Wednesday, November 15, 2006

இராணுவப்பிடியில் சிறிலங்கா

மறுபக்கம் - கோகர்ணன்

தேசிய இனப் பிரச்சினையைத் தீர்ப்பதில் இந்த அரசாங்கத்திற்கோ இதற்கு முந்திய அரசாங்கம் எதற்குமோ அக்கறை இருந்ததா இல்லையா என்பது இப்போது காலங் கடந்த கேள்வி. அக்கறை இருந்தாலும் கூட, அரசாங்கத்தால் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியுமாமென்பது கூடப் பொருத்தமான கேள்வி. இன்று நடக்கிற போர் யாரால், யாருடைய நலன் கருதி நடக்கிறது என்பதை நாம் கவனிப்பிற்கு எடுப்போமானால் போர் ஏன் முடிவின்றித் தொடர்கின்றது என்பதற்கும் தேசிய இனப் பிரச்சினை ஏன் தீர்வின்றி இழுபட்டுக் கொண்டு போகிறது என்பதும் விளங்கும்.
கடந்த சில மாதங்களில் நடந்த காய் நகர்த்தல்கள் கூட வெறுமனே உள்ளூர்ப் பாராளுமன்ற அரசியல் தொடர்பானவையாவென்று சிந்திக்க வேண்டியுள்ளது. விடுதலைப் புலிகளைப் போரில் தோற்கடிக்கிறதற்குக் கொடுக்க வேண்டிய விலையை மனித உயிர்களில் அரசாங்கம் கணக்கெடுக்காவிட்டாலும் நாட்டின் பொருளாதாரம் படுவேகமாக சரிவை எதிர்நோக்குகிறது. அதனால் ஏற்படக்கூடிய அதிருப்தி, அரசியல் உறுதியின்மைக்கு வழி செய்யும். விடுதலைப் புலிகளைத் தாக்கி பலவீனப்படுத்தி முறியடிப்பது மட்டுமே அரசாங்கத்தின் இப்போதைய நோக்கம் அல்ல. அதனுடைய விடயங்கள் சிக்கலானவை.

அரசாங்கம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பாரிய சமூகப் பொருளியல் பிரச்சினைகளை உருவாக்குகிற நோக்கத்துடன் செயற்படுகிறது. அரசாங்கம் தான் திட்டமிட்டே உருவாக்குகிற ஒரு மனிதாபிமானப் பிரச்சினைக்கான பழியை விடுதலைப் புலிகள் மீது சுமத்துகிறது. பல்வேறு காரணங்களுக்காகப் பேரினவாதிகளுடன் ஒத்துழைக்கவும் தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பு வேலைகளை நியாயப்படுத்தவும் அரசாங்கப் படைகளுடன் சேர்ந்து நின்று விடுதலைப் புலிகளை எதிர்க்கிற போரில் தமிழ் மக்களை இலக்கு வைக்கும் முன்னாள் தமிழீழ விடுதலை சக்திகள் ஆயத்தமாக உள்ளன. எனினும், இவற்றை விட முக்கியமான சக்திகள் தேசிய இனப்பிரச்சினையின் தீர்வுக்குத் தடையாகவும் போரைத் தொடர்வதற்குத் தூண்டுதலாகவும் உள்ளன.

ஜனாதிபதியின் முக்கியமான ஆலோசகர்கள் இருவர், அவரது சகோதரர்கள். இருவரும் அமெரிக்கப் பிரஜைகள். இருவருமே இந்த நாட்டிற்கு வெளியே நீண்ட காலம் வாழ்ந்து புதிய ஜனாதிபதி பதவியேற்க முன்பு தேர்தலில் உதவி செய்ய வந்து பின்பு ஆலோசகர்களானவர்கள். பாதுகாப்பு ஆலோசகரான கோத்தபாய ராஜபக்ஷ படைத்தலைமையகத்துக்கு வழிகாட்டுவாரா அல்லது படைத்தலைவர்கள் ஏற்கனவே எடுத்த முடிவுகளை நியாயப்படுத்துவாரா என்பதை உங்களது ஊகத்துக்கே விட்டு விடுகிறேன். போர், போரை நடத்துகிறவர்களின் பொறுப்பில் விடப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பு என்ற பேரில் மேலும் மேலும் அதிகாரங்கள் முப்படையினரின் கைகளிலும் பொலிஸாரிடமும் குவிகின்றன. ஆனால், நாட்டின் பாதுகாப்பை யாராலும் எவ்வகையிலும் உறுதிப்படுத்த இயலவில்லை. எனினும், முப்படையினரின் ஆதரவின்றி இந்நாட்டின் எந்த அரசாங்கமும் சர்வ வல்லமையுள்ள ஜனாதிபதியும் தமது பதவியில் சில நாட்கள் கூட நிலைக்க இயலாது.

இந்த நாட்டில் இன்னமும் போர் நிறுத்தம் நடைமுறையில் உள்ளதுபோல், இன்னமும் பாராளுமன்ற அரசாங்கமே அதிகாரத்தில் உள்ளது. பிரகடனஞ் செய்யப்படாத முழுமையான போர் போல பிரகடனஞ் செய்யப்படாத ஒரு இராணுவ அரசாங்கம் இந்த நாட்டில் உருவாகிற அபாயம் பற்றி நாம் எச்சரிக்கையாயிருக்க வேண்டும். நூற்றுக்கணக்கான அரசாங்கப் படையினரின் உயிர்கள் ஒரே சமரில் பறிக்கப்பட்ட நிகழ்வுகள் பல நடத்திருக்கின்றன. ஆயுதக் கொள்வனவுகளிலும் பல்வேறு இறக்குமதிகளிலும் ஒப்பந்தங்களிலும் நடந்த ஊழல்கள் எத்தனையோ ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. முன்னொரு நாட்டில் அல்லது இந்த நாட்டின் இன்னொரு காலத்தில் இவை எத்தனையோ பதவிகட்கு புதிய முகங்களைக் கொண்டு வந்திருக்கும். எத்தனையோ பேரைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்திச் சிறையில் தள்ளியிருக்கும். அப்படி எதுவும் நடக்கவில்லை. ஏன்? இந்த நாட்டில் உண்மையான அதிகாரம் யாருடைய கையில் உள்ளதென்பது பற்றிய கேள்வி எழ வேண்டாமா?

அமெரிக்காவும் அதன் கூட்டணிகளான ஐரோப்பிய முதலாளிய நாடுகளும் ஜப்பானும் ஒரு புறம் தமக்குள் போட்டியிடுகின்றன. இன்னொரு புறம், அவை மூன்றாமுலக நாடுகள் மீதான தமது ஆதிக்க நோக்கங்கட்காக ஒத்துழைக்கின்றன. அவை நம்மைப் பிரித்தாளவல்லன. நம்மால் அவற்றை ஒன்றுக்கொன்று எதிராக மோதவிட்டுப் பலனடைய முடியாது. அப்படி நினைப்போமானால் நாம்தான் முட்டாள்களாக்கப்படுவோம்.

கருணா அணியின் பிரிவை ஏன் அமெரிக்கா முன்னின்று அரங்கேற்றியது? 2004 டிசம்பர் அனர்த்தத்தின் பின்பு நிவாரணப் பணிகட்காக மற்ற நாடுகள் மருத்துவர்களையும் தொழில் நிபுணர்களையும் அனுப்பின. அமெரிக்கா தனது மரைன்ஸ் எனப்படும் கடல்வழி இராணுவப்படையினரை அனுப்பியது நிவாரண வேலைகள் முடிந்த பின்பும் அமெரிக்க முகவர்கள் பலர் தொடர்ந்தும் வடக்கு, கிழக்கில் தங்கியிருந்தனர். அவர்கள் விடுதலைப் புலிகளின் படைவலிமை தொடர்பான தகவல்களையும் குறிப்பாக 26 டிசம்பரில் ஏற்பட்ட இழப்புகளை பற்றித் தகவல்களைத் திரட்டியிருக்க மாட்டார்களா? அமெரிக்காவும் இலங்கை அரசாங்கமும் இப்போது இராணுவ அடிப்படையில் ஒத்துழைக்கின்றன. சில வாரங்கள் முன்பு இரண்டாம் ஜெனீவா பேச்சுக்களுக்கான ஆயத்தங்கள் நடந்த காலத்தில் அமெரிக்கக் கடற்படையுடனான சில கூட்டு நடவடிக்கைகள் அம்பாந்தோட்டைக்கு அப்பாலான கடற்பகுதியில் நடைபெற்றன. அது பற்றி தமது பாராளுமன்ற இடதுசாரிகட்கு கவலையில்லை. ஒப்புக்காகவேனும் அவர்கள் கவலை தெரிவிக்கவில்லை. பேரினவாத ஜே.வி.பி.யின் ஏகாதிபத்திய எதிர்ப்பு முணுமுணுப்புக்கூட எழவில்லை.

அமெரிக்கா விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் அரசாங்கத்தின் தரப்பில் நிற்கும் எனவும் விடுதலைப் புலிகளை முறியடித்து இலங்கையின் ஐக்கியத்தைப் பேண அமெரிக்கா உதவி தேவையெனவும் சகல பேரினவாதக் கட்சிகளும் நம்புகின்றன. அந்த நம்பிக்கைக்கு அமெரிக்க அதிகார நிறுவனம் தீனி போடுகிறது. நேபாளத்தில் மாஓவாதிகளை ஓரங்கட்டுவதற்கு உதவுகிற பேரில் நேபாள இராணுவத்தின் மூலமும் சில அரசியல் தலைவர்கள் மூலமும் அமெரிக்கா கடந்த சில ஆண்டுகளாகத் தனது குறுக்கீட்டை வலுப்படுத்தி வந்துள்ளது. அதுபோலவே இங்கும் விடுதலைப் புலிகளை முறியடிக்க உதவுகிற பேரில் அமெரிக்கா இராணுவ அடிப்படையில் தனது ஆதிக்கத்திற்கு அத்திவாரம் இட்டுள்ளது.

இரண்டு நாடுகளிலும் அமெரிக்கக் குறுக்கீடு இந்தியாவின் பிராந்திய மேலாதிக்க நோக்கங்கட்குச் சிறிது இடைஞ்சலாகவே இருந்தாலும், அமெரிக்காவின் தயவுக்காக ஈரானுக்குத் துரோகம் செய்த இந்திய ஆட்சியாளர்கள் அமெரிக்கா இந்தியாவின் அரசியல், பொருளாதார மேலாதிக்க நோங்கங்கட்கு அதிகம் கேடு விளைவிக்காத வரை இரண்டு நாடுகளிலும் அமெரிக்காவின் செயற்பாடுகள் பற்றிப் பொறுத்துதான் நடந்து கொள்வார்கள். 1977 தேர்தலின் பின்பு இலங்கை அமெரிக்கச் சார்பான அந்த கொள்கை ஒன்றைக் கடைப்பிடித்த போது இந்தியா இலங்கையின் உள் விவகாரங்களில் குறுக்கிட்ட விதத்துடன் இப்போதைய ஒதுக்கீட்டையும் அதன் விருத்தியையும் ஒப்பிட்டால் எதிர்மாறான பண்புகள் பல தெரியும்.

இந்திய சமாதானக் குழுத் தலைவரும் பிரபல பத்திரிகையாளருமான குல்தீப் நாயர் இந்தியா விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கி அமைதிக்கான முயற்சிகட்குப் பங்களிக்க வேண்டுமென்று சொல்லியிருப்பது பற்றிப் பல தமிழ்த் தேசியவாதிகள் உச்சி குளிர்ந்து போயுள்ளனர். குல்தீப் நாயர் இதுவரை ஈழத் தமிழருக்கு ஆதரவாகப் பேசியவரோ விடுதலைப் புலிகட்குச் சாதகமான கருத்துக்களை வெளியிட்டவரோ அல்ல. அவர் இந்திய அதிகார நிறுவனத்துக்கு மிகவும் நெருக்கமானவர். ஆனால், அவர் கொள்கைகளை வகுப்பவரல்லர்.

இந்திய அதிகார நிறுவனம் எப்படி செப்டெம்பர் மாதம் தமிழ் தேசியக் கூட்டணிப்பாராளுமன்ற உறுப்பினர்களை அழ அழச் செய்து, முடிவில் "தீராத விளையாட்டுப் பிள்ளைபோல" மக்களால் தெரிவு செய்யப்படாத ஒரு மூன்று கட்சித் கூட்டத்தின் தலையிலே பூச்சூட்டி விளையாடியது. விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம் இப்போதைக்கு நடப்பது என்பது ஐமிச்சம். நடந்தாலும் இந்தியா தமிழ் மக்களுக்கு நன்மையான முறையில் குறுக்கிடுவது அதைவிட ஐமிச்சம். வடக்கு, கிழக்கின் "மனிதாபிமான நெருக்கடி" வேண்டுமென்றே முற்றவிடப்படுகிறது. மனிதாபிமானத்தின் பேரில் ஏகாதிபத்தியம் பல்வேறு நாடுகளும் புகுந்து குட்டை குழப்பியுள்ளது. ஐ.நா. சபையின் கொடியின் கீழ் இக் குறுக்கீடு நிகழலாம். எனினும், அதன் முடிவில் தமிழ் மக்களின் தேசிய இன விடுதலைக்கான எழுச்சிக்கு ஆப்பு வைக்கப்படும். தமிழ் மக்கள் தமது அன்றாடத் தேவைகட்காக அந்நியரிடம் கைநீட்டி இறந்து வாழுகிற ஒரு நிலைக்கு ஒடுக்கப்படுவர். அதேவேளை, அமெரிக்கக் குறுக்கீடும் இலங்கை மீதான இராணுவ அரசியல் ஆதிக்கமும் மேலும் மேலும் வளர்த்தெடுக்கப்படும். இது தமிழர்கட்கு மட்டுமல்ல, முஸ்லிம்கட்கும் கெடுதலானது. ஏனெனில், அமெரிக்க மேலாதிக்கம் முஸ்லிம்களின் நண்பனல்ல. அதை விட முக்கியமாக அந்நிய ஆதிக்கத்தை வெறுக்கக் கூடிய அனைவருக்கும் தீயது. எனவே, முடிவில் சிங்கள மக்களும் பெரிதும் பாதிக்கப்படுவர்.

ஏ-9 பாதையைத் திறக்கிற பிரச்சினை மனிதாபிமானப் பிரச்சினை மட்டுமல்ல, தமிழ் மக்களின் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலான முடிவு காணும் அடிப்படையான பிரச்சினை. தமிழ் மக்களின் போராட்டம் மீண்டும் சுயாதீனமான பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நிலைக்கு வந்துள்ளது. பேரினவாதிகளின் நல்லெண்ணம் பற்றிக் கடந்த ஒரு வருடத்தில் நிறையக் கற்றிருக்கிறோம். தமிழ் மக்கள் மேலாதிக்கம் சக்திகளின் நல்லெண்ணம் பற்றிப் பட்டுத்தான் அறிய வேண்டிய நிலை வரக்கூடாது.

_________________________________
நன்றி: ஞாயிறு தினக்குரல் November 12, 2006


_____________________________________________

Labels:

Tuesday, November 07, 2006

அணுவாயுதப் பரிசோதனை அரசியல்

மறுபக்கம் - கோகர்ணன்

அமெரிக்க மிரட்டலை அலட்சியப்படுத்தி, வடகொரியா அணு ஆயுதமொன்றைப் பரிசோதித்துள்ளது. ஐ.நா.பாதுகாப்புச் சபை அதைக் கண்டித்தும் வட கொரியா மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்தும் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது. வடகொரியா அசைந்து கொடுக்கவில்லை. இப்போதைக்கு இன்னொரு பரிசோதனையை நடத்துகிற நோக்கம் இல்லை எனவும் அமெரிக்காவின் ஆயுத மிரட்டல் வலுப்படும் பட்சத்தில், பரிசோதனைகளைத் தொடருகிற உரிமையையும் வலியுறுத்தியுள்ளது. வடகொரியா மனவருத்தம் தெரிவித்தது எனவும் இன்னொரு பரிசோதனையை நடத்தப் போவதில்லை எனவும் மேலை நாட்டு ஊடகங்கள் தெரிவித்த செய்திகளை வடகொரியத் தலைவர்களைச் சந்தித்த சீனப் பிரதிநிதிகள் மறுத்துள்ளனர்.
சீனாவும் இந்தியாவும் உட்பட ஏற்கனவே அணு ஆயுதங்களை வைத்திருக்கிற நாடுகள் யாவும் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையைக் கண்டித்துள்ளன. அணு ஆயுதங்களைக் கொண்டிராத ஐரோப்பிய நாடுகள் பலவும் வடகொரியாவைக் கண்டித்துள்ளன. ஜப்பான் மிகுந்த கவலை தெரிவித்து பொருளாதாரத் தடைகளை வரவேற்றுள்ளது. இவற்றுக்கெல்லாம் சொல்லப்படுகிற காரணம், அணு ஆயுதப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துகிற நோக்கம் என்றாலும், உண்மையான காரணம் வேறு. அது பற்றி அதிகம் இரகசியமில்லை.

உலகின் முதலாவது அணு ஆயுத வல்லரசு அமெரிக்கா. மக்களைக் கொன்றொழிப்பதற்காக அணு ஆயுதங்களை இதுவரை பயன்படுத்தியுள்ள ஒரே நாடும் அமெரிக்கா தான். அது மட்டுமன்றி, அணு உலைகளிலிருந்து பெறப்பட்ட கதிரியக்கங் கொண்ட உலோகங்கள் கொண்ட ஏவுகணைகளை ஈராக்கில் பயன்படுத்தியதும் அமெரிக்கா தான். அதன் விளைவாக பத்தாயிரக் கணக்கானோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். ஆயிரக் கணக்கான குழந்தைகள் புற்றுநோய் உட்பட கடும் உபாதைக்குட்பட்டுள்ளார்கள். 1950 களின் பிற்பகுதியில் அமெரிக்கா சீனாவுக்கு எதிரான அணு ஆயுத மிரட்டலை விடுத்த போது, மாஓ அணுகுண்டு ஒரு காகிதப்புலி என்று தைரியமாகக் கூறினார். அதேவேளை, அமெரிக்கா சீனாவைத் தாக்க முற்பட்டால் அதற்குப் பதிலடியாகத் தாக்கச் சீனாவை ஆயத்தப்படுத்தும் தேவையை அறிந்திருந்தார். சோவியத் யூனியனில் குருஷ்ச்சொவ் அதிகாரத்திற்கு வந்தபின்பு, அமெரிக்காவுக்கு எதிராகச் சீனாவை சோவியத் யூனியன் பாதுகாக்க வாய்ப்பில்லை என்பதனால், சீனா தனது பாதுகாப்பை உறுதிப்படுத்துகிற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. தரைக் கீழான நீண்ட சுரங்க அறைகளும் பாதைகளும் மக்களின் பாதுகாப்புக்காக கட்டப்பட்டன. சீனா 1963 அளவில் தனது அணு ஆயுதப் பரிசோதனையை வெற்றிகரமாக நடத்தியவுடன் ஏற்கனவே அணு ஆயுதங்களை வைத்திருந்த அமெரிக்காவும் பிரித்தானியாவும் அதைக் கண்டித்தன. சோவியற் யூனியன் தனது அதிருப்தியைத் தெரிவித்தது. அமெரிக்காவுடனும் பிரித்தானியாவுடனும் முரண்பட்டிருந்த பிரான்ஸ் அணு ஆயுதப் பரிசோதனைகளை நடத்தச் சீனாவுக்கு இருந்த உரிமையைக் கேள்விக்குட்படுத்த மறுத்தது. அதேவேளை, சீனா எந்த நிலையிலும் அணு ஆயுதங்களை எந்த ஒரு நாட்டுக்கும் எதிராக முதல் முதலாகப் பாவிக்கப் போவதில்லை என்று அன்று அளித்த உறுதிமொழி இன்றுவரை தொடர்ந்தும் இருக்கிறது. மறுபுறம், அமெரிக்காவும் சோவியத் யூனியனும் அணு ஆயுதப் போட்டியில் தீவிரமாக இருந்தன. இது கெடுபிடி யுத்தத்தின் போது சோவியத் அமெரிக்க ஒத்துழைப்பு பற்றி பேசப்பட்ட சூழ்நிலையிலும் தொடர்ந்தது. அணு ஆயுதக் குறைப்பு பற்றிய உடன்படிக்கைகள் ஏற்பட்ட போதும் பழைய ஆயுதங்களின் இடத்தில் புதிய, பாரிய ஆயுதங்கள் வந்தனவே ஒழிய, அணு ஆயுத வலிமை குறைக்கப்படவில்லை.

ஆயுதப் போட்டியின் விளைவாகவும் தவறான பொருளியற் கொள்கைகளாலும் சோவியத் பொருளாதாரம் சீர்குலைந்து சோவியற் யூனியனின் செல்வாக்கு நலிந்து சோவியத் யூனியன் உடைந்த பின்பும் அமெரிக்கா தனது அணு ஆயுத வல்லமையை மேலும் அதிகப்படுத்தி வந்துள்ளது ஏன்? அது அமெரிக்காவின் பாதுகாப்புக்காகவா? நிச்சயமாக இல்லை. உலக நாடுகள் மீது போர் மிரட்டல் தொடுத்து தான் எண்ணியதைச் சாதிக்கிற போக்கைக் கொண்ட அமெரிக்கா பெரும் தொகையான ஆயுதங்களை வைத்திருப்பது பிற நாடுகளை மிரட்ட மட்டுமே. அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக் கரமான இஸ்ரேலிடம் அணு ஆயுதங்கள் நிறைய இருப்பதும் அதற்காகவே.

இந்தியா சோவியத் யூனியனின் ஆதரவையும் சோவியத் யூனியனுடன் பாதுகாப்பு உடன்படிக்கை ஒன்றையும் கொண்டிருந்த காலத்திலேயே 1974 இல் இந்தியாவின் முதலாவது அணு ஆயுதப் பரிசோதனை நடந்தது. இன்று அணு குண்டைப் பரிசோதித்துள்ள வடகொரியாவுக்கும் சமாதான நோக்கங்கட்காக அணு வலுவைப் பயன்படுத்துவதாக உறுதி கூறியுள்ள ஈரானுக்கும் எதிராக விடுக்கப்படுகிற மிரட்டல்கள் போல, இந்தியாவுக்கு எதிராக மிரட்டல்கள் விடுக்கப்படவில்லை. ஆனால், இந்திய அணு ஆயுதப் பரிசோதனையை மேற்கு நாடுகள் கண்டித்தன. சோவியத் யூனியன் கண்டிக்கவில்லை. தென்னாசியாவில் அணு ஆயுதப் போட்டி உருவாகி அப்பகுதியின் பாதுகாப்பு மிரட்டலுக்குள்ளாவது பற்றிச் சீனா கவலை தெரிவித்தது.

இந்தியாவின் அணு ஆயுதத் திட்டம் எந்த வெளிமிரட்டலுக்கும் எதிராக மேற்கொள்ளப்படவில்லை. இந்தியாவை ஒரு பிராந்திய வல்லரசாக அறிவிப்பதே அதன் நோக்கமாயிருந்தது. அதன் தொடர் விளைவாகவே பாகிஸ்தானிய அணு ஆயுதப் பரிசோதனை நடந்தது. பாகிஸ்தானின் அணு ஆயுதப் பரிசோதனையை நமது தமிழ் ஊடகவியலாளர்களும் தமிழ்த் தேசிய வாதிகளும் கண்டித்திருந்தனர். ஆனால், இந்தியாவின் அணு ஆயுதப் பெருக்கமும் அதன் ஏவுகணைகளின் விருத்தியும் அவர்கட்குப் பிரச்சினையாக இருந்ததில்லை.

ஆழ்ந்து நோக்கினால், இந்தியாவையும் அமெரிக்காவையும் மேற்கு ஐரோப்பாவையும் குறிப்பாகப் பிரித்தானியாவையும் பற்றிய மூட நம்பிக்கை ஒன்று இன்னமும் தமிழ்ச் சமுதாயத்தைப் பீடித்திருப்பதைக் காணலாம். கம்யூனிட் என்பது தீயது என்பதே நமது தலைவர்களதும் ஊடகங்களதும் மாறாத எண்ணமாகவும் தெரிகிறது. இது ஏன்? கம்யூனிஸ்ற்றுகள் மட்டுமில்லாமல் சோஷலிசச் சிந்தனை உள்ளவர்களும் பகையுடனேயே நோக்கப்பட்டு வருகின்றனர். இது நமது சமூகத்தின் தலைமைத்துவம் பற்றி எதைச் சொல்கிறது?

தமிழ் மக்களின் மீது தொடுக்கப்பட்ட இன ஒழிப்புப் போருக்கு நேரடியாகவே உதவி செய்துள்ள அமெரிக்காவையும் இஸ்ரேலையும் விமர்சிக்க தமக்குத் திராணி இல்லை. இந்திய அதிகார வர்க்கத்தின் நோக்கங்கள் தெரிந்தும் அதைப் பூசிமழுப்பி மொண்னதையான நியாயங்கள் கொண்டு சரிக்கட்ட ஆயத்தமாக உள்ள அளவுக்கு, அவை பற்றி மக்களுக்கு விளக்க நமது சமூக, அரசியல் தலைமைகள் ஆயத்தமாக உள்ளனவா? தமிழ் மக்களின் விடுதலைக்கு ஐரோப்பிய நாடுகள் உதவும் என்கிற நம்பிக்கை விடுதலைப் புலிகளின் மீதான தடைக்குப் பிறகும் தொடருவது எப்படி? நாங்கள் யாரை நம்புவது? நமது நண்பர்கள் யார்? நமது எதிரிகள் யார்?

தமிழர்கட்குக் கிரக பலன் பற்றி பத்திரிகைகள் சொல்லுகிற அளவுக்கு நம்மைச் சூழ உள்ள உலகம் பற்றிச் சொல்லுவதில்லை. மற்ற நாடுகள் அனுபவிக்கின்றவற்றை நாமும் அனுபவிக்கக் கூடும் என்று மக்களைச் சிந்திக்கத் தூண்டுவதில்லை. பழைய வாய்ப்பாடுகட்குள்ளேயே பத்திரிகை உலகம் சுருண்டு கிடக்கிறது.

பலஸ்தீனமும், நேபாளமும் லெபனானும் ஈராக்கும் ஆப்கானிஸ்தானும் வேறொரு உலகிலோ வேறோரு யுகத்திலோ இல்லை. நமக்கு நடப்பதும் நடக்கப் போவதும் ஏலவே பிறர்க்கு நடந்தவையும் நடந்து கொண்டிருப்பவையுந் தான். நேபாள மக்களின் விடுதலையிலும் பலஸ்தீன மக்களின் உரிமைகளிலும் லெபனானின் இறைமையிலும் குறுக்கிடுவோரும் ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் பேரழிவுப் போரை நடத்துவோரும் அவற்றுக்கு நேரடியாயும் மறைமுகமாயும் உதவுவோருக்கு என்றென்றைக்கும் நமக்கு நண்பர்கள் அல்ல. எந்த வகையிலும் நாம் நம்பக் கூடியவர்களுமல்ல.

நேபாள விடுதலைப் போராளிகளைப் பயங்கரவாதிகள் என்று சொல்லிக் கொண்டு நேபாள மக்களால் வெறுக்கப்படுகிற நேபாள இராணுவத்தின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திக் கொண்டு நேபாள போராளிகளின் தலைமையை மிரட்டிப் பணிய வைக்கப் பார்த்து மூக்குடைபட்ட றிச்சட் பவுச்சர் இலங்கை வந்தார். அவர் என்ன சொல்லுவார் என்பது நேபாளத்தில் அவரது சாகசங்களை அறிந்த எவரும் அறிந்த விடயம். ஆனால், அவரது வாயிலிருந்து விழப் போகிற முத்துகளுக்காக இங்கே நமது தலைவர்களும் ஊடகங்களும் வாய்பிளந்து காத்துக் கிடந்தார்கள். அவர் மாவோவாதிகட்கு சொன்னதற்கும் தமிழ் மக்களுக்குச் சொன்னதற்கும் அதிகம் வேறுபாடு இருக்கவில்லை. ஏன் இருக்க வேண்டும்!

அமெரிக்க ஏகாதிபத்திய விஸ்தரிப்பு நோக்கங்கட்குத் தடையாக இல்லாதளவில் எந்த அரச பயங்கரவாதமும் அமெரிக்காவின் தண்டனைக்குரியதல்ல. யு.என்.பி.-பொதுசன முன்னணி ஒத்துழைப்பு இல்லாமலே தமிழர்களுக்கு எதிரான தனது நடவடிக்கைகளைத் தொடர்ந்து வந்துள்ள அமெரிக்காவிடமிருந்து தமிழ் மக்கள் எதை எதிர்பார்க்க இயலும்? சிலர் நம்ப விரும்புவது போல செப்டெம்பர் 11 தாக்குதலின் பின்பு தான் அமெரிக்கா `பயங்கரவாதத்திற்கு' எதிரான கடும் போக்கை எடுக்கவில்லை. அமெரிக்காவுக்கு எதிரான எந்த அரசையும் கவிழ்க்கிற நோக்கத்திற்காக என்ன கொலை பாதகத்தைச் செய்தாலும் அது விடுதலைப் போராட்டம்; அமெரிக்க நோக்கங்கட்கு உதவாத எந்த விடுதலைப் போராட்டமும் பயங்கரவாதம். இது மிகவும் சுலபமாக விளங்கிக் கொள்ள இயலுமான விதி என்பதால் இது தவறானதாகிவிட்டது.

கியூபா ஆகட்டும், வட கொரியா ஆகட்டும், ஈரான் ஆகட்டும், வெனிசுவேலா ஆகட்டும்-அமெரிக்காவுக்கு அதன் எடுபிடிகளான உலக அமைப்புகட்கும் கூட்டாளிகட்கும் எதிராக நிமிர்ந்து நிற்பதை விட அவை வாழ வேறு வழியில்லை. அமெரிக்காவையும் அதன் கூட்டாளிகளையும் மகிழ்வித்து ஒரு விடுதலை கிடைக்கப் போவது இல்லை. அமெரிக்க உதவியுடன் எது கிடைத்தாலும் அது விடுதலையாக இருக்கப் போவதுமில்லை.

எந்த விடயத்திலும் அமெரிக்க நிலைப்பாடு அமெரிக்க மேலாதிக்க நோக்கங்களால் மட்டுமே வழிநடத்தப்படுகிறது. விடுதலை என்பது எல்லா மேலாதிக்கங்கட்கும் பணிய மறுப்பதைப் பற்றியது.

_____________________________________
நன்றி: ஞாயிறு தினக்குரல் November 05, 2006

_____________________________________________

Labels:

Friday, November 03, 2006

சிங்களவரிடமுள்ள இனப்பிரச்சினைத் தீர்வு

மறுபக்கம் - கோகர்ணன்

தேசிய இனப்பிரச்சினைக்கான ஒரு தீர்வு ஆலோசனை இல்லாமல் விடுதலைப் புலிகளுடன் பேசிப் பயனில்லை என்று `தமிழர் விடுதலைக் கூட்டணி' தலைவர் ஆனந்தசங்கரி எழுதிய ஒரு கருத்துரையை ஆங்கில நாளேடான ஐலண்ட் அண்மையில் வெளியிட்டிருந்தது. அக்கருத்து 1983 இன ஒழிப்பு வன்முறைக்குப் பிறகு நடந்த ஒவ்வொரு பேச்சுவார்த்தைக்கும் பொருந்தக்கூடியது. 1957 இல் ஏற்பட்ட பண்டாரநாயக்க - செல்வநாயகம் உடன்படிக்கை தமிழ் பேசும் மக்கள் என்ற அடிப்படையில், தேசிய இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வுக்கான நல்ல வழியை முன்வைத்தது. எழுதிய மை உலரய முன்பே அது பேரினவாதிகளின் கட்டாயத்தின் பேரில் கிழித்தெறியப்பட்டது. அதன் பின்பு ஏற்படக்கூடிய ஒவ்வொரு உடன்படிக்கையின் கதையும் அதுவாகவே இருக்கும் என்பதை அன்று பலரும் ஊகித்திருக்க நியாயமில்லை. இந்த விதமாக ஏற்பட்ட உடன்படிக்கைகளில் தமிழ் மக்களின் எண்ணங்கள் பற்றி அவர்களுடன் கலந்தாலோசனை இல்லாமலும், இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையின் புதிய பரிமாணங்களான முஸ்லிம் தேசியவாத அரசியல் பற்றியும் மலையக மக்களின் இருப்பும் தேசிய இன அடையாளமும் பற்றிய அக்கறையே இல்லாமலும், இந்திய ஆட்சியாளர்களும் இலங்கையின் கொடுங்கோலாட்சியாளர்களும் 1987 இல் செய்த உடன்படிக்கையின் நோக்கமும் பயனும் பற்றிய ஆழமான கேள்விகளை வடக்கின் மாக்ஸிய - லெனினியவாதிகள் மட்டுமே எழுப்பினர். இந்தியக் குறுக்கீட்டின் நோக்கங்கள் பற்றி அவர்கள் மட்டுமே வெளிவெளியாகக் கேள்விகளை எழுப்பினர். உடன்படிக்கையின் போதாமைகளை அவர்கள் தொடர்ந்தும் சுட்டிக்காட்டி வந்தனர்.
உடன்படிக்கை ஏற்பட்டு இரண்டே ஆண்டுகளில் இந்தியாவின் பங்களிப்புப் பற்றி எல்லோருக்கும் விளங்கியிருக்க வேண்டும். ஆனாலும், இந்தியாவின் தயவில் தமது அரசியல் வாழ்க்கையையும் தனிப்பட்ட வாழ்க்கையையும் நடத்தி வந்த தமிழத் தலைவர்கள் பலருக்கு அதைப் பற்றிப் பேச இயலவில்லை. மற்றத் தமிழ்த் தேசியவாதிகளும் இந்தியாவையோ அமெரிக்காவையோ எதிர்த்து வாய் திறக்க ஆயத்தமாக இருக்கவில்லை. இந்தியாவால் வழிநடத்தப்பட்ட தமிழ்த்தேசியவாதத் தலைவர்களும் முன்னாள் விடுதலைப் போராளிகளும் நாட் போக்கில் பேரினவாத அரசாங்கங்களின் கூட்டாளிகளாக மாறினர். சிலர் தமது பாராளுமன்றப் பதவிகளைப் பெறும் நோக்கில் விடுதலைப் புலிகளுக்கு உடன்பாடான நிலைப்பாட்டை மேற்கொண்டனர். இன்று வரை தமிழ்த் தேசியவாதிகள் எவருமே தெட்டத் தெளிவாகத் தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்தில் அவர்களின் நண்பர்கள் யாரென்றோ எதிரிகள் யாரென்றோ சொல்லியதில்லை. சிங்கள மக்களை எதிரிகளாகக் காட்டுகிற அளவுக்குச் சிங்களப் பேரினவாதத்தின் வர்க்க அடிப்படை எது என்றோ அதற்கு உடந்தையாக உள்ள அந்நிய சக்திகள் எவை என்றோ சுட்டிக்காட்டுவதில் அக்கறை என்றுமே இருந்ததில்லை.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் பரந்துபட்ட ஒற்றுமையின் அடிப்படையில் அமையாமை அன்று முதல் இன்றுவரை அதன் பெரிய பலவீனமாகவே இருந்துவந்துள்ளது. இந்தியக் குறுக்கீடும் துரோகத்தனமான தலைமைகளும் தமிழ் மக்களிடையே போராட்ட ஐக்கியத்திற்கும் தமிழ் மக்களுக்கும் பிற ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களுக்குமிடையிலான ஒத்துழைப்புக்கும் பாரிய கேடு விளைவித்தன. எனினும், விடுதலைப் புலிகளின் தரப்பிற் செய்யப்பட்ட தவறுகளும் போராட்டத்திற்குக் கேடு விளைவித்துள்ளன. முக்கியமான சில தவறுகளை விடுதலைப் புலிகள் ஒத்துக் கொண்ட போதும், இன்னமும் மூர்க்கத்தனமாக அவற்றை நியாயப்படுத்துகிற சக்திகளும் உள்ளன. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் அடிப்படையான பலவீனம், அது ஒரு வெகுசனப் போராட்டமாக விருத்தியடையாமை என்பது எனது உறுதியான கருத்து. பரந்துபட்ட ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதிலும் தீய அல்லது துரோகத்தனமான சக்திகளை அடையாளங் காட்டித் தனிமைப்படுத்துவதிலும் வெகுசன அரசியலை மிஞ்சி எதுவும் இருக்க முடியாது. சகோதரப் படுகொலைகளைத் தொடங்கிய கேடு இன்று அரசாங்கத் துணைப்படைகளின் வன்முறையாயும் அதற்கெதிரான வன்முறையாயும் மட்டுமில்லாமல் சாதாரண மக்களையே காவுகொள்கிற ஒரு அவலமாக தமிழ்ப் பிரதேசங்களில் நிலவுகிறது. இதை ஆயுதங்கள் கொண்டு மட்டுமே தீர்க்க இயலாது. தமிழ் மக்கள் அரசியல் அதிகாரமுடையவர்களாக விருத்திபெறாமல் இக் குற்றச்செயல்களைக் தடுத்து நிறுத்த முடியாது.

தமிழ் மக்கள் போராடாமல் இருக்க முடியாது. ஆயுதமேந்திய கொடிய எதிரிகட்கெதிராக சாத்வீகப் போராட்டம் பற்றிப் பேசிப் பயனில்லை. ஆனால், எல்லாப் போராட்டங்களும் ஆயுதப் போராட்டங்களாக அமைய முடியாது. அமையவும் வேண்டியதில்லை. எங்கே ஆயுதம் ஏந்துவது என்பதை விடுதலையின் அரசியல் (என் எண்ணத்தில் வெகுசன அரசியல்) முடிவு செய்ய வேண்டும். துவக்கு அரசியல் வழிநடத்துவதுக்குக் கீழ்படிய வேண்டும். இன்றைய அரசியல் நிலவரங்களும் பிரகடனம் செய்யப்படாத போரின் தொடர்ச்சியும் விடுதலைப் போராட்டம் வெகுசன அரசியலையும் மக்கள் யுத்தத்தையும் நோக்கி நகர வேண்டிய தேவையை வற்புறுத்துகின்றன.

ஆனந்த சங்கரி சொன்னதை நாம் கவனித்துப் பார்த்தால் அரசாங்கத்திடம் தீர்வுக்கான ஆலோசனை எதுவுமே இல்லை என்பது தெளிவாகும். தீர்வுக்கான ஆலோசனைகளை அவரும் முன்வைக்கிறார். அவற்றைப் பேரினவாதக் கட்சிகள் ஏற்கும் என்ற நம்பிக்கையையும் அவர் இடையிடை தெரிவிக்கிறார். அவரது நம்பிக்கைகளுக்கான அடிப்படை என்ன என்று எனக்குத் தெரியாது. அவருக்குத் தெரிந்திருக்கலாம். ஆனாலும், இதுவரை ஜே.வி.பி. பற்றியும் மகிந்த ராஜபக்ஷ ஆட்சி பற்றியும் அவர் கூறிவந்தவற்றையும் அவரது பிற எதிர்பார்ப்புகளையும் வைத்துக் கணிப்பிடும் போது, அவர் எந்தச் சோதிடரிடம் ஆலோசனை கேட்கிறார் என்று தான் யோசிக்கத் தோன்றியது.

விடுதலைப் புலிகள் முதலில் தனிநாட்டுத் தீர்வை வைத்திருந்தனர். பேச்சுவார்த்தைகளின் போக்கில், உள்ளக சுயநிர்ணயத்துடன் கூடிய சமஷ்டிக்கு இணக்கம் தெரிவித்திருந்தனர். பேச்சுவார்த்தைகள் பயனற்றுப் போன நிலையில், இடைக்கால நிருவாகத்திற்கான ஒரு யோசனையை முன்வைத்தார்கள். அதைக் கவனிப்பதாக யூ.என்.பி. பாசாங்கு செய்தது. அதற்குச் சந்திரிகா குமாரதுங்க முட்டுக்கட்டை போட்டார். பின்பு பாராளுமன்றத் தேர்தல் ஒன்று வலிந்து சுமத்தப்பட்டது. புதிய அரசாங்கம் அமைதிப் பேச்சுவார்த்தைகள் பற்றி அக்கறை காட்டவில்லை.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஏற்படுத்தப்பட்ட பிளவில் யூ.என்.பி. தலைவரின் பங்கும் அமெரிக்காவின் வஞ்சகமும் பற்றிப் பலர் மறந்திருக்க மாட்டோம். எனவே, இன்றுள்ள பிரச்சினை, பேரினவாத ஆட்சியாளர்களையும் `சர்வதேச சமூகம்' எனப்படுகிற ஏகாதிபத்திய நாடுகளையும் பொறுத்தவரை, விடுதலைப் புலிகளை நிராயுதபாணிகளாக்கித் தமிழ் மக்கள் மீது தாம் விரும்புகிற ஒரு தீர்வைத் திணிப்பது தான். பேரினவாதிகள் உடன்படக்கூடிய இந்திய வகையிலான சமஷ்டி (?) ஆட்சியும் ஒற்றையாட்சியும் தமிழ் மக்களின் சமத்துவத்தையோ சுயநிர்ணயத்தையோ மதிப்பன அல்ல.

அவசரகாலச் சட்ட காலத்தை நீடிப்பது முதல், தமிழ் மக்களின் அடிப்படையான உரிமைகளை மறுக்கிற பல்வேறு காரியங்கள் உட்பட, வடக்கு, கிழக்கைப் பிரிப்பது வரை எவ்விடயத்திலும் அரசாங்கம் எடுக்கும் எந்தத் தீர்மானத்தையும் யூ.என்.பி. எதிர்த்து நிற்கப் போவதில்லை. ஷ்ரீ.ல.சு.க. ஆரவாரத்துடன் செய்கிற அத்தனை பேரினவாத நீசத்தனங்களையும் யூ.என்.பி. தடையின்றிச் செய்ய வல்லது. ஜே.ஆர்.ஜயவர்தனவின் போர்ப் பிரகடனக் காலத்தில் மட்டுமே யூ.என்.பி.யின் சுயரூபம் அப்பட்டமாக வெளிச்சமானது.

தேசிய இனப் பிரச்சினைக்குரிய நியாயமான தீர்வு எதுவுமே பேரினவாதக் கட்சிகளான யூ.என்.பி., ஷ்ரீ.ல.சு.க., ஜே.வி.பி., ஹெல உறுமய ஆகியவற்றிடமோ அவற்றின் கூட்டாளிகளிடமோ இல்லை. அவர்களிடையிலான கருத்து வேறுபாடுகள் விடுதலைப் புலிகளை எப்படி வழிக்குக் கொண்டு வருவது என்பது பற்றியது மட்டுமே. இலங்கைக்கு கொலனி ஆட்சியிலிருந்து விடுதலை கிடைப்பதற்கு முன்பிருந்தே அவை கடைப்படித்து வந்துள்ள பேரினவாதக் கொள்கை எதையும் அவை கைவிட ஆயத்தமாக இல்லை.

சர்வகட்சி மாநாடுகள் எல்லாம் இதுவரை சாதித்ததென்ன? காலங்கடத்துவதை விட வேறென்ன நடந்திருக்கிறது? அரசாங்கத்தை நம்பிப் பேச்சுவார்த்தைகட்குப் போகவில்லை என்று தமிழ்ச்செல்வன் சொல்லியிருப்பது சரியானதும் நியாயமானதுமாகும். எனினும், சர்வதேச சமூகத்தை நம்புவதாக அவர் சொன்னது பற்றி எனக்கு மிகுந்த மனத்தடைகள் உள்ளன. அரசாங்கத்தை விட வஞ்சகமான சக்திகளே இந்தச் சர்வதேச சமூகத்தில் உள்ளன. விடுதலைப் புலிகள் சர்வதேச நெருக்குவாரங்கட்குட்பட்டுப் பேச்சுவார்த்தைகட்குப் போகிறார்கள் என்பது தான் உண்மையான நிலவரம்.

அப்பாவித் தமிழ் மக்கள் அரசாங்கப் படைகளால் பத்தாயிரக் கணக்கில் அகதிகளாக்கப்பட்டு நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டு அவர்களது வாழ்வாதாரங்கள் சிதைக்கப்பட்டபோது கண்டுங்காணாமல் இருந்த சர்வதேசச் சமூகம், ஒரு ஃபிரெஞ்சு என்.ஜி.ஓ. ஊழியர்கள் என்ற ஒரு காரணத்திற்காக மட்டுமே மூதூர்ப் படுகொலைகள் பற்றி அக்கறை காட்டியது. ஆனால், அரசாங்கம் விஷமத்தனமான முறையில் விசாரணைகளைத் திசை திருப்புவதை அறிந்தும் செல்லமாகக் கடிந்துகொண்டதற்கு மேலாக எதையும் செய்யவில்லை. இனியாவது சர்வதேச சமூகம் எனப்படுகிற ஏகாதிபத்திய நாடுகளையும் இந்திய மேலாதிக்கவாதிகளையும் நம்புவதையும் அவர்களை ஈடுபடுத்துவதற்கு முயற்சி எடுப்பதையும் தமிழ் மக்கள் மறப்பது நல்லது.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் வெற்றிக்கு ஒரே ஒரு பாதைதான் உண்டு. அது ஏகாதிபத்திய எதிர்ப்புத் திசையிலான வெகுசனப் போராட்டப் பாதைகளாகும். தமிழ் மக்களின் முன்மாதிரியாக ஒரு காலத்தில் இஸ்ரேலைக் கருதிய காலம் இருந்தது. தமிழ் மக்களின் உண்மையான நிலை என்றுமே ஏகாதிபத்தியத்தின் கைப்பாவையான இஸ்ரேலினதல்ல. அதற்கு நேரெதிரானது. தமிழ் மக்களின் நண்பர்கள் எந்த ஆட்சியாளர்களுமல்ல. உலகின் ஒடுக்கப்பட்ட மக்களும் விடுதலைக்காகப் போராடும் சக்திகளுமே என்றென்றும் தமிழ் மக்களின் நண்பர்கள். கற்க விரும்புவோமானால் அவர்களிடமிருந்து கற்க நிறைய உண்டு.

__________________________
நன்றி: ஞாயிறு தினக்குரல் October 29, 2006



_____________________________________________

Labels:

Wednesday, November 01, 2006

பேச்சுவார்த்தையும் பேய்க்காட்டலும்

தட்டுங்கள் திறக்கப்படுமென்றது சர்வதேசம் கையில் தட்டு ஏந்தும் நிலையில் தமிழர்கள்
-சி.இதயச்சந்திரன்-

திரும்பவும் ஒரு நாடகம் அரங்கேறப் போகின்றது. இலங்கை இராணுவம் புலிகளிடம் படுதோல்வியைத் தழுவியவுடன், கிடப்பில் போடப்பட்ட 'சமாதானத்திற்கான பேச்சுவார்த்தை என்கிற நாடகப் பிரதியை கையில் தூக்கியபடி நடிகர்களும், இயக்குநர்களும் பத்தாவது தடவையாக மேடையிலேற வருகிறார்கள்.

மேற்குலக சமூகம் அதன் ஆசியப் பிரதிநிதிகளும் ஓடோடி வந்து தமிழ் மக்கள் மீதுள்ள கரிசனையை வெளிப்படுத்துவார்கள். உலகெங்கும் தடை போடப்பட்டாகி விட்டது. சொத்துக்கள் முடக்கப்பட்டாகி விட்டது. இனிப்புதிய உபாயங்களோடு பொறிவைக்க விரும்புகிறார்கள்.

ஒப்பந்தக் கோட்டைத் தாண்டி சம்பூருக்குள் நுழைந்தாலும், 61, பிள்ளைகள் குண்டு வீசி அழிந்தாலும், 17 தொண்டர்கள் சுடப்பட்டாலும், ஏ-9 பாதையை மூடி யாழ். மக்களை பட்டினியின் விளிம்பு நிலைக்குத் தள்ளினாலும், இடம்பெயர்ந்த 40 ஆயிரம் மூதூர் தமிழ் மக்கள் வாகரையில் தஞ்மடைந்து வாழ்நிலை ஆதாரங்களைத் தொலைத்தாலும், தினந்தினம் மிருகங்கள் சுடப்படுவது போல் வட கிழக்கில் தமிழர்கள் அரச படைகளால் கொன்று குவிக்கப்பட்டாலும், கல்லுளி மங்கர்களாக இருந்த சர்வதேச சமூகம் 200 படைகள் இறந்ததும் கடுகதியில் ஓடோடி வருகிறது ஏன்?

எமது விவகாரத்தில், சர்வதே சமூகமென்று தம்மைத்தாமே அழைக்கும் மேற்குலகிற்கும், சில ஆசிய நாடுகளிற்கும் இருக்கும் சுத்தமான அக்கறை என்ன வென்பதை முதலில் தெளிவாக்க வேண்டும்.

பண்டா-செல்வா காலந்தொட்டு இற்றைவரை இடம்பெற்ற ஒப்பந்தங்களும், பேச்சுவார்த்தைகளும் ஒரு விடயத்தை மட்டும் இந்த சர்வதேச சமூகத்திற்கு உணர்த்தியிருக்கும்.

அதாவது கிழித்தெறியப்பட்ட ஒப்பந்தங்கள் வெளிப்படுத்தும் செய்தி என்ன? இனப்பிரச்சினைக்கான தீர்வொன்றிற்கு அரசியலமைப்பில் அடிப்படை மாற்றங்களை அரசு செய்யாது. ஒருவர் அதைச் செய்ய முனைவது போல் நடிக்க, மற்றவர் அதை முழுமூச்சாக எதிர்ப்பார். உங்களுக்குள் ஒருமித்த கருத்தை உருவாக்குங்களென்று வெளி அழுத்தங்கள் சுமத்தப்படுகையில், திசை திருப்பும் நோக்கோடு தேர்தலொன்றை நடத்துவார்கள்.

தேர்தல் முடிந்தபின், வட்டமேசை சதுர மேசையொன்றை தமிழ் கட்சிகள் தவிர்ந்த (பெரும்பான்மையான) ஏனையோரை அழைத்து பொதுக் கருத்தினை உருவாக்கப் போவதாக பாவனை காட்டுவார்கள்.

இதனிடையே இராணுவ வல்லாண்மையை அதிகரிக்கும் நிகழ்வுகளும் ஒருபுறம் முன்னெடுக்கப்படும்.

இவையெல்லாவற்றையும் சர்வதேச சமூகம் ஏன் புரிந்து கொள்ளவில்லையென்று கவலைப்படுவது முட்டாள்தனமாகும்.

அண்மையில் நடைபெற்ற கிளாலிச் சமரில் உயிரிழந்த படையினரின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ள ஜனாதிபதி, இராணுவத்தினரின் வீடுகளுக்குச் சென்றதாக தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்பட்டது.

இதைப் பார்த்த ஒரு பெண் என்னிடம் கூறிய விடயம் மிகவும் வித்தியாசமாகவிருந்தது. அதாவது மிகவும் ஏழ்மை நிலையில் வாழும், அவர்களின் குடும்ப உறவுகளின் ஏக்கங் கலந்த முகங்களும், பாமரத்தனமான தோற்றமும் அப் பெண்ணை கலங்க வைத்து விட்டதாம். தமது மத மேலாதிக்க சிந்தனைக்கு அப்பாவி கிராமவாசிகளைப் பலியாக்கிய அரசின் மீது அவரின் வெறுப்பு மேலோங்கியிருந்தது.

இவ்வளவு கொடூர வாழ்க்கையினுள்ளும் மனிதத்தை இழக்காத அத் தமிழ் பெண்ணையிட்டு அகமகிழ்வு கொண்டேன்.

விடுதலையை வேண்டி நிற்கும் மனிதர்கள், மானுடதர்மத்தை இழக்காமல் இருப்பது போற்றுதற்குரியது.

இத் தமிழ்பேசும் மனிதர்களின் வாழ்வுரிமையை, நிர்ணயம் செய்யும் பொறுப்பினை, ஸ்ரீலங்கா அரசிற்கு, இறையாண்மை என்ற பெயரில் உரித்துடைமையாக்கியது யாரென்ற கேள்விக்கு சர்வதேசம் பதில்கூற முடியாது.

பிறப்புரிமையென்பது கொடுத்து வாங்கும் வியாபாரப் பொருளல்ல. இவ்வுரிமையை உலக மயமாக்கலின் ஒரு கூறாகக் கருதுவதே சர்வதேச சமூகம் விடும் பாரிய தவறாகும்.

எத்தனையோ நாடுகளின் விவகாரங்களில் தலையீடுகளை மேற்கொள்ளும் சர்வதேச சமூகத்திற்கு இது ஒரு புரியாத புதிரல்ல.

இவர்களின் பிராந்திய நலனை உள்ளடக்கிய நோக்கம் இதுதான். அதாவது நாடு பிளைவடையக் கூடாது. பிளவடையாமல் தீர்வென்பது சாத்தியமாக வேண்டுமாயின், விடாக் கண்டனாக திகழும் ஸ்ரீலங்கா அரசு வழங்கும் தீர்வொன்றினை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளும் நிர்ப்பந்த சூழல் உருவாக வேண்டும்.

கொடுப்பதை ஏற்றுக்கொள்ள வேண்டுமாயின், பலவீனமான நிலையில் தமிழ் மக்களும் அதன் போராட்டத் தலைமையும் இருக்க வேண்டும்.

போராட்ட சக்திகளை பலவீனமாக்கும் நிகழ்ச்சி நிரலை சர்வதேசமும், தமிழ் மக்களின் மனோநிலையை சிதைக்கும் காரியத்தை ஸ்ரீலங்கா அரசும் மேற்கொள்வதை அவதானித்தால், இவர்கள் இருவரினது நோக்கங்களையும் உணரலாம்.

வடக்கில் இராணுவ முகாம் வாசல்களில் உணவிற்காக கையேந்தும் நிலைக்கு எமது மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். ஏனைய தமிழ் மாவட்டங்களிலிருந்து தபால் பொதியினூடாக 5 கிலோ நிறையளவு உணவுப் பொருட்களை யாழ். மாவட்டத்திலுள்ள தமது நண்பர்களிற்கும் உறவினர்களிற்கும் இரக்க சிந்தனையுள்ள மக்கள் அனுப்பிக் கொண்டிருக்கின்றார்கள்.

இவ்வாறான இழிநிலையை, கைகட்டி, வேடிக்கை பார்க்கும் சர்வதே சமூகம் எம்மக்கள் மீது கருணைப் பார்வையை திருப்புமென எதிர்பார்ப்பது தவறானதாகும்.

சர்வதேச, சமூகமானது ஸ்ரீலங்கா அரசின் மீது தமது அழுத்தங்களை கொடுக்க ஆரம்பித்து விட்டதென சிலர் திருப்தியடைகிறார்கள். எவ்விதமான நெருக்குதலும் ஏ-9 பாதையைத் திறக்காது. படுகொலைகளை நிறுத்தாது.

அண்மையில் அமெரிக்க தூதுவரொருவர் இலங்கையின் இறையாண்மையைக் காப்பாற்ற, புலிகள் யுத்தத்தை தொடுத்தால், சகல உதவிகளையும் அரசிற்கு வழங்கப்போவதாக அறிவித்தது ஞாபகமிருக்கும்.

ஆகமொத்தம், புலிகளையும் தமிழ் மக்களையும் பலவீனமாக்கி, ஏதோவொரு தீர்வினைத் திணிக்கவே இவர்கள் விரும்புகிறார்கள். புலிகள் பலமாகவிருப்பது இவர்களின் நலனுக்கு பெருந்தடையாக இருக்கிறது.

தமிழ் மக்களின் நியாயபூர்வ அரசியல் அபிலாஷைகளை பெற்றுக்கொடுப்பதிலிருக்கும் அக்கறையை விட, போராட்ட சக்தி முனையை மழுங்கச் செய்வதிலேயே சர்வதேச சமூகத்தின் இரகசிய வேலைத்திட்டம் முனைப்புற்றுள்ளது.

சம்பூர் பின்னகர்வானது தந்திரச் சமரின் உத்தியென்பதையும் வாகரை பனிச்சங்கேணியில் விழுந்த பலத்த அடி, இவர்களுக்கு புரிய வைத்திருக்கும், சாண் ஏற முழம் சறுக்கும் நிகழ்வுகள் சர்வதேசத்தை சோர்வடையச் செய்து 15 ஆயிரம் வெளிநாட்டுப் படைகளை களமிறக்கும் அடுத்த கட்ட நகர்வுகளை செயற்படுத்தத் தூண்டலாம். அதற்கான நிகழ்ச்சி நிரலை அவர்கள் இப்போதே தயார்படுத்தி விட்டார்கள்.

வடகொரியாவில் வெடித்த அணுகுண்டு அதிர்ச்சியிலிருந்து மீள முன், அகாசி அவர்கள் இலங்கைக்கு விஜயமொன்றினை மேற்கொள்கின்றார். தொடர்ந்து நோர்வேயின் சிறப்புத் தூதரும், அமெரிக்கத் தூதரும் வருகிறார்கள்.

கடந்த 20 ஆம் திகதி வியாழக் கிரகம் மாறமுன், ஜனாதிபதி மஹிந்த போர் தொடுத்தால், வெற்றி நிச்யமென்று யாரோ ஒரு முக்காலமுமறிந்த சோதிடர் கூறியதை விழுங்கி, 200 படை வீரர்களை காவுகொடுத்து அதிர்ச்சியிலுள்ளவர், தனது வேதாள முயற்சியை மறுபடியும் தொடரலாம்.

பேசிக்கொண்டே சண்டை புரிவோமென்று இணைக்க ஜனாதிபதி மஹிந்த விரும்பினாலும், குத்துச்சண்டை (டீழஒiபெ) மத்தியஸ்தர்களான சர்வ வியாபக சமூகம், விளையாட்டை முடிவிற்கு கொண்டுவர விரும்புகிறது. அடுத்த ~ரவுண்டில்| மஹிந்த ~நொக் அவுட்| (முழெஉம ழரவ) ஆவார் என்பதை உணர்ந்து அதை நிறுத்த ஓடோடி வருகிறார்கள்.

ஜனாதிபதி மஹிந்தவும் எதிர்க்கட்சித்தலைவர் ரணிலும் பொது இணக்கப்பாட்டிற்கு வருவது போன்று, இந்தியாவும், அமெரிக்க தலைமையிலான மேற்குலகமும் இணைந்து செயற்படும் சாத்தியப்பாடுகள் அதிகரிக்கின்றன.

அமெரிக்கா தலையிடுவதால் பாகிஸ்தான் தானாகவே ஒதுங்கிக்கொள்ளுமென நினைக்கும். இந்தியா, தனது நேர்முக தரிசனத்தினை எந்தவொரு வகையிலும், இதனூடாக ஸ்தாபிக்க முயற்சிக்கலாம்.

வெளிச்சக்திகளின் நகர்வுகள் இவ்வாறிருக்க ஸ்ரீலங்காவின் உயர் நீதிமன்றம், தற்காலிக வடக்கு கிழக்கு இணைப்பு சட்டத்திற்கு முரணாக இருப்பதாக அறிவித்துள்ளது.

ஸ்ரீலங்காவின் ஒற்றையாட்சி அரசியலமைப்பினை மாற்றாமல், அடிமட்ட நிர்வாகப் பரவலாக்கலை பரிசீலிக்கவே அரசு விரும்புகிறது. அதுகூட வெளிச்க்திகளின் அழுத்தம் காரணமாகவே மேற்கொள்ளப்படுகிறது.

இந்தியாவில் பஞ்சாயத்து என்ற அழைக்கப்படும் இலங்கையிலுள்ள உள்ளூராட்சி பைகளையே இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வாக இந்தியாவும், ஸ்ரீPலங்காவிலுள்ள புத்திஜீவிகளும் (சிங்களத்தில் ~புத்திமதி|) முன்வைக்கிறார்கள்.

புலிகள் சமதரப்பு நிலையில், படை வலுச் சமநிலையோடு இருக்கையில், சமஷ்டித் தீர்வு பற்றியும், அவர்கள் சில தந்திரோபாய பின்னடைவுகளை எதிர்கொள்ளும் போது பஞ்சாயத்து முறை பற்றியும் அரசு பேசுகிறது.

இவற்றிலிருந்து தமிழ் மாகாணங்கள் விளங்கிக்கொள்ள ஒரு விடயமொன்று உண்டு. அதாவது தமிழர் தரப்பானது படைவலுச் சமநிலையை மீறிய அதிவலு நிலையை எய்தினால், சமஷ்டியை பார்க்கிலும் கூடிய நிலையிலுள்ள கூட்டாட்சி (ஊழகெநனநசயவழைn) அமைப்பினையோ அல்லது பூரண சுயாட்சியையோ எளிதில் அடையலாம்.

இவ்வகையான அதிவலு நிலையை எட்ட, மக்களின் முழுமையான இணைவு 'போராட்ட இயங்கியல் போக்கினுள் உள்ளடக்கப்பட வேண்டும். அவ்வாறு தேசிய விடுதலைப் போராட்டத்தளத்தினுள் உள்வாங்கப்படும் மக்கள் சக்தியின் முன்னால், ஏகாதிபத்தியங்களின் அழுத்தங்களும், அச்சுறுத்தல்களும் செயலற்றுப்போகும்.

இவ்வாறு செயலற்றுப் போன பல நிகழ்வுகளை, நாம் கடந்து வந்த வரலாற்று வழித்தடத்தில் பலதடவை தரிசித்துள்ளோம்.

மக்கள் சக்தியோடு இணைந்த போராட்ட வலுவின் முன்னால், படைவலுச் சமநிலையும் சரி, அல்லது ஆளணி வலுச் சமநிலையும் செயலற்று நீர்த்துப் போகும்.

சர்வதேச சமூகம் விரும்பாத, போராட்ட வலுவினை, அதிகரிப்பதனூடாகவே, அவர்களின் அணுகுமுறையில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.

தட்டுங்கள் திறக்கப்படுமென்பார்கள். தட்டிக்களைத்து கையில், தட்டு ஏந்தும் நிலைக்கு வந்துவிட்டார்கள்.

இனி உடைக்கப் போகும் வேளையில், மறுபடியும் தட்டும்படி சர்வதேசம் கூறுகிறது. ஆகவே இனிமேலும் விழிப்பு நிலையில் உறங்கக் கூடாது. இருப்பினும் தூக்கத்தில் நடப்பவனைப் போலுள்ளது போரும் சமாதானமும்.
____________________________
நன்றி: வீரகேசரி வார வெளியீடு (22.10.06)
நன்றி: தமி்ழ்நாதம்



Labels: , ,


Get your own calendar

  • வன்னியன் commented:
    நாணயமானவரே,கவ்விப் பிடிச்சியள் பாருங்கோ ஒரு பிடி.பேராசிரியர் சொல்கிற அரசியல், ஊழல் ஆராயப...

    Anonymous commented:
    எழுதிக்கொள்வது: நாணயமானவர்//கருணாநிதியின் அரசியலை மட்டுமல்ல, தமிழ் மக்கள் நம்ப வேண்டும் என...

    வெற்றி commented:
    வன்னி,பதிவுக்கு மிக்க நன்றி.

    Anonymous commented:
    //1930 களில் ஜேர்மனியில் உருவான யூத இனவிரோதம் பின்பு கம்யூனிச/ இடதுசாரி விரோதமாகி இறுதியில...

    வன்னியன் commented:
    வருகை தந்து கருத்துத் தெரிவித்தவர்களுக்கு நன்றி.

    Anonymous commented:
    வைகோ பிர்பாகரனின் தமிழக கொள்கை பரப்பு செயளாளர், வைக்கோ அவரின் கடைமை செய்கிறார், தமிழகத்தில...

    Anonymous commented:
    நல்ல கட்டுரை.பதிந்ததற்கு நன்றி.

Links