொல்லப்பட்டார். சகார் தலைமையில் வளர்ந்த ஹமாஸ் பலஸ்தீனத்தின் பிரதமராக இன்று கருதப்படுகிற இஸ்மாயில் ஹனியா என்பவரது மூலம் உலகில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டுள்ளது.
"ஹமாசின் எழுச்சித் திட்டம் மிகவும் வித்தியாசமானது. ஒரு தீவிரவாத இயக்கம் போல ஹமாஸ் தோற்றம் காட்டினாலும் கூட அவர்களுடைய நிருவாகக் கட்டமைப்பு, மக்கள் பணிகள் என்பது உலகத்தையே பெருத்த அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
ஹமாஸ் இயக்கத்தின் தலைவர் மொகமட் அல் சஹார்
"கடந்த வருடம் நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்குப் பின்னால் அவர்களது நிர்வாகம் நடைபெற்ற விதம் அந்த மக்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பை இன்று ஏற்படுத்தியிருக்கிறது. ஊழலற்ற, ஒழுங்கான மக்கள் நலன் தழுவிய அவர்களது அற்புதமான திட்டங்கள், அடிமட்ட மக்களைக் கவனித்த விதங்கள், சாதாரண மக்களின் வறுமை நிலையைப் போக்குவதற்கும், அவர்களது மணவாழ்க்கை, குழந்தைப் பேறு, மருத்துவமனைகள், கல்விச் சாலைகள் என பலவற்றுக்கூடாக சமூகத்தோடு இணைந்து அவர்கள் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டார்கள். அதுதான் இன்றைக்கு அவர்களுக்குப் பெரிய வெற்றியை தேடித்தந்திருக்கிறது.
"அராபத் தலைமையிலனா அல்பத்தா அமைப்பு கடந்த 10 ஆண்டுகளாக பலஸ்தீன அதிகார சபையின் நிர்வாகமானது ஊழல்கள் நிறைந்து, மக்கள் நலனில் அக்கறையற்று குறிப்பிட்ட வர்த்தகத்தின் நலன்கள் மட்டும் பேணப்பட்ட ஒரு அமைப்பாக மாறியது.
"அந்த அமைப்புக்கு மக்கள் எதிர்ப்புக் காட்டியதால் ஹமாஸ் வென்றுள்ளது. ஆகவே ஹமாசின் வெற்றியானது புதிய தோற்றமாகக் கருதப்படுகிறது.
"சேக் முகமது யாசின் தலைமையில் உருவான ஹமாஸ் இயக்கமானது முஸ்லிம் அடிப்படைச் சிந்தனைகளை மக்களிடத்தில் முன்வைத்து அராபத்தின் பத்தாவுக்கு மாற்றாக இயங்கி வந்தது.
பலஸ்தீன பிரதமராக தெரிவு செய்யப்படவுள்ள இஸ்மாயில் ஹனியா
"பேச்சுவார்த்தையை முற்றாக நிராகரித்தது இஸ்ரேலின் செயற்பாட்டை முற்றாக வெறுத்து 1948 ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த பலஸ்தீனத் தாயகத்தை மீட்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தது.
"மத்திய கிழக்கிலிருந்து இஸ்ரேலின் யோர்டான் நதி வரை பரந்திருக்கக் கூடிய பலஸ்தீனத் தாயகத்தை- காசா மேற்குக் கரை, ஜெருசலம் போன்றவற்றை உள்ளடக்கிய அந்தத் தாயகத்தை அவர்கள் கனவாகக் கொண்டிருந்தார்கள்.
"அதேபோல் ஒஸ்லோ உடன்பாடு, பலஸ்தீன அதிகார சபை ஆகியவற்றையும் ஹமாஸ் ஏற்றுக்கொள்ளவில்லை.
"இஸ்ரேலில் உள்ள அனைத்து மக்களும் ஆக்கிரமிப்பாளர்கள் என்பதுதான் ஹமாசின் நிலைப்பாடு. ஏனெனில் அவர்கள் பலஸ்தீனத் தாயகத்தை ஆக்கிரமித்துள்ளனர் என்ற அடிப்படையில் ஹமாஸ் செயற்பட்டது.
"அது ஒரு தீவிரமான அமைப்பான தோற்றம் பெற்றார்கள். அதனது நிதி மூலமும் உலகம் முழுமைக்கும் பரந்து விரிந்திருந்தது. தங்களது நிதியை நன்றாகக் கணக்கிட்டு மக்களுகாகப் பயன்படுத்தினார்கள்.
"இந்த நிலைப்பாடு மிக அதிசயமான நிலைப்பாடு.
"1980-களில் அல்பத்தாவின் வளர்ச்சியைக் கண்டு மனம் பொறுக்காத இஸ்ரேலியர்கள் இது போன்ற தீவிரமான இயக்கத்திற்கு மறைமுகமான ஆதரவு கொடுத்ததை நாம் அறிவோம்.
"அல்பத்தாவின் மிதவாதப் போக்கையே செரிமானிக்க முடியாத இஸ்ரேலால் ஹமாசின் இந்த தீவிரவத்தன்மை எப்படி எதிர்கொள்ளப்படும் என்ற கேள்வி இன்று எழுந்துள்ளது.
"ஹமாசின் தோற்றம் என்பது மத்திய கிழக்கில் ஒரு உண்மையான அமைதியைத் தேடிக் கொள்ள முடியாத இயலாமையை இன்று வெளிப்படுத்தியிருக்கிறது என்றுதான் கருதுகிறார்கள்.
"பத்தா அமைப்பின் அழிவு- தலைமையின் சீரழிவாகவும் கருதப்படும் நிலையில் ஹமாசின் தோற்றமானது இன்று பல முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளது.
"எந்த ஜனநாயக அமைப்பை நம்பி- எந்த அல்பத்தாவின் செயற்பாட்டை நம்பி பலஸ்தீன அதிகார சபையைக் கொடுக்க உலகம் முன்வந்ததோ அதே சபையை அவர்கள் சொல்லுகிற ஜனநாயக வழிமுறைகளுக்கூடாகவே ஹமாஸ் கைப்பற்றியிருப்பது இந்த உலகத்துக்குப் பெரிய அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.
"பலஸ்தீன அதிகார சபையினது மிகப் பெரும் வருமானங்கள் அமெரிக்காவினாலும் ஐரோப்பாவாலும் வழங்கப்படுகின்றன.
"வருடாந்தம் 400 மில்லியன் டொலரை அமெரிக்காவும் 300 மில்லியன் டொலரை ஐரோப்பிய ஒன்றியமும் இஸ்ரேலியத் தரப்பிலிருந்து வரிகள் என்கிற வகையிலுமாக பலஸ்தீன அதிகார சபை இயங்கியது.
"இந்த நிதியை இன்று கொடுப்பார்களா? இல்லையா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. அப்படி அளிக்காதுவிட்டால் முழு பலஸ்தீன மக்களையும் பழிவாங்கியதாகும். இப்படியான மிகப் பெரிய இக்கட்டில் சிக்கியிருக்கிற உலகம் என்ன முடிவை மேற்கொள்ளப் போகிறது என்பதை அனைவரும் கவனமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
"ஏனெனில் ஹமாசின் இந்த வெற்றியானது உலக நாடுகளின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு புதிய பரிமாணத்தைப் புகுத்தியுள்ளது.
"பயங்கரவாத இயக்கம்- தீவிரவாத இயக்கம்- மக்கள் நலன் விரும்பாத இயக்கம்- மக்களிடமிருந்து அன்னியப்பட்ட இயக்கம் என்று எந்த இயக்கத்தைச் சொன்னார்களோ அதே இயக்கம் மக்களினது ஏகோபித்த ஆதரவோடு தெரிவு செய்யப்படுகிற போது அவர்களது எல்லாக் கணக்கீடுகளும், எதிர்கூறல்களும் தவறாகிப் போகின்றன. இதனால் உலகம் இன்று திக்கித் திணறி நிற்கிறது.
"இந்த நிலையையே தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாகவும் உலகம் எதிர்கொள்கிறது என்பதையும் நாம் சுட்டிக்காட்டுகிறோம்.
"40 ஆண்டுகால அடிமை வாழ்வு- ஏறத்தாழ 20 ஆண்டுகால அல் பத்தாவின் பேச்சுவார்த்தைகள் மற்றும் கடைசி 10 ஆண்டுகால பலஸ்தீன அதிகார சபை எவையுமே பலஸ்தீன மக்களுக்கு எதையுமே பெற்றுக்கொடுக்கவில்லை என்பதை இன்று ஹமாசின் வெற்றி மூலம் உலகமே ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
"உலகம் முன்வைத்த இவற்றுக்கு மாற்றாக ஹமாஸ் முன்வைத்த தீவிரவாதத் தன்மைக்கு அப்பால்- ஹமாஸ் அண்மைக்காலமாக பாரிய முதிர்ச்சியைக் காட்டிக் கொண்டு வருகிறது.
"கடந்த மே மாதம் நடைபெற்ற உள்ளுராட்சித் தேர்தலுக்குப் பின்னால், ஹமாஸ் தன்னுடைய நிருவாகத்தை நடத்திய விதம், பலஸ்தீனிய மக்களோடு தன் உறவை அது பேணிய விதம், பலஸ்தீனத்தில் சமயச் சார்பற்ற முறையில் அது செயற்பட்ட தன்மை, இஸ்ரேலியத் தலைவர்களோடு தொடர்புகளைப் பேணிய விதம் எனப் பல வகைகளில் ஹமாஸ் ஒரு முதிர்ச்சியான இயக்கமாகத் தென்படுகிறது.
"அடுத்த பலஸ்தீனப் பிரதமராக வரப்போகிற இஸ்மாயில் ஹனியா அண்மையில்,
"நாங்கள் முதிர்ச்சியான இயக்கம். நாங்கள் வெறுமனே பலஸ்தீன மக்களோடு நிற்கவில்லை. மத்திய கிழக்கின் அரபு உலக மக்களோடு நாங்கள் நிற்கிறோம். அந்த மக்களினது கருத்துக்களை நாங்கள் கவனத்தில் கொள்கிறோம். அதுபோல சர்வதேசத்தின் கருத்துகளையும் கவனத்தில் கொள்ளத் தயாராக இருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
"இப்படியான ஒரு மென்மைப் போக்கை ஹமாஸ் வெளிப்படுத்தியிருப்பது ஒரு நல்ல அறிகுறி என்று அனைவரும் கருதுகின்றனர்.
"இத்தகைய நிலையில் உலகமும் அதனது எடுபிடியான இஸ்ரேலும் என்ன முடிவை எடுக்கப் போகிறார்கள் என்பது இன்று மிகப் பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.
"இந்தக் கேள்விக்கான பதிலைக் காண்பது உலகத்துக்கு ஒரு மிகப் பெரிய சிக்கலாக மாறி இருக்கிறது.
"ஒரு இனத்தினது விடுதலையை ஒரு சில நாடுகள் எவ்வாறு தடுக்க முடியும்?
அல்லது
"ஒரு இனத்தினது தீர்ப்பை- கருத்தை எவ்வாறு மறுதலிக்க முடியும்?
"என்று எழும்புகிற குரலினை தமிழீழ மக்களாகிய நாங்களும் பிரதிபலிக்கிறோம்.
"எல்லா வகையிலும் பலவீனப்பட்ட பலஸ்தீன விடுதலை இயக்கம்,
"ஒரு அடி நிலத்தைக் கூட மீட்க முடியாத அந்த இயக்கம்-
"தொடர்ந்து போராடக் கூடிய வழிமுறைகளுக்கு ஊடாகவும்-
"தவறிழைத்தோரிடமிருந்து விலகி புதிய அமைப்பைக் கட்டிச் செயற்படுதல் என்ற வகையில்
"பலஸ்தீன மக்களின் யதார்த்த நிலைமையை பிரதிபலிக்கக் கூடிய தலைமையை தங்களுக்குள் உருவாக்கிக் கொள்கிறார்கள்.
"அந்தத் தலைமையை இஸ்லாமிய அடிப்படைவாதம் என்றோ அல்லது வேறு வகையிலோ குறிப்பிட்டாலும் கூட இப்படியான தோற்றப்பாடுகளுக்கு உலகம் ஒரு காரணம் என்பதை ஏற்க வேண்டிய நிலை இருக்கிறது.
"இஸ்லாமிய தீவிரவாதம் தோன்றுவதற்கு யார் காரணம்?
"பனிப்போர்க் கால கட்டத்தில் தலிபான்களின் தோற்றத்துக்கு வித்திட்டது அல்லது பின்லேடனின் தோற்றத்துக்கு வித்திட்டது யார் என்பது உலகத்துக்கு நன்றாகத் தெரியும்.
"அதேபோல் 1980-களில் இந்தத் தீவிராத இயக்கங்களைக் கண்டும் காணாதது போல் செயற்பட்டதாக அப்போது பத்தா அமைப்பு குற்றம் சாட்டியது எங்களுக்கு நினைவுக்கு வருகிறது.
"இந்தியாவின் பிந்தரன்வாலேயைக் கொண்டு காலிஸ்தான் விடுதலை இயக்கத்தை இங்கிலாந்து உருவாக்கியது போல் இஸ்ரேலின் உளவுத் துறையினரும் செயற்பட்டனர்.
"இவ்வாறான உத்திகளைக் கடைபிடித்து எல்லாவற்றையும் மீறி நாட்டுப்பற்றோடும் மிகத் தெளிவான பார்வையோடும் ஒரு இயக்கம் செயற்படும் போது அந்த இயக்கம் மக்களினது முழுமையான ஆதரவைப் பெற முடியும் என்பது பலஸ்தீன வரலாற்றின் விளைபொருளாக உலகத்துக்கு வந்திருக்கிறது.
"போராட்ட அமைப்புகளுக்குக் கூட இந்தச் செய்தியானது வித்தியாசமான பரிணாமத்திலே வந்து சேருகிறது.
"பலஸ்தீனத்தினது தீர்வை நோக்கிய இந்தப் பயணத்தில் ஹமாசினது பங்களிப்பு எவ்வாறு கருதப்படப் போகிறது?
"ஹமாசின் வெற்றி மூலம் முழு பலஸ்தீன மக்களை பழிவாங்கக் கூடிய- முற்றிலுமாக ஒரு ஒதுக்கப்பட்ட கூட்டமாக கருதக்கூடிய நிலைக்கு இட்டுச் செல்லுமா?
அல்லது
"ஒரு புதிய பரிணாமத்தை உலகம் உணர்ந்து தன் போக்கினை மாற்றி ஹமாசும் கொஞ்சம் விட்டுக் கொடுத்து இறங்கி இருதரப்பினரும் சந்திக்கிற வாய்ப்புக்கூடாக இனிவரும் நாட்களில் பலஸ்தீன மக்களுக்கு ஒரு தீர்வு கிடைக்குமா?
என்பதுதான் இந்த வெற்றிக்கூடாக எழுந்து நிற்கிறது.
"ஹமாசின் வெற்றி என்பது அடிப்படையில் ஒரு தர்க்க ரீதியாக நிகழ்ந்தது என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்கின்றனர்.
"50 வருட அமைதி முயற்சிக்கூடாக
"50 விழுக்காடு பலஸ்தீன மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்கின்ற-
"28 அல்லது 29 விழுக்காடு மக்கள் வேலையற்று இருக்கிற நிலையில
"பலஸ்தீன மக்களுடைய எதிர்காலம் குறித்த கவலையோடு இப்போது ஹமாஸ் வெளிவந்து நிற்கிறது.
"இஸ்ரேலிய அரசை முற்றாக அழித்தல், அமைதி உடன்பாட்டை முற்றாக ஏற்றுக்கொள்ள மறுத்தல் என்கிற தன்னுடைய கோட்பாடுகளில் ஹமாஸ் எந்த அளவுக்கு விட்டுக்கொடுத்துச் செயற்படப் போகிறது என்பது காலப்போக்கில் தெரிய வரும்.
"அதேபோல் நிலைமையை உணர்ந்து உலகம் தனது நிலையை மாற்றிக் கொள்ளுமா? கொள்ளாதா? என்பதும் ஒரு முக்கியமான கேள்வியாக மாறி இருக்கிறது.
"ஹமாசின் வெற்றியானது உலகத்தின் மனசாட்சியை உலுக்கியிருக்கிறது.
"மத்திய கிழக்கின் இந்த நிலைமைகளைப் பார்க்கும் போது, தென்னாசியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் போக்கும் உலகத்துக்கு முன்னால் பெருத்த கேள்வியை எழுப்பி நிற்கிறது.
"மத்திய கிழக்கின் மூலை முடுக்கெல்லாம் உலகத்தை நோக்கி எதிரொலிக்கிற இந்தக் கேள்விகள் எமக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
"1987ஆம் ஆண்டுக்குப் பின்னால் ஹமாஸ் இயக்கம் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், கனடாவில் தடை செய்யப்பட்டது. அதனுடைய நிதி மூலங்களான தொண்டர் அமைப்புகளும் சர்வதேசமெங்கும் தடை செய்யப்பட்டமையும் அவர்களது வங்கிக் கணக்குகள் நிறுத்தப்பட்ட வரலாற்றையும் நாம் அறிவோம்.
"அதே ஹமாஸ் இயக்கம்தான் இன்று பலஸ்தீன அரசைப் பொறுப்பேற்கப் போகிறது.
"அப்படிப் பொறுப்பேற்கின்ற போது ஹமாஸ் மீதான தடையை இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? நிதிகள் வழங்கப் போகிறார்களா? இல்லையா?
"எமக்குக் கிடைத்திருக்கும் தகவல்களைப் பார்க்கும் போது நிச்சயமாக உலக நாடுகள் தங்கள் நிலைப்பாடுகளிலிருந்து கீழிறங்கி இந்த அரசை அங்கீகரிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படும் என்பதாகத்தான் கூறப்படுகிறது.
"மக்களது கருத்துக்கு மாண்பு கொடுத்து- மதிப்பு கொடுத்து செயற்பட வேண்டிய ஒரு நிலை இருப்பதை தமிழீழ மக்கள் தங்களது செயற்பாடுகள் மூலம் உலகுக்கு உணர்த்திக் கொண்டிருக்கும் இந்த நிலையில் நாங்கள் இதை பெருமதிப்பிற்குரிய விடயமாகக் கருதுகிறோம்"
என்றார் க.வே.பாலகுமாரன்.
***************************
நன்றி: புதினம்.
தமிழ்ப்பதிவுகள்
Labels: அரசியற்கட்டுரை, ஈழ அரசியல், உலக அரசியல்
Monday, February 06, 2006
போர் நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறியது யார்?:
இலங்கை போர் நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறியது யார் என்ற தலைப்பில் தமிழகத்தில் செயற்பட்டு வரும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் உத்தியோகபூர்வ வார ஏடான 'புரட்சி பெரியார் முழக்கம்' இல் ஆய்வுக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
அந்த இதழின் ஆசிரியரும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர்களில் ஒருவருமான விடுதலை இராசேந்திரன் எழுதியுள்ள கட்டுரை விவரம்:
சர்வதேச நாடுகளும், ஐ.நா.வும் அங்கீகரித்துள்ள தேசிய சுய நிர்ணய உரிமைக்காக ஈழத் தமிழர்கள் தங்களுக்கான தேசத்தைத் தாங்களே நியமித்துக் கொள்ளப் போராடுகிறார்கள்.
அரசியலில் ஜனநாயக அமைப்புகள் வழியாக, தொடங்கிய இந்த உரிமைப் போராட்டத்தைத் தொடர்ச்சியாக ஒடுக்கிய சிறீலங்கா அரசு, தமிழர்கள் மீது இராணுவத் தாக்குதலையும் கட்டவிழ்த்துவிட்ட நிலையில், தமிழர்கள் அதை எதிர்கொள்ள ஆயுதம் தாங்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவானது.
அந்த நிர்ப்பந்தத்தின் வரலாற்று உருவாக்கம் தான் விடுதலைப் புலிகள் இயக்கம்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அளப்பரிய தியாகங்களோடு, தொடர்ச்சியாக, அந்த இயக்கம் முன்னெடுத்து வர முடிகிறது என்றால், அதற்கான அடிப்படையான காரணம், ஈழத் தமிழர்களின் உணர்வுகளையும், உரிமைகளையும், பிரதிபலிக்கக் கூடிய ஒரே அமைப்பாக, தமிழர்கள், அந்த இயக்கத்தை அங்கீகரித்து தழுவி நிற்பது தான்.
அத்தகைய விடுதலைப் புலிகளின் வலிமையான எதிர் இராணுவத் தாக்குதல்களால், நிலை குலைந்து போன சீறிலங்கா ராணுவம், சர்வதேச சக்திகளின் ஆதரவைத் தேடி ஓடியது.
அப்படிச் சென்றதுதான், இந்திய இராணுவம். இந்திய இராணுவம் சிறிலங்கா இராணுவத்துக்கு ஓய்வு கொடுக்கச் செய்து, தாமே முன்னின்று, விடுதலைப் புலிகளை அழிக்கத் திட்டமிட்டபோது, அந்த இயக்கத்தின் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையையும், பேராதரவையும் கண்டு, மலைத்துப் போய் மக்களுக்கு எதிராகவும் தாக்குதலைத் தொடக்கி, அதன் காரணமாக உள்நாட்டிலும் சர்வதேச அரங்கிலும் பெரும் கண்டனத்துக்கு உள்ளாகி, கடும் தோல்வியோடு, அவமானப்பட்டு, இந்தியாவுக்குத் திரும்பியது.
1,500 இந்திய இராணுவத்தினரை உயிர்ப்பலியாக்கி, 3,000 இராணுவத்தினர், படுகாயமடைந்து, ஊனமுற்றதுதான் கிடைத்த 'பலன்'.
அப்போது உருவான 'ராஜீவ்-ஜெயவர்த்தன' ஒப்பந்தத்தின் பிரிவுகளை காற்றிலே பறக்கவிட்டு, இராணுவத்தைக் கொண்டு தமிழீழ மக்களின் நியாயமான உரிமைப் போராட்டத்தை நசுக்குவதற்கே இந்திய-சிறிலங்கா அரசுகள் சதி செய்தன.
போராட்டத்தை நிறுத்திவிட்டு ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனையையும் விடுதலைப் புலிகள் ஏற்று செயற்படுத்த முன்வந்தார்கள்.
அப்போது தமிழ்நாட்டிலிருந்து, ஈழத்துக்குத் திரும்பிய 13 விடுதலைப்புலி தளபதிகளை, சிங்கள இராணுவம் கைது செய்து கொழும்புக்குக் கொண்டு போக முயற்சித்தபோது, அம்மாவீரர்கள் ஏற்றுக் கொண்ட ஒப்பந்தங்களுக்காக எதிர்த்துப் போரிடாமல், "சையனைட்" விழுங்கி, வீரமரணத்தைத் தழுவினர்.
முன்னதாக ஒப்பந்தத்தில் சொல்லப்பட்ட விடயங்களை நிறைவேற்ற வலியுறுத்தி, விடுதலைப் புலிகள் 'உண்ணாவிரதப் போராட்டம்' நடத்தினர். ஒரு சொட்டு தண்ணீர்கூட அருந்தாமல், திலீபன் மேற்கொண்ட அந்தப் போராட்டம் - 13 நாட்கள் நீடித்தும், இந்தியா மெளனமே சாதித்தது. திலீபன் மரணத்தைத் தழுவி, தியாக வரலாற்றுக்கு புதிய அர்த்தத்தை உருவாக்கினான்.
அப்போது - இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்திய இராணுவப் படையின் தளபதியாக இருந்தவர் லெப் ஜெனரல். ஹரிஹரத்சிங். அவர் பதவி ஓய்வுக்குப் பிறகு தனது அனுபவங்களை ஒரு நூலாக எழுதினார்.
அதில் திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டார். இந்தப் பிரச்சினைகள் நடந்த 1987 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கான இலங்கை தூதுவராக இருந்தவர் ஜெ.என்.தீட்சித்.
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுடன் நேரடி உரையாடல் நடத்தும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, பிரபாகரனை சுட்டுக் கொன்று விடுமாறு, தீட்சித், தனக்கு உத்தரவிட்டார் என்ற திடுக்கிடும் தகவலை இராணுவ தளபதி ஹரிஹரத் சிங் அம்பலப்படுத்தினார்.
சமரசப் பேச்சுவார்த்தையைப் பயன்படுத்தி, தமிழீழ மக்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்கான சதித் திட்டங்களை இரகசியமாக அரங்கேற்றும் - 'பார்ப்பனிய' அணுகுமுறையையே அப்போது அரங்கேற்ற முயன்றார்கள்!
தொடர்ந்து ஒவ்வொரு முறையும் இராணுவ ஒடுக்குமுறைகள் தோல்வியடைந்த போதெல்லாம் பேச்சுவார்த்தைத் திட்டங்கள் முன்வைக்கப்பட்டன.
திம்பு, கொழும்பு, யாழ்ப்பாணம் என்று மூன்று கட்டங்களில் நடந்த பேச்சுவார்த்தைகளும் இப்படி 'திரைமறைவு' சதிகளுடன் அரங்கேறின என்பது அவ்வப்போது அம்பலமாகியது.
நான்காவது சுற்றுப் பேச்சுவார்த்தை நோர்வே நாட்டின் முன்முயற்சியால் தொடங்கியது. ஆனையிறவு இராணுவ முகாமைத் தகர்த்து - புலிகள், தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து, உள்ளே சிக்கிக் கொண்ட பல்லாயிரக்கணக்கான சிங்கள இராணுவத்தினர் உயிருக்குப் போராடிய நிலையில், அவர்களை மன்னித்து விடுவிக்க விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் முன்வந்தார்.
அத்தகைய பலம் பொருந்திய நிலையில் விடுதலைப் புலிகள் இருந்த கட்டத்தில் தான், தாங்களாகவே முன்வந்து யுத்த நிறுத்தத்தை அறிவித்து, நோர்வே தலையீட்டை ஏற்று, போர் நிறுத்த உடன்பாட்டை ஒப்புக் கொண்டு - சமரசப் பேச்சுக்குத் தயாராக முன்வந்தார்கள் விடுதலைப் புலிகள்.
ஆனால் மீண்டும் ஆளும் சிறிலங்கா ஆட்சி, தனது இரகசிய சதித் திட்டங்களையே அரங்கேற்றத் துடித்தது. இதுதான் உண்மை.
இப்போது, நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் முறிந்ததற்கான காரணம் என்ன? விடுதலைப் புலிகள் தான் "போர்வெறி" பிடித்து, ஒப்பந்தத்தை மீறுகிறார்கள் என்று பார்ப்பன ஊடகங்கள் திட்டமிட்டு செய்து வரும் பிரச்சாரத்தில், உண்மை இருக்கிறதா?
தமிழர்களுக்கு, இதோ, சில உண்மைகளை முன்வைக்கிறோம்.
2002 ஆம் ஆண்டு பெப். 22 ஆம் தேதி உருவான போர் நிறுத்த உடன்பாட்டில் - மூன்று முக்கிய பிரச்சினைகள் இடம் பெற்றிருந்தன.
அவை யாவை?
- அதி உயர் பாதுகாப்பு வலயங்களிலிருந்து இராணுவம் விலக்கிக் கொள்ளப்படவேண்டும் என்பது முதல் நிபந்தனை.
தமிழர்கள் பிரதேசத்தில் கல்வி நிலையங்களிலும், வழிபாட்டுத் தலங்களிலும், காலியாகக் கிடந்த தமிழர்களின் வீடுகளிலும், இராணுவம் புகுந்து கொண்டு, தமிழர்களின் நடமாட்டங்களையே கட்டுப்படுத்தி, இயல்பு வாழ்க்கையை முடக்கி வந்தது.
இப்படி அவர்கள் முறைகேடாக ஆக்கிரமித்த பகுதிகளை "உயர் பாதுகாப்பு வலயம்" என்று அழைத்துக் கொண்டார்கள்.
பள்ளிகளிலிருந்து 160 நாட்களுக்குள்ளும், பொதுக் கட்டடங்கள், வீடுகளிலிருந்து 30 நாட்களிலும், நகரங்களில் மக்கள் புழக்கமுள்ள பகுதிகளிலிருந்து 60 நாட்களிலும் - இராணுவம் விலக்கிக் கொள்ள வேண்டும் என்று ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
ஆனால், நான்கு ஆண்டுகள் உருண்டோடியும், சிறிலங்கா இராணுவம் விலகவில்லை. ஒப்பந்தத்தை மீறியது யார்?
- கடற்கரைப் பிரதேசங்களில் வாழும் தமிழர்களின் உயிர் வாழ்க்கைக்கு ஒரே ஆதாரம் மீன்பிடித் தொழில் தான். இராணுவம் - இந்தத் தொழிலையே முடக்கிப் போட்டது. உயிர் வாழும் உரிமையே, மக்களுக்கு மறுக்கப்பட்ட நிலையில், மீண்டும் இந்த மக்கள் கடலுக்குச் சென்று மீன் பிடிக்க நிர்ப்பந்தங்களோ, கெடுபிடிகளோ செய்யக் கூடாது என்பது ஒப்பந்தத்தின் இரண்டாவது முக்கிய அம்சம்.
இப்படி சுமுகமான சூழ்நிலையை உருவாக்க ஒப்பந்தத்தில் விதிக்கப்பட்டிருந்த கெடு 90 நாட்கள். ஆனால் என்ன நடந்தது? நான்கு ஆண்டுகளுக்குப் பிறகும், கெடுபிடிகள் தளர்த்தப்படவில்லை. மேலும் மேலும், புதிய புதிய நெருக்கடிகளை இராணுவம் தமிழ் மீனவர்களுக்கு உருவாக்கியது.
மீனவர்கள் தொடர்ந்து வாழ்வுரிமையை இழந்து நிற்கிறார்கள். ஒப்பந்தத்தை மீறியது யார்?
- இராணுவத்துக்கு ஆதரவாக செயற்பட்டு வந்த 'ஈ.என்.டி.எல்.எப்.' போன்ற ஆயுதக் குழுக்களிடமிருந்து (இது இந்தியாவால் உருவாக்கப்பட்ட துரோகக் குழு) ஆயுதங்களைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்பது மூன்றாவது முக்கிய அம்சம்.
நடந்தது என்ன?
ஆயுதக் குழுக்களிடமிருந்து ஆயுதங்கள் பறிக்கப்படவே இல்லை.
அவர்கள் இராணுவத்தின் ஆதரவோடு வெளிப்படையாகத் திரிந்தார்கள்.
தொடர்ந்து, போர் நிறுத்த ஒப்பந்த காலத்தில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய தளபதிகள், ஆயுதக் குழுக்களால் படுகொலை செய்யப்பட்டனர்.
அதே நேரத்தில், முழுமையாக இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் தமிழர் பிரதேசங்களில் இராணுவத்தின் தாக்குதல்களும் அதிகரித்துக் கொண்டே இருந்தன.
இதை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு தமிழர்கள் தள்ளப்பட்டனர். பொது மக்கள் ஆயுதப் பயிற்சிகளை எடுத்தனர்.
ஆண்-பெண்-முதியவர் அனைவரும், தங்களைத் தற்காத்துக் கொள்ள ஆயுதம் தாங்கினர். வியட்நாம் போன்ற நாடுகளில் உருவானது போல் மக்கள் இராணுவம் உருவாகியது.
இராணுவத் தாக்குதலுக்கு மக்கள் இராணுவம் பதிலடி கொடுத்தது. இப்படித் தாக்குதல் நடந்த பிரதேசங்கள் முழுமையாக விடுதலைப் புலிகள் ஆளுகைக்கு உட்படாத இராணுவத்தின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பிரதேசங்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
அதே நேரத்தில் விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை.
அங்கே கல்வி நிறுவனங்கள், நிர்வாக அமைப்புகள், நீதிமன்றங்கள், மருத்துவமனைகள் என்று, ஒரு அறிவிக்கப்படாத ஆட்சியையே புலிகள் நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் 'அல்கொய்தா' போன்ற தீவிரவாத இயக்கங்களோடு விடுதலைப் புலிகளை ஒப்பிடும் பார்ப்பன ஊடகங்களின் பிரச்சாரம் அப்பட்டமான பொய் அல்லவா?
ஆயுதக் குழுக்களின் - ஆயுதங்களைக் கலையாமல் அவர்கள் தாக்குதல்களைத் தொடர அனுமதித்த சிறிலங்கா அரசு - புதிய ஆயுதம் தாங்கிய குழு ஒன்றையும், உளவு நிறுவனங்களின் சதியாலோசனையோடு உருவாக்கியது.
அதுதான் கருணா தலைமையிலான குழு.
இந்தக் குழுவை உருவாக்கியது சிறிலங்கா அரசு தான் என்பதற்கு சான்றுகள் உண்டு.
"பேச்சுவார்த்தையில் விடுதலைப் புலிகளை பங்கேற்க வைத்தன் மூலம் அவர்களை சர்வதேச வலையில் சிக்க வைத்து விட்டோம்- அமைதிப் பேச்சுவார்த்தையின் ஊடாக கருணா தலைமையில் புதிய ஆயுதக்குழுவை விடுதலைப் புலிகளுக்கு எதிராக நாங்கள் தான் உருவாக்கினோம்"
- இப்படி வெளிப்படையாக சிங்களர்களிடம் சென்று மார்தட்டினார், ஆளும் ரணில் விக்கிரசிங்க கட்சியைச் சார்ந்த நவீன் திசநாயக்க!
இவர் 94 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் சந்திரிகாவை எதிர்த்து ரணில் கட்சி சார்பாக, அதிபர் பதவிக்கு நிறுத்தப்பட்ட வேட்பாளர் காமினி திசநாயக்கவின் மகன் (காமினி, சிங்கள தீவிரவாதிகளின் குண்டுவெடிப்பில் பலியானார்).
நவீன் திசநாயக்க - இப்படி ஒரு கருத்தை வெளியிட்டதைத் தொடர்ந்து,
கொழும்பிலிருந்து வெளிவரும் "டெய்லி மிர்ரர்" ஆங்கில நாளேடு, இந்த செய்தி உண்மை தானா என்பதை உறுதிப்படுத்த நினைத்தது, ரணில் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தவரும், விடுதலைப் புலிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் பங்கு பெற்றுவந்தவருமான மிலிந்த மொரகட என்பவரை அந்த ஏடு பேட்டி கண்டது.
"ஆம் உண்மைதான். கருணா தலைமையிலான ஆயுதக் குழுவை உருவாக்கியதே நாங்கள்தான்"
என்று பேட்டியில் அவர் ஒப்புக் கொண்டார்.
அதற்குப் பிறகு தான் ரணில் ஆட்சியின் துரோகத்தைத் தமிழர்கள் புரிந்து கொண்டு, அந்த ஆட்சியை இனியும் ஆதரிக்க முடியாது என்ற முடிவுக்கு தேர்தலின் போது வந்தனர்.
இந்த ஆயுதக்குழுக்களை சிறிலங்கா இராணுவம் பயன்படுத்திக் கொண்டதற்கும் சான்றுகள் உண்டு.
ஒரு சம்பவத்தை இங்கே பதிவு செய்ய விரும்புகிறோம்.
பின்லாந்து, அயர்லாந்து, நோர்வே போன்ற ஐரோப்பிய நாடுகளின் (ஐரோப்பிய ஒன்றியத்தில் இடம் பெறாத நாடுகள்) பிரதிநிதிகள் அடங்கிய "போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு" ஒன்று உருவாக்கப்பட்டு, அது சிறிலங்காவில் நிலைமைகளைக் கண்காணித்து வருகிறது.
இந்த நிலையில் - கொழும்பிலிருந்து வெளிவரும் "சண்டே ரைம்ஸ்" ஆங்கில நாளேடு, "தீவுச்சேனை" என்ற பகுதியில் கருணா மற்றும் ஈ.என்.டி.எல்.எப். குழுக்கள், ஆயுதங்களோடு, முகாமிட்டிருக்கின்றன என்ற செய்தியை வெளியிட்டது.
இது உண்மைதானா என்பதைக் கண்டறிய சர்வதேச போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு, அப்பகுதிக்குச் சென்று பார்வையிட்டபோது, அந்த செய்தி உண்மை தான் என்பதை உறுதிப்படுத்தியது. அது மட்டுமல்ல, சிங்கள இராணுவ முகாம்களுக்கு - அருகருகே உடனுக்குடன் தொடர்பு கொண்டு, செயற்படும் வகையில், இந்த ஆயுதக் குழுக்களின் முகாம்கள் இருக்கின்றன என்பதையும் அம்பலப்படுத்தியது.
ஆயுதக் குழுக்களிடமிருந்து ஒப்பந்தப்படி ஆயுதங்களைப் பறிமுதல் செய்ய வேண்டிய சிறிலங்கா இராணுவம், அதற்கு மாறாக, ஆயுதக் குழுக்களைத் தனது தாக்குதலுக்குப் பயன்படுத்திக் கொண்டுவந்தது என்ற உண்மை சர்வதேச குழுக்கள் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது எனில் ஒப்பந்தத்தை மீறியது யார்?
இந்த நிலைமை தொடர்ந்த போதுதான், விடுதலைப் புலிகள், பேச்சுவார்த்தையிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தனர். தேர்தல் களத்திலும், எந்தக் கட்சியையும் ஆதரிக்காத நிலை எடுத்தனர். தமிழர்களும், தேர்தலை ஒட்டு மொத்தமாகப் புறக்கணித்தனர்.
சந்திரிகாவின் கட்சியைச் சார்ந்த சிங்கள தீவிரவாதி ராஜபக்ச - ஜே.வி.பி. சிங்களத் தீவிரவாத அமைப்பின் ஆதரவோடு அதிபர் பதவிக்கு வந்தார்.
"பேச்சுவார்த்தைக்கான திட்டங்களை மாற்றி அமைப்பேன்- நோர்வேயில் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம்- ஆசியாவில் ஏதாவது ஒரு நாட்டில்தான் நடக்க வேண்டும்- கூட்டாட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை- சிறீலங்காவின் ஒற்றை ஆட்சிக்குக் கீழ்தான், எந்தத் தீர்வையும் எடுப்போம்"
என்று "வீர" முழக்கமிட்டார்.
நோர்வேக் எதிராக ஜே.வி.பி. போன்ற சிங்கள தீவிரவாதிகள் போர்க்கொடி உயர்த்தினர்.
ராஜீவ் - ஜெயவர்த்தன ஒப்பந்தத்திலேயே தமிழ்ப் பகுதிகளுக்காக தனி மாகாண சபைகள் உருவாக்கப்பட்டு, இந்தியாவின் பொம்மை ஆட்சி ஒன்று ஈழத்தில் அமைக்கப்பட்ட வரலாற்றை மறந்திருக்க முடியாது.
இப்படி பல்வேறு காலகட்டங்களைத் தாண்டிவந்த ஈழத் தமிழர் பிரச்சினையை மீண்டும் தொடக்கக்கால கட்டத்துக்கே கொண்டு போகும் திட்டங்களையே ராஜபக்ச முன்வைத்தார்.
இந்த நிலையிலும்கூட - "இந்து" நாளேடு உட்பட பார்ப்பன ஊடகங்கள், ராஜபக்சவை உயர்த்திப் பிடித்து - விடுதலைப் புலிகளுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் எதிராகவே பிரச்சாரத்தை ஊதிவிட்டன.
சமசர சதிவலைகள் ஊடாக தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை சிறிலங்கா அரசு முன்னெடுப்பதற்கு பல்வேறு காலகட்டங்களில், அமெரிக்காவும், இந்திய தேசியப் பார்ப்பன ஆட்சியும், ஆயுதம், ஆயுதப் பயிற்சி என்று பல்வேறு உதவிகளை வழங்கி சிறிலங்கா அரசுக்கு முட்டுக் கொடுக்க முன் வந்தன.
இவ்வளவுக்குப் பிறகு சுனாமிப் பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக விடுதலைப்புலிகளும், சிறீலங்கா அரசும் இணைந்து "சுனாமி பேரலை நிவாரணக் கட்டமைப்பு" என்ற அமைப்பை உருவாக்கினர்.
நிதி உதவி வழங்கிய சர்வதேச நாடுகளின் வலியுறுத்தலால் இது உருவானது. இந்த அமைப்பை, இந்தியாவும் அங்கீகரித்தது. இதன்படி தமிழீழப் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சர்வதேச நாடுகள் வழங்க முன்வந்த நிவாரண உதவிகள் - விடுதலைப் புலிகள் மூலமாகவே வழங்கப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது.
இதற்குப் பிறகு, இலங்கை நீதிமன்றத்திலே வழக்குத் தொடர்ந்து, நீதிமன்றத்தின் மூலம் விடுதலைப் புலிகள் பங்கேற்பைத் தடுத்து விட்டார்கள். அந்தக் கட்டத்திலும் "இந்து" உட்பட பார்ப்பன ஊடகங்கள் விடுதலைப் புலிகளைக் குற்றம் சாட்டியே பிரச்சாரம் செய்தன.
ஆனால், பிரச்சினைகளை உன்னிப்பாகக் கவனித்து வரும் சர்வதேசப் பார்வையாளர்களிடம் இந்தப் பொய்ப் பிரச்சாரங்கள் எடுபடவில்லை.
சிறிலங்கா ஆட்சிகளின் திட்டமிட்ட திசை திருப்பும் சூழ்ச்சிகளை, சர்வதேச சமூகம் புரிந்து கொள்ளத் துவங்கிவிட்டது. அதனால் தான் ராஜபக்ச மிரட்டல்கள் பலிக்கவில்லை!
நோர்வே பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேற வேண்டும் என்ற சிங்கள வெறியர்களின் கூப்பாடு தோல்வி அடைந்து, மீண்டும் நார்வே பேச்சுவார்த்தைகளை இப்போது முன்னெடுக்கிறது.
ஆசிய நாடுகளில்தான் பேச்சுவார்த்தை நடக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்த ராஜபக்ச - இப்போது அதற்கு மாறாக சுவிற்சர்லாந்து நாட்டிலே, ஜெனீவாவில் பேச்சுவார்த்தை நடப்பதற்கு ஒப்புக் கொண்டு விட்டார்.
இந்தியாவின் ஆதரவோடு ஈழத் தமிழர்களின் போராட்டத்தை ஒடுக்கிவிடலாம் என்று திட்டமிட்ட ராஜபக்சவின் தந்திரங்கள் படுதோல்வி அடைந்து விட்டன.
நியாயம் புலிகள் பக்கமே என்பது, இப்போது அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ராஜபக்சவின் "இந்திய" வருகையால் மீண்டும் தமிழகத்தில், ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான ஆதரவு எழுச்சி பெற்றுள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், ராஜபக்சவின் சந்திப்பு முயற்சிக்கு ஆதரவு காட்டவில்லை.
ராஜபக்சவைப் பயன்படுத்தி, இந்தியாவுக்கு நிர்ப்பந்தம் தந்து, விடுதலைப் புலிகளை ஒழித்து விடலாம் என்ற கற்பனைக் கனவில் மகிழ்ச்சி கூத்தாடிய "இந்து" போன்ற பார்ப்பன ஊடகங்கள் - கட்டுரைகளும், தலையங்கங்களும் எழுதி குவித்தும், தூதுகள் அனுப்பியும், தங்களது சதித் திட்டங்கள் தோற்றுப் போய்விட்டனவே என்று, ஏமாந்து நிற்கின்றன!
அவர்கள் அடுத்த சதித் திட்டத்துக்கு காய் நகர்த்தி வருகிறார்கள்.
இதுதான் இப்போது நடந்து வருகிறது!
அடுத்து ஜெனீவா பேச்சுவார்த்தையையும் நடக்க விடாமல், சதி முயற்சிகள் தொடருமா?
கடந்தகால அனுபவங்களிலிருந்து இந்த ஆதிக்க சக்திகள் பாடங்களைப் பெறுவார்களா?
இக்கேள்விக்கான விடைகள் இனிமேல்தான் தெரியும்.
மக்கள் சக்தியோடு நடத்தப்படும் உண்மையான விடுதலைப் போராட்டங்களைத் தொடர்ந்து ஒடுக்கிட முடியாது என்பது மட்டும் உறுதி!
ஆகவே! தமிழர்களே!!
போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறுவது யார்?
-நடுநிலையோடு சிந்தியுங்கள்!
என்று அந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
********************************
நன்றி: புதினம்.
தமிழ்ப்பதிவுகள்
Labels: இராணுவ ஆய்வு, ஈழ அரசியல்
Search
முந்தியவை
- மன்னாரில் பெண் புலிகளின் வீரம்
- எல்லாளன் இராச்சியத்தில் பிரபாகரன் பிள்ளைகள்
- கரும்புலி லெப்.கேணல் பூட்டோ
- கடலில் மேலாண்மை விடுதலைப் போரைத் தீர்மானிக்கும்
- அமெரிக்க ஏகாதிபத்தியம்
- இலங்கையில் ஊடகங்களும் பிரித்தாளும் தந்திரமும்
- பகிரப்படாத பக்கங்கள். 1.
- அமெரிக்க அரசியலும் சதாமும்
- இந்தியா பிச்சை போடுமா?
- அன்னியசக்திகளை ஈழத்தமிழர் நம்பலாமா?
களஞ்சியம்
இறுதிப் பின்னூட்டங்கள்
Links
- Wikipedia
- Firefox
hit Counter
_____________________
Click Here To Earn Money____________________